Skip to content
Home » ஓ… பட்டர்பிளை

ஓ… பட்டர்பிளை

ஓ… பட்டர்பிளை

    அந்த அறைக்குள் அவளை தள்ளி விடாத குறை தான். உள்ளே வந்தவளின் பார்வை அந்த அறையின் தோற்றத்தில் அச்சத்தை கொடுத்தது.

அதிலும் அவனை காணுகையில் உடல் நடுக்கம் கூட கண்டது.

அழுது முரண்டு செய்திட கூடாது என்ற அறிவுரையில் கண்ணீரை கட்டுப்படுத்தி நின்றாள்.

”என்ன அங்கயே நிற்கற, இங்க வா” என்ற குரல் தெளிவாக வந்து இவளை அடைந்தது.

அவள் தயங்க, அவனோ முரட்டு தனமாக அவளின் கையை பற்றி மலர் மஞ்சதில் அவளின் அனுமதியின்றி கட்டி அணைத்தான். அவனை இதுவரை இரண்டு முறை பார்த்து இருக்கின்றாள்.

சில நாட்களாக போனில் பேசியிருகின்றாள். ஆனாலும் அவனின் பண்போ, குணநலனோ அறிந்திராத பேதை இவளுக்கு, இவனின் அணைப்பு பஸ்ஸில் தெரியாதவன் சீண்டும் ஒவ்வாமை தான் முன்னே வந்தது.

அவள் குமட்டி கொண்டு விடுபட, அவனோ என்னாயே தள்ளி விடறியா என்றே மலரிதழில் வலிக்க வலிக்க முத்தமிட்டான்.

அவள் எவனோ ஒருவன் எச்சி என்ற அருவருப்பு கூடவே வர தன் ஒட்டு மொத்த பலத்தை கொண்டு அவனை தள்ளி நிறுத்தினாள்.

இது போதுமே… ஆண்மகன் என்ற அகம்பாவத்தை கிளர்த்து விட, பெண்ணவளினை மென்மையாக பதவிசமாக கையாளும் முதலிரவில் வேங்கையென சீறிப் பாய்ந்தான்.

      மான் வேட்டையாடும் புலியும், இரையை பிறாண்டி உண்ணும் கழுகும், சிந்தையில் வந்து போக, பேயறைந்தது போல நின்றாள் ப்ரியா.

    கையை கட்டிக் கொண்டு அவளை ரவிவர்மன் ஓவியம் காண்பதை போல இரசித்தான் ப்ரஜன்.

     சற்று நேரம் அசையாத சிலைப் போல நின்ற ப்ரியா. ப்ரனின் பார்வை கழுகோ, புலியோ இல்லாது வருடும் பார்வையால் நோக்கவும், சுதாரித்து இடங்களையும், அதன் தன்மையும் அவனையும் கண்டு தான் நினைத்து பார்த்தவையா இப்படி பயங்கரமாக உள்ளதென தன்னையே தலையில் தட்டி கொண்டாள்.

     “என்ன ஓவர் சினிமாட்டிக்கா இருக்க ரியா. அலங்காரம் பார்த்து பயந்துட்டியா இல்லை… வெட்கமா? முகத்தை பார்த்தா வெட்கம் மாதிரி தெரியலை. வில்லனை பார்க்கற ரேஞ்சுக்கு பயந்து இருக்கு உன் கோலிக் குண்டு கண்ணு.” என்று ப்ரஜன் சாத்துக்குடி பழத்தை  சர்க்கஸ் போல தூக்கி போட்டு பிடித்து, விளையாடினான்.

போனில் பேசிய அதே டோனில் இயல்பாய் பேசி முடித்தான்.

     “பால்…” என்று நீட்ட, அவனோ அதை எடுத்து அங்கிருந்த மேஜையில் வைத்து உட்கார சொன்னான்.

    “என்ன ஏதாவது சொல்லணுமா?” என்றான். ப்ரியாவின் திணறலை அறிந்து கேட்டான்.

     “அம்மா காலில் விழ சொன்னாங்க…” என்று கையை பிசைந்தபடி அவனை பார்க்க,

    “நான் உன் காலில் விழணும்னு சொன்னாங்களா?” என்று யோசிப்பது போன்ற பாவனையில் கேட்டு முடித்தான்.

     “அய்யயோ அப்படியில்லை. என்னை தான் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொன்னாங்க.” என்று ப்ரியா வேகமாய் பதிலுரைத்தாள்.

     “என்ன ரியா இது. வேறயென்ன சொன்னாங்க.” என்று கேட்டதும் நெளிந்தாள்.

    இருக்காதா பின்னே திருமணமென்று பேசி முடித்த கொஞ்ச மாதத்தில் காலில் விழு, அவனுக்கு அடிபணிந்திடு என்றால் எப்படி? என்று யோசித்தவளால் அவனிடம் கூறயியலாது நெளிய தானே முடியும்.

    “எனக்கு இந்த காலில் விழறது என்னவோ பிடிக்கலை.” என்று இருகுரல் ஒன்றாக ஒலித்து முடிக்கவும் இருவரும் பார்வையை ஒரு நேர்கோர்ட்டில் சந்தித்தார்கள்.

    ரியா தயங்க, ப்ரஜன் தான் ஆரம்பித்தான்.

     “இங்க பாரு ரியா. இந்த அறை எதுக்காக அலங்கரித்து வைத்தார்களோ? சத்தியமா நான் அதுக்கு உபயோகப்படுத்த போவதில்லை. என்ன பார்க்கற? ரியா உனக்கு என் குணமே தெரியாம கட்டிலில் குழந்தையா எப்படி மாற முடியும். பெரியவங்க தான் புரியாம நடக்கறாங்க. நாம புரிதலோடு ஆரம்பிப்போமே.” என்றதும் ப்ரியாவுக்கு மூச்சு சீரானது.

     ” தேங்க் காட்…. ஆக்சுவலி நான் இதை எப்படி சொல்லறதுன்னு தெரியலைங்க. எனக்குமே ஒரு மாதிரி அன்கம்பர்டபிளா இருந்தது. ஆனா பாருங்க எங்க அத்தை பொண்ணு. அமுதா இருக்காளே… இங்க வருவதற்குள் ஓவரா பேசி… அட்வைஸ் எல்லாம் பண்ணி பயமுறுத்திட்டா. உங்களுக்கு புரிந்ததே அது போதும். நீங்க உண்மையா தானே பேசறீங்க” என்று கேட்டாள்.

   “ஹலோ என்னை பார்த்தா எப்படி தெரியுது. ரூம்ல நுழைந்ததும் வில்லன் மாதிரி நீ மறுத்தாலும் உன்னை அடைந்து, அடுத்த மாதமே அம்மாவாக்கி ஆண்மகன்னு உலகத்துக்கு நிருபிக்கணுமா?” என்றதும் ரியா அவனை பார்த்து தான் இங்கு வந்ததும் எண்ணி பார்த்த விதத்தை மீண்டும் நினைவுப்படுத்தி நகைத்தாள்.

     “நீ சிரிக்கறதை பார்த்தா அப்படி காட்சிகளை நினைத்து பார்த்து இருக்க. அப்படி தானே.?” என்று கேட்டான் ப்ரஜன்.

    “அய்யோ சாரி… எனக்கு இங்க வருவதற்கு முன்ன கேட்ட அட்வைஸ் அப்படி. உங்க காலில் விழணும். பாலை ஷேர் பண்ணி எச்சியா இருந்தாலும் குடிச்சிடணும். நீங்க தொட்டா….” என்று தலையை குனிந்து கொண்டு “அதை மறுக்காம ஓத்துழைக்கணும் இப்படி தான் சொல்லி இன்னிக்கே நடக்கணும் அப்படி எல்லாம் பயமுறுத்திட்டாங்க.” என்று பயந்தாலும் சொல்லிவிட்டாள்.

     ரியாவால் ப்ரஜன் பேச்சு, செய்கை, பார்வை என்று ஆராய்ந்த பொழுது அவனிடம் இந்தளவு பேச முடிந்தது.

    “உட்காரு ரியா” என்று மெத்தையில் தோதுவாக அமர்ந்ததும், “நாமயென்று இல்லை. இந்த திருமணமான ஜோடிகளில் 50சதவீதம் இப்படி சுத்தி இருக்கறவங்களாளே ஒரு கட்டாயத்தில் தான் தாம்பத்தியம் நடக்குது. மீதி 40சதவீதம் எதிர்பாலினத்தின் மீது இருக்கற ஆர்வத்தில் தெரிந்தவளா புரிந்தவளா, பிடிச்சிருக்கா, இது எதையும் யோசிக்காம இருவருமே அவர்களை தேட ஆரம்பித்துவிடறாங்க.

திருமணமாகி இரண்டு வருடம் அலுப்பு தீர மெய்யில் தேடி அதற்கு பிறகு தான் மனதை தேடறாங்க. அப்போ பாதி பேர் வாழ்க்கை மனதை புரிந்துக் கொள்ளாமலே கேரக்டர் தெரியாம ஒரு குழந்தை கையில் வந்த பிறகு, நான் ஏமாந்துட்டேன் நீ ஏமாந்துட்டனு இப்படி மாற்றி மாற்றி பேசறாங்க.

    நாம அப்படி வேண்டாம். பேசுவோம். பழகுவோம்… நமக்கு தானா ஒரு நாள் அமையும் மனதின் புரிதல் கடந்து நம்மை நாமளே கொஞ்சமா புரிய துவங்கிறப்ப நாமளே நம்மை இழுந்து தாம்பத்தியம் ஆரம்பிப்போம்.

   இப்ப மற்றவர்களுக்காக சாஸ்திரம், சடங்குனு நமக்கு கொடுத்த தனிமையில் நம்மை பற்றி பேசுவோம்.” என்று ப்ரஜன் பேசவும் நிம்மதி பெரு மூச்சை வெளியிட்டாள் ப்ரியா.

      “பரவாயில்லை… ப்ரியா ப்ரஜன் இப்படி முதல் எழுத்தோட ஆரம்பம் ஒன்று போல இருக்கு. எண்ணங்கள் முரணாக இருக்கும் என்று பயந்தேன். ஆனா பாருங்க. இந்த முதலிரவு முதல் நாளில் இந்த கருத்து ஒத்துப் போகுது.

    எனக்குமே இப்படி திருமணமென்ற புது பந்தத்தில் உடனே என்னை காட்சி பொருளா காட்டி ஒப்படைக்க மனமில்லை. கொஞ்சம் சங்கடமா இருந்தது. என்னதான் திருமணயென்ற ஒரு இதமான பந்தத்தில் இணைந்தாலும் காதல், ஆசை புரிந்து நடக்கணும்,  உங்களை அறிந்துக்கணும், ஏன் எதிர்பாலின ஈர்ப்பு இப்படி எல்லாம் அறிந்துக்க ஆசையென்றாலும் உடனே இப்படி மாற முடியாது இல்லையா.
  
    நேற்று வரை முட்டிக்கு மேல தெரியற மாதிரி உடை உடுத்த கூட தடை விதித்தாங்க. இன்னிக்கு இங்க… எப்படி சொல்ல தெரியலை….

    ஒரு கயிறு போதுமா? உடலை துகிலுரித்து காட்டிக் கொள்ள…? எனக்கும் உடன்பாடில்லை.” என்று தன் பேச்சுரிமையை அழகாக ப்ரியா எடுத்து சொல்லவும் இருவரும் மனதால் நெருக்கம் கொண்டனர்.
 
    “எக்ஸாட்லி ரியா. இதை ஏற்றுக்கவும் ஒரு பக்குவம் வேண்டும். சில பெண்கள் ஆண்கள் இதுக்கான நேரம் கொடுத்தா, என்னவோ அவன் ஆண்மகனா? அப்படியென்ற சந்தேகம் தான் பட்டுக்கறாங்க. அதனாலயாவது ஆண் சூழ்நிலைக்கு வாழ முடிவு பண்ணுற கொடுமையும் இருக்கு.” என்று ப்ரஜன் சொன்னதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரித்தனர்.

    அவர்களுக்குள் பட்டாம்பூச்சியாக காதல் மெல்லிய இழையாக பறக்க ஆரம்பித்தது.

-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *