அத்தியாயம்-8
பிரதீப்பும் பிரசன்னாவும் ஒருவாரமாக பேசாமல் திரிகின்றனர்.
காரணம் பெரிதாக இல்லை. பிரசன்னாவோ “நீங்க கல்யாணம் பண்ணினா தான் நானும் கல்யாணம் பண்ணுவேன்” என்று பிளாக்மெயில் செய்யவும், பிரதீபிற்கு கோபம் உருவாக, “இந்த ஜென்மத்துல என் கல்பனாவை தவிர யாரையும் நேசிக்க முடியாது.” என்று மறுக்க, “அப்ப நானும் கல்யாணம் பண்ணாம இப்படியே இருக்கேன். அந்த தரகர் பாலுவிடம் என் ஜாதகத்தை வாங்குங்க. இனி உங்களிடம் நான் பேசமாட்டேன். கல்யாணம் செய்துக்கறேன்னு எப்ப ஓகே சொல்லறிங்களோ அப்ப பேசுங்க” என்று கூறினான்.
பிரதீப்பிற்கு இந்த தண்டனை அதிகம். பிரசன்னாவிடம் பேசாமல் பொழுதே ஓடாது. ஆனால் தன் வயதுக்கு பொண்ணை பார்க்கின்றேன் என்று சிறுப்பிள்ளையாக அவன் செய்வதை கண்டு பொறுமை பறந்தோடிவிட்டது.
சுஹாசினியை எல்லாம் இந்நேரம் இவனுக்கு பேசி முடித்து கல்யாண வேலையில் மூழ்கியிருக்க வேண்டியது. எல்லாவற்றையும் தன்னிடம் கலந்து பேசாமல் முட்டாள்தனமாக நடத்திவிட்டு, இன்னமும் உளறுவதில் பிரதீப்பும் கோபம் கொண்டார். பிரசன்னாவிற்கு அதிகமாகவே செல்லம் கொடுத்து விட்டோமோ என்று நினைத்தார்.
இருவருக்குள் பேச்சு வார்த்தையை குறைத்துக் கொண்டார்கள்.
பிரதீப் சமைத்து வைத்தால் பிரசன்னா அதை சாப்பிடாமல் கல்லூரிக்கு ஓடினான். பிரதீப் கூப்பிட்டு நிறுத்தி சண்டை பிடிக்க நினைத்தார். ஆனால் பரீட்சை நேரம் படிக்கின்ற சமயம் சண்டை போட்டு கூடுதலாக பிரசன்னாவை மனவுளைச்சலுக்கு ஆளாக்குவதை குறைக்க நினைத்தார்.
அதனால் சமைத்து வைப்பார், பிரசன்னா சில நேரம் மறந்து போய் எப்பவும் போல டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டாலோ அல்லது சாப்பிட்டாலும் அந்த நேரம் அமைதியாக கவனிக்காதது போல நகர்ந்திடுவார்.
பிரசன்னா அவன் தந்தையிடம் பேசாதது அவனது நண்பர்களுக்கு ஆச்சரியமே. “ஏன்டா.. அவரிடம் பேசாம எப்படி? நீ அப்படி வீம்பு பிடிச்சி நிற்க மாட்டியே. நீ வீம்பு பிடிச்சாலும் அங்கிள் உன்னை விடமாட்டாரே. அவரால உன்கூட பேசாம இருக்க முடியாதே.” என்று ஆயிரம் கேள்வியை குடைந்தனர்.
“அவர் பேசி இன்னியோட ஒரு வாரம் ஆகுது.” என்று கடுப்போடு குமைந்தான் பிரசன்னா.
“வரலாற்று அதிசயம்” என்று சலீம் சிரிக்க, “அங்கிளுக்கு கல்யாணம் செய்ய விருப்பமில்லைன்னா விட்டு தொலையேன்டா.” என்று அகில் எடுத்துரைக்க, “ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தையா நான் உதிச்சிருந்தா விட்டிருப்பேன்டா. இவருக்கு கல்யாணமே ஆகலை. அப்படியிருக்க… எப்படிடா?
என் உயிரை காப்பாத்தியிருக்கார். எனக்கு படிப்பு தந்திருக்கார், போட்டுக்க பிராண்டட் டிரஸ் வாங்கியிருக்கார். நான் பசிக்கு அழறேன்னா, விளையாட்டுக்கு அழறேன்னானு, என் முகம் பார்த்து செய்வார்டா.
எனக்கு அப்பாவும் அம்மாவுமா இருக்கறவர். அவரால நான் நல்லபடியா வாழறேன்ல. அதே போல என்னால அவருக்குன்னு ஒரு வாழ்க்கையை கிரியேட் பண்ணி தரணும். ஏன்… நாற்பது வயசுக்கு மேல கல்யாணம் ஆகாத எத்தனை ஆக்டர் சினி பீல்ட்ல இருக்காங்க. அவங்க எல்லாம் சட்டுனு ஒரு நாள் மேரேஜ் விஷயத்தை போடறாங்க. அடுத்த இரண்டு வருஷத்துல குழந்தை குட்டினு நிறைவா வாழறாங்கள்ல. இவரும் அப்படியே இருக்கட்டும். இப்ப கல்யாணம் ஆனா கூட அவருக்குன்னு ஒரு குழந்தை மனைவி இருப்பதில் என்ன தப்பு. முன்னவே என்னை பையன்னு வளர்க்காம, தம்பின்னு சொல்லியிருந்தா கூட நான் இந்நேரத்துக்கு கல்யாணம் செய்ய புஷ் பண்ணிருப்பேன்.
எனக்கே ரீசண்டா தானே தெரியும். இத்தனை நாள் அவர் வாழ்க்கையில் என்னை அறியாம தடையா இருந்திருக்கேன்டா.
இதுக்கு தீர்வு அவருக்கு கல்யாணம் செய்தப் பிறகே தான் நான் கல்யாணம் பண்ணுவேன். இல்லையா… நானும் தனியா பிரம்மசாரியா இருந்துக்கறேன்.” என்று தோளைக் குலுக்கினான்.
வருணோ ”அங்கிள் உன்னோட எப்படி பேசாம இருக்கார்” என்று கேட்க, “என்னை விட அவருக்கு அவர் கல்பனா முக்கியமா போச்சு.” என்று நக்கலாய் உரைத்தான்.
அகில் மூலமாக போனில் மகனது பேச்சை கேட்ட பிரதீப்போ ‘வாய் வாய்… எப்படி பேசறான். நான் கல்பனாவை எந்தளவு நேசித்தேனோ, இவனையும் தான் அதிகமா நேசிக்கறேன். புரிஞ்சுக்காம பேசறானே.’ என்று தனியாக பொறுமினார்.
இதில் பிரசன்னா புண்ணியத்தில் அவன் எங்கெல்லாம் பிரதீப் பயடேட்டா போட்டு ஆப் மூலமாக பொண்ணை தேடினானோ அவ்விடத்தில் எல்லாம் நம்பர் மூலமாக தினம் ஒரு பெண், மறுமணத்தை பற்றி பேச்செடுத்தபடி, தொலைப்பேசியில் அழைத்து விடுகின்றனர்.
அவர்களிடம் தன் மகன் தனக்கு விருப்பமின்றி, இந்த ஆப்பில் தன் எண்ணை பதிவிட்டதாக எடுத்து கூறி அணைக்கவே பிரதீப்பிற்கு நேரம் கழிந்தது.
‘இன்னிக்கு வீட்டுக்கு வரட்டும், எந்த ஆப்ல எல்லாம் கல்யாண வரன் தேடி பதிவு செய்தானோ அந்த இப்ல எல்லாம் என் பயோடெட்டாவை நீக்க சொல்லணும்.” என்று ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.
மகன் இன்னமும் வராததில், வருணுக்கு அழைக்க, “அங்கிள் அவன் அப்பவே போயிட்டானே” என்றான் வருண்.
அகில் வீடு வரும் வழி தான். ஒருவேளை அங்கு சென்றுயிருப்பானோ என்று அகிலுக்கு அழைத்தார் பிரதீப்.
அகிலோ “அங்கிள்… அவன் வரவர இங்க வர்றதை குறைச்சிட்டான். கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கறதா பேச்சு ஓடினப்ப கூட நார்மலா இருந்தான். வளர்ப்பு பையன் என்றது தெரிந்தப்பின்ன கொஞ்சம் வர்றது போறது குறைச்சிட்டானா இல்லை, நாங்க எது பேசினாலும் உங்களிடம் ஷேர் பண்ணிடறோம்னு எங்களிடம் நழுவறானா ஒன்னும் புரியலை அங்கிள்.” என்றான்.
சலீம் மட்டும் ஏன் விட்டு வைப்பானேன் என்று அவனிடமும் கேட்டு வைக்க, அவனுமே அதே பல்லவி பாடினான்.
பிரதீப் பிரசன்னாவிற்காக அவன் போனுக்கு அழைத்து அழைத்து பிரசன்னா எடுக்காமல் அவமதிக்க, கோபமாக தான் அலைந்தார்.
நம் நாயகன் பிரசன்னாவோ, “இன்னும் எத்தனை நாள் ஹாசினி அப்பா மாறுவார்னு எனக்கு நம்பிக்கையில்லை. ரொம்ப கஷ்டமாயிருக்கு ஹாசினி.
முன்ன எல்லாம் என்ன நடந்தாலும் அவரோட பேசுவேன் பழகுவேன். ஒன்னா தான் சாப்பிடுவேன். இப்ப அவரிடம் முகத்தை திரும்பிட்டு நடக்கும் போது எனக்கே கஷ்டமாயிருக்கு.” என்று ஹாசினி என்ற சுஹாசினியிடம் தான் கைப்பிடித்து புலம்பினான்.
“பிரசன்னா… அங்கிளிடம் கல்யாணம் பண்ணுங்கன்னு நீ கெஞ்சினா கண்டிப்பா வேலைக்கு ஆகாது. இதே… பேசாம அவரை இக்னோர் பண்ணு. எப்படி வழிக்கு வர்றாருனு மட்டும் பாரு.
அங்கிளுக்கு உன் சந்தோஷம் உன் விருப்பம் தான் முக்கியம். அவரால உன்னிடம் பேசாம தவிர்த்து இருக்கறது கஷ்டம். ஒரு வாரம் தானே ஆகியிருக்கு. பத்து நாள் தாண்டறதுக்குள் அவரா… அவர் வாயிலருந்து, ‘சரிடா.. பொண்ணு அமைஞ்சா கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்வார் பாரு” என்று நம்பிக்கை அளித்தாள்.
“அதெப்படி சொல்லற? எங்கப்பா பாசம் வச்சா மறக்கற ரகமில்லை. எங்கம்மா கல்பனா மேல அவருக்கு இன்னமும் லவ் இருக்கு. இவர் உயிரோட இல்லை என்றதால தான் அவங்க உயிரை மாய்ச்சிக்கிட்டாங்க. அப்படியிருக்க, அவங்களுக்காக வாழ்நாள் முழுக்க தனியா வாழணும்னு முடிவெடுத்திருப்பார். இதுல இந்த விதி மேரேஜ் பண்ணாம காரணம் சொல்ல ‘இந்தா வச்சிக்கோ ரீஸன்’னு என்னை தூக்கி கொடுத்திடுச்சு.
எங்கப்பாவுக்கு என் மேலயும் பாசம் அதிகம் தான். ஆனா கல்பனா அம்மாவை தவிர்த்து இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்ய சம்மதிக்கறதா சொல்வார்னு எனக்கும் இப்பல்லாம் நம்பிக்கை இல்ல” என்றான் பிரசன்னா.
“அடேய்… நீயே கான்பிடன்ஸ் இல்லாம பேசினா என்ன அர்த்தம்.” என்று சுஹாசினி பிரசன்னா தோளில் அடித்தாள்.
பிரசன்னாவே “ஆஹ்… அடிக்கற.” என்று சிணுங்க, “நீ பண்ணின காரியத்துக்கும் பேசின பேச்சுக்கும் உன்னை அடிக்க கூடாது. கொல்லணும்… ஆனா நான் உன்னை லவ் பண்ணிட்டு திரியறேன்.” என்றாள்.
“ஆமா… நீயா லவ் பண்ணின. நானா தான் உன் நம்பர்ல சாரி கேட்டு, ஹாய் சொல்லி, ஹலோ சொல்லி, கெஞ்சி கொஞ்சி, ஸ்மூத்தா லவ்ல கொண்டு வந்திருக்கேன்.” என்றான் கெத்தாக.
சுஹாசினியோ “ஆமா ஆமா.. நீ தான் இதெல்லாம் செய்த. ஆனா நீ மட்டும் பொண்ணுப் பார்க்க வந்த அன்னைக்கே வாயை மூடிட்டு இருந்தா, இந்நேரம் ‘மாப்பிள்ளை இவர் தாங்க’ன்னு அங்கிள் அழகா அறிமுகம் செய்து நிச்சயதார்த்த டேட் பிக்ஸ் பண்ணி, அடுத்து கொஞ்ச நாளில் கல்யாணமே முடிஞ்சிருக்கும். பெருசா பேசறேன்னு, நல்லா போனதில் குழப்பத்தை உண்டு பண்ணிட்ட. இதுல பெருமை வேற” என்றாள்.
சினிமா தியேட்டரில் பிரதீப் தன் போன் மறந்ததில் சுஹாசினி மூலமாக பிரசன்னா எண்ணிற்கு அழைத்ததால், அதற்கு பிறகான நாளிலிருந்து, பிரசன்னா சுஹாசினி பேசி மனதை பகிர, இதோ ‘காதல்’ என்ற கடலில் குதித்துவிட்டனர்.
இன்னமும் சுஹாசினி அவள் வீட்டில் தன் காதல் விவகாரத்தை தெரிவிக்கவில்லை. அதே போல பிரசன்னாவும் தன் நண்பர்களிடமும், தந்தையிடமும் தன் காதலை மறைத்து காவியம் படைத்துக் கொண்டிருக்கின்றான்.
“ஓகே.. மணி எட்டாகுது. நான் கிளம்பறேன். எப்படியும் அங்கிள் ஒன் வீக்ல உங்களிடம் ஏதாவது பேசுவார். அப்படி அவர் எதுவும் பாஸிடிவ்வா பேசலைன்னா…. அப்பறம் நம்ம காதலை சொல்லிடுவோம். வேற வழி.” என்றாள் சுஹாசினி.
பிரசன்னாவும் ஆமோதிப்பாக தலையாட்டி, “ஓகே… நீ கிளம்பு. அப்பா ஆறேழு தடவை கால் பண்ணிட்டார்.” என்றான்.
“கிளம்புன்னா… எப்படி. கொண்டு போய் விடு.” என்றாள்.
பிரசன்னா பைக்கில் ஹெல்மெட் அணிந்து காதல் பறவைகள் சிட்டாய் வீட்டை நோக்கி பறந்தனர்.
சுஹாசினி வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரமாய் நிறுத்த கூறினாள்.
“ஏய்… வீட்டுக்கு கொண்டு போய் விடுன்னு சொன்ன. இங்கயே நிறுத்த சொல்லற. நான் மாமனார் எதிர்ல டிராப் பண்ணறேன்.” என்று வம்பு இழுக்க, “பிரசன்னா.. விளையாடாதே… வண்டியை நிறுத்து” என்று கூற அவன் நிறுத்தாமல் ஓட்ட, அவன் தோளிலேயே ஒரு கடி கடித்தாள்.
“ஆங்.. லூசு லூசு.” என்று ஓரமாய் நிறுத்தினான்.
“வண்டியை நான் பாட்டுக்கு எதுலையாவது மோதினா என்னடி பண்ணுவ. தோள்ல கடிச்சி விளையாடிட்டு இருக்க. வலிக்குது தெரியுமா?” என்று அதட்டினான்.
“பின்ன வண்டியை முறுக்கிட்டு போனா என்ன செய்யறதாம்.” என்று இறங்கிவிட்டு, “ஒரு வாரம் பொறுத்துக்கோ. அங்கிள் சம்மதிப்பார்.” என்று பைக்கை இறுக பற்றிய கரத்தில் ஆறுதலாக தொட்டு அணைப்பில் இதத்தை உணர்த்தி, வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.
பிரசன்னாவும் தன் வீட்டிற்கு பறந்தான்.
பிரதீப் அதற்குள் பதினாறாவது அழைப்பை அழைத்துவிட்டார்.
அவன் வீட்டுக்கு வரும் போது 26வது அழைப்பு என்று எண்ணிக்கை கூட, வந்ததும் வராததும், “எதுக்கு இத்தனை முறை போன் பண்ணறிங்க. நான் தான் உங்களோட பேசமாட்டேன்னு சொன்னேனே” என்று வந்தவன் பிரதீப்பை கண்டு பதறினான்.
-தொடரும்.

Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 paara endha love track eppo erundhu payapulla ushar ah dhan eruku yaarukum theriyama maintain pandraney🧐 acho appa ku enna Achu nu therilaiye 🙄🥺
Aiyo avarukku yethuvum aagiducha