Skip to content
Home » டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 14 (1)

டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 14 (1)

மறுநாள் காலையில் தனது விளக்கக் காட்சியை மிக அழகாக நடந்திக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி. அதைக் கேட்பதற்கெனவே அங்கே வந்து அமர்ந்து இருந்தான் ரஜினிகாந்த். அவனுடன் டாக்டர் கணபதி.

அவளது உரையில் இருந்தத் தெளிவு, அங்கே வந்திருந்தவர்களை பிரமிக்க வைத்திருக்க வேண்டும். வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அழகாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.  

நேற்று கைகளில் ஏந்திக் கொண்ட போது கூட எதுவும் தோன்றவில்லை. ஆனால் இரவு முழுவதும் அவளது கண்கள் அவனுக்கு திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன.

அவை மறைத்து வைத்திருக்கும் செய்திகள் என்னவென யோசித்து யோசித்து உறக்கம் கெட்டு கிடந்தான் நமது மருத்துவன். உறங்கிய கொஞ்ச நேரத்திலும் கனவு முழுவதும் அவளது விழிகளே ஆக்கிரமித்துக் கொண்டன.

கனவில் ஒவ்வொரு முறை அவளது விழிகள் தோன்றும் போதும் உடல் குலுங்க எழுந்து அமர்ந்தான் இவன். அதன் காரணம்தான் புரியவில்லை.

இங்கே அவளது விளக்கக் காட்சி முடிந்ததும் அத்தனை கைத் தட்டல்கள்,  நிறையவே பாரட்டுக்கள் அவளுக்கு. இவனுக்குள்ளும் பெருமையின் பூக்கள்.

டாக்டர் கணபதியும் அவளைப் பாராட்டி முடிக்க, ஒன்றுமே பேசாமல்  ஆத்மார்த்தமான கைக்குலுக்கலுடனும் நெஞ்சார்ந்த புன்னகையுடனும் தனது பாராட்டை முடிந்து இருந்தான் இவன். இந்த  முறை அவனுடன் கைகுலுக்க மறுக்கவில்லை ஸ்ரீதேவி. மஹதியுமே அவள் பேசுவதை ரசித்து இருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தோழி அவளது அருகில் வர தன்னை கட்டுப் படுத்திக் கொள்ளவே முடியாமல் அவளைப் பாராட்டி விட கை நீட்டி விட்டிருந்தாள் மஹதி.

ஸ்ரீதேவியின் விழிகளில் அப்படி ஒரு கோபம். இருந்தாலும் எதையும் வெளிப்  படுத்திக் கொள்ளாமல் அவளைப் பார்த்து கரம் கூப்பி விட்டு நடந்தாள் நமது நாயகி.

அப்போது மஹதியின் முகத்தில் வந்த வருத்தமும், வெறுமையும் அவர்களது நட்பை அவனுக்கு சொல்லியது. அவன் நேற்றிரவு ரமேஷாவுடன் பேசிய பிறகு சில விஷயங்கள் தெளிவாகி இருந்தன.

அன்றைய மாலை நேரத்தில் அந்த ஹோடேலினுள் இருந்த அந்த சாக்லேட் பொட்டிக் எனப்படும் சாக்லேட் கடையினுள் இருந்தார்கள் கணபதியும் ரஜினிகாந்தும்.

அந்த பொட்டிக்கினுள் நுழையும் போதே சாக்லேட்டின் நறுமணம் ஓடி வந்து அணைத்துக் கொண்டது உண்மை. சுற்றி இருந்த சுவர்கள் கூட சாக்லேட் பார்களின் வடிவத்தில் இருக்க அங்கிருந்த அலங்கார பொருட்கள் துவங்கி இருக்கைகள் வரை அத்தனையும் சாக்லேட்டுகளையே நினைவுப் படுத்திக் கொண்டிருந்தன.

காதலியை மறந்து விட முயன்ற  அந்த மனிதர், விதம் விதமான உணவுகளை விரும்பி  காதலிக்கும் வழியை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.  இப்போது ஒரு குழந்தை போல சாக்லேட்டுகளை காதலித்துக் கொண்டு நிற்கும்   அவரை  ஒரு சிறு புன்னகையுடன் பார்த்துவிட்டு பார்வையை  சுழற்றினான் நமது நாயகன்.

