Skip to content

கரை தந்த கடலே-9

53 / 100 SEO Score

அத்தியாயம்-9

 

பிரசன்னா வந்ததும் வராததும் ஒரு அறை பளீரென்று போட்டார்.

 

“என்னடா நினைச்சிட்டு இருக்க. கண்ட கண்ட கல்யாண ஆப்ல என் போன் நம்பரை போட்டு கல்யாணம் செய்வதா முட்டாள்தனமா போட்டிருக்க. இன்னிக்கு அதை பார்த்துட்டு என் அண்ணன் அக்கா கேலியா பேசறாங்க. பொண்ணு பார்க்கறப்ப எல்லாம் மறுத்துட்டு காலம் போன பிறகு, அக்கா பொண்ணுக்கு பொண்ணு பார்க்கறப்ப, என்னடா விளையாடிட்டு இருக்கன்னு  கேட்கறாங்க. உன்னால அந்த குடும்பத்துல அசிங்கமா போச்சு. இது மாதிரி பேச்சு வாங்கவா என் போன் நம்பர் வீடு எல்லாத்தையும் மறைச்சிட்டு வாழ்ந்தேன்” என்று கோபப்பட்டார்.

 

“அப்பா..” என்று கூறி முன்னே வந்தான் பிரசன்னா. இத்தனை காலம் தந்தையின் உறவுகள் யாரென்று கூட தெரியாதே. இவரும் அவர்களோடு பேசியதாக ஒரு செய்தியும் இல்லை.

இன்றாவது தொடர்பு கொண்டதால், உறவுகளோடு இணைத்து வைக்க முயலலாமென கேட்டான்.

 

“எனக்கு அவங்களையாவது அறிமுகப்படுத்தி வையுங்க. இல்லையா… என்னிடம் பேசாதிங்க.” என்று அப்பொழுதும் பதில் உரைத்தான்.

 

அங்கே நிற்காது தனதறைக்கு வந்து கதவை திறந்து உடைமாற்றினான்.

 

பிரதீப் மகனது அறைக்குள் வந்து, “ஏன்டா இப்படி பண்ற. இதுவரை உன்னை அடிச்சதேயில்லை. ஆனா இன்னியோட இரண்டாவது தடவை ஒரே காரணத்துக்காக அடிக்க வச்சிட்ட” என்றவர் மகனின் தோள் வளைவில் பற்தடம் இருக்க நிதானித்தார்.

 

தன்னையும், இவன் நண்பர்களையும் தாண்டி மகனுக்கு வேறொரு நெருக்கமான நட்பு கிடைத்துவிட்டதென புரிந்தது.

 

‘ஏன்டா இப்படி பேசாம தவிக்க விடற’ என்று கூற வந்தவர், “ஓ… துரை அப்ப தான் பேசுவிங்களா? நீ ஒன்னும் பேச வேண்டாம். கல்யாணம் செய்தா தான் பேசுவனு சொன்னா… நான் செத்து போனதுக்குபிறகு என் பிணத்துக்கு முன்ன பேசி புலம்பு” என்று வெளியேறினார்.‌

 

பிரசன்னா அதை கேட்டு துடித்தவனாக தந்தையை திரும்பி பார்க்க பிரதீப் அங்கேயில்லை.

 

தாரை தாரையாக கண்ணீர் வழிய, சுஹாசினிக்கு அழைத்தான்.

 

“அப்பாவை ரொம்ப காயப்படுத்தறேனேனு பயமாயிருக்கு ஹாசினி. ஒருவேளை நான் அவர் பெத்த பிள்ளையா இருந்தா இந்த வலி வேதனை இருக்காதோ என்னவோ. என்னால அவர் வாழ்க்கை போச்சேனு நினைக்க நினைக்க நான் என்ன செய்யணும்னு கூட தெரியலை.” என்று மனதை கொட்டினான்.‌

 

சுஹாசினியோ “முதல்ல பெத்த பிள்ளை வளர்ப்பு பிள்ளைனு நீயே சொல்லறதை நிறுத்து. ஏன்… பெத்த பிள்ளைன்னா அப்படியே விட்டுடுவியா? வளர்த்த பிள்ளை என்பதால தான் அங்கிளுக்கு கல்யாணம் செய்ய முனைவதா பேசற.

 

நீயே வளர்த்ததுக்கு நன்றி செலுத்துவதா பொண்ணு தேடினா இப்படி தான். உண்மையில அவர் மகனா யோசி. அவருக்கு வரன் தேடு. அதுக்காக உன் வயசுல உள்ள பொண்ணை தேடாத. அங்கிளுக்கு 40 ஆஹ்… அப்ப முப்பதுக்கு மேல தேடு. இப்பலாம் மறுமணம் ரொம்ப சாத்தியம். நிச்சயம் பொண்ணு கிடைக்கும். என்ன.. கல்யாண வயசுல நீ நந்தி மாதிரி இருக்க அதான் மைனஸ்.

 

ம்ம்ம… அங்கிளோட அண்ணா அக்கா போன் மூலமா பேசியதா சொன்னல்ல… நீ அந்த நம்பரை வச்சி அவங்களை சந்திச்சு ஒருமுறை பேசு.

அங்கிள் சாகறேன்னு பேசறதை இக்னோர் செய்துட்டு, இப்படி பேசினா நானும் கூடவே செத்துடுவேன்னு எமோஷனல் பிளாக்மெயில் பண்ணு. அதைவிட்டு அச்சோ அப்படி பேசிட்டாரேனு பீல் ஆகாத.” என்று பேச பிரசன்னா ஏதோ தெளிவது போல இருக்க, “ஐ லவ் யூ ஹாசினி” என்றான்.

 

சுஹாசினியும் “ஐ லவ் யூ பிரசன்னா” என்றாள்.

 

போனை துண்டித்து திரும்ப, அங்கே முரளி மகளை கண்டு கொதித்திருந்தார்.

 

பிரசன்னாவோ சுஹாசினி சொன்னதால் தந்தையின் போனில் பெரிப்பா அத்தை நம்பர் இருக்குமென வந்து தேடினான்.

 

அறைக்கு வந்து தன் போனை நோண்டவும் பிரதீப், எட்டிபார்க்க, மடமடவென இன்று பதிவான அழைப்புகளின் எண்ணை, தன் போனில் ஸ்டோர் செய்தான்.

 

“என்னடா பண்ணற?” என்று பிரதீப் முன்னே வந்து பார்க்க, “பெரிப்பாவிடம் அத்தையிடம் பேசணும்.” என்றான்.

 

“இங்க அப்பன் நான் இருக்கேன். என்னிடம் எப்பவும் போல பேசு அது போதும். அதை விட்டு பெரியப்பா அத்தைனு சொல்லாத. அவங்க எல்லாம் வேண்டாம். முதல்ல அந்த நம்பரை அழி” என்றார்.

 

பிரசன்னா நம்பரை பதிவு செய்து வெளியேறியதும், பின்னாலே சென்றவர், “அவங்களாம் மதிக்க மாட்டாங்கடா. உன் மனசை காயப்படுத்துவாங்க. என்னை கேலி செய்து பேசுவாங்க. நீ தேவையில்லாத ஆணியை பிடுங்கற” என்றார்.

 

“தேவையில்லாத ஆணி இருந்தா என்ன? பிடுங்கினா என்ன? பிடுங்கிட்டா எனக்கு உறுத்தாமலாவது இருக்கும். நான் அவங்களிடம் பேசிட்டு அப்பவும் நீங்க சொல்லற மாதிரி இருந்தா பார்த்துக்கறேன். எனக்கு என்ன செய்யணும்னு தெரியும்” என்றவன் இன்னமும் சட்டையை போடாமல் பேண்ட்டோடு சுற்றவும், “கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சுனு எனக்கும் தெரியும். அதான் உனக்கு சப்போர்ட் செய்ய யாரோ இருக்காங்களே” என்றார்.

 

“என் பிரெண்ட்ஸ் எனக்கு சப்போர்ட் செய்வதில் என்ன தப்பு. உங்க பிரெண்ட் திவாகர் அங்கிள் உங்களுக்கு சாதகமா பேசறார்.” என்றவன் வாஷ்பேஷனில் முகம் அலம்பினான் பிரசன்னா.

 

பிரதீப் மகனருகே வந்து, “நான் உன் நண்பர்களை சொல்லலை.” என்றவர், பிரசன்னாவின் இடது தோளில் உள்ள பற்தடத்தை சுட்டிகாட்டி, “உனக்கானவளை நீயே பார்த்துக்கிட்ட போல. அந்த தைரியம் தானே.” என்றார்.

 

பற்தடம் அதுவும் தோளில் அழுத்தமாய் இருக்க, நண்பன் செல்லமாய் கடித்தான் என்றா கூற முடியும். அது அபத்தமாக தெரிந்தது. அதோடு தந்தைக்கு ஏதோ தெரிந்துள்ளதென புரிந்தது.

