Skip to content
Home » எலிசா 3

எலிசா 3

  • Elisa 

பாவம் 3

     வேறு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கணேஷின் நண்பர்களில் உயிரோடு இருக்கும் ஒரே ஆளான ரவியை, பல போராட்டத்திற்கு பிறகு நேரில் சந்தித்தான் வீரன்.

     “சார் நாங்க நாலு பேரும் நல்ல திக் ப்ரண்ட்ஸ். எப்பவும் எதையும் ஒன்னாச் சேர்ந்து செய்து தான் எங்களுக்குப் பழக்கம். என் நண்பர்களோட நல்ல நினைவா எனக்கு கடைசியா நினைவு இருக்கிறது, ‘இன்னைக்குப் புதுவிதமான போதை ஒன்னை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துறேன்னு’ சொல்லி கணேஷ் ப்ளான் பண்ண அவுட்டிங் தான். அன்னைக்கு எனக்கு உடம்பு முடியாததால், நான் அவங்களோட போகல.” என்க, வீரனுக்கு கடும் அதிர்ச்சி.

     “போதைப் பழக்கமா? பதினெட்டு, பத்தொன்பது வயசில் என்ன கருமாந்திர பழக்கம் டா இதெல்லாம். உங்களைச் சொல்லி குத்தமில்லை. பையன் ஒழுங்கா காலேஜ் போறானா? ஒழுக்கமா இருக்கானான்னு பார்க்காம விட்ட உங்களைப் பெத்தவங்களைச் சொல்லணும்.” கண்டித்தான் வீரன்.

     “பெத்தவங்க எங்களை நம்பி எங்களுக்குச் சுதந்திரம் கொடுக்கிறாங்க. அதைத் தப்பா பயன்படுத்திக்கிட்டது நாங்க தானே. சோ பழியை அவங்க மேல போட வேண்டாமே.” ரவி சொல்ல, “என்ன நடந்துச்சுன்னு சொல்லு.” என்றான் வீரன்.

    அன்னைக்கு நான் இல்லாம வெளியே போன மூணு பேரும், அடுத்த நாள் ரொம்ப சந்தோஷமா காலேஜ் கு வந்திருந்தாங்க.

     எங்கடா போனீங்க, என்ன பண்ணீங்கன்னு நான் இரண்டு மூணு முறை கேட்டுப்பார்த்தேன். பதில் சொல்லாம கொஞ்ச நாளில் நாங்க உன்னை மறுபடியும் அங்க கூட்டிட்டுப் போறோம், அங்க போய் நேரில் பார்த்துக்கோன்னு சொல்லிட்டாங்க.

     அடுத்த ஒரு நாலு நாள் எல்லாம் நல்லாத்தான் போச்சு. நாங்க எப்பவும் போல் ஊர் சுத்தினோம். அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியல. அவனுங்க மூணு பேரும் ஒருமாதிரி பதற்றமா இருந்தாங்க. என்ன பிரச்சனைன்னு நான் பலமுறை கேட்டுப் பார்த்தேன். என்னை ஒதுக்கி வைச்சுட்டு, அவங்க மூணு பேரும் கூடிக்கூடி பேசினாங்க. நான் போனா பேச்சை நிறுத்திடுவாங்க.

     அப்படியே சில நாள் போச்சு. ஒருநாள் கணேஷைத் தவிர மீதி இரண்டு பேரும் காலேஜ் கு வரல. கணேஷ் கிட்ட நான் பேச்சுக்கொடுத்தேன்.

     ‘நாங்க பெரிய தப்புப் பண்ணிட்டோம் ரவி. இது பாவம், வேண்டாம் னு நான் எவ்வளவோ சொன்னேன். அவனுங்க தான் கேட்கல. என்னையும் கட்டாயப்படுத்தி செய்ய வைச்சுட்டாங்க. தப்பான சகவாசம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் னு அப்பா, அம்மா சொன்னது எவ்வளவு உண்மைன்னு கண்கூடா உணர்ந்துட்டேன். உன் அப்பா அம்மா பண்ண புண்ணியம் அன்னைக்கு நீ எங்க கூட வராதது. இனிமேலாச்சும் புத்தியோட பிழைச்சுக்கோ.

     சரியோ தப்போ உனக்கு வேண்டாம் னா, வேண்டாம் னு உறுதியா நில்லு’ அப்படின்னு சொல்லிட்டுப் போனவன் அவனும் காலேஜ் வருவதை நிறுத்திட்டான். பத்து நாள் கழிச்சு அவனைப் பிணமாத் தான் பார்த்தேன்.” என்று நிறுத்தினான் ரவி.

     வீரனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதாக பல யூகங்கள் வந்தது. ஆனால் அப்படி வந்த எதுவுமே நல்லதாக இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.

     “கணேஷ் சாவுக்குக் கூட மத்த இரண்டு பேரும் வரல. கணேஷ் இறந்து போன இரண்டாவது நாள் இன்னொருத்தன் தற்கொலை பண்ணிக்கிட்டான்னு செய்தி வந்தது. மூணாவது ஒருத்தன் வெளிநாடு போயிட்டதா எல்லோரும் நம்பிக்கிட்டு  இருக்காங்க. நிஜத்தில் பிரம்மை பிடிச்சவன் மாதிரி இருந்தவனை அவன் அப்பா அம்மா தாத்தா, பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைச்சிருக்காங்க. அங்க கிணற்றில் விழுந்து இறந்துட்டான்.” என்க, கண்களை அழுந்த மூடித்திறந்தான் வீரன்.

     “விபத்துன்னு எல்லோரும் நினைக்க அப்படி இல்லன்னு எனக்கும் அவனோட அப்பா அம்மாவுக்கும் புரிஞ்சது. மகனோட நண்பர்கள் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க, மகனோட மரணமும் சந்கேத்திற்கு இடமானதுன்னு தெரிஞ்சா, சுத்தி இருக்கிறவங்க கண், மூக்கு, வாய் வைச்சுப் பேசுவாங்கன்னு பயந்து தான், இல்லாத பையன் வெளிநாட்டில் இருக்கிறதா நம்பவைச்சிருக்காங்க அவனோட அப்பா அம்மா.” என்று முடித்தான் ரவி.

      “உன் நண்பர்கள் பண்ண தப்பு என்ன மாதிரியா இருக்கலாம் னு ஏதாவது ஐடியா இருக்கா?” என்றான்.

     “என்னைக் கேட்டா விபத்தா யாரையோ கொலை பண்ணி இருப்பாங்களோன்னு தோணுது. ஏன்னா அவனுங்களை நான் கடைசியா உயிரோடு பார்க்கும் போது மூணு பேர் முகத்தில் கோபம், பயம், பதற்றம் இது எல்லாத்தையும் தாண்டி குற்றவுணர்ச்சி தான் அதிகமாத் தெரிந்தது.” தனக்கு நினைவில் இருந்தவரை சொன்னான் ரவி.

     சரி என்று தலையசைத்து வைத்த வீரனுக்கு ரவியின் யூகம் உண்மையாக இருக்கும் என்று தோன்றவில்லை.

     தெரியாமல் விபத்து நடந்து அதில் ஏதேனும் உயிர் போய் இருந்தால், சம்பவம் நடந்த அடுத்த நாளில் இருந்தே அந்த மூன்று பேரும் குற்றவுணர்ச்சியோடு தானே இருந்திருக்க வேண்டும். ஆனால் சில நாள்களுக்கு மூவரும் நன்றாகத் தானே இருந்திருக்கிறார்கள். ஆக செய்த தவறுக்காக அவர்கள் பயம் கொள்ளவில்லை. அந்தத் தவறை வைத்து யாரோ விளையாட ஆரம்பித்த பிறகு தான் பயம் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டான் வீரன்.

     நடந்த அந்தக் குற்றத்தை தெரிந்துகொண்டால் மட்டும் தான் அதன் தொடர்ச்சியாக இறந்து போன உயிர்களுக்கு நியாயம் கிடைக்கும் யோசித்த வீரனுக்கு பவளத்தின் நினைவு வந்தது.

     ரவியிடம் பவளத்தின் புகைப்படத்தை வீரன் காட்ட, சில நிமிடங்கள் கூர்ந்து பார்த்தவன், “இவங்க போலீஸ் கான்ஸ்டபிள் தானே. இப்ப நீங்க என்கிட்ட விசாரிச்ச அதே விஷயங்களை அவங்களும் என்கிட்ட விசாரிச்சாங்க.” என்று சொல்லி போகும் பாதை சரியானது என்பதை வீரனுக்கு ஊர்ஜிதப்படுத்தினான்.

     இங்கே ராஜ் மற்றும் சமருக்கு பொதுவான நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்று விசாரித்து அப்படியான ஒருவனைக் கண்டுபிடித்திருந்தான் பொன்னன். அவன் பெயர் செல்வம்.

     ஒரு மாதத்திற்கு முன்பு வரை சமருடைய கம்பெனியில் வேலை செய்தவன் சில காரணங்களுக்காக வேறு கம்பெனிக்கு மாற்றம் பெற்றிருந்தான். ராஜிற்கும், சமருக்கும் நடந்தது போல் அவனுக்கும் ஏதாவது நடந்திருக்குமோ என்று பயந்துகொண்டே தான் அவன் இருப்பினடம் சென்றான் பொன்னன். ஆனால் அவன் நினைத்தது போல் அன்றி செல்வம் நன்றாகவே இருந்தான்.

     பரஸ்பர உபசரிப்புகளுக்குப் பிறகு, “சமர், பாக்கியராஜ் இரண்டு பேருக்கும் பொதுவான நண்பன் நீங்க தான். உங்களை சமரோட இறுதிச்சடங்கில் கூட பார்த்த நினைவு இருக்கு. சமரோட சாவுக்கு காரணம் என்னன்னு உங்களுக்கு ஏதாவது யூகம் இருக்கா?” நேரடியாக விஷயத்திற்கு வந்தான் பொன்னன்.

     “நான் வேற கம்பெனிக்குப் போனதில் இருந்து என்னால் அவங்க கூட சரியான நேரம் செலவழிக்க முடியல. இது நடந்து எப்படியும் ஐம்பது நாள் இருக்கும் னு நினைக்கிறேன்.

     ‘இன்னைக்கு நானும், சமரும் பெங்களூர் டூர் போகப்போறோம்’ னு ராஜ் ரொம்ப சந்தோஷமா சொன்னான். என்னையும் கூட கூப்பிட்டான். ஆனால் என்னால் போக முடியாத சூழ்நிலை.

     ஒருவாரம் கழிச்சு நான் போன் பண்ணப்ப பெங்களூரில் மறக்க முடியாத பல அனுபவங்கள் நடந்ததாவும், நான் தான் மிஸ் பண்ணிட்டதாவும் சொல்லி வெறுப்பேத்தினான் ராஜ்.

     அடுத்து நாலு நாளில் நான் போன் பண்ணப்ப ராஜ் சரியாவே பேசல. ஏதோ பதற்றத்தில் இருந்த மாதிரி இருந்தது. வழக்கம் போல அவனுக்கும், அவன் மனைவிக்கும் ஏதோ சண்டைன்னு நினைச்சேன். என் பையனோட பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைச்சுட்டு போனை வைச்சுட்டேன்.” என்க, “பார்ட்டிக்கு சமரைக் கூப்பிட்டீங்களா?” வேகமாகக் கேட்டான் பொன்னன்.

     “கூப்பிடாம இருப்பேனா சார். அவனுக்கும் போன் பண்ணேன். தூக்கக் கலக்கத்தில் இருந்தானா தெரியல. சரியாவே பேசல. எப்படியும் பையன் பிறந்தநாளுக்கு வந்திடுவாங்கன்னு நம்பினேன். ஆனா வரல. அந்தக் கோபத்தில் இடைப்பட்ட நாளில் நான் அவங்களுக்கு போன் கூட பண்ணல. அவங்களும் என்னைக் கூப்பிடல.

     திடீர்னு சமர் இறந்த செய்தி கிடைச்சது. அதுவே ஷாக் என்னும் போது ராஜ் காணாமல் போனது, அதைத் தொடர்ந்த அவனோட சாவு எல்லாமே ஏதோ மர்மமா இருக்கு. இப்ப யோசிச்சுப் பார்த்தா இவங்க டூர் போன இடத்தில் ஏதோ நடந்திருக்கு. அது தான் அவங்க தற்கொலைக்குக் காரணமாக இருக்கணும்.” என்று தனக்குத் தெரிந்ததைச் சொல்லி முடித்தான் செல்வம். தனக்குத் தோன்றிய வேறு சில கேள்விகளையும் கேட்டுக்கொண்டு வெளியே வந்தான் பொன்னன்.  

     அடுத்ததாக அவன் செய்த காரியம் தன் தம்பியின் கிரெடிட்கார்டு ஸ்டேட்மெண்ட் எடுத்துப் பார்த்தது. அதன் மூலம் பெங்களூரில் சமர் தங்கியிருந்த இடம், கால்டாக்ஸி புக் செய்து சென்று வந்த இடங்கள், சாப்பிட்ட ஹோட்டல்கள் என ஒன்றுவிடாமல் அனைத்தையும் குறித்துக்கொண்டான். அங்கு சென்று விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து கிளம்புகையில் தடுத்தனர் அவன் பெற்றோர்.

     “இன்னும் எத்தனை நாள் தான் இப்படி சோறு தண்ணி இல்லாம செத்தவனை நினைச்சுக்கிட்டு அங்கும் இங்கும் அலைஞ்சுக்கிட்டு இருக்கப் போற. போனவன் போயிட்டான். இனி என்ன செய்தாலும் அவன் திரும்ப வரப்போறது இல்லை. தூக்கிப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் தானே.” கேட்ட தகப்பனை வெறித்த பார்வை பார்த்தான் பொன்னன்.

     “என்ன சொன்னீங்க. தூக்கிப் போடணுமா. அவன் நம்ம சமர் பா. உங்களோட செல்லப் பையன் இல்லையா அவன். அவன் சாவுக்குக் காரணமானவங்களை அப்படியே விடச் சொல்றீங்களா?” கோபமாய் கேட்டான் பொன்னன்.

     “அவன் தான் செத்துட்டானே. செத்தவனையே நினைச்சுக்கிட்டு இருந்தா நாம எப்ப வாழுறது.” என்க, “செத்துட்டா அப்படியே மறந்திடணுமாப்பா. அப்ப நாளைக்கு நான் செத்தாலும் இப்படித்தான் என்னையும் மறந்திடுவீங்களா?”

     “நீயும் அவனும் ஒன்னா டா. நீ கோபுரம், அவன் குப்பை. அவன் செத்ததே நல்லது தான்.” என்ற தந்தையை அதிர்ச்சியாய் பார்த்தான் பொன்னன். தாய் நாடு திரும்பியதில் இருந்து அவன் சந்தித்த அதிர்ச்சிகளில் இது தான் உச்சகட்ட அதிர்ச்சியாக இருந்தது.

     தான் உளறியதை உணராமல், “வேண்டாம் பொன்னா, இது எதுவும் நல்லதுக்கே இல்ல. அவனைத் தான் கண்டிக்காம விட்டு, மொத்தமா விட்டுட்டேன். உன்னையும் உன்போக்கில் விட முடியாது. நான் சொல்வதைக் கேட்டு இரு. அப்பாவுக்காக உன் தம்பியை மறந்திடு.” கண்ணீருடன் கேட்ட தந்தையை விசித்திரமாகப் பார்த்தான் பொன்னன்.

     “இத்தனை நாளா என் தம்பியைப் பத்தி, அவன் தற்கொலையைப் பத்தி தெரியுமான்னு யார் யார்கிட்டையோ விசாரிச்சேன். ஆனா உங்ககிட்ட ஒருவார்த்தை கூட கேட்கல. என் அப்பா அம்மா என்கிட்ட இருந்து எதையும் மறைக்க மாட்டாங்கன்னு நம்பினேன். ஆனா அப்படி இல்லை போல. தம்பியோட சாவைப் பத்தி உங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு. என்னன்னு சொல்லுங்கம்மா.” தந்தையை விடுத்து தாயின் பக்கம் சென்றான் பொன்னன்.

     “உன் தம்பி நாம நினைக்கிற அளவுக்கு நல்லவன் இல்லப்பா. அவன் போதை மருந்து எல்லாம் எடுக்கிறான்.” தட்டுத்தடுமாறி சொல்ல பொன்னனுக்கு அதிர்ச்சி தான் என்றாலும், “போதை மருந்து தெரிஞ்சு எடுத்தானோ, தெரியாம எடுத்தானோ. அதை வைச்சே என் தம்பியை வெறுத்திடுவீங்களா நீங்க?” கோபமாய் கேட்டான்.

     “தம்பி தம்பி தம்பி… கொஞ்சம் நிறுத்துறியா உன் தம்பி புராணத்தை. கேட்கவே நாராசமா இருக்கு.” காதுகளைப் பொத்திக்கொண்டு சொன்னார் அவர்.

     “நீங்க இந்தளவு வெறுக்கிற அளவுக்கு தம்பி என்னப்பா தப்பு பண்ணான்.” பொன்னன் தயக்கம் மற்றும் பயத்துடன் கேட்டான்.

     “உன் தம்பிக்கு என்னடா வயசு. இருபத்திநாலு கூட முடியல. இந்த வயசில் செய்யக்கூடாத வேலை எல்லாம் செய்து வெளியே சொல்ல முடியாத நோயை வாங்கி இருக்கான். அந்த பயத்தில் தான் தற்கொலை பண்ணி செத்துப் போயிட்டான் போதுமா.” கத்தினார்.

     அதே சமயம் வெளிநாட்டில் வேலை செய்யும் பவளத்தின் தங்கையிடம் விசாரிக்க நினைத்து முயற்சித்த வீரனுக்கு, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று கிடைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *