6. ‘மாலை வருகிறேன்’
நீண்ட நேரம் வரையில் மாறனேந்தல் இளவரசன் பிரக்ஞையேயில்லாமல் தூங்கினான். நேரமாக ஆகத் தூக்கத்தில் கனவுகள் தோன்ற ஆரம்பித்தன. சில சமயம் இன்பக் கனவுகள் கண்டபோது, தூங்குகின்ற முகத்தில் புன்னகை மலர்ந்தது. வேறு சில சமயம் பயங்கரமான கனவுகள் தோன்றி அவன் சுந்தர முகத்தை விகாரப்படுத்தின.
கடைசியில் வேட்டை நாய் ஒன்று தன்னுடைய மூக்கைக் கடிப்பதாகக் கனவு கண்டு உலகநாதத்தேவன் உளறி அடித்துக் கொண்டு எழுந்தான். பார்த்தால், அவன் எதிரே வேட்டை நாய் எதுவும் இல்லை. சோலைமலை இளவரசிதான் நின்று கொண்டிருந்தாள். நின்றதோடல்லாமல் முல்லை மொட்டுக்களையொத்த அவளுடைய அழகிய பற்கள் வெளியே தெரியும்படி சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டும் இருந்தாள்.
சற்று நிதானித்து யோசித்தும் இளவரசனுக்கு தன்னுடைய நிலைமை இன்னதென்று ஞாபகம் வந்தது. இளவரசியின் தோற்றத்தையும், அவளுடைய கையில் வைத்திருந்த பூச்செடியின் காம்பையும் கவனித்துவிட்டு அவள் அந்தச் செடியின் காம்பினால் தன் மூக்கை நெருடி உறக்கத்திலிருந்து எழுப்பியிருக்க வேண்டுமென்று ஊகித்துக் கொண்டான்.
“ஐயா! கும்பகர்ணன் என்று இராமாயணக் கதையிலே கேட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன்முதலாக நேரிலே பார்த்தேன். உம்மைப்போல் தூங்குமூஞ்சியை நான் இத்தனை நாளும் கண்டதேயில்லை. எத்தனை நேரம் உம்மை எழுப்புவது? அதுவும் பட்டப் பகலில் இப்படியா தூங்குவார்கள்?” என்றாள் இளவரசி.
“அம்மணி! நேற்று இரவு முப்பது நாழிகை நேரத்தில் ஒரு கண நேரங்கூட நான் கண்ணைக் கொட்டவில்லை. அதை நினைவில் வைத்துக் கொண்டால், என்னை இப்படி நீ ஏசமாட்டாய்! போனால் போகட்டும். எதற்காக என்னை எழுப்பினாய்? ஏதாவது விசேஷம் உண்டா? இப்பொழுதே நான் போய்விட வேண்டுமா? சூரியன் மலை வாயில் விழுந்ததும் கிளம்பலாம் என்று பார்த்தேன்!” என்றான் உலகநாதன்.
“இப்போதே உம்மைப் புறப்படச் சொல்லவில்லை நான். இருட்டிய பிறகு புறப்பட்டாலே போதும். காலையில் கூட ஒன்றும் நீர் சாப்பிடவில்லையே, நேரம் ரொம்ப ஆகிவிட்டதே என்று எழுப்பினேன். உமக்குப் பசிக்கவில்லையா? ஒருவேளை பசியா வரம் வாங்கி வந்திருக்கிறீரோ?” என்றாள் மாணிக்கவல்லி.
அப்போதுதான் உலகநாதத் தேவனுக்குத் தன்னுடைய வயிற்றின் நிலைமை நன்றாக ஞாபகத்துக்கு வந்தது. வயிற்றுக்குள்ளே ஏதோ ஒரு பெரிய பள்ளம் இருப்பது போலவும் அதை மேலும் மேலும் ஆழமாக யாரோ தோண்டி எடுத்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றியது!
“பசியா வரம் வாங்கிய பாக்கியசாலி அல்ல நான். அசாத்தியமாகப் பசிக்கத்தான் செய்கிறது. தூங்குகிறவனை எழுப்பிப் பசியை நினைவூட்டியதனால் ஆவது என்ன? சாப்பாட்டுக்கு ஏதாவது வழி சொன்னால் அல்லவா தேவலை? இன்னும் சற்றுநேரம் இப்படியே பசிக்கு ஒன்றும் கிடைக்காமலிருந்தால் உன்னையே சாப்பிட்டாலும் சாப்பிட்டுவிடுவேன்! கும்பகர்ணன் அப்படித்தான் தூங்கி எழுந்ததும் மனிதர்களையும் மிருகங்களையும் அப்படியே விழுங்கிப் பசி தீர்த்தானாம். தெரியுமல்லவா?” என்றான் உலகநாதன்.
மாணிக்கவல்லி அதைக் கேட்டு இளநகை புரிந்து கொண்டே, “அப்படியெல்லாம் நீர் செய்ய வேண்டியதில்லை. உமக்குச் சாப்பாடு வந்திருக்கிறது!” என்றாள். இளவரசி நோக்கிய திசையை உலகநாதத்தேவனும் நோக்கியபோது, மண்டபத்தின் தூணுக்குப் பக்கத்தில் கூஜாவில் தண்ணீரும் தட்டிலே சாப்பாடும் வைத்திருப்பது தெரிந்தது.
அவ்வளவுதான்; இளவரசன் ஒரு கணத்தில் குதித்து எழுந்து முகத்தையும் கழுவிக்கொண்டு, சாப்பாட்டுத் தட்டைத் தனக்கு அருகில் இழுத்துக் கொண்டான். அதில் இருந்த அரைப்படி அரிசிச்சோறு, கறி வகைகள், அதிரசம் பணியாரம் முதலியவற்றையெல்லாம் அரைக்கால் நாழிகை நேரத்தில் தீர்த்துத் தட்டையும் காலி செய்தான்.
இடையிடையே தனக்கு இத்தகைய பேருதவி செய்த பெண் தெய்வத்தை நன்றியுடன் பார்த்துக் கொண்டே உணவை விழுங்கினான்.
இளவரசியோ அவன் ஆர்வத்துடன் உணவருந்தும் காட்சியை அடங்காத உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சியில் அதற்குமுன் என்றும் அறியாத மகிழ்ச்சி அவளுக்கு உண்டாகிக் கொண்டிருந்தது. மாணிக்கவல்லிக்கு நினைவு தெரிந்த காலம் முதல் இன்று வரையில் அவளுக்கு மற்றவர்கள் பணிவிடை செய்வது தான் வழக்கமாயிருந்தது. தான் இன்னொருவருக்கு ஏதேனும் உதவி செய்வதில் எத்தகைய இன்பம் இருக்கிறது என்பதை நாளதுவரை அவள் அறிந்ததில்லை. இன்றுதான் முதன்முதலாக அவள் பிறருக்கு தொண்டு புரிந்து அவர்களுடைய கஷ்டத்தைப் போக்குவதில் ஏற்படும் சந்தோஷத்தை அறிந்து அநுபவித்தாள். இந்த உள்ளக் கிளர்ச்சி அவளுடைய முகத்துக்கு ஒரு புதிய சோபையைக் கொடுத்திருந்தது.
இளவரசன் உணவருந்திவிட்டுக் கை கழுவி முடிந்ததும், “போதுமா? இன்னும் ஏதாவது வேண்டுமா?” என்று மாணிக்கவல்லி கேட்டாள்.
“இனிமேல் வேண்டியது உன்னுடைய தயவு ஒன்று மட்டுந்தான். எனக்கு அடைக்கலம் அளித்து உயிரையும் கொடுத்தாயே, உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? எந்த விதத்தில் என் நன்றியைச் செலுத்தப் போகிறேன்?” என்றான் உலகநாதன்.
“இவ்விடம் நீர் வந்தது போலவே ஒருவரும் அறியாதபடி திரும்பிப் போய்ச் சேர்ந்தால் அதுதான் எனக்கு நீர் செய்யும் பிரதி உபகாரம்!” என்றாள் மாணிக்கவல்லி.
“அந்த உபகாரம் அவசியம் செய்கிறேன், அம்மணி! என் உடலில் இப்போது தெம்பு இருக்கிறது; இடுப்பிலே கத்தி இருக்கிறது; அப்புறம் சோலைமலை முருகக் கடவுளும் இருக்கிறார்! இப்போதே வேணுமானாலும் கிளம்பி விடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டு எழுந்தான்.
“வேண்டாம்; இப்போது போனால் யாராவது கவனிப்பார்கள். ஏதாவது தொல்லை ஏற்படலாம். முதலில் சொன்னபடி இருட்டிய உடனே புறப்பட்டால் போதும்!” என்றாள் இளவரசி.
“அப்படியே ஆகட்டும்; இருட்டிய பிறகு ஒரு நொடிப் பொழுதுகூட இங்கே நான் நிற்கமாட்டேன்.”
“நான் மறுபடியும் வருவேன் என்று எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்க வேண்டாம், தெரிகிறதா?”
“நன்றாய்த் தெரிகிறது. அந்த உத்தேசமே எனக்குக் கிடையாது. அதிர்ஷ்ட தேவதையின் கருணை இரண்டு தடவை கிடைத்துவிட்டது. இன்னொரு தடவையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா? இருட்டியதும் கிளம்பி விடுகிறேன்.”
“இல்லை; வேண்டாம். ஒரு வேளை இன்று சாயங்காலத்துக்குள் அப்பா திரும்பி வந்தாலும் வந்து விடுவார். எல்லாவற்றுக்கும் நான் இன்னொரு தடவை வந்து தகவல் சொல்கிறேன். அதுவரையில் நீர் இங்கேதான் இருக்க வேண்டும். மறுபடி நான் வந்து சொல்லும் வரையில் போகக்கூடாது. தெரிகிறதா?”
பெண்களின் சஞ்சல புத்தியை நினைத்துப் புன்னகை புரிந்தவண்ணம் இளவரசன், “ஆகா! தெரிகிறது! அப்படியானால் கொஞ்சம் சீக்கிரமே வந்துவிடு. இன்றைக்கு இரவு நாலு நாழிகைக்குச் சந்திரன் உதயமாகும். பளிச்சென்று அடிக்கும் நிலாவில் கோட்டைச் சுவரைத் தாண்டிச் செல்வது கஷ்டமாயிருக்கும்” என்றான்.
“ஓஹோ! நிலா வெளிச்சத்தை நினைத்தால் பயமாயிருக்கிறதா? சற்று முன்னால் ‘இடுப்பில் கத்தி இருக்கிறது; உயிருக்குப் பயமில்லை!’ என்று ஜம்பம் பேசினீரே!” என்று இளவரசி கேலி செய்தாள்.
“ஜம்பம் இல்லை, அம்மணி! நான் கூறியது உண்மைதான். என் உயிரைப்பற்றி எனக்குக் கவலையே இல்லை. என் காரணமாக உனக்கு ஒரு தொந்தரவும் ஏற்படக்கூடாதே என்றுதான் கவலைப்படுகிறேன்.”
“என்னைப்பற்றி நீர் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நான் சோலைமலை இளவரசி. என் தந்தைக்குச் செல்லப் பெண். என்னை யார் என்ன சொல்லக் கிடக்கிறது? நான் சீக்கிரமாக வந்தாலும் நேரங்கழித்து வந்தாலும் நான் வந்த பிறகு தான் நீர் போக வேண்டும். இல்லாவிட்டால்…”
“இல்லாவிட்டால் என்ன?”
“உடனே சங்கிலித் தேவனைக் கூப்பிட்டு உம்மை அவனிடம் ஒப்படைத்து விடுவேன்.”
“அவ்வளவு சிரமம் உனக்கு நான் வைக்கவில்லை. நீ மறுபடி வருகிறவரையில் இங்கேயே இருப்பேன். ஆனால் சீக்கிரமாக வந்துவிட்டால் ரொம்ப உபகாரமாயிருக்கும். நான் செய்ய வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கிறது.”
