அத்தியாயம் 4
வாதவம்பள்ளி (கற்பனையான கிராமம்)
பில்லி, சூனியம், ஏவல், கட்டு, சித்து வேலைகள் இவ்விடம் எடுக்கப்படும் என்று ஒரு ஓட்டு வீட்டின் முன்னால், தகரத்தில் பெயின்ட்டினால் எழுதப்பட்டிருந்தது. திண்ணையில் பல ஊர்களில் இருந்து வந்திருந்த மக்கள் அமர்ந்திருந்தனர்.
வீட்டின் உள்ளே செல்ல செல்ல, உக்கிர தெய்வமான காளியின் பல்வேறு புகைப்படங்களும், சிவப்பு நிறத்தினால் அடிக்கப்பட்ட பெயின்ட்டும், பல்வேறு பூஜை பொருட்களின் கலவையான வாசனை என அந்த இடமே கொஞ்சம் சூனியமாய் தான் இருந்தது.
தெய்வீக சக்தி என்ற ஒன்று உள்ள பொழுதே, அதன் எதிர்மறையாக துர்சக்திகள் என்ற பதம் உருவாகிவிடுகின்றது. பலவீனமான மனித மனிங்கள், பலவீனமான தருணங்களில், பற்றிக் கொள்ள எளிதாக இருப்பதால், அவைகள் தீயசக்திகளிடம் தஞ்சம் புகுகின்றன. அந்த தீயசக்திகளின் நீட்சிகளே, பில்லி, சூனியம், ஏவல், இத்தியாதி இத்தியாதிகள். அவற்றை எடுப்பதற்கு மாந்திரீகத்தில் பிரசித்தி பெற்ற இடம் தான் வாதவம்பள்ளி.
வாதவம்பள்ளி மார்த்தாண்டாம் என்றால் சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்கள் எவருமே இலர்! அந்த அளவிற்கு மார்த்தாண்டம் மிகவும் பிரபலமான மாந்திரீகர். அவரின் வீட்டு முன்பு தான் மக்கள் குழுமி இருந்தனர்.
கூட்டமாக அமர்ந்திருந்த மக்களின் முன்பு, சன்னதம் வந்து அமர்ந்திருந்தார் மார்த்தாண்டம். ஒவ்வொருவரின் குல தெய்வமாக சொல்லி அவர்களை தன் முன்னே வர சொல்லி சன்னதம் சொன்னார் மார்கண்டேயன்.
இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு, நாக்கு வெளியே தெரியுமாறு மடக்கி கடித்துக் கொண்டு, துள்ளி துள்ளி குதித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் மார்த்தாண்டம்.
“பதினெட்டாம் படி கருப்பா… தெக்கு பக்கம் ஊரு… ஊருக்குள்ள அரளி செடி. என் முன்ன வந்து நில்லு…” என்று துண்டு துண்டாக பேசினார் மார்த்தாண்டம்.
பதினெட்டாம் படி கருப்பை குல தெய்வமாக கொண்ட பெண்மணி ஒருவர் வேகவேகமாக முன்னே வந்து நின்றார்.
“சாமி…” என்று முழுமையான பணிவோடு மார்த்தாண்டத்தின் முன்னே நின்றார் அந்த பெண்மணி.
“உன் மனக்குறை என்னானு எனக்கு தெரியுது. வீட்டுல நிம்மதி இல்ல. சிரிப்பு காணம போயி நாள் கணக்காச்சு. துக்கம் பிடிச்சா போல இருக்கு உன் வீடு!” என்று மார்த்தாண்டம் சொல்ல சொல்ல, எதிரே நின்றுக் கொண்டிருந்த பெண்மணியின் கண்களில் நீர் வழிந்தது.
“ஆமாங்க சாமி. என் புருசனுக்கு ரொம்பவே உடம்பு முடியாம கிடக்காரு. பாக்காத வைத்தியமில்லை. எல்லா டாக்கடரும் சொல்லி வச்ச மாதிரி ஒரு நோயும் இல்லைனு சொல்லுறாங்க. ஆனா என் புருசன் வலிக்குது வலிக்குதுனு துடியா துடிச்சி போறாரு. இரட்டை பொம்பள பிள்ளைங்களை வச்சிருக்கேன். அவருக்கு ஒன்னுனா அந்த பிள்ளைங்களை எப்படி கரை ஏத்துறதுனு எனக்கு தெரியல.” என்று அந்த பெண்மணி அழுதார்.
மார்த்தாண்டத்திடம் அருள்வாக்கு கேட்க அமர்ந்திருந்தவர்கள், அந்த பெண்மணியின் கதையை கேட்டு பரிதாபப்பட்டுக் கொண்டனர்.
மார்த்தாண்டம் பொதுவாக மந்திர தந்திர காரியங்களுக்கே பிரபலமானவர்; ஆயினும் பௌர்ணமி நாட்களில் மட்டும் இப்படியாக சன்னதம் வந்து அருள்வாக்கு கூறுவார். இந்த சன்னதம் கூறுவதை மார்த்தாண்டத்தின் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக செய்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொரு ஆணை அவர்கள் வணங்கும் கடவுள் தேர்ந்தெடுத்து, அவர்களின் வாய் வழியே சன்னதம் கூறும்.
“உன் புருசனுக்கு வந்துருக்கறது வியாதி இல்ல… ஏவல். உன் பங்காளில ஒருத்தன் தான் உன் புருசன் மேல ஏவலை ஏவி விட்டுருக்கான்.” என்றார் மார்த்தாண்டம்.
அதை கேட்ட பெண்மணி மேலும் அழுதுக் கொண்டே, “சாமி என் புருசனை எப்படியாச்சும் அதுல இருந்து காப்பாத்துங்க.” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.
“மந்திரிச்ச திண்ணீரும் எலுமிச்சையும் தர்றேன். ஒரு எலுமிச்சையை எப்படியாச்சும் சாப்பாட்டுல கலந்து குடு. இன்னொரு எலுமிச்சையை தலைமாட்டுல வச்சிடு. இரண்டு வேலை உடம்பு சுத்தமாக்கி நான் குடுக்கற தண்ணீரையும் திண்ணீரையும் உடம்பெல்லாம் பூசி விடு. ஏவலோட வீரியம் குறையும். மொத்தமா ஏவலை நீக்கனும்னா அமாவாசை அன்னைக்கு உன் புருசனை என் வாசலுக்கு கூட்டிட்டு வா. எல்லாத்தையும் சரி பண்ணி தர்றேன்.” என்று கூறினார் மார்த்தாண்டம்.
அந்த பெண்மணியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு, மார்த்தாண்டம் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு, ஒரு புதுவித நம்பிக்கையோடு, தன் இல்லம் நோக்கி சென்றார்.
வந்திருந்த அனைத்து மக்களுக்கும் அருள்வாக்கு சொல்லி முடிப்பதற்குள் மாலை ஆகிவிட்டது. அதன்பிறகும் சிலர் வந்தனர். ஆனால், அவர்களை அடுத்த மாதம் வருமாறு சொல்லி அனுப்பி வைத்து விட்டனர்.
“சுடுதண்ணியை போடுங்க டா. உடம்பெல்லாம் பயங்கர வலியா இருக்கு!” என்றார் மார்த்தாண்டம்.
ஒவ்வொரு முறை சன்னதம் வந்து செல்லும் பொழுதும், உடல் எல்லாம் முறுக்கி வலி பின்னி எடுத்துவிடும் மார்த்தாண்டத்திற்கு.
நன்றாக குளித்துவிட்டு வந்தவருக்கு, இரவு உணவு பரிமாறப்பட்டது.
“அண்ணே நீங்க சொன்ன விசயத்தை பாத்துட்டேன். வர்ற சித்திரை அமாவாசை அன்னைக்கு சூரிய கிரகணம் வருது!” என்றான் மார்த்தாண்டத்தின் சிஷ்யன் முருகன்.
உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மார்த்தாண்டம், ஒரு நொடி அவனை பார்த்துவிட்டு, மேலே சொல் என்பது போல சைகை செய்துவிட்டு, உணவை உண்ண ஆரம்பித்தார்.
“இந்த வாட்டம் வர்ற சூரிய கிரகணம் 450 வருசத்துக்கு ஒரு முறை மட்டுமே வர்ற அதிய சூரிய கிரகணமாம்!”
“இங்கிலீசுக்கு எப்ப வருது?”
“இன்னும் நாலு மாசம் கழிச்சி மே 8ல வருதுண்ணே…”
“சரி நீ சாமி பொருள் எல்லாம் பத்திரமா எடுத்து வச்சிட்டு, வீட்டுக்கு போ.” என்றார் மார்த்தாண்டம்.
பயங்கரமான உடல் வலிக்கு பின்பு, திருப்தியான உணவு உண்டதும், உறங்க சொல்லி கண்கள் கெஞ்சின. ஆயினும் மார்த்தாண்டம் பிடிவாதமாக அதை தள்ளி வைத்துவிட்டு, தங்களது குலதெய்வமான, வனபத்ரகாளியை வணங்கிவிட்டு, வீட்டுக்கு பின்னால் இருக்கும் கொட்டகை போன்ற பகுதிக்கு சென்றார் மார்த்தாண்டம்.
கொட்டகையின் சுவர்கள் எல்லாம் விரிசல் விட்டு கிடந்தன. அதன் உள்ளே சென்றவர், அங்கேயே நிலவறை போல ஒன்று இருக்க, அதற்குள் ஏணியை போட்டு இறங்கினார்.
சுற்றிலும் கும்மிருட்டாக இருந்தது. புழுதியும் ஒட்டடையும் எலிகளின் புழுக்கை நாற்றமும் குடலை பிரட்டிக் கொண்டு வந்தது. அத்தனைக்கும் அசராமல், கையில் இருந்த மொபைலில் டார்ச் அடித்தபடியே பழக்கப்பட்ட ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தார் மார்த்தாண்டம்.
மொபைலை வாயில் வைத்துக் கொண்டு, இவ்வளவு தான் வயதென்று கண்டு பிடிக்கவே முடியாது, இற்று போய் கிடந்த ஒரு இரும்பு பொட்டியினை திறந்தார் மார்த்தாண்டம். உள்ளே கட்டு கட்டுகளாக ஓலைச்சுவடிகள் கிடந்தன.
பத்திரமாக இருக்கட்டுமென ஒரு ஓலைச்சுவடி மட்டும் பாலீத்தீன் தாளிள் சுற்றப்பட்டு வைத்திருக்கப்பட்டிருந்தது.
பாலீத்தீன் தாளின் உள்ளில் இருந்து ஓலைச்சுவடியை எடுத்து பார்த்தார் மார்த்தாண்டர்.
“இருள்கண் ஞாயிறு காண கொடுக்க
அணங்குடையும் ஞாலமும் கையுரும்” என ஆரம்பித்து சங்க தமிழ் மொழி நடையில் பலவும் எழுதப்பட்டிருந்தன.
அந்த ஓலைச்சுவடில் உள்ள அனைத்துப் அட்சரம் பிசகாமல் மார்த்தாண்டத்திற்கு மனப்பாடமாய் தெரியும். ஆனாலும் ஒவ்வெரு முறையும் படிக்கும் பொழுதும், அவரின் உடல் சிலிர்த்து அடங்கும்.
ஓலைச்சுவடியில் இருந்ததை படித்து முடித்த பின்பு திருப்தியாய் அதை மீண்டும் பாலீத்தீன் தாளிளே சுற்றி இரும்பு பெட்டிக்குள் பூட்டி வைத்தவர், அவ்விடத்தை விட்டு வெளியே வந்தார். அங்கே மார்த்தாண்டத்தின் தம்பி மகன் நின்றுக் கொண்டிருந்தான்.
“என்னடா பூபதி இங்க என்ன பண்ணுற?” திடீரென அவனை பார்த்த அதிர்ச்சியை சமாளித்துக் கொண்டு கேட்டார் மார்த்தாண்டம்.
மார்த்தாண்டத்திற்கு முறையே இரண்டு பெண் பிள்ளைகள். அதற்கு மேல் ஆண் பிள்ளை குடுப்பினை இல்லை. தம்பி மகன் தான் தன் மகன் போல எண்ணுகிறார். இவருக்கு அடுத்து சன்னதம் சொல்லும் பொறுப்பு பூபதிக்கே வர வேண்டும் என்பது மார்த்தாண்டத்தின் ஆசை!
“என்ன பெரியப்பா இங்க அடிக்கடி போயிட்டு வர்றீங்க?” என்று கேட்டான் பூபதி. விடலை பையன். உடல் நல்ல ஒல்லியாக இருந்தது. குரல் மட்டும் கணீரென வந்தது.
“அது ஒன்னுமில்லை டா பூபதி. நம்ம பரம்பரை பழைய வீடு இதானே. அதான் அப்ப அப்ப ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடறது.” என்றார் மார்த்தாண்டம்.
“பரம்பரை பழக்கம் விட்டு போவதில்லை. ம்ஹூம்…” என்று ஒரு மாதிரியாக பூபதியின் குரல் ஒலித்தது.
மார்த்தாண்டத்திற்கு மயிர்க்கால்கள் எல்லாம் குத்திட்டு நின்றது.
பூபதியின் உருவத்தில் வந்திருப்பது யார் என மார்த்தாண்டத்திற்கு விளங்கியது.
தோளில் இருந்த துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி, “அம்மா…! தாயே…! வனபத்ரகாளி…!” என்று கும்பிட்டார்.
ஆம். பூபதியின் உடலில் வந்து இறங்கியிருப்பது மார்த்தாண்டத்தின் குலதெய்வமான வனபத்திரகாளியே தான்!
“மார்த்தாண்டா இப்பிறவியில் உனக்கு நான் கொடுத்தவைகள் போதாது என எண்ணுகிறாயா?”
“அப்படியெல்லாம் நான் யோசிப்பேனா அம்மா? என் தலைமுறையே நீ கொடுத்த ஆசியால தான் போதும் போதும்னு வாழ்ந்துட்டு இருக்கோம்.” என்றார் மார்த்தாண்டம் பணிவோடு.
“போதும் என்ற மனம் தான் மார்த்தாண்டா பொன் செய்யும் மருந்து! உன் பரம்பரை பழக்கத்தை இத்தோடு நிறுத்திக் கொள். உன் மூத்தோர்களை போல, முட்டாள்தனமாக உன் உயிரை விட்டு விடாதே!” என எச்சரித்த வனபத்ரகாளி, அத்தோடு பூபதியின் உடம்பில் இருந்து சென்றுவிட்டது.
முதல்முறையாக சாமி வந்து இறங்கிய உடம்பு; இயற்கையிலே கொஞ்சம் சதை பிடிப்பு இல்லாத உடல் ஆகையால், உடனே மயங்கி விட்டான் பூபதி. அவனை மடியில் தாங்கிக் கொண்டார் மார்த்தாண்டம்.
வழி வழியாக மார்த்தாண்டத்தின் பரம்பரையில் ஒரு இரகசியம் சொல்லப்பட்டு வரும். அது சாமி வந்து இறங்கும் நபருக்கு மட்டுமே சொல்லப்படும். அதையெல்லாம் நினைத்துக் கொண்டே பூபதியை வீட்டிற்குள் அழைத்து சொன்னார் மார்த்தாண்டம்.
interesting
Interesting
Interesting😍