அத்தியாயம் 12
பிரத்தியங்கரா புன்னகையுடன் திரும்பி பார்த்தாள். அங்கே அமுதா நின்று கொண்டிருந்தாள்.
“அமுதா…” என்றாள் வாய் நிறைய.
கொல்லிக்கும் அது பிடித்திருந்தது!
“அன்னைக்கு நீ எங்க போயிட்ட? கண்ணுல தூசி விழுந்துட்டுனு கண்ணை தேய்ச்சிட்டு பாக்குறதுக்குள்ள காணாம போயிட்ட.” என கேட்டாள் பிரத்தியங்கரா.
“கையில என்ன வச்சிருக்க?” என பேச்சை மாற்றினாள் அமுதா.
“இது உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன். இந்தா…” என அட்டை பெட்டியோடு கொடுத்தாள் பிரத்தியங்கரா.
“என்னது இது?” என புரியாமல் பார்த்தாள் கொல்லி.
“நீ இங்க வெறும் காலோட சுத்துறல… அதுக்கு தான் உனக்கு ஷூ வாங்கிட்டு வந்தேன். இதை போட்டுக்கோ. மலை ஏறி இறங்க உனக்கு கஷ்டமா இருக்காது.” என்றாள் பிரத்தியங்கரா.
அதை கேட்டு சத்தமாக சிரித்தாள் அமுதா (கொல்லி).
காடு முழுவதும் இருந்த பறவைகள் அந்த சத்தத்திற்கு கேட்டு அஞ்சி ஒரே நேரத்தில் பறந்து சென்றன.
“என்னாச்சு ஏன் பறவைங்களாம் பறக்குது?” என புரியாமல் குழம்பினாள் பிரத்தியங்கரா.
அமுதா ஒரு பார்வை வானத்தை நோக்கி பார்த்ததும், பறவைகள் தங்களது பயத்தை விட்டு, தங்களது இருப்பிடத்திற்கு சென்றன.
பிரத்தியங்கரா குழம்பி கொண்டு இருக்கையிலே, சக்திவேல் அவளை நோக்கி வர ஆரம்பித்துவிட்டார்.
“இதை நீயே வைத்துக் கொள். நான் உன்னை உன் உறைவிடத்தின் அருகிலே வந்து சந்திக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றாள் அமுதா.
அமுதா செல்லும் பொழுது, அவளின் நீளமான கருங்கூந்தலில் சூரிய ஒளி பட்டு மின்னியது! அதை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள் பிரத்தியங்கரா.
“பாப்பா ரெசார்ட்டுக்கு போகலாங்களா?” என கேட்டார் சக்திவேல்.
பிரத்தியங்கராவும் தலையாட்ட, இருவரும் காரை சென்றடைந்தனர்.
சக்திவேலுக்கு ஒரே யோசனை. திடீரென்று வீசிய சூறை காற்றும், ஒட்டு மொத்த பறவைகளும் திடீரென பறப்பதும் எதுவோ சரியில்லை என்றே தோன்றியது அவருக்கு. அத்தோடு மட்டுமல்லாது, பிரத்தியங்காரவிற்கு இரத்த காயமெல்லாம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாம் கூட்டி கழித்து பார்த்தாள் அவளுக்கு தான் எதுவோ சரியில்லையோ என தோன்றியது சக்திவேலுக்கு.
“பாப்பா இங்க ஒரு சாமியாரு இருக்காரு. நாளைக்கு அவரை போயி பாத்துட்டு வருவோமா?” என கேட்டார் சக்திவேல்.
“எங்க திரும்பினாலும் கோவிலும் சாமியாரும் மட்டும் தானா உங்க ஊருல?” என கேட்டாள் பிரத்தியங்கரா.
“சென்னை மாதிரி இது என்ன பெரிய ஊராமா? இங்க இவ்வளவு தான் இருக்கும்.” என்றார் சக்திவேல்.
சொன்னது போலவே அடுத்த நாள் கொல்லிமலையிலே குறி சொல்லும் ஒருவரிடம் கூட்டி சென்றார் சக்திவேல்.
நீண்ட நேரமாக அவளின் கையை ஆராய்ச்சி செய்த சாமியாரோ, “உனக்கு அந்த எட்டுக்கை அம்மனோட அருள் பரிபூரணமா இருக்கு தாயி. உன் எதிர்காலம் அம்சமா இருக்கும். நோய் நொடி இல்லாம பிள்ளைங்க பெத்து மகராசியா வாழுவ…” என்றார் அவர்.
பிரத்தியங்கராவிற்கு இதெல்லாம் கூச்சமாக இருந்தது. திருமணத்தை பற்றி கூட சொல்லாமல் நேரடியாக அவர் பிள்ளைகளை பற்றி பிரத்தியங்கராவிற்கு எதுவுமே பேச முடியவில்லை. அவரிடம் தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்னவெல்லாம் நடக்கும் என எதையும் கேட்கும் நுட்பம் எல்லாம் அப்பொழுது அவளுக்கு இல்லை.
சக்திவேல் தனக்கும் தன் குடும்பத்திற்கும் அருள் கேட்டுக் கொண்டார்.
வழக்கம் போல எட்டுக்கை அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு, அமுதா வருகிறாளா என பார்த்துக் கொண்டிருந்தாள் பிரத்தியங்கரா. நேரமாகிவிட்டது என சக்திவேல் தான் அவளை அழைத்து வந்து ரிசார்ட்டில் விட்டுவிட்டு போனார்.
பல நாள்கள் ஆகிவிட்டது கார்த்திக்கோடு பேசி. எப்படியும் ஒருவாரம் பக்கம் இருக்கும். அவனுக்கு அழைக்கவா வேண்டாமா என்ற சிந்தனையிலே இருந்தாள் பிரத்தியங்கரா.
இப்பொழுதெல்லாம் யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது அவளுக்கு. தான் செய்வது உண்மையிலே காதல் தானா என்று சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. காதல் என்பது கூட உறுதியில்லாமல் எப்படி திருமணம் வரை வந்தோம் என நினைத்தாலே அவள் மீதே அவளுக்கு கோபம் வருகிறது.
எதை எதையோ நினைத்து அமுதாவின் நியாபகம் வந்தது அவளுக்கு. இங்கு வருகிறேன் என சொன்னாளே, தேடி பார்ப்போமா என்று வெளியே கிளம்பினாள் பிரத்தியங்கரா.
வானம் சிவப்பையும் நீலத்தையும் அள்ளி தெளித்து கொண்டு, கிறுக்கன் வரைந்த ஓவியமாக இருந்தது. அன்றைய சம்பவம் மட்டும் நடக்கவில்லை என்றால், இந்த கொல்லிமலை மிக மிக அழகிய மலை என்று மட்டுமே நம்பிக் கொண்டு இருந்திருப்பாள் பிரத்தியங்கரா.
கொஞ்ச தூரம் நடந்து சென்றவளுக்கு, சுற்றிலும் பூமணம் வீசுவது போல இருந்தது. எந்த பூ என்று தெரியவில்லை. ஆளையே மயக்குவது போல இருந்தது.
“பிரத்தியங்கரா…” என்று அழைத்தாள் அமுதா.
உடல் சிலிர்த்து கொண்டது பிரத்தியங்கராவிற்கு.
Super super😍😍😍😍😍😍😍
interesting
Interesting