Skip to content
Home » என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-3

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-3

ராகம் 3

“ஷாலு! ஷாலு!”

மனோவின் குரலிலேயே நேற்றைய இரவைக் கொண்டு பதட்டமாக உள்ளான் என்பதை உணர்ந்தவள், வேகவேகமாக அறையின் கதவை திறந்தாள், ஷாலினி.

“ஷாலு, நீ ஓகே தானே?” என்றான், கண்களில் படிந்த பயத்துடன்.

அவனை மென்மையாக அணைத்துக்கொண்டவள், “நான் ஓகே தான், மனோ. நீ இருக்கும் போது, நான் ஏன் கவலைப்பட போறேன்?” என்றாள்.

மனோ அறியாமல், கண்ணில் தோன்றிய நீரை துடைத்துக்கொண்டாள்.

“ஷாலு! சஞ்சய்!” என்ற மனோவின் மென் குரலில் பதட்டமாக திரும்பினாள் ஷாலினி.

அதுவரை அவர்களை வெறித்தவாறு நின்றிருந்தவன், ஷாலினியின் பார்வை தன் பக்கம் திரும்பியதும், சட்டென அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

“மனோ!”

“ம்ம்…”

“இருந்தாலும் உன் அண்ணனுக்கு இவ்வளவு வெட்கம் ஆகாதுடா? ஒரு கர்ட்டசிக்காகவாவது ஒரு சின்ன ஸ்மைல் கொடுக்கலாம்! என்னைப் பார்த்ததும், பேய பார்த்த மாதிரி ஓடுறாரு!”

“அவன் மனுஷனை பார்த்தாலே ஓடுவான். மனிதி பாதி, பேய் பாதி ன்னு இரண்டும் ஒன்னா இருக்கும்போது, பயப்படாம என்ன செய்வான்?பாவம் “

“அது சரி! ” என்றவளுக்கு அப்போதுதான் அவன் என்ன கூறினான் என்பது புரிய

” என்னது?!” என அவனைத் துரத்த, அவன் படிகளில் இறங்கி ஓடினான்.

“ஒரு அடியாவது வாங்கிரு, மனோ?”

“முடிஞ்சா அடிச்சுக்கோ, ஷாலு குட்டி!”

“டேய் நில்லுடா!” என்ற பத்மாவின் குரலில், சடன் பிரேக் போட்டு மனோ நிற்க, ஷாலினியோ பாதிப் படியில் நின்றவள் மேலே ஏற  பார்த்தாள்.

“நீ எங்க மேலே ஏறுற, கீழ வா?” என பத்மா அதட்டல் போட படு பவ்யமாக வந்து நின்றாள்.

டைனிங் டேபிளில் சஞ்சய் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க, அவன் கண்ணில் படாதவாறு மனோவின் பின் ஒளிந்தாள்.

“அவன் பின்னாடி ஏன் போய் ஒளியுற? முன்னாடி வா!”

“உன் அண்ணனோட பிரண்டுனா, உன்ன விட பெரியவன் தானே? அவன் வயசுக்கு மரியாதை தரலைன்னாலும் பரவாயில்லை! அவன் பதவிக்காகவாவது மரியாதை தரலாம் இல்ல? வாடாங்குற போடாங்குற டேய்ங்குற! இப்படி தான் ஒரு டாக்டர கூப்பிடுவியா ? இப்படித்தான் உங்க வீட்டிலயும் மரியாதை இல்லாம பேசுவியா?”

பத்மாவின் பேச்சுக்கள் காயப்படுத்தினாலும், இனி அவரின் பேச்சுக்கள் தன்னை பாதிக்கக்கூடாது என காலையில்  தான் எடுத்த முடிவை நினைவு படுத்தி தன்னை திடப்படுத்திக்கொண்டாள்.

‘ அவர் சொல்வதும் சரி தானே. சமுதாயத்தில் மதிப்புமிக்க மருத்துவரை மற்றவர்கள் முன்னிலையில் வாடா போடா என கூப்பிடுவது நாகரீகம் இல்லை தானே. அதுவும் அவருடைய தாயின் முன்னிலையில். தவறு தன் மேல் தான். பழக்கதோஷத்தில் வந்து விட்டது. இனி திருத்திக் கொள்ள வேண்டும் என உணர்ந்து கொண்டாள். ஆனால் அதை இவர் பதமாக கூறியிருக்கலாம்.’

“சாரி ஆன்ட்டி!”

“மனோவ இல்ல, டாக்டர் மனோகரன் சாரை இனி ‘டாக்டர் வாங்க, டாக்டர் போங்க, ‘ ன்னு கூப்பிடுறேன் ஆன்ட்டி!”

அப்பாவி முகத்துடன் சொல்ல, அவள் பணிவாய் சொல்கிறாளா, இல்லை கிண்டல் செய்கிறாளா என புரியாமல் பத்மா மனம் குழம்பியது. அதை பார்த்த மனோவிற்கு சிரிப்பு வந்தது.

தன் குழப்பத்தை விடுத்து, மனோவின் புறம் திரும்பி முறைத்தார்.

“நீ படிச்சவன் தானடா! ஒரு வயசு பொண்ணை ‘குட்டி’ ‘புட்டி’ன்னு தான் கூப்பிடுவியா? பாக்குறவங்க என்னடா நினைப்பாங்க? ஒழுங்கா ‘தங்கச்சி’ன்னு கூப்பிடு!”

“அம்மா, இது உங்களுக்கே ஓவரா இல்ல? தங்கச்சியவே யாரும் ‘தங்கச்சி’ன்னு கூப்பிட மாட்டாங்க. இதுல இவள ‘தங்கச்சி’ன்னு கூப்பிடனுமா? முடியாது. உங்களுக்காக வேணும்னா ‘ஷாலினி’னு கூப்பிடுறேன். வேற எதுவும் எதிர்பாக்காதீங்க.”

“நான் சொல்ற பேச்சைக் கேட்கவே கூடாதுன்னு இருக்கியா?”

“நீங்க டூ மச்சா கேக்குறீங்க. எனக்கு லேட் ஆச்சு. நான் கிளம்புறேன்.”

“சாப்பிட்டு போடா.”

டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த சஞ்சயை பார்த்தவன், “இல்லம்மா, லேட் ஆச்சு. நாங்க கேண்டின்ல சாப்பிட்டுக்கிறோம்.”

“வா, ஷாலினி.” என்றவன், ஷாலினியின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

கை கோர்த்து கொண்டு போகும் அவர்களை முறைத்தவாறு திரும்ப, யோசனையுடன் அமர்ந்திருந்த சஞ்சய் கண்ணில் பட்டான்.

முகத்தை மென்மையாக்கியவர், “கண்ணா…” என அவன் தோளைப் பற்றினார்.

“உனக்கு அன்-கம்ஃபேர்ட்டபிளா இருக்காப்பா?”

“அது …. அப்படியெல்லாம் இல்லம்மா.”

“உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா, கண்ணா?!”

நாற்காலியில் அமர்ந்தவாறே, திரும்பி அவரை வயிரோடு கட்டிக்கொண்டான்.

“பாவம்மா அவ.  பெத்தவங்க ரெண்டு பேரையும் இழந்துட்டு, கூட பிறந்தவனும் பிழைப்பானா, மாட்டானா ன்னு பயந்து, ஆதரவு தேடி வந்திருக்கா.

இப்ப நீ என்கிட்ட கேட்கிற மாதிரி அவள்ட்ட கேட்க கூட யாரும் இல்லம்மா. அவளை அரவணைச்சு ஆறுதல் சொல்லாட்டியும் கூட பரவாயில்லை.என்னை வச்சு அவளை கஷ்டப்படுத்தாதீங்கம்மா! ப்ளீஸ்!”

என வயிறை அணைத்தவாறே நிமிர்ந்து அவர் முகம் பார்த்தான்.

“ஆனா, நீ கஷ்டப்படுறியே, கண்ணா?”

“ஒன்னும் பிரச்சனை இல்லம்மா. நான் மேனேஜ் பண்ணிப்பேன். ப்ளீஸ், எனக்காக…”

அவன் ஏக்கமாகக் கேட்டதை மறுக்க, பத்மாவிற்கு மனம் வருமா என்ன?

“சரிடா, கண்ணா…” என அவன் தலைமுடியை கோதிவிட்டார்.

என்னதான் “சரி” என கூறிவிட்டாலும், பத்மாவின் மனதிற்குள் சஞ்சலமே இருந்தது. ஆனாலும், சஞ்சயின் வேண்டுகோளுக்காக, அரை மனதாய் சம்மதித்து விட்டார்.

“ம்ம்…ஆவ்சம்”  என சப்பு கொட்டியபடி கேன்டீன் பொங்கலை வயிற்றுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தாள் ஷாலினி.

“அவ்ளோ புடிச்சிருக்கா என்ன?”

