தீயாகிய தீபம் 6
விக்கித் தானே விமான நிலையம் சென்று கம்போடியாவிலிருந்து திரும்பும் ருத்ராவை வரவேற்றான். பெரியவர்கள் யாரும் செல்ல வில்லை. அவர்களுக்குள் நல்ல அன்யோன்யம் வர வேண்டி ஒதுங்கிவிட்டனர். ருத்ரா தங்கை பவித்ராவிற்கு தான் சற்று வருத்தம். ஆசையாக அக்காவை வரவேற்க எண்ணியவளுக்குத் தடை உத்தரவு.
ருத்ரா “ஹாய் விக்கி” எனக் கையசைத்து டிராலியை தள்ளியபடி முகம் கொள்ளா புன்னகையுடன் அருகில் வந்தாள்.
ஜீன்ஸ் மேலே இளமஞ்சள் நிற டாப்ஸ். விரிந்த கூந்தல் காதில் பெரிய வளையம் என அழகோவியமாய் வந்தவளைப் பிரமித்துப் பார்த்தான். உடல் எடை சற்றே கூடியது போலத் தோன்றியது. விக்கி தன்னை துருதுருவென காண்பதை உணர்ந்தவளுக்கு வெட்கமாக இருந்தாலும் சூழ்நிலை காரணமாக தன் கூந்தலைக் கோதியபடி உணர்வைச் சமன் செய்தாள்.
விக்கியும் அவளை ஆவலோடு வரவேற்றான் “ஹாய் எப்படி இருந்தது டிராவல்?” என எப்படித் தொடங்குவது எனத் தெரியாமல் கேட்டு வைத்தான்.
“யா குட்” என்றாள்
அவன் டிராலியாய் உரிமையோடு தன்வசம் ஆக்கிக் கொண்டான்.
தானே அவள் பெட்டிகளை காரில் ஏற்றினான்.
காரின் பின் இருக்கையில் இருவரும் ஏறி அமர கார் புறப்பட்டது. விக்கி தானும் கார் வாங்க வேண்டும் என அப்போது நினைத்துக் கொண்டான். அவன் சம்பளத்திற்கு எப்போதோ கார் வாங்கி இருக்கலாம். ஏனோ அந்த எண்ணமே இப்போதுதான் வந்தது.
“விக்கி திஸ் இஸ் பார் யூ” எனச் சிறு பரிசு பெட்டியை நீட்டினாள்.
அதை வாங்கியவன் பிரிக்க செராமிக் போன்ற வழுவழுப்பாக இருந்தது. தேன் நிறத்தில் அழகான இதய வடிவ ஆர்டின் அதன் கீழே இரண்டு அன்னப்பட்சிகள். அதற்கு முன்னே விக்கி ருத்ரா என்னும் அழகிய ஆங்கில எழுத்துகள். இரண்டு எழுத்துகளுக்கும் இடையில் சிவப்பு நிற ஆர்டின். சிறியதாகக் கையடக்கமாக இருந்தது.
“ஆசம்” என ரசித்துப் பார்த்தான். பார்க்கும் போதே தெரிந்தது அது அவள்ச் சொல்லிச் செய்யப்பட்டது என.
“இது அங்க கிடைக்கும் ஒருவருகையான கல் .. இட்ஸ் சோ ஸ்பெஷல்” என அதன் தொட்டில் தொடங்கி இன்று வரையிலான முழுக்கதையும் சொன்னாள். தலையாட்டிக் கேட்டுக் கொண்டான். அவனுக்குப் பாதிக்கு மேல் புரியவில்லை என அவளுக்குப் புரிந்தது.
இரண்டு பெயர்களின் மேலும் விரலால் மெல்லத் தொட்டவன் “லவ்லி”என்ற பொழுது அவளுள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
நடு நடுவே “யோவ் இங்க நான் ஒருத்தன் இருக்கேன்ல” என்னும் விதமாக டிரைவர் “இந்த லெப்டா? ரைட்டா?” என உயிரை வாங்கினான். பாவம் ஜீ.பி.எஸ். பார்த்து வண்டியோட்ட தெரியாத அப்பிராணி.
அதன் பின்னே அதிகம் பேசவில்லை.
ருத்ரா வீட்டை அடைந்ததும் “வாங்க மாப்பிள்ளை” என விக்கியை அனைவரும் உபசரிக்க
“ஹலோ இங்க நானும் ஒருத்தி இருக்கேன்” என ருத்ரா வேண்டுமென்றே கடுப்பாக இருப்பது சொன்னாள்.
அவளின் அப்பா அவளை அணைத்து “எங்க செல்ல குட்டிய விட்றுவோமா?” என்றதும்
பவித்ரா “அப்ப நான்??” எனப் பொய்க் கோபத்துடன் அருகில் வர
“நீயும் தான்” என மறுபக்கம் அவளை அணைத்து கொள்ள ருத்ராவின் அண்ணனின் குட்டி பையன் குடுகுடுவென தன் தாத்தாவை நோக்கி ஓடி இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டது.
அனைவரும் சிரித்துவிட ருத்ராவின் அப்பா குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார். விக்கி செல்போனில் இவை பல கிளிக்ஸ் ஆனது.
அடுத்த அரைமணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பினான். ருத்ரா வீட்டில் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் மெஹந்தி பங்கஷன் நடைப்பெற்து.
பரிமளா தன் வருங்கால சம்பந்தி கோதாவரியையும் அபர்ணாவையும் வீட்டிற்கே சென்று அழைத்தார்.
மெஹந்தி பங்கஷன் அன்று முதலில் அனைவருக்கும் விருந்து சாப்பாடு. பின்பு இருகுடும்ப பெண்கள் கையிலும் விதவிதமான டிசைனில் மருதாணி வைக்கப்பட்டது. அதற்கென்றே பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்ட பெண்கள் மருதாணி பல கண்கவர் டிசைன்களில் வைத்தார்கள்.
மணப்பெண்ணான ருத்ரா கையில் விக்கி ருத்ரா எனப் பெயர்கள் டிசைனின் நடுவில் எழுதப்பட்டது. சாதாரணமாகப் பார்த்தால் தெரியாது உற்றுக் கவனித்தால் மட்டுமே தெரியும்.
“ருத்ரா விக்கி மாமா கண்டுபிடிச்சே ஆகணும். நீ ஹெல்ப் செய்யக் கூடாது சரியா?” என பவித்ரா ஸ்டிரிக்ட் ஆபீசர் போலக் கூறினாள். சிரிப்பும் கொண்டாட்டமுமாய் விழா நடை பெற்றது.
“இப்படியெல்லாம் பங்கஷன் இருக்குனே தெரியலை சம்பந்தி .. அபர்ணா கல்யாணத்திலையும் செய்திருக்கலாம்” எனக் கோதாவரி ஏக்கத்தோடு அப்பாவித்தனமாகக் கூறினார்.
அதற்குப் பரிமளம் “கல்யாணத்துக்கு மட்டும்தான் மெஹந்தி பங்கஷன் வெக்கணும்னு சட்டமா என்ன? அபர்ணா அடுத்த புள்ள உண்டாகட்டும் … வளைகாப்புக்கு மெஹந்தி பங்கஷன் நடத்திடுவோம்” என்று பதிலளித்தபடி இருக்க “பரிமளா” என யாரோ அவரை அழைக்க அவசரமாக அகன்றார்.
“அடியே அபர்ணா சீக்கிரமா அடுத்த புள்ளைய டெலிவரி செய்டி” என்றார் கோதாவரி.
“போகும் போது ரங்கநாதன் தெருல டெலிவரி எடுக்கலாமா இல்ல அமேசான்ல வேணுமா?” காட்டமாய் பதில் வந்தது.
“இவ ஏன் பொங்கறா?” என மனதில் நினைத்த கோதாவரி சற்று முன் தாங்கள் பேசியதை ரீவைண்ட் செய்து பார்த்தார். “எதுவும் தப்பா இல்லையே” என மகளைப் பார்க்க … மகளோ முறைத்தாள்.
“நமக்கு எதுக்கு வம்பு” எனக் கோதாவரி “இந்தமா இங்க சரியா வை” எனக் கையை காட்டியபடி மெஹந்தி வைக்கும் பெண்ணை நோக்கி எஸ்கேப் ஆனார்.
இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ருத்ராவின் அண்ணி சித்ரா சிரித்தபடி அபர்ணா அருகில் அமர்ந்தாள்.
“இருக்கிற ஒன்றச் சமாளிக்க முடியலை ..இதுல இன்னொரு டெலிவரியாம். அதுவும் இந்த மருதாணிக்காக … என்னக் கொடுமைடா சாமி” அபர்ணா குறைபட்டுக் கொண்டாள்.
விழுந்து விழுந்து சிரித்த சித்ரா“கரெக்ட் பா” என ஆமோதித்தாள். சமவயதான அவர்களுள் அழகான நட்பு உண்டானது.
கோதாவரியும் அபர்ணாவும் அரட்டையை முடித்து மாலை கிளம்புகையில் ருத்ரா தான் வாங்கி வந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்தாள். விசு மற்றும் ரவி இங்கு வராததால் அவர்களுக்கான பரிசையும் கோதாவரி மற்றும் அபர்ணாவிடம் முறையேக் கொடுத்தாள்.
“எதுக்குமா இதெல்லாம்?” என இருவரும் கேட்க .. “இது என் முதல் கிப்ட் ” என ருத்ரா சொல்ல மறுக்க முடியுமா? அவர்களால்
“விக்கிக்கு கிப்ட் இல்லையா?” அபர்ணா வம்படியாக கேட்க
“பிக்அப் பண்ண வந்த அன்றைக்கு கொடுத்துட்டேன்” என வெட்கம் கலந்த முறுவலுடன் கூறினாள்.
“ஹே சொல்லவே இல்லை” என ஆளாளுக்கு பரிகாசம் செய்யத் தொடங்கினர். பரிகாச அலை ஓயவே இரண்டு நிமிடங்கள் ஆனது.
கோதாவரியும் மகளும் வீட்டிற்கு வர இரவாகிவிட்டது. விசுவிடம் உறங்கும் நொடிவரை தொன தொனவென கோதாவரி அங்கு நடந்தவற்றைப் பேசிக் கொண்டே இருந்தார்.
மறுநாள் ருத்ரா வீட்டிற்குத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட போட்டோ கிராபரும் வீடியோ எடுப்பவரும் வந்தனர். ஒவ்வொரு திருமணத்திற்கும் இரண்டு பிரேம் போடப்பட்ட படங்களைக் கல்யாண பரிசாக அவர்கள் வழங்குவது வழக்கமாம்.
“மேடம் நீங்கப் போட்டோ பிரேம் டிசைன் சொல்லுங்க அத்தோட எந்த போட்டோனும் .. நாங்க அதைத் தயார் செய்வோம்” என்றான் ஒருவன்
மற்றொருவன் “இதுல டெம்ப்ளேட்ஸ் டிசைன் இருக்கு. இதை கஸ்டமைஸ் கூடச் செய்யலாம்” என அவளுக்கு வாட்ஸ்அப்பில் லிங்கை அனுப்பினான்.
அடுத்து “இது நாங்க ஆல்ரெடி தயார் செய்தது” என மற்றொரு லிங்கையும் அனுப்பினான்.
இரண்டு லிங்கிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் இருந்தன. அதில் திருமணம் மட்டும் அல்லாமல் பிறந்த நாள் பார்ட்டி, அறுபதாம் கல்யாணம், ஆபீஸ் பார்ட்டி கோயில், கும்பாபிஷேகம் எனப் பல நிகழ்வுகளின் தொகுப்பும் காணப்பட்டது.
இத்தனையும் பார்க்க நேரமில்லாததால் நிதானமாகப் பார்த்துச் சொல்வதாக சொன்னாள்.
விக்னேஸ்வரன் வெட்ஸ் ருத்ரா என்னும் தங்க எழுத்துகளைக் கொண்ட அலங்கார பதாகை திருமண மண்டப வாயிலில் காண்பவரைக் கவர்ந்திழுத்தது. மண்டபம் முழுவதும் வண்ண வண்ண சரவிளக்குகளால் ஜொளித்தன.
மாலை ஆறரை மணிக்கு ரிசப்ஷன். அதற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணமிருந்தது. ஒரு பக்கம் மணமகளான ருத்ராவை அழகுக்கலை நிலையத்திலிருந்து வந்திருந்த பெண் தான் கற்ற மொத்த வித்தையையும் ருத்ரா முகத்தில் பிரயோகித்து கொண்டிருந்தாள். ருத்ரா சாதாரணமாகவே பார்க்க அழகாக இருப்பாள். ஆனாலும் பிரத்தியேகமாக அலங்கரிக்க இன்னமும் ரம்மியமாய் காட்சியளித்தாள்.
இப்பொழுதெல்லாம் மணமகனுக்கு சிறப்பு அலங்காரம் உண்டல்லவா அட சம உரிமைங்க .. விக்கி ருத்ராவை காட்டிலும் இன்னும் பத்து நிமிடம் அதிகம் எடுத்துக் கொண்டான். மணமக்களின் நெருங்கிய வீட்டினரும் பாராபடசமின்றி தங்களை அலங்கரித்து தயாராகிவிட்டனர்.
ஒளிரும் …
Spr going sis….
Thank you so much Priya sis.
Interesting👍
Thank you so much Vino sis
Arumayana episode
Thank you so much Abirami sis
Nice
Thank you so much Kothai sis
Good going
Thank you so much Eswari sis