ஜீவானந்த் உமா பாரதியின் கழுத்தில் தாலி கட்டியதில் இருந்து அதன்பிறகு நடந்த அனைத்து சடங்கும் முடிந்து மணமேடையை விட்டு எழுந்ததிலிருந்து திரும்பி உமாவை பார்க்க கூட இல்லை.
தன் மகளின் கைப்பற்றியே தன் அத்தை மரகதம் சொன்ன அனைத்தையும் செய்து மகள் பசிக்கிறது என்றதும் காலை உணவு உண்பதற்கு அமர்ந்தான். தன் அருகிலேயே மகளை அமர வைத்துக் கொள்ள சரசு வேகமாக உமாவை அழைத்துக் கொண்டு வந்து ஜீவானந்தம் மற்றொரு பக்கம் அமர வைத்தாள்.
உமாவும் தயங்கிக் கொண்டே அவன் அருகில் அமர்ந்து கொண்டு எட்டி அவனின் மறுபுறம் அமர்ந்த அமர்ந்திருந்த அஞ்சலியை பார்த்து கண்களால் தனது அருகில் வந்து அமருமாறு அழைத்தாள்.
அஞ்சலியோ மாட்டேன் என்ற தலை ஆட்ட இவளோ ப்ளீஸ் என்று கெஞ்சுவது போல் செய்து தனக்கும் தன் கணவனுக்கும் நடுவில் வந்து அமருமாறு செய்கை செய்தாள். எங்கோ பார்ப்பது போல் அமர்ந்திருந்த ஜீவானந்தின் கண்களுக்கு இருவரின் செயல்களையும் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்னர் எழுந்து தன் மகளை தூக்கி இந்த பக்கம் அமர வைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான். உமாவும் சற்று நிம்மதியாக அஞ்சலிக்கு ஊட்டி விட, அஞ்சலியும் சமத்தாக அவளிடம் உணவை வாங்கி சாப்பிட்டாள்.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க ஜீவானந்த் வீட்டிற்கு கிளம்புவதற்காக மரகதம் கூறினார்.
சற்றென்றே தன் தந்தையை கண்ணீருடன் பார்த்தாள் உமா பாரதி.
அவரும் அவளின் அருகே வந்து “நீ அவர்களுடன் முன்னாடி போமா. நான் என் வண்டியில் வருகிறேன்” என்று கூறினார். பின்னர் தையல்கார பெண்ணை பார்த்து, “சரசு நீயும் அவர்களுடன் சென்று வருகிறாயா?” என்று வேண்டுதலாக கேட்டார்.
“இதில் என்ன இருக்கு. நான் போய் அவளை விட்டு விட்டு வருகிறேன். நீங்கள் கவலைப்படாமல் வாருங்கள்” என்று சொல்லிவிட்டு தன் கணவருக்கு போன் செய்து, “உமாவை சென்று அவளது வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன். நீங்கள் பிள்ளைகளே பார்த்துக் கொள்ளுங்கள்” என்றும் கூறிவிட்டு, உமா உடனே கிளம்ப தயாரானாள்.
நல்ல நேரம் பார்த்து அழைத்து வருமாறு சரசிடம் சொல்லிவிட்டு மரகதம் தங்கள் ஊரிலிருந்து வந்தவர்களுடன் வேனில் கிளம்பி விட்டார். காலையில் எழுந்ததால் அஞ்சலி தன் தந்தையின் தோளிளேயே உறங்கி விட, ஜீவானந்த் உமா சரசு மூவர் மட்டும் கோயிலில் மீதம் இருந்தனர்.
முத்துராமன் வண்டியில் கிளம்பி விட்டார். குழந்தை உறங்கிக் கொண்டிருப்பதால் இரு பெண்களுக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சரசு தான் மெதுவாக ஜீவானந்திடம் “குழந்தையை குடுங்களேன் நான் வைத்துக் கொள்கிறேன்” என்று கேட்டாள்.
அவனோ அழுத்தமாக உமாவை பார்த்துக் கொண்டு சரசிடம் குழந்தையை கொடுக்க முயற்சிக்க வேகமாக உமா குழந்தையை வாங்கி தன் தோளில் அணைத்துக் கொண்டாள்.
மரகதம் சொன்ன நேரம் வந்ததும் மூவரும் அங்கிருந்து கிளம்ப டிரைவரின் அருகில் அமர சென்ற ஜீவானந்தை நீங்கள் பின்னால் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று உமாவின் அருகில் அமர வைத்துவிட்டு முன்பக்கம் சரசு அமர்ந்து கொண்டாள்.
உமாவோ “ஏன் அக்கா இப்படி பண்றீங்க? நீங்க பின்னாடி வாங்க அவர் முன்னாடி உட்காரட்டும்” என்று தயங்கியபடி அவளின் காதில் மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு நிற்க, “முதல்ல உட்கார் என்று அவளை பிடித்து பின்னால் அமர வைத்தாள் சரசு.
தோளில் குழந்தை இருந்ததால் அவன் பக்கம் திரும்பும் அவசியம் இல்லாமல் பாதையை வேடிக்கை பார்த்தபடி தலையை திருப்பி அமர்ந்து கொண்டாள் உமா. ஜீவானந்தும் தன் பக்கம் ஜன்னல் வழியாக பாதையைப் பார்க்க உமாவோ மறுபக்கம் வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். இருவரையும் பார்த்து மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டாள் சரசு.
அரை மணி நேரத்தில் ஜீவானந்தின் வீட்டின் முன்பு கார் நின்றது. வீட்டில் இருந்த பெண்கள் வாசல் வந்து ஆரத்தி தட்டுடன் மணமக்களை வரவேற்க நிற்க, காரிலிருந்து வேகமாக இறங்கிய ஜீவானந்த் குழந்தையை வைத்துக்கொண்டு இறங்குவதற்கு தடுமாறிக் கொண்டிருக்கும் உமாவின் அருகில் வந்து குழந்தையை வாங்கிக் கொண்டான்.
ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்த புதுமண தம்பதியர்களை வீட்டில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் செய்ய வைத்தார் மரகதம்.
உமா பாரதி விளக்கேற்றி விட்டு வந்ததும் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தார் வேண்டா வெறுப்பாக அங்கு அமர்ந்திருந்த ஜீவானந்த் அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த முடிந்தவுடன், “அத்தை.. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வருகிறேன்” என்று தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு மரகதம் மறுப்பதையும் பொருட்படுத்தாமல் வெளியே சென்றுவிட்டான்.
அங்கு இருப்பவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய மரகதம் சமையல் அறைக்குச் சென்றார் . அவருடனையே உமாவும் சமையல் வேலை செய்ய தொடங்க போக அங்கிருந்த பெண்கள் இன்று நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அவளை சமையலறையில் இருந்து வெளியே அனுப்பினர்.
அஞ்சலி உறங்கும் அறைக்கு வந்து கட்டிலின் கிழே அமர்ந்து கொண்டாள். அவளுடனே வந்த சரசு வீட்டைச் சுற்றி பார்த்து விட்டு, உங்க வீட்டை விட இவ்வீடு சின்னதா இருந்தாலும் அமைப்பா இருக்கு என்று கூறி மகிழ்ந்தாள். இந்த ரூம்ல மட்டும் தான் குளியலறை இருக்கு.
கொல்லையில் ஒரு குளியலறை இருக்கு உமா. மாடு இருக்கு, ஒரு மாடு குட்டி போட்டுருக்கு என்று மகிழ்வாக தாம் பார்த்ததை எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தாள் சரசு.
அப்பொழுது அவர்கள் இருவருக்கும் குடிப்பதற்கு காஃபி கொண்டு வந்தார் மரகதம். வேகமாக எழுந்த உமா, அம்மா கூப்பிட்டால் நானே வந்து எடுத்துப்பேனே என்று சொல்லி அவரிடம் இருந்து டம்ளர்களை வாங்கி சரசுவிடம் ஒன்றை கொடுத்தாள்.
இனிமேல் எல்லாம் நீதானே பார்த்துக்க வேண்டும். இன்று ஒரு நாள் நான் சொய்துக்கிறேன் என்று சொல்லி கட்டிலில் அமர்ந்து தன் அருகில் அவளை அமர வைத்தார்.
“பக்கத்தில் இருக்கும் ஓட்டு வீடுதான் எங்கள் வீடு. அதில் தான் என் மக்களுடன் வளர்ந்தான் ஆனந்து. இரண்டு பேரும் சின்ன பிள்ளைகள். தனி ஆளாக வயலையும் பார்த்துக் கொண்டு இவர்களை வளர்த்தேன்.
ஆனந்துக்கு கற்பூரபுத்தி. எதையும் சுலபமா கத்துக்குவான். ஐந்து வரைக்கும் இங்க தான் படிச்சான். அப்புறம் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஸ்ரீவில்லிபுத்தூர் கவர்மென்டு ஸ்கூலுல படிச்சான்.
மேக்கொண்டு படிக்க மாட்டேன் என்று சொல்லி வயல் வேலை பாக்க ஆரம்பிச்சுட்டான். அன்றிலிருந்து இன்று வரைக்கும் அவன் விவசாயம் விவசாயமுனு அதையே தான் பண்ணிக்கிட்டு இருக்கான்.
கூடுமான வரைக்கும் இயற்கை உரங்களை தான் பயன்படுத்துவான். மகசூல் கம்மியா இருந்தாலும் நம்ம காலத்துக்கு அப்புறமும் இந்த மண்ணு நல்லபடியா இருக்கணும் அப்படின்னு சொல்லுவான்.
என் பொண்ணுக்கு அவ்வளவா படிக்கிறதில் ஆர்வம் கிடையாது. இருந்தாலும் ஆனந்து விடாப்பிடியா காலேஜுக்கு அனுப்பினான்.
அவளுக்கு விருப்பம் இல்லாதப்ப எதுக்கு படிக்க வைக்கிறன்னு நான் கூட ஆனந்த கண்டிச்சேன்.
நான்தான் படிக்கல. அவளாவது படிக்கட்டும். அப்ப தான் நம்ம ஊர்ல உள்ள பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க வசதியாக இருக்கும். ஒரு பொம்பள புள்ள படிச்சதுன்னா அவ வம்சமே நல்லா இருக்கும்னு சொல்லி இருக்காங்க. என்று ஏதோ சொல்லுவான்” என்று ஜீவ ஆனந்தை பற்றி மரகதம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வாசலில் ஏதோ வண்டி சத்தம் கேட்க, என்னமோ சத்தம் கேட்குது என்று வெளியே வந்து பார்க்க, உமா பாரதியின் தந்தை முத்துராமன் வந்திருந்தார்.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்….
Interesting
Interesting