“பின்ன, பேசாம ஹாஸ்பிடல்ல மூடிட்டு ரெஸ்டாரன்ட் ஸ்டார்ட் பண்ணுங்க டாக்டர் மனோகரன் . சேல்ஸ் சும்மா பிச்சிட்டு போகும்.”

“ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க தானே முக்கி முக்கி டாக்டருக்கு படிச்சேன்! பாரேன்!”

“படிச்சு படிப்புக்கு இப்பல்லாம் யாரு வேலை பாக்குற? இதுல ஒரு நல்ல எதிர்காலம் இருக்குன்னு சொன்னேன், அப்புறம் உன் இஷ்டம்! டாக்டர் னா அவ்ளோ கஷ்டமா?”

” நான் டாக்டர் ஆவேன்னு நினைச்சு கூட பார்த்ததில்ல.டாக்டர் என் அப்பாவோட கனவு! என் அப்பாவோட கனவு, சஞ்சய ஒட்டிக்கிச்சு! அவன்கிட்ட இருந்து எனக்கு ஒட்டிக்கிச்சு!”

“உன் அண்ணா தான் உனக்கு ரோல் மாடலா? அவர் உன்கிட்ட கூட பேச மாட்டாரா? உன் கிட்ட கூட பேசி நான் பார்த்ததில்லையே!”

“அவனாவது பேசுறதாவது? நானா போய் பேசினால்தான் உண்டு! அதுவும் நான் பேசுவேன், அவன் மண்டைய மண்டைய ஆட்டுவான், அவ்வளவுதான்!

கேள்வி கேட்டாலும் கூட ‘ஆமா’, ‘இல்ல’, ‘அப்படியா’, ‘சரி, பார்த்துக்கலாம்’ அவ்வளவுதான் வரும்!

அவனுக்கு தேவைகள் இருந்தால் மட்டும் தான் வாயை திறப்பான். அவனோட தேவைகளும் பிரஃபசனலா மட்டும் தான் இருக்கும்.அம்மாக்கிட்ட கூட லிமிட் தான்!

ஒரு இட்லி எக்ஸ்ட்ரா வேணும்னா கூட கேட்க மாட்டான்! தனியா இருந்தா போட்டு சாப்பிடுவான். நான் பக்கத்துல இருந்தாலும் கூட எடுத்து போட்டு சாப்பிட மாட்டேன்.

அன்னைக்கு பக்கத்துல இருந்து பார்த்தியே, வெறும் இட்லி கூட சாப்பிடுவான்! எனக்கு சட்னி வேணும்னு கேட்க மாட்டான். ‘ஏண்டா இப்படி இருக்க?’ன்னு கேட்டா, அதுக்கும் கூட வாயை திறக்க மாட்டான்!”

“அம்மாக்கு அவனை நினைச்சு ரொம்ப கவலை! எப்படியாவது அவனை எல்லார மாதிரியும் நார்மலா மாத்தணும்னு ரொம்ப முயற்சி பண்ணாங்க!

இவனை மாத்த, அம்மாவும் நானும் எவ்வளவோ போராடினோம் தெரியுமா! நாங்க டயர்ட் ஆனது தான் மிச்சம்! அவனை துளி கூட மாத்த முடியல!”

“கடைசில நாங்க தான் ‘இவன் இப்படி தான்னு’ மைண்ட் செட் பண்ற மாதிரி ஆயிடுச்சு!”

“அவன் பேசிக் கேக்கணும்னா, ஆப்ரேஷன் தியேட்டர்ல, ஓபி கேஸ்ல, மெடிக்கல் டிஸ்ட்கசன்ல தான் முடியும்!”

” ப்ரண்ட்ஸ் கூட இல்லயா?”

“ஒருத்தரும் இல்ல. எப்படி இத்தனை வருசம் படிச்சான்னே டவுட்டு. எப்பவும் தலை புக்க பார்த்த மாதிரியே தான் இருக்கும். நிமிர்ந்து கூட யாரயும் பார்க்க மாட்டான். “

” வாழ்க்கை ல ஃபர்ஸ்ட் டைம் இப்படி ஒரு பையன பார்க்குறேன்.எனக்கு ஒரு டவுட்!”

“என்ன டவுட்?”

“ஒருவேளை உங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னா, உன் அண்ணி நிலைமை என்ன ஆகும்னு நினைச்சியா?”

“கஷ்டம் தான், அம்மா கல்யாணம் பண்ணி வச்சா  மாறிடுவான்னு  பார்த்தால், அதுக்கும் பிடி கொடுக்க மாட்டேங்கிறான்!”