 

பிரதீப் லேசாக புன்னகைத்து, ”நான் கல்யாணம் செய்தா தான் நீயும் கல்யாணம் செய்வதா சொன்ன. இதென்னங்க சார்.. காதலி தந்த அன்பு பரிசா?

ஓ… காதலி வீட்ல கல்யாணத்துக்கு அவசரப்படுத்தறாங்களா? அதுக்கு தான் இந்த அப்பனுக்கும் கல்யாணத்தை பண்ணி துரத்த பார்க்கறியா?” என்றார்.

 

“நான் சுஹாசினியை விரும்பறேன். சுஹாசினி… நாம பொண்ணு பார்க்க போன பொண்ணு.” என்றான் தலைகுனிந்து. காதலித்த சில நாட்களிலேயே, குட்டு வெளிப்பட்டதால் வந்த தயக்கத்துடன் நின்றான்‌ பிரசன்னா.

 

“ஓ.. அந்த பொண்ணா.” என்றார் பிரதீப். மகனையும் அவளையும் காதலில் விழவைக்க நம்பரை பரிமாற்றம் செய்து வைத்த ஞானியே, ஏதும் அறியாதவர் போல கேட்டார்.

 

“அந்த பொண்ணை கல்யாணம் செய்து நல்லபடியா வாழப்பாரு. நாம போய் மறுபடியும் பொண்ணு கேட்டு பேசலாம்.” என்று பிரசன்னா தோளில் கையை வைத்தார்.

 

பிரசன்னா தந்தை கையை தட்டி விட்டு, “ஒன்னும் வேண்டாம். சுஹாசினி வீட்ல என்னை அக்சப்ட் பண்ணினா கூட, உங்க கல்யாணம் முடியாம நான் அவளை மேரேஜ் பண்ண மாட்டேன். ஹாசினி எனக்காக காத்திருப்பா. இல்லைன்னா கூட நானும் உங்களை போல இருந்துக்கறேன்.

 

நீங்க கல்பனா அம்மாவை நினைச்சிட்டு வாழற மாதிரி, நானும் ஹாசினியை நினைச்சிட்டு வாழ்ந்துடுவேன். ஆனா எனக்கு நீங்க உங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கணும். இல்லைன்னா நான் பேசமாட்டேன். ஒரே வீட்ல அப்பா மகன் பேசாம இருப்போம்” என்றதும் பிரதீப் ஆடிப்போனார்.

 

கப்போர்டை திறந்து உடையை எடுத்து குளியலறை சென்றான் பிரசன்னா.

 

பிரதீபிற்கு தற்பொழுது பிரசன்னாவை சமாதானம் செய்வது கடினமென புரிய, அட்லீஸ்ட் சொந்தங்களோடு பேசுவதற்காக மட்டுமாவது சம்மதிக்க நினைத்தார்.

 

குளித்து முடித்து வந்தவனிடம், “அவங்க வீட்டுக்கு வேண்டுமின்னா அழைச்சிட்டு போறேன்.” என்றார்.

 

பிரசன்னாவுக்கு இதே பாணியில் செல்வது சரியென்று விளங்க, “நாளைக்கு போகலாம்” என்று முடித்து கொண்டான்.

 

பிரதீப் தான் துண்டை எடுத்து, “கண்ட நேரத்துக்கு வர்றது, லேட் டைம்ல குளிக்கறது. அட்லீஸ்ட் தலையையாவது ஒழுங்கா துவட்டலாம்ல” என்று துவட்டினார்.

 

அவரிடமிருந்து துண்டை வாங்கி, “நாளைக்கு பெரிப்பா குடும்பம் அத்தை குடும்பம் அவங்களிடம் எல்லாம் பேசிட்டு அப்பறம் நாம பேசலாம். அதுவரை நமக்குள் இந்த பனிப்போர் இருக்கட்டும்.” என்று அனுப்ப முயன்றான்.

 

“சேர்ந்து சாப்பிடவாது வாடா. தனியா சாப்பிடவே பிடிக்கலை.” என்று பிரதீப் கெஞ்சவும் “வர்றேன்” என்றான் பிரசன்னா.

 

சுஹாசினி வீட்டில் ஏகப்பட்ட அர்ச்சனைகள் விழுந்தது. முரளி ராதாவிடம் மகளது பேச்சை விவரித்து, அதட்டிக் கொண்டிருந்தார்.

 

சுஹாசினி தனியொருவளாக அவள் குடும்பத்தோடு போராடினாள்‌.

 

“நான் ஒன்னும் எவனையோ விரும்பலை. நீங்க எனக்காக பொண்ணு பார்த்து வீட்டுக்கு வந்தவரை தான் காதலிக்கறேன்.

 

இதே அன்னிக்கு அந்த சம்பந்தம் முடிவானா மாப்பிள்ளையிடம் பேசுனு நீங்களா சொல்லியிருப்பிங்க. இப்ப நானா பேசினேன். என்னவோ கொலை குற்றம் பண்ணியதா பேசறிங்க. நான் பிரதீப் அங்கிளை ஒன்னும் விரும்பலையே. பிரசன்னாவை தானே விரும்பறேன்” என்றாள்.

 

ராதாவோ “ஆமாடி… நாங்க தான் பார்த்து முடிவானது. உங்கக்கா வீட்ல எல்லா சொந்தமும் இருந்தும் சண்டை சச்சரவு. இங்க எந்த சொந்தமும் இல்லை. அதுக்கு எல்லம் சேர்த்து அந்த பையனே குழப்பவாதியா இருப்பான் போல.

 

உன்னையாவது நிம்மதியா கல்யாணம் செய்து கொடுக்கணும்னு முடிவுல இருக்கோம். அதுல மண்ணை அள்ளி கொட்டிடாத. முதல்ல அந்த பையன் நம்பரை அழி. அவனிடம் இனி பேசாத” என்று மகளின் காதல் விவகாரம் அறிந்ததும் பெற்றோர் கூறும் கண்டன விதிமுறையை இயற்றினார்.

 

“அப்பா… நீங்களாவது அம்மாவிடம் எடுத்து சொல்லுங்க” என்று சுஹாசினி கெஞ்ச, முரளியோ “உங்கம்மா சொல்வதை கேளு சுஹா. அதோட கொஞ்ச நாள் பழகியவனிடம் குழைஞ்சிட்டு பேசாத. என்னவோ பொண்ணை சரியா வளர்க்காம போயிட்டோமோனு கவலையை தந்துட்ட” என்று குமைந்தார்.

 

சுஹாசினியோ “ஏன் இந்த பேரண்ட்ஸ் இப்படி இருக்கிங்க. நீங்க பார்த்த பையனோட ஏதோ ஒரு தடை. இப்ப அந்த தடையை மீறி மறுபடியும் இயல்பா பேசறேன்.

அவரையே கல்யாணம் செய்ய என்ன தடுக்குது?” என்றவளுக்குள் சொல்ல இயலாத வலி.

 

“முதல் கோணல் முற்றிலும் கோணல். இதை இத்தோட விடு” என்று முடித்தனர்.

 

பிரசன்னாவோடு கொஞ்ச நாள் தான் பழக்கமென்றாலும், இதயத்தின் ஆழம் வரை சென்றுவிட்டானே!

 

அதோடு பிரசன்னா பிரதீப் இருவரின் அன்பான உறவை அவளும் நேசிக்கின்றாள்.

 

யாரென்று தெரியாத குழந்தை, சுனாமியில் தன் கைக்கு வந்ததும் அதை ஆசிரமத்தில் சேர்க்காமல், தன் வீட்டை எதிர்த்து மகனாக  வளர்க்கும் பிரதீப், அவளது கண்ணுக்கு உயர்வாக தெரிந்தார். காதலியை மறக்க முடியாமல் தனிமரமாக நினைவுகளோடு வாழும் அவருக்கு, பிரசன்னா வளர்ப்பு பிள்ளை என்றதும், தந்தை பிரதீப்பிற்கு நல்லது செய்ய நினைத்து கல்யாணம் செய்ய மும்முரமாக பெண் தேடும் பிரசன்னாவின் அன்பும், அவளுக்கு பிடித்திருந்தது.

 

குடும்பத்தில் உள்ள இரு உறவுகள் என்றாலும் அதற்குள் எவ்வளவு அன்பு.

 

அப்படிப்பட்ட சிறுகூட்டில் சுஹாசினியும் இணைய விரும்புவதில் தவறில்லை.

 

என்ன… இங்கே பிரசன்னா முதல் கோணல் முற்றிலும் கோணல் என்னும் பழமொழிக்கு உதாரண

மாக அமைத்து தாய் தந்தை பேசுவதில் பொறுத்திருந்து தான் புரிய வைக்க இயலுமா? என்று மலைத்தாள்.

 

-தொடரும்.

 

 

 

 

2 thoughts on “கரை தந்த கடலே-9”

  1. Super sis nice epi 👌😍❤️ adhukulla renduper veetlaiyum therinjiduche🙄 suhasini veetla othukka maatanga polaye🤔 eppdiyum avanga appaku oru nalla life yerpaduthitu dhan maruvelai parpan so parpom 🧐🤔

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!