6
சாலையின் அருகில் பரந்து விரிந்திருந்த அந்த தாமரைக்குளத்தில் அந்த மதிய வேளையில்
தாமரையும் அல்லியுமாக நிறைய மலர்கள் நன்றாக மலர்ந்திருந்தது. உச்சி வெய்யிலுக்கு
நீருக்குள் இறங்கிய கருப்பு “அப்பா தண்ணி என்னமா சில்லுன்னு இருக்கு. வெய்யிலுக்கு
சுகமா இருக்கு “ என்றவாறே தண்ணீரை இரு கையாளும் எடுத்து முகத்தில் பட்டென்று
அடித்துக் கொண்டான். ஆடையைக் களைந்து விட்டு நீருக்குள் இறங்கினான். “அண்ணே வா “
என்று கன்னியப்பனையும் அழைத்தான்.
“நீ குளிச்சிக்கிட்டு இரு. நான் இந்த பால் தேக்சாவைக் கழுவி வெச்சிட்டு வாறன்”
“ஏலே கருப்பு. பார்த்துக் குளிடா” அப்போது தான் குளத்தில் குளித்து விட்டு கரையேறிய அந்த
முதியவரை கேலி செய்தான் கருப்பு. “ஏன் மீன் கடிக்கிதா?”
“யாரோ காலை பிடிச்சி இழுப்பது போல இருந்தது. சட்டுன்னு குளிச்சிட்டு கரை ஏறிடு”
“நீ யாரையாவது கையைப் பிடிச்சி இழுத்துருப்பே”
“ந்தா, உன்னட்ட போய் சொன்னேன் பாரு”
“சரி விடு தாத்தா. நான் பாத்துக்கறேன்” கோபப்பட்டவரிடம் மிகவும் தன்மையாகவே பதில்
சொன்னான் கருப்பு.
“என்னடா பெரியவரிடம் வம்பு?” கேட்டுக் கொண்டே தண்ணீரில் இறங்கினான் செவந்தி.
“டேய், அதோ நடுவுல பெருசா இருக்கே தாமரைப்பூ”
“எதுடா?” நிறைய தாமரை மலர்கள் பூத்திருந்தது நடுக்குளத்தில். கருப்பு காட்டிய பூ
மிகப்பெரியதாகத் தான் இருந்தது. “ஆமா”
“அதைப் போய் பறிச்சிக்கிட்டு வரணும்”
“போட்டியா?”
“ஆமாம்” என்றவாறு நீந்த ஆரம்பித்தான் கருப்பு. அவனை தொடர்ந்தான் செவந்தி. வேக
வேகமாக நீந்திக் கொண்டு முன்னே சென்ற கருப்பு நடுக்குளத்தை அடைந்த போது பூவை
பறித்திட இயலாமல் தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி வெளியே வந்து கொண்டிருந்தான்.
“ஏலே கருப்பு. திரும்பிடுடா. பூ வேணாம்” சொல்லிய செவந்தி, திரும்ப முயன்ற போது யாரோ
அவனை நீருக்குள் பிடித்து இழுப்பது போல இருந்தது.
பயந்து போன இருவரும் வேக வேகமாக கரையை நோக்கி நீந்த தொடங்கினார்கள். எங்கே..?
இருவரும் ஒரே இடத்தில் நீந்திக் கொண்டிருந்தார்கள். களைத்துப் போனவர்கள் அப்படியே
நீருக்குள் மூழ்கிப் போனார்கள்.
பாத்திரம் கழுவி வைத்து விட்டு வருகிறேன் என்ற கன்னியப்பன் குளத்துக்கு வந்த போது
கூட்டாளிகள் இருவரையும் காணவில்லை.”அட என்னடா இது அதிசயமா இருக்கு.
அதுக்குள்ள குளிச்சி முடிச்சி போயிட்டானுங்களா?” என்று வியந்தவன், “கோயிலுக்குத் தான்
போயிருப்பார்கள். மண்டபத்தில் கல்லாங்காய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அங்கேயே
போவோம். போய் ஒரு ஆட்டம் போட்டு விட்டு வீட்டுக்குப் போனால் குளிச்சிட்டு
சாப்பிடலாம்” என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டவனாக குளத்தில் இறங்காமல்
கோயிலை நோக்கிப் போனான்.
ஆனால் பின் வரும் நாட்களில் குளத்தில் குளிக்கப் போனவர்கள் திரும்ப கரை ஏறவில்லை.
ஒரு சிலர் கரையின் அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் குளத்திற்குள் இருந்து யாரோ
உள்ளே பிடித்து இழுப்பதைப் போல இருக்கிறது என்று அலறி அடித்துக் கொண்டு வந்து
ஊரில் சொன்னார்கள்.
குளம் அமைதியாக இருக்கிறது என்று இறங்கி குளிக்கத் தொடங்கியவர்களை திடீரென்று
வீசிய காற்று குளத்தின் மையத்திற்கு கொண்டு சென்று நீருக்குள் மூழ்கடித்துக்
கொண்டிருந்தது. சாதாரணமாக நீருக்குள் மூழ்கியவர்கள் பிணமாகவேனும் கரையில் ஒதுங்க
வேண்டும். ஆனால் பிணம் கூட கிடைக்கவில்லை. அப்படியானால் குளத்தில் இறங்கியவர்கள்
என்ன ஆனார்கள்? உயிருடன் இருக்கிறார்களா? இல்லாவிட்டால் அந்த மகாசுரன் அவர்களை
எல்லாம் எங்கேயாவது கொண்டு போய் விட்டானா?
அடுப்பைப் பற்ற வைத்து பெண்களை அந்த அடுப்பில் திடீரென்று வீசிய காற்று நெருப்பை
மேல் நோக்கி எழுந்து அவர்கள் மீது பாய்ந்து பற்றிப் பிடித்து எரிக்க வேறு செய்தது. அதற்கு
நேர்மாறாக காற்றின் அசைவே இல்லாமல் மக்களுக்கு மூச்சு முட்டி போய் காற்றுக்கு மக்கள்
அலைந்தார்கள். மரம் செடி கொடி என்று எதுவும் அசையவில்லை. மூச்சு விடவும் முடியாமல்
மக்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தால் திடீரென்று ஒரு காற்று பெருஞ்சத்தத்துடன்
உய்…..உய்…….என்று வந்து மக்களை அந்தரத்தில் வானின் வழியே கொண்டு சென்றது.
“இது நிச்சயம் மகாசுரனின் வேலை தான். மீண்டும் வந்து விட்டான்.”
“மன்னரிடம் போய் முறையிட வேண்டும்”
“நடக்க முடியாதவர்கள் தவிர அத்தனைப் பேரும் கிளம்புங்கள். மன்னரைப் போய்
பார்ப்போம்”
“போகும் வழியில் காற்று வந்து நம்மைக் கொண்டு போனால்…..!”
“அதற்காக வீட்டுக்குள்ளேயே இருந்து விட முடியுமா?”
“வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் மூச்சு முட்டிப் போவுதே”
“அரசரை போய் பார்க்கலாம் என்றாலும் உடன் வருவதற்கு பயப்படுகிறீர்கள். வீட்டுக்குள்
இருக்கவும் முடியாது. காற்று பற்றாமல் சாக வேண்டியதாக இருக்கிறது”
“ஒன்று செய்யலாம்…….!”
“என்ன…! என்ன….!”
“நம்ம கோயில் பூசாரியை வைத்து ஒரு பூசை செய்வோம்”
“அது தான் சரி”
“பூசாரி எங்கே?”
“நம்ம ஊர் பூசாரி பயந்து போய் குதிருக்குள் இறங்கி உக்கார்ந்து கொண்டிருக்கிறார்”
“அவரைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்”
“புண்ணியம் இல்லை. பூசாரி பூசை செய்வது வேலைக்கு ஆகாது”
“வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளலாம்”
“நம்ம கிராமத்துக்கு வருவதற்கு எல்லோரும் பயப்படுகிறார்கள்”
“எப்படியாவது நல்ல வார்த்தைப் பேசி யாரையாவது அழைத்துக் கொண்டு வந்து தான் ஆக
வேண்டும்”
“அடுத்த கிராமத்தில் கோயில் திருவிழாவிற்கு மலையாள மந்திரவாதி வந்திருக்காராம்”
“மந்திரவாதியா?”
“அவர் தான் இந்த அசுரனுக்கு சரி”
“அவரை போய் யார் அழைத்து வருவது?”
“நான் போகிறேன்”
“கன்னியப்பா. நீ தான் இந்த ஊரைக் காப்பற்ற வந்த தெய்வம்”
ஒருவழியாக சோத்து மூட்டைக் கட்டிக் கொண்டு கன்னியப்பன் அடுத்த ஊருக்குப் பயணம்
கிளம்பினான். நினைத்ததைப் போல போய் சேருவது அத்தனை சுலபமானதாக இல்லை.
காற்று இல்லாமல் மூச்சு விடக் கஷ்டப்பட்டான். ஆனால் அதற்கு கலங்கி நின்று விடாமல்
வாயைத் திறந்து நன்றாக மூச்சை உள்ளே இழுத்து காற்றை நெஞ்சம் நிறைய நிரப்பிக்
கொண்டான்.
நடக்கத் தொடங்கிய சற்று நேரத்தில் யாரோ அவனை பின்னால் பிடித்து இழுப்பதைப் போல
இருந்தது. அதிலிருந்து விடுபட வேகமாக நடைப் போட்டான். ஆனால் ஒரு இம்மியளவு கூட
நகராமல் அங்கேயே ஒரு வட்டத்திற்குள் நடந்து கொண்டே இருந்தான் அந்த இரவு முழுவதும்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. திடீரென்று பலத்த காற்று அடித்தது. கன்னியப்பன் உயரத்
தூக்கி செல்லப்பட்டான். ஆனால் அவனோ சட்டென்று அங்கே பரந்து விரிந்திருந்த ஒரு
ஆலமரத்தின் கிளையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காற்று ஓயுமட்டும் அங்கேயே
இருந்து விடலாம் எனபது அவன் எண்ணம். ஆனால் காற்று ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
கையை தளர்த்தாமல் மரத்தின் மீதே இருந்தான். மெல்ல காற்று அடங்கியது.
அடுத்த ஊரின் எல்லையை மிதித்த போது ஒரு பெருங்காற்று ஆவேசமாக அவனைத் தூக்கிக்
கொண்டு போய் நேர் எதிர் திசையில் கொண்டு போய் விட்டு விட்டது. மீண்டும் நாலைந்து
நாட்கள் நடந்து ஒருவழியாக அந்த ஊரை வந்தடைந்தான்.
மந்திரவாதியை சந்தித்தான். விவரம் சொன்னான். அந்த மந்திரவாதிக்கு ஏற்கனவே
மகாசுரனைப் பற்றி தெரிந்திருந்தது. அசுரனை எதிர்த்து தன்னால் நிற்க முடியுமா என்று
யோசித்தான். கன்னியப்பன் மகாசுரன் செய்த அட்டகாசங்களால் மக்கள் கொத்து கொத்தாக
இறந்து போவதைப் பற்றி சொன்னான். தன் தாயும் பிறந்த குழந்தையும் கூட மகாசுரனால்
கொண்டு போகப்பட்டு விட்டார்கள் என்று சொல்லிய போது துக்கம் தொண்டையை
அடைக்க பீறிட்டு அழுதான். அவன் அழுகையை பார்க்க மந்திரவாதிக்கு சகிக்கவில்லை.
“அழாதே, மகாசுரனை என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. நீ அழுவதோ
என்னால் சகிக்க முடியவில்லை. உனக்காக உன் ஊருக்கு வருகிறேன். பார்ப்போம்”
இரக்கப்பட்ட மந்திரவாதி கன்னியப்பனுடன் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டான். தன்
கக்கத்தில் வைத்திருந்த இரத்தின கம்பளத்தைப் தரையில் விரித்து தானும் அமர்ந்து கொண்டு
கன்னியப்பனையும் தன்னோடு அமர்த்திக் கொண்டு வானில் பறக்கத் தொடங்கினான்.
மகாசுரனா விடுபவன்? கம்பளத்தின் அடியில் புகுந்து வேகமாக வீசி கம்பளத்தை உயரே
கொண்டு போவான். கன்னியப்பனுக்கு உள்ளூர பயம் தான். மந்திரவாதியின்
அருகாமையினால் தைரியமாக இருந்தான். திடீரென்று கம்பளம் அப்படியே தரையோடு
தரையாக மண்ணை கிளப்பி புழுதியை வாரி இறைத்து கண்களில் மண் அள்ளிக் கொட்டி
சிரமப்படுத்தியது.
“அய்யா என்னாலே உங்களுக்கு எத்தனை சிரமம்?”
“நான் ஏற்கனவே இந்த அசுரனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்”
“அப்படியா?”
“ஆமாம். மந்திரவாதியாக பயிற்சிக்கு போன போது அக்கினி பகவான் சிலபல உத்திகளை
சொல்லிக் கொடுத்திருக்கிறார். என்னுடைய குருவும் சிலபல மந்திரங்களை சொல்லிக்
கொடுத்திருக்கிறார். பார்ப்போம்”
“அய்யா, நீங்க தான் எங்க ஊரை காப்பாத்தின புண்ணியவானுங்க”
மந்திரவாதி ஆகாசத்தில் இருந்து இறங்கி வரவும் மக்களுக்கு நிலை கொள்ளா மகிழ்ச்சியும்
நம்பிக்கையும் உண்டாயிற்று. கண்டிப்பாக இந்த மந்திரவாதி அந்த மகாசுரனை அழித்து
விடுவார் என்று மனம் நிறைந்து போனார்கள்.
மந்திரவாதி ஆணையிட்டபடி யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்கள். ஊரே
அங்கே திரண்டு இருந்தது. மக்கள் அனைவரும் குளித்து தலைமுழுகி விரதம் இருந்து
பயபக்தியாக வந்து கூடியிருந்தார்கள்.
தாம்பாளம் தாம்பாளமாக குங்குமம் தயாராக வைக்கப்பட்டிருந்தது. எதிரே யாக குண்டத்தில்
தாம்பாளத்தில் இருந்து குங்குமத்தை கைப்பிடி கைப்பிடியாக எடுத்து மந்திரம் ஜபித்து
அதனுள் பஞ்சமுக ருத்திராட்ச்சத்தையும் வைத்து வேள்வி குண்டத்தில் போட்டுக்
கொண்டிருந்தார் மந்திரவாதி. அந்த இடமே அமைதியாக இருந்தது. மந்திரவாதியின்
ஓங்காரத்தையும் ஆங்காரத்தையும் தவிர. இன்னும் மகாசுரன் அந்த இடத்திற்கு வரவில்லை.
“எங்கே இன்னும் மகாசுரணைக் காணவில்லை. மந்திரவாதிக்கு பயந்து ஓடிவிட்டானா?”
“மகாசுரன் ஒரு கோழை”
“எதிரே வர மாட்டான்”
“இப்போது வந்தான் என்றால் நன்றாக இருக்கும்”
“மந்திரவாதி அசுரனை தூக்கி சாப்புடுவதைப் பார்க்க வேண்டும்”
“தொலைந்தான் இன்றோடு மகாசுரன்”
மந்திரவாதியின் மந்திரம் சக்தி வாய்ந்தது. ஜெபம் வீண் போகவில்லை. மக்கள் அனைவரும்
அசுரனை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைப் போல மகாசுரனும் ஆங்காரத்துடன் வந்தான்.
வேள்விக் குண்டத்தில் தன் பலம் கொண்ட மட்டும் ஊதினான்.
நாம் தொலைந்தோம். பலமாக காற்று வருகிறது. எல்லோரும் பறக்க போகிறோம்.
மந்திரவாதியும் தான். அவனுடைய இரத்தின கம்பளத்துடன். ஒரு வித நிராசையுடன் மக்கள்
பார்த்துக் கொண்டிருக்க……….!
அட…….! இதென்ன….!
மகாசுரனின் வாயில் இருந்து வேகமாக வந்த காற்று வேள்விக்குண்டத்தில் வீசிய போது
வேள்விக்குண்டத்தில் அவிந்து போன சாம்பல் போல் அமைதியாக இருந்த அக்கினி
சட்டென்று மேலே எழும்பி காற்றை தாவிப் பிடித்தது. காற்றில் இருந்த மகாசுரன் அக்கினியின்
எரிச்சல் தாங்காமல் கீழே தொப்பென்று விழுந்தான். உருவம் எடுத்து காட்டை நோக்கி
ஓடினான். ஓடிக் கொண்டிருந்தவனை அக்கினியார் பின்னாலேயே விரட்டிக் கொண்டு
போனார். சற்று மெதுவாக ஓடியிருந்தால் மகாசுரன் பஸ்பமாகியிருப்பான்.
ஆனால் தப்பி விட்டான்.
அது அவனுடைய நல்ல நேரமா? அன்றி ஊராரின் கெட்ட நேரமா?