Skip to content

கரை தந்த கடலே-14 (முடிவுற்றது)

56 / 100 SEO Score

அத்தியாயம்-14

 

பிரசன்னாவுக்கு தந்தை பிரதீப் இன்னமும் எந்த முடிவும் சொல்லாமல் அலைக்கழிப்பதால் கோபத்தோடு நடமாடினான்.

 

காஞ்சனாவிடம் கூட, “ஆச்சி… நீங்களும் அப்பாவிடம் கல்யாணம் செய்ய சொல்லி புஷ் பண்ணலாம்ல” என்றவனிடம், “அடப்போட… நான் சொல்லி கேட்பதா இருந்தா, நீ கைக்குழந்தையா இருக்கறப்பவே கேட்டிருக்க மாட்டான்.

அவனுக்கு என்ன மனசுல ஓடுதோ. அந்த பொண்ணு கல்பனா எல்லாம் உயிரோட இருந்திருக்கலாம்.” என்று அங்கலாய்த்தார்.

 

தந்தையிடம் பேச எட்டி பார்த்தான் பிரசன்னா. அவரது அறையில் போனில் ‘மாத்திரை மருந்து எடுத்துக்கோங்க. அதெல்லாம் கடவுள் துணைநிற்பார்.

எந்த கஷ்டம்னாலும் விலகி ஓடிடும். நம்பிக்கையை மட்டும் இழக்காதிங்க” என்று பிரதீப் பேச, பிரசன்னா எரிச்சலோடு, “ம்கூம்… கடவுள் எங்க துணை நிற்கறார்.. என்னை தான் தூண் மாதிரி நிற்க வச்சிட்டார். இதுல எந்த கஷ்டம்னாலும் விலகிடுமா? இங்க ஒருத்தன் மூனு மாசத்துக்கு மேல வளர்ப்பு பிள்ளைனு கஷ்டத்தை அனுபவிக்கறேன். யாருக்காவது கவலையிருக்கா? இதே பெத்த பையன் முடிவெடுத்தா ‘சரிடா தம்பி, கல்யாணத்தை பண்ணிக்கறேன்’னு வார்த்தை வரும்.

 

அடுத்தவங்களிடம் நம்பிக்கையை இழக்காதிங்கன்னு செல்லிட்டு இருக்கார். இங்க ஒருத்தன் இவரோட பதிலுக்காக நம்பிக்கையா காத்திருக்கேன். கண்ணுக்கு தெரியலை. அட்லீஸ்ட் கோபமா இருக்கேனே ஏன்னாவது கேட்கலாம்ல?

 

நான் பேசலை என்றதும் பின்னாடியே வந்தார். இப்ப என் கூட பேச முடியலைன்னாலும் ஈஸியா கடந்துடறார்.

 

இதுக்கு நான் அந்த கடல்லயே சமாதி அடைந்திருப்பேன்” என்று எட்டு கட்டையில் புலம்ப, “நான்.. நான் ஹாப் ஹவர் கழிச்சு பேசறேன். நீ போனை வை” என்று அணைத்தார் பிரதீப்.

 

பிரசன்னாவை பார்த்து “டேய்… என்ன தனியா புலம்பற? என்னிடம் பேசினா தான் எதுவும் விடை கிடைக்கும். ஆவுன்னா கடல்ல கிடைச்சேன். சமாதி அடைவேன்னு பேசற. பல்லை தட்டிடுவேன். இந்த பேச்சு பேசறதுக்கா உன்னை என் உயிராவிட நேசிக்கறேன். என்னடா பிராப்ளம் உனக்கு.” என்றார்.

 

பிரசன்னாவோ ”உங்க கல்யாணத்தை பத்தி பேசியாச்சு இன்னமும் பதில் தரலைன்னா என்ன அர்த்தம்? அப்ப உங்களுக்கு நானும் சுஹாசினியும் மேரேஜ் பண்ணலைன்னா கூட கவலையில்லை. இவங்க தான் முக்கியமா?” என்று அன்னை கல்பனா புகைப்படத்தை தட்டிவிட்டான்.

