அத்தியாயம்-4
சற்று தொலைவுக்கு சென்ற பின்னரே ”டேய் நில்லுடா என்ன கூப்பிட கூப்பிட மதிக்கமா போற” என கையை இழுத்தாள்
”பின்ன… பாரு சாதனா திடீர்னு வந்து அவன் எப்படி சொல்லலாம்” என்றான் சிவா
”டேய் உனக்கு என்ன பிரச்சனை?”
”உனக்கு தெரியாத ஜோதி கல்யாணம் முடிஞ்சா தானே எனக்கு கல்யாணம் பண்ண முடியும்”
”ஓஹோ அதானே பார்த்தேன்… டேய் உன் சுயநலத்துக்காக அவ படிப்பை ஸ்பாயில் பண்ற”
”உனக்கு தெரியாத நம்ம கல்யாண பேச்சை… இங்க கூட அத்தை பேசறாங்க. ஜோதி கல்யாணம் பண்ணிக்கிட்டா நான்…”
”டேய் டேய் போதும் நிறுத்து. அதுக்காக இப்படியா? எது நடந்தாலும் நான் உனக்கு துணையா இருப்பேன்”
”நிஜமா எது நடந்தாலும் இருப்பியா?”
”ஹ்ம் கண்டிப்பா. ஆனா ஜோதி படிப்பை தடை சொல்லாத”
”அவன் யாரு…?”
”ப்ளீஸ் அவன் இவன் என்று சொல்லாத எனக்கு பிடிக்கலை”
”என்ன திடீர் என்று மாறற நீ கூட அவனுக்கு சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு போற எனக்கு பிடிக்கலை. எனக்குன்னு பச்சை தண்ணி எடுத்து வந்து கொடுத்திருக்கியா?” என்றான் கோபமாக
”அய்யா சாமி நான் மாறலை. உன்னை விட பெரியவங்க. ஏன் நீ கூட முன்ன சின்ன வயசுல அண்ணா என்று தானே கூப்பிட்ட?”
”அது சின்ன வயசுல அதுக்குப் பிறகு நடந்ததை நான் மறக்கலை”
”ஓ காட் இப்ப நீ மறுபடியும் ஆரம்பிக்காத வா ஜோதி அழுதுகிட்டு இருக்கா வந்து சமாதானம் பண்ணு” என இருவரும் நடந்து வர கௌதமிற்கு சொல்ல இயலாத சினமும் வருத்தமும் வந்தது. அது ஏன் என அவன் உணர முயலவில்லை.
ஒரு வழியாக ஜோதி படிக்க ஒப்புதல் அளித்து விட்டான். அந்நாளில் இருந்து ஜோதி ஒரு புது பறவை போல பறந்தாள்.
கௌதமிற்கு உணவு எடுத்து வந்து கொடுத்துவிட்டு பேசியப்படி இருந்தாள் ஜோதி. தற்போது சாதனா உணவு எடுத்து வருவதில்லை. முதலில் அவன் அதை உணரவில்லை பின்னரே சாதனா தனக்கு கொண்டு வருவதில்லை என உணர்ந்தான்.
காலையில் வந்த பாட்டிகளில் ஒருவர் சாதனாவை வேறு பொஞ்சாதியா என்று கேட்டது நினைவு வந்தது. அதற்கு தான் ஏன் இல்லை என்று கூறாமல் கல்யாணம் ஆகவில்லை என்று மட்டுமே சொன்னேன்.
அது மட்டுமா அன்று சட்டையினை கழற்றி உரிமையாக அவளிடம் உரிமை என்பானேன் மனைவி போல கொடுத்து விட்டு சென்றேனே… அதுவும் ஏன். அவளும் தான் மறுத்து விடாது அமைதியாக வாங்கிக் கொண்டாள்.
இன்னோரு மனமோ அவனிடம் ‘டேய் கௌதம் தாமரை அத்தை சிவாவுக்கு தான் சாதனா என்று சொன்னது நினைவு இல்லையா? அது மட்டுமா சிவா கோவித்துக் கொண்டு சென்ற போது பின்னாடியே சென்று அவனை சமாதானம் செய்தாள். அதனால் அவளை உன் மனதில் இருந்து தூக்கி எரிந்து விடு… என்றது மனம். அவனோ எப்பொழுது அவள் என் மனதில் வந்து அமர்ந்தாள் என்ற கேள்விக்கு தெரியலை என்று பதிலை தந்து கயிற்று கட்டிலில் படுத்து சிறுவயது நினைவை நினைக்க துவங்கினான்.
அப்பொழுது கௌதமிற்கு பதினான்கு வயது இருக்கும் சிவாவிற்கு பனிரெண்டு வயது, சாதனாவிற்கு பத்து வயது, ஜோதிக்கு ஐந்து வயது இருக்கும். சியாமளா மேகலை இருவருமே தங்கள் குழந்தைகளை வேறுபடுத்தி பார்த்தது இல்லை அதனால் குழந்தைகளும் அப்படி எண்ணாமல் சிவா, ஜோதி இருவருமே கௌதமை அண்ணா என்றே அழைத்து இருந்தார்கள். சாதனா கௌதமை கௌதம் மாமா என்றே அழைப்பாள்.
பெரும்பாலும் கௌதம் சிவாவிடம் விட்டு கொடுப்பான். அதே போல ஜோதி சிறு குழந்தை என்று ஆசையாக தூக்கி கொஞ்சுவான். சாதனாவும் குண்டு குண்டு கன்னம் கொண்டு அவனை கௌதம் மாமா என்று அழைக்கும் போது அவளையும் ரசிப்பான்.
சாதனாவிற்கு தன்னிடம் சண்டை போடும் சிவாவை விட தனக்கு விட்டு கொடுக்கும் கௌதம் மாமாவை ரொம்பவே பிடிக்கும்.
மிதிவண்டி ஓட்டி கீழே விழுந்த பொழுது தனது பாவாடை சட்டையினால் அவனின் ரத்தத்தினை துடைத்து விட்டு சிரிப்பாள். அவனை பிடிக்கும் என்பதால் அவன் கடித்து கொடுத்த மாம்பழம் கூட சங்கோஜமின்றி உண்பாள்.
அவனுக்கும் அவளின் கொலுசொலி சப்தத்தில் பாவாடை தரையில் பிறழ நடக்கும் விதமும் ரசிப்பான்.
அன்று சிறு தூறலில் அங்கிருந்த பெரிய அரச மரத்தடியில் சாதனா என்பதை சனா என்று எழுதிக் கொண்டு இருந்தான். அதை பார்த்த சாதனா,
”ஐயோ கௌதம் மாமா உங்களுக்கு என் நேம் சரியாவே எழுத தெரியலை. சா க்கு பக்கத்துல கால் போடணும் அப்பறம் தா நடுவுல வரணும் என்று சொல்லி முடிக்க, அவனோ
”இல்லை sathana நான் இங்கிலிஷ் லெட்டர்ல பஸ்ட் டூ லெட்டர் தென் லாஸ்ட் டூ லெட்டர் சேர்த்து உன்னை sana ‘சனா‘ என்று கூப்பிட இப்படி எழுதி இருக்கேன்” என்றான்.
”அப்போ என் பேர் சனா என்று கூப்பிடுவாங்களா?”
”சே சே எல்லோரும் அப்படி கூப்பிடமாட்டாங்க நான் மட்டும் தான் ‘என் சனாவை‘ அப்படி கூப்பிடுவேன்” என்றான்.(அப்பவே வா)
”வாவ் சூப்பர்” என்று கை தட்டி சிரிக்க,
”நான் உன்னை இப்படி கூப்பிட எனக்கு நீ கிஸ் தரவே இல்லையே” என்று கன்னத்தை நீட்டி கேட்டான். குண்டு கன்னம் குட்டி பாப்பா என்ற எண்ணத்தில்.
” கௌதம் மாமா நான் சின்ன பொண்ணு பெரியவங்க தான் குட்டி பாப்பாவுக்கு கிஸ் தருவாங்க. அது மாதிரி நீங்க தான் தரணும்” என்று ஜோதிக்கு எல்லோரும் முத்தமிடுவதை எண்ணி அவள் சொல்ல,
”ஓகே அப்போ நான் தர்றேன்” என்று சாதனா கன்னத்தில் முத்தமிட்டான்.
”கௌதம் மாமா இந்த பக்கம்” என்று மற்றொரு கன்னத்தையும் சேர்த்தே முத்தம் வாங்கினாள். ”இப்பாவது நீ தருவியா?” என்று கேட்க,
”நோ நோ பாப்பாவுக்கு தான் எல்லோரும் முத்தம் கொடுப்பாங்க பாப்பா யாருக்கும் தர மாட்டாள்” என்று ஜோதியை பற்றி எண்ணி சொல்லி ஓடினாள். கௌதம் அவளை துரத்திக் கொண்டு ஓட அவளும் ஓடினாள்.
அதே நேரம் வேதவள்ளி தனது தம்பி ரவீந்தரிடம் தனது மகள் மேகலை இறந்ததற்கு காரணம் சியாமளா தான். எந்த பெண் தனது கணவனை முழுதாக விட்டு கொடுத்துவிட்டு நிம்மதியாக வாழ்வாள். அதனால் தான் மேகலை சின்ன வயதில் இறப்பதற்கு காரணம் என்றும் இப்படி இந்த வீட்டில் என் பேரனும் வாழ்வது எனக்கு பிடிக்கவில்லை என்று கௌதமை அழைத்து சென்று தானே வளர்ப்பதாக சொல்லி பேரனை அழைத்துச் சென்றார்.
ரவீந்தரும் அக்கா தனியாக இருப்பதை விட தனது மகன் கூட இருப்பது நல்லது என்றே விட்டுவிட்டார் .
கௌதமிடம் சியாமளா ரவீந்தர் பற்றி சொன்னதும் அவனுக்கு பிடிக்கவில்லை. யோசிக்கும் திறன் அவ்வயதுக்கும் இல்லை. மகனை பார்க்க வரும் போதெல்லாம் சிவாவையும் அழைத்து வருவார். கொஞ்ச நாளில் வேதவள்ளி தனது தம்பியை மன்னித்து ஏற்றுக் கொள்ள இவனுக்கோ எண்ணமே மனதில் உழன்றது. கௌதமிற்கு சிவாவிடமும் வெறுப்பு வளர்ந்தது. தான் தனது தந்தையோடு இல்லாமல் இவனையே விரும்புகின்றாரே என்பதே அதற்கு காரணம்.விடுமுறைக்கு அவனை வேதவள்ளி ரவீந்தரிடம் அனுப்புவதில்லை. அதனால் மாதம் ஒரு முறை அவரே வந்து பார்த்து விட்டு செல்வார்.
வளர வளர அவனுக்கு படிப்பிலும் புது மனிதரிலும் நட்பிலும் சாதனா என்பவளை மறந்தே போனான் . ஆனால் அது மறக்கவில்லை புதைந்து உள்ளது என்பதே அவளை பார்த்ததும் அது புரிந்தது.
-நினைவுகள் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Good
nice!!!
Nice epi
♥️♥️♥️♥️
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️