அத்யாயம்-2
அவரவர் வீட்டிற்கு வந்த இருவரும் வேறு வேறு மன நிலையில் இருந்தனர். தான் மனதில் நினைத்திருந்தவனே இன்று நல்ல நிலையில் அதுவும் தனக்கே முதலாளியாக வந்ததில் சந்திரா பெரு மகிழ்ச்சி அடைந்திருந்தாள் . மகளின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அன்னைக்கும் தந்தைக்கும் கூடத் தெரிந்தது. உணவு அருந்திவிட்டு சற்று ஓய்வாக இருக்கையில் அமர்ந்துகொண்டிருந்தாள் சந்திரா. அவள் அருகில் வந்தமர்ந்த கணேசன்
“என்னம்மா இன்னிக்கு ஆபிஸ் எப்படி போச்சு?”
“ம்ம் குட் பா!”
“புது முதலாளிய பார்த்தியா ? அவர் வந்த முதல் நாளே நீ லேட்டுன்னு ஒன்னும் சொல்லலியே? நல்ல மாதிரியா?”
“ம்ம்! ரொம்ப நல்லவர்தான்ப்பா. மனம் அவனைப் பற்றிய சிந்தனையில் இருக்க வாய் தானாகச் சொல்லியது.
“என்னம்மா என்ன சொன்ன ?”
“ம்ம்!” சட்டெனத் தன் நிலை உணர்ந்தவள்,
“ம்! ரொம்ப நல்லவர்ன்னு சொன்னேன்பா”. மகளின் குரலில் இருந்த பதற்றம் அவருக்குச் சந்தேகமாய் இருந்தது.
“அவரு பேரு என்ன ?”
“சூர்யா!”
“சூர்யாவா !”
“அதே சூர்யாதாம்பா ! “
அதற்குள் குழந்தை எட்டி உதைத்தது. “ப்ச் ஆ ! ”
“என்னமா?” ஒண்ணுமில்லப்பா குழந்தை உதைக்கறான்.
டீவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரி,
“ப்ச் என்னங்க! அவளைத் தொந்தரவு பண்ணாதீங்க அவ போய்க் கொஞ்ச நேரம் படுக்கட்டும்”
“சரி வாம்மா!” மெதுவாக மகளின் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.
அவளை ஆதரவாக அழைத்துவந்து தலையணையை உட்கார ஏதுவாக வைத்தவர்,
“சரிம்மா! நீ படு நான் அப்புறம் வரேன்”.
“அப்பா !”
“என்னடா கண்ணு ?”
“கொஞ்ச நேரம் இங்கையே இருக்கீங்களா ? உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”.
“சொல்லுமா ! சூர்யாவை பத்தித்தானே ?”
“ம்ம் !”
“சொல்லு!”
“அவரு ரொம்ப பெரிய ஆளாய் மாறிட்டார்பா! ஐஐஎம் ல மேனேஜ்மென்ட் முடிச்சுருக்காருல்ல ? அதோட கெத்து அப்படியே தெரியுதுப்பா. வந்ததும் ஆயாவுக்கு கேக் ஊட்டியது, இவளுக்குத் தனது உணவை மாற்றிக் குடுத்தது என்று அனைத்தையும் சொன்னாள். அவர் சாரா என்று சொல்லி முதுகை நீவியதை மட்டும் ஏனோ அப்பாவிடம் சொல்ல வாய் வரவில்லை.
அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்,
“அவருக்குக் கல்யாணம் ஆகிடுச்சா பாப்பா ? ஏதாவது சொன்னாரா ? “
“இல்லப்பா! அவரு இன்னும் கல்யாணம் பண்ணிக்கல ”
“நீங்க ரெண்டு பேரும் பர்சனலா ஏதாவது பேசினீங்களா ? அவரு உன்ன முன்னமே தெரியும்ன்னு காட்டிக்கிட்டாரா?”
“அப்படிலாம் எதுவும் இல்லப்பா”.
“இந்தக் குழந்தையைப் பத்தி ?”
“இல்லப்பா எதுவும் கேட்கல”
“அவன் ஏன் என்ன பத்தி எதுவுமே கேட்கல ? ஏனோ மனம்தன் மீதே கழிவிரக்கம் கொண்டது. யாராவது தன்னை கவனிக்க மாட்டார்களா ? என்ற ஏக்கம் அடிக்கடி அவளுக்கு மனதில் வருவதுதான். ஒருவேளை மற்ற பெண்கள்போல இயற்கையாகத் திருமணம் ஆகி கருவுற்றிருந்தால் அவளுக்கு இப்படி உடம்பும், மனமும் படுத்தி இருக்காதோ ?
“அவரு ஏதாவது கேட்டா என்ன பாப்பா சொல்லுவ ?”
“தெரியலப்பா ! அதெல்லாம் நான் யோசிக்கல”
“உனக்கும் அவருக்கும் மறுபடியும் கல்யாணம்?”
“இல்லப்பா!வேணாம். அவரு வேற ஏதாவது புது பொண்ணா……”.கண்களில் நீர் கோர்த்தது………..
முதலில் இனிமையாக இருந்த நாள் மிகவும் துக்கமான இரவாக முடிந்தது சந்திராவுக்கு.
——————————————————————————————————————————————
இரவு உணவை முடித்துவிட்டு மாடியில் வந்து அமர்ந்துக் கொண்டான் சூர்யா.
கைப் பேசியில் வந்திருந்த செய்திகளைப் பார்த்து முடித்துவிட்டு எதேச்சையாகத் தலை நிமிர்த்தினான். அங்கே இருந்தது முழுதாக வளர்ந்திருந்த நிலவு. அதையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்குப் பழைய நினைவுகள் நெஞ்சில் அலை மோதின. சந்திராவை பற்றி நினைக்கக் கூடாது என்று அவன் நினைத்தாலும் விதி அவனை விடவில்லை. படிக்கச் சென்றிருந்த அந்த இரண்டே வருடங்கள். முடித்ததும் இதோ அவளைப் பார்த்து விட்டான். அதுவும் கர்ப்பிணியாக. எத்தனை நாட்கள் அவள் முகத்தைப் பார்க்கத் தவம் புரிந்திருப்பான்?ஒவ்வொரு நிமிடமும் அவளை எண்ணாத நாட்கள் இருந்ததே இல்லை.ஆனால் இப்போது? அவனே அவளை நினைக்கக் கூடாது என்று நினைக்கிறான்.
அவன் மனம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டது, அவளிடம் சண்டையிட துடித்தது. இருப்பினும் அவள் கணவனுடன் இருக்கலாம் அல்லது மாமனார் மாமியார் ? அவளுக்கு எதுவும் பிரச்னை வந்து விடக் கூடாது என்று தான் நினைத்தான். ஆனால் மனதை ஏனோ அடக்க முடியவில்லை.
“ம்! நீ என்ன என்ன மாதிரி எந்தச் சொந்தமும் இல்லாதவளா ? அப்பா அம்மா தங்கை.கணவன் அவர்கள் குடும்பம் உன்ன சுத்திதான் ஏகப்பட்ட பேர் இருப்பங்களே ? என்னோட நினைவு கூட உனக்கு இருக்காது. இல்ல, இனி நான் அவளைப் பத்தி நினைக்கக் கூடாது. பேசாம ஸ்ரீதர் கிட்ட சொல்லிட்டு நான் ஏன் டெல்லிக்கு போகக் கூடாது? அவளைப் பார்த்துகிட்டே அவளைப் பத்தி நினைக்கக் கூடாதுன்னு கஷ்டப்பட வேண்டாம். ச! ச !அது தப்பு முதல்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு அப்புறம் அத மாத்தக் கூடாது’.
இப்படியாக அவன் மனம் பலவாறு குழம்பிக் கொண்டிருந்தது. அதைச் சமன்படுத்த வேண்டி வழக்கம்போலப் பாட்டுக் கேட்க யூ டியூபை போட்டான். ரஹ்மான் இசையில் ஏதோ பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி…
அந்த வரிகள் முதன் முதலில் அவளைப் பார்த்த நினைவைக் கொண்டு வரத்தான் செய்தது.
அவர்கள் வீடு மாற்றி வந்தபோது அவள் தன் ஈரக் கூந்தலை ஆற்றிக் கொண்டிருந்தாள். ஒருக் காலை முன்னும் மற்றொன்றை பின்னாலும் வைத்து ஒரு பக்கமாய் நின்று துண்டால் உதறிக் கொண்டிருந்தாள். கரு மேகத்தின் நடுவில் இருக்கும் சந்திரன் போல் அவள் முகம். அப்போது அவள் பெயர் தெரியாது. வாய் முணுமுணுத்தது நிலா. பாகெர்ஸ் அன்ட் மூவேர்ஸ் பெட்டியை இறங்கியதில் அவன் கவனம் கலைந்தது. அந்த நினைவுடனேயே உறங்கச் சென்றான் சூர்யா.
