*பரிதவிப்பு*
அந்த பேருந்தில் தட்டை ஏந்தி அறுபது வயது முதியவர் பிச்சை கேட்டு கொண்டிருந்தார்.
கல்லூரி திறந்து முதல் வருடம் செல்ல பயணித்திருந்தாள் தீபா. இந்த நிகழ்வை கண்டதும் உள்ளுக்குள் அந்த பரிதவிப்பு உதித்தது.
மெல்ல மெல்ல தன் பர்சில் அப்பா தனக்கு கேன்டீனுக்கு கொடுத்த பணம் இருந்தது. அதில் சில்லறையும் கணத்திருந்தது.
ஐந்து இரண்டு ரூபாய் நாணையத்தை எடுத்தவள் அந்த முதியவர் அருகே வந்ததும் போட முடிவெடுத்தாள். ஆனால் அவளுக்கு முன்னேயிருந்த சீனியரோ,”எப்பா… மாசத்துக்கு பத்து முறை வந்திடறார். உடல்நிலை நல்லா தானே இருக்கு. வேலை செய்ய வேண்டியது தானே” என்று முணங்குவது ஜன்னலோரம் பின்னிருக்கையில் இருந்த தீபா செவியிலும் விழுந்தது.
எடுத்ததை போடலாமா வேண்டாமா? என்ற குழப்பம் தாக்க, இரண்டு ரூபாய் நாணையத்தை கைகளில் மறைத்து கொண்டாள்.
இவளருகே வந்த முதியவர் தட்டை நீட்டியபடி இரண்டு மூன்று பேர் யாசகமாக போட்டிருந்த நாணையம் மின்னியது அது போதுமென படியில் இறங்கி கிளம்பியிருந்தார்.
தீபா கையிலிருந்த நாணையம் இறுக பற்றியிருந்ததில் நனைந்திருந்தது. அந்த நாணையத்தை திரும்ப பர்சில் வைக்க அவளுக்கு மனமில்லை. இது சரியா… யாசகம் கேட்கும் நிலைக்கு உடல் ஊனம் என்பது தகுதியா… அந்த தகுதி இருந்திருந்தால் இந்த நாணையம் வழங்கியிருப்பேனா. சே… அப்படியென்றால் பிச்சை எடுக்க இந்த நிலை உள்ளவர்கள் செய்யலாம் என்றல்லவா மாறியிருக்கும்.
இது தவறான கருத்து. பிச்சை கேட்கும் அம்முதியவருக்கு வீட்டு சூழ்நிலை எப்படியோ? வயது ஏற்றம் உடல்உழைப்பை விட மானம் மரியாதை பார்க்காது இழிவாக அடுத்தவர்களிடம் கையேந்துகின்ற அவர் நிலைக்கு யோசிக்காமல் இந்த நாணையத்தை போட்டுவிட்டு இருக்கலாம். தற்போது மனம் பரிதவிப்பில் மிதந்தது.
நாளைக்கு திரும்ப பார்த்தால் அவரிடம் இது போன்று நாணையம் வழங்கிடலாமே இப்ப என்ன என்றது மனசாட்சி. அவளோ இல்லை.. அதுவரை இந்த நாணையத்தை அவரிடம் தர யோசித்த பரிதவிப்பை மனதில் இருந்து நீக்குவது எப்படி. தீபாவுக்கு ஒர் வழக்கம் உண்டு. மனம் நெருவது என்றால் அந்த நிகழ்வுக்கு பதில் கண்டறியும் வரை மற்ற சிந்தனை வராது. இந்த பரிதவிப்பு அகலும் வரை வேறு சிந்தனை படிப்பு பக்கம் கூட இன்று செல்லாது.
நினைவு கலைந்தவள் தனது கல்லாரி ஸ்டாப் வர நடந்தாள். இதோ வரும் லெப்ட் கடந்து விட்டால் கல்லூரி வந்திடும். அதற்குள் இந்த பரிதவிப்பை இறக்கிவைக்க இயலுமா? என்று யோசித்தாள்.
குப்பை தொட்டி அருகே ஜெராக்ஸ் கடை அதை தாண்டி எஸ்டிடி கடை, அதற்கு பின் சின்னதாக உணவு கடை அதை கடந்தால் பிள்ளையார் கோவில் முனையில் இருந்தது. கோவிலை கடந்தால் லெப்ட் பக்கம் கல்லூரி என்று இருக்க கோலில் வாசலில் ஒர் பாட்டி கிழிந்த சேலையில் அங்கே தரையில் அமர்ந்து போவோர் வருவோரை பார்த்து இருந்தார். கிட்டதட்ட அதே யாசக நிலை.
தீபாவுக்கு சட்டென எதையும் யோசிக்காமல் அங்கிருந்த கடையில் ஒர் உணவு பொட்டலத்தை வாங்கினாள். அதை அந்த முதியவளிடம் நீட்டினாள். எங்கே தவறாக எண்ணிடுவாறோ என்று “பாட்டி எனக்கு இன்னிக்கு பெர்த்டே வாங்கிக்கறிங்களா.” என்று கேட்டதும் “கொடு மா. பசிக்குது. நேற்றிலிருந்து சாப்பிடலை.” என்றே வாங்கி கொள்ள இவ்வளவு நேரம் பேருந்தில் கொடுக்க நினைத்து கொடுக்காது விட்ட அந்த ‘பரிதவிப்பு’ நீங்கியது.
-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்