Skip to content

கரை தந்த கடலே-1

51 / 100 SEO Score

அத்தியாயம்-1

சூரியன் பகல் பன்னிரண்டு என்ற நேரத்தை தொட்டாலும், கார்த்திகை மாதம் என்றதால், லேசாக வானம் இருண்டு கொண்டிருந்தது.

‘சைட்டூன்’ என்னும் உணவகத்திற்கு வெளியே தன் லெதர் வாட்சை அடிக்கடி பார்வையிட்டவாறு, தன் போனில் ‘பிரசன்னா’ என்ற எண்ணிற்கு விடாமல் அழைப்பை தொடுத்தார் பிரதீப்.

    “பச் போனை எடுக்கறானா இல்லையா? மத்த நேரமெல்லாம் வீட்ல இருக்கறப்ப, முதல் ரிங் வர்றப்பவே போனை எடுத்து பேசுவான். இன்னிக்கு என்ன நாள், அதுவும் நான் கூப்பிட்டா தவிர்க்கறான்.
வரவர பிரெண்ட்ஸ் இருந்தா நான் எல்லாம் கண்ணுக்கு தெரியறதில்லை’ என்று மனதோடு பொறுமினார் பிரதீப்.

பிரசன்னாவின் தந்தை பிரதீப். வயது நாற்பதை தொடவிருக்கின்றது.

இளமை வயதான பத்தொன்பது வயதில் காதல் பூத்து, அது பிரச்சனையாகி, பிரசன்னாவை கையில் இவர் ஏந்தியதும், கல்பனா மறுபக்கம் இறந்துவிட்டாள்.

இருபது வயது கூட தொடாத பொழுதே, எல்லாம் இழந்தவனாக பிரதீப்பும், அன்னையில்லாத குழந்தையாக பிரசன்னாவும் தனித்து வாழ பழகிவிட்டனர்.

அந்த காலத்திலிருந்தே, பிரதீப் மகனுக்கு அன்னை, தந்தை என்றதை தாண்டி நல்ல நண்பராக மாறியிருந்தார்.
அதன் பலன் பிரசன்னாவும் தந்தை பிரதீப்புடன் தோழனாக பாவித்தான்.

இன்று பிரசன்னாவிற்கு இருபது முடிந்து, 21 தொட்ட தினம். அதற்காக கேக் வாங்கி விட்டு இங்கே காத்திருக்கின்றார். மகன் தன் நண்பர்களோடு வருவதாக சொல்லிவிட்டு காலையில் கல்லூரிக்கு கிளம்பியிருந்தான்.

பிரதீப் தற்போது மகனையும் அவனது நண்பர்களுக்காகவும் காத்திருந்தார்.

    அங்கே அந்த நேரத்தில் அழகழகான பெண்கள், அவரை கடந்து செல்லும் பொழுது, அவரை பார்த்துவிட்டு செல்கின்றனர். அவர்கள் பார்வையில் பிரதீப்பின் வயது சொன்னால் தானே தெரியும். பிரதீப் இளமை ததும்பு விதமாக இருக்க பெண்கள் பார்வை அவர் பக்கம் விழுந்தது.
அவர்களை பார்த்து பொழுதை கழித்தால் கூட, பிரதீப்பிற்கு நேரம் ரம்மியமாக செல்லும்.

  வயசு பெண்களை பார்ப்பது எல்லாம் தவறு என்று, கன்னத்தில் போட்டுக் கொள்ளும் அக்மார்க் நல்லவர்.

  பிரசன்னா அழைப்பை எடுக்காததால், பிரசன்னா தோழன் வருணிற்கு அழைத்தார் பிரதீப்.

  பிரதீப் வருணுக்கு அழைத்ததும் “அங்கிள்… காலேஜில் இருந்து கிளம்பிட்டோம். அங்க தான் வந்துட்டு இருக்கோம். மெட்ரோல இன்னும் இரண்டு ஸ்டாப் இருக்கு.” என்றான்.

  “வருண் பிரசன்னா ஏன் போன் எடுக்கலை?” என்று கேட்டு வைக்க, “அங்கிள் அவன் போனை சைலண்ட்ல் போட்டு சலீம் கூட கதை அளந்துட்டு இருக்கான்.
நீங்க எனக்கு போன் போட்டதும் தான். அவன் பேக்கெட்ல போன் எடுத்து செக் பண்ணினான். உங்களிடம் பேச சொன்னேன்… ஆனா அவன் சின்சியரா மெட்ரோல ஒரு பொண்ணை சைட் அடிக்கறானாம். நீயே பேசுன்னு தள்ளி விட்டுட்டான்.” என்று சிரித்தபடி கூறினான்.

பிரதீப்போ, தலையை உலுக்கி கொண்டு, “சரி சரி சீக்கிரம் வாங்க. ஹோட்டலுக்கு வெளியே கடன்காரனாட்டும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். போற வர்றவங்க லுக்கு விட்டுட்டு போறாங்க. ரொம்ப நேரம் நிற்க ஷையா இருக்கு.” என்று கூறி துண்டித்திடும் முடிவில் இருக்க, “சாரி அங்கிள் வந்துட்டே இருக்கோம்‌ ப்யூ மினிட்ஸ்” என்று வருண் அணைத்தான்.

  பிரதீப் அங்கும் இங்கும் தலையை திருப்பி, சிறிது நேரம் கழித்தவர், அங்கிருந்த கடையில் சிகரெட் வாங்கி பிடிக்க ஆரம்பித்தார். எப்படியும் மெட்ரோவில் இரண்டு ஸ்டாப் உள்ளதாக வருண் கூறியதால் நிதானமாக, உடலுக்கு தீங்கை விளைவிக்கும் புகையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாட ஆர்வமாய் உதட்டில் வைத்து இரண்டு இழு இழுத்தார்.

   “பார்த்தியா ரயில் வண்டியை…  உஃப்பு உஃப்புனு.” என்று பிரசன்னா குரல் அண்மையில் கேட்டதும், பிரதீப் திரும்ப, அவர் கையிலிருந்த சிகரேட் பிரசன்னா கைக்கு பிடுங்கப்பட்டு மாறியது.

   “நான் வரமாட்டேன்ற தைரியம் தானே? இந்த பழக்கத்தை எப்ப விடப்போறிங்க. என்னை மட்டும் ஸ்மோக் பண்ணாத, டிரிங் பண்ணாதனு அட்வைஸ். நீ சரில்லை பிரதீப்” என்று சிகரெட்டை கீழே நசுக்கி எறிந்தான். கூடவே உரிமையேடு தந்தையை பெயரிட்டு பேசினான்.

  “டேய் டேய்.. இரண்டு இழு இழுத்து விட்டுயிருப்பேன். அதுக்குள்ள..” என்று சிகரெட் பிடுங்கப்பட்டு கீழே நசுக்கி தூக்கியெறிந்ததால் சலிப்படைந்தார் பிரதீப்.

  “ஓ… எதுக்கு இந்த ஸ்மோக்?” என்று கண்டிக்கும் விதமாய் பிரசன்னா கேட்க, “நீ போன் எடுக்கலை அந்த சோகம்… சரி விடு… ஏதோ மெட்ரோல பொண்ணை பார்த்தியாமே… என்ன ரிசல்டுடா.” என்று பிரதீப் பதில் தந்து கேட்டார்.‌

  “அப்பா… நீங்க எனக்கு அப்பா. கொஞ்சமாவது பேரண்ட்ஸ் பாயிண்ட் ஆப் வியூல என்னை திட்டணும். அதை விட்டு ரிசல்ட் கேட்கறிங்க.” என்று கூற பிரதீப்போ மென்னகைத்தார்.

“சொல்லுடா…” என்று கேட்க, “இதென்ன ரெகுலரா வர்ற மெட்ரோ பயணமா? பொண்ணை பார்த்து சைட் அடிச்சி காதலில் விழறதுக்கு. இன்னிக்கு வந்த மெட்ரோ கம்பார்ட்மெண்டில் அழகா இருந்தா பார்த்தேன்‌, ரசித்தேன். தட்ஸ் இட்.” என்றான் மைந்தான்.

  தந்தை மகன் உரையாடலை எப்பவும் போல வேடிக்கை பார்த்த நண்பர்களோ, “அங்கிள் பேசாம நீங்க எனக்கு அப்பாவா வந்திருக்கலாம். பிரசன்னா அதிர்ஷ்டசாலி. பிரெண்ட்லி அப்பா கிடைச்சதுக்கு. எனக்கு இப்படியொரு அப்பா இருந்தா செமையா இருந்திருக்கும்.”
என்றான் சலீம்.

” டெய்லி எங்க குரூப்ல உங்க இரண்டு பேரையும் பத்தி பேசி சந்தோஷப்படாத நாட்களே இல்லை அங்கிள்.” என்று வருணும் உரைத்தான்.

  “அங்கிள் நிஜமாவே நீங்க பிரசன்னாவுக்கு அப்பா தானா? பார்க்க அண்ணன் மாதிரி இருக்கிங்க. பிரெண்ட் மாதிரி பேசறிங்க. எப்படி அங்கிள்.” என்று அகில் கேட்டான்.

சலீம், வருண், அகில் மூவரும் பிரசன்னாவின் நெருங்கிய தோழர்கள். பிரதீப்பின் பேச்சாலும் தோழமையாளும் ‘அங்கிள் அங்கிள்’ என்று உரிமையாக பேசுவார்கள்.

  “புதுசா ஏதாவது கேளுங்கடா. எத்தனை வருஷமா இதே கேள்வி. முதல்ல சாப்பிட போகலாம். பிறந்த நாள் பையன் கேக் வெட்டணும். ஐஸ் கேக் வேற உருகிடும்” என்று அங்கே வைத்த கேக் பாக்ஸை வேறு சுட்டி காட்டினார். இந்த வார்த்தை எல்லாம் பிரதீப் அடிக்கடி கேட்டு சலித்தவரே.

  ஐவரும் ‘சைட்டூன்’ என்னும் உணவகத்திற்குள் நுழைந்தார்கள்.
வரவேற்பில் இருந்த முகம் நிச்சயம் தமிழ் ஆட்களே இல்லை என்று கூறிடலாம். ஜப்பானோ தாய்லாந்தோ ஏதோவொரு வேற்று நாட்டு மனிதர்களின் முகசாயலில் இருந்தனர்.

   தனியாக விளக்குகளின் எழில் கொஞ்சும் அழகில், ரிசர்வ் செய்த இடத்திற்கு சென்றார்கள். அங்கே ஆறு பேர் கொண்ட இருக்கையில் ஐவர் சென்று அமர்ந்தனர்.

காலி இருக்கையில் கேக் வைத்து விட்டு, பிரதீப் நிமிர, “என்ன கேக் வெட்டணுமா? முதல்ல முகத்தை வாஷ்பண்ணிட்டு வாங்கப்பா. அப்ப தான் பிக்சர்ல அழகா இருப்பிங்க.” என்று அனுப்ப, பிரதீப் மகனின் பேச்சை தட்டாமல் சென்றார்.

  வெளியே நின்ற நேரத்தில் அதிகப்படியான தூசி முகத்தில் ஒட்டியதை அவரும் உணர்ந்ததால் முகமலம்ப வந்தார்.

  எதிரே கை அலம்பும் இடத்தில் இருந்த கண்ணாடியில் பிரதீப் முகம் அலம்பி கைக்குட்டையால் துடைத்தார்.
கண்ணாடியில் தன்னுருவத்தை கண்டு, “இருபது வயது பையனுக்கு அப்பா.” என்று சொல்லி பெருமைக் கொள்ளவும், யாரோ வரும் அரவம் கேட்டு வெளியே வந்தார்.

“அந்த நறுக்கி வச்ச மீசை ஓகே. ஆனா லைட்டா தாடி ட்ரிம் பண்ணின செம ஸ்மார்ட்” என்றாள்‌ ஒருத்தி.

  “சே சே.. அந்த தாடி தான் டூ ஸ்மார்ட்டா காட்டுது. நிறைய பசங்களுக்கு அதான் அழகு. அவருக்கும் அது இன்னும் அழகா இருக்கு” என்று இரண்டு பெண்கள் பேசுவதை அகில் கேட்க நேர்ந்தது.

  பிரசன்னா இருக்குமிடம் வந்ததும் கேக் வெட்ட, தந்தை பிரதீப்பிற்கு ஊட்டிவிட, பின்னர்‌ நண்பர்களுடன் கேக்கை பகிர, என்று ஆனந்தமாய் நேரங்கள் சென்றது.
ஆளாளுக்கு ப்ரியாணி வாங்கி சிக்கன் கிரேவி, மட்டன் குழம்பு, இறால் வறுவல், என்று வாங்கி சுவைத்தார்கள்.

பிரதீப் இறாலை சுவைத்தவர், “இறாலாட்டும் சுருண்டு இருந்தான். கைகால் எல்லாம் பிங்க் கலரில் சும்மா பன்னீர் ரோஜா பூவை போல அழகாயிருந்தான்.
அப்ப எல்லாம் என் பையன் தான் எனக்கு உலகம். இப்ப பாருங்களேன்… என்‌ உயரத்துக்கு வந்து நின்றுட்டான். சொல்லப் போனா என்னை விட உயரம்’ என்று மார்தட்டி பேச பிரசன்னா தந்தையை கண்டு முகமலர்ந்து போனான்.

  “அப்பா நீங்க ஏன்பா இன்னொரு கல்யாணம் பண்ணலை?” என்று கேட்க பிரதீப்போ, “உன் முகத்தை பார்த்தப் பிறகு யாரையும் கல்யாணம் பண்ணணும்னு தோனவேயில்லைடா.” என்றார்.

  “அப்பா இப்ப ‘உம்’ சொல்லுங்க. கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” என்று ஆர்வமானான் பிரசன்னா.

  அகிலும் ”அங்கிள் இப்ப கூட அந்த இரண்டு பொண்ணுங்க என் கமெண்ட் பாஸ் பண்ணினாங்க தெரியுமா?” என்று அவர்கள் பேசியதை கூறினார்.

பிரசன்னாவோ “பாருங்க… இப்பவும் உங்களை பொண்ணுங்க சைட் அடிக்கறாங்க” என்றான்.

  பிரதீப்போ, டிசு பேப்பாரை துடைத்தபடி, “உனக்கு 21 வயசாகிடுச்சு. படிப்பு முடிஞ்சதும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நான் திட்டம் போட்டுட்டு இருக்கேன். இதுல நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லற. பேசின அந்த பொண்ணுங்களை நிறுத்தி என் வயசை சொல்லி கல்யாணம் செய்துக்கறிங்களானு கேட்டா தலைதெறிக்க ஓடிடுவாங்க” என்று சாதாரணமாய் கூறினார்.

  “என்னது எனக்கு கல்யாணமா? என்று பிரசன்னா அதிர, “பிரசன்னா… எங்கப்பா மட்டும் இப்படி கேட்டா இப்பவே கூட கல்யாணம் செய்துக்கறேன் பொண்ணு பாருங்கன்னு சொல்லிடுவேன்டா” என்று வருண் கூற, “பச் சும்மாயிருடா.” என்று நண்பனை அதட்டிவிட்டு, “அப்பா… இப்ப என்ன அவசரம் ஏற்பட்டுச்சு. இந்த பேச்சு பேசறதுக்கு.” என்று நெற்றி சுருக்கி கேட்டான்.

  எப்பொழுதும் பிரதீப் சும்மாவே வார்த்தை விடுபவர் இல்லையே. மகன் பிரசன்னாவிடம் என்ன பேசினாலும் விளையாட்டிற்கு பேசும் பேச்சு இருக்காது.

   “நிஜமா தான் சொல்லறேன். படிப்பு முடியவும் பொண்ணு பார்த்து உனக்கு கல்யாணம் செய்து வைக்கணும். எல்லாரும் பையனுக்கு 30 வயசு வரை காத்திருக்காங்க. நாம காத்திருந்து என்ன செய்ய. வீட்ல உன் முகத்தை பார்த்து போரடிக்கு. மருமக வரணும். அவ என்னையும் அப்பானு கூப்பிட்டு, வயிறு நிரம்ப அவ கையால சாப்பிடணும். கிச்சன்ல எந்நேரமும் சமைக்க முடியறதில்லை பிரசன்னா.” என்றார்.‌

  “நல்ல கதையா இருக்கே. உங்களுக்கு சமைக்க முடியலைன்னா எனக்கு அவசரமா கல்யாணம் பண்ண ரெடியாகறிங்க. தப்புப்பா… என் கடைசி‌ காலம் வரை உங்க கையால தான் சாப்பிடுவேன்” என்றதும், “என்னடா பேச்சு. கடைசி காலம் அதுயிதுனு? பிறந்தநாள் அதுவுமா?” என்று கண்டிக்க, “சும்மா பேச்சுக்கு தானேப்பா பேசினேன்.” என்று கூறினான்.

  “பிரசன்னா… அப்பா இருக்கற வரை உன் வாயில இருந்த இப்படி எந்த வார்த்தையும் வரக்கூடாது.” என்று கண்டிக்கும் விதமாக பேசினார்.

  “சரி ரைட்டு விடுங்க. நான் சொல்லறதை கேளுங்க. உங்களுக்கு ஒரு பொண்ணு பார்க்கவா? கல்யாணம் பண்ணிக்கறிங்களா?” என்று கேட்க, பிரதீப்போ, “விளையாடத பிரசன்னா. டேய் உங்களுக்கு வேற ஏதாவது வேண்டுமா? ஐஸ்க்ரீம் இல்லைன்னா ஜூஸ் மாதிரி” என்று பிரசன்னாவின் பேச்சை கத்தரிக்க முயன்றார்.

“இல்லை அங்கிள். இதுவே போதும்”
“வயிறு ஃபுல் அங்கிள்” என்றார்கள் மற்றவர்கள்.

   பிரதீப்போ கை அலம்பிட்டு வந்துடறேன்டா” என்று மகனிடம் கூறிவிட்டு எழுந்தார்.

பிரசன்னாவோ, “எங்கப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன். அவர் நோ சொன்னா இந்த முறை கேட்பதா இல்லை. நீங்க என்னடா சொல்லறிங்க” என்று நண்பர்களிடம் அபிப்ராயம் கேட்டான்.

அகிலோ, “உங்கப்பா இப்ப தான் ஜஸ்ட் 30 னு சொல்லலாம் பிரசன்னா. அந்தளவு யங். நிஜமாவே அந்த பொண்ணுங்க அப்பாவை எப்படி பார்த்தாங்க தெரியுமா” என்று கூறினான்.

  “ஆமாடா… உனக்கு அண்ணன்னு தான் சொல்லலாம். அப்பானு அவரா சொன்னா தான் தெரியுது.” என்றான் சலீம்.

“மச்சான் அங்கிள் உனக்கு பொண்ணு பார்க்க நினைக்கறார். நீ அவருக்கு பார்க்க ஆசைப்படற. இதுல எதுடா நடக்கும்.” என்று கேட்டான் வருண்.

பிரசன்னாவோ ‘இங்க ஹீரோ நினைப்பது தான் நடக்கும்.’ என்று பிரசன்னா மனதில் நினைக்க, பிரதீப்போ “என்னடா ஏதோ திட்டம் போடுற மாதிரி என்னையே பார்க்கற?” என்று வந்தார்.

“பச்.. சொன்னேனே. எனக்கு அண்ணா மாதிரி இருக்கிங்க. உங்களுக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைக்கணும். எனக்கு உங்க கையால சாப்பிட்டு போரடிக்கு. எனக்கு அம்மா வேண்டும்” என்று கேட்டான் பிரசன்னா.

பிரதீப் பிரசன்னாவின் பேச்சில் சிலையாக மாறினார். இதே போல தான் பிரசன்னா விவரம் தெரியாத வயதில், ‘எனக்கு அம்மா வேண்டும்’ என்று கேட்டு அடம்பிடித்த நாட்களை எண்ணினார்.

-தொடரும்.

3 thoughts on “கரை தந்த கடலே-1”

  1. Wow new story so happy sis 😘😍 arambamey amarkalam pa young daddy and son combo super eagerly waiting to read this story sis 😍

  2. கரை தந்த கடலே…!!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 1)

    வாவ்…! மகன் அப்பாவுக்கு பொண்ணு பார்க்குறானா…?
    சூப்பர் போங்க. ஆனாலும், பத்தொன்பது வயசுலயே காதலும் வந்து, மகனையும் கையில் ஏந்தி, மனைவியையும் இழந்து, மகனை வளர்க்குற முழுப்பொறுப்பையும் சுமந்து..
    பாவம் வாழ்க்கை எந்தவொரு சந்தோஷமும் இல்லாமல் வறண்ட பாலைவனமாத்தான்
    போயிருக்கும் போல.

    இப்ப மகன் அதை ஈடு செய்ய
    வழியைத் தேடினாலும்..
    அந்த வழியே மகனோட வாழ்கைக்கு தடையாகிடக் கூடாது, அதாவது புது அம்மா வந்து அப்பாவையும் மகனையும் பிரிச்சிடக் கூடாது தானே…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!