துன்பத்துடன் ஆரம்பித்த அவன் நாள் அவளின் நினைவில் இன்பமாகவே முடிந்தது. ————————————————————————————————————————–
இங்கே ஆயாவின் வீட்டில் பேத்திக்கு உணவு பரிமாறினாள். அவளுக்கும் இப்போது சந்திராவைப் போல் ஆறு மாதம் முடிந்து ஏழாவது மாதம். அவள் கணவன் வெளி ஊருக்குச் சென்றிருப்பதால் அவள் பாட்டியின் வீட்டில் இருக்கிறாள். அவன் ஒரு கார் ட்ரைவர். இவள் முன்பு வேலை பார்த்த முதலாளிக்கு ட்ரைவராக இருப்பவன். அவன் ஆபிசுக்கு வரும்போது பழக்கம் ஏற்பட்டு அவளை விரும்பினான். இருப்பினும் அவன் பெற்றோர் அனாதை ஏழை பெண்ணை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றுவிட்டார்கள். அவனோ மத்தபொண்ணுங்களுக்கு ஈஸியா பையன் கிடைப்பான். இந்த மாதிரி பொண்ணுக்குத்தான் பையன் கிடைக்க மாட்டான். அது மட்டும் இல்ல, எப்ப நான் அவளை மனசுல நினச்சுட்டேனோ அப்பவே அவதான் எனக்குப் பொண்டாட்டி. வேற யாரையும் நான் கட்ட மாட்டேன் என்று கூறி இவளையே விடாப் பிடியாகத் திருமணம் செய்துக் கொண்டான்.
அவன் முதலாளிக்கு வெளியூருக்கு வண்டி ஓட்டப் போய் இருக்கிறான். எப்போது வருவான் என்று தெரியாது.
“என்ன ஆயா? இன்னிக்கும் கருவாடு தானா ?”
முகம் சுளித்தாள் பேத்தி. “மட்டன் செய்யலாமில்ல ?”
“ம் என் வசதிக்கு இதான் செய்ய முடியும். வேண்ணா போய் உன் மாமியா கிட்ட கேளு. மட்டன் வேணுமா மட்டன்.
“என்ன ஆயா ! எதுக்கு புள்ளத்தாச்சியா திட்டிகிட்டுருக்க ? “
வரான் பாரு ஆளு. அக்கா மவளுக்கு மட்டன் வேணுமா சிக்கன் வேணுமாம். தினம் என்னால அதல்லாம் ஆக்கிப் போட முடியுமா ? ஏதுடா கிழவி வேலைக்குப் போய்க் காசு கொண்டு வருதேன்னு இதுக்கு தெரியவேணாம் ? காலைலேர்ந்து உக்கார நேரமில்லாம ஓடறேன். நான் என்ன இருபது வயசு குமரியா? “
“நான் என்ன கேட்டேன்? ஒரு நாள் மட்டன். அதுக்கு இத்தனை பேச்சா ? எனக்கு ஆத்தா இருந்திருந்தா இப்படி எல்லாம் பேசுமா? புள்ளத்தாச்சி பொண்ணுக்கு வாய்க்கு வகை வகையா செய்து போட்டிருக்காது ? “
“எனக்கென்னடியம்மா? நீ வயத்துல இருக்கும்போது உங்காத்தாவுக்கு நான் ஆக்கிப் போடாததா ? அப்போ எனக்குத் தாலி கட்டின மகராசன் இருந்தாரு. இப்போ அப்பிடியா ? “
போதும் போதும் நிறுத்துக் குழந்தையை ஏதாவது சொல்லிகிட்டே கடக்கற ?” அழுத அக்காள் மகளின் கன்னத்தை, தன் கால் கட்டைகளை ஓரமாக வைத்து விட்டு அழுத்தித் துடைத்தான்.
“ஆமாடா! நீங்க எல்லாரும் ஒண்ணா போங்க. என்ன செஞ்சாலும் யாரும் என்னய ஒரு வார்த்தை நல்லா சொல்லறது இல்ல. வந்தான் பாரு மகராசன் அத்தனை பேரு மத்தில கேக்க எடுத்து எனக்கில்ல தந்தான். இதோ இவ ஒரு நாலாவது ஆயா நீ சாப்டியான்னு கேட்டுருக்காளா ? சொந்த வீட்டுல இருக்கறதுங்களே இப்படி இருக்குங்க. இதோ அந்த வள்ளி என்ன விடப் பத்து வயசு சின்ன வயசு அது போய்ச் சேந்துடுச்சு. நான் பாரு. இன்னோம் கட்டைல போகாம கடக்கறேன்” அழுதுகொண்டே புடவையின் முந்தானையில் மூக்கை சிந்தினாள். வாய் தாறுமாறாகப் பேசினாலும் அவள் உயிரை வைத்துக் கொண்டிருப்பது ராஜூவுக்காகத்தானே. அதை அறியாதவனா ராஜு?
அப்போதும், அவள் மகன் ராஜு மெதுவாக எழுந்து வந்து அவளைச் சமாதானப் படுத்தினான்.
“என்ன ஆத்தா இது, அது சின்னக் குழந்தை. இன்னும் எத்தனை நாளைக்கு இங்க இருக்க போகுது ? மாப்பிள வந்தா கூட்டிட்டு போய்டுவாரு. அதுகிட்ட போய் வம்பு வளத்துக்கிட்டு.
நீ வா! நாம் சேர்ந்தே சாப்பிடலாம். நான் போய்க் கைக்கழுவிட்டு வரேன். யாரோ கேக்கு குடுத்தாங்கன்னு சொன்னீயே அந்தக் கதையைச் சொல்லு பாப்போம்.
ராணி இன்னிக்கு நீ இதைச் சாப்பிடு. நாளைக்கு உனக்கு நான் என்ன வேணுமோ வாங்கிட்டு வரேன்”
“வேணாம் மாமா நீ காசுக்கு என்ன பண்ணுவ ? “
இந்தக் குட்டி மூளை எதையும் யோசிக்க கூடாது சரியா?”மெதுவாகத் தலையை ஆட்டிவிட்டுச் சென்றான்.
சூர்யாவின் செய்கையைப் பற்றிக் கூறினாள் ஆயா. அவனுக்கு ஒரே புகழாரம்தான்.
பணக்காரங்க வீட்டுல இதெல்லாம் சகஜம். அதுவே நம்மள மாதிரி ஏழைங்களுக்கு இது ரொம்ப பெரிய விஷயம். அந்தஸ்து பாக்காம அவரு கூட்டி பெருக்கற உன்னையும் ஒரு மனுசியா மதிச்சுருக்காருன்னா உனக்கு இன்னும் பொறுப்பு கூடுது ஆத்தா. பாத்து பதவிசா நடந்துக்கோ” சொல்லியபடியே ஒரு கையால் கட்டையையும் மறு கையால் தட்டையும் எடுத்துக் கொண்டு கைக்கழுவச் சென்றான். அவன் மனதிலும் எளிமையாக இடம் பெற்றுவிட்டான் சூர்யா. ராஜுவின் பின்னோடே சென்ற ஆயா அவனின் தட்டையும் சேர்த்து வாங்கி கழுவினாள்.
அன்னைக்கு கன்னத்தில் முத்தமிட்டவன் சாப்பாடு சூப்பர் ஆத்தா ? என்றான்.
ஆமா ஒத்த முத்தத்தைக் குடுத்து என்ன மயக்கிடுவியே ?”
“இல்லையா ? உன்ன எப்படி மயக்கறதுன்னு எங்கப்பன் எனக்குச் சொல்லித் தந்த வித்தையாச்சே ?”
“சீ ! போடா வெக்கமில்லாம !”
“அதான் நீ வெக்கப்படறியே ?”
“நீயும் அந்தச் சந்திரா பொண்ணு போலப் பேச ஆரம்பிச்சுட்டியா ?”
“நீயும் சந்திராவ பத்தி பேச ஆரம்பிச்சுட்டியா ? நான் உள்ள போறேன்”
மூவரின் வீட்டில் நடப்பதையும் தன் குளிர்ந்த கண்களால் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது முழு நிலவு.
சூர்ய(யா)ன் தூங்க போயிருக்கு. காலைல கண் முழித்து அடுத்த பாகம் கொண்டு வரும்
காத்திருங்கள் …
ஸோ…மூணு குடும்பத்தோட கதையை ஒரே புள்ளியில கொண்டு வந்து இணைக்கப் போறாங்களோ…???
மூனு குடும்பத்தை சுத்தி தான் நிகழ்வா இல்லை கர்பிணிகளுக்கா!???… இன்ட்ரெஸ்டிங்!!…
3 family iruku ellarkum ithula ore mari situation iruka illa three families um onna aga porangala . Ena nadakuthunu papom
Very interesting
Interesting
Thank you ma
Nice epi
nice Epi