“இமாஜின் பண்ணி பாரு! உன் அண்ணி ‘என்னங்க’ன்னு கூப்பிட்டா உன் அண்ணன் பதறி அடிச்சு ஊரைவிட்டு… இல்லை இல்லை, நாட்டை விட்டு ஓடி போனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல!”

“ஹய்யோ ஹய்யோ! உன் வருங்கால அண்ணியை நினைச்சா பாவமாவும், உன் அண்ணன் நினைச்சா சிரிப்பு சிரிப்பாவும் வருது!ஹய்யோ ஹய்யோ !” என அவன் தோளில் அடிக்க மனோ முறைத்தான்.

“என் அண்ணனை பார்த்தா, காமெடியா இருக்கா உனக்கு?” கோபமாக கேட்டான்.

அவன் அருகே குனிந்தவள், “உண்மையை சொல்லு, இதை நினைக்கும் போது உனக்கு சிரிப்பு வரல?”

அவளைப் போலவே மனோவும் குனிந்தவன். “எனக்கும் சிரிப்பு வருது. ஆனா, நான் சிரிச்சா, உன் பின்னாடி நிக்கிற என் அண்ணன் வருத்தப்படுவான். அதான் சிரிக்கல!” மென் குரலில் சொன்னான்.

“என்ன நான் இல்ல ?” என்றவள் துள்ளி எழுந்து திரும்பி பார்த்தாள்.

பின்னால் பார்த்தாள் யாரும் அங்கு இல்லை!

முன்னால் திரும்பி பார்க்க, மனோ வாயை மூடிக்கொண்டு சிரித்தான்.

“இடியட் மனோ! ஏண்டா இப்படி பண்ணின? நான் கூட உன் அண்ணா தான் வந்து எல்லாம் கேட்டுக்கிட்டாருன்னு பயந்துட்டேன்! அந்த புள்ள பூச்சியை வைச்சு என்னை பயமுறுத்துறியா?”

“ஏய்! அண்ணாடி!” என மனோ மீண்டும் ஷாலினியின் பின்னால் பார்த்து சொல்ல,

“உன் அண்ணனா? நான் பயந்துடுவேனா? அவர்தான் என்னை பார்த்தாலே பத்தடி தூரம் பயந்து ஓடுவாரே! அவரா இங்க வரப்போறாரு?”

“வாய மூடு, ஷாலு!”

“நான் எதுக்குடா வாய மூடனும்? உன் அண்ணனை சொன்னதும்…”

“க்கும்.”என்ற சஞ்சயின் கனைப்பில் பேச்சை பாதியில் நிறுத்தியவள், பின்னால் திரும்பி இளித்து வைக்க அவனே அவளையே  பார்த்தான்.

அவனின் முதல் பார்வை அவள் மீது நிலை குத்தி நிற்க, பதட்டமானாள் ஷாலினி.

“டாக்டர் சஞ்சய்… அது சும்மா… இவன் இல்ல டாக்டர் மனோ உங்களுக்காக எவ்வளவு சப்போர்ட் பண்றாருன்னு டெஸ்ட் பண்ணினேன்! ஆனா இவர் ஜீரோ மார்க் தெரியுமா? இவனை நம்பாதீங்க! நான் போயி பிரவீன பாத்துட்டு வாரேன்!” என்றவாறு மெதுவாக நழுவி, அவனை தாண்டி சென்றாள்.

“என்ன? அம்மாஞ்சிய இருந்தவன், இப்படி பார்க்கிறான்?”

அங்கிருந்த தூணின் பின்னால் மறைந்தவள், படபடக்கும் மனதை சமன்படுத்தியவாறு மெதுவாக எட்டிப் பார்த்தாள்.

‘போச்சு! என்ன நடக்க போகுதோ?கம்ப்ளைன் எதுவும் பண்ணுவானோ? அவன் அம்மாகிட்ட மாட்டிவிட்டா என் கதை இன்னோட முடிஞ்சுரும்.’ என புலம்பியவாறே பார்வையை அவர்கள் மேல் நிலைக்க விட்டாள்.

“அது…. அவ  சும்மா விளையாட்டுக்கு….!”

“எனக்கு செழியனோட கேஸ் ஃபைல் வேணும், மனோ!”

“நான் எடுத்து தரேன்.”

என அவன் நகர, அவனோடு சஞ்சயும் அங்கிருந்து கிளம்பினான்.

‘அப்பாடா! மனுஷன் பெருசாக்காம கிளம்பிட்டாரு! நாமளும் கிளம்புவோம்!’

2 thoughts on “என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *