Skip to content
Home » எனக்காக வந்தவனே – 9

எனக்காக வந்தவனே – 9


சட்டெனக் கால்களை மேலே தூக்கிய வனபத்ரா சம்மணமிட, அந்த நாய்க்குட்டி லேசாகத் துள்ளியது. அதில் பதறியவள், அந்த இருக்கையின் மேல் எழுந்து நின்றிருந்தாள்.

“அக்கா.. இரு.. பதறாத…” என்றபடி அபிதன் அந்த நாய்க்குட்டியை நோக்கிக் குனிய, ஜீவிதன் என்னவெனத் திரும்பினான். வனபத்ரா இருக்கையின் மேல் ஏறிநின்று கொண்டிருந்தாள். 

என்னவெனப் பார்க்க, அந்த இருக்கையின் கீழே ஒரு நாய்க்குட்டி துள்ளிக் கொண்டிருந்தது. அந்த நிலையிலும் அவள் அப்படி நிற்பதைப் பார்த்துச் சிரிப்பு வந்திருந்ததுதான். இருந்தாலும் சிரிக்காமல் இருந்த இடத்தில் இருந்து அசையாமல் என்னவெனப் பார்த்துக் கொண்டிருந்தான்.

வனபத்ராவும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. கண்ணெதிரே ஒரு விலங்கென்று வருகையில் அவள் பார்வையில் வேறெதுவும் விழாது என்பதுதானே அவளது பிரச்சனையே.

அந்த நாய்க்குட்டி மீண்டும் இவளைப் பார்த்துத் துள்ள, சட்டென ஜீவிதன் இருந்த இருக்கைக்கு மாறியிருந்தாள். ஜீவிதன் அப்போதும் அசையாமல் அமர்ந்திருக்க, அந்த நாய்க்குட்டி அவர்கள் இருந்த இருக்கையின் அருகில் வந்தது. அபிதன் அதைத் தூக்க முயற்சி செய்ய, அவன் பிடியில் சிக்கவில்லை அது. 

அவர்கள் இருந்த இருக்கையின் மேலேயே அது ஏறியிருக்க, வனபத்ரா சட்டென ஜீவிதனைத் தாண்டி அவனை ஒண்டி அமர்ந்திருந்தாள். அதற்குள், அபிதன் அந்த நாய்க்குட்டியைப் பிடித்திருந்தான். தன் அக்காவை அறிந்து அதை அந்தப் பக்கம் விட்டுவிட்டு வரலாம் என நகர, ஜீவிதன் தன் சட்டையை இறுகப்பற்றியபடி அவன் தோளில் முகம் புதைத்திருந்தவளைப் பார்த்தான். அவளுடைய இதயத்துடிப்பை அவனால் உணரமுடிந்தது.

“பத்ரா…” என்றழைக்க, “ஜீவி.. ப்ளீஸ்… அந்த நாய்க்குட்டி போய்க்கட்டும்…”

“சரி.. போய்க்கட்டும்…” என ஏற்கனவே போயிருந்த நாய்க்குட்டியைப் பார்த்துச் சொன்னவனுக்கு, ஏனோ மனம் சற்று இலகுவாவதைப் போல இருந்தது.

நாய்க்குட்டியைக் கையில் எடுத்தபடி வெளியே வந்த அபிதன், அந்த சுந்தரைத் தேடினான். அவன்தானே வனபத்ராவைக் க்யூட் என்று சொல்லிக்கொண்டு இந்த நாய்க்குட்டியை வளர்ப்பதாகத் தூக்கியிருந்தான். அன்றிலிருந்து அவனை அங்கங்கே கையில் நாய்க்குட்டியுடன் பார்க்க முடிந்ததுதான். ஆனால், வனபத்ரா அவனைக் கவனிக்கவில்லை. அவள்தான் முதலிலிருந்தே அவனைக் கவனிக்கவில்லையே. அபிதன் கவனித்திருந்தான். 

 அவன் தேடியது போலவே அந்த சுந்தர் அங்கே நிற்க, கையிலிருந்த நாய்க்குட்டியை அவனிடம் திணித்தான். “இருக்கிற பிரச்சனைல நீங்க வேற ஒரு பிரச்சனையா வராதீங்க சார்.. அக்கா வேற ஒருத்தரை விரும்பறாங்க…” என்றபடி அவன் நகரப்போக, “அதான் ப்ரேக்கப் ஆகிருச்சுல…” என்றான் அவன்.

“அது எப்படி உனக்குத் தெரியும்?”

“ப்ச்.. நான் கொஞ்சநாளா உங்கக்காவ ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன் ங்கறது உங்கக்காக்கு வேணா தெரியாம இருக்கலாம். உனக்குத் தெரியும்தானே? அன்னைக்குக் கோவில்ல யார்கூடவே முகத்துல அவ்வளவு ப்ளஷோட பேசிட்டு இருக்கும்போது கொஞ்சம் பக்குன்னு இருந்துச்சுதான்… ஆனா, அன்னைக்கு உங்க வீட்டுக்கு வரும்போதே அவ முகம் சரியில்லயே… இன்னைக்குமே நீகூட வேற நல்ல பையனா பார்த்துக் கட்டிக்கோன்னு தான உங்கக்காட்ட சொல்லிட்டு இருந்த.. அந்த நல்ல பையன் ஏன் நானா இருக்கக் கூடாது?” அவன் சொல்லும்போதே அபிதனுக்கு எரிச்சலாக வந்தது.

“செருப்.. ப்ஷ்… ஸ்டாக்கிங் கேஸ்ல உள்ளே போட்டா, 3 வருஷம் களி திங்கணும்.. தெரியுமா? ஒழுங்குமரியாதையா நடையக் கட்டுங்க…” 

அபிதனுக்கு ஜீவிதன் என்றால் மிகவும் பிடிக்கும். தன் – தன் என்று இயைந்து வருகின்ற பெயர் ஒரு காரணம் என்றால், ஜீவிதனுடைய வேலை, அவனுடைய தன்மையான குணம், அமைதி, தேவையான இடத்தில் குரல் கொடுத்துப் பேசுவது என்று எல்லாமும் பிடிக்கும். 

அப்படிப்பட்டவனையே ஏனோ தன் அக்காவைக் காதலிக்கிறேன் என்னும்போது ஏற்றுக்கொள்ளத் தயக்கமாக இருந்தது. இவன் யாரோ ரோட்டில் போகிறவன், அதோடு அவனுடைய பின்தொடர்தலும் அபிதனுக்குப் பிடிக்கவில்லை.

“ப்ரேக் அப் லாம் ஆகல… சும்மா தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ணீங்கன்னா எங்கம்மாகிட்ட சொல்ல வேண்டிவரும்.” எச்சரித்துவிட்டு உள்ளே வந்த அபிதன், ஜீவிதனின் தோளில் புதைந்து அமர்ந்திருந்த அக்காவைப் பார்த்துத் திகைத்தான்.

அவளுக்குப் பயம் என்று வரும்போது இப்படி செய்வாள்தான், ஆனால் அது அம்மா, அப்பா அல்லது அபிதனாக இருந்தால் மட்டும்தான். மற்றவர்கள், தோழியராக இருந்தால் கூட அருகில் செல்லமாட்டாள். ஒருவித நம்பிக்கையின்மை. அப்படிப்பட்டவள் ஜீவிதனை அணைத்து அமர்ந்திருக்க, அதிலும் அவன் விலங்குநல மருத்துவன் என்று தெரிந்த பின்னாலும் அணைத்து அமர்ந்திருக்கக் கொஞ்சம் திகைப்பாகத்தான் பார்த்தான்.

“அக்கா…” என இவன் அழைக்கவும் எழுந்தமர்ந்து மலங்கமலங்க விழித்தாள்.

அபிதன் மிடறு விழுங்கிவிட்டு, எதுவும் கேட்காமல் “அந்த நாய்க்குட்டியை வளர்க்கறவங்ககிட்ட கொடுத்துட்டேன்” என்று மட்டும் சொல்லவும் ஜீவிதன் புறம் திரும்பாமல், வேகமாக வாயிலை நோக்கி வெளியேறினாள்.

 அபிதனும் அக்காவைப் பின்தொடர, அவள் வண்டியை எடுக்கப் போகையில் மீண்டும் அந்த நாய்க்குட்டி அவள் காலருகில் வந்தது. அபிதன் சற்றுத் தள்ளி நின்ற சுந்தரைத்தான் பார்த்தவன், அவன் முகத்தில் இருந்த கொஞ்சம் வஞ்சம் கலந்த புன்னகையில் வேண்டும் என்றே செய்கிறான் என்று புரிய, அபிதன் அவனை நோக்கிக் கோபமாக நகர்ந்தான்.

வனபத்ராவுக்கு ஏற்கனவே இருக்கின்ற பிரச்சனைகள். இதில், இந்த நாய்க்குட்டி வேறு. முன்பே அதனால் ஏற்பட்ட பதற்றம் தணியாமல் இருந்தவள், இப்போது மீண்டும் அது காலைச் சுற்றியபடி அவளுடைய காலைத் தன் நாவால் தடவ வர, பதற்றத்தில் அதை எட்டி உதைத்திருந்தாள். அவள் உதைத்ததில், தள்ளிப்போய் விழுந்ததன் மேல், பள்ளிமாணவி ஒருத்தி ஓட்டிவந்த மிதிவண்டி ஏறியது. அந்த மாணவியும் விழுந்து இந்த நாய்க்குட்டியும் இரத்தக்களரியாகி இருந்தது.

சுந்தரைத் திட்டப்போய்க் கொண்டிருந்த அபிதன், சத்தத்தில் திரும்பிப்பார்த்து ஓடிவந்தான். விழுந்த மாணவி அவளாகவே எழுந்திருந்தாள். அபிதன் மிதிவண்டியைத் தூக்கி நிறுத்திவிட்டு, நாய்க்குட்டியைப் பார்க்க, அது வலியில் துடித்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த அந்த மாணவி அபிதனிடம் ஒரு நன்றி சொல்லிவிட்டு நேராக வனபத்ராவிடம் வந்தாள்.

“ஏன்க்கா, அறிவில்ல… அதுவும் ஒரு குழந்தைதான? மனுஷக்குழந்தைங்க பக்கத்துல வந்தா இப்படிதான் உதைப்பீங்களா? சைக்கிள்ன்னால அதுக்குக் கத்துறதுக்காவது தெம்பு இருக்கு,வேற வண்டியா இருந்துருந்தா இந்நேரம் கூழாகியிருக்கும்… ஏன் எனக்கும் ஏதாவது ஆகிருந்தா?” அவள் கோபாவேசமாகச் சொல்லிக் கொண்டே போக, அபிதனுக்குத்தான் கோபம் வந்தது. 

“அதான் எதுவும் ஆகலல்ல? தேவையில்லாம பேசுற பாப்பா நீ…” 

“பாப்பா? உன்னைப் பார்த்தா பத்தாங்க்ளாஸ் படிக்கிற மாதிரி இருக்க? என்னைப் பாப்பாங்கற? எனக்குப் பதினேழு வயசு…”

‘பத்தாங்க்ளாஸ் படிக்கிற மாதிரி இருக்கனா?’ ஒரு பெண் தன்னைத் திடுதிடுவென்று திட்டத் தொடங்க, அபிதனுக்குச் சட்டென்று பேச வரவில்லை. தன் அக்காவைத் துணைக்கு அழைப்பதற்காகப் பார்த்தான்.

அவளோ வேகமாக அலைபேசியைத் தடவிக் கொண்டிருந்தாள். வனபத்ராவின் மனதுக்குள் ஒரு பயம் ஓடிக் கொண்டிருந்ததுதான். இந்த மாணவி யாரோ ஒரு பதின்வயதினள், இவளுக்கே அவள் செய்ததைப் பார்த்து இவ்வளவு கோபம் வந்தால், விலங்குகள் மேல் பிரியம் கொண்டு, அவற்றின் வலியைப் போக்க வேண்டும் என்பதற்காகவே படித்து, அதையே தொழிலாகக் கொண்டிருப்பவனுக்கு அவள் செய்ததை அறிந்தால் எவ்வளவு கோபம் வரும்? ஆனால், அந்த நாய்க்குட்டியின் அழுகையோலம்  கேட்பதற்கு ஒருமாதிரி இருக்க, ஜீவிதனைத்தான் அழைத்தாக வேண்டும் என்று அவனுக்கு அழைத்தாள். 

எடுக்க மாட்டானோ? என்று நினைத்தபடி பூங்காவை நோக்கித் திரும்ப, அவன் அவள் பின்னால்தான் நின்றிருந்தான். அவளது முகத்தைப் பார்த்தவன், “ஆர் யூ ஓகே?” எனக் கேட்க, அவள் கண்ணில் நீர் தளும்பத் தொடங்கியிருந்தது. 

அவள் அந்த நாய்க்குட்டியின் புறம் கைகாட்ட, தலையசைத்தவன், அங்குதான் விரைந்துகொண்டிருந்தான். போகும்போதே தன்னுடைய கார்ச்சாவியை எடுத்து அவளிடம் தூக்கிப்போட்டவன், “என் காரை எடுத்துட்டு வா…” என்றான்.

ஒருகணம் திகைத்தாலும் அவன் சொன்னதைச் செய்வதற்காக நகர்ந்தாள் வனபத்ரா. காரை எடுத்துவந்த நிறுத்திவிட்டு அவள் ஹாரன் அடிக்க, காரின் பின்பகுதியைத் திறந்து அவன் எப்போதும் தேவைக்காக என்று வைத்திருக்கிற மருத்துவ உதவிக் கருவிகளை எடுத்தான். 

தேவையான முதலுதவியைச் செய்து, பாதுகாப்பாகக் கூடை போன்று இருந்த ஒன்றில் அந்த நாய்க்குட்டியைப் பத்திரமாக எடுத்து வைத்தவன், காரை நோக்கி வர, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த வனபத்ரா இறங்கி நின்றிருந்தாள்.

“கார எடு…” அவன் மீண்டும் சொல்ல, அவள் திருதிருவென விழித்தாள்.

“அபி… உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?” என்று ஜீவிதன் கேட்க, அபிதன் மறுப்பாகத் தலையசைத்தான். அங்கு நின்றிருந்த சுந்தரை நோக்கி ஜீவிதன் திரும்பினான்.

“நீங்கதான ஓனர்?”

“ஏங்க.. அது தெருநாய்தான்… சும்மா ஒரு பொண்ண கரெக்ட் பண்ண தேவைப்படும்ன்னு எடுத்து வளர்த்துட்டு இருந்தேன்… ஆனா, அது வொர்க் ஆகாது போல. அதுக்கு வேக்சின் போட்டதே வெட்டிச்செலவு. இதுல இதுக்கு வைத்தியம்லாம் என்னால பார்த்துட்டு இருக்க முடியாது… இப்படியே விடுங்க.. முடிஞ்சா அதுவே பிழைச்சுக்கட்டும்…”

“கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்தான் போகப்போறேன்…” ஜீவிதன் சொல்ல, “அதெல்லாம் எனக்குத் தேவயில்லாதது…” என்றவன் வனபத்ராவை முறைத்துவிட்டு நகர்ந்தான். 

ஜீவிதன் வனபத்ராவைப் பார்த்தான், “நீதான் ஓட்டியாகணும்… இல்லன்னா ஏதாவது ஆட்டோ பிடி….” எனவும் ஒருகணம் யோசித்தவள், மீண்டும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தாள். 

ஜீவிதன் நாய்க்குட்டியோடு பின்னிருக்கையில் அமர, அபிதன் முன்னிருக்கையில் அமர்ந்தான். அவள் கண்கள் வண்டியை ஓட்டும்போதும் அடிக்கடி நாய்க்குட்டியின் பின்னால் வந்துவந்து போக, “கால்ல அடிபட்டுருக்கு.. நினைச்சாலும் வர முடியாது…” என்றான் ஜீவிதன்.

வனபத்ராவுக்கு சற்று நேரம் முன்னால் உற்சாகத்தோடு துள்ளிக்குதித்த அந்த நாய்க்குட்டியின் நிலையும் தற்போதைய வலியின் அழுகையும் இணைந்து நினைவில் வரக் கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக இருந்தது. அது அவளிடம் விளையாடத்தான் முயன்றது என்று அவளுக்குப் புரியும்தான். ஆனால், அதற்கு அவள் காட்டும் எதிர்வினை அவள் தீர்மானிப்பது அல்லவே. 

“சாரி…” என்றாள் மெல்லிய குரலில் வண்டியை ஓட்டியபடியே.

“மனுஷபாஷை தெரியாதுன்னு நெனக்கேன்.. பக்கத்துல வந்து தடவிக் கொடுத்தா வேணா புரியும்…” என்றவன், அதற்கு மருத்துவம் பார்த்துக் கொண்டேதான் வந்தான். வனபத்ராவிடம் இருந்து மறுபேச்சு வராமல் இருக்க, ஜீவிதன் வழிசொல்லும் சத்தம் மட்டும்தான் கேட்டது. 

விலங்குநல மருத்துவமனையை அடையவும் அவன் உள்ளே செல்ல, ஜன்னலை நன்றாக ஏற்றிவிட்ட வனபத்ரா அடுத்த தெருவிற்கு வந்து வண்டியை நிறுத்தினாள். அதை அவனுக்குக் குறுஞ்செய்தி வழியாகத் தெரிவிக்கவும் செய்ய, சம்மதம் சைகைமொழியாக வந்தது. அபிதனை விட்டு வண்டிச்சாவியைக் கொடுத்துவரச் சொன்னாள்.

“எவ்ளோ ஆகுதுன்னும் பார்த்துட்டு வா அபி… நாம கொடுத்துரலாம்…”

“சரிக்கா…” என்றவன் உள்ளே செல்ல, ஜீவிதனே எதிரே வந்தான். முதலுதவி செய்வதற்காக அணிந்திருந்த கையுறையையும் முகவுறையையும் கழற்றிக் குப்பைக் கூடையில் போட்டவன், காரை நோக்கி நடக்க, அபிதன் ஒன்றும் பேசாமல் பின்தொடர்ந்தான். 

காரின் அருகில் நின்ற வனபத்ரா இவனைப் பார்க்கவும் இரண்டடி பின்னால் நகர்ந்தாள். அவள் நகர்வதைப் பார்த்தபடி அமைதியாக நின்றவன், காருக்குள் இருந்த சானிட்டசைரை எடுத்துத் தன் கைகளில் தேய்த்தான். அவளிடமும் அதை நீட்ட, அவள் தயங்கினாள். 

அவள் எதற்காகத் தயங்குகிறாள் என்பது அவனுக்குப் புரிவது போல இருக்க, “கைய நீட்டு…” என்றான்.நீட்டினாள். அதில் சில துளி விழச்செய்ய, தேய்த்தவளின் முகத்தையே பார்த்தவன், ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு வனபத்ராவைப் பார்த்தான்.

“வனா…” அவன் மென்மையாக அழைக்க, அவள் அவன் முகம் பார்த்தாள்.

“இந்த முடிவுக்கு வர எனக்குக் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. அதனால, நீயா எனக்குக் கூப்பிட்டா இதை உன்கிட்ட கேட்கலாம்ன்னு நெனச்சுருந்தேன், அதுதான் என் வேலைக்கும் படிச்ச படிப்புக்கும் கொடுக்கிற அடிப்படை மரியாதையா இருக்க முடியும்ன்னு தோணுச்சு… ஆனா, உன்னைப் பார்க்கவும் எல்லாத்தையும் மறந்து, நீ ஒரு எமர்ஜென்சிக்குக் கூப்பிட்டத சப்பக்கட்டா பிடிச்சுக் கேட்கத் தோணுது… நான் பேசுறது புரியுதுதானே?” அவனுடைய குரலில் மறைக்க முயன்ற வலி தெரிந்தது.

அவள் தலையசைக்க, “நான் இந்த ஒரு வாரமா மெடிக்கல் லீவ்ல இருக்கன்..” என்றான்.

“உடம்புக்கு என்ன?”

“உடம்புக்குலாம் ஒண்ணும் இல்ல…” என்றவன், “என்னால அந்த வேலையைப் பார்க்காம இருக்க முடியுமான்னு பாத்தேன்.. முடியுது… அன்னைல இருந்து இப்ப, இந்த நாய்க்குட்டியப் பார்க்கறதுக்கு முன்னாடி வரைக்கும் எந்த விலங்கையும் தொடல…” என்றான். அவன் சொல்ல வருவது புரிய, வனபத்ராவின் விழிகள் விரிந்தன.

“வேலய விட்டுரேன்… இப்ப பார்த்துட்டு இருக்க வேல மட்டும் இல்ல, அதுக்கடுத்து எந்த அனிமல் ஹாஸ்பிட்டல்லயோ க்ளினிக்லயோ வேலைக்குப் போகமாட்டேன்… நான் ஒரு வெட்ங்கறதையே மறந்துரேன்… அதுக்காக இவன் சும்மா இருந்து நம்ம காசுல சாப்பிடப்பாக்கான்னு நெனச்சுராத… பாக்கணும்ன்னு நெனச்சா எத்தன வேல உண்டு? அப்படி வேற வேல ஏதாவது தேடிக்கிறேன்… இந்த முடிவுக்கு வர்றதுக்கு எனக்குக் கஷ்டமா இல்லன்னு சொல்ல மாட்டேன், ரொம்பக் கஷ்டமாதான் இருக்கு… ஆனா, அதுவா இதுவான்னு பார்க்கும்போது, நீதான் முக்கியம்ன்னு தோணுது…” என்றவன், சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு, “இப்பவும் உனக்குப் பிடிக்காதா வனா?” என்றுகேட்டான்.

வனபத்ராவின் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் ஆறாக வழியத் தொடங்கியிருந்தது. துடிக்கின்ற உதட்டைக் கடித்தவள், சிலநொடிகள் கழித்து, தலையை மறுப்பாக அசைத்தபடி “சரிபட்டு வராது ஜீவி…” என்றாள் குரல் நடுங்க.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *