Skip to content
Home » எலிசா 1

எலிசா 1

பாவம் 1

     8 நவம்பர் 2022, மாலை ஆறு மணி.

     சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே வந்த பூமி, தன் மீது படும் சூரியக்கதிர்களை அப்படியே நிலவிடம் எதிரொளிக்கும் முழுச் சந்திர கிரகணத்தின் பலனாக, இரத்த நிறத்தில் காட்சியளித்துக்கொண்டிருந்தது நிலவு.

     இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கும் சூரியவெளிச்சத்திற்கு நடுவில் கூட தமிழகம் முழுவதும் இரத்தம் ஒழுழும் நிலவின் காட்சி தெள்ளத்தெளிவாகக் காணக்கிடைத்தது. மக்களில் பலர் தங்கள் வழக்கமான வேலைகளுக்கு நடுவில் இதைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.

     இரத்தக் காட்டேரிகளை நம்பும் மேலை நாடுகளில், அவைகளின் சிம்மசொப்பனமான இந்த இரத்தநிலவு ஒளிரும் இரவில் மக்கள் யாரும் வெளியே வரமாட்டார்கள். அன்றைய இரவில் பசிக்காக அன்றி தன் இனத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, கண்ணில் படும் மனிதர்கள் அனைவரையும் காட்டேரிகள் கழுத்தோடு கடித்து வைப்பார்கள் என்பது நம்பிக்கை.

     இந்தியாவில் அந்த நம்பிக்கை இல்லாததால், வெளியே நிலவும் மை இருளோடு போட்டிக்கு நிற்கப்போகும் தோரணையில், உடலை ஒட்டிய கருப்பு நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்து, போக இருக்கும் போர்க்களத்தில் தன் உடமையே தனக்கு ஆபத்தாக வந்துவிடக்கூடாது என்பதற்காக செயின், வளையல், கொலுசு என உடலை ஆராதித்த அனைத்து அணிகலன்களையும் கழட்டி வைத்து, தலைமுடியையும் இறுக்கமாகப் பின்னலிட்டு முடித்து, மறக்காமல் தன் தந்தையின் லைசன்ஸ் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டாள் இருபத்திநான்கு வயதான பவளக்கொடி.

     வீட்டின் வரவேற்பறையைத் தாண்டும் போது தந்தை மற்றும் தங்கையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அர்த்தமாகப் பார்த்துக்கொண்டாள். இனி பார்க்கக் கிடைத்தால் நலம், இல்லாமல் போனால் ஒன்றும் செய்ய முடியாது என்னும் அர்த்தம் பொதிந்திருந்தது அந்தப் பார்வையில்.

     கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியின் மையத்தில், எப்பொழுதோ யாரோ ஒரு ராஜா கட்டி, கவனிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படும் பாழடைந்த மண்டபத்தில் இன்று வழக்கத்திற்கு மாறாக ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு வெளிச்சமாக இருந்தது.

     ஆண்களா, பெண்களா என்று வித்தியாசம் தெரியாத அளவு தலைமுதல் கால்வரை கருப்பு நிற அங்கியால் தங்களை மறைத்துக்கொண்டு நிறைய உருவங்கள் ஆங்காங்கே சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

     தன் வாகனத்தை கானகத்தின் துவக்கத்திலேயே யாரும் அறியா வண்ணம் மறைத்து வைத்த பவளம், இதற்கு முன்னர் பலமுறை சென்று பழக்கம் இருப்பது போல் தன்னால் அந்தக்  கல்மண்டபத்தை நோக்கி நடந்தாள்.

     நேரம் வந்ததை உணர்ந்த அந்த விசித்திரக்கூட்டத்தினர் நிலவொளி நன்றாகப் படும் இடத்தில் ஒன்று கூடி, கைகளை வானைநோக்கி உயர்த்தி, “எலிக்கூட்டம் நாங்கள் எந்நாளும் எங்கள் கொள்கையில் இருந்து தடம்பிரள மாட்டோம், கயவர்களுக்குக் கருணை காட்ட மாட்டோம், உயிரே போனாலும் கூட்டாளிகளைக் காட்டிக்கொடுக்க மாட்டோம், தேசத்தை அரிக்கும் புற்றுசெல்களைக் களைந்தெடுப்போம், பாதுகாப்பான தேசம் உருவாக்கப் பாடுபடுவோம்.” உறுதிமொழி பாடினர்.

     இவற்றை எல்லாம் சற்று தொலைவில் மரம் மற்றும் இருளின் உதவியுடன் பத்திரமாக மறைந்திருந்து காணொளியாக  கேமிராவில் பதிவு செய்துகொண்டிருந்தாள் பவளம்.

     பயம் இல்லாமல் இல்லை, கேமராவைப் பிடித்திருந்த கரம் குடிக்கு ஏங்கும் குடிகாரன் கரத்தைப் போல் நடுங்கியது. ஆனாலும் தன் செயலை நிறுத்த நினைக்கவில்லை அவள்.

     காவல்துறையில் புதிதாகப் பணியில் சேர்ந்திருக்கும் கான்ஸ்டபிள் அவள். பெரிய துறைத்தேர்வுகளை வெற்றி கொள்ளும் அளவு திறமையில்லை என்றாலும், செய்யும் செயலில் திறமை அதிகம் கொண்டவள். படிப்பு தான் கைவிட்டுவிட்டது, திறமை இருக்க பயமேன் என்று முழுமையாக நம்பியவள் எப்படியாவது முன்னேறி மேலே வந்துவிட வேண்டும் என்கிற முனைப்பில், எதேச்சையாக தன் காவல்நிலையம் வந்த தற்கொலை வழக்கை நூலாகப் பிடித்து விசாரித்து இவ்வளவு தூரம் வந்திருந்தாள்.

     பெரிய பெரிய காவல்துறை அதிகாரிகள் கூட விழி பிதுங்கி நிற்கும் வழக்கின் அடிநாதம் வரை ஒற்றை ஆளாய் கண்டுபிடித்தவளின் பேச்சை செவிமடுத்துக் கேட்கத் தான் அங்கே யாரும் இல்லை.

     அடிநிலைக் காவலர், அதுவும் ஒரு பெண் தங்களுக்கு யோசனை சொல்வதா என்று தான் நினைத்தார்களே தவிர, அவளுக்குள் நிஜமாகவே திறமை இருக்கலாம் என்று ஒருவர் கூட யோசிக்கவில்லை. ரமணா காலத்தில் இருந்தே இப்படித்தானே.

     இங்கே வருவதற்கு முன்பு கூட, அந்தக் காட்டுக்குள் இன்று ஏதோ பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என்று மேலதிகாரிகளிடம் காட்டுக்கத்தல் கத்திப் பார்த்தாள். அவர்கள் இவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை எனவும் ரோஷப்பட்டு தனியே வந்துவிட்டாள்.

     தன்னை அறிவில்லாத வாத்தாக நினைத்து மட்டம் தட்டியவர்களுக்குத் தன்னை நிரூபிக்கவும், யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திடாத மிகப்பெரிய விஷயம் ஒன்றை வெளிக்கொணரப் போகிறோம் என்கிற சந்தோஷத்தோடும் தேவையான ஆதாரத்தைத் தயார் செய்து முடித்தாள்.

     நாளை தமிழகம் முழுவதும் அதிரப் போகிறது, இந்த விசித்திரமான கூட்டம் மொத்தத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமை இந்தப் பவளத்திற்கு மட்டுமே உண்டு என்கிற நப்பாசையோடு திரும்பியவள் முன்னே கருப்பு அங்கி அணிந்திருந்த நால்வர் நின்றிருந்தனர்.

     பயத்தில் கேமராவைத் தவறவிட்ட பவளம் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினாள். அவள் செல்லும் இடம் எங்கும் கருப்பு அங்கி அணிந்த ஆட்கள் காலனாய் துரத்த, ஒரு கட்டத்தில் ஓடி ஓடி களைத்துப் போய் மண் தரையில் விழுந்தவளைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சுற்றி வளைத்தனர்.

     அதே சமயம் கனடா மாநகரத்தில் நவம்பர் 8 2022 அப்பொழுது தான் பிறந்திருந்தது. காலை ஆறு மணி, சூரியன் உதிக்க இன்னும் நேரம் இருப்பதால் இருள் கொஞ்சம் மீதம் இருந்தது.

     பாதம் வரை வளர்ந்த வனமோகினியின் கார்குழலைப் போன்ற கருத்த வானத்தில், மோகினியின் நெற்றியை அலங்கரித்த நெற்றிப்பொட்டைப் போன்ற இரத்த நிலவை வெறித்துப் பார்த்தபடி, வண்ண திரவம் ஒன்றைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறக்கி, சுற்றுப்புறத்தில் நிலவிய குளிரில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டிருந்தான் பொன்வேலன்.

     பச்சைத்தமிழன், குடும்பத்தின் நல்ல எதிர்காலத்துக்காக அவர்களை விட்டுப் பிரிந்து தன்னந்தனியே கஷ்டப்படும் பல இளைஞர்களுள் ஒருவன். வேலை பன்னாட்டு நிறுவனத்தில், சம்பளம் இலகரத்தில், நிம்மதி மட்டும் பூஜ்ஜியம்.

     விடிந்த இந்த நாள் பொன்னன் ஆசை ஆசையாகத் தூக்கி வளர்த்த தம்பி சமர்வேலனின் பிறந்தநாள். இவன் இல்லாத அவனின் முதல் பிறந்தநாளும் கூட. கடந்த நான்கு வருடங்களாக இவனுக்கு இங்கே தான் வேலை என்றாலும், ஒவ்வொரு முறையும் சரியாக இந்த நேரம் இந்தியா சென்றுவிடுவான்.

     இந்தமுறை செல்ல முடியாததற்குத் தான் இத்தனை பாடா என்றால், இவனை இவன் தம்பி இந்தியா வரவேண்டாம் என்று சொன்னதால் வந்த வேதனை. நண்பர்களுடன் உல்லாசப்பயணம் செல்லப்போகிறானாம். தன் தம்பிக்கு, தன்னை விட அவன் நண்பர்கள் முக்கியமாகப் போய்விட்டார்கள் என்னும் கடுப்பில் தான் இரத்த நிலவை விட மோசமாகச் சிவந்து போன முகத்தோடு நின்று கொண்டிருக்கிறான்.

     அந்த நேரம் அவன் சற்றும் எதிர்பாரா வகையில் பின்னிருந்து அவன் கழுத்தை ஒரு கரம் இறுக்கிப் பிடித்தது. அந்த வேகத்தில் கூரிய ஏதோ ஒன்று அழுத்தி காயம் உண்டாக, ஒருவேளை நிஜமாகவே இரத்தக் காட்டேரி தான் வந்துவிட்டதோ என்று பயந்தவன் நொடியில் விலகி தன்னைப் பிடித்திருந்த உருவத்தை தள்ளி விட, காட்டேரி வேஷத்தில் அவனைப் பார்த்துச் சிரித்தான் தம்பி சமர்வேலன்.

     யாரைப் பார்க்க முடியவில்லை என்று எண்ணையில் விழுந்த கடுகாக கடுகடுத்துக்கொண்டிருந்தானோ அந்தத் தம்பி முழுதாக கண் முன் வந்து நிற்க ஆச்சர்யம் தாங்கவில்லை பொன்வேலனுக்கு.

     கையில் இருந்த வண்ண திரவத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு, “சமர்” என்றபடி ஆசையாய் தம்பி பக்கம் வந்தவன், இளையவன் எதிர்பாரா நேரம் அவன் காதைப் பிடித்துத் திருகிறான்.

     வலியில் அவன் துள்ளித் திமிற, “சொல்லாமக் கொள்ளாம இங்க வந்ததும் இல்லாம என்னையே பயமுறுத்தப் பார்க்கிறியா? காட்டேரி மாதிரி வேஷம் தானே போட்ட, நிஜக் காட்டேரி என்ன செய்யுமுன்னு நான் காட்டட்டா” என்று தம்பியின் கழுத்தை நோக்கி கூரிய பற்களைக் கொண்டு போக, தம்பி அண்ணனைத் தள்ளிவிட்டு ஓட, அண்ணன் அவனை விரட்ட என்று அந்த நாள் அத்தனை அழகாக கடந்தது.

     இன்று, செப்டம்பர் 1 2024.

     B2 விஷ்ணு காஞ்சி காவல்நிலையம், காஞ்சிபுரம். தன் ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்தான் இருபத்தியேழு வயதான கொடிவீரன். அவன் கையில் 09 நவம்பர் 2022 அன்று வெளியான தினசரி இருந்தது. அதில், இளம்பெண் தற்கொலை என்கிற தலைப்பின் கீழ் புகைப்படமாய்  சிரித்துக்கொண்டிருந்தாள் பவளம்.

     “நீ என்னை விட்டுட்டுப் போய் இரண்டு வருஷம் ஆகப்போகுது. உன்னைத் தற்கொலை பண்ணிக்க நபர் யாரா இருந்தாலும், எத்தனை பேரா இருந்தாலும் நான் அவங்களைச் சும்மா விட மாட்டேன் பவளம்” தனக்குத் தானே சொல்லிக்கொண்டவன் அந்தத் தினசரியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

     பவளம் கையறுத்துக்கொண்ட நிலையில் வீட்டில் பிணமாகக் கிடைக்க, அவள் இருசக்கர வாகனம் இந்தக் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியின் ஓரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது வீரனுக்கு பெரும் சந்தேகத்தைக் கிளப்பியது. அந்த நேரம் நாகர்கோவில் பகுதியில் வேலையில் இருந்தவன் அங்கிருந்தபடியே என்னென்வோ செய்து பார்த்தான் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

     பவளம் வேலை செய்த காவல்நிலையத்தில் விசாரித்த போது, “அவளுக்குக் கொஞ்ச நாளா பைத்தியம் பிடிச்சிடுச்சு. கண்டதையும் பேசிக்கிட்டு இருப்பா, நாங்க கண்டிச்சோம். கடைசியா அவளைப் பார்த்தப்ப, ‘என்னை யாரும் நம்பமாட்டேங்கிறீங்க இல்ல. எல்லோரும் மூக்குமேல விரல் வைக்கிற அளவு பெரிய விஷயத்தோட திரும்பி வரேன். அப்ப தான் இந்த பவளத்தோட அருமை தெரியுமுன்னு’ சொல்லிட்டுப்போனா.

     எங்ககிட்ட விட்ட சவாலுக்காக எதையாவது துப்பறியுறேன்னு அந்தக் காட்டுக்குள் போய் இருப்பா. எதுவும் கிடைச்சிருக்காது, நாங்க கிண்டல் பண்ணுவோமோன்னு பயந்து இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பா” அலட்சியமாகப் பதில் சொன்னார் இன்னொரு அடிநிலைக்காவலர்.

     இளவயதுப் பெண் வாழ வேண்டிய வயதில் மரணத்தை எய்தி இருக்கிறாள். கரிசனம் வேண்டாம், குறைந்தபட்சம் இப்படிக் கண்டதையும் பேசாமல் இருக்கலாமே என்கிற கடுப்பில், யாரும் எந்த உதவியும் செய்ய வேண்டாம். என் பவளத்தின் இறப்பில் இருக்கும் மர்மத்தை நானே கண்டுபிடிக்கிறேன் என்று ஒன்றரை வருடமாகப் போராடி மாற்றல் வாங்கி இங்கே வந்து சேர்ந்துவிட்டான் கொடிவீரன்.

     அதே சமயத்தில், சென்னை அசோக்நகரில் இருந்த தன் வீட்டின் நடுக்கூடத்தில் பிணமாகக் கிடத்தப்பட்டிருந்த தம்பியின் உடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் பொன்வேலன்.

     “எனக்கு உன்னைப் பார்க்கணும் போல இருக்கு அண்ணா. நீ அங்கேயும், நான் இங்கேயும் இருந்து என்னத்த சாதிக்கப்போறோம். பேசாம இங்கே வந்திடேன்” இருபது நாளுக்கு முன்னால் தன்னோடு பேசிய தம்பிக்கு, சர்ப்ரைஸ் கொடுப்பதாக நினைத்து யாருக்கும் சொல்லாமல் பொன்னன் தாயகம் திரும்பி வந்திருந்தால், தம்பி முந்திக்கொண்டு தன் மரணச்செய்தியை அண்ணனுக்கு பரிசாகக் கொடுத்துவிட்டிருந்தான்.

     தம்பி உருக்கமாகப் பேசிய அன்றே தன் வேலையை ராஜினாமா செய்தவன் ஒட்டுமொத்தக் கணக்கு வழக்கையும் முடித்து, தன் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு வருவதற்கு இத்தனை நாள்கள் பிடித்திருந்தது.

    ஆனந்த அதிர்ச்சியாக திடீரென வீட்டில் வந்து பொன்னன் நிற்க, அவன் அப்பா அம்மாவிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. பெற்றோரைச் சமாளித்த பொன்வேலன் தம்பி அறைக்கு வந்து கதவைத் திறக்க, மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தான் சமர்வேலன்.

     கண்கள் காட்டிய காட்சி மூளையில் பதியவும், உடல் உதற அறை வாசலில் பொத்தென்று விழுந்தே விட்டான் பொன்னன். உலகம் உறைந்து நின்றுவிட்டது போல் இருந்தது. அவன் விழுந்த சத்தம் கேட்டு அவனின் பெற்றோரும் மேலே வந்து தங்கள் இளைய மகனின் அகோரக் காட்சியைக் கண்டு கத்திக் கதறினர். உள்ளே செல்ல முயன்ற தாயைத் தடுத்தான் பொன்னன்.

     கண்கள் மேல்நோக்கி சொருகி, நாக்கு வெளியே தொங்கி, கால்கள் பூமியைப் பார்த்து வளைந்து எல்லாவற்றிற்கும் மேலாகப் பயம் மற்றும் பதற்றத்தால் சிறுநீர் கழித்த அடையாளம் இருக்க எல்லாவற்றையும் வைத்து தம்பி தற்கொலை தான் செய்து கொண்டிருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தினான் பொன்வேலன். ஆனால் ஏன் என்று தான் புரியவில்லை அவனுக்கு.

     காவலர்களுக்குச் செய்தி அனுப்பப்பட அவர்கள் வந்து உடலைப் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அறையைச் சல்லடை போட்டுத் தேடினர். தற்கொலைக்கடிதம் என்று எதுவும் கிடைக்கவில்லை. எனவே படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத மனஅழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்று அவர்களாகவே ஒரு கதையை எழுதி, அந்தக் குடும்பத் தலைவரிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு வேலை முடிந்ததாய் புறப்பட்டனர்.

     தம்பியின் மரணம் பொன்னனை மொத்தமாக மாற்றிப்போட்டது. வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தைக்கொண்டு சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம் என நினைத்தவன், இப்பொது அது எல்லாவற்றையும் மறந்து தம்பியின் மரணத்தின் பின்னணியைக் கண்டுபிடிக்க முடிவுசெய்தான்.

     பொன்னன் மற்றும் வீரன் என இரண்டு ஆண்களும் தங்களுக்குப் பிடித்தமானவர்களின் மரணத்தின் மர்மத்தைக் கண்டுபிடிக்க கிளம்பி இருக்கும் இந்தப் பயணம் அவர்கள் நினைப்பது போல் அத்தனை சாதாரணமானது அல்ல.

     மர்மம், திகில், பரபரப்பு, துரோகம், பயம், எனப் பல தடைகளைத் தாண்டி அவர்கள் இலக்கை எட்டுவார்களா என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

3 thoughts on “எலிசா 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *