Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 11

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 11

‘எப்பயும் கூப்புடுறமாதிரியா?’ தன்னையறியா அதிர்ச்சியில் அவன் கேட்டுவிட,
அவன் அதிர்ச்சியைக் கவனிக்காமல், “ஆமாப்பா சின்ன வயசுல நீ என்னை அப்பான்னே கூப்புடமாட்டியே,உங்கம்மாகிட்ட அடில்லாம் வாங்கிருக்கியே…இப்ப ஏன் அப்படி கூப்புடாம அப்பான்னே கூப்புடுறியேன்னு கேட்டேன்.”
என்று புன்னகையுடன் வினவினார் அருணாச்சலம்.

அதற்குள் சுதாரித்திருந்தவன் நாக்கைக் கடித்துவிட்டு, அது…அப்ப விளையாட்டா அறியாமக் கூப்புட்டதுப்பா…
ஆனா உங்களப் பாக்க முடியாம,
அப்பான்னு கூப்புட முடியாம இருக்கறப்பதான்பா அப்பாங்கற வார்த்தைக்குரிய அருமையே புரிஞ்சுச்சு.
எத்தனை தடவை மனசுக்குள்ளயே அப்பா,அப்பான்னு சொல்லிப்பாத்து ஏங்கிருக்கேன் தெரியுமா?
அவருடைய தோளில் தலைசாய்த்தவன் உருக்கமான குரலில் அவருக்குப் பதில் சொன்னான்.

அந்தக்குரலில் உருகி, அவனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டவர், “அதனால உங்கள அப்பான்னே கூப்புடுறேன்பா…” என்றதற்கும் ‘சரிப்பா’ என்று தலையசைத்தார். எனினும் அருணாச்சலத்துடைய கண்களில் ஏதோ ஒரு ஏமாற்றம் தெரியவே செய்தது…

அலைபேசி ஒலிக்கவும் அவர் எழுந்து செல்ல சக்தியும் நிம்மதி பெருமூச்சொன்றை விட்டவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

அவன் தலையை உலுக்கிக்கொண்டே வரவும் எதிரே வந்த பத்மினி, “என்ன அரசு தலையை ஏன் இப்படி ஆட்டுற…தலை எதுவும் வலிக்குதா” எனப் பரிவுடன் கேட்க,
‘இல்லம்மா’ என்று சொல்ல வந்தவன் அதனைப் பாதியில் விழுங்கி விட்டு “ஆமாம்மா,தலை லைட்டா வலிக்குது…” என்றான்.
“காபி போட்டுத்தரவாப்பா” என்றவரிடம் “வேணாம்” எனச் சொல்ல நினைத்துப் பின் “கொடுங்கம்மா” என்றுவிட்டு அவருடன் அடுப்படிக்குச் சென்று அங்கிருந்த மேடையில் அமர்ந்தான்.

“தலை வலிக்குதுன்னுட்டு இங்க ஏன்பா வர்ற…ரூம்ல போய்ப் படுப்பா…காபி நான் கொண்டு வர்றேன்” என்றவரிடம் “இல்லம்மா நான் காபியக் குடிச்சிட்டே போறேன்” என்று புன்னகைத்தான்.

பதிலுக்குப் புன்னகைத்து விட்டு அவர் காபி போடும் வேலையில் மும்முரமாக, அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவன் ‘எப்படி ஆரம்பிப்பது’ என்று சிந்திக்க பத்மினியே அதைச் செய்தார்.

“நீ வக்கீலுக்குப் படிச்சுருக்கேன்னு அப்பா சொன்னாருப்பா,அவ்வளவு பெரிய படிப்பு படிச்சுட்டு எதுக்குய்யா இங்க வந்து டிரைவர் வேலை பார்த்துகிட்டு இருந்த…ஒரு வார்த்தை கூடச் சொல்லலையேயா, அன்னைக்கு அப்பாவா கேக்கலன்னா அப்படியும் சொல்லிருக்க மாட்ட,அப்படித்தான?” என்றவரின் குரலில் வருத்தம் தெரிய,

“டிரைவர்ங்கற வழியில மட்டும்தான்மா இங்க நுழைய முடிஞ்சுச்சு.திடீர்ன்னு வந்து சொன்னா நம்புவீங்களோ இல்லையோன்னு வேற…
அன்னைக்குக் கூட நீங்க என்னை முதல்ல நம்பலலதானம்மா” என்றான்.
அருணாச்சலத்திடம் பயன்படுத்திய அதே உருக்கமான குரல்,கொஞ்சம் ஆற்றாமையும் கலக்கப்பட்டிருந்தது.

தலைகுனிந்து பால் பொங்குவதையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்த பத்மினி, பால் பாத்திரத்தின் விளிம்பிற்கு வந்து கீழே சிந்தப்போகும் முன் அதனை சிம்மில் போட்டார். கீழே சிந்தாமல் மிதமான தீயில் பால் கொதித்துக் கொண்டிருக்க, பத்மினியின் கண்களிலிருந்து சூடான கண்ணீர் வழிந்து கீழே சிந்தியது.

அதைக் கண்டவன் மேடையிலிருந்து கீழே இறங்கி அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, “அம்மா ஏன்மா அழுகிறீங்க…உங்கள ஹர்ட் பண்ணனும்ங்கறதுக்காக அப்படி சொல்லலம்மா…ஸாரிம்மா” என்றான் அதே குரலிலேயே.

“மன்னிப்பு நான்தான்ப்பா கேட்கணும்.நான்தான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.என்னை மன்னிருச்சுப்பா,
நான் வேற ஒருத்தனை எங்க பையன்னு நம்பிகிட்டு இருந்தேன்.
அவன் வேற ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டான்னா,
நான் எங்கபையன்தான் இறந்துட்டான்னு நினைச்சு நினைச்சு இந்த ரெண்டு வருசமா உயிரோட செத்துகிட்டு உங்க அப்பாவையும் படுத்திட்டு இருந்தேன்.
நல்ல வேளை மகராசனா நீ எங்க முன்னாடி வந்து நின்னுட்ட” என்றபடி அவர் காபியைக் கலந்து ஆற்றத் தொடங்கினார்.

“அப்ப உங்கப்பையனைத் தவிர,யார் செத்தாலும் உங்களுக்குக் கவலையில்லல” அவனுடைய குரல் ஏதோவொரு மாதிரி ஒலிக்க பத்மினியுடைய செயல் அப்படியே நின்றது.

திடுக்கிட்டுத் திரும்பியவர்,
“என்னப்பா இப்படில்லாம் சொல்ற…
நீ வந்தாலும் அந்தப்பையன் மேல வச்ச பாசம் எனக்குப் போகல…
இன்னமும் அவன் என்பையன் மாதிரிதான், ஆனாலும் பையன்ங்கிறதுக்கும் பையன்மாதிரிங்கறதுக்கும் வித்தியாசம் இருக்குல்லய்யா,
நீ என்கூடவே இருந்திருந்தாலும் அவன் இறந்ததுக்கு ரெண்டு நாளோ இல்ல ரெண்டு மாசமோ அழுதிருப்பேன் இப்படி ரெண்டு வருசமா அழுதிருக்க மாட்டேன். இன்னமும் வருத்தம் இருக்கதான் செய்யுது.
ஆனா நம்ம பெத்த பிள்ளைக்கு எதுவும் ஆகிருச்சோங்கிற தவிப்பு இருக்குல்லயா அது சொன்னாப்புரியாது.
உன்னைப்பாக்கவும் தான் அந்தத்தவிப்பு அடங்குச்சு… அது நம்மப்பையனுக்கு ஒண்ணும் ஆகலைங்கற நிம்மதிதான்யா…”

நீண்டதொரு விளக்கம் கொடுத்தவரின் மனம் அவன் தன்னைப் புரிந்துக்கொள்ள வேண்டுமே எனத்தவியாய்த்தவிப்பது அவருடைய கண்களில் தெரிந்தது.

அதைக்கண்டவன் என்ன நினைத்தானோ, “என்ன பனி, ஒரு சின்ன வார்த்தை சொன்னதுக்கு இப்படி எமோசனலா உருகுற…அப்பறம் காபியும் உன்னை மாதிரியே சில்லுன்னு ஆகிறபோது…சீக்கிரம் கொடு” என அவருடைய நாடியைப் பிடித்துக்கொஞ்சினான்.

அந்தக்கொஞ்சலில் அவருடைய தவிப்பு அடங்கிவிட, “இன்னமும் நீ இப்படி கூப்பிடுறத விடலையா? நீ பனிபனின்னு சொல்றது எங்காதில்ல வேற மாதிரி கேட்குதுடா” என்றபடி காபியை எடுத்து அவனிடம் நீட்டினார்.

அதை வாங்கியவன் “என்ன பனி நீ இப்படி சொல்ற,அப்பா என்னன்னா நான் அவரை எப்பயும் கூப்புடுற மாதிரி கூப்புடுற சொல்றாரு…”என்று சலுகையாகச் சலித்துக்கொண்டான்.

“ஆமாம்.அவருக்கு நீ அப்படி கூப்பிடுறது பிடிக்கும்…”

“எப்படி கூப்புடுறது???” அவன் குரல் சலுகையாகவே வந்தது.

“வேற எப்படி…அ…” அவர்சொல்லப்போக,

‘டங்டங்…:

‘க்ளீங்…’

‘க்ளங்’

‘சட்’

‘டம்…டம்…டம்…’

“டங்டங்,க்ளீங்,க்ளங்,சட்…டம்…டம்… டும்…”

பக்கத்து அறையிலிருந்து ஏதோ பாத்திரங்கள் மொத்தமாகத் தடதடவென்று விழுகும் சத்தம் கேட்டது.

அதைக் கேட்டவர் “பக்கத்து ரூம்க்கு மேலே பரணுக்கு மரக்கதவு அடைக்க ஆள் வரச்சொல்லிருந்தேன்டா.வந்துட்டாங்க போல,
நீ தலைவலிக்குதுன்னல்ல…
மேலே போயிரு…
இங்க வேலை பாக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா ரொம்ப சத்தம் வரும்.” என்றபடி விரைந்தார்.

கையிலிருந்த காபியை சிங்கில் ஊற்றிவிட்டு டம்ளரை டங்கென போட்டுவிட்டுப் போன சக்தியின் கோபம் அவன் படியேறிய வேகத்தில் தெரிந்தது.

அவனை விட ஆயிரம் மடங்கு அதிகமான கோபம் இவ்வளவு நேரம் அங்கு அருவமாக நின்று கொண்டிருந்த அருளாளனிடம் தெரிந்தது.

“மெதுவா எடுத்து வைக்கமாட்டீங்களா?இப்படிதான் உடைப்பீங்களா?”
பத்மினியும் கோபத்தோடுதான் அடுத்த அறையில் நுழைந்தார். ஆனால் நுழைந்தவுடன் அவருக்கு கோபம் போய் குழப்பம் வந்தது.

காரணம்…. பரணிலிருந்த அண்டா முதல் கிண்ணம் வரை அனைத்துப் பாத்திரங்களும் சிதறிக்கிடக்க, அறை ஆளரமின்றி இருந்தது….

அந்த அறையின் ஜன்னலைப் பூட்டிவிட்டு, இந்தப் பூனைத்தொல்லைக்காகத் தான் மரக்கதவு அடைக்கணும்ன்னு சொல்றேன் என்று முணுமுணுத்தபடி சென்றார் அவர்.

****

“ப்ரதாப் சார்…”

“மேடம்”

அவரிடம் ஒரு கோப்புக்கட்டைக் காட்டிய அமிழ்தா, “இந்த பைல்ஸ் எல்லாம் ரொம்ப முக்கியமானது.ரொம்ப அத்தியாவசிய தேவையில இருக்கிற மக்களுக்கானது. வேகமா ஆக்ஷன் எடுக்க சொல்லி அந்தந்தப் பகுதி அலுவலர்களுக்கு ஆர்டர் அனுப்புங்க” என்று அவரிடம் வேலையைக் கொடுக்க அந்த கோப்புக்கட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார் பிரதாப்.

மீதமிருந்த இரு கோப்புகளையும் தெளிவாக வாசித்து அவள் கையெழுத்திட்டு முடிக்கவும் அவன் அவளது டேபிளைத் தட்டி “உன் மனசில என்னத்தை நீ நினைச்சுகிட்டு இருக்க” என்று ஆக்ரோஷமாகக் கத்தவும் சரியாக இருந்தது.

அவனது குரலிலேயே யாரென்று அறிந்தவள், கையெழுத்திட்டு முடித்த அந்தக்கோப்பைச் சரியாகக் கட்டி அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு மெதுவாகவே நிமிர்ந்தாள்.அந்த அலட்சியமான நிமிர்தலிலேயே அவளுடைய நிமிர்வு தெரிந்தது. அது அழகாகவும் இருந்தது. நிமிரும்போது சிலும்பிக்கொண்டு முகத்தில் வந்து விழுந்த முடியும் கூடத்தான்.

அவளது அழகில் அவனது ஆக்ரோஷம் அவனையறியாமல் மட்டுப்பட,

“என்ன மிஸ்டர் கதவு அங்க இருக்கு, கதவுன்னு நினைச்சு டேபிள்ல தட்டிட்டு இருக்கீங்களா? ” அலட்சியமாக வினவினாள் அவள்.

அந்த அலட்சியக்குரலில் மீண்டும் எரிச்சலானவன்
“ப்ச் கலெக்டர் மேடம் பெர்மிசன் வாங்காம வந்துட்டேன்னு குத்திக்காட்டுறீங்களாக்கும்.” என்றான் அவனும் எரிச்சலாகவே.

“ஆமாம்”என்றவள் “பக்கத்து கேபின்ல் என்னோட பி.ஏ ப்ரதாப் இருப்பாரு. அவர்கிட்ட என்ன விஷயமா என்னப் பாக்கணும்ன்னு சொல்லி அப்பாயின்மென்ட் பிக்ஸ் பண்ணிட்டு என்னை வந்து பாருங்க, இப்ப வெளில போங்க என்னோட நேரத்தை என் அனுமதியில்லாம வேஸ்ட் ஆக்காதீங்க” என்றாள் எச்சரிக்கை குரலில்.

“ஏய் நான் ஒண்ணும் உன்னைப் பார்க்குறதுக்காக ஓடோடி வரலை…சொல்லப்போனா உன்னைப் பார்க்கவே வரக்கூடாதுன்னுதான் நினைச்சேன்.இப்ப நீ பண்ணி வச்சுருக்கக் காரியத்துனால தான் இங்க வந்து நின்னுட்டு இருக்கேன்.பண்றதையும் பண்ணிட்டு பெரிய இவ மாதிரி பேசிட்டு இருக்க…” அவனுடைய குரலே அவன் எக்குத்தப்பான கோபத்தில் இருப்பதை உணர்த்தியது.

அவனை ஆழமாகப் பார்த்து “நான் அப்படி என்ன பண்ணேன் மிஸ்டர் கோஸ்ட்…ஸாரி,ஸாரி….மிஸ்டர் அருளாளன்” என்றாள் அவள்.

(தொடரும்….)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *