Skip to content

கரை தந்த கடலே-6

51 / 100 SEO Score

அத்தியாயம்-6

தரகர் பாலுவை முன்னே வைத்தே, “எங்கப்பாவுக்கு 40 ஆகுது. பொண்ணுக்கு அதுக்கு ஏற்ற மாதிரி பாருங்க. நகை வசதி குடும்பம் எதுவும் தேவையில்லை. அப்பாவுக்கு ஒரு நல்ல லைப் பாட்னரா இருந்தா மட்டும் போதும்‌. அவருக்கு கல்யாணம் செய்தப் பிறகு நான் எனக்கு ஏத்த பொண்ணா பார்த்துக்கலாம்.” என்றான்.

தரகர் பாலு பிரதீப்பை காண, பிரதீப்போ செய்வதறியாது, ”பாருங்க சார்… எவன் எவன் அசிங்கமா காறி துப்பறானோ அதை அப்படியே இவனிடம் வந்து கொட்டுங்க” என்று கூறினார்.

பிரசன்னாவோ ”ப்பா” என்று சிணுங்க, “பின்ன என்னடா… காலேஜ் முடிச்ச வயசுல பையன் இருக்கறப்ப, அப்பனுக்கு கல்யாண ஆசையானு கேலி பேச மாட்டாங்க.” என்றார்.

பிரசன்னா காதில் வாங்கினால் தானே?! “அங்கிள் அவர் அப்படி தான் சொல்வார். நீங்க பொண்ணை பாருங்க.” என்றான்.

ஒரு வாரம் கூட கடந்திருக்காது… நாலைந்து பொண்ணு போட்டோ எடுத்து வந்து பாலு மேஜையை நிரப்பினார்.

“இந்த பொண்ணுக்கு ஆறு வயசுல குழந்தை இருக்கு. புருஷன் செத்துட்டான்.
இந்த பொண்ணு இப்ப தான் டிவோர்ஸ் வாங்கிச்சு. ஜீவனாம்சம் எல்லாம் வாங்கி செட்டில்டு. இன்னொரு கல்யாணம் பண்ண அவங்க அப்பா அம்மா ப்ரியப்படறாங்க.

இந்த பொண்ணுக்கு கொஞ்சம் தத்தி. படிப்பு இல்லை. கல்யாணம் ஆனதும் அதை சொல்லியே விட்டுட்டு ஓடிட்டான். பத்து வருஷமாகுது. இப்ப அவங்க அப்பா இந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ண ஆசைப்படறாங்க. ஆனா டிவோர்ஸ் கூட வாங்கலை. அதென்னவோ ஏழு வருஷம் இல்லாத ஆளு செத்துட்டான்னு முடிவு கட்டிட்டலாமாமே. அவங்களுக்கு அப்பறம் ஒரு துணை வேண்டும்ல.

இந்த பொண்ணுக்கும் இரண்டு குழந்தை இருக்கு. சமீபத்துல..” என்று அடுக்கியவரிடம், “அங்கிள்… எங்கப்பாவுக்கு ஏன் இரண்டா தாரமா இருக்க பொண்ணுங்களா காட்டறிங்க. அவருக்கு இதுக்கு முன்ன கல்யாணமே ஆகலை.” என்று எடுத்த பெண்கள் போட்டோவை கீழே வைத்தான்.

“தம்பி… அவருக்கு கல்யாணம் ஆகலை குழந்தை இல்லை. உங்களை சுனாமில கிடைச்ச குழந்தையா வளர்த்தார்னு இதெல்லாம் ஒவ்வொருத்தரிடம் விளக்க முடியாது.

நாற்பது வயசு ஆம்பளைக்கு கல்யாணம் என்றால் முப்பது முப்பத்தியாறு வயசுல இருக்கற பெண்கள் ஜாதகம் தான் கொடுக்க முடியும். பெரும்பாலும் கல்யாணமாகி டிவோர்ஸ் ஆனதாகவும், இல்லையா விதவையா தான் வரும்.
நீங்க எதிர்பார்க்குற அளவுக்கு சின்ன பொண்ணு எல்லாம் கிடைக்காது. அன்னிக்கு பார்த்த பொண்ணுக்கே உங்க வயசு. மாசக்கணக்கு தான் வித்தியாசம். அந்த வீட்ல என்னை எப்படி தாளிச்சிட்டாங்க தெரியுமா?

அப்பறமா பையனுக்கு தான் பொண்ணு பார்க்க வந்தது. அந்த பையனான்டா அப்படி நினைச்சி அவன் அப்பனுக்கு பார்த்து பேசுவான்னு அவருக்கே தெரியாதுனு சமாளிச்சு முடிக்கவும் போதும் போதும்னு ஆகிடுச்சு.

பார்க்க கண்ணுக்கு அழகா லட்சணமா, படிச்ச பொண்ணா, கல்யாணமாகாத பொண்ணுல்லாம் இவர் வயசுக்கு சம்மதிக்க மாட்டாங்க தம்பி. நடைமுறைனு ஒன்னு இருக்கு. யோசிங்க… உங்களை மாதிரி பையன் இருக்கறப்ப எவ இவரை கல்யாணம் பண்ண கன்னிப்பொண்ணா வரும். இப்படி தான் டிவோர்ஸ் ஆனதுங்களும், புருஷன் செத்த பொண்டாட்டியா இரண்டாதாரமா கிடைக்கும்.
சரின்னா சொல்லுங்க.. அதுக்கு ஏத்த மாதிரி பொண்ணு போட்டோ எடுத்துட்டு வர்றேன். இல்லையா ஆளை விடுங்க. இது மாதிரி அப்பனுக்கு கல்யாணம் பண்ண கல்யாண வயசுல இருக்கற பையன் யோசித்து, சம்பந்தம் கேட்டு யாரும் இதுவரை என்னிடம் நின்றதில்லை. உங்க ஒருத்தரால் கஷ்டமாயிருக்கு தம்பி.” என்றார்.

பிரசன்னாவோ “கரெக்ட்… என்னால எங்கப்பாவுக்கு எவ்ளோ கஷ்டம். நான் மட்டும் அப்பவே செத்திருந்தா.. இந்நேரம் அவர் லவ்வை மறந்து, அப்பவே கல்யாணம் பண்ணியிருப்பார். நான் ஒரு நூல் மாதிரி இருக்கவும், என்னை வச்சி அவர் வாழ்க்கையை சிக்கலாக்கிக்கிட்டார்.” என்று வேதனை அடைந்து பேசினான்.

“பிரசன்னா.. அப்படியில்லைடா… எனக்கு கல்யாண ஆசை வரலை.” என்று கூற, “நீங்க பேசாதிங்க. ஒழுங்கு மரியாதையா, தாத்தா பாட்டி அத்தை பெரிப்பா எல்லாம் எங்கயிருக்காங்கன்னு சொல்லுங்க. அட்லீஸ்ட் அவங்களையாவது போய் பார்த்து பேசிட்டு வருவோம்.” என்று கேட்க, “பச் போடா.. எனக்கு ஆர்வமேயில்லை” என்றார்.

“அப்பா.. உனக்கு ஆர்வமில்லாம இருக்கலாம். எனக்கு ஆர்வமா இருக்கு. இத்தனை நாள் உனக்கு நான், எனக்கு நீன்னு மட்டும் நினைச்சேன். நீ என்னடான்னா எல்லா உறவும் இருந்தும், என்னை தனியா வளர்க்கற. எனக்கு உன்னோட சொந்த பந்தத்தை பார்க்கணும். உனக்கொரு கல்யாணம் பண்ணி வைக்கணும். இத்தனை நாள் ஏதோ விளையாட்டுத்தனமா இருந்த மாதிரி இருக்கு. இனியாவது என்னோட பொறுப்பை நான் உணர்ந்து செயல்படுத்தணும்.” என்று பேசியவனிடம், “பார்க்கலாம்.” என்று மழுப்பினார்.

அதன்பின் தரகர்‌ பாலு கூட பெண்கள் புகைப்படத்தை காட்டுவதை குறைத்துவிட்டார்.

பிரசன்னா போன்‌ செய்து கேட்டதற்கு, “தம்பி உனக்குன்னா சொல்லு போட்டோ எடுத்தாந்து காட்டறேன். உங்கப்பாவுக்கு பொண்ணு பார்க்கறது எனக்கு கஷ்டமாயிருக்கு தம்பி. அதைமீறி எல்லா இடத்திலும் சொல்லி வச்சியிருக்கேன். அபூர்வமா வந்தா தொடர்பு கொள்ளறேன்.” என்று கூறிவிட்டார்.

பிரசன்னாவும் தன் நண்பர்கள் மூலமாக நெட்டில் பலவிதமான முறலயில், தந்தைக்கு லைப்பாட்னரை தேடும் முயற்சியில் இறங்கினான்.

பெயர், வயது, படிப்பு, வேலை இத்யாதிகளை நிரப்பி இதுவரை திருமணம் ஆகவில்லை. ஆனால் சுனாமியில் கிடைத்த குழந்தையை வளர்த்து ஆளாக்கியதாக தன் வயதை மென்ஷன் செய்திருந்தான். இதுவரை மணமாகாததிற்கு காரணம் வளர்ப்பு பிள்ளை மீது வைத்த பாசமென்றும் குறிப்பிட்டிருந்தான்.

ஒரிரு வாரம் கடக்க, கல்லூரியிலிருந்து அப்படியே படம் பார்க்க முடிவெடுத்தனர்.
மெட்ரோ ரயிலில் நண்பர்களோடு படம் பார்க்க, டிக்கெட் எடுத்து காத்திருந்தான்.
தந்தை மட்டும் வந்து சேர வேண்டும். டிக்கெட்டை கையிலெடுத்தபடி, வேடிக்கை பார்த்தவனுக்கு தந்தை தாமதமாக வரவும் எதிரே மெட்ரோ வண்டி நின்றது.

பிரசன்னா கண்ணை சுருக்கி பார்வையிட்டவன், வேகமாய் மெட்ரோ வண்டி கதவு மூடும் பொழுது, வேகமாய் உள்ளே நுழைந்தான்.

“என்னடா… அவன் மட்டும் போயிட்டான். டிக்கெட் அவனிடம் தான் இருக்கு. என்னாச்சு இவனுக்கு” என்று பிரசன்னாவிற்கு அழைக்க, “மச்சான் நாம இறங்கற ஸ்டேஷன் முன்ன வெயிட் பண்ணறேன். நீங்க அப்பாவை கூட்டிட்டு வந்துடுங்கடா.” என்று கூறி கத்தரித்தான்.

“என்னடா… இவன்.. இவன் பண்ணறது ஒன்னும் புரியலை. வரவர இவன் போக்கே சரியில்லை.” என்று கடுப்படைய, “பிரசன்னா எங்கப்பா?” என்று பிரதீப் வந்தார்.

சட்டென மின்னலாய் இதற்கு முன் வந்த வண்டியில் ஏறியதை உரைத்தார்கள்.

பிரதீப்போ ‘ஏன் இப்படி ஓடினான். என்னவா இருக்கும்?’ என்று குழம்பினார்.

மகனை நேரில் கண்டதும் கேட்டுப்போமென விட்டுவிட்டார்.

இங்கே பிரசன்னாவோ “ஹலோ… உங்க பேர் சுஹாசினி தானே?” என்று தன் முன்னே இருந்த பெண்ணிடம் பேச, “நீங்க.. பொண்ணு பார்க்க வந்தவர் தானே?” என்று கேட்டாள்.

சங்கடமாய் தலையாட்டினான் பிரசன்னா.
இதுவரை சுஹாசினி மனம் எப்படி காயப்பட்டிருக்குமென அவன் நினைத்ததில்லை. இன்றோ தந்தைக்கு பெண் பார்க்க பாலு தந்த வரனெல்லாம் கண்டதும், சுஹாசினியை பற்றி நினைத்து பார்த்தான்.
தந்தைக்கு இப்படியொருவள் வாழ்க்கை துணைவியாக வந்தால் நல்லதென்று. இன்று அவளை பார்த்ததும் யோசிக்காமல் வந்துவிட்டான்.‌

“சாரி… அன்னிக்கு என் மேல தான் தப்பு. அப்பாவிடம் பேசி கன்வின்ஸ் பண்ணிட்டு, பொண்ணு பார்க்க அழைச்சிட்டு வந்திருக்கணும்.” என்றான்.

“ஆக்சுவலி பொண்ணு பார்க்க வந்தது உங்களுக்காக தானே?” என்றதும் ஆமென்று தலையாட்டினான்.

சுஹாசினி மறுபுறம் திருப்பிட, பிரசன்னாவோ, “உங்க வீட்ல அப்பாவையும் என்னையும் திட்டினாங்களா. உங்க மனசும் ஏதாவது அபெக்ட் ஆகியிருக்கும். என்னடா பொண்ணு பார்க்க வந்து கேலி கூத்தா போயிடுச்சுன்னு. ஐம் ரியாலி சாரிங்க.” என்றான்.

“எங்க அக்கா கட்டி கொடுத்த குடும்பத்துல நிறைய சொந்தம்பந்தம். அதனால தான் மாமியார் நாத்தனார் கொழுந்தனார்னு யாருமில்லாத வீடு என்றதும் அப்பா அம்மா இந்த இடம் முடிவான பிரச்சனை இருக்காதுனு நினைச்சாங்க

வீடு நாற்பது நிமிஷ தூரம் என்றதும் வீட்ல ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நீங்க போனதும் லேசா வருத்தம். நாமளாவது மாப்பிள்ளை யாருனு முதல்லயே கேட்டிருக்கணும்னு அப்பா சொன்னார். அம்மாவுமே அதை ஆமோதிச்சாங்க.
இன்பேக்ட் அங்கிளை பார்த்தா வயசானவரா தெரியலை. நீங்க உங்கப்பாவுக்கு பொண்ணு தேடறதுல தப்பில்லை.
என்ன பார்க்கறிங்க… அப்பா தரகரை திட்டி தீர்த்ததும், அவர் உங்களை பத்தி கதை கதையா சொன்னார்.

அவனுக்கு பைத்தியம் சார். எங்கயாவது மகன் அப்பனுக்கு பொண்ணு தேடுவானா? அதைமீறி விவாகரத்து ஆனவங்க போட்டா காட்டினா வேண்டாம்னு சொல்லறான். என்னத்த அமையுமோ. அவரால இவனுக்கு வந்த நல்லவாழ்க்கையை தட்டிவிட்டுட்டான்னு பேசினார்.

அங்கிள் ரொம்ப நல்லவர், யாரோ ஒரு பையனை நல்லா படிச்சி வளர்த்திருக்கார். அவருக்கு மருமகளா போக முடியாத வருத்தம் இருந்தாலும், அங்கிள் மனசுக்கு நல்லதா அமையட்டும்னு கடவுளை வேண்டறேன்.” என்றவள் சன்னமாய் புன்னகைத்தாள்.

“எங்க மேல கோபமில்லையே?” என்றான் பிரசன்னா.

“ஒருவேளை சொந்தபந்தம்னு இருக்கறப்ப இதெல்லாம் நடந்திருந்தா கஷ்டமாயிருக்கும். ஆனா வீட்ல இருந்தவங்க மட்டும் தானே. தம்பி விஜய் தான் தரகர் மேல கோபமா இருந்தான்.
ஆனா தரகர் வந்து மறுபடியும் வேற வரன் இருக்குனு போட்டோ காட்டி, உங்களை பத்தி பேசிட்டு போனப்பிறகு எதுவும் பெருசா காயப்பட்ட வலியில்லை.” என்றாள்.

“தரகர்… வேற மாப்பிள்ளை போட்டோ காட்டினாரா?” என்று தயக்கமாய் கேட்டான்.

“பின்ன எனக்கு இந்த வருஷம் முடிக்கணும்னு வரன் தேடறாங்க. தரகர் கைக்கு கிடைச்ச பசங்க போட்டோவை அள்ளிட்டு வர்றார். ஏதாவது முடிவாகலாம்.” என்று கூறவும், அசட்டயாய் சிரித்தான்.

‘அப்பாவை பத்தி உங்க அபிப்ராயம்? நீங்களே ஏன் அப்பாவை மணக்க கூடாதுயென்ற அபத்தமான வினாவை தொடுக்க வந்தவனுக்கு வினாவை உதிர்க்க வாய் வரவில்லை.

நேரில் பார்க்காத பொழுது ஜோடி போட்டு தந்தையோடு சேர்த்து வைத்திட முனைந்தவனுக்கு, சுஹாசினியை நேரில்  பார்த்து இப்பொழுது பேசவும் வாய் தந்தியடித்தது.

அவன் வயது பெண் என்பதால் தந்தைக்கு தாயாக எண்ணமே வரவில்லை. அதிலும் தன்னை சுஹாசினி நேர்கொண்ட பார்க்கும் பார்வையில் தடுமாறினான்.

“என்னோட ஸ்டாப் வரப்போகுது. இறங்கப்போறேன். ஏதாவது பேசணுமா? இப்பவே பேசிடுங்க. என் பிரெண்ட்ஸ் இருப்பாங்க நான் போயிடுவேன்” என்றாள்.

ஆமென்றும் இல்லையேன்று தலையாட்டிட, கதவு திறக்கவும் இறங்கினாள்.
அவனும் பின்னாலே இறங்க, புருவம் சுருக்கி, “ஏன் இறங்கிட்டிங்க?” என்று சந்தேகமாய் தன் பின்னால் வருவதாக சுஹாசினி நினைக்க, “டிக்கெட்டை காட்டி, நானும் இங்க தான் டிக்கெட் எடுத்திருக்கேன்.” என்று காட்டினான்.

“5டிக்கெட் இருக்கு. நீங்க மட்டும் வந்திருக்கிங்க” என்றாள்.

“பிரெண்ட்ஸ் அங்க நின்னுட்டு இருந்தாங்க. அப்பா வர்றதால வெயிட் பண்ணினோம். ஆனா உன்னை பார்த்ததும் யோசிக்காம ஏறிட்டேன். சாரி கேட்க.” என்று காரணத்தையும் கூறவும், “ஓ. அப்பா வர்றாரா. அச்சோ.. பேச முடியலை. அன்னிக்கு அவர் டேய் என்னை மன்னிச்சிடுடானு என்னை பார்த்து சொன்னப்ப, அவரிடம் பேசவே முடியலை. ஸ்டக் ஆகிட்டேன். எனிவே… அங்கிளை கேட்டதா சொல்லுங்க பை” என்று புறப்பட்டாள்.

பிரசன்னாவோ ‘என்னது அங்கிளா?’ என்றவன் தந்தை பிரதீப் மற்றும் நண்பர்களுக்காக, சுஹாசினி சென்ற திசையை கண்டு காத்திருந்தான்.

“என்னடா… அங்கயே பார்த்துட்டு இருக்க?” என்று பிரதீப் எட்டிப் பார்க்க, “பார்க்க வேண்டிய வயசுல என்னை வளர்த்துட்டு, இப்ப வந்து பார்க்கறது” என்று கோபமானான்.

“இவன் என்ன தேவையில்லாம பேசறான்” என்று பிரசன்னா நண்பர்களிடம் பிரதீப் கேட்க, “தெரியலை அங்கிள்.” என்று கோரஸாக கூறினார்கள்.

“சரி வாங்க.. படம் போட்டுட போறான்” என்று அழைத்து செல்ல, தியேட்டருக்கு செல்ல நடந்தனர்.

-தொடரும்.

 

 

 

2 thoughts on “கரை தந்த கடலே-6”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 oru vela suhasini dhan prasanna ku jodi ya parpom 🧐🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!