ஆண்டவன் எழுதிய அழகிய ஓவியம். பச்சை வண்ணத்தில் கோணல்மானலாய் ஒரு குடை… அதில் வண்ணமாய் மலர்கள் பூத்துக் குலுங்கியது. கன்னக் கதுப்பில் வதுவை வைத்திருக்கும் கரும்புள்ளி போல் திருஷ்டி பொட்டொட்டி தன்னையே அழகு பார்க்கும் குறிஞ்சி மலை. குறிஞ்சி மலையும் அதை உச்சி முகரும் ஊதைக்காற்றும் தனியொரு அழகென்றால், கொட்டியும் தீராத மழை குடையின் சரிவில் வழிந்தோடி நிலத்தில் முத்தம் பதித்திட்ட அழகை என்னவென்று விளிப்பது.
குறிஞ்சி நிலம்… புணர்தலுக்கான இடம். சரிதான்.. பல யுகங்களாக பல உயிரினங்களை பாதுகாப்பது மலைப்பகுதியாகும். விந்தையான உயிரினங்களை விந்தையென மறைத்து வைத்திருக்கும் மலை. மரப்பட்டைகளில் ஓர் ஒழுங்குடன் புதிதாய் முளைத்திருந்த காளான்கள். யாருக்கு குடை பிடித்திருந்தது? யாருக்கென்று தெரியவில்லை.
அதீத மழையால் பயந்து போய் இருந்தது ஒரு ஆண் யானை. அதன் பிளறல் சத்தம் காடு மலை எங்கும் பட்டு தெறித்து எதிரொலித்தது. மணக்கும் மூச்சையுடைய பிடி யானையை மழைத்துளிகளில் நுகர்ந்து தேடியது. விழிகளில் பயமும் ஏக்கமும். இணையை இணை சேர்ந்துவிட மாட்டோமா என்ற தவிப்பு அதன் பிளறல் மொழியில் வெளிப்பட்டது.
மண்ணை வாரிச் சுருட்டி களிமண் குழம்பாய் ஓடிக் கொண்டிருந்த நீரை எதிர்த்து ஓடியது ஆண் யானை. தன் இணையைக் கண்டதும் துதிக்கையால் தழுவிக் கொண்டது.
மயில் தோகையென பரந்து விரிந்து கிடந்த குறிஞ்சி மலையின் அழகில், தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்த இருவரை மழைத்துளிகள் சிலிர்க்க வைக்க, இருவரும் கிளம்ப தயாராகினர். இது அவர்களின் வாடிக்கைதான். வழக்கமாய் சந்திக்கும் இடம்.
மழை அதிகமாய் பிடித்திருக்க, அவர்கள் இருவரையும் பயம் தொற்றிக் கொண்டது. அவன் இரு சக்கர வாகனம் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி இருவரும் வேகமாக நடந்து சென்றனர். குளிரில் உடல் வேறு நடுங்கிக் கொண்டிருக்க, அவனுடைய கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டாள் அவள்.
உதடுகள் துடிக்க தொடங்க, எங்கோ பெரும் சத்தம். அந்த இடம் முழுக்க இருட்டாகியது. டிரான்ஸ்பார்மர் வெடித்திருக்கும் போல. மின்சாரம் தடைப்பட்டு விட்டது. இப்பொழுது இன்னும் பயம் அதிகமாகியது.
எங்கிருந்தோ வந்த சிலர் அவளைப் பிடித்து இழுத்துச் செல்ல, அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினான். அவன் சுதாரிப்பதற்குள் அவனை அடித்து வீழ்த்திவிட்டனர். அவனும் எவ்வளவோ போராடி பார்த்தான். ஒருவனால் அவர்களை வீழ்த்த முடியவில்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியாது.
கருத்திருந்த ககனமும், கருப்பை அள்ளிப் பூசித்திருந்த காடும், அதில் மறைந்திருக்கும் மரமும், செடியும் கொடியும் சாட்சிகளாகிப் போனது.
அவளின் கதறல் மொழிகள் எவரின் செவியையும் எட்டவில்லை. மலை அதை எதிரொலி செய்யவும் சாதகமான நிலை இல்லையே. மழை இன்னும் வலுத்தது. மழையும் சதி செய்தது விதியுடன் சேர்ந்து அவள் விஷயத்தில்… மூச்சடக்கி முடித்திருந்தாள் வாழ்வை….
மறுநாள் விழித்துப் பார்க்கையில், அவன் ஒரு மருத்துவமனையில் இருந்தான். விழி திறக்கவும் வலித்தது. மூடிய விழிகளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஊர்வலம் போனது. கைகால்கள் அசைக்க முடியவில்லை. அப்படி ஒரு வலி. அதைவிட மனம் வலித்தது. அவளுக்கு என்னவாயிற்றோ? என்று ஆயிரம் கேள்விகள். எழுந்து அவளை காப்பாற்ற போ என்று கட்டளையிட்டது மூளை. ஆனால் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. மூடிய விழிகளுக்குள் மீண்டும் ஒரு உறக்கத்தை தழுவினான் அவன்.
******
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் அன்று பரபரப்பாக இருந்தது. நூறாவது கொண்டை ஊசி வளைவில் ஒரு மனிதனின் தலையும் முண்டமும் கிடந்தது. ஊட்டிக்கு சுற்றுலா வந்த சில இளைஞர்கள் விடியலில் அந்த காட்சியை முதலில் பார்த்தனர். உடனே அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு தகவலும் அளித்தனர். நான்கு நண்பர்கள் மகிழுந்தில் வந்திருந்தனர். அதில் ஒருவன் மட்டும்தான் கொஞ்சம் தெளிவாய் இருந்தான். மற்ற மூவரும் பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்தனர்.
ஏ.எஸ்.பி ஆதன் அந்த இடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான். எத்தனையோ கொலைகளை அவன் ஆராய்ந்திருக்கிறான். ஆனால் இது விசித்திரமாய் இருந்தது. கொஞ்சம் கொடூரமாகவும் இருந்தது.
பிணத்தின் கைகள் தலையின் முடியை அழுத்திப் பிடித்திருந்தது. தலை தனியாக செங்குத்தாக இருந்தது. அதன் அருகில் உடல் கொஞ்சம் கோணலாய் கிடந்தது. உயிர் போகும் சமயத்தில் கால்கள் தரையை தேய்த்திருக்க வேண்டும். விழிகள் பிதுங்கி வெளியே வந்திருந்தது. நாக்கு வெளியே தொங்கியது. வலி தாளமுடியாமல் நாக்கை நன்றாக கடித்திருக்க வேண்டும். நாக்கு இரண்டாகும் நிலையில் இருந்தது. வேறு காயங்கள் இல்லை.
“சார்… கொலைகாரன் ரொம்ப கொடூரமானவனா இருப்பான் போல…” என்று ஆதனிடம் கூறினார் இன்ஸ்பெக்டர் முருகன்.
“போட்டோகிராபர் வந்தாச்சா?” ஆதன்.
“இல்ல சார் இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல வந்துருவாங்க..” என்றார் அவர்.
அடுத்து காரியங்கள் துரிதமாக நடந்தேறியது. கூட்டம் வேறு கூடி இருந்தது. அனைவரையும் மிரட்டி உருட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்துக் கொண்டு, அந்த நால்வரையும் அழைத்துக் கொண்டு சென்றான் ஆதன்.
கொலை நடந்த இடத்தில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய கணினியில் பதிவேற்றி, பெரும் திரையில் ஒளிர விட்டான். பின் அங்குலம் அங்குலமாக அந்த புகைப்படங்களை ஆராய, ஒரு ஹெட் கான்ஸ்டபிள் அவனுடைய அறைக்குள் வந்தார்.
“அந்த நாலு பசங்க வெயிட் பண்றாங்க. என்ன பண்ணலாம் சார்?”
“ஸ்டேட்மெண்ட் வாங்கியாச்சா?”
“வாங்கியாச்சு சார்..”
“தனித்தனியா வாங்கினீங்களா?”
“ஆமா சார்?”
“அவங்க ஸ்டேட்மெண்ட்ல ஏதாவது வித்தியாசம் இருக்கா? சந்தேகப்படுற மாதிரி ஏதாவது?”
“எல்லாரும் ஒரே மாதிரி தான் சரி சொல்றாங்க. மூணு பேர் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளியே வரல. ஒருத்தன் மட்டும் கொஞ்சம் தெளிவா இருக்கான். அவன் தான் தகவல் கொடுத்தது சார். சந்தேகப்படுற மாதிரி எதுவும் இல்லை..”
“சரி அவனை முதல் அனுப்புங்க..”
சற்று நேரத்தில் ஒருவன் மட்டும் அறைக்குள் வந்தான். முகம் வெளிறிப் போய் இருந்தது மிகவும் அயர்வாக காணப்பட்டான்.
“உட்காருங்க…” என்றவன், ஒரு பட்டனை அழுத்த, ஒரு கான்ஸ்டபிள் ஓடி வந்தார்.
“ரெண்டு டீ” என்று கேட்க அவரும் சரி என்று தலை அசைத்துவிட்டு வெளியே சென்றார்.
அந்த அறையில் அசாத்திய அமைதி. ஆதன் எந்த கேள்வியும் கேட்கவில்லை. எதிரில் இருந்தவன் கொஞ்சம் பதற்றத்துடன் இருந்தான். அறை முழுக்க கண்களை சுழற்றிக் கொண்டே இருந்தான். எச்சிலை கூட்டி விழுங்கினான். ஏசி அறையிலும் கொஞ்சம் வியர்த்து கொட்டியது அவனுக்கு.
ஆதன் இன்னும் கணினித்திரையை ஆராய்ந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஒன்றுதான் புரியவில்லை. எதிராளி ஒருவனை கொலை செய்யும் பொழுது, அதாவது தலையை வெட்டும் பொழுது, சிலர் அவனுடைய கைகளையோ, கால்களையோ நன்றாக பிடித்திருக்க வேண்டும். ஆனால் இந்த கொலையில் விசித்திரமாக கொலை செய்யப்பட்டவனே அவனுடைய தலைமுடியை பிடித்துக் கொண்டிருக்கிறான். கொலையின் நோக்கம் பற்றி முதலில் ஆராய்வதே வழக்கம். ஆனால் அவனை ஏன் இப்படி கொல்ல வேண்டும் என்ற கேள்வி மனதில் பூதாகரமாக நின்றது. அவன் விழிகள் எதிரில் இருந்தவனையும் ஆராய்ந்தது.
அவன் ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, அவன் கேட்ட தேநீரும் வந்தது. ஒன்றை அருகில் இருந்தவனுக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை எடுத்து அருந்தத் தொடங்கினான் அவன்.
“டீய குடிங்க.. அப்புறம் தெளிவா பேசலாம்..” என்று ஆதன் கூற, அவனும் கைகளில் நடுக்கத்துடன் தேனீரை எடுத்து பருகினான்.
“உன்னோட பேர் என்ன?”
“மகிழன் சார்….”
“எதுக்கு ஊட்டி வந்தீங்க?”
“சுத்தி பார்க்க சார்..”
“ஊட்டியை சுற்றி பார்க்க சரி… ஆனா அந்த இடத்தில் உங்களுக்கு என்ன வேலை?”
“நாங்க நாலு பேரும் பிரண்ட்ஸ். ஒரு ஐடி கம்பெனில வேலை பார்க்கிறோம். ஒரு நாலு நாள் லீவு கிடைச்சது. டிசம்பரில் அவ்வளவா வேலை இருக்காது. அதனால கார எடுத்துட்டு ஊர் சுத்தலாம்னு இங்க வந்தோம் சார். எனக்கு வரலாறு மேல ஆர்வம் ஜாஸ்தி. இங்க இருக்க சிறுகுடி கிராமத்துல ஹீரோ ஸ்டோன்ஸ பாக்கலாம்னு அங்க போனோம்…”
“ஹீரோ ஸ்டோன்சா?” என்றான் ஆதன் புருவம் சுருக்கி.
“ஆமா சார்.. அங்க ஒரு கிராமம் இருக்கு சிறுகுடி.. அந்த கிராமத்துல சில மலைவாழ் மக்கள் இன்னும் வாழ்ந்துட்டு இருக்காங்க. அந்த டீ எஸ்டேட்ல வேலை பார்க்குறாங்க. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சில நடுக்கல் அங்க இருக்கு. அந்த நடுக்கடலில் உள்ள வீரர்களை, அந்த மக்கள் சாமியா வணங்கிட்டு இருக்காங்க. அதை சில புத்தகத்தில் படிச்சிருக்கேன். எனக்கு நேர்ல பாக்கணும்னு ஆசை. அதுனால தான் சார் அந்த இடத்தை தேடி போனோம்..” என்றான் அவன்..
இதை சொல்லி முடிக்கவே அவனுக்கு வார்த்தைகள் தட்டுத்தடுமாறி வந்தது.
அவன் சொல்வது உண்மையா என்று அங்கு எடுத்த புகைப்படங்களை ஆராய்ந்தான். அந்த கொலை நடந்த இடத்தின் அருகில் சில நடு கற்கள் இருந்தது.
“பயம் வேண்டாம். என்ன பாத்திங்களோ அதை தெளிவா சொல்லுங்க..” என்றான் அவன் விழிகள் பார்த்து.
“அந்த நடுகல்லை பார்க்க பாதை பெருசா இல்லை. அங்க ஓரமா வண்டியை நிறுத்திட்டு டீ ப்ளான்டேஷனுக்கு நடுவுல நடுந்து போனோம் சார்.. கொஞ்ச தூரத்தில் நடுகல்லும் இருந்துச்சு.. அதை போட்டோ எடுத்துட்டு ஒரு பத்தடி நடந்திருப்போம்.. அங்கதான்…” என்று அதன்பிறகு சொல்ல முடியாது தவித்தான்.
அவன் பேசியதெல்லாம் ஆடியோவாக பதிவு செய்தான்.
“சரி.. நீங்க போகலாம்…” என்று கூற, அவனுடைய முகத்தில் நிம்மதி பெரு மூச்சு. எழுந்து நாலடி சென்றிருப்பான்.
அந்த நடுகல் புகைப்படத்தை திரையில் பெரிதுபடுத்த ஆதன் அதிர்ந்தான். ஏனெனில் அந்த நடுகல்லில் ஒரு புடைப்பு சிற்பம் இருந்தது. ஒரு கையில் தலையைப் பிடித்துக் கொண்டிருக்க, மறுகையால் வாள் கொண்டு கழுத்தை அறுப்பது போல் அந்த சிற்பம் இருந்தது.
“ஒரு நிமிஷம்…” என்றான் ஆதன். மகிழன் திரும்பி பார்க்க, திரையில் இருந்த புகைப்படங்களைப் பார்த்து அதிர்ந்துவிட்டான்.
இரண்டு புகைப்படங்களை ஒன்றாக அருகருகே வைத்தான் ஆதன். ஒன்று நடுகல். மற்றொன்று கொலை செய்யப்பட்டவன். இரண்டுக்கும் பல ஒற்றுமை.
“கொலைக்கும் அந்த ஹீரோ ஸ்டோனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு அப்போ. இந்த ஹீரோ ஸ்டோன் பத்தி உனக்கு என்ன தெரியும் சொல்லு…” என்று கத்தியாய் வந்து விழுந்தது அவனுடைய வார்த்தைகள். கொஞ்சம் சந்தேகம் கூட இருந்தது அவன் தொணியில்.
அவனுக்கு பயம் கூடியது.
“சார்… சங்க காலத்தில் மக்களை காப்பாற்றிய வீரர்களுக்கு இந்த மாதிரி நடுகல் வைத்து வழிபடுவது வழக்கம். மக்களுக்காக போரில் இறந்தவரையோ, காட்டு விலங்குகளிடம் காப்பாற்றியவரையோ வழிபடுவாங்க. இங்க இருக்க நடுக்கல்ல சில எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருக்கு சார். அந்த ஊரில் ஏதோ தொற்று நோய் ஏற்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாக செத்துப் போயிருக்காங்க. இந்த மாதிரி அசாதாரண சூழ்நிலையில யாராவது ஒருத்தர் ஊருக்காக முன்வந்து தன்னோட உயிரை தியாகம் செய்வாங்க சாமிக்கு படையலாக. அந்த மாதிரி செஞ்சா அந்த கஷ்டம் போகும் என்பது அவங்களோட நம்பிக்கை. அந்துவன் என்பவன் தன்னோட உயிரை தியாகம் பண்ணி இருக்கான். இந்த மாதிரி கழுத்தை வெட்டி தன்னை தானே மாய்த்துக் கொள்வதை அரிக்கண்டம்னு சொல்லுவாங்க. மன்னன் போரில் வெற்றி அடையவும் கூட சில சமயம் இந்த மாதிரி உயிர்த்தியாகம் செய்வது வழக்கம் சார்..” என்று அவனுக்கு தெரிந்த தகவல்களை கூறி முடித்தான்.
மழை தொடரும்…