அத்தியாயம-2
பிரசன்னா அதிகம் அடம்பிடிக்கும் குழந்தை கிடையாது. ஆனால் அவன் யூ.கே.ஜி படிக்கும் பொழுது ஆண்டுவிழா அன்று அனைத்து குழந்தைகளும் அப்பா அம்மா என்று அழைத்து வந்திருந்தனர்.
பிரசன்னா அருகே இருக்கும் குழந்தைகள் எல்லாம் அம்மா மடியில், அம்மாவின் கைவளைவில் இருந்ததை பார்த்ததும் ஏக்கம் கூடி, பிரதீப்பிடம் “எனக்கு அம்மா வேண்டும்” என்று அடம பிடிக்க ஆரம்பித்தான்.
முதலில் ‘அம்மாவை வாங்க முடியாது’ என்று கூற அழுகையோடு, சாப்பிடாமல் அடம் பிடித்து தேம்புவான்.
பிறகு ‘அம்மாவா சரி நாளைக்கு வாங்கலாம்’ என்று பிள்ளையார் கதை போல பேசி ஏமாற்றுவார்.
ஒரு கட்டத்தில் அம்மா வேண்டும் என்று ஓவராக கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, இரண்டு நாள் ஜூரம் வந்து காய்ச்சல் கண்டு பிரசன்னா வீடு திரும்பியவன் பிறகு அம்மா வேண்டும் என்பதை கூட மறந்துவிட்டான்.
அதற்கு பின் விவரம் அறிந்த காலத்திலும் பிரசன்னாவிற்கு அம்மா இல்லாத ஏக்கம் உண்டு.
‘அம்மா எப்படிப்பா இறந்தாங்க?’
‘அம்மா பார்க்க எப்படி இருப்பாங்க?’
‘என்னை மாதிரி இருப்பாங்க தானே’ என்று கேட்க, நிதானமாய் பதில் சொல்வார். அம்மா அழகா உன்னை மாதிரி தான் இருப்பா” என்று கூறியவர் ‘கல்பனா’ புகைப்படத்தை காட்டினார்.
கண்களில் கண்ணீர் துளியை கண்டதும் விவரம் அறிந்தப்பின் தந்தையை கண்ணீர் விட வைக்க கூடாதென்று அக்கேள்வியையே தவிர்த்தான்.
இருவரின் வாழ்வும் ஒரு வீட்டில் இரண்டு நண்பர்கள் உலாத்துவது போல தான் இருப்பார்கள். அப்பா மகன் போல என்றைக்கும் பிரதீப் நடத்தமாட்டார்.
இன்று பிரசன்னா எதிரே தந்தையை சில பெண்கள் பார்வையால் விழுங்கி செல்ல, தந்தைக்கு பெண் பார்த்தால் என்ன? என்ற விபரீத எண்ணத்தை எடுத்துரைத்தான்.
அடிக்கடி தன்னை இப்படி சீண்டுவது போல தான் பிரதீப் விளையாட்டாய் எடுத்துக் கொண்டார்.
பிரதீப் அதனால் மகனுக்கு பெண் பார்க்க தரகரிடம் கூற, அவரிடமே ‘எங்கப்பாவுக்கு ஒரு பொண்ணை பாருங்க சார்’ என்று கத்தையாக பணத்தை எடுத்து கையில் திணித்தான் பிரசன்னா.
தரகர் பாலுவோ ‘அப்பா மகனுக்கு பொண்ணு பார்க்க சொல்லறார். மகன் அப்பனுக்கு பொண்ணு பார்க்க சொல்லறார்.’ இப்ப என்ன செய்ய? என்று பொத்தம் பொதுவாய் ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்ட வீட்டுக்கு வந்துவிட்டார்.
பிரதீப் புகைப்படத்தை உற்று பார்த்து, “பொண்ணு நல்லா இருக்கா. அவங்களுக்கு சம்மதம்னா எப்ப பொண்ணு பார்க்க வரலாம்னு கேளுங்க சார்” என்று ஆசையாக கேட்டார்.
நான் போய் திவாகரிடம் விஷயத்தை காதுல போட்டுட்டு வர்றேன். பொண்ணு பார்க்க போனா அவனை கூட வரச்சொல்லணும்” என்று நகர்ந்தார்.
தரகர் பாலுவை இடித்தபடி, “அங்கிள்… அப்பாவுக்காக பார்க்க போற பொண்ணு தானே?” என்று கேட்க பாலுவோ, “தம்பி… பொண்ணு அவ்ளோ தான். நீ கல்யாணம் பண்ணிக்க பார்க்கறியோ இல்லை, உன் அப்பாவுக்கு பார்க்கறியோ அது உங்க இஷ்டம்.
பொண்ணு வீட்ல நல்ல வரன் இருந்தா சொல்ல சொன்னாங்க. அவங்களிடம் அப்பா மகன் இருக்கற குடும்பம் இருக்குனு மட்டும் சொல்லிட்டேன். எதுனாலும் நீங்க பார்த்துக்கோங்க. சம்பந்தம் முடிஞ்சா என் புரோக்கர் காசை மட்டும் வெட்டுங்க” என்று கூறவும் பணத்தை எண்ணி கையில் திணித்தான்.
“வர்ற வெள்ளி பொண்ணு பார்க்க போறோம்னு திவாகரிடம் சொல்லிட்டேன்” என்று பிரதீப் வந்தார்.
“அப்ப நான் வர்றேங்க.” என்று நகர்ந்தார் பாலு.
பிரசன்னா தன் நண்பர்களிடம் பெண் பார்க்க செல்வதை பகிர்ந்தான்.
ஆளாளுக்கு “நாங்க வரமாட்டோம்டா. நீ பண்ணப்போற விஷயம் வெரி டேஞ்சரஸ் பிரசன்னா. உனக்கு பொண்ணு பார்க்க போறதா போய், பிரதீப் அங்கிளை மாப்பிள்ளை பையன்னு நிறுத்தினா அந்த இடமே கலவரமாகிடும்.
இந்த கலவரத்தை எங்கள வச்சிட்டு பண்ணாதடா. பிறகு அங்கிள் எங்களை திட்டுவார்.” என்று அஞ்சினார்கள்.
“ஒன்னும் வரத் தேவையில்லை. நானே போய் தனியா பார்த்துப்பேன்” என்று பிரசன்னா கூறிவிட, ஏதோ பூகம்பம் நிகழப்போவதை அறிந்தவர்களாக மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டனர்.
இரண்டு நாளில் பெண் பார்க்க, மூன்று ஆண்கள் கிளம்பினார்கள்.
பிரதீப், பிரசன்னா, திவாகர் என்று புறப்படவும், பிரதீப்போ, “திவாகர் தங்கச்சியை அழைச்சிட்டு வந்திருக்கலாம். என்னவோ ஆம்பளைங்க மட்டும் போறதா தெரியுதுல” என்று வருத்தமாய் கேட்டார்.
“நானும் நினைச்சேன் பிரதீப். அவளுக்கு இப்ப தானே கர்ப்பபையை நீக்கியது. அதனால அலைச்சல் வேண்டாம்னு வற்புறுத்தாம விட்டுட்டேன்.” என்றார் திவாகர்.
பிரதீப்போ “எப்பவும் இவனோட இவன் பிரெண்ட்ஸ் ஒட்டுண்ணி மாதிரி திரிவானுங்க. என்னனு தெரியலை சொல்லி வச்ச மாதிரி கோரசா வேலையிருக்கு அங்கிள் ஊருக்கு போகணும். அதுயிதுனு கழண்டுக்கிட்டாங்க.” என்றார்.
“இப்ப என்ன நாம மட்டும் போனா பொண்ணு தரமாட்டாங்களா?” என்றான் பிரசன்னா.
“பொண்ணு பார்க்க நீ மட்டும் கூட போகலாம்.” என்று பிரதீப் கேலியோடு மகன் பைக்கில் வந்தார்.
பிரசன்னாவோ திகிலோடு தான் வண்டியை இயக்கினான். ‘பொண்ணு வீட்டு ஆட்களை தவிர, சொந்தபந்தம்னு யாரும் இருக்க வேண்டாம். நாம பேசிட்டு பிறகு நிச்சயத்தை கூட கிராண்டா வைப்போம்’ என்று தரகரிடம் சொல்ல அதை அவரும் கூறியிருந்தார்.
அதனால் பொண்ணு வீட்டில் எப்பொழுதும் இருக்கும் நபர் மட்டும் பார்த்து பேசி தான் எடுக்கப்படும் முடிவுக்கு சம்மதம் கேட்க பிரசன்னா மனதில் பெரிய திட்டத்தோடு இருக்க, பிரதீப்போ மகனது திட்டம் அறியாமல் மருமகளை காணும் எண்ணத்துடன் தான் வந்தார்.
லொகேஷன் சொல்லப்பட்ட இடத்திற்கு வந்ததும், தரகர் பாலு கையை காட்ட, பிரசன்னா வண்டியை நிறுத்த, பிரதீப் இறங்கி பாலு பக்கம் நடந்து வந்தார்.
இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது பிரதீப் களைந்திருந்த முடியை கையால் சரிப்படுத்தினார்.
தரகர் பாலுவோ, ‘மகன் அப்பனுக்கு பொண்ணு பார்க்கறதுல தப்பேயில்லை. ஆளு காலேஜ் படிக்கற பையனுக்கு அப்பன்னா நம்பவே மாட்டாங்க. இந்தாளே காலேஜ் முடிச்சவர் போல தான் இருக்கறார்.’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
இளமை மாறாத மார்க்கண்டனேயனாக இருக்கலாம். அதற்காக பொண்ணு கேட்கலாமா? இந்த பொண்ணு பார்க்கற இடத்துல சண்டை ஆகலாம். எல்லாம் இவனால என்று பிரசன்னாவை ஏறிட்டார்.
அவனும் பிரதீப்பை போலவே காற்றில் களைந்த சிகையை தன் கைகளால் அடக்கி சரிப்படுத்தி கலைத்து விட்டான்.
தரகர் பாலு வாய் பிளந்து நின்றார். அவரை அறியாமல், “அப்பா பையன்னு சொல்ல மாட்டாங்க. அண்ணன் தம்பினு சொல்லறாப்ல தான் இருக்கிங்க.” என்று சிரித்து அழைத்தார்.
தரகரின் வேலையாக, “பொண்ணு வீட்ல பெரிய வசதியெல்லாம் இல்லை சார் நடுத்தர குடும்பம். ஏற்கனவே ஒரு பொண்ணை பெரிய குடும்பத்துல கட்டி கொடுத்துட்டாங்க. அங்க மாமியார் நாத்தனார்னு கொழுந்தனார்னு ஆளாளுக்கு பிக்கல், பிடுங்கல், சண்டை சச்சரவுனு கிடக்கு. அதனால தான் நம்ம குடும்பத்துல மாமியார் கூடப்பிறந்தவங்கன்னு யாரும் இல்லைன்னு இரண்டாவது பொண்ணை கொடுக்க யோசித்தாங்கன்னு கூட சொல்லலாம்.
அடுத்து தம்பி ஒருத்தன் இருக்கான். காலேஜ் பஸ்ட் இயர் படிக்கறான்.” என்று கூறவும், பிரதீப் பிரசன்னா கேட்டுக் கொண்டார்கள்.
“திவாகர் ஏதாவதுன்னா நீ தான்டா ஆரம்பிச்சு பேசணும். எனக்கு ஸ்டார்டிங்டிரபிள் ஆகும் தெரியும்ல” என்று பிரதீப் கூற, திவாகர் ஒப்புதலோடு ”நீ சொல்லணுமாடா?” என்றார்.
பாலுவோ “அந்த வீடு தான். கேட்ல மஞ்சபெயிண்ட் அடிச்சிருக்கு பாருங்க” என்று சுட்டிக்காட்ட, நால்வரும் அவ்வீட்டை நோக்கி நடந்தனர்.
வாசலில் எட்டி பார்த்த நடுத்தர வயது கொண்டவரோ, “ராதா.. மாப்பிள்ளை வீட்ல வந்துட்டாங்க. பொண்ணை அலங்கரிச்சிட்டியா?” என்று மனைவியிடம் கேட்டார் முரளி.
“வாங்க வாங்க” என்று வணக்கம் வைத்தவர் தரகர் பாலுவை தவிர்த்து திவாகர், பிரதீப், பிரசன்னாவை பார்வையிட்டார்.
திவாகர் தந்தை ஸ்தானம் என்று எண்ணியவர், பிரதீப் பிரசன்னா இருவரில் ஒருவர் மாப்பிள்ளை என்றும் மற்றொருவர் தோழராக இருக்க வேண்டுமென யூகித்து கொண்டார்.
“வணக்கம்ங்க” என்று திவாகர் கூறிவிட வந்த நால்வரும் நமஸ்கரித்து நின்ற நிலையில் “உட்காருங்க உட்காருங்க.” என்று கூறிட, ராதாவும் குடிக்க தண்ணீரை நீட்டினார். பொத்தம் பொதுவாய், வரவேற்றார்.
“இவ என் மனைவி ராதா.” என்று அறிமுகப்படுத்தும் நேரம், “அப்பா… ஜாங்கிரிக்கு பதிலா அக்காவுக்கு பிடிச்ச ஜிலேபியே கிடைச்சிடுச்சு” என்று வந்தவனை காட்டி, “இது என் மூனாவது பையன் விஜய் காலேஜ் பஸ்ட் இயர் படிக்கறான்.” என்று அறிமுகப்படுத்தினார் முரளி. விஜய் வந்தவர்களை கண்டு வணக்கம் வைத்து, கண்கள் ஆசையாக பிரதீப் பிரசன்னாவை ஏறிட்டான்.
பிரதீப் திவாகர் ஒன்று போல புன்னகைத்து வைத்தனர். பிரசன்னா மட்டும் அப்பாடி இங்க பொண்ணு பொண்ணோட அப்பா அம்மா தம்பி மட்டும் தான் இருக்காங்க போல. மச் பெட்டர்’ என்று நிதானமானான்.