“சீக்கிரமாக வருவதற்குப் பார்க்கிறேன். ஆனால், நிஜமாகவே உமக்குப் பசி தீர்த்துவிட்டதல்லவா? நீர் சாப்பிடுவதைப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கொண்டு வரவில்லையே என்று இருந்தது.”
“அழகுதான்! இப்போது நான் சாப்பிட்டது இன்னும் மூன்று நாளைக்குப் போதும். இராத்திரி நிச்சயமாகச் சாப்பாடு கொண்டுவர வேண்டாம்.”
“ஆகா! சோலைமலை இளவரசி உமக்குச் சோறு படைக்கப் பிறந்தவள் என்று எண்ணியிருக்கிறீரோ? ஏதோ பசித்திருகிறீரே என்று பரிதாபப்பட்டு ஒருவேளை கொண்டு வந்தால் இராத்திரிக்கும் கொண்டு வா என்கிறீரே?”
“ஐயையோ! நான் அப்படிச் சொல்லவில்லையே? வேண்டாம் என்று தானே சொன்னேன்.”
“வேண்டாம் என்று சொல்வதற்கு அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியாதா? ‘கட்டாயம் கொண்டு வா’ என்று தான் அர்த்தம். ஆனால் அது முடியாத காரியம்.”
“வேண்டாம் அம்மணி, வேண்டாம். இராத்திரி எனக்கு ஒன்றும் வேண்டாம்!”
“நான் கொண்டு வருவதாக இருந்தால் அல்லவா நீர் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்?”
இளவரசன், ‘மௌனம் கலக நாஸ்தி’ என்ற பழமொழியை நினைவு கூர்ந்து சும்மா இருந்தான். இளவரசியும் போஜனப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சென்றாள்.
மாணிக்கவல்லி அவ்விடமிருந்து போன பிறகு மாறனேந்தல் இளவரசன் மாலைப்பொழுதின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவ்விதம் அவன் ஆவல் கொள்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. உடம்பின் களைப்புத் தீர்ந்துவிட்ட படியால் அவன் உடனே புறப்பட்டுச் செல்ல விரும்பினான். எத்தனையோ அவசர காரியங்கள் அவன் செய்வதற்கு இருந்தன. சோலைமலைப் பிரதேசத்தை அன்று இரவுக்கிரவே எப்படியாவது தாண்டிப் போய்விட வேண்டும். தூர தூர தேசங்களுக்குச் சென்று அங்கங்கே கும்பெனி ஆட்சிக்கு விரோதமாயுள்ள ராஜாக்களையும் நவாப்புகளையும் சந்திக்க வேண்டும். பெரிய படை திரட்டிக் கொண்டு திரும்பி வரவேண்டும். வியாபாரம் செய்வதற்காக வந்து இராஜ்யங்களை கவர்ந்து கொண்டிருக்கும் வெள்ளை மூஞ்சிகளை நாட்டிலிருந்து துரத்தியடிக்க வேண்டும். மூட்டை முடிச்சுகளைச் சுருட்டி எடுத்துக்கொண்டு அவர்கள் கப்பல் ஏறி ஓடும்படி செய்ய வேண்டும். மாடு இல்லாமலும் குதிரை இல்லாமலும் ரயில் வண்டி விடுவதாகச் சொல்லி, தேசமெங்கும் இரும்புத் தண்டவாளங்களைப் போட்டல்லவா அவர்கள் இந்தப் புராதன பாரத தேசத்தைக் கட்டி ஆளப் பார்க்கிறார்கள்? இரும்புக் கம்பியால் வேலி எடுத்துத் தேசத்தையே அல்லவா சிறைச்சாலையாக்கப் பார்க்கிறார்கள்? அப்படிப் பட்டவர்களை துரத்தியடிப்பதற்கு வடக்கே டில்லி பாதுஷா என்ன, மராட்டிய மகாவீரர்கள் என்ன, ஜான்ஸி மகாராணி என்ன, இப்படி எத்தனையோ பேர் ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாக அவன் கேள்விப்பட்டிருந்தான். அவர்களோடு தானும் சேர்ந்து கொள்ள வேண்டும். பெரிய படை திரட்டிக் கொண்டு திரும்பி வந்து தமிழகத்திலிருந்தும் வெள்ளைக்காரர்களைத் துரத்தியடிக்க வேண்டும். பிறகு முதற்காரியமாக அவர்கள் போட்ட ரயில் தண்டவாளங்களையெல்லாம் பிடுங்கி எறிந்து விட வேண்டும்!…
இப்படியெல்லாம் மாறனேந்தல் இளவரசன் மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தான். அந்த மனக்கோட்டைகளுக்கு இடையிடையே மாறனேந்தல் கோட்டையின் கதி என்ன ஆயிற்றோ, தன்னுடைய தாய் தந்தை தம்பி ஆகியவர்கள் என்ன கதியை அடைந்தார்களோ என்ற கவலையும் அவனைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்தது.
எனவே, சூரியன் எப்போது அஸ்தமிக்கும் என்று அவன் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததில் வியப்பில்லை அல்லவா?
அந்தப் பரபரப்புக்கு இரண்டாவது சிறு காரணம் ஒன்றும் இருக்கத்தான் செய்தது. அது, இரவு வந்ததும் சோலைமலை இளவரசி அங்கு வருவாள் என்ற எண்ணந்தான். தான் அந்தக் கோட்டையைவிட்டுப் போவதற்கு முன்னால் மாணிக்கவல்லியை மறுபடியும் ஒரு தடவை பார்க்கலாம் என்ற நினைவு, அவனுக்கு அதுவரையில் அநுபவித்து அறியாத ஓர் அதிசயமான உவகை உணர்ச்சியை அளித்துக் கொண்டிருந்தது. சிற்சில சமயம், காரியங்கள் வேறு விதமாக நடந்திருந்தால் இந்த அபூர்வமான தேவகன்னிகையைத் தான் மணந்திருக்கலாமல்லவா என்ற எண்ணமும் உதித்தது. சோலைமலை ராஜாவைப் பற்றி அப்படியெல்லாம் தான் வாய் துடுக்காப் பேசியிராவிட்டால் அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் வைபோகமாகக் கலியாணம் நடந்திருக்கலாமல்லவா? ஆனால் உண்மையில் தன் பேரில் குற்றம் ஒன்றுமில்லை, ‘சரா புரா’வென்று மலைக் குறவர் பாஷை பேசும் வெள்ளைக்காரச் சாதியார் வந்ததனால் அல்லவா அவ்விதம் நடவாமல் போயிற்று? தான் கரம் பிடித்து மணந்திருக்கக்கூடிய பெண்ணிடம் அடைக்கலம் கேட்கும் படியும், அவள் அளித்த ஒருவேளை உணவுக்காக நன்றி செலுத்தும்படியும் நேரிட்டது?…
இவ்விதம் உள்ளம் அங்குமிங்கும் அப்படியும் இப்படியும் ஊசலாட, உலகநாதன் ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகக் கழித்துக் கொண்டு அந்தப்புர நந்தவனத்து வஸந்த மண்டபத்தில் உட்கார்ந்திருந்தான்.
கடைசியாக, கழியாத நீள் பகலும் கழிந்தது. நாலு பக்கங்களிலும் இருள் சூழ்ந்து வந்தது. கோட்டை மதிலுக்கு அப்பால் சோலைமலைச் சிகரத்தின் உச்சியில் முருகன் கோயில் தீபம் ஒளிர்ந்தது. இனி, சீக்கிரத்திலேயே சோலைமலை இளவரசி தனக்கு விடை கொடுக்க வந்துவிடுவாள் என்ற எண்ணத்தினால் இளவரசனின் நெஞ்சு ‘தடக், தடக்’ என்று அடித்துக் கொள்ளத் தொடங்கியது.
பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவனுடைய கண்ணெதிரே தோன்றிய முருகன் கோயில் தீபம் பெரிதாகிக் கொண்டு வந்தது. கிட்டத்தட்ட மாலை வேளையில் உதிக்கும் பூரண சந்திரனுடைய வடிவை அது அடைந்தது. சட்டென்று அந்தப் பூரண சந்திரன் ரயில் வண்டியின் ஸர்ச் லைட்டாக மாறியது. ரயிலும் ஸர்ச் லைட்டும் அதிவேகமாக அவனை நெருங்கி நெருங்கி வந்தன. ஸர்ச் லைட்டின் உஷ்ணமான வெளிச்சம் அவனுடைய முகத்தில் பளீரென்று விழுந்து மூடியிருந்த கண்களையும் கூசும்படி செய்தது.
குமாரலிங்கம் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான். தான் சோலைமலை இளவரசன் அல்லவென்பதையும் தேசத்தொண்டன் குமாரலிங்கம் என்பதையும் அவன் உணர்வதற்குச் சிறிது நேரம் பிடித்தது. கடைசியாக அவன் முகத்தில் அடித்த வெளிச்சம் ரயில் வண்டியின் ஸர்ச் லைட் வெளிச்சம் அல்ல. உச்சி வேளைச் சூரியனின் வெயில் வெளிச்சம் என்பதையும் தெரிந்து கொண்டான்.
உதய நேரத்தில் தான் அந்தப் பாழுங்கோட்டைக்குள் பிரவேசித்து அதிகமாக இடியாமலிருந்த வஸந்த மண்டபத்தில் படுத்த விஷயமும் நினைவுக்கு வந்தது. ஆனால், அதுவரையில் அவன் கண்ட காட்சி, அடைந்த அனுபவம் எல்லாம் தூக்கத்திலே கண்ட மாயக்கனவா? இல்லை, இல்லை, ஒரு நாளும் இல்லை. ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொர் அநுபவமும் பிரத்தியட்சமாகப் பார்த்து, உணர்ந்து அநுபவித்ததாக வல்லவா தோன்றின? அவ்வளவும் வெறும் கனவாகவோ, குழம்பிப் போன மூளையின் விசித்திரக் கனவாகவோ, குழம்பிப் போன மூளையின் விசித்திரக் கற்பனையாகவோ இருக்க முடியுமா? அல்லது உண்மையிலேயே முன்னொரு பிறவியில் தன்னுடைய வாழ்க்கை அநுபவங்கள்தான் அவ்வளவு தெளிவாக நினைவுக்கு வந்தனவா?
இத்தகைய மனக்குழப்பத்துடன் குமாரலிங்கம் சுற்றுமுற்றும் பார்த்தபோது, சற்றுத் தூரத்தில் அந்தப் பாழடைந்த கோட்டையில் மனிதர் நடந்து நடந்து ஏற்பட்டிருந்த ஒற்றையடிப் பாதை வழியே தலையில் கூடையுடன் ஓர் இளம் பெண் வருவதைக் கண்டேன். அந்தக் காட்சி அவனுடைய நெஞ்சின் ஆழத்தில் மகிழ்ச்சியையும், அடி வயிற்றில் திகிலையும் உண்டாக்கியது.
எக்காரணத்தினாலோ மகிழ்ச்சியும் காட்டிலும் திகில் அதிகமாயிற்று. தன்னுடைய நிலைமையும் ஞாபகத்துக்கு வந்தது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் ஒற்றர்கள் தன்னை நாலாபக்கத்திலும் தேடிக் கொண்டிருப்பார்கள். இச்சமயம் தான் அந்தப் பாழும் கோட்டையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் அந்தப் பெண் ஏதாவது கேட்கக்கூடும். தான் ஏதாவது பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதனால் என்ன விளையுமோ என்னவோ?
அவள் கண்ணில் படாமல் மறைந்து கொள்வதற்கும் அப்போது நேரமில்லை. பின்னே, வேறு என்ன செய்யலாம்? மறுபடியும் அங்கேயே படுத்துத் தூங்குவது போலப் பாசாங்கு செய்வதுதான் சரி. அந்தப் பெண் தான் தூங்குவதைப் பார்த்துவிட்டுப் பேசாமல் தன் வழியே போய் விடுவாள். பிறகு எழுந்து மேலே தான் செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றித் தீர்மானித்துக் கொள்ளலாம்.
இவ்விதம் முடிவு செய்துகொண்டு குமாரலிங்கம் மறுபடியும் அந்தப் பழைய வஸந்த மண்டபத்தின் குறட்டில் படுத்தான்; இரண்டு கண்களையும் இறுக மூடிக் கொண்டான்.
7. மணியக்காரர் மகள்
குமாரலிங்கம் கண்ணை மூடிக்கொண்ட பிறகு அவனுடைய செவிகள் மிகவும் கூர்மையாயின. குயில்கள் ‘குக்கூ’ இசைக்கும் சத்தமும், அணில்கள் ‘கிச் கிச்’ என்று இசைக்கும் சத்தமும், வேறு பலவகைப் பறவைகள் ‘கிளக்’ ‘கிளக்’ என்றும், ‘கிளிங்’ ‘கிளிங்’ என்றும் ‘கிறீச்’ ‘கிறீச்’ என்றும் கத்தும் சத்தமும் கேட்டன. இவ்வளவு சத்தங்களுக்கு மத்தியில் ‘கலின்’ ‘கலின்’ என்று கேட்ட மெட்டிகளின் சத்தத்திலேதான் அவனுடைய கவனம் நின்றது. சீக்கிரத்தில் அந்தச் சத்தம் நின்றுவிட்டது. அவ்வளவு காது கொடுத்து கவனமாகக் கேட்டும் கேட்கவில்லை. அந்தப் பெண் போய்விட்டாளா? – அடாடா! – போயே போய் விட்டாளா? அவள் தலையிலே இருந்த கூடையில் மோரோ, தயிரோ அல்லது சோறோ இருந்திருக்க வேண்டும். வயிற்றுப்பசி கொல்லுகிறதே; வந்தது வரட்டும் என்று அவளைப் பார்த்துப் பேசாமல் போனோமே? நிஜமாகவே போய்விட்டாளா? அல்லது, ஒரு வேளை…
குமாரலிங்கம் இலேசாகக் கண்ணிமைகளைச் சிறிது திறந்து பார்த்தான். அந்தப் பெண் போகவில்லை. தன் எதிரிலே அருகில் நின்று கொண்டிருக்கிறாள் என்று தெரிந்து கொண்டாள். உடனே தன்னை மீறிவந்த சங்கோசத்தினால் மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
குன்றிலிருந்து குதித்தோடும் அருவியின் சலசல சத்தத்தைப் போன்ற சிரிப்பின் ஒலி அவனுக்குக் கேட்டது.
அந்த ஒலி செவியில் விழுந்ததும், ஸ்விட்சை அமுக்கியதும் இயங்கும் மின்சார இயந்திரத்தைப் போல் குமாரலிங்கம் பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தான். தன் முன்னால் நின்ற பெண்ணின் முகத்தை ஏறிட்டு உற்றுப் பார்த்தான். ஆச்சரியம் எல்லை மீறியது. அவள் தான்; சந்தேகமில்லை! சோலைமலை இளவரசியேதான். உடுத்தியிருந்த உடையிலும் அணிந்திருந்த ஆபரணங்களிலுந்தான் வித்தியாசமே தவிர, முகத்திலும் தோற்றத்திலும் யாதொரு வேற்றுமையும் இல்லை.
குமாரலிங்கத்தின் தலை சுழன்றது.
நல்ல வேளையாக, அந்தப் பெண் அடுத்தாற்போல் சொன்ன வார்த்தை அவன் மயங்கிக் கீழே விழாமல் இருந்தது.
“இந்த மண்டபத்தில் உச்சி வேளையில் படுத்துத் தூங்கக் கூடாது, ஐயா! இங்கே மோகினிப் பிசாசு உலாவுது என்று எல்லாரும் சொல்கிறாங்க!”
இதைக் கேட்டதும் குமாரலிங்கம் குபீர் என்று சிரித்தான். ஆனால் சிரிப்பின் சத்தம் அவ்வளவு கணீரென்று கேட்கவில்லை. அதன் காரணத்தை அந்தப் பெண்ணே கூறினாள்.
“பாவம்! சிரிக்கக்கூடச் சக்தி இல்லை. வயிற்றுக்குச் சாப்பிட்டு ஒரு மாதம் ஆனாற்போலேயிருக்கு, ஆளைப் பார்த்தால்! உடம்புக்கு ஏதாவது அசௌக்கியமா, ஐயா?” என்று அவள் கூறியது குமாரலிங்கத்தின் செவியில் இன்ப கீதமாகப் பாய்ந்தது.
“அதெல்லாம் எனக்கு உடம்பு அசௌக்கியம் ஒன்றுமில்லை. நீ யார், அம்மா?” என்று குமாரலிங்கம் கேட்ட வார்த்தை ஈன ஸ்வரத்திலேதான் வெளி வந்தது.
“நான் இந்த ஊர் மணியக்காரர் மகள். உனக்கு உடம்பு அசௌக்கியம் இல்லாவிட்டால் பசியாய்த்தான் இருக்க வேணும். அப்படி நீ சுருண்டு படுத்துக் கிட்டிருப்பதைப் பார்த்தபோதே தெரிந்தது. சோறு கொஞ்சம் மிச்சம் இருக்கு; சாப்பிடுகிறாயா, ஐயா!”
குமாரலிங்கத்தின் வயிறு ‘கொண்டு வா! கொண்டு வா!’ என்று முறையிட்டது. ஆனால் அவனுடைய சுய கௌரவ உணர்ச்சி அதற்குக் குறுக்கே வந்து நின்றது.
“அதென்ன அப்படிக் கேட்டாய்? என்னைப் பார்த்தால் அவ்வளவு கேவலமாயிருக்கிறதா? பிச்சைக்காரன் மாதிரி தோன்றுகிறதா?” என்றான் குமாரலிங்கம்.
“பிச்சைக்காரன் என்று யார் சொன்னாங்க? பார்த்தால் மவராஜன் வீட்டுப் பிள்ளை மாதிரிதான் இருக்கு. ஆனால், எப்பேர்ப்பட்ட பிரபுக்களுக்கும் சில சமயம் கஷ்டம் வருகிறது சகஜந்தானே? அதிலும் நல்லவங்களுக்குத்தான் உலகத்திலே கஷ்டம் அதிகமாய் வருகிறது. இராமர், சீதை, அரிச்சந்திரன், சந்திரமதி, தர்ம புத்திரர் இவர்கள் எல்லாரும் எவ்வளவோ கஷ்டப்படவில்லையா?”
இந்தப் பட்டிக்காட்டுப் பெண் விவாதத்தில் எவ்வளவு கெட்டிக்காரியாயிருக்கிறாள் என்று குமாரலிங்கம் மனத்திற்குள்ளே வியந்தான். எனினும், விவாதத்தில் தோற்க மனம் இல்லாமல், “அவர்களையெல்லாம் போல நான் நல்லவனுமில்லை; எனக்குக் கஷ்டம் ஒன்றும் வந்து விடவும் இல்லை” என்றான்.
“அப்படியென்றால் ரொம்ப சந்தோஷம்; நான் போய் வாரேன்! உன்னோடு வெறும் பேச்சுப் பேசிக்கிட்டிருக்க எனக்கு நேரம் இல்லை. ஆயாள் கோபித்துக் கொள்வாள்” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் மேலே போகத் தொடங்கினாள். குமாரலிங்கத்துக்குத் தன் பிராணனே தன்னை விட்டுப் போவது போலிருந்தது. அவள் பத்தடி போவதற்கும் “அம்மா! அம்மா! இங்கே வா! பசி காதை அடைக்கிறது. கொஞ்சம் சோறு போட்டுவிட்டுப் போ!” என்றான்.
போகும்போது கொஞ்சம் சிடுசிடுப்போடு போனவள், இப்போது மலர்ந்த முகத்தோடு திரும்பி வந்தாள்.
“இதற்கு என்னத்திற்கு இவ்வளவு வறட்டு ஜம்பம்? ஆளைப் பார்த்தால்தான் தெரிகிறதே, மூன்று நாளாய்ப் பட்டினி என்று? இந்தா!” என்று சொல்லி ஒரு மலை வாழை இலையை எடுத்துக் கொடுத்தாள்.
“ஜம்பம் ஒன்றும் இல்லை, அம்மா! நீ யாரோ, என்னவோ என்றுதான் நான் கொஞ்சம் யோசித்தேன்.”
“இதை முதலிலேயே நீ கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன். நாங்கள் நல்ல சாதிதான். முக்குலத்தோர் குலம். எங்கள் ஐயா பெயர் சிங்கார பாண்டியத் தேவர்.”
“சாதியைப்பற்றி நான் கேட்கவில்லை. நான் தேசத் தொண்டன். முக்குலத்தோரானாலும் எக்குலத்தோரானாலும் எனக்கு ஒன்றுதான்; வித்தியாசம் கிடையாது.”
இலையில் சோற்றைப் படைத்துக் கொண்டு மணியக்காரர் மகள், “தேசத் தொண்டன் என்றால் என்ன? அது ஒரு சாதியா?” என்று கேட்டாள்.
குமாரலிங்கம் அப்போது தன் மனத்திர்குள், ‘அடாடா! நம்முடைய பெண் குலத்தை நாம் எப்படிப் படிப்பில்லாமல் வைத்துக் கொண்டிருக்கிறோம்?’ என்று எண்ணிப் பரிதாபப் பட்டான். பிறகு, “தேசத் தொண்டன் என்பது ஒரு சாதியல்ல. தேசத் தொண்டர்களுக்குச் சாதி என்பதே கிடையாது” என்றான்.
“அது எப்படிச் சாதியே இல்லாமல் இருக்கும்? ஏதாவது ஒரு சாதியில் பிறந்துதானே ஆக வேண்டும்? தேசத் தொண்டர் என்றால் சாதி கெட்டவர்கள் என்று சொல்கிறாயா?”
“ராமா ராமா! சாதியே இல்லை என்றால் சாதி எப்படிக் கெடும்? இருக்கட்டும்; ‘தேசம்’ என்றால் இன்னதென்றாவது உனக்குத் தெரியுமா?”
“தெரியாமல் என்ன? இந்த மலைக்கு அப்பாலே மலையாள தேசம் இருக்கிறது. கொலை கிலை பண்ணறவங்களைத் தேசாந்தரம் அனுப்பறாங்கள்!”
“அது போகட்டும்; காந்தி என்று ஒருவர் இருப்பதாகக் கேட்டிருக்கிறாயா?”
“காந்தி மகாத்துமா என்று சொல்லிக்கிறாக! நேரே பார்த்ததில்லை.”
“சரி; காங்கிரஸ் மகாசபை என்றால் தெரியுமா?”
“எல்லாம் தெரியும். முன்னேயெல்லாம் காங்கிரஸ் என்று சொல்லி ‘மஞ்சப் பெட்டியிலே வோட்டுப் போடு’ என்று சொன்னாங்க. இப்போது, ‘காங்கிரஸ்காரனுங்க அங்கே கொள்ளையடிச் சாங்க’, ‘இங்கே கொள்ளையடிச்சாங்க’ என்று சொல்லிக்கிறாங்க!”
“கடவுளே! கடவுளே! காங்கிரஸ்காரர்கள் கொள்ளையடிக்க மாட்டார்கள், அம்மா! வெள்ளைக்காரர்களாகிய கொள்ளைக்காரர்களை இந்தப் பாரத தேசத்திலிருந்து துரத்துவதுதான் காங்கிரஸ் மகாசபையின் நோக்கம். இந்தப் புண்ணிய பூமியில் எத்தனையோ வீரப் பெண்மணிகள் இன்றைக்குச் சுதந்திரக் கொடியை நாட்டக் கிளம்பியிருக்கிறார்கள்…”
“கொடி போடுகிறவர்கள் போடட்டும். அதெல்லாம் எனக்கு என்னத்திற்கு? எங்க ஐயாவுக்கு என்னமோ இப்போதெல்லாம் காங்கிரஸ்காரங்க என்றால் ரொம்பக் கோவம்…”
“அடாடா! அப்படியா? அவரை மட்டும் நான் நேரில் பார்த்தால், உண்மையை எடுத்துச் சொல்லி அவர் மனத்தை மாற்றி விடுவேன்…”
“எங்க ஐயாவை உனக்குத் தெரியாது. தெரிந்தால் இப்படிப் பேசமாட்டாய். ரொம்பக் கோவக்காரர். ‘காங்கிரஸ்காரனுங்க யாராவது இந்த ஊரில் கால் எடுத்து வைக்கட்டும்; காலை ஒடித்து விடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நீ காங்கிரஸ் கட்சிக்காரன் என்றால், எங்க அப்பா ஊருக்குத் திரும்பி வரத்துக்குள்ளே போய் விடு!”
இந்த வார்த்தைகள் குமாரலிங்கத்துக்கு அவ்வளவாக ரஸிக்கவில்லை. இன்னதென்று விவரமாகாத ஒருவிதத் திகில் அவன் மனத்தில் உண்டாயிற்று. எல்லாம் காலையில் கண்ட கனவில் நடந்த மாதிரியே நடக்கிறதே என்ற எண்ணமும் தோன்றியது.
“சரி, அந்தப் பேச்சை விட்டுவிடலாம்… உன் பெயர் என்ன?”
“என் பெயர் பொன்னம்மா, எதற்காகக் கேட்கிறாய்?”
“இவ்வளவு உபகாரம் எனக்குச் செய்தாயே? உன் பெயரையாவது நான் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டாமா?”
“உபகாரம் செய்கிறவர்களை இந்த நாளில் யார் ஞாபகம் வைத்துக் கொள்ளுகிறார்கள்? அதெல்லாம் வெட்டிப் பேச்சு! காரியம் ஆக வேண்டியிருந்தால் சிநேகம், உறவு எல்லாம் கொண்டாடுவார்கள்; காரியம் ஆகிவிட்டால் நீ யாரோ, நான் யாரோ!”
“அப்படிப்பட்ட மனிதன் அல்ல நான். ஒரு தடவை உதவி செய்தவர்களை ஒரு நாளும் மறக்க மாட்டேன். அதிலும் உன்னை நிச்சயமாக மறக்க மாட்டேன் – ஆமாம்; மணியக்காரர் மகள் என்கிறாயே? யாருக்குச் சாப்பாடு கொண்டு போனாய்? வேறு யாரும் வேலைக்காரர் இல்லையா?”
“வேலைக்காரர்கள் இருக்கிறார்கள், எல்லோரும் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள். கரும்பு வெட்டி இப்போது வெல்லம் காய்ச்சியாகிறது. அப்பா ஊரில் இல்லாததால் ஆயாளும் அண்ணனும் ஆலை அடியில் இருக்கிறார்கள். வெறுமனே வீட்டிலே குந்தி இருப்பானேன் என்று அவர்களுக்குச் சோறு கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருகிறேன்.”
“அப்படியானால், நாளைக்கும், இந்த வழி வருவாயா?”
“வந்தாலும் வருவேன். ஆனால் நாளைக்குக்கூட நீ இங்கேயே இருப்பாயா? உனக்கு வீடு வாசல் வேலை வெட்டி ஒன்றும் கிடையாதா?”
“நான் தான் அப்போதே சொன்னேனே, தேசத் தொண்டு தான் எனக்கு வேலை என்று.”
“அதென்னமோ எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் போய் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பொன்னம்மாள் அங்கிருந்து புறப்பட்டாள்.
“நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் போகிறாயே? நாளைக்கும் இந்த மாதிரி ஒரு பிடி சோறு போட்டுவிட்டுப் போனாயானால் தேவலை. இன்னும் இரண்டு மூன்று நாளைக்கு நான் இந்தப் பாழும் கோட்டையிலே இருந்து தீர வேண்டும். சாப்பிட்ட பிறகுதான் களைப்பு இன்னும் அதிகமாய்த் தெரிகிறது. இரண்டு மூன்று நாளைக்கு ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது போலிருக்கிறது. ஊருக்குள் வரலாம் என்று பார்த்தால் உன் தகப்பனார், காங்கிரஸ்காரன் என்றால் காலை ஒடித்து விடுவார் என்கிறாய்.”
“அதில் என்னமோ சந்தேகமில்லை. உனக்கு நான் சோறு போட்டதாகத் தெரிந்தால் என்னையே அவர் காளவாயில் வைத்து விடுவார்!”
“அப்படியானால் நீதான் இரண்டு மூன்று நாளைக்கு எனக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.”
“நல்ல காரியம்! முதலில், நாளை ஒரு நாளைக்கு என்கிறாய். அப்புறம் மூன்று நாளைக்கி என்கிறாய். வழிப் போக்கர்களுக்குச் சோறு கொண்டு வந்து படைப்பது தான் எனக்கு வேலை என்று நினைத்தாயா?”
“சரி! அப்படியென்றால் நான் பட்டினி கிடந்து சாகிறேன். இங்கே பறந்து திரியும் கழுகுகளுக்கு நல்ல இரை கிடைக்கும். இன்றைக்குக் கூட உன் பாட்டுக்குப் பேசாமல் போயிருக்கலாமே! தூங்கினவனை எழுப்பிச் சோறு போட்டு இருக்க வேண்டாமே?”
பொன்னம்மாள் ‘கலகல’வென்று சிரித்தாள். அவள் சிரித்த போது குமாரலிங்கத்துக்குக் குன்றும் மரமும் கொடியும் சகல ஜீவராசிகளும் ‘கலகல’வென்று சிரிப்பது போலத் தோன்றியது. அவனுடைய சோர்வடைந்த முகத்திலும் புன்னகை பூத்தது.
பொன்னம்மாளை முன்னைவிட ஆர்வத்தோடு பார்த்து “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டான்.
“தூங்கினவனை எழுப்பியதாகச் சொன்னதற்குத் தான் சிரித்தேன். நிஜமாக நீ தூங்கினாயா, அல்லது பொய் சொல்லுகிறாயா?”
“இல்லை; பொய்த் தூக்கந்தான். ஆனால் நான் கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தபோது நீ சிரித்தாயே; அது எதற்காக?”
“நீ எழுந்து உட்கார்ந்து என்னைப் பார்த்ததும் சிரிக்க முடியாமல் சிரித்தாயே, அது எதற்காக? முதலில் அதைச் சொல்.”
“நீ முதலில் சொன்னால் அப்புறம் நானும் சொல்கிறேன்.”
“நிச்சயமாகச் சொல்வாயா?”
“சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.”
“நேற்றைக்கு நான் சந்திரஹாசன் கதை படித்துக் கொண்டிருந்தேன்!”
“ஓஹோ! உனக்குப் படிக்கக்கூடத் தெரியுமா?”
“ஏன் தெரியாது? நாலாவது வகுப்பு வரையில் படித்திருக்கிறேன். அப்புறம் வீட்டிலேயே கதைப் புத்தகங்கள் படிப்பதுண்டு.”
“சரி, மேலே சொல்லு!”
“சந்திரஹாசன் கதையில் இப்படித்தான் ஒரு ராஜகுமாரன் நந்தவனத்தில் வந்து படுத்துத் தூங்குகிறான். மந்திரிகுமாரி அங்கே வந்து அவனைப் பார்த்துவிட்டு, தன் ஐயாதான் தனக்கு மாப்பிள்ளை தேடி அனுப்பியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறாள். இப்போது எங்க ஐயாவும் ஊரில் இல்லாதபடியால் அவர்தான் ஒரு வேளை மாப்பிள்ளையைத் தேடி அனுப்பியிருக்கிறாரோ என்று நினைத்தேன். அது என்ன பைத்தியக்கார எண்ணம் என்று தோன்றியதும் சிரிப்பு வந்தது!”
“ஏன் அதைப் பைத்தியக்கார எண்ணம் என்கிறாய்? ஏன் உண்மையாயிருக்கக்கூடாது?”
“உன்னோடு வெறும் பேச்சுப் பேச எனக்கு நேரம் இல்லை. நீ என்னைப் பார்த்ததும் ஏன் சிரித்தாய் என்று சொல்லுவாயா, மாட்டாயா?”
“நான் எழுந்து உட்கார்ந்ததும், ‘இந்த மண்டபத்தில் உச்சி வேளையில் படுக்கக்கூடாது, மோகினிப்பிசாசு இங்கே இருக்கிறது’ என்று சொன்னாயல்லவா? உன்னைத் தவிர வேறு மோகினிப் பிசாசு எங்கேயிருந்து வரப்போகிறது என்று எண்ணிச் சிரித்தேன். எப்பேர்ப்பட்ட தேவகோலகத்து மோகினியும் அழகுக்கு உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும்!”
“உன்னைப்பற்றி ஒரு பாட்டு இட்டுக் கட்டியிருக்கிறேன். கேட்டுவிட்டுப் போ!”
“பாட்டா? எங்கே, சொல்லு?”
பொன்னம்மாள் ரொம்பப் பொல்லாதவள்
பொய் என்ற வார்த்தையே சொல்லாதவள்என்று குமாரலிங்கம் பாடியதைக் கேட்டு மணியக்காரர் மகள் தன் செவ்விதழ்களை மடித்து அழகு காட்டி விட்டுக் கூடையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டாள். பிறகு ஒரு கையை வீசிக்கொண்டு காலை எட்டி வைத்து நடந்தாள்.
“நாளைக்குக் கட்டாயம் வருவாயல்லவா? இன்னும் இரண்டு மூன்று நாள் உயிர்ப்பிச்சைக் கொடுத்து நீதான் காப்பாற்ற வேண்டும்!” என்றான் குமாரலிங்கம்.
பொன்னம்மாள் திரும்பிப் பார்த்து இன்னும் ஒரு தடவை அவனுக்கு அழகு காட்டிவிட்டு விரைவாக நடந்தாள். அவள் நடையிலும் தோற்றத்திலும் என்றுமில்லாத மிடுக்கும் கம்பீரமும் அன்று காணப்பட்டன.
பொன்னம்மாள் போன பிறகு குமாரலிங்கம் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். அன்று அதிகாலை நேரத்தில் அங்கே தான் வந்து உட்கார்ந்த போது கண்ட கனவுக் காட்சியில் நடந்தது போலவே ஏறக்குறைய இப்போது உண்மையாக நடப்பதை எண்ணி எண்ணி வியந்தான். சிறிது நேரத்துக்கெல்லாம் யாரோ குடியானவர்கள் அந்தப் பக்கம் நெருங்கி வருவதாகத் தோன்றவே, எழுந்து சென்று சற்றுத் தூரத்தில் இடிந்து கிடந்த அரண்மனைக்குள்ளே புகுந்தான். அங்கு எவ்வித நோக்கமும் இன்றி அலைந்தான். மறுபடியும் அதே மாய உணர்ச்சி – அந்த இடங்களில் எல்லாம் ஏற்கெனவே ஒரு தடவை சஞ்சரித்திருப்பது போன்ற உணர்ச்சி – அவனைக் கவர்ந்தது.
அதை உதறித் தள்ளிவிட்டு வெளியில் வந்து பாழடைந்த கோட்டை கொத்தளங்களிலும், அருகிலேயிருந்த காட்டுப் பிரதேசங்களையும் சுற்றி அலைந்தான். அஸ்தமித்ததும் களைப்பு மேலிட்டு வந்தது. மறுபடியும் வஸந்த மண்டபத்தில் உட்கார்ந்தான். அந்தக் கோட்டையிலும் அரண்மனையிலும் முற்காலத்தில் யார் யார் வசித்தார்களோ, என்னென்ன பேசினார்களோ, ஏதேது செய்தார்களோ என்றெல்லாம் அவனுடைய உள்ளம் கற்பனை செய்து கொண்டிருந்தது.
பகலில் வெகு நேரம் தூங்கியபடியால் இரவில் சீக்கிரம் தூக்கம் வராதோ என்று முதலில் தோன்றியது. அந்த பயத்துக்குக் காரணமில்லையென்று சற்று நேரத்துக்கெல்லாம் தெரிந்தது. அவனுடைய பூப்போன்ற கரங்கள் அவனுடைய கண்ணிமைகளைத் தடவிக் கொடுக்கத் தொடங்கின.
அச்சமயம் கிழக்குத் திக்கில் குன்று முகட்டில் மேலே வெள்ளி நிறத்து நிலவின் ஒளி பரவிற்று. சிறிது நேரத்துக்கெல்லாம் ஏறக்குறைய முழு வட்ட வடிவமாயிருந்த சந்திரன் குன்றின் மேலே வந்தது. பால் போன்ற நிலவு அந்தப் பழைய கோட்டை கொத்தளங்களின் மேலே நன்றாய் விழுந்ததும், மறுபடியும் காலையில் நேர்ந்த அதிசய அநுபவம் குமாரலிங்கத்துக்கு ஏற்பட்டது.
பாழடைந்த கோட்டை கொத்தளங்கள் புதிய கோட்டை கொத்தளங்கள் ஆயின. இடிந்து கிடந்த அரண்மனை மேல் மச்சுக்கள் உள்படப் புதிய வனப்புப் பெற்றுத் திகழ்ந்தன. வஸந்த மண்டபமும் புதிய தோற்றம் அடைந்தது. சுற்றிலும் இருந்த நந்தவனத்திலிருந்து புது மலர்களின் நறுமணம் பரவி வந்து தலையைக் கிறுகிறுக்கச் செய்தது. குமாரலிங்கமும் மாறனேந்தல் இளவரசனாக மாறினான்.
8. கண்ணீர் கலந்தது!
சென்ற அத்தியாயத்தின் இறுதியில் ‘குமாரலிங்கம் மாறனேந்தல் இளவரசனாக மாறினான் என்று குறிப்பிட்டிருந்தோம். உண்மையில் மாறனேந்தல் மகாராஜாவாக மாறினான்’ என்று சொல்லியிருக்க வேண்டும்.
அன்றைய தினம் பகலில் மாறனேந்தல் கோட்டையில் நடந்த துக்ககரமான சம்பவங்களின் காரணமாக இளவரசன் உலகநாதத் தேவனை இனி நாம் ‘மகாராஜா உலகநாதத்தேவர்’ என்று அழைப்பது அவசியமாகிறது.
மாலை எப்போது வரும், மதியம் எப்போது உதயமாகும், மாணிக்க வல்லியின் பாத சலங்கை ஒளி எப்போது கேட்கும் என்று உலகநாதத்தேவர் பிற்பகல் எல்லாம் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். கடைசியாக மாலையும் வந்தது. பின்னர் உலகநாதத் தேவரின் ஆவல் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு வேளை தம்முடைய ஆவல் பூர்த்தியாகாமலேயே போய்விடுமோ, எதிர்பாராத தடை ஏதேனும் நேர்ந்து மாணிக்கவல்லி வராமலிருந்து விடுவாளோ என்ற பயமும் அவருடைய மனத்தில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.
ஆனால், அம்மாதிரி உலகநாதத் தேவர் ஏமாற்றமடையும்படி நேரிடவில்லை. கீழ்த்திசைக் குன்றின் மேல் சந்திரன் தோன்றிய சிறிது நேரத்துக்கெல்லாம் அரண்மனைப் பக்கத்திலிருந்து ஒரு பெண்ணின் உருவம் வருவதை அவர் கண்டார்.
இளவரசி நெருங்கி வர வர அவளுடைய நடையிலே ஒரு வித்தியாசம் இருப்பது தெரிந்தது. முன்னே அவளுடைய நடையில் தோன்றிய மிடுக்கும் கம்பீரமும் இப்போது இல்லை. அது மட்டுந்தானா வித்தியாசம்? அன்று காலையும் மத்தியானமும் இளவரசி நடந்த போதெல்லாம் அவளுடைய காற்சிலம்பு ‘கலீர் கலீர்’ என்று சப்தித்தது. அந்த ஒலி இப்போது ஏன் கேட்கவில்லை?
வஸந்த மண்டபத்தின் குறட்டில் உட்கார்ந்திருந்த உலகநாதத் தேவர் விரைந்து எழுந்து இளவரசி மாணிக்கவல்லியை எதிர்கொண்டு அழைப்பதற்காகச் சென்றார். ஏதோ ஒரு கெட்ட செய்தியைக் கேட்கப் போகிறோமென்ற உள்ளுணர்ச்சி அவருடைய நெஞ்சில் அலைமோதி எழுந்து மார்பை விம்மி வெடிக்கச் செய்தது.
மாலை நேரத்தில் மடலவிழ்ந்து மணம் விரித்த அழகிய மலர்கள் குலுங்கிய புஷ்பச் செடிகளுக்கு மத்தியில் மாணிக்கவல்லியின் முகமலரை உலகநாதத்தேவர் பார்த்தார்.
அவளுடைய விசாலமான கரிய விழிகள் இரண்டிலும் இரண்டு கண்ணீர்த்துளிகள் ததும்பி நின்று, வெண்ணிலவின் ஒளியில் நன்முத்துக்களைப் போல் பிரகாசித்தன.
அதைக்கண்ட உலகநாதத்தேவர் தம்முடைய உள்ளத்தில் உதித்த உற்பாத உணர்ச்சி உண்மைதான் என்று எண்ணமிட்டார். ஏதோ ஒரு கெட்ட செய்தி, அதுவும் தம்மைப்பற்றிய கெட்ட செய்தி, இளவரசியின் காதுக்கு எட்டியிருக்க வேண்டும்! அதில் சந்தேகமில்லை.
இளவரசியை மறுபடி சந்தித்ததும் ஏதேதோ பரிகாசமாகப் பேசவேண்டுமென்று உலகநாதத்தேவர் யோசித்து வைத்திருந்தார். அவையெல்லாம் இப்போது மறந்து போயின.
“உன் கண்களில் ஏன் கண்ணீர் ததும்புகிறது?” என்று கேட்பதற்குக் கூட அவருக்கு நா எழவில்லை. கனிந்த சோகத்தினாலும் கண்ணீரினாலும் வெண்ணிலாவின் மோகன நிலவினாலும் பதின்மடங்கு அழகு பெற்று விளங்கிய மாணிக்கவல்லியின் முகத்தைப் பார்த்தது பார்த்த படியே திகைத்துப்போய் நின்றார்.
எனவே, மாணிக்கவல்லிதான் முதலில் பேசும்படியாக நேர்ந்தது. நீண்ட பெருமூச்சுகளுக்கும் விம்மல்களுக்குமிடையில் “இந்தக் கோட்டையை விட்டுப் போக முடியாது! இங்கேதான் இருந்தாக வேண்டும்!” என்றாள்.
அவள் சொல்ல வந்த கெட்ட செய்தியை இன்னும் சொல்லவில்லை. என்று ஊகித்துக் கொண்ட உலகநாதத்தேவர், “இன்றிரவு இங்கே நான் எப்படி இருக்க முடியும்? இரவு நேரத்தில் தப்பிச் சென்றால்தானே செல்லலாம்? எனக்குத் தலைக்குமேலே எத்தனையோ வேலை இருக்கிறதே!” என்றார்.
“அதெல்லாம் எனக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் நீங்கள் இன்றிரவு போக முடியாது. இந்தக் கோட்டையைச் சுற்றிலும் உள்ள மலைகளிலும் காடுகளிலும் இன்று இரவெல்லாம் இருநூறு வீரர்கள் தொண்ணூறு நாய்களுடன் உங்களைத் தேடி வேட்டையாடப் போகிறார்கள்!” என்று இளவரசி சொன்னதும், அதுவரையில் பயமென்பதையே இன்னதென்று அறியாத வீரர் உலகநாதத்தேவரின் நெஞ்சில் பீதிப் பிசாசின் நீண்ட விரல் நகங்கள் தோண்டுவது போல் இருந்தது.
விரைவிலேயே அந்த உணர்ச்சியைச் சமாளித்துக் கொண்டு “தேடினால் தேடட்டுமே; அவர்களிடம் நான் அகப்பட்டுக்கொள்ள மாட்டேன். அப்படியே அகப்பட்டுக் கொண்டாலும் என்னதான் செய்துவிடுவார்கள்? சாவுக்குப் பயப்படுகிறவன் நானல்ல!” என்றார் தேவர்.
“ஐயா! தாங்கள் சாவுக்கு பயப்படாதவர் என்பதை நன்கு அறிவேன். நானும் சாவுக்குப் பயப்படவில்லை. ஆனால், தங்களை உயிரோடு பிடிக்க வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறார்கள். தங்களைப் பிடித்த பிறகு என்ன செய்ய உத்தேசித்திருக்கிறார்கள் என்பதை அறிந்தால், இப்படி அலட்சியமாகப் பேசமாட்டீர்கள்!” என்று மாணிக்கவல்லி சொன்னபோது அவளுடைய குரல் நடுங்கியது.
உலகநாதத் தேவர் பரிகாசம் தொனித்த குரலில் “என்னை உயிரோடு பிடித்து என்னதான் செய்யப் போகிறார்களாம்? பழைய காலத்துக் கதைகளில் செய்தது போல் பூமியில் குழிவெட்டிப் புதைத்து யானையின் காலால் இடறச் செய்யப் போகிறார்களோ?” என்று கேட்டார்.
“அப்படிச் செய்தால் கூடப் பாதகமில்லை. இன்னும் கொடுமையான காரியம் செய்யப் போகிறார்கள். அதைச் சொல்லுவதற்கே என்னால் முடியவில்லை. அவ்வளவு பயங்கரமான காரியம்!” என்றாள் மாணிக்கவல்லி.
இவ்விதம் சொல்லியபோதே அவளுடைய உடம்பு நடுங்குவதையும் அவள் முகத்திலே தோன்றிய பயங்கரத்தின் அறிகுறியையும் பார்த்துவிட்டு, உலகநாதத்தேவர் பரிகாசத்தையும் அலட்சிய பாவத்தையும் விட்டுவிடத் தீர்மானித்தார்.
“எந்தவிதப் பயங்கர தண்டனையாக இருந்தாலும் இருக்கட்டும், அதற்காக நீ இப்படி மனம் கலங்க வேண்டாம். எல்லாம் சோலைமலை முருகன் சித்தப்படி தான் நடக்கும். இதையெல்லாம் உனக்கு யார் சொன்னார்கள்?” என்று தேவர் கேட்டார்.
“அரண்மனை அந்தப்புரத்தைத் தேடி வந்து வேறு யார் என்னிடம் சொல்லுவார்கள்? என் தகப்பனார்தான் சொன்னார்!” என்று இளவரசி கூறியபோது, அவளுடைய கண்களிலேயிருந்து கண்ணீர் அருவி அருவியாகப் பெருகிற்று.
அந்தக் காட்சியானது உலகநாதத் தேவரின் உள்ளத்தை உருக்கிவிட்டது. தாம் இருந்த அபாயகரமான நிலைமையைக்கூட அவர் மறந்து, இளவரசியின் மீது இரக்கம் கொண்டார். அந்த இரக்க உணர்ச்சியே அழியாத காதலுக்கு விதையாக உருக்கொண்டது.
சட்டென்று தம்முடைய தாய் தந்தையரைப் பற்றிய நினைவு அவருடைய உள்ளத்தில் உதித்தது. மாறனேந்தல் கோட்டை பிடிப்பட்டதோ, என்னவோ? தம்முடைய பெற்றோர்களின் கதி என்னவாயிற்றோ? தன் அருமைத் தம்பியைப் பாவிகள் என்ன செய்தார்களோ?
இளவரசியின் விம்மலும் கண்ணீரும் நிற்கும் வரையில் சிறிது பொறுத்திருந்துவிட்டு, “நீ கூறியதிலிருந்து உன் தந்தை திரும்பி வந்துவிட்டார் என்று தெரிகிறது. மாறனேந்தல் கோட்டைப் பற்றி அவர் ஏதும் சொல்லவில்லையா? என் தாய் தந்தையரைப் பற்றி ஒரு செய்தியும் கூறவில்லையா?” என்று கேட்டார்.
“ஐயோ! இந்தப் பாவியின் வாயினால் அதையெல்லாம் எப்படிச் சொல்லுவேன்?” என்று கதறினாள் மாணிக்கவல்லி.
தாம் எதிர்பார்த்த கெட்ட செய்தி இப்போதுதான் வரப்போகிறது என்பதை உணர்ந்த மாறனேந்தல் மன்னர், “மாணிக்கவல்லி! எப்படிப்பட்ட கெட்ட செய்தியானாலும் சொல்லு! நான் எதற்கும் மனங் கலங்கமாட்டேன். உண்மையை அறிந்து கொள்ள என் மனம் துடிக்கிறது” என்றார்.
“ஐயா! தாங்கள் இப்போது மாறனேந்தல் இளவரசர் அல்ல. இன்று முதல் தாங்கள்தான் மாறனேந்தல் மகாராஜா” என்று மாணிக்கவல்லி விம்மிக்கொண்டே கூறினாள்.
இளவரசி கூறியதன் பொருள் இன்னதென்று உலகநாதத்தேவருக்கு விளங்கச் சிறிது நேரம் பிடித்தது. விளங்கியவுடனே தேவரின் தலையில் ஒரு பெரிய மலையே விழுந்தது போல் ஆயிற்று. ஏதோ ஒரு துயரச் செய்தியை அவர் எதிர்பார்த்தவர்தான். என்றாலும், தந்தை இறந்தார் என்னும் செய்தி தனயரை ஓர் ஆட்டம் ஆட்டிவிட்டது! இதுவரையில் நின்று கொண்டே பேசியவர் திடீரென்று உடல் ஓய்ந்து தரையில் உட்கார்ந்தார். எவ்வளவு அடக்கப் பார்த்தும் முடியாமல் தேம்பலும் விம்மலும் பொங்கி வந்தன.
இளவரசியும் அவர் அருகில் உட்கார்ந்து அவரைத் தேற்றுவதற்கு முயன்றாள். அப்போது அவ்விருவருடைய கண்ணீரும் கலந்து ஒன்றாகும்படி நேர்ந்தது.
உலகநாதத்தேவர் சீக்கிரத்திலேயே தம்மைத் தேற்றிக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக இளவரசியைத் தூண்டிக் கேட்டு, அவளுடைய தந்தையின் மூலம் அவள் அறிந்த எல்லா விவரங்களையும் தாமும் நன்றாகத் தெரிந்து கொண்டார்.
9. வெறி முற்றியது!
அன்று பிற்பகலில், அஸ்தமிக்க இன்னும் ஒரு ஜாமம் இருந்த போது, சோலைமலை இளவரசி தன்னுடைய படுக்கையறை மஞ்சத்தில் விரித்திருந்த பட்டு மெத்தையில் படுத்து அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டிருந்தாள். சூரியன் எப்போது மலைவாயில் விழுந்து தொலையும், எப்போது சந்திரன் குன்றின் மேலே உதயமாகும் என்று அவளுடைய இதயம் ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தது. இளம் பிராயம் முதல் மாணிக்கவல்லியை எடுத்து வளர்த்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி வந்த செவிலித்தாய் அப்போது அங்கு வந்தாள். மாணிக்கவல்லியின் நிலையைப் பார்த்துவிட்டு, “அம்மணி! ஏதாவது உடம்புக்கு வந்திருக்கிறதா? முகம் ஒரு மாதிரி பளபளவென்று இருக்கிறதே? கண் சிவந்திருக்கிறதே?” என்று கேட்டாள்.
“ஆமாம், வீரம்மா! உடம்பு சரியாகத்தான் இல்லை. அதோடு மனமும் சரியாக இல்லை!” என்றாள் இளவரசி.
“உடம்பு சரியில்லாவிட்டால், மகாராஜா வந்ததும் வைத்தியனைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாம். ஆனால் மனத்தில் என்ன வந்தது? ஏதாவது கவலையா, கஷ்டமா? குறையா குற்றமா? மகாராஜா அப்படியெல்லாம் உனக்கு ஒரு குறையும் வைக்கவில்லையே? கண்ணுக்குக் கண்ணாய் வைத்து உன்னைக் காப்பாற்றி வருகிறாரே?” என்று வீரம்மா கேட்டாள்.
“அப்பா எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை தான். என்னைப் பற்றிய கவலை ஒன்றுமில்லை. சற்று முன்னால் மாறனேந்தல் சண்டையைப் பற்றி ஞாபகம் வந்தது. அதனால் வருத்தமாயிருக்கிறது” என்றாள் இளவரசி.
“லட்சணந்தான், போ! மாறனேந்தல் சண்டைக்கும் உனக்கும் என்ன வந்தது? அதைப்பற்றி நீ ஏன் வருத்தப்பட வேண்டும்?” என்று கேட்டாள் வீரம்மா.
“ஏன் என்று நீயே கேட்கிறாயே? மாறனேந்தல் மகாராஜா குடும்பத்தைப்பற்றி நீதானே வருத்தப்பட்டாய்? மாறனேந்தல் கோட்டையை நம்முடைய வீரர்களும் வெள்ளைக்காரர்களும் சேர்ந்து முற்றுகை போட்டிருக்கிறார்களாமே? மாறனேந்தல் மகாராஜாவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என்ன கதி நேர்ந்ததோ என்று நினைத்தால் வருத்தமாயிருக்கிறது” என்றாள் மாணிக்கவல்லி.
“அதற்காக நீயும் நானும் வருத்தப்பட்டு என்ன செய்வது, கண்ணே! எல்லாம் விதியின்படி நடக்கும். ஐந்தாறு வருஷத்துக்கு முன்னால் இரண்டு வம்சத்தாரும் எவ்வளவோ ஒற்றுமையாயிருந்தார்கள். அக்கரைச் சீமையிலிருந்து தலையிலே கூடையைக் கவிழ்த்துக் கொண்டு இந்த வெள்ளைக்காரச் சாதியார் வந்த பிறகுதான் இரண்டு வம்சங்களுக்கும் இப்படிப்பட்ட விரோதம் ஏற்பட்டது. மூன்று மாதத்துக்கு முன்னாலே கூட என் தங்கச்சியைப் பார்க்க மாறனேந்தல் போயிருந்தேன். அங்கு எல்லாரும் உலகநாதத்தேவரைப்பற்றி எவ்வளவு பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா? மன்மதன் மாதிரி லட்சணமாம்! குணத்திலே தங்கக் கம்பியாம்! அவர் வாயைத் திறந்து இரண்டு வார்த்தைகள் பேசினால் பசி தீர்ந்துவிடுமாம்!…”
“போதும் வீரம்மா, போதும்! இப்படியெல்லாம் பேசிப் பேசித்தான் என் மனத்தில் என்னவெல்லாம் ஆசையை நீ கிளப்பி விட்டுவிட்டாய்?”
“அதற்கென்ன செய்யலாம், கண்ணே! உலகமெல்லாம் தேடினாலும் உலகநாதத்தேவரைப் போன்ற மாப்பிள்ளை கிடைப்பது சிரமம். அப்படிப்பட்டவருக்கு வாழ்க்கைப்பட நீ கொடுத்து வைக்கவில்லை. இரண்டு ராஜ்யங்களுக்கும் ராணியாகும் பாக்கியம் உனக்குக் கிடைக்கவில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. நான் சொன்னதை எல்லாம் அடியோடு மறந்துவிடு!…”
“சொல்லுவதையெல்லாம் சொல்லிவிட்டு, ‘மறந்து போய்விடு’ என்று சொன்னால் எப்படி மறக்க முடியும் வீரம்மா? அது போகட்டும்; சண்டை சமாசாரம் ஏதாவது உனக்குத் தெரியுமா? தெரிந்தால் சொல்லு” என்று இளவரசி கேட்டாள்.
“மாறனேந்தல் கோட்டை இன்று காலையே பிடிபட்டுவிட்டது என்று சொல்லிக் கொள்கிறார்கள். பாவம்! மாறனேந்தல் மகாராஜாவும் மகாராணியும் இரண்டு ராஜகுமாரர்களும் என்ன கதி அடைந்தார்களோ?” என்று வீரம்மா சொல்லிக் கொண்டிருந்தபோது, சோலைமலை மகாராஜாவின் பாதரட்சைச் சத்தம் சமீபத்தில் ‘கிறீச்’ ‘கிறீச்’ என்று கேட்டது. உடனே வீரம்மா தன் வாயை மூடி அதன்மேல் விரலை வைத்து, ‘பேசாதே!’ என்று சமிக்ஞை காட்டிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
மகாராஜா அறைக்குள்ளே வந்ததும் இளவரசி எழுந்து நின்று வணங்கினாள். “மாணிக்கம்! ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கிறது?” என்று மகாராஜா கேட்டார்.
மாணிக்கவல்லி உள்ளுக்குள் பயத்துடனே, “ஒன்றுமில்லை, அப்பா!” என்று சொன்னாள்.
“ஒன்றுமில்லையென்றால் முகம் ஏன் வாடியிருக்கிறது? வீரம்மா எங்கே? அவள் உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்வதில்லைபோல் இருக்கிறது” என்று கோபக் குரலில் மகாராஜா கூறினார்.
“இல்லை, அப்பா! வீரம்மா எப்போதும் என்னுடனே தான் இருக்கிறாள். சற்று முன் கூட இங்கே இருந்தாள். நீங்கள் வரும் சத்தம் கேட்ட பிறகுதான் சமையற்கட்டுக்குச் சென்றாள். அப்பா! முன்னேயெல்லாம் நீங்கள் அடிக்கடி என்னைப் பார்க்க வருவீர்கள். என்னுடன் பேசிக்கொண்டிருப்பீர்கள். என்னைக் கதை வாசிக்கச் சொல்லிக் கேட்பீர்கள். அங்கே இங்கே அழைத்துப் போவீர்கள்! இப்போதெல்லாம் நீங்கள் என்னைப் பார்க்க வருவதேயில்லை. வந்தாலும் நின்றபடியே இரண்டு வார்த்தை பேசிவிட்டுப் போய்விடுகிறீர்கள். எனக்குப் பொழுதே போகிறதே இல்லை. அதனாலே தான் உடம்பும் ஒரு மாதிரி இருக்கிறது” என்றாள் மாணிக்கவல்லி.
“ஆமாம், குழந்தை! நீ சொல்வது மெய்தான். இப்போது நான் எடுத்திருக்கும் காரியம் மட்டும் ஜயத்துடன் முடியட்டும்; அப்புறம் முன்போல் அடிக்கடி இங்கே வந்து உன்னுடன் பேசிக் கொண்டிருப்பேன். உனக்குத் தகுந்த மாப்பிள்ளை கூடிய சீக்கிரம் நான் பார்த்தாக வேண்டும். இந்தச் சண்டை முடிந்த உடனே அதுதான் எனக்குக் காரியம்” என்று மகாராஜா சொல்லிவிட்டுப் புன்னகை புரிந்தார்.
இளவரசி முகத்தைச் சுளித்துக் கொண்டு, “அதற்கு அவசரம் ஒன்றுமில்லை, அப்பா! உங்களை விட்டுப் பிரிந்து எங்கேயாவது தொலைதூரத்துக்குப் போவதற்கு எனக்கு மனமில்லை. ஆனால், சண்டை இன்னமும் முடியவில்லையா? மாறனேந்தல் கோட்டை இன்று காலை பிடிபட்டுவிட்டதென்று வீரம்மா சொன்னாளே?” என்றாள்.
“ஆமாம், கோட்டை பிடிபட்டு விட்டது. அந்த மடையன் மாறனேந்தல் மகாராஜாவும் கடைசியில் தன்னந் தனியாக வாளேந்திச் சண்டை போட்டுச் செத்தொழிந்தான். ஆனால் நான் எந்தக் களவாடித் திருட்டுப் பயலைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேனோ, அவன் பிடிபடவில்லை. இரவுக்கிரவே தப்பி ஓடிவிட்டான். ஆனாலும் எங்கே ஓடிவிடப் போகிறான்? எப்படியும் அகப்பட்டுக் கொள்வான்! அவன் மட்டும் என் கையில் சிக்கும்போது…” என்று சொல்லிச் சோலைமலை மகாராஜா பற்களை ‘நற நற’வென்று கடித்தார்.
இளவரசி சகிக்க முடியாத மனவேதனையடைந்தாள். அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாததனால் வேதனை அதிகமாயிற்று. பேச்சை மாற்ற விரும்பி, “மகாராணியும் இரண்டாவது பிள்ளையும் என்ன ஆனார்கள்?” என்று கேட்டாள்.
“அவர்கள் இருவரையும் வெள்ளைக்காரத் தடியர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். அவர்களைச் சென்னைப் பட்டணத்துக் கோட்டைக்குப் பந்தோபஸ்துடன் அனுப்பி வைக்கப் போகிறார்களாம்! இல்லாவிட்டால் அங்கேயிருக்கும் பெரிய துரை கோபித்துக் கொள்வாராம்! அவர்களை மட்டும் என்னிடம் ஒப்படைத்திருந்தால் இந்தத் திருட்டுப் பயல் உலகநாதத்தேவன் எங்கே போனான் என்பதை அவர்கள் வாய்மொழியாகவே கறந்திருப்பேன். இப்போது தான் என்ன? அவன் நேற்று இரவு நமது கோட்டைக்கு அருகாமையில் வந்தவரைக்கும் தடையம் கிடைத்திருக்கிறது. நமது கோட்டையைச் சுற்றியுள்ள காடு மலைகளிலே தான் அவன் ஒளிந்திருக்க வேண்டும். இன்று இரவு இருநூறு ஆட்கள் தொண்ணூறு நாய்களுடன் அவனை வேட்டையாடப் போகிறார்கள். அவன் எப்படித் தப்புவான் என்று பார்க்கலாம்!”
இவ்விதம் சொல்லி மகாராஜா, “ஹா, ஹா, ஹா” என்று சிரித்தது, பேய்களின் சிரிப்பைப்போல் பயங்கரமாக ஒலித்தது.
மாணிக்கவல்லியின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்த வேதனை, கவலை இவற்றுடன் இப்போது ஆவலும் பரபரப்பும் சேர்ந்து கொண்டன.
“மாறனேந்தல் இளவரசர் அகப்பட்டால் அவரை நீங்கள் என்ன செய்வீர்கள் அப்பா?” என்று கேட்டாள்.
“நல்ல கேள்வி கேட்டாய், மாணிக்கம்! நல்ல கேள்வி! அதைப் பற்றித்தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். யோசித்து ஒரு முடிவும் செய்து விட்டேன். அவனை நமது கோட்டை வாசலுக்கு அப்பாலுள்ள ஆலமரத்தின் கிளையில் தூக்குப் போடப் போகிறேன். தூக்கில் மாட்டியவுடனே அவன் செத்து விடுவான். ஆனாலும் அவன் உடலை மரக்கிளையிலிருந்து இறக்க மாட்டேன். அங்கேயே அவன் தொங்கிக் கொண்டிருப்பான். கழுகும் காக்கையும் அவன் சதையைக் கொத்தித் தின்றபிறகு எலும்புக்கூட்டைக் கூட எடுக்க மாட்டேன்! சோலைமலை மகாராஜாவை அவமதித்தவனுடைய கதி என்ன ஆகும் என்பதை உலகம் எல்லாம் அறியும்படி, அவனுடைய எலும்புக்கூடு ஒரு வருஷமாவது நமது கோட்டை வாசலில் தொங்க வேண்டும்!” என்றார் மகாராஜா.
சொல்லமுடியாத பயங்கரத்தையும் அருவருப்பையும் அடைந்த மாணிக்கவல்லி கம்மிய குரலில், “அப்பா! இது என்ன கோரமான பேச்சு?” என்றாள்.
“பேச்சு இல்லை, மாணிக்கம்! வெறும் பேச்சு இல்லை! நான் சொன்னபடியே செய்கிறேனே, இல்லையா என்று பார்த்துக் கொண்டிரு! இதோ, நான் போய் இராத்திரி வேட்டைக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். நீ என் உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். வீரம்மா உன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளாவிட்டால், அந்தக் கழுதையைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டு வேறொருத்தியை வைக்கிறேன், தெரிகிறதா?” என்று சொல்லிவிட்டுச் சோலைமலை மகாராஜா மறுபடியும் பாதரட்சை ‘கிறீச்’ ‘கிறீச்’ என்று சப்திக்க வெளியேறினார்.
மகாராஜா போனபிறகு இளவரசி சிறிது நேரம் பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். கொஞ்சங் கொஞ்சமாகப் பிரமை நீங்கிப் புத்தி தெளிவடைந்தது.
இன்று முதல் மாறனேந்தல் மகாராஜாவாகி விட்ட உலகநாதத் தேவருக்கு நேர்ந்துள்ள பெரிய அபாயத்தை நினைக்க நினைக்க அவரை அந்த அபாயத்திலிருந்து எப்படியாவது தப்புவிக்க வேண்டும் என்பதில் அவளுடைய உறுதி வலுவடைந்தது.
அன்று காலையிலேயே அவளுடைய உள்ளத்தில் உதித்திருந்த காதல் வெறி வளர்ந்து முதிர்ந்தது.
யோசித்து யோசித்துப் பார்த்து, உலகநாதத் தேவரைக் காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் உண்டு என்பதை அவள் உணர்ந்தாள். அவரைச் சில நாள் வரையில் கோட்டைக்குள்ளேயே இருக்கும்படி செய்தாக வேண்டும். தந்தையின் கோபம் சிறிது தணிந்தபிறகு, அவருக்குத் தன்னிடம் உள்ள அன்பைப் பயன்படுத்தி, அவருடைய பழிவாங்கும் உத்தேசத்தைக் கைவிடச் செய்ய வேண்டும். இந்த வழியைத் தவிர வேறு வழி கிடையாது என்று இளவரசி உறுதி செய்து கொண்டாள். பிறகு முன்னைவிட அதிக ஆவலுடன் அவள் இரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
10. ஆண்டவன் சித்தம்
கொஞ்சம் கொஞ்சமாக மாணிக்கவல்லியிடமிருந்து முன் அத்தியாயத்தில் கூறிய விவரங்களையெல்லாம் மகாராஜா உலகநாதத்தேவர் கேட்டுத் தெரிந்து கொண்டார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்து சும்மா இருந்த பிறகு இளவரசியை ஏறிட்டுப் பார்த்து, “உன் தந்தை என்னைப் பற்றி என்ன எண்ணியிருக்கிறார்? என் பேரில் எவ்வளவு வன்மம் வைத்திருக்கிறார் என்று தெரிந்திருந்தும் என்னை இங்கே இருக்க வேண்டுமென்று சொல்லுகிறாயா?” என்று கேட்டார்.
“முக்கியமாக அதனாலேதான் உங்களை இங்கேயே இருக்கச் சொல்லுகிறேன். இந்தக் கோட்டையில் இருந்தால்தான் நீங்கள் உயிர் தப்பிப் பிழைக்கலாம்” என்றாள் இளவரசி மாணிக்கவல்லி.
“எப்படியாவது உயிர் தப்பிப் பிழைத்தால் போதும் என்று ஆசைப்படுகிறவன் என்பதாக என்னை நீ நினைக்கிறாயா? மறவர் குலத்தில் இதற்குமுன் எத்தனையோ வீராதி வீரர்கள் இருந்திருக்கிறார்கள். மதுரைச் சிம்மாசனத்தில் அமர்ந்து குமரிமுனை முதல் இயமமலை வரையில் வீர பாண்டிய மன்னர்கள் அரசு புரிந்து மறவர் குலத்துக்கு என்றும் அழியாத புகழைத் தந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் போன்ற மகாவீரன் என்பதாக என்னை நான் சொல்லிக் கொள்ளவில்லை. ஆயினும் உயிருக்குப் பயந்து ஒளிந்து கொள்ளக்கூடிய அவ்வளவு கேவலமான கோழை அல்ல நான். வீர மறவர் குலத்துக்கும், புராதன மாறனேந்தல் வம்சத்துக்கும், அப்படிப்பட்ட களங்கத்தை நான் உண்டாக்கக்கூடியவன் அல்ல…”
உலகநாதத்தேவர் மேலே பேசிக்கொண்டு போவதற்கு முன்னால் சோலைமலை இளவரசி குறுக்கிட்டு, “ஐயா! அதோ குன்றின்மேல் தெரியும் சந்திரன் சாட்சியாகச் சொல்லுகிறேன்; தங்களை உயிருக்குப் பயந்தவர் என்றோ, வீரமில்லாத கோழை என்றோ நான் ஒரு கணமும் நினைக்கவில்லை. எனக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள் என்றுதான் தங்களை வேண்டிக் கொள்கிறேன். தங்களுக்கு ஏதாவது அபாயம் நேர்ந்தது என்று தெரிந்தால் அதற்குப்பிறகு என்னால் ஒரு நிமிஷமும் உயிர் வைத்துக் கொண்டிருக்க முடியாது. அப்படி இன்றைக்கே நீங்கள் கட்டாயம் போகத்தான் வேண்டுமென்றால் என்னையும் தங்களுடன் அவசியம் அழைத்துக் கொண்டு போக வேண்டும். தங்களுக்கு ஆகிறது எனக்கும் ஆகட்டும்!” என்றாள்.
அப்போது உலகநாதத் தேவருக்கும் பூமி தம்முடைய காலின் கீழிருந்து நழுவிச் சென்றுவிட்டது போலவும், தாம் அந்தரத்தில் மிதப்பது போலவும் தோன்றியது.
தம்முடைய காதில் விழுந்த வார்த்தைகள் தாம் உண்மையாகக் கேட்டவைதானா, அவற்றைச் சொன்னது இதோ தம் எதிரில் இருக்கும் திவ்ய சௌந்தரியவதியின் செவ்விதழ்தானா என்ற சந்தேகத்தினால் அவருடைய தலை சுழன்றது.
சற்றுப் பொறுத்து, “நீ சொன்னதை இன்னொரு தடவை சொல்லு! என் செவிகள் கேட்டதை என்னால் நம்பமுடியவில்லை!” என்றார் மாறனேந்தல் மன்னர்.
“ஏன் நம்பமுடியவில்லை? – நிஜந்தான்; நம்ப முடியாதுதான். என் தகப்பனாரைப் பற்றி நானே அவ்வளவு சொன்னபிறகு, அவருடைய மகளை நம்புங்கள் என்றால் எப்படி நம்ப முடியும்? என் வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கை உண்டாகாதுதான். எந்தச் சமயத்தில், என்ன துரோகம் செய்துவிடுவேனோ என்று சந்தேகப்படுவதும் இயல்புதான். அப்படியானால், உங்கள் இடுப்பில் செருகியிருக்கும் கத்தியை எடுத்து என் நெஞ்சில் செலுத்தி ஒரேயடியாக என்னைக் கொன்றுவிட்டுப் போய்விடுங்கள் அதன் பிறகாவது என்னிடம் உங்களுக்கு நம்பிக்கை பிறக்குமல்லவா? அதுவே எனக்குப் போதும்?”
அடிக்கடி தேம்பிக்கொண்டே மேற்கண்டவாறு பேசி வந்த மாணிக்கவல்லியை இடையில் தடுத்து நிறுத்த உலகநாதத்தேவரால் முடியவில்லை. அவளாகப் பேச்சை நிறுத்தி விட்டுக் கண்ணீரை மறைப்பதற்காக வேறுபக்கம் பார்த்த பிறகுதான் அவரால் பேச முடிந்தது.
“இளவரசி! என்ன வார்த்தை பேசுகிறாய்? உன்னிடம் எனக்கு நம்பிக்கையில்லையென்று நான் சொல்லவேயில்லையே? நீ கூறிய விஷயம் அவ்வளவு அதிசயமாக இருந்தபடியால், ‘என்னுடைய காதை என்னால் நம்ப முடியவில்லை’ என்றுதானே சொன்னேன்? என் கண்ணே! இதோ பார்!” என்று கூறிய வண்ணம், பூஜைக்குரிய புஷ்பத்தை ஒரு பக்தன் பூச்செடியிலிருந்து எவ்வளவு மென்மையாகத் தொட்டுப் பறிப்பானோ அவ்வளவு மென்மையாக உலகநாதத்தேவர் இளவரசியின் மோவாயைப் பற்றி, அவள் முகத்தைத் தம் பக்கம் திருப்பிக் கொண்டார். “இன்னொரு தடவை சொல்! உன்னைப் பெற்று வளர்த்து எவ்வளவோ அருமையாகக் காப்பாற்றி வரும் தகப்பனாரையும், இந்தப் பெரிய அரண்மனையையும் இதிலுள்ள சகல சம்பத்துக்களையும் சுகபோகங்களையும் விட்டுவிட்டு, இன்று காலையிலேதான் முதன் முதலாகப் பார்த்த ஓர் அநாதையோடு புறப்பட்டு வருகிறேன் என்றா சொல்கிறாய்?” என்றார்.
“ஆமாம்; அப்படித்தான் சொல்கிறேன். ஒரு வேளை எனக்குப் பைத்தியந்தான் பிடித்துவிட்டதோ? என்னமோ, இன்று காலையிலேதான் உங்களை நான் முதன் முதலாகப் பார்த்திருந்தாலும், எத்தனையோ காலமாக உங்களைப் பார்த்துப் பேசிப் பழகியது போலிருக்கிறது. உங்களை விட்டு ஒரு நிமிஷமும் என்னால் பிரிந்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. உங்களுக்கு வேண்டியவர்கள் எல்லோரும் எனக்கும் வேண்டியவர்கள்; உங்களுடைய விரோதிகள் எல்லாரும் எனக்கும் விரோதிகள் என்பதாகவும் தோன்றுகிறது. இன்று சாயங்காலத்திலிருந்து என்னுடைய தகப்பனாரின் மேலேயே கோபமாயிருக்கிறது!”
“இளவரசி! வேண்டாம்! இந்த மாதிரி தெய்வீகமான அன்பைப் பெறுவதற்கு நான் எந்த விதத்திலும் தகுதியுடையவனல்ல. எவ்வளவோ கஷ்டப்பட வேண்டியவன் நான்; துன்பமும் துயரமும் அநுபவிப்பதற்காகவே பிறந்திருக்கும் துரதிருஷ்டசாலி. கட்டத் துணியில்லாத ஆண்டிப் பரதேசியைப் பார்த்து, ‘உனக்கு சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து வைக்கிறேன்’ என்று சொன்னால் அது தகுதியாயிருக்குமா? கடவுளுக்குத்தான் பொறுக்குமா?”
“கடவுளுக்குப் பொறுக்காது என்று ஏன் சொல்லுகிறீர்கள்? ஆண்டவனுடைய சித்தம் நம் இருவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று இருந்திராவிட்டால் இந்த மாதிரியெல்லாம் நடந்திருக்குமா? உங்களுக்கு ஏன் எதிரியின் கோட்டைக்குள்ளே ஒளிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது? நான் எதற்காக இராத்திரியெல்லாம் தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்து விட்டு அதிகாலை நேரத்தில் தோட்டத்தில் பூப்பறிப்பதற்காக வருகிறேன்? சோலைமலை முருகனுடைய சித்தத்தினாலேயே இவ்விதமெல்லாம் நடந்திருக்க வேண்டும். ஆண்டவனுடைய சித்தத்துக்கு விரோதமாகத் தாங்கள் தான் பேசுகிறீர்கள்!”
“இளவரசி நீ என்னதான் சொன்னாலும் சரி; எப்படித்தான் வாதாடினாலும் சரி; பயங்கரமான அபாயங்கள் நிறைந்த மகாசமுத்திரத்தில் குதிக்கப்போகும் நான், கள்ளங் கபடமற்ற ஒரு பெண்ணையும் என்னோடு இழுத்துக் கொண்டு குதிக்க மாட்டேன். அத்தகைய கல் நெஞ்சமுடைய கிராதகன் அல்ல நான்!”
“அப்படியானால் நான் சொல்வதைக் கேளுங்கள். இங்கேயே இன்னும் சில நாள் தங்கியிருங்கள். உங்களுக்கும் அபாயம் ஏற்படாது; எனக்கும் கஷ்டம் இல்லை.”
“அது எப்படி மாணிக்கவல்லி? உன் தகப்பனார் என்னை அவ்வளவு கொடுமையாகத் தண்டிக்க எண்ணி இருக்கும்போது இந்தக் கோட்டைக்குள்ளே நான் தங்கியிருப்பது எப்படிப் பத்திரமாகும்? இங்கே இருப்பதுதான் எனக்கு ரொம்பவும் அபாயம் என்பது உனக்குத் தெரியவில்லையா?”
இதைக்கேட்ட மாணிக்கவல்லி, உலகநாதத் தேவரைக் கம்பீரமாக ஏறிட்டுப் பார்த்துக் கூறினாள்: “ஐயா! என் தகப்பனார் மிகவும் பொல்லாதவர்தான்; மூர்க்க குணம் உள்ளவர்தான். உங்களிடம் அவர் அளவில்லாத கோபம் கொண்டிருப்பது உண்மையே. ஆனாலும் அவருக்கு என்னிடம் மிக்க அன்பு உண்டு. அவருடைய ஏக புதல்வி நான் தாயில்லாப் பெண். என்னை அவருடைய கண்ணுக்குள் இருக்கும் மணி என்று கருதிக் காப்பாற்றி வருகிறார். அவர் கோப வெறியில் இருக்கும்போது அவருடன் பேசுவதில் பிரயோஜனம் ஒன்றும் இல்லை. ஆனால் கொஞ்சம் சாந்தம் அடைந்திருக்கும் சமயம் பார்த்துப் பேசி அவருடைய மனத்தை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இத்தனை காலமும் நான் கேட்டதை அவர் ‘இல்லை’ என்று சொன்னதில்லை. உங்கள் விஷயத்திலும் அவருடைய மனத்தை மாற்ற என்னால் முடியும். நிச்சயமாக முடியும் என்ற தைரியம் எனக்கு இருக்கிறது. அதற்கு நீங்கள் மட்டும் உதவி செய்ய வேண்டும். நான் சொல்கிற வரையில் இங்கேயே இருக்க வேண்டும்.”
“நீ சொல்லுகிறபடி இங்கேயே இருப்பதற்கு நான் இஷ்டப்பட்டாலும் அது எப்படிச் சாத்தியம்! இந்த அரண்மனைத் தோட்டத்தில் நான் ஒருவர் கண்ணிலும் படாமல் காலங்கழிக்க முடியுமா? தோட்டக்காரர்கள் வேலைக்காரர்கள் வரமாட்டார்களா? வேளைக்கு வேளை நீ எனக்கு சாப்பாடு கொண்டுவந்து போட்டுக் கொண்டிருக்க முடியுமா? திடீரென்று என்றாவது ஒருநாள் உன் தகப்பனார் இங்கே வந்து என்னைப் பார்த்து விட்டால், அல்லது நீயும் நானும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டால் எவ்வளவு விபரீதமாக முடியும்? இளவரசி! கொஞ்சம் யோசித்துப் பார்! உனக்கும் கஷ்டத்தை உண்டாக்கிக் கொண்டு என்னையும் வீணான ஆபத்துக்கு உள்ளாக்காதே…” என்று உலகநாதத்தேவர் சொல்லி வந்தபோது இளவரசி குறுக்கிட்டுப் பேசினாள்:
“நான் எல்லாவற்றையும் மிக நன்றாக யோசித்து விட்டுத்தான் சொல்லுகிறேன். தங்களுடைய பத்திரத்தைப் பற்றித் தாங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தப் பெரிய அரண்மனைக்குப் பின்னால் ‘சின்ன நாச்சியார் அரண்மனை’ என்று ஒரு கட்டிடம் இருக்கிறது. அது வெகு காலமாகப் பூட்டிக் கிடக்கிறது. எங்கள் வம்சத்தில் நூறு வருஷத்துக்கு முன்னால் அரசாண்ட மகாராஜா – என் பட்டனாருக்குப் பாட்டனார் – தம்முடைய சின்ன ராணியின் பேரில் ஏதோ சந்தேகப்பட்டு அந்த அரண்மனையில் அவளைத் தனியாகப் பூட்டி வைத்திருந்தாராம். அதற்குப் பிறகு அங்கே யாரும் வசித்தது கிடையாதாம். அந்த அரண்மனையின் சாவி என்னிடம் இருக்கிறது. தாங்கள் அங்கே பத்திரமாக இருக்கலாம். அப்பா கோட்டையில் இல்லாத நாட்களில் இருட்டிய பிறகு நாம் சந்திக்கலாம். என்னுடைய செவிலித் தாய் வீரம்மா எனக்காக உயிரைக் கொடுக்கக்கூடியவள்; உங்களிடமும் அவளுக்கு ரொம்ப மரியாதை உண்டு. உங்களைப் பற்றி இந்திரன், சந்திரன் என்றெல்லாம் என்னிடம் புகழ்ந்து பேசியிருக்கிறாள். அவள் மூலமாகத் தங்களுக்குச் சாப்பாடு அனுப்புகிறேன். அந்த ஏற்பாட்டையெல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள். நான் சொல்லுகிறபடி கொஞ்ச காலம் இங்கே இருப்பதாக மட்டும் தாங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்…!”
இப்படி இளவரசி சொல்லிக் கொண்டிருந்தபோது கோட்டை மதிலுக்கு அப்பால் வேட்டை நாய்கள் உறுமுகின்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து நாய்கள் குரைக்கும் சத்தமும் கேட்டது.
இளவரசி சட்டென்று உலகநாதத் தேவரின் இரண்டு கரங்களையும் கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். அவளுடைய உடம்பெல்லாம் அப்போது நடுங்கியதை உலகநாதத்தேவர் உணர்ந்தார். அவளுடைய மார்பு ‘படபட’வென்று அடித்துக்கொண்ட சத்தங்கூடத் தேவரின் காதில் இலேசாகக் கேட்டது.
“அதோ நாய் குரைக்கிறதே; அந்த இடத்திற்குச் சமீபமாகத்தானே தாங்கள் கோட்டை மதிலைத் தாண்டிக் குதித்தீர்கள்?” என்று மாணிக்கவல்லி நடுக்கத்துடன் கேட்டதற்கு, உலகநாதத்தேவர், “ஆமாம்” என்று கம்மிய குரலில் விடையளித்தார்.
வேட்டை நாய்கள் மேலும் குரைத்தன. அவற்றை யாரோ அதட்டி உசுப்பிய சத்தமும் அவர்களுக்குக் கேட்டது.
மாணிக்கவல்லி முன்னைவிடக் கெட்டியாக உலகநாதத்தேவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் ததும்பிய கண்களால் அவரைப் பார்த்து, “ஐயா! தங்களை ரொம்பவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். தங்களுடைய ஜன்ம விரோதியின் மகளாயிருந்தாலும் இன்றைக்கு ஒருநாள் மட்டுமாவது என்னை நம்புங்கள். இன்று இராத்திரி நீங்கள் வெளியே போகவேண்டாம்!” என்று கல்லும் கரையும் குரலில் கேட்டுக் கொண்டாள்.
ஏற்கனவே, உள்ளம் கனிந்து ஊனும் உருகிப் போயிருந்த மாறனேந்தல் மகாராஜா மேற்படி வேண்டுகோளைக் கேட்டதும், “இன்று ஒரு நாள் மட்டுமல்ல; இனி என்றைக்குமே உன் விருப்பந்தான் எனக்குக் கட்டளை. நீ என் ஜன்ம விரோதியின் மகள் அல்ல; அன்பினால் என்னை அடிமை கொண்ட அரசி; ‘போகலாம்’ என்று நீ சொல்லுகிற வரையில் நான் இங்கிருந்து போகவில்லை!” என்றார்.
இதைக் கேட்ட மாணிக்கவல்லி உணர்ச்சி மிகுதியால் நினைவை இழந்து மாறனேந்தல் அரசரின் மடியில் சாய்ந்தாள்!
-கல்கி