 

“என்னை எல்லாம் அப்ப ஆப்ஷன்ல வளர்த்திட்டிங்க.” என்று பிரசன்னா கலங்கவும், பிரதீப் நிதானமாக கீழே குனிந்து கல்பனா புகைப்படத்தை எடுத்து துடைத்தார். கண்ணாடி போட்ட புகைப்படம் உடைந்திருக்க, அதை எடுத்து தட்டிவிட்டு கண்ணாடி சில்லை, விடுத்து குப்பையில் பாதுகாப்பாய் போட்டு முடித்தார்.

 

பிரதீப் கைகளில் கல்பனா புகைப்படம் மீண்டும் இடம் பெற்றது. பிரதீப் எதுவும் பேசாமல் கடந்திட, பிரசன்னாவுக்கு அந்த அமைதியும் உலுக்கியது.

 

“சாரிப்பா.. சாரிப்பா… நான் அம்மா போட்டோவை தட்டி விட்டிருக்க கூடாது.” என்று அடுத்த நொடியே மண்டியிட்டு இருக்க, பிரசன்னா தலைகோதி, “சின்ன வயசுல உனக்கு காரியம் ஆகணும்னா கல்பனா போட்டோவுக்கு முன்ன வந்து தான் புலம்புவடா. அப்படி புலம்பினாலே நான் உன் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பேன்னு நீ சொல்வ. இப்ப இதே கல்பனாவால உனக்கு காரியம் ஆகலைன்னு போட்டோவை தட்டி விடற.” என்றதும் பிரசன்னா அமைதியானான்.

 

“போ… உங்கம்மா கல்பனா முன்ன நீ என்ன வேண்டினாலும் கிடைக்கும்.  இப்ப என்ன? நீ எனக்கு பார்த்த கௌசல்யாவை கல்யாணம்‌ செய்யணும். அவ்ளோ தானே. ஆல்ரெடி அந்த பொண்ணிடம் என் பதிலை சொல்லிட்டேன். நம்பலைன்னா கௌசல்யாவிடம் நீயே கேட்டு தெரிந்துக்கோ. கொஞ்ச நேரத்துக்கு முன்ன கௌசல்யாவிடம் தான் பேசினேன். லைட்டா பீவர்னு சொன்னாங்க ” என்று புகைப்படத்தை அதனிருப்பிடத்திலேயே வைத்து, குழம்பை தாளிக்க, சென்றார்.

 

என்ன தான் காஞ்சனா வந்து விட்டாலும் பிரசன்னாவுக்கு பிரதீப் கையால் சாப்பிட்டால் தான் திருப்தி.

 

தந்தை பதில் சொல்லிவிட்டதாக கூறியதும் ஹாசினிக்கு அழைத்தான்.

“ஹாசினி உங்க ஆன்ட்டி நம்பர் இருக்கா. எதுவும் சொன்னாங்களா?.” என்றான்.

 

“கௌசல்யா ஆன்ட்டி எதுவும் சொல்லலையே. ஏதோ பீவரா இருக்குனு அப்பாவிடம் பேசினாங்க. ஏன்… பிரசன்னா.” என்றதும் “அப்பா பதிலை சொல்லிட்டாராம்.” என்றவனுக்குள் தந்தை கொஞ்சம் நேரம் முன் கௌசல்யாவுக்கு பீவர் என்று தானே கூறினார் என்று ஆனந்தப்பட்டான்.

 

“அவங்க.. அவங்க நம்பர் வே…” என்று பிரசன்னா சுஹாசினியிடம் கேட்கும் சமயம், “இது கௌசல்யா நம்பர். நோட் பண்ணிக்கோ” என்று மகன் முன்னே நீட்டினார்.

 

பிரசன்னா ஆச்சரியப்பட்டு தந்தையை கட்டி அணைத்து, “அப்பா.” என்று உடைப்பெடுத்து அழவும், “டேய்… எனக்கு கல்பனாவும் நீயும் ஒன்னு தான்டா. இனி ஒரு வார்த்தை… சுனாமில கிடைச்சேன்னு சொல்லாத. பெத்த பையன் வளர்ப்பு பையன்னு சொல்லிசொல்லி, என்‌ மனசை உடைச்சிடாத.

உனக்காக நான் கல்யாணம் பண்ணவும் சம்மதிச்சிட்டேன். இதுக்கு மேல என்னடா பண்ணணும்.” என்று பிரதீப் கேட்டதும், தந்தையை கட்டிக்கொண்டு சிறுபிள்ளையாக தேம்பினான் பிரசன்னா. சுஹாசினியே அவர்கள் பேச்சை கேட்டு போனை துண்டித்தாள்.

 

“ஐ ம் சாரிப்பா. இனி அப்படி சொல்ல மாட்டேன்.” என்றுரைத்தான்.

 

நீண்ட நாட்களுக்கு பின் தந்தையும் மகனும், பழையபடி நண்பர்கள் போல பேசி சிரித்து மகிழ்ந்தார்கள்.

 

காஞ்சனாவுமே, கௌசல்யாவிடம் போனில் பேசி உடல்நலத்தை விசாரித்து கொண்டார்கள்.

 

கௌசல்யாவுக்கு ஜூரம் குறைய துவங்கியதும், பிரதீப் சார்பில், காஞ்சனா முறையாக, முரளியிடம் கௌசல்யாவிற்காக பேசி, நல்ல நாளில் குறித்த நேரத்தில், கோவிலில் தாலி கட்ட முடிவெடுத்தனர்.

 

பிரதீப் தன் அண்ணன் அண்ணி பிள்ளைகள், அக்கா மாமா அவர் குடும்பம் வருவாரா, தம்பி தம்பி மனைவியான அக்காவின் பெரிய மகள், என்று பட்டாளத்தை தேடி சென்று ‘தனக்கு கல்யாணம், விருப்பமிருந்த வாங்க. எனக்கு நீங்க வந்தாலே சந்தோஷப்படுவேன்” என்று கூறினான்.

 

ஆளாளுக்கு அப்பவும், சிரித்து பகடி பேசினார்கள்.

 

ஆனால் திருமணத்திற்கு பிரசன்னா, தந்தை பிரதீப்பை அலங்காரம் செய்து தயார்படுத்தி அழைத்துவர, மறுபுறம் சுஹாசினி கௌசல்யாவை மணக்கோலத்தில் அலங்கார தேவதையாக செய்து அழைத்து வந்தாள்.

 

அப்படியொன்றும் அத்திருமணம் மற்றவர்களுக்கு முகம் சுழிக்க வைக்கவில்லை. சொல்லப் போனால் பிரசன்னா நண்பர்கள் சேர்ந்ததும், ஏதோ இவர்கள் அண்ணனுக்கு கல்யாணம் என்பதாக தான் தோற்றம் இருந்தது.

 

கௌசல்யாவுமே அளவான தோற்றமிருக்க, ஜோடிப் பொருத்தம் அம்சமாக அமைந்தது.

 

பிரதீப் அக்கா அண்ணி என்று வந்தவர்கள் கூட, தங்களை விட பெரிய அழகியா என்று இறுமாப்பில் இருக்க, கண்கள் தெரிக்க, வீட்டிலே லட்சணமான வடிவம் கொண்ட கௌசல்யாவால் வாய் பிளந்தனர்.

 

கோவிலில் பிரதீப் அருகே கௌசல்யா நிற்க, கடவுள் சந்நிதியில், பொன் தாலியை அணிவித்து பிரதீப் கௌசல்யாவை துணைவியாக மிக எளிமையாக ஏற்றார்.

பிரசன்னா ரோஜா பூவை தூவி மகிழ்ந்தான்.

 

தாலி அணிவித்த கையோடு, “சந்தோஷமாடா?” என்று பையனிடம் கேட்க, “சித்திக்கு குங்கும பொட்டு வையுங்கப்பா.” என்று நீட்டினான்.

 

பிரதீப்பும் கௌசல்யாவின் நெற்றி வகிட்டில் வைத்துவிட்டு, தாலியிலும் வைத்தார்.

 

மெதுவாக கௌசல்யாவை ஏறிட, அவளுமே பிரதீப்பை கண்டு மெதுவாக புன்னகைத்தார். கல்பனாவை விரும்பிய இதயம் நிச்சயம் கௌசல்யாவை நேசிக்க ஆரம்பிக்கும். நிச்சயம் கல்பனா அதை விரும்புவாளென்று நம்பினார்.

 

முரளி-ராதா, விஜய், பிரசன்னாவின் நண்பர்கள் அகில் வருண், சலீம் என்று அங்கே சூழ்ந்திருந்தனர்.

பிரதீப்பின் தயவால் அவரது உடன்பிறப்புகள் சுற்றமும் சொந்தமும் வந்திருக்க, கையோடு வீட்டுக்கு அழைத்து வந்து அங்கே கல்யாண சாப்பாடு பரிமாறப்பட்டது.

 

புகைப்படங்கள் கோவிலிலும் வீட்டிலும் குடும்ப சகிதம் எடுத்தனர்.

 

முதலில் பெரிதாக பேசாமல் துண்டித்து கொள்ள நினைத்த பிரதீப் உடன்பிறப்புகள், அவனது கல்யாணத்திற்கு வாங்கி தந்த சேலைக்காவது அன்று முழுதும் கூட இருக்க முடிவுக்கட்டி, வீட்டை சுற்றி பார்வையிட்டனர்.

 

உண்மையில் பிரதீப் தன் சுயசம்பாத்தியத்தில் நன்றாக வாழ்வதை கண்டனர்.

 

அதிகப்படியாக இருக்கவும் விரும்பாமல் ஆளுக்கு சில பரிசை தந்துவிட்டு சென்றதும், பிரசன்னா நண்பர்களும் சாப்பிட்டு மாலை வரை வீட்டில் தங்கி அமர்க்களப்படுத்தினார்கள். பிரசன்னா நண்பர்கள் கூட, “டேய்… ஹீரோ.. நினைச்ச மாதிரியே அங்கிளுக்கு மேரேஜ் பண்ணி வச்சிட்ட. ஜித்தன்டா நீ.” என்று வருண் தட்டி தர, அகிலும் சலீமும் ஆமோதித்தனர்.

 

இதில் சுஹாசினி வீட்டிலும் கூடவேயிருந்தனர். முரளி எல்லாம் இயல்பாகவே பிரதீப்பிடம் பேசினார்.

வீட்டுக்கு புறப்படும் நேரம்,  கௌசல்யாவிடம் “உங்கப்பா உன்னோட கல்யாணத்துக்கு நிறைய ரூல்ஸ் போட்டு மாப்பிள்ளை பார்த்தார். இப்ப உயிரோட இருந்தா… நிச்சயம் பிரதீப்பை பார்த்தா நிறைவா உணருவார். அதுவும் என்னோட அறிமுகத்தால் பழக்கம் என்றதுல நான் சந்தோஷப்படறேன் மா.

 

எப்பவும் போல என்னை அண்ணானே கூப்பிடு. கூடிய சீக்கிரம் சுஹாசினியும் இந்த வீட்டு மருமகளா வருவா. அப்ப நீ தான் அவளை பார்த்துக்கணும்.” என்று கூறவும், சுஹாசினி பிரசன்னா இருவரும் பார்வை பரிமாற்றம் செய்துக் கொண்டனர்.

 

பிரசன்னாவோ ரோஜாப்பூவை சுஹாசினி முகத்தில் விட்டெறிந்து சேட்டை செய்து கண்சிமிட்டான்.

எப்படியும் இன்னும் இரண்டு மாசத்திற்கு காதலிக்க செய்வார்கள். பின்னர் பிரதீப் கௌசல்யாவின் தயவில் சிறப்பான முறையில் திருமணம் செய்து கொள்வதும் உறுதி தான்.

 

“டேய்… நீ என்ன உன் அப்பனோட உரசிட்டே இருக்க. போய் தூங்கு.” என்று காஞ்சனா அதட்ட, பிரசன்னாவோ தந்தையிடம் குட் நைட் சொல்ல வந்தான்.

 

“அப்பா… என்னப்பா… நெர்வஸா இருக்க?” என்று சிரித்தான்.‌

 

“உனக்கு சிரிப்பா இருக்குல்ல..‌ என்னை ஒருத்தியோட சிக்கவச்சிட்ட. எனக்கு கை உதறுதுடா” என்று கௌசல்யாவை தன் அன்னையிடம் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தார் பிரதீப்.

 

பிரசன்னாவோ, “ஏதாவது அட்வைஸ் வேண்டுமா அப்பா.” என்று நண்பனை போல கேலி செய்ய, “படவா… கிண்டலா… உதைக்க போறேன் பாரு.

 

போய்… ஹாசினியோட ரொம்ப நேரம் மொக்கை போடாம தூங்கப் பாருடா.

 

உன் நம்பரை அவளுக்கும், அவ நம்பரை உனக்கும் எப்படி வந்ததுனு யோசி. சும்மாவா கிடைச்சது? உன்‌ நம்பருக்கு நான் தான் சுஹாசினி மூலமா போன் போட்டு உன்னிடம் பேசி என்‌ போன் உன்கிட்ட இருக்கானு கேட்டேன் நினைவிருக்கா?  ஏன்டா.. என் போன் இன்டர்வெலுக்கு முன்ன உன் பேக்கெட்ல சீப்பை எடுக்கற மாதிரி என் போனை வச்சதே நான்டா. எனக்கு அட்வைஸா… உங்கப்பாவுக்கு ஆரம்பம் தான் சறுக்கும். அடுத்து எல்லாம் பக்காவா பிளான் பண்ணுவேன். இல்லைன்னா உங்கம்மா என்னை விரும்பியிருப்பாளா?” என்றார்.‌

 

பிரசன்னாவும் “அப்பா.. கேடிப்பா நீ.. அப்பவே டவுட் வந்துச்சு. உங்க போனை நான் எப்ப பேண்ட்ல வச்சேன்னு.

பட் அப்பா… எங்கம்மா கல்பனா விரும்பியது அப்ப. இப்ப கௌசல்யா சித்தியை கல்யாணம் பண்ணிருக்கிங்க. சித்தியை லவ் பண்ணுங்க. அவங்களிடம் என்கிட்ட கல்பனா அம்மாவை பத்தி மொக்கை போடற மாதிரி  ரம்பம் போடதிங்க. அப்பறம் குட்டி தம்பி இல்லை இல்லை… தங்கை வேண்டும் சரியா?!” என்றதும், “சரிங்க சார். நீங்க போங்க” என்று சிரித்தபடி வழியனுப்பினார்.

 

பிரசன்னாவும் சுஹாசினியோடு போனில் கடலை வறுக்க அவனது அறைக்கு நழுவினான்.‌

 

இங்கே பிரதீப் மட்டும், அவரது அறையில் பால்கனியில் தனது பதட்டத்தை  மறைக்க சிகரெட்டை ஊதிக்கொண்டிருந்தார்.

 

கதவு திறக்கும் சப்தம் கேட்கவும் அதை தொடர்ந்து கௌசல்யா இரும்பவும் கையிலிருந்த சிகரெட்டை வேகமாய் அணைத்தார்.

 

“நான் பிரசன்னா தான் உங்களோட வந்து ஸ்மோக் பண்ணறதா நினைச்சேன். அறைக்கு வந்தா நீங்க. இப்படியிருந்தா பையன் எப்படி சொல்பேச்சை கேட்பாரு.” என்று பாலை நீட்டினாள்.

 

“ஆமா… இல்லைன்னாலும் கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான்.” என்ற பிரதீப்போ பாலை வாங்கி “அவனுக்கு இந்த மாதிரி பழக்கமெல்லாம் இல்லை. கண்டிப்பா வளர்த்திருக்கேன். நான் தான்.. லவ் பெயிலியர்ல ஆரம்பிச்ச பழக்கம். விடமுடியலை.” என்று கௌசல்யாவை பார்வையிட்டார்.‌

 

பாலை பார்வைமிட்டவாறு “என்ன பண்ணணும்?” என்று கேட்க கௌசல்யாவோ, “இரண்டு பேருக்கும்னு காஞ்சனா அத்தை கொடுத்துவிட்டாங்க.” என்று தோளைக்குலுக்கி கூறினாள்.

 

பிரதீப்புமே உண்மையை உரைக்கும் விதமாக “ஆக்சுவலி லைட்டா… நெர்வஸா இருக்கு.” என்றவர் அவளது கால் கட்டை விரல் தரையில் அழுத்த பதிந்திருக்க, “உனக்கும் தானே?” என்று கேட்க, வெட்கத்துடன் ஆமென்றாள்.

 

அவளது தலையாட்டலில் ஜிமிக்கி கம்மல் பிரதீப்பை நெருங்கி வரக்கூறி அழைப்பதாக தோன்றியது. இத்தனை நாள் இவரும் கௌசல்யாவிடம் மனம் விட்டு பேசியிருக்க அதனால் தைரகயமாகவே மெதுவாக விளக்கை அணைத்து நெருங்கியிருந்தார்.

 

கௌசல்யா செவிமடலில், “ஆர் யூ ஓகே கௌசி” என்று இதமாய் கேட்க நிழலில் ஆமோதிப்பாய் ஓகே என்ற விதத்தில் தலையசைப்பதை கண்டதும் கூடுதலாக நெருக்கத்தை கூட்டினார்.

 

கல்பனாவை விரும்பிய பிரதீப் இதயம், இனி கௌசல்யாவையும் விரும்பும். கௌசல்யா தான் பிரதீப்பின் செயலில் ஏற்கனவே காதலில் விழுந்து கரம் பற்றிவிட்டாரே.

 

மேஜையில் இருக்கும் பசும்பாலோடு, இனி மெல்லமெல்ல திருக்குறளின் மூன்றாம் பாலை பருகி, இல்லறம் நல்லறமா

க பிரதீப் கௌசல்யா ஜோடியும் கரை தந்த கடலாக இல்லற சமுத்திரத்தில் ஒன்றாக இணைவார்கள்.

 

~சுபம்.

~பிரவீணா தங்கராஜ்.

 

யாராவது வாசித்தா உங்க கருத்தை விமர்சனம் மூலம் தெரிவிக்கலாம். மாலைமதியில் வெளியான நாவல். சுனாமி பத்தி பேசிட்டு இருந்தப்ப, வருஷத்தை கணக்கிட்டு இது போன்ற கதைக்கருவை தர எண்ணி எழுதினேன். சின்ன நாவலாக இருந்தாலும் பிரதீப் பிரசன்னா அப்பா பையன் கதைக்கருவாக தந்துவிட்டேன்.

அம்மா மகளுக்கு அபியும் நானும் மாதிரி அப்பா பையன் கதையாக அமைத்துக் கொண்டேன்.

வேற என்ன சொல்ல தெரியலை. பழைய வாசகருக்கு என் எழுத்தும் காதல் கதையும் தெரியும். நிறைய புது வாசகருக்கு என் கதை பிடித்திருந்தா மகிழ்ச்சி அடைவேன்.

இதுவரை 100 முடித்திருக்கேன். பெரிய கதை நிறைய அத்தியாயமும் எழுதியிருக்கேன்.

 

 

 

 

 

 

4 thoughts on “கரை தந்த கடலே-14 (முடிவுற்றது)”

  1. செம…. எப்போதும் போல கதை கரு எளிமையான ஆழமானது … கதையின் நகர்வு அருமை …..

  2. Fantastic narration sis. Really father and son bonding super sis. Extraordinary father Pradeep. Very gentleman. Now he will begin a good life with kousi. Excellent narration sis. Another diamond in ur crown. Sis.keep rocking sis.

  3. Wow amazing ending sis 👍👌😍 semma atlast pradeep marriage mudinjidhu so happy for them😊 eppdi oru appa paiyan super combination pa really enjoyed this story sis 😍 ennum neraiya stories podunga sis vaazthukkal 💗💖😘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!