விஜயோ ‘யார் அக்காவை பார்க்க வந்தவர்னு தெரியலையே. ஆனா இரண்டு பேருமே நல்லா தான் இருக்காங்க.’ என்ற மனவோட்டத்திற்கு சென்று வந்தான்.
ராதாவோ ஸ்வீட் பெட்டியை வாங்கிக் கொண்டு கிச்சன் சென்றார்.
“பெரிய பொண்ணு சுபாவை சொந்த ஊர்ல கட்டிக் கொடுத்திருக்கு. அதனால அவ வரமுடியலை. அதோட பாலு வேற சொந்தபந்தத்தை எல்லாம் கூட்ட வேண்டாம்னு சொன்னார். இல்லைன்னா பெரிய பட்டாளமே வந்து நிற்கும்” என்று கூற, “அச்சோ” என்று பிரசன்னா பதற, பிரதீப்போ “அட முதல்ல பொண்ணு பார்த்து நாம பேசிட்ட பிறகு எல்லாருக்கும் சொல்வது தான் சரியா வரும்” என்றார்.
அதற்குள் ராதா தட்டில் இனிப்பும் காரமும் கொண்டு வந்தார்.
“காபி கொண்டு வரலையா ராதா” என்று முரளி கேட்க, “சுஹாசினியிடம் கொடுத்து விடறேங்க” என்றார்.
“ஆங்..ஆங்..” என்று மனைவியை அனுப்பிவிட்டு, “சாப்பிடுங்க சார்” என்று உபசரித்தார்.
திவாகரோ “எடுத்துக்கறோம் சார். பிரதீப்” என்று தட்டை நண்பன் பக்கம் ஒன்றை தள்ள, பிரதீப்போ மற்றொரு தட்டை பிரசன்னாவிடம் கொடுத்துவிட்டு அவரும் எடுத்தார்.
ராதாவும் முரளியும் ஒன்று போல பிரதீப்பை கண்டு ‘மாப்பிள்ளை என்று இணங்கண்டு கொண்டதாக’ புன்னகையை உதிர்த்தனர்.
“சுஹாசினியை அழைச்சிட்டு வா” என்றவர் விஜய் நீயும் உட்காரு” என்றார் முரளி.
“சொந்த வீடா சார்” என்று திவாகர் கேட்க, “இல்லை சார் வாடகை வீடு தான்.” என்றார் முரளி.
அறைக்குள் “மாப்பிள்ளை யாருனு சரியா தெரியலை. ஆனா மாப்பிள்ளையும் அவர் பிரெண்டும் இருக்காங்க. காபி கொடுக்கறப்ப மாப்பிள்ளை யாருனு தெரிந்துடும். மெதுவா நடந்து போய் கொடுக்கணும்” என்று ராதா சுஹாசினியிடம் தெரிவிக்க தலையாட்டி காபி தட்டை ஏந்தி, கொலுசு கால்கள் மெல்லிசையாக ஒலிக்க, சாஹாசினி தரைக்கு வலிக்காமல் நடந்து வந்தாள்.
பிரசன்னா கருவிழிகள் தரையில் அலப்புறுதலிட்டு படபடப்பாக மாற, பிரதீப்போ மருமகளென்ற ஆர்வத்தோடு புன்னகை முகமாக சுஹாசினியை கண்டார்.
‘இது தரகர் அங்கிள், இது மாப்பிள்ளை அப்பாவா இருக்கும் வெள்ளை முடி தாடிலாம் வளர்த்து வயசுல பெரியவரா தெரியறார். இவர் தான் என்னையே பார்க்கறார். அந்தாள் தரையை பார்த்திட்டுயிருக்கார். சோ… இவர் தான் மாப்பிள்ளையா இருக்கும்’ என்று சுஹாசினியும் தவறாய் புரிந்துக் கொண்டாள்.
“பிரசன்னா.. காபி எடுத்துக்கோ” என்று மகனின் தொடையில் கையை வைக்க, விழியை உயர்த்தினான். பிரதீப்பை கண்டு தலைகுணிந்த சுஹாசினியோ பிரசன்னாவை காணாமல் தட்டை ஏந்தி நின்றிட, அவனும் காபியை எடுத்துக் கொண்டான்.
தரகரோ ‘பிரசன்னா-பிரதீப் இருவரில் மாப்பிள்ளை யாருனு சொல்லாம பொண்ணு காபி கொடுக்கற அளவுக்கு வந்துட்டிங்க. இந்த பிரசன்னா எப்ப உண்மைய சொல்வான்?’ என்று குழம்பினார்.
-தொடரும்.

Wow super sema twist. Very eager to know who is groom? Very intresting sis.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 edhu enna velaiyattu appa ku mattum therinjidhu evan pandradhu enna nadakumo parpom 🧐🤔