Skip to content

கரை தந்த கடலே-3

53 / 100 SEO Score

அத்தியாயம்-3

 

பிரதீப் பிரசன்னாவிடம் “பொண்ணு ஓகே தானே” என்று கேட்க, அமைதியானான்.

 

அது ஆமோதிப்பு என்ற ரீதியில் எடுத்துக்கொண்டார் பிரதீப்.

பிரசன்னாவோ ‘அப்பாவுக்கு பொண்ணு பார்க்க ஆசைப்பட்டேன். தரகரிடம் கூட சொல்லிட்டேன். ஆனா இங்க இந்த இடத்துல எப்படி சொல்ல?’ என்று விழித்தான்.

 

அதற்குள் பிரதீப் திவாகரிடம் அவனுக்கு பிடிச்சிருக்குடா. மத்தது பேசிடுவோம்” என்றார்.

 

ராதாவோ ‘என்னது அப்பாவை டா’ போட்டு கூப்பிடறார்’ என்று முழிக்க, திவாகரோ “எங்களுக்கு பொண்ணை பிடிச்சிருக்குங்க. உங்களுக்கு பையனை பிடிச்சிருந்தா, மேற்படி பேசுவோம்.” என்றார்.

 

ராதா-முரளி இருவரும் மகள் சுஹாசினியை கண்டு, “போய் கேட்டுட்டு வா” என்று கண்சாடை காட்டினார்.

 

இருவரும் தனியறை வரவும், “என்னடி பிடிச்சிருக்கா?” என்று கேட்டதும், சுஹாசினி தலையாட்டினாள்.

 

ராதா நெட்டி முறித்து வெளியே வந்து முரளி பார்வைக்கு இமை மூடி ஆமோதிக்க, பிரதீப் வாய் திறக்கும் முன், பிரசன்னா ஆவலாய் இருந்தான்.

 

“மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு. மேற்கொண்டு பேசலாம்” என்றதும் பிரதீப் வாயெல்லாம் மலர்ந்து “அப்பாடா… நல்லதுங்க… முதல்ல பார்க்கற பெண்ணே முடிவடையணும்னு கடவுளிடம் வேண்டிட்டே இருந்தேன்.” என்று பிரதீப் வாய்த்திறக்க, பிரசன்னாவோ தந்தை வேறெதும் வார்த்தை விடும் முன், எச்சரிக்கையாக “சார்.. மாப்பிள்ளைய உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே?” என்றான்.‌

 

முரளி ராதாவை பார்த்து பிரதீப்பை கண்டு பிடிச்சிருக்கு தம்பி” என்றார்.‌

 

பிரதீப் அப்பொழுதுதான் இவர்கள் தன்னை மாப்பிள்ளை என்று பார்ப்பதை உணர்ந்தார்.

 

எவ்வளவு பெரிய அபத்தம்.

 

“சார்… நீங்க யாரை மாப்பிள்ளைனு நினைச்சிங்க?” என்று பிரதீப் அதிர்வாய் கேட்க, முரளியோ “உ..உங்களை தான் தம்பி” என்றதும் பிரதீப் தலையிலடிக்க, பிரசன்னாவோ, “ப்பா… உங்களுக்கு பொண்ணு பார்க்கலாம்னு சொன்னேன். என்னவோ மறுத்து பேசினிங்க. இப்ப பாருங்க. பொண்ணு கொடுக்கற அவருக்கே உங்களை மாப்பிள்ளையா பார்த்ததில் தவறில்லை. சோ… நீங்க இந்த பொண்ணை கல்யாணம் பண்ணறிங்க.. டாட்” என்றான்.

 

“என்னடா… விளையாடறியா? திவாகர் இவன் என்ன பேசறான் தெரியுதா? சார் நீங்க தப்பா நினைச்சிட்டிங்க. நீங்க, உங்க மனைவி, பையன், பொண்ணுனு அறிமுகப்படுத்தினப்பவே நானும் அறிமுகப்படுத்தியிருக்கணும்.

 

இவர் தரகர், இது என் பிரெண்ட் திவாகர், இவன் தான் பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை, நான் மாப்பிள்ளையோட அப்பா.” என்றதும் சுஹாசினி உள்ளே பேசியதை கேட்டவள் திடுக்கிட்டாள்.

அவள் மட்டுமா? வெளியே இருந்த அவளது குடும்பமும் தான்.

 

“என்னங்க சொல்லறிங்க.” என்று குழம்ப, “சார்… அவருக்கு தான் பொண்ணு பார்க்க, நான் வந்தேன்” என்றான் பிரசன்னா.

 

பிரதீப்போ பொறுமை கடைப்பிடித்து, ”பிரசன்னா விளையாடற நேரமில்லை.” என்றார்.

 

பிரசன்னாவோ “நான் விளையாடலைப்பா. உங்களுக்கு தான் பொண்ணு பார்க்க தரகரிடம் சொன்னேன்.” என்றதும் தரகரோ “தம்பி இங்க வந்தும் இப்படியே பேசும்னு நான் நினைக்கலைங்க.” என்றார்.

 

பிரதீப் திவாகரிடம் “என்ன பண்ணி வச்சியிருக்கான் பாருடா.” என்று கூற, “என்ன பிரசன்னா இப்படி பண்ணற. அவன் உன்னை நல்லபடியா கல்யாணம் பண்ணி குடும்பமா பார்க்க ஆசைப்படறான். நீ என்னடான்னா வேலையில்லாத வேலையை பார்த்துட்டுயிருக்க” என்று வருந்தினார்.

 

“அங்கிள்… அவருக்கு இருக்கற அதே பாசம் தான் அங்கிள் எனக்கும். பார்க்க ஹான்ட்சமா இருக்கறார். இதோ காபி கொடுத்த பொண்ணே மாப்பிள்ளை இவர் தான்னு நினைச்சிட்டா. அப்படியிருக்க கல்யாணம் செய்து வாழ்ந்தா என்ன?” என்று பேசவும், பிரதீப் யாரோ ஒருவர் வீட்டில் வாதம் செய்ய பிடிக்காமல் நின்றார்.

 

விஜயோ “இங்க என்ன நடக்கு? மாத்தி மாத்தி பேசறிங்க?” என்றான்.

 

முரளியும் அதை தான் கேட்க வந்தார்.

 

“சார்..‌ என் பையன் பிறந்தப்பவே நான் கல்யாணம் பண்ணற ஐடியாவை கைவிட்டுட்டேன். இவனை நல்லபடியா வளர்த்து ஆளாக்கினேன். கொஞ்ச நாள் முன்ன பிறந்த நாள் வந்தப்ப, பிரெண்ட்ஸோட இருக்கும் போது, அப்பா உங்களுக்கு கல்யாணம் பண்ணிவைக்கணும்னு சொன்னான். கேலிக்கு சொன்னதா நினைச்சேன். ஆனா தரகரிடம் இங்க வர்ற வரை எனக்கு தான் உங்க பொண்ணை கட்டி வைக்க நினைச்சிருக்கான். ரொம்ப பெரிய தப்பு சார். இவனுக்கு அது புரியலை. நாங்க வர்றோம். எங்களை சபிச்சிடாதிங்க. உங்க பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையும். இந்த கிறுக்கன் தான் முதல் வரனையே தடுத்துக்கிட்டான்” என்று பேச, பிரசன்னாவோ “யார் கிறுக்கன். அப்பா… அவங்களுக்கு ஓகேன்னா அந்த பொண்ணை கல்யாணம் பண்ணுங்க” என்றான்.

 

“பிரசன்னா.. வாயை மூடு. அந்த பொண்ணு வயசென்ன? என் வயசென்ன? சார்… என்ன மன்னிச்சிடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டார்.

 

முரளிக்கும் ராதாவுக்கும் அதன் பின்னரே பிரதீப் தந்தை என்றும், மாப்பிள்ளை தோழனாக எண்ணிய பிரசன்னா தான் மாப்பிள்ளை என்றதும் ஆடிவிட்டார்கள்.

 

“என்ன விளையாட்டு தம்பி?” என்று பிரசன்னாவை பார்த்து கேட்டார் முரளி. பெண்ணை பெற்றவர் பதறாமல் இருக்க முடியுமா?!

 

“சார்… உங்களுக்கு எங்கப்பாவை பிடிச்சிருந்தா தாராளமா பொண்ணை கட்டிக் கொடுங்க.” என்றதும், பிரசன்னாவை பளீரென்ற அறைந்தார் பிரதீப்.

 

“அப்பா” என்று பிரசன்னா ஆச்சரியமாய் காண, திவாகரோ “டேய்.. பிரசன்னாவை அடிச்சிட்ட. அவனை பிறந்ததிலருந்து நீ அடிச்சதில்லைடா” என்றார்.

 

“அதான்டா தப்பு. எங்க என்ன பேசணுமென்ற அறிவில்லை.” என்றவர் எட்டி பார்த்த சுஹாசினியை கண்டு துடித்து விட்டார்.

 

“அம்மாடி இங்க வாடா” என்றதும் தந்தையை கண்டு மெதுவாக வந்தார்.

 

“எனக்கு 40 வயசு ஆகுதுடா.  இளநரை முடி எதுவும் வந்து தொலையலை. அதென்னவோ உடல்வாகு இப்படி அமைஞ்சிடுச்சு. என் தப்பு… எனக்கு நானா பேச தயக்கம். அதான் பிரெண்ட் திவாகரை வச்சி பேச வந்தேன்.

வந்ததும் வராததும் இவன் தான் மாப்பிள்ளைனு சொல்லிருக்கணும். இவன் இருக்கான்னே… சின்னதுலயிருந்தே நானும் பிரசன்னாவும் பிரெண்டா இப்படி தான் பேசிப்போம். அன்னிக்கு இவன் பிறந்த நாளில், இவனுக்கு கல்யாணம் பண்ணணும்னு சொல்ல, இவன் அன்னிக்கு எனக்கு பொண்ணு பார்க்கணும்னு பேசினான். ஏதோ விளையாடுறான்னு விட்டுட்டேன். ஆனா இவன் இங்க வந்து இப்படி அபத்தமா பேசுவான்னு தெரியாதுடா. பிரசன்னா எப்படி எனக்கு பையனோ… நீ எனக்கு பொண்ணு மாதிரிடா. இந்த அங்கிளை தப்பா எடுத்துக்காத.” என்றார். பிரதீப் இப்படி பேசினால் சுஹாசினி குடும்பம் இவரை திட்டமுடியுமா.? கல்லும் கரையும் அளவிற்கு இதமாக மனம் நோகாமல் பேசுகின்றாரே!

 

முரளியிடமும் ராதாவிடமும்,  “எனக்கு கஷ்டமாயிருக்கு சார். பெத்தவங்களா உங்களுக்கும் சங்கடமா இருக்கும். நம்ம பொண்ணை இரண்டாதாரமா கட்டிக்க ஒருத்தன் வந்து கேட்கறானேனு. இது என் தப்பில்லை சார். அவன் எனக்கு நல்லது செய்வதா புத்திக் கெட்டு பேசிட்டான். அவனை மன்னிச்சிடுங்க” என்று வணக்கம் வைத்தார்.

 

“திவாகர்.. போலாம்.” என்றவர் “என்ன பாலு சார் இப்படி பண்ணிட்டிங்க. ஒரு வார்த்தை காதுல போட்டு வைக்கலாம்ல?” என்று கேட்க, பிரசன்னா கன்னத்தை தாங்கி நின்றான்.

 

நால்வரும் வெளியேற, சுஹாசினியோ நடந்ததை ஜீரணிக்க இயலாது அமைதியாக உடைமாற்ற அறைக்கு சென்றாள்.

 

ராதா பதறியபடி, “சுஹாசினி கதவை ஏன்டி மூடற?” என்று கேட்க, “டிரஸ் மாத்தம்மா” என்றாள்.

 

ராதா முரளியிடம் “என்னங்க இப்படி ஆகிடுச்சு?” என்று வருந்தினார்.

 

“நல்லவேளை சொந்த பந்தத்திடம் சுஹாவை பொண்ணு பார்க்க வந்ததை சொல்லலை. ஏதோ யாரோ வந்துட்டு போனதா மத்தவங்க நினைப்பாங்க விட்டு தள்ளு. சுஹாவை கவனி. சுபா கேட்டா, முடிவாகாதது போல இருக்குன்னு சொல்லிடு.” என்று மட்டும் கூறிவிட்டு சோபாவில் சாய்ந்தார்.

விஜயும் சங்கடமாய் அக்கா வெளிவரும் வரை காத்திருந்தான்.

 

ஏதோ பெரிய புயல் கரையை கடந்த அமைதியுடன் அன்றைய நாளை கழித்திட முனைந்தனர் சுஹாசினி வீட்டு ஆட்கள்.

 

இங்கு புயல் கோரத்தாண்டவம் ஆடுவது போல பிரசன்னா நின்றான்.

 

“நான் என்ன தப்பு பண்ணினேன். அப்பா அடிச்சிட்டார்.

என்ன வாழ்க்கை வாழ்ந்துட்டார்? என்னை வளர்க்கறதுலயே காலம் முழுக்க செலவழிச்சிட்டார்.  அவருக்குன்னு ஒரு லைப் பாட்னரை நிறுத்த நினைச்சேன்… திவாகர் அங்கிள் தப்பா? சொல்லுங்க.” என்று தவிப்புடன் கேட்டான்.

 

“இவனோட பிரெண்ட்ஸ் எங்க போனாலும் கூப்பிடுங்க அங்கிள்னு லைன் கட்டி வருவானுங்க. இன்னிக்கு இவனுக்கு பொண்ணு பார்க்க போறோம் வர்றிங்களாடானு கேட்டப்ப, ஆள் ஆளுக்கு சப்பை காரணம் சொல்லி நழுவினப்பவே நான் உசாராகியிருக்கணும் திவா. இவன் என்னவோ முட்டாளா முடிவெடுக்க, அவனோட பிரெண்ட்ஸ் அவாய்ட் பண்ணிருக்காங்கன்னு புரிஞ்சிருக்கும்.

நான் ஒரு மடையன். பிரெண்ட்ஸா வந்தா பொண்ணு குழம்பும்னு நினைச்சி தவிர்ப்பதா விட்டுட்டேன். ஆனா கடைசில என்னை வச்சி குழப்பி விட பார்த்திருக்கான். என்ன கொழுப்பு பார்த்தியா இவனுக்கு. இவன் வயசுல எனக்கு ஒரு பொண்டாடிய வர ஒருத்தியை பார்த்திருக்கான்.

அசிங்கமா இல்லை….” என்றார் பிரதீப்.

 

பிரசன்னாவோ “எனக்கு அசிங்கமா இல்லை. நான் தப்பா யோசித்ததா எனக்கு பீலாகலை.

எங்கப்பா எனக்குன்னு பார்த்து பார்த்து செய்பவர். அவருக்கு ஒரு லைப் இருக்கு. அதை வாழ தெரியாம வாழ்ந்துட்டார். இப்பவாது அவர் வாழணும்னு நினைக்கறேன்.” என்றான்.

 

பிரதீப் பிரசன்னா மூச்சு பிடித்து ஆளுக்கு ஒன்று பேச திவாகர் இடையில் மாட்டியவராக இருந்தார்.

 

“திவா… பேசுடா.. அவனை பாரு.. இன்னமும் இதையே சரின்னு சொல்லறான். தப்புனு புரியவை” என்றார் பிரதீப்.

 

பிரசன்னாவோ ‘இதுல தப்பில்லை’ என்ற ரீதியில் நெஞ்சு விம்ம நின்றான்.

இருவரையும் பார்த்து பூரித்த திவாகரோ, “என்னனு சொல்லறதுடா. இத்தனை காலமா வளர்த்த பாசத்துல அவன் உனக்கு பொண்ணு பார்ப்பதை பார்த்தா கண்ணெல்லாம் கலங்குது.

சுனாமில கிடைச்ச குழந்தைக்காக, காதலிச்ச பொண்ணும் இறந்ததில், வேற யாரையும் கல்யாணம் செய்யாம தவிர்த்து, கைக்குழந்தையோட இவனை வளர்க்கறியேனு மனசுக்குள் பொறுமாத நாளேயில்லை.

ஆனா வளர்ந்து உனக்கொரு நல்லது பண்ணணும்னு யோசிக்கவும், பிரசன்னா மேல நீ காட்டின பாசமும், அவன் உன் மேல வச்ச பாசமும், அந்த கடலை விட பெருசுனு புரிய வச்சிடுச்சு.” என்று மெய்மறந்து இத்தனை கால உண்மையை போட்டு உடைத்தார் திவாகர்.

 

பிரதீப் அதிர்ச்சியடைந்து பிரசன்னா திவாகர் பேசியதை கவனிக்காமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு அவனை காண, பிரசன்னாவோ ‘சுனாமில கிடைச்ச குழந்தைக்காக’ என்ற வார்த்தையின் அர்த்தம் பொதிந்து, தந்தையிடம், “அ..அப்பா.. நான் சுனாமில கிடைச்ச குழந்தையா? நான் உங்க பையன் இல்லையா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டு நின்றான்.

 

திவாகரோ பேச்சின் சுவாரசியத்தில் உண்மை உடைத்த மடத்தனத்தை அறிந்து, நண்பனிடம், “சாரிடா… தெரியாம உண்மை வந்துடுச்சு” என்று மேலும் உண்மை விளம்பியாக உரைத்தார்.

 

பிரதீப்போ கண்ணீரோடு, ஆமென்றோ இல்லையென்றோ கூறாமல் தவிப்

புடன் நின்றார்.

 

பிரசன்னா தான் துவண்டவனாய் அந்த ஹாலில் முகம் பொத்தி அழத்துவங்கினான்.

 

-தொடரும்.

 

2 thoughts on “கரை தந்த கடலே-3”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 nenachen sis eppdi yedhavudhu unmai erukum nu😕 paavam unmaiyana paiyan ella nu adhirchila erukan enna nadaka pogudho parpom🤔🧐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!