பேசாமல் வந்த வேலையை முடித்து விட்டு கிளம்பியிருக்கலாம் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்கும் வேலையை செய்திருக்கவே வேண்டாம் என்று தோன்றும் அளவுக்கு அவனது முகத்தில் அறைந்தது அவன் கண்ட காட்சி.

கண்ணுக்கெட்டும் தூரத்தில் ஸ்ரீதேவி ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பது அவனது பார்வையில் விழுந்தது. பேசிக் கொண்டிருக்கவில்லை அவளுடன் ஏதோ விவாதித்துக் கொண்டிருக்கிறாள் என்றும் தோன்றியது இவனுக்கு.

அவள் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகம் கூட இவனுக்கு மிகவும் பரிச்சயமானதாகவே  இருந்தது. அதற்கு மேலாக அந்தப் பெண்ணின் முகம் இவனுக்குள் ஒரு ஆழமான கசப்பை தூண்டுவதாகவும் ஒரு உணர்வு.

நினைவிடுக்குகளை இவன் வேகமாக எட்டிப் பார்க்க  அந்தப் பெண் யாரென அவனுக்கு அடையாளம் தெரிந்தது.

தான் நினைத்ததை நினைத்த வகையில் நடத்திக் கொள்ளும் சாமர்த்தியம், அடுத்தவர்கள் உணர்வுகளை அவர்களது வலிகளை என எதையுமே புரிந்து கொள்ளாத திமிர், அகங்காரம் என பல நல்ல குணங்களுக்கு சொந்தக்காரி ஆயிற்றே இந்த ஸ்ரீலேகா.

மனம் கோபத்திலும் அழுத்தத்திலும் பற்றி எரிந்தது.

இங்கே டாக்டர் கணபதி சாக்லேட்டுகளில் மூழ்கி இருக்க. பேசிக் கொண்டிருந்த பெண்களையே  பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ரஜினிகாந்த். அவர்கள் இருவரும் இவனை கவனிக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஏதோ பெரிய விவாதத்தை முடித்து விட்டு இருவரும் தனித்தனியே அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள்.

இவளுக்கும் ஸ்ரீதேவிக்கும் என்ன சம்மந்தம். கேள்வி புரட்டத் துவங்கியது அவனை. அப்படி இருக்காது. அப்படியெல்லாம் இருக்காது என இவன் பல முறை மறுத்துப் பார்த்தும் விடாமல் அந்தக் கேள்வியையே மறுபடி மறுபடி கேட்டது இவனது ஆராய்ச்சி மனம்.

‘ஒரு வேளை இவள்தான் ஸ்ரீதேவியின் அக்காவோ?’.

இவனது குடும்பத்தில் யாருமே இதுவரை அவளது அக்காவை சந்தித்தது இல்லையே.  

“உங்களுக்கு  ஒரு அக்கா இருக்காங்க இல்ல ஸ்ரீதேவி டாக்டர். அவங்களை எங்க அம்மா கூட பார்த்தது இல்லை போலிருக்கே. என்ன பண்றாங்க அவங்க?” முன்பொரு முறை கேட்டிருக்கிறான் இவன்.

“ஒரே நேரத்திலே ஒரு ஊரிலே இருக்க மாட்டா. சுத்திட்டே இருப்பா. நம்ம நிச்சியத்துக்கு எப்படியும் வருவா ரஜினி சர். அவளுக்கும் எனக்கும் ஒத்து போறது இல்லை. எப்பவுமே சண்டைதான். வாழ்க்கையிலே நிறைய தப்பு பண்ணி இருக்கா ரஜினி சர். ஆனா தான் செஞ்சது தப்புன்னு ஒத்துக்க மாட்டா. அவ நினைச்சது மட்டும்தான் நடக்கணும்னு நினைப்பா. அவ செஞ்ச ஒரு பெரிய தப்புக்காக கொஞ்ச நாள் அவகிட்டே பேசாம கூட இருந்தேன். பட் எத்தனை நாள் கூடப் பிறந்தவளை விட்டு ஒதுங்க முடியும் சொல்லுங்க”

“அப்படி என்னதான் தப்பு பண்ணாங்க?” யோசனையுடன் கேட்டான் இவன்.

“இப்போ டைம் இல்லை. அப்புறம் இன்னொரு நாள் சொல்றேன். சர்ஜரி  இருக்கு. அப்புறம் பேசறேன்” அன்று முடிந்திருந்தாள். அதன் பிறகு அதைப் பற்றி கேட்கவும் இல்லை இவன். அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை.

இன்று இவன் கண்ட காட்சி மெல்ல மெல்ல புள்ளிகளை இணைக்கிறது.

“நாம பிரிஞ்சதுக்கு உங்க தங்கச்சி காரணமா இருந்தா என்ன செய்வீங்க? சொல்லப் போனா அவதான் முக்கிய காரணம்” அவளது வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வர அரசி எப்படி காரணமானாள் என்பது புரிகிறது.

அன்றைய நிகழ்ச்சிகள் முடிய நேரம்  மாலை ஏழு மணியைத் தாண்டி இருந்தது. இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு ஊருக்கு கிளம்பி விடலாம் என்பது திட்டம்.

காலையில் இருந்தே தூறிக் கொண்டிருந்த மழையின்  வேகம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்து இருந்தது. இரண்டு நாட்களுக்கு மழையும் காற்றும் சற்று அதிகமாகவே இருக்கும் என்ற எச்சரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.

சாப்பிட்டு முடித்து கிளம்பும் நேரத்தில் கணபதியிடம் விடைபெற்றுக் கொள்ள வந்தாள் ஸ்ரீதேவி.  இப்போதும் இவனது தலைக்குள் ஸ்ரீலேகாவே ஆக்கிரமித்து நின்றிருந்தாள்.

‘நிஜமாகவே ஸ்ரீலேகாதான் இவளது தமக்கையா?’

“அவ செஞ்ச ஒரு பெரிய தப்புக்காக கொஞ்ச நாள் அவகிட்டே பேசாம கூட இருந்தேன்”. முன்பு சொன்னாளே. அப்படி என்றால் அவள் என்னை விட்டு ஒதுங்கி நிற்பதற்கும் அந்த பெரிய தப்ப்புதான் காரணமா?

‘அப்படி என்றால் எனது குடும்ப நலனுக்காகத்தான் விலகி நிற்கிறாளா?’

இப்போதுதான் அவள் மீதான காதல் பன்மடங்காகும் உணர்வு அவனுக்கு. இடம் பொருள் சுற்றம் என  அவளை அள்ளிக் கொண்டு எங்காவது பறந்து விட வேண்டும் போல் இருந்தது. எல்லாம்  மறந்து அப்படியே அவளை சேர்த்தணைத்துக் கொண்டு மாறி மாறி  முத்தமிட வேண்டும் போலவே இருந்தது.

ஆனாலும் அதுவெல்லாம் சாத்தியமில்லையே.  குடும்பம் சுற்றம் சமூகம் பாசம் பந்தமென நம்மை சுற்றி பல கட்டுகள் இருக்கின்றனவே. அவற்றில் சில தானாக வந்தவை சில நாமாக போட்டுக் கொண்டவை.

பெரும் குற்றங்கள் நடந்து விடக் கூடாது என்பதற்காக  ஏற்படுத்தப் பட்ட விலங்குகள் அவை என்றாலும் சில நேரங்களில் நமக்கான நியாயங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூட அவை தடையாக நிற்கின்றனவே

 ‘கேட்டு விடலாமா? ஸ்ரீலேகா உன் அக்காவா என இவளிடம் நேரடியாகவே கேட்டு விடலாமா?’ சுழன்றது இவனது மனம்.

அதே நேரத்தில் அடுத்த பூதாகார கேள்வி ஒன்று இவன் முன்னால் எழுந்தது ‘அப்படி அவளது பதில்  ஆம் என்றால் உன் வீட்டில் இருப்பவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன?’

“நீ மட்டும் தனியா கார் ஓட்டிட்டு வந்திருக்கியாமா?” என்ன தோன்றியதோ அவளைப் பார்த்து கேட்டார் கேட்டார் கணபதி.

“எஸ் டாக்டர்”

“வெதர் காத்தும் மழையுமா இருக்கே மா. பேசாம எங்களோட வந்திடேன்.  உன் வண்டி பெங்களுர் வர நான் ஏற்பாடு பண்றேன்” சொன்னார் அக்கறையாய் “எனக்கு என்னமோ நீ தனியா போறது சரியில்லைன்னு தோணுது”

தனது காதலிக்கு நேர்ந்த விபத்து அவரை இன்னமும் புரட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்ரீதேவி காரில் தனியே செல்வது ஏனோ உறுத்தியது பெரிய மருத்துவருக்கு.

அவளது பதிலுக்காக அவளது முகத்தையே பார்த்திருந்தான் ரஜினிகாந்த். சொல்லப் போனால் அவனது மனதில் இருந்தவற்றைத்தான் பேசிக் கொண்டிருந்தார் கணபதி உண்மையில் அவனுக்கும் அவளை தனியே அனுப்புவதில் உடன்பாடு இல்லை.

 “இல்லை டாக்டர். தேங்க்ஸ். நான் பத்திரமா ஊருக்கு போயிடுவேன் . ப்ளீஸ் டூ நாட் வொர்ரி சர்”  நிமிர்ந்த பதில் தந்தாலும், நேற்று அவனது தந்தை பேசிய விஷயம் அவளுக்குமே நெருடல்தான்.

இருந்தாலும் அவன் எதிரில் இறங்கி வரும் எண்ணம் துளியும் இல்லை அவளுக்கு.

“ஸ்ரீதேவி நான் உன் நல்லதுக்குதான் மா சொல்றேன். நீ ஏங்க கூட வருவது உனக்கு ரொம்ப சேஃப்”

“வொய் சர். நான் பொண்ணுன்னு எனக்கு டிரைவ் பண்ணத் தெரியாதுன்னு சொல்றீங்களா? மென் நீங்க டிரைவ் பண்றதை விட நாங்க  பெட்டராவே டிரைவ் பண்ணுவோம்”

அவளது வார்த்தைகளில் அவரது முகம் கொஞ்சம் மாற்றம் கொண்டது.

“வாட் இஸ் திஸ் டாக்டர் ஸ்ரீதேவி. நான் உங்க அப்பா மாதிரி அக்கறையா சொல்றேன். நீங்க கேட்க மாட்டேங்குறீங்க. அர்கியூ பண்ணிட்டு இருக்கீங்க” அவர் ஆதங்கமாக சொல்ல

“எங்களை சின்ன வயசிலே விட்டுப் போனதாலே எனக்கு எங்க அப்பாவையே பிடிக்காது சர்” சொல்லிவிட்டாள் பட்டென “அவர் சொன்னா கண்டிப்பா கேட்க மாட்டேன்” முடித்தாள் அவள். அவளுக்கு வேறே எதுவும் இல்லை, அவனை விட்டு ஓடி விடும் அவசரம்.

 அப்போது அவளையே பார்த்துக் கொண்டிருந்த  அவனது முறைப்பில்தான் அந்தப் பெரிய மனிதரிடம் அப்படி பேசியிருக்கக் கூடாது எனும் உண்மை பெண்ணுக்கு புரிய, அதற்குள்ளாக இடைப் புகுந்து விட்டான் ரஜினிகாந்த்.

“வெரி ஸாரி சர். என்ன பேசறோம் யார்கிட்டே பேசறோம்னு  தெரியாம பேசிட்டு இருக்காங்க  அவங்க. அவங்களுக்கு பதிலா நான் உங்ககிட்டே ஸாரி கேட்டுக்கறேன்.”

இப்போது மெல்ல இறங்கியது அவளது குரல்  “ஐ அம் ஸாரி சர். ஐ டின்ட் மீன் இட் தட் வே. நான்.. நான்.. சரி சர் நீங்க சொல்றதுக்காக நான் தனியா போகலை. கூட எங்க அக்காவை கூட்டிட்டு போறேன் சர். அவளுக்கு அடுத்த ரெண்டு நாள் லீவ்ன்னு சொன்னா. அவளும் என்கூட வரேன்னு சொல்லிட்டுத்தான் இருந்தா. நான்தான் மறுத்திட்டே இருந்தேன். இப்போ  அவளையே கூட்டிட்டு போறேன்  அவளும் வீட்டுக்கு வந்திட்டு போனா மாதிரி இருக்கும்”

இப்போதும் அரை மனதாகவே தலையசைத்தார் கணபதி. அவருக்கு ஏனோ மனமே ஒப்பவில்லை.

“பார்த்து பத்திரமா ஓட்டிட்டு போங்கம்மா” என்றார் அவர் “டைம் ஆனா பரவாயில்லை. ஊருக்கு பத்திரமா போனா போதும்”.

தலை அசைத்தாள் பெண். அடுத்து டாக்டர் கணபதி அங்கிருந்து நகர்ந்து செல்ல

“ஒரு நிமிஷம்” அழைத்து விட்டான் நமது நாயகன். ஆனால் என்ன பதில் வருமோ எனும் குழப்பத்தில் கேள்விதான் தடுமாறியது.

“அது நீங்க.. உங்க அக்கா இங்கேதான் இருக்காங்களா?” அவனது கேள்வியில் சுருங்கின அவள் புருவங்கள்.

‘எதுவும் தெரிந்து கொண்டானோ இவன்?’

‘எஸ்.” என்றாள் யோசித்து “ஒரு வேலையா இந்த ஹோடேலுக்கு வந்திருக்கா”

“ஓ” என்றான் மெதுவாக. புள்ளிகள் இன்னுமாக இணையும் உணர்வு. அவள் அவனை விட்டு விலகிப் போனதற்கான காரணம் உறுதியாகும் உணர்வு.

 “தேவி”

“சொல்லுங்க” இப்பொது பெரும் அமைதி வந்திருந்தது அவளது பேச்சில்.

‘டாக்டரோட கார் பென்ஸ். இந்த மழையிலே அதிலே போறது ரொம்ப சேஃப். அதுக்குதான் டாக்டர் அவ்ளோ சொன்னார். எங்க கூட வர்றதிலே என்ன பிரச்சனை உனக்கு?”

அவன் கேட்டு முடித்த நேரத்தில் அப்படி ஒரு நிகழ்வு நடக்குமென அவன் நினைக்கவில்லை. சொல்லி வைத்தார் போல அந்த இடத்தில் வந்து ஸ்ரீதேவியின் அருகில் நின்றாள் ஸ்ரீலேகா.

இவனுக்கு அவளைப் பார்த்ததில் அத்தனை பெரிய அதிர்ச்சி இல்லை என்றாலும் ஸ்ரீலேகாவின் முகத்தில் அதிர்ச்சி பேரலைகள். இவனைப் பார்த்ததும் இரண்டடிகள் பின்னால் நகர்ந்தாள் ஸ்ரீதேவியின் அக்கா. ஸ்ரீதேவிக்கு இது திடீர் அதிர்ச்சி என்றாலும் நொடிகளில் சமாளித்துக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும்.

முன்பு இவர்கள் இருவர் திருமணப் பேச்சு, அதன் பிறகு ஸ்ரீதேவிக்கு சில உண்மைகள் வெளிச்சமான பிறகு வீட்டில் நடந்த விவாதங்கள், கடைசியில் இந்தத் திருமணமே வேண்டாம் என ஸ்ரீதேவி முடிவெடுத்த தினம், அத்தனைக்கும் உடனிருந்தவள்தான் ஸ்ரீலேகா.

ஸ்ரீலேகா, ஸ்ரீதேவி , ரஜினிகாந்த் மூவரும் அருகருகே நிற்க அவர்களை சுற்றி இருந்த காற்று கூட கொதிக்கும் எண்ணம் ரஜினிகாந்துக்கு. இப்படி ஒரு சூழ்நிலையில், இப்படி ஒரு உறவு முறையில் ஸ்ரீலேகா வந்து நிற்பாள் என அவன்  நினைக்கவே இல்லை.

கனத்த மௌனம் ஒன்று அங்கே வியாபித்து  நிற்க, இப்போது ரஜினிகாந்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவியின் இதழோரம் சின்ன புன்னகை.

“இப்பவும் என்னை உங்களோட் கூட்டிட்டு போகத் தாயாரா இருக்கீங்களா ரஜினி சர்?” அவளது புருவங்கள் ஒரு முறை ஏறி இறங்கின. அவளது கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள்.

இந்த அத்தியாயத்தின் அடுத்த பகுதிhttps://praveenathangarajnovels.com/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d-13/

8 thoughts on “டாக்டர் ரஜினிகாந்த் அத்தியாயம் 14 (1)”

  1. Avatar

    டாக்டர் கணபதி உங்கள் காதல் சாக்லேட் பக்கம் திரும்பி விட்டதே. நைஸ். ஸ்ரீதேவிக்கு கிடைக்கும் பாராட்டில் மகிழும் ரஜினி. மஹதி நீ நல்லவளா கெட்டவளா ? ஸ்ரீதேவியின் அக்கா தான் இவர்கள் பிரிவிற்கு காரணமா? ஸ்ரீதேவிக்கு தன் அப்பாவின் மீதும் ஏன் கோபம் வர வேண்டும்? ஸ்ரீலேகாவின் தவறுக்கு துணை போனாரோ ?

  2. Avatar

    மஹதி தான் அது ன்னு அழகா கண்டு பிடிச்சிட்டான், இந்த லேகா என்ன பண்றா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *