Skip to content
Home » கொல்லிப்பாவை அத்தியாயம் 7

கொல்லிப்பாவை அத்தியாயம் 7

அத்தியாயம் 7

அந்தி சூரியன் சாயும் வேளையில், இயற்கையில் மெய் மறந்து போய் இருந்தவளை, அலைபேசி ஓசை கலைத்தது. எரிச்சலோடு அலைபேசியை எடுத்து பார்த்தாள்‌. புருவங்கள் இரண்டும் இன்னும் உயர்ந்தன.

கார்த்திக் தான் அழைத்திருந்தான். 

இப்பொழுது எதற்கு அழைத்தான் என எரிச்சலாக இருந்தது பிரத்தியங்கராவிற்கு‌. அப்பா அம்மாவின் முன்பு பேச முடியாததால், அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், சிக்னல் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்தாள்.

ரிசார்ட் முடியும் பகுதியில், அழகான வ்யூ பாயின்ட் இருந்தது. இடை வரை அழகாக இரும்பு கதவுகளை வைத்திருந்தனர். மேடுகளும் பள்ளங்களுமாக மிக அழகாக இருந்தது அந்த இடம். அங்கே தான் ஓரளவிற்கு சிக்னல் கிடைத்தது பிரத்தியங்கராவிற்கு.

“சொல்லு கார்த்திக்.” என ஆரம்பித்தாள்.

“போன் எடுக்க இவ்வளவு நேரமா?” எடுத்த உடனே கடுப்படிக்க ஆரம்பித்தான் அவளை.

“கார்த்திக் நான் மலை மேல இருக்கேன். எங்க சிக்னல் கிடைக்குதோ அதை தேடி அந்த இடத்துலே வந்து நின்னு தான் பேச முடியும் புரிஞ்சிகோ…” என்றாள் எரிச்சல் படர்ந்த குரலில்.

“சரி சரி… நீ சேப்பா ரீச் ஆகிட்டியானு கேக்க தான் கூப்பிட்டேன்.” 

கடுப்பை எல்லாம் அடக்கிக் கொண்டு, “பத்திரமா வந்திட்டோம் கார்த்திக்.” என்றவள், “நீ இங்க வந்து பார்க்கனும் கார்த்திக். செம்ம மெஸ்மரைசிங்கா இருக்கு.” என்றாள் இயற்கை அழகை ரசித்த வண்ணம்.

“என்னமோ காணததை கண்ட மாதிரி பேசுற? எல்லா பக்கமும் இருக்க மலையும் காடும் தானே அங்கையும் இருக்கு. இதுல என்ன புதுசா இருக்கு?” என்று அவன் அலட்சியமாய் பேசினான் கார்த்திக்.

‘இவன்கிட்ட போயி சொன்னோம் பாரு. என்னை சொல்லனும் முதல்ல…’ என தன்னைத்தானே திட்டிக் கொண்டாள் பிரத்தியங்கரா.

அதிகாலையிலே தூக்கம் கலைந்தது பிரத்தியங்கராவிற்கு. ரூம் சர்வீசுக்கு அழைத்து, காப்பி ஒன்றினை வாங்கிக் கொண்டவள், அப்படியே ரிசார்ட்டை சுற்றி வந்தாள்.

மென் பனி உடல் எங்கும் பூசிக் கொள்ள, பறவைகளின் சப்தம் தேவகானமாய் இருந்தது அந்நேரத்திற்கு. இப்படியான ஒரு இளங்காலை வேளையை அவள் அனுபவித்ததே இல்லை. அந்த நொடியில் இருந்து பிரத்தியங்கராவிற்கு கொல்லிமலையை மிக பிடிக்க ஆரம்பித்தது.

மணியரசுவும் சௌந்தர்யாவும் குளித்து கிளம்பி வர, மூவருமாய் ரென்டல் காரிலையே கோவிலை நோக்கி கிளம்பினார்கள்.

ரெசார்ட்டிலே சொல்லி காரை ஓட்டுவதற்கு ஆளை ஏற்பாடு செய்திருந்தார் மணியரசு. அப்படியே பிரத்தியங்கராவிற்கு ஊரை சுற்றி காட்டவும் சொல்லியிருந்தார் மணியரசு.

ஒரு வழியாக அனைவரும் எட்டுக்கை அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து தான் சென்றனர்.

கோவிலை நெருங்க நெருங்க லேசாக அமானுஷ்யமாக உணர்ந்தாள் பிரத்தியங்கரா‌. அவளையே அறியாமல், சிலிர்த்த உடலை நீவி விட்டுக் கொண்டாள்.

“ஏன்ப்பா டிரைவர் அதான் கோவிலா…?” என கேட்டார் சௌந்தர்யா.

“ஆமாங்க… அது தான் எட்டுக்கை அம்மன் கோவில். ரொம்ப சக்தி உள்ள சாமி! என்ன வேண்டினாலும் நடக்கும்.” என ஓட்டுநர் விளக்கினார்.

கோவில் என்றதும் பெரிது பெரிதாக எண்ணி கொண்டு வந்த பிரத்தியங்கரா, சிறிய குடிசை ஒன்றை பார்த்ததும் ஏமாந்து போனாள். 

சுற்றிலும் வேல் முழுக்க துணிகளை கட்டி தொங்க விட்டிருந்தனர். அதுவும் மூட்டை மூட்டையாக இருந்தது. சாமிக்கு முன்பு சீட்டிலும் தகரத்திலும் வேண்டியவைகளை எழுதி ஏராளமானோர் முடிந்து வைத்திருந்தனர். சில வேல்களில் பூட்டுகளை தொங்க விட்டிருந்தனர். எல்லாமே வித்தியாசமாக இருந்தது பிரத்தியங்கராவிற்கு.

அங்கிருந்த பூசாரியிடம் பேச்சு கொடுத்தார் மணியரசு.

“என்னங்க எல்லா கோவில்களையும் வேண்டிக்கிட்டு மணி கட்டுவாங்க. இங்க என்னடான்னா பூட்டும் துணியுமா தொங்குது?” என கேட்டார் மணியரசு.

“அதுங்களா… சொத்து தகராறு, நிலப்பிரச்சனை இருக்கவங்க இந்த மாதிரி பூட்டை கொண்டு வந்து பூட்டிட்டு போவாங்க‌. இது மாதிரி செஞ்சா அவங்க பிரச்சனை எல்லாம் தீர்ந்து போகும். அந்த வேல் கம்புல நம்மளை விட்டு பிரிஞ்சி போனவங்க துணியை கொண்டாந்து சுத்திவிட்டா, மறுபடியும் ஒன்னா வந்து சேந்துகிடுவாங்க. இது மாதிரி எனக்கு தெரிஞ்சே எத்தனையோ குடும்பம் சேர்ந்திருக்காங்க. முக்கியமா குழந்தை இல்லாதவங்க இங்க வந்து வேண்டிக்கிட்டு எழுதி போட்டுட்டு போவாங்க. அவங்களுக்கு எட்டுக்கை அம்மன் அருளால குழந்தை பிறக்கும்.” என்றார் பூசாரி.

“அப்படிங்களா?” என கேட்டுக் கொண்டார் மணியரசு.

வந்த காரணத்தை விட்டுவிட்டு வளவளவென பேசிக் கொண்டிருந்த மணியரசுவின் மீது எரிச்சல் வந்தது சௌந்தர்யாவிற்கு.

“பூசாரி…” என சத்தமாக அழைத்து அவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய சௌந்தர்யா‍, “இவ என் பொண்ணு. பேரு பிரத்தியங்கரா.” என அவளை அறிமுகம் செய்து வைத்தார்.

பிரத்தியங்கரா மரியாதை நிமித்தமாக கையெடுத்து கும்பிட்டாள்.

“என் பொண்ணுக்கு ஜாதகத்துல ஏதோ தோசம் இருக்குனு சொன்னாங்க ஜோசியருங்க. அதுக்கு பரிகாரமா இங்க கோவில்ல 48 நாளைக்கு விளக்கு போட சொல்லியிருக்காங்க.” என்றார் சௌந்தர்யா வந்த காரணத்தை.

“அட ஜோசியகாரனுங்க கிடக்கானுங்க மா. நேரத்துக்கு ஒன்னை சொல்லுவாங்க. எட்டுக்கை அம்மன் கோவிலுக்குள்ள வந்த பிறகு, எல்லாத்தையும் அவ பாத்துப்பா. நீங்க கவலைபடாதீங்க.” என்றார் பூசாரி.

பின்பு பூசாரி சாமிக்கு தீபத்தை காட்டினார். சந்தனக்காப்பு அலங்காரத்தில் உக்கிரம் குறைந்து காணப்பட்டாள் எட்டுக்கை அம்மன். அப்பொழுதுமே மேனி நடுங்கியது பிரத்தியங்கராவிற்கு. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளுக்கு‌. சாமியின் திரு உருவ சிலையின் மீதிருந்து அவளால் கண்களை நகர்த்தவே முடியவில்லை. எதுவோ ஒன்று நிகழ்கிறது போலவும் யாரோ பேசுவது போலவும் ஒரு மாய தோற்றம் அவளுள்.

“தீபம் எடுத்துக்கோ மா…” என பூசாரி வந்து சொல்லும் வரை அவளின் மோன நிலை கலையவில்லை.

தீபத்தை கண்களில் ஒற்றிக் கொண்டவள், கொண்டு வந்திருந்த பூஜை பொருட்களில் வைத்து பூசாரி சொன்னது போல விளக்கு போட்டாள். 

மணியரசு பூசாரியிடம் கொஞ்சம் தாராளமாகவே பணத்தை கொடுத்து, தன் பெண் வரும் பொழுதும் போகும் பொழுதும் கவனித்துக் கொள்ளும் படி சொன்னார். அதில் சௌந்தர்யாவிற்கு கொஞ்சம் கடுப்பு தான். அவர்‌ பக்க கோவில் கொடைக்கு கொடுப்பதெல்லாம் கணக்கிலே வராது அவருக்கு.

மாலையில் மணியரசுவும் சௌந்தர்யாவும் சென்னைக்கு செல்ல கிளம்பினர். பிரத்தியங்கராவிற்கு லேசாக கண்கள் கலங்கியது.

“இந்த அழுகை லவ் பண்ணுறப்பவே வந்திருக்கனும்.” என சௌந்தர்யா சொல்ல, இதற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியவில்லை பிரத்தியங்கராவால்.

“நீங்களே ஒரு பையனை பார்த்து கல்யாணத்துக்கு முடிவு பண்ணி ஜாதகத்தை பார்த்திருந்தாலும், ஜோசியருங்க எனக்கு ஜாதகத்துல குறை இருக்குனு தான் சொல்லிருப்பாங்க. அப்ப நீங்க கிளம்பறப்போ அழுதாலும் இப்படி தான் பேசுவியாம்மா? உனக்கு இருக்கறது என்ன நாக்கா இல்லை தேள் கொடுக்கா அம்மா? இப்படி பேசிட்டே இருக்க? நானும் அம்மா தானேன்னு பொறுமையா போனா ஓவரா தான் பேசுற? இனிமே இந்த மாதிரி பேச்செல்லாம் என்கிட்ட வச்சிக்காத. நீ பேசினா பதிலுக்கு பதில் திருப்பி பேசி விட்டுருவேன்.” என காட்டமாக சொன்னாள் பிரத்தியங்கரா.

“பாத்தீங்களா? எப்படி பேசுறா பாருங்களேன்? எல்லாம் அவன் சொல்லி குடுத்தது தானே?” என்று அழுகை ஆரம்பித்தார் சௌந்தர்யா.

மகளா மனைவியா என திண்டாடி போனார் மணியரசு.

கணவனது பக்க உறவினர்களோடு பெரிய தொடர்பில்லை. ஆகையால், எப்படியாவது பிரத்தியங்கராவை தங்கள் பக்கத்தில் மணம் முடித்து கொடுத்துவிட வேண்டும் என்பது சௌந்தர்யாவின் ஆசை. அப்பொழுது தான் எப்பொழுதுமே குடும்பத்தில் தான் ஒரு பெரிய ஆளாய் வலம் வர முடியும் என்ற குடும்ப அரசியல் ஆசை தான், இந்த பேச்சிற்கெல்லாம் காரணம்.

“கார்த்திக் சொல்லி குடுக்கலை மா. நீ தான் சொல்லி குடுக்குற… நானும் கார்த்திக்கும் மூனு வருசத்துக்கு மேல லவ் பண்ணுவோம். அப்பலாம் உன்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசிருப்பேனா? கல்யாணம்ன்ற பேச்சு ஆரம்பிச்ச பின்னாடி நீ பேசுறதை கேட்டு தான் நானும் பேச ஆரம்பிச்சேன். நான் பேசுறது தப்புன்னா நீ பேசுறதும் தப்பு தான்.” என ஒரு போடு போட்டாள் பிரத்தியங்கரா.

பேசுவது தன் மகளாக என வியந்து பார்த்தார் மணியரசு.

‘சந்திர கிரகணத்துல உங்க பொண்ணு பொறந்திருக்காங்க. வாழ்க்கையில கொஞ்சம் கஷ்டம் வரும். ஆனா அந்த கஷ்டம் எல்லாம் பொன்னை புடம் போடுற மாதிரி அவங்களை மெருகேத்தும். உங்க பொண்ணு ரொம்ப பெரிய ஆளா வருவாங்க.’ என நாடி ஜோதிடர் ஒருவர் சொன்னது அனிச்சையாக மணியரசுவின் நினைவிற்கு வந்தது.

பிரத்தியங்கரா பேசிய பேச்சுகளை விட, அழுத்தம் திருத்தமாக அவள் பேசிய விதம் தான், அவரை அப்படி நினைக்க வைத்தது.

“சௌந்தர்யா பொண்ணுக்கிட்ட எப்படி பேசுறதுனு ஒரு வரையறை இல்லை?” என மனைவியை அடக்கியவர், பெண்ணிற்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு சென்னையை நோக்கி புறப்பட்டார்.

அப்பாவும் அம்மாவும் சென்ற பின்பு தனிமை மிகவும் வாட்டியது பிரத்தியங்கராவை. ஒரு நாளை கூட அவளால் சமாளிக்க முடியவில்லை. ஒன்றரை மாதம் எப்படி தான் சமாளிக்க போகிறோமோ என்ற பயம் வந்து அவளை பிடித்துக் கொண்டது.

மறுநாள் கார் ஓட்டுநர் வந்து அவளை கோவிலுக்கு அழைத்து சென்றார். 

“உங்க பேரு என்னங்கண்ணா?” என கேட்டாள் பிரத்தியங்கரா.

அவளுக்கு பயங்கரமாக போர் அடித்தது. இப்பொழுது பேச்சு துணைக்கு ஓட்டுநர் மட்டுமே.

“என் பேரு சக்திவேலு மா. உங்க பேரு…?” என பதிலுக்கு அவர் கேட்டார்.

“பிரத்தியங்கரா அண்ணா…” என்றாள்.

“பிரத்தியங்கராவா? பேரே வித்தியாசமா இருக்கே மா!” என்றார் சக்திவேல்.

“சாமி பேரு அண்ணா.” என்றாள் பிரத்தியங்கரா.

“அப்படியா மா..‌. நான் கேள்வி பட்டதில்லை. நமக்கு எல்லாமே மாசி பெரியண்ண சாமியும் எட்டுக்கை அம்மனும் தான்.” என ஆரம்பித்து சக்திவேல் வளவளவென பேச, முடிந்த அளவு முகத்தை சுருக்காமல் பார்த்துக் கொண்டாள் பிரத்தியங்கரா.

சக்திவேல் சொன்ன எல்லாவற்றையும் ஏற்கனவே பிரத்தியங்கரா இணையத்தில் பார்த்து, படித்து தெரிந்து கொண்டாள். எனினும், சக்திவேல் சொல்லும் பொழுது, அவர் மனம் கோணாமல் இருக்க, புதிதாக கேட்பது போல கேட்டுக் கொண்டாள் பிரத்தியங்கரா.

சக்திவேலிற்கு நாற்பதில் இருந்து நாற்பத்தைந்து வயது இருக்கும். அவருக்கு கொல்லி மலையின் அடிவாரத்தில் தான் வீடு. சிறிய வயதில் இருந்தே கார் ஓட்டுவதாகவும், மனைவி இரண்டு ஆண் பிள்ளைகள் எல்லாம் பேச்சிலே தெரிந்து கொண்டாள்.

தந்தையும் தாயும் இல்லாமல் தனியாக தெரியாத இடத்தில் தயங்கி தயங்கியே நடந்து வந்தாள். சுற்றிலும் சின்ன சின்ன கடைகள் இருந்தன. 

“பூவாங்கிட்டு போம்மா…” என கடைக்கார பெண்மனி ஒருவர் அழைக்க, மென்மையாக அதை மறுத்துவிட்டு, கோவிலை நோக்கி முன்னேறினாள் பிரத்தியங்கரா.

நேற்றைய போலவே அமானுஷ்ய உணர்வு இன்றும் இருக்குமா? அல்லது நேற்று தோன்றியது வெறும் பிரம்மையா என்ற கேள்விகளுடனே கோவிலை நோக்கி சென்றவளுக்கு அன்றைக்கு புதிய அனுபவம் ஒன்று காத்திருந்தது!

3 thoughts on “கொல்லிப்பாவை அத்தியாயம் 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *