Skip to content
Home » என் வாசம் நீ உன் சுவாசம் நான்-6

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-6

பாகம் -6
மெதுவாக அவனுக்கு உதவி செய்தாள் சந்திரா . ஏனோ சட்டென்று அவனுக்கு தாங்கள் இருவரும் கணவன் மனைவி போலத் தோன்றியது. 
“சந்திரா!” 
“ம்!”
“வேற யாரா இருந்தாலும் இப்படித்தான் உதவி செய்வியா ? “
“அதுக்கு என்ன சார்? யாரா இருந்தாலும் உடம்பு சரியில்ல , ஆபத்து அப்படின்னா உதவ வேண்டியதுதான்” இவனுக்குத்தான் மனதில் ஏதோ ஒரு சிறு ஏமாற்றம்…   மற்றவர்கள் சென்றிருக்க இவளும் வீட்டிற்கு கிளம்பினாள். 
 “ஆன்டி நானும் கிளம்பறேன். அப்பா வந்திடுவாங்க. அப்பாக்கு நான்தான் தோசை ஊத்தணும் “. 
“ஏன் அதான் அம்மாவும் தங்கச்சியும் இருக்காங்களே?” 
“இல்ல ஆன்டி! காயத்ரிக்கு ரொம்ப தூரம் காலேஜு. அவளே பாவம் டயர்டா இருப்பா . அதனால அவ எந்த வேலையும் செய்ய மாட்டா. அதோட , அம்மா சாதாரணமாத்தான் தோசை ஊத்துவாங்க . நான்னா கொஞ்சம் பார்த்து பதமா அப்பாவுக்கு செய்வேன். அப்போ இன்னும் ரெண்டு எஸ்ட்ரா சாப்பிடுவார்” என்று சந்திரா சொல்லிக் கொண்டிருந்தாள். சூர்யாவின் அன்னை இவளுக்காக வாங்கி வைத்திருந்த செம்முலையை எடுத்து தலை நிறைய சூட்டி விட்டார். 
 “என்ன ஆன்டி! எனக்கே இவ்ளோ பூ வைக்கறீங்க ?” “பின்ன வந்து எனக்கு எவ்ளோ உதவி பண்ணி இருக்கே ? உனக்கு பூ கூட குடுக்கலானா எப்படி? உனக்கு நல்ல முடி, பூ வைக்கவே ஆசையா இருக்கு ” 
“இது என்ன பூ ஆன்டி? ” “நீயே சொல்லு?” “எனக்கு தெரியலையே ?” பார்த்தா ஜாதி மாதிரியும் இருக்கு, முல்லை மாதிரியும் இருக்கு. ஏதாவது ஹைபிரிடா ?” கொஞ்சம் கிட்ட வந்துட்ட. ஆனா இது ஹைபிரிட் இல்ல. முல்லைதான். இதுக்குப் பேரு செம்முல்லை. சங்க காலத்துல இதுக்கு பேரு தளவம் . தோழிகளோடு சேர்ந்து தலைவி விளையாடும்போது யூஸ் பண்ண பூ. இது மொட்டா இருக்கும்போது சிகப்பா இருக்கும்.இதோ உன்னோட முகத்தை போல. அதுவே விரிஞ்சதுக்கு அப்புறம் வெள்ளையா இருக்கும். உன்னோட மனசு போல. எவ்ளோ அழகாக இருக்க தெரியுமா?”
திருஷ்டி கழித்தாள் . வெளியில் வந்துக் கொண்டே , அன்னையை பார்த்தவன், சந்திராவையும் சைட் அடித்தான் . ஒன்றும் தெரியாததுபோல . 
“அப்போ ஏன் ஆன்டி அன்னிக்கு காயத்ரியை மட்டும் அழகா இருக்கான்னு சொன்னீங்க ? ” வெகுளி கேட்டு விட்டாள். 
“ என்னிக்கு ? “
“அன்னிக்கு வீட்டுக்கு, சாரி! சாரி! ஆன்டி ஏதோ தப்பா …..” “ஓ ! அதுவா ! ஏனோ அன்னிக்கு அவளை சொல்லணுன்னு தோணிச்சு. இன்னிக்கு உன்ன சொல்லணுன்னு தோணுது”
சூர்யாவோ, அவளையே ரசித்துக் கொண்டிருந்தான். அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சட்டெனெ மூளை அலாரம் அடித்தது.
 “அம்மா! போதும் அவளையே கவனிச்சது . கொஞ்சம் பெத்த புள்ளைய பாக்கறியா? எனக்கு படிக்க போகணும்”
 தன்னைத் தானே    கட்டுப் படுத்த முடியாதவனாக அவன் போட்டுக் கொண்ட முகமூடி அவளுக்கு சுருக்கென்றது. முகம் சுருங்கி விட்டது சந்திராவுக்கு. வெற்றிலை பாக்கு வாங்கிக் 
 கொண்டவள் , அவனிடம் சொல்லாமலே கிளம்பி விட்டாள் . அவள் செல்வதையே இவன் பார்த்துக் கொண்டிருந்தான். “என்னடா நீ! பாவம்டா அவ ! எனக்கு எத்தனை உதவி பண்ணினா தெரியுமா? சட்டுனு இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டியே ? ” 
“ஏம்மா அவ்ளோ ஹார்ஷாவா இருந்தது?” “பின்ன ?” கடுகடுத்தாள் அன்னை.
“அது சரி! நீங்க யாரையுமே உள்ளையே விட மாட்டீங்க? அந்த பொண்ணுகிட்ட மட்டும் அப்டியே சமையல் அறைய தார வார்த்துட்ட ?”
கிண்டலடித்தான் மகன். “தெரியலடா! எனக்கு என்னமோ அவளை பார்த்தா வேற வீட்டு பொண்ணு மாதிரியே தெரியல. எனக்கு ஒன்னு தவறி போச்சே ? அது இருந்திருந்தா இவ வயசுதான் இருந்திருக்குமில்ல ?”
 “ம்மா !போதும்மா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு . இந்தா பாயசம் சாப்பிடு” கப்பில் கொண்டு வந்துக் கொடுத்தான். முதலில் தான் ஒரு வாய் போட்டுக் கொண்டவள், பிறகு ஊட்டினாள்.
 “ஏம்மா எல்லாரும் முதல்ல குழந்தைக்குத்தான் ஊட்டுவாங்க, நீதான் முதல்ல சாப்பிட்டுட்டு எனக்கு தர்ற?”
“ஏண்டா தினம் இத கேப்பியா ?” 
” ம் ! “மண்டையை ஆட்டினான் மகன் . 
“நீ குழந்தையா இருக்கும்போது இது நல்லா இருக்கா ? குழந்தைக்கு புடிக்குமான்னு செக் பண்ணி செக் பண்ணியே சாப்பிட்டதுனால நீ வளர்ந்தாலும் மனசுக்குள்ள இது சரியா இருக்கா ? உனக்கு புடிக்குமான்னு பார்த்துட்டுதான் குடுப்பேன்”. 
“சரி! எனக்கு கல்யாணம் ஆகிட்டா ?” மகனை ஆச்சர்யமாக பார்த்தாள் . ஏனெனில் அவன் இதுவரை திருமணத்தைப் பற்றி பேசியதில்லை. “அவளுக்கும் சேர்த்து நான் செக் பண்ணிட்டு குடுப்பேன்” என்றாள் அன்னை. 
“சரிம்மா! நீ ரெஸ்ட் எடு நான் இன்னிக்கு முடிக்க வேண்டியது நிறைய இருக்கு ” தினமும் இரவெல்லாம் கஷ்டப்பட்டு படிக்கும் மகனை பார்த்தவளுக்கு மனதில் பழைய பாரங்கள் அழுத்தியது. அதிலும் கடந்த சில நாட்களாக  மனது திரும்ப திரும்ப பழைய நினைவுகளுக்கேச் செல்ல ஆரம்பித்தது. அதிலும் கணவனைப் பற்றிய நினைவுகள் அவர் மனதை அரிக்க ஆரம்பித்தது. இது நல்லதா கெட்டதா ? அவருக்குத் தெரியவில்லை. பெரு மூச்சு விட்டவள், மனதை மாற்றிக் கொள்ள சற்றே சிரமப்பட்டாள். டிவி பார்ப்பாள் தான். ஆனால் அதுவே இப்போது மகனுக்கு தொந்தரவாகி விடுமோ என்று நினைத்தாள் . மனதை அடக்குவது என்பது அத்தனை சுலபமானது அல்லவே! வழக்கம்போலவே படித்துக் கொண்டே இரவு உணவை உண்டான். இரவு ஒரு மணிக்கு வந்து படுத்துக் கொண்டான். ஏனோ அவளின் பூ வாசம் வீசுவது போல இருந்தது. அதில் மயங்கியவனை சந்திராவுக்கு பதில் நித்ரா தேவி அணைத்துக் கொண்டாள் . சந்திராவைப் போலவே நித்ரா தேவியும் இவனிடம் இருந்து வெகு தூரம் போவாள் என்பது அவனுக்குத் தெரியாது. இப்போதைக்கு அவன் நன்றாகவே உறங்கட்டும்………………….. ========================================================== சந்திராவோட வீட்டு பஸ் ஸ்டாப்பு இன்னுமா வரல்லன்னு நீங்க யாரும் என்ன திட்டாதீங்க. இதோ வந்துருச்சு. நடத்துனர் இவளின் பேருந்து நிலையத்தை அழைத்ததும் மெதுவாக இறங்கினாள் . தந்தை காத்திருந்தார். “வாம்மா! ரொம்ப டயர்டா இருக்கியே ?”
தன்னுடைய இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தார். இருவரும் மெதுவாக வீடு வந்து சேர்ந்தனர். மாத்திரையை போட்டுக் கொண்டு மெதுவாக உறங்கினாள் சந்திரா. வர போகும் புயலை அறியாதவளாக சந்திராவும் மெல்ல கண்ணயர்ந்தாள்……….

தொடரும்… 

8 thoughts on “என் வாசம் நீ உன் சுவாசம் நான்-6”

  1. Kalidevi

    Rna nadanthuchi chandra life la rendunperum already pathu irukanga palagi irukanga apram yen pirinchanga ippadiye tha poguma chandra life no apadi eluthidathinga

  2. CRVS 2797

    அட… இன்னும் என்ன புயல் காத்திட்டிருக்குன்னு தெரியலையே..???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *