Skip to content
Home » கொல்லிப்பாவை அத்தியாயம் – 3

கொல்லிப்பாவை அத்தியாயம் – 3

அத்தியாயம் 3

கார்த்திக் பிரத்தியங்கராவிடம் வந்து காதலை சொல்லும் பொழுது அவள் முரட்டு சிங்கிளாக தான் இருந்தாள். பள்ளி வரை காதல் எல்லாம் ஒழுங்கீனம் என்றே நினைத்திருந்தாள். கல்லூரியில் அவள் பார்வை கொஞ்சம் மாறுபட்டது. வேலைக்கு வந்த பொழுது, அவளை தவிர மற்றவர்கள் அனைவருக்கும், ஒரு துணை இருக்க, தனக்கும் இப்படி ஒரு ஆள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணினாள் பிரத்தியங்கரா. அப்பொழுது தான் கார்த்திக் வந்து அவளிடம் காதலை சொல்லியது. 

காதல் எப்படி இருக்கும் என்று தெரியாமலே, உணராமலே, கார்த்திக்கை காதலிக்க ஆரம்பித்திருந்தாள் பெண்!

சில நேரங்களில் கார்த்திக் தன்னிடம் நடந்து கொள்ளும் விதத்தை எண்ணும் பொழுது இது காதல் தானா என்று அவளுக்கு சந்தேகம் வலுக்கும். ஆனால் அப்படி யோசிப்பதே அவனுக்கு செய்யும் துரோகம் என நினைத்து, அந்த எண்ணங்களை மூட்டை கட்டி வைத்து விடுவாள். இப்படி தள்ளாடி தள்ளாடி தான் கார்த்திக் மற்றும் பிரத்தியங்கராவின் காதலானது, கல்யாணம் எனும் கரையை எட்டியது.

தற்பொழுது தான் சென்ற தலைவலியை மீண்டும் இழுத்துவிட்டுக் கொள்ள வேண்டுமா என நினைத்த பிரத்தியங்கரா, போனை சைலன்ட்டில் போட்டுவிட்டு உறங்கி விட்டாள்.

காலையில் அலுவலகம் கிளம்ப போனை எடுத்த பொழுது மிஸ்ட் கால்களின் எண்ணிக்கை இருபதாக இருந்தது. புருவங்கள் சுருங்கின அவளுக்கு. இருந்தாலும் சமாளித்து கொள்ளலாம் என கிளம்பிவிட்டாள்.

காதலனின் அழைப்பை கண்டு பயப்படுகிறோமே,‌ இது சரியா? தான் சரியானவனை தான் தேர்ந்தெடுத்துள்ளோமா? என்ற எண்ணங்கள் மீண்டும் அவளை ஆக்கிரமித்தது. தந்தையிடம் பேசி திருமணம் வரை கொண்டு வந்தாயிற்று, பிறகு ஏன் இப்படியான யோசனை என்று அவள் தலையை உலுக்கி அந்த எண்ணங்களை விரட்ட முயற்சித்த பொழுதும், ஏனோ நினைவடுக்கின் ஒரு ஓரத்தில் நின்றுக் கொண்டு, அந்த எண்ணங்களை அவளை தூரத்திக் கொண்டே இருந்தன.

இரவு முழுவதும் அழைத்தும் பிரத்தியங்கரா அழைப்பை எடுக்காததால், காலையிலேயே அவள் எப்பொழுது வருவாள் என்று கடுப்போடு அவள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

பயோமெட்ரிக் பஞ்சிங்கை வைத்துவிட்டு, பிரத்தியங்கரா அலுவலகத்தில் நுழைந்ததுமே எங்கிருந்து வந்தானோ தெரியவில்லை, விடுவிடுவென அவள் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டான் கார்த்திக்.

“ஹாய் கார்த்திக்…” என்றாள் பிரத்தியங்கரா.

“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்றான் கார்த்திக் கடுகடுவென.

கையை திருப்பி நேரத்தை பார்த்தவள்‌, “இப்ப முடியாது கார்த்திக். லேட் ஆனா டி எல் கத்துவாரு. அட்லீஸ்ட் நான் போயி லாக்இன்னாச்சும் பண்ணிட்டு வர்றேன்.” என்று சொன்னவள் அதற்கு மேலே நிற்காது, விடுவிடுவென தன் நாற்காலி இருக்கும் இடத்திற்கு சென்று விட்டாள்.

நாற்காலியில் வந்து அமர்ந்ததும், பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டவள், கணினியை உயிர்ப்பித்தாள்.

“என்ன காலையிலையே மூச்சு பலமா இருக்கு? சூறாவளியே வரும் போல…!” என்று அவளை கலாய்த்தான் அவள் பக்கத்து இருக்கையில் இருக்கும் பாலா.

“கம்முனு இருடா… என்ன காலையிலையே உன் ஆள் உன்னை காய்ச்சி அனுப்பிவிட்டானா?” என பிரத்தியங்கராவிற்கு நேர் பின் இருக்கும் சுஹானா கேட்டாள்.

பாலா, சுஹானா, பிரத்தியங்கரா அனைவரும் ஒரே டீமில் ஒரே புராஜாக்டில் வேலை பார்ப்பவர்கள். பாலாவும், சுஹானாவும் தான் பிரத்தியங்கராவிற்கு அலுவலகத்தில் மிக நெருக்கமான தோழர்கள்.

“அதெல்லாம் இல்லை. வேலை பாருங்க எல்லாம்.” என்று பிரத்தியங்கரா திரும்பி கொள்ள, பாலாவும் சுஹாவும் நமுட்டு சிரிப்போடு தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.

வேலை ஆரம்பித்து ஒரு இரண்டு மணி நேரம் இருக்கும்; “ஒரு டீ அடிச்சிட்டு வரலாமா? மண்டை சூடா இருக்கு!” என்றான்‌ பாலா.

சரியென பெண்கள் இருவரும் தலையாட்ட, மூவரும் கேண்டினிற்குள் நுழைந்தனர். தங்களுக்கு தேவையான டீயை வாங்கிக் கொண்டு மூவரும் ஒரு டேபிள் சென்று அமர, கார்த்திக் வந்துவிட்டான்.

கார்த்திக்கை கண்டதும், சுஹா நேரடியாக முகத்தை திருப்ப, ‘வந்துட்டான்டா ஆப்பாயில் மண்டையன். இனிமே இவளை என்ன பாடு படுத்த போறானோ?’ என்று மனதிற்குள்ளே கவுண்டர் கொடுத்தான் பாலா.

“லாக்கின் பண்ணிட்டு வர்றேன்னு சொன்ன… ஆளே காணம்?” என்று கொஞ்சம் இரைச்சல் தொனியில் தான் ஆரம்பித்தான்‌ கார்த்திக்.

“நீ பேசிட்டு வா பிரி. நாங்க முன்னாடி போறோம்.” என்று எழுந்து கொண்டனர் சுஹாவும் பாலாவும்.

பிரத்தியங்கராவிற்கு சங்கடம் பிய்த்து தின்றது.

“நைட்டுல இருந்து எத்தனை தடவை உனக்கு போன் பண்ணேன்னு தெரியுமா? எதையுமே அட்டென்ட் பண்ணாம அப்படி என்ன புடுங்கிட்டு இருந்த?” என்று எடுத்ததுமே அவன் சீற, பிரத்தியங்கராவிற்கு கண்கள் கலங்கிவிட்டது.

கார்த்திக்கிற்கு எப்பொழுதுமே தன் காதலி தன் பிடியில் இருக்க வேண்டும்; தான் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும்; அப்படியான மனநிலையில் இருக்கும் சராசரி இந்திய ஆண்மகன்.

“நைட்டு கொஞ்சம் தலைவலி. அதான் போனை சைலண்ட்ல போட்டு தூங்கிட்டேன்.” என்றாள் பிரத்தியங்கரா.

அவளின் கண்களில் இருந்த கண்ணீரை கண்டவன், “ஆனா ஊன்னா பொண்ணுங்க இந்த கண்ணுல இருக்க டேமை திறந்துடுங்க.” என்று கார்த்திக் சொல்ல,

“நான் அழறதுக்கு காரணமே நீ தான் கார்த்திக். எதுக்கு இப்படி காலையிலையே வந்து என்னை டென்சன் பண்ணுற?” என்று முதன்முதலாக தானும் கொஞ்சம் எகிறி போய் கேள்வி கேட்டாள் பிரத்தியங்கரா.

எவ்வளவு தான் அவளும் பொறுத்துக் கொள்ள?

அவளிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பாராத கார்த்திக், “நைட் ஒரு முக்கியமான விசயம் உன்கிட்ட பேசனும்னு நான் நினைச்சேன். அதை பேச முடியலைன்ற கடுப்பை தான் உன்கிட்ட காட்டிட்டேன்.” என்று இறங்கிய குரலில் சொன்னான்.

தான் கோபப்பட்டால், கார்த்திக் இறங்கி போய் பேசுவான் என புரிந்துக் கொண்டாள் பிரத்தியங்கரா.

“நீ கூட தான் சண்டே ஆனா கிரிக்கெட் ஆட போவ. எத்தனையோ முறை உனக்கு கூப்பிட்டு நீ எடுக்காம இருந்துருக்க. இல்லைனா கிரிக்கெட் விளையாடறேன் அப்பறம் கூப்பிடுனு திட்டுவ. பதிலுக்கு நான் வந்து உன்கிட்ட கத்திருக்கனா? இல்லை டென்சன் ஆகிருக்கனா?” என்று பாயின்ட்டாக கேட்டாள் பிரத்தியங்கரா.

“நீ சும்மா பேசுறதும் நான் நம்ம பியூச்சரை பத்தி பேசுறதும் ஒன்னா உனக்கு?” என்று அர்த்தமாக பேசுவதாக நினைத்து கேட்டான் கார்த்திக்.

“நான் சும்மா தான் பேச வந்தேன்னு என்கிட்ட பேசாமலே உனக்கு எப்படி கார்த்திக் தெரியும்?” பிரத்தியங்கரா மனதில் உள்ள சூடு குறையாமல் கேட்டாள்.

எப்பொழுதுமே என்ன சொன்னாலும் தலையை தலையை ஆட்டி கேட்டுக் கொண்டே போகும் பிரத்தியங்கராவா இது என்று ஆச்சரியமாக இருந்தது கார்த்திக்கிற்கு. அவனின் செய்கைகள் தான், அவளை மாற்றியது என்று அவனுக்கு புரியவில்லை.

“சரி நைட் எதுக்கு கால் பண்ணின கார்த்திக்? எதுவா இருந்தாலும் ஷார்ட்டா சொல்லு. டைம் இல்ல. நான் சீக்கிரமே உள்ள போகனும்.” என்று கறாராய் சொன்னாள் பிரத்தியங்கரா.

“உங்கப்பா எங்கம்மாக்கு கால் பண்ணி கல்யாணத்தை ஆறு‌மாசத்துக்கு அப்பறம் வச்சிக்கலாம்னு சொல்லுறாரு. அதான் ஏன்னு கேக்கலாம்னு கூப்பிட்டேன். நடுவுல எனக்கு தெரியாம வேற‌ மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணுற ஐடியா எதுவும் இருக்கா?” என்று நக்கலாக கேட்டான் கார்த்திக்.

“அப்படி ஐடியா இருந்தா, நானே உன்கிட்ட வந்து சொல்லிட்டு, கல்யாண பத்திரிக்கை எடுத்து வந்து கொடுக்கறேன். குடும்பத்தோட வந்து என் கல்யாணத்துல கலந்துக்கோ.” என்றவள், அதற்கு மேல் அங்கே இருந்தால் இராசாபாசம் ஆகிவிடும் என பயந்து ஓடாத குறையாக தன் இடத்திற்கு சென்றுவிட்டாள்.

பிரத்தியங்கரா வந்து அமர்ந்ததுமே, அவளுக்கு தெரியாமல், சுஹாவும் பாலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் கண்களாலே பேசிக் கொண்டனர்.

கண்கள் சிவந்து முகத்தில் கோபம் வழியுமாறு இருந்த பிரத்தியங்கராவை கண்ட பாலா, என்ன என்று கேட்குமாறு, சுஹாவிடம் சொன்னான்.

“பிரி இங்க பாரேன். இதை எப்படி ‌ பண்ணுறது?” என்று ஆரம்பித்தாள் சுஹா.

“எங்க காட்டு…” என்று பிரத்தியங்கராவும் சுஹாவின் அருகில் வர,

“அழுதியா?” என்று கேட்டாள் சுஹா.

பதில் சொல்ல முடியாமல் தலையை குனிந்துக் கொண்டாள் பிரத்தியங்கரா.

“என்னாச்சு?” சுஹாவும்.

“கொஞ்சம் கோபமாகி கத்தி விட்டேன்.” பிரத்தியங்கரா.

“நிஜமா வா?!” நம்ப முடியாது கேட்டாள் சுஹா.

தலையை மட்டும் ஆட்டினாள் பிரத்தியங்கரா.

“எதுக்கு கத்தின?” சுஹா.

“எதுக்குனே தெரியல. கோபம் கோபமா வந்துச்சு. அதான் கத்திட்டேன்.” நடந்ததை சொல்லாமல், தன்‌ மனநிலையை மட்டும் சொன்னாள் பிரத்தியங்கரா.

“சிட்டிக்கு கோபம் வந்திடுச்சு!” என்று இடையில் கவுண்டர் கொடுத்தான் பாலா. கண்கள் கணினி திரையில் இருந்தாலும், காதுகள் மற்ற இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்பதிலே இருந்தது.

“சார் உங்க காது இங்க கிடக்கு. கொஞ்சம் பொறுக்கிட்டு போறீங்களா?” என்று போலியான பணிவோடு பாலாவிடம் கேட்டாள் சுஹா.

அதுவரை கொஞ்சம் உர்ரென்று இருந்த பிரத்தியங்கரா, சுஹானாவின் செயலில் கலகலவென்று வாய்விட்டு சிரித்தாள்.

4 thoughts on “கொல்லிப்பாவை அத்தியாயம் – 3”

  1. Avatar

    I think , prathiyunkara chose a wrong person as her partner . Karthik is short tempered., not having broad mind to understand the love and feelings of prathyunkara .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *