மறுநாள் காலை ஆதனும் முருகனும் புதிய அதிகாரிக்காக காத்திருந்தனர். ஆதனுக்கு மிகவும் வருத்தம். ஏதோ பெரிய தவறு இதற்கு பின் இருப்பதுபோலே தோன்றியது. அவனை விசாரிக்க விடாமல் விரட்டியடிக்கின்றனர். புதிதாய் வருபவன் நிச்சயம் இந்த வழக்கை விசாரணை செய்யப் போவதில்லை என்பது மட்டும் திண்ணம்.
மயூரன் என்பவன் புதிதாய் வழக்கை எடுத்து நடத்த வந்தவன். அவன் வரும்போதே ஒரு அசட்டையான நடையுடன் வந்தான். பார்வையில் ஓர் அலட்சியம். ஆதன் அவனுடன் கைகுலுக்க, விருப்பமே இல்லாமல் கைகுலுக்கினான். ஆதனை அவனுக்கு பிடிக்கவில்லை என்பது நன்றாக விளங்கியது.
“இந்த கேஸைப் பத்தின தகவல் எல்லாம் இதில் இருக்கு” என்று ஒரு கோப்பை நீட்டினான் ஆதன்.
“அங்க வச்சுட்டு போங்க” என்று முடித்துவிட்டான் மயூரன். இனி நடக்கப் போகும் விசாரணைக்கு, விலைபோன நேர்மையும், அலட்சியமும் முதல்வரியாய் விளங்கப் போகிறது.
ஆதன் எதுவும் சொல்லாமல் வெளியே வந்துவிட்டான்.
“என்ன ஆச்சு சார்?” என்றார் முருகன்.
“எதிர்பார்த்ததுதான்…” என்று முடித்துக் கொண்டான் ஆதன்.
அடுத்த வேலையே ஓடவில்லை ஆதனுக்கு. அன்று மாலைவரை பொழுதை பிடித்துத் தள்ளினான்.
ஏழு மணியளவில் முருகனை அழைத்துக் கொண்டு சிறுகுடி கிராமத்திற்கு கிளம்பி விட்டான்.
“முருகன், எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”
“நிச்சயமா சார். நடந்த சம்பவத்திலிருந்து இன்னும் என்னால வெளிவர முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் அந்த கொலைக்கு நானும் காரணம்னு தோணுது. என்னால முடிஞ்ச உதவியை நிச்சயம் செய்கிறேன்..” என்று வாக்களித்தான்.
“இங்க செத்துப்போன பெண்ணை பத்தின முழு தகவலும் எனக்கு வேணும். இதை நாம அன்னஃபிஷியலா டீல் பண்ணலாம்..” என்று ஆதன் வினவ, அடுத்த சில மணிநேரத்தில் முழுத்தகவலுடன் வந்தார் முருகன்.
அந்த பெண் பெயர் நிலா. அவளுடைய சொந்த ஊர் சென்னை. நீலகிரியின் அருகில் இருக்கும் கல்லூரி ஒன்றில் ஜூனியர் ரிசெர்ச் சயின்ட்டிஸ்ட்டாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அரசு ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கியிருக்கும் தொகை அவளுக்கு கிடைத்திருந்தது. அதாவது அரசு அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதிகள் ஒதுக்கி, சில கல்லூரிகளுக்கும், ஆராய்ச்சி மையங்களுக்கும் கொடுக்கும். அதில் ஆராய்ச்சி செய்ய சில நபர்களை வேலைக்கு எடுத்து, கல்லூரியில் குறிப்பிட்ட துறையின் தலைமையின் மேற்பார்வையில் அந்த ஆராய்ச்சி நடக்கும். முடிவுகளை தொகுத்து, அது வெற்றிகரமாக அமைந்தால், அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று மக்கள் பயனடையும் வகையில் தொழில்துறைக்கு கொடுப்பார்கள்.
அவளுடைய ஆராய்ச்சி மரபணு பொறியியல் துறை சம்பந்தப்பட்டது. பழங்குடி மக்களின் மரபணு மூலக்கூறுகளையும் நவீன மனிதர்களின் மூலக்கூறுகளையும் ஆராய்ந்து, மனித மரபணுவில் நடந்திருக்கும் மாற்றமைவுகள் என்னென்ன, மாற்றமைவால் நிகழ்ந்த பலம் மற்றும் பலவீனம் போன்ற தகவல்கள் சேகரிப்பதுதான் அந்த திட்டப்பணி. பத்து வருட திட்டம். அதற்கு வருடா வருடம் அரசிடமிருந்து திட்டமானியம் வந்துவிடும். அதில் வேலை செய்து கொண்டே, முனைவர் பட்டப்படிப்பிற்கும் பதிவு செய்திருந்தாள்.
சிறுகுடியில் இருந்த சில பழங்குடிமக்களிடமும் ட. என். ஏ சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைகள் நடந்தது. அவளுக்கு எதிரிகள் யாரும் இல்லை. தோழிகளுடன் வீடெடுத்து தங்கியிருந்தாள் என்றும், அவ்வப்போது சிறுகுடி மக்களை நேரில் சென்று சந்திக்கவும், உரையாடவும் செய்வாள் என்றும் நகவல் கிடைத்தது. அப்படி ஒரு நாளில், அந்த ஊரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டதாக இருந்தது. அந்த பெண்ணை கொன்றவர்களை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுவிட்டதாக வழக்கு முடிக்கப்பட்டிருந்தது.
அனைத்தையும் படித்து முடித்த ஆதன் சிந்தனையில் இருந்தான்.
“முருகன், இந்த வழக்கில் உங்களுக்கு எதுவுமே சந்தேகம் வரலையா?”
“இதுல சந்தேகப்பட என்ன இருக்கு சார்?”
“இது எதார்த்தமா நடந்த ரேப் மாதிரி தெரியல. திட்டமிட்டு செஞ்ச மாதிரி இருக்கு. இதுக்கு பின்னாடி ஏதோ பெருசா ஒரு விஷயம் இருக்கு. தண்டனை இவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறதெல்லாம் நம்ம நாட்டுல நடக்குற காரியம் இல்லையே!”
“இல்ல சார்.. இப்போ நடந்த கொலையையும் எப்பவோ நடந்த விஷயத்தையும் நீங்க லின்க் பண்ண பாக்குறீங்க. ஆனா அது அப்படி இருக்கணும்ங்கிறது உண்மை இல்லையே. எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா சார். இந்த என்கவுண்டர் நடந்தப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு” என்று கூறிய முருகனை ஒரு பார்வை பார்த்தான் ஆதன்.
அவனுடைய பார்வையில் முருகனை சாடும் பார்வை இருந்தது. அவருக்கு நன்றாக விளங்கியது. கிடைத்த ஆதாரத்தை அவனிடம் இருந்து மறைத்ததற்காகவே இந்த சாடல் என்று.
“புரியிது சார். உண்மையா அது மனசுல தேங்கியிருந்த வன்மத்தால செஞ்சதுதான். இதுக்கு முன்னாடி எனக்கு மேல இருந்த யாரும் என்னை மதிச்சதில்லை. நீங்களும் அதே ரகம்னு நினைச்சு அப்படி முட்டாள்தனம் செஞ்சுட்டேன்” என்று தன்னிலை விளக்கமளித்தார் அவர்.
அவன் பதிலொன்றும் கூறவில்லை. சன்னமான சிரிப்பை உதிர்த்தான்.
“கடமையிலிருந்து நான் தவறிட்டேன். இனிமே என்னோட வாழ்க்கையில் அந்த தப்பை பண்ணவே மாட்டேன். நீங்க என்னை நம்பலாம். உண்மையா உங்களை ஒரு தம்பியா நினைச்சு இதை சொல்றேன்” என்று அவர் கூற, அவனும் தலையசைத்தான்.
“ம்ம்ம்… உங்களை நம்புறேன். சொல்லுங்கண்ணா.. எங்க ஆரம்பிக்கலாம்” என்றான் உடனடியாக. அவரை மன்னிக்க முடியாதுதான். அவனுடைய மனதிற்கு அது உவப்பாக இல்லை. ஆனால் மனம் திருந்தியிருக்கும் ஒருவரை மீண்டும் குத்துவது, அவரை தவறான பாதையில் வழி நடத்தக் கூடும். அதனால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாவிட்டாலும், நிகழ்காலத்தில் அவரை நம்பலாம் என்று முடிவெடுத்தான்.
“அந்த பொண்ணுக்கும் அந்த சிறுகுடி கிராமத்துக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு. வேலை விஷயமா அங்க அடிக்கடி போயிருக்காங்க. அந்த விஷயம் நடந்ததில் இருந்து, அந்த ஊர்ல நிறைய அசம்பாவிதம் நடக்குறதா மக்கள் நம்புறாங்க. இது எல்லாம் தனிதனி விஷயம் கிடையாது முருகன். ஏதோ ஒரு லின்க் இருக்கு” என்று கூற, அடுத்து இதை எங்கிருந்து தொடங்குவது என்று இருவருமே சிந்தனை செய்தனர்.
“முருகன்.. நிலாவோட கூட இருந்த பெண்கள் பத்தின தகவல் வேணும். அப்புறம் அவளை ரேப் பண்ண ரெண்டு பசங்களோட பெற்றோர் பத்தின தகவலும் எடுங்க. நீங்க அடகு வச்ச செயினை எவனோ ஒருத்தன் வாங்கிட்டு போயிருக்கான். அந்த சிக்னலில் உள்ள சி.சி. டீவி ஃபூட்டேஜ் எல்லாத்தையும் நான் செக் பண்றேன் ” என்று அவன் கூற, அடுத்த இரு தினங்களில் அவன் கேட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்தார்.
புதிதாய் வந்த மயூரன் அந்த வழக்கை விசாரணை செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முருகனை ஓரிரு முறை, சிறுகுடியில் பார்த்ததும் ‘இனி இந்த பக்கம் பார்த்தால் கொன்றுவிடுவேன்’ என்று மயூரன் மிரட்டியதாகவும் கூறினான்.
“இந்த கேஸை இனி விசாரிக்கவே கூடாதுங்கிறதுதான் நோக்கம் போல தம்பி. அதுக்குதான் மயூரனிடம் தூக்கி கொடுத்திருக்காங்க. நீங்க சொல்ற மாதிரி ஏதோ பெருசா இருக்க வாய்ப்பிருக்கு. என்னை கொன்னுடுவேன்னு மிரட்டுறான்” என்று ஆதங்கமாக கூறினார்.
ஆதனுக்கு இருந்த சந்தேகம் இப்பொழுது அவருக்கும் வந்தது.
“ம்ம்ம்… சி.சி. டீவி முழுக்க செக் பண்ணியாச்சு. அந்த நகைகடை வியாபாரி, செயினை வாங்கிட்டு போனவன் பைக்கில் வந்திருக்க வாய்பிருக்குன்னு சொன்னாரில்லையா? அந்த சிக்னலில் பத்து நிமிஷத்துக்குள்ள வந்து போன வண்டியெல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கேன். இதுல உள்ளவுங்க அட்ரெஸ் வேணும் எனக்கு..” என்று அவன் கூற, அந்த கோப்பை வாங்கி வைத்துக் கொண்டார் முருகன்.
அடுத்து முருகன் சேகரித்த அனைத்து தகவல்களையும் சரி பார்த்தான் ஆதன். அந்த குற்றவாளிகளின் பெற்றோரைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னர், அவர்களை ஊரைவிட்டு துரத்திவிட்டதாக இருந்தது. தற்பொழுது அவர்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. அந்த பெண் நிலாவுடன் இருந்த மற்றொரு பெண்ணைப் பற்றிய தகவல்கள் முழுக்க சேகரித்திருந்தார்.
அடுத்து அந்த பெண்ணை நேரில் சந்திக்க கிளம்பினான் ஆதன். அவள் பெயர் மஞ்சரி. அவள் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
மஃப்டியில் சென்று தன்னை அறுமுகப்படுத்திக் கொண்டான். மருத்துவமனையின் கேன்டீனில் இருவரும் அமர்ந்திருந்தனர்.
“எனக்கு நிலாவைப் பத்தி கொஞ்சம் தகவல் வேணும்..” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், அவளுக்கு கோபம் வந்துவிட்டது.
“சார்.. செத்துப் போனவளை ஏன் இன்னும் இன்னும் சாகடிச்சுட்டே இருக்கீங்க.. அவளை விட்டுடுங்களேன்..”
“அதையெல்லாம் நீங்க எனக்கு சொல்ல வேண்டாம். நான் என்னோட கடமையை செய்யறேன். ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கு இருக்கு.”
“அதான் குற்றவாளியை சுட்டு தள்ளியாச்சே. அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப வந்து கேக்குறீங்க?” என்றாள் எரிச்சலுடன்.
அவனுக்கும் கோபம் தலைக்கேறியது. ஆனால் பொறுமையை இழுத்துப் பிடித்து, அவளுக்கு விளக்க முற்பட்டான்.
“இப்போ ரெண்டு கொலை நடந்திருக்கு சிறுகுடியில். அதுக்கும் நிலாவோட கேஸூக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்னு தோணுது.. ப்ளீஸ் ஹெல்ப் மீ வித் தி டீட்டெயில்ஸ்” என்றான்.
அவள் விழிகளில் நீர் தழும்பியிருந்தது.
“எங்களை விடவே மாட்டீங்களா? எனக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்கு சார்” என்றாள் பாவமாக. அவனுக்கு புரியவேயில்லை. தகவல் சொல்ல ஏன் இவ்வளவு சிரமப்படுகிறாள் என்று.
“யூ கேன் ட்ரஸ்ட் மீ.. உங்க கல்யாணத்துக்கு எந்த விதமான தடங்கலும் வராது..” என்று அவளுக்கு உறுதி மொழியளித்தான்.
“போன முறையும் இப்படித்தான் ஆச்சு. நீங்க விசாரணைனு வந்து ஏதோ ரெண்டு கேள்வியை கேட்டுட்டு போயிடுவீங்க. நானும் நிலாவும் தங்கியிருந்த வீட்டை காலி செய்ற நிலைமை எனக்கு வந்துச்சு. நீங்க போயிடுங்க. உங்களுக்கு நான் எதுவும் சொல்றதா இல்லை. நிலா செத்துட்டா. ஆனா சம்மந்தமே இல்லாம, தினம் தினம் நான் சாக முடியாது” என்று கூறிவிட்டு எழுந்து நடந்தாள் அவள்.
அவளை மிரட்டியிருக்கலாம். ஆனால் அவனுக்கு தோன்றவில்லை. ஏதோ ஒரு விதத்தில் அவளும் இந்த வழக்கால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று அவனுக்கு விளங்கியது. மாலை வேலை நேரம் முடிந்து, அவள் வீட்டிற்கு செல்ல தயாரானாள்.
அவளுடைய இரு சக்கர வாகனத்தை எடுக்க, வாகனம் நிறுத்துமிடம் செல்ல, அங்கு அவளுடைய வண்டியின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.
அடுத்த சில நிமிடங்களில் இருவரும் தேனீர் கோப்பையுடன் அமர்ந்திருந்தனர்.
சற்று நேரம் எதுவுமே பேசவில்லை. அவளின் விரல்கள் தேனீர் கோப்பையை அழுத்தமாக பிடித்திருந்தது. அவள் மனிதின் அழுத்தத்தை வார்த்தைக் கூட்டி சொல்லாமல் சொல்லியது அவள் உடல்மொழி.
“உங்களுக்கு என்னதான் வேணும்?” என்றாள்.
“கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேளுங்க. நீங்க நினைக்கிற மாதிரி நிலாவுக்கு நடந்நது வெறும் பாலியல் வன்கொடுமை மட்டுமில்லை. அதுல நிறைய மர்மம் இருக்கு. நீங்க உங்களுக்கு தெரிஞ்ச தகவல்கள் மட்டும் சொன்னா போதும்” என்று அவன் கூற, அவள் அவனை சிந்தனையுடன் பார்த்தாள்.
மழைத் தொடரும்…
Aadhan oda doubt seri than pola inga ithuku munnadi nadanthathu kum ippo nadantha kolai kum kandipa samandham iruku