தீரனின் தென்றல் – 52
Thank you for reading this post, don't forget to subscribe!தனியே இருக்கும் போது கேட்டால் கண்டிப்பாக மறுப்பாள் என்று தெரிந்த தீரன் அன்று காலை அலுவலகம் கிளம்பி சாப்பிட அமர்ந்தவன் “அத்தை… ஈவ்னிங் பாப்பா ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் கொஞ்சம் ரெடி பண்ணிடுங்க மாடில புது ட்ரெஸ் வைச்சிருக்கேன்…” என்று பொன்னியிடம் கூறியவன் தென்றல் பக்கம் திரும்பி
“தென்றல் ஈவ்னிங் நீயும் சீக்கிரம் எல்லா வொர்க்கும் முடிச்சிடு ஒன்னாவே ஆஃபிஸ் ல இருந்து வந்திடலாம் பார்ட்டிக்கு போகனும் ல…” என்று ஆதீரன் சொல்ல ஏறெடுத்து பார்த்தவள் எதுவும் சொல்லாமல் இருக்க
“ஏன்டி… அதான் மாப்ளை சொல்றாருல… சரி னு வாயை திறந்து சொன்னாதான் என்னவாம்?” பொன்னி கடிந்து கொள்ள
“அதான் அன்னைக்கே சரி னு சொல்லிட்டேன் ல மா… அப்பறம் என்ன? யாருக்காக இல்லாட்டியும் தர்மலிங்கம் சார் பத்தி நானும் கேள்விப்பட்டு இருக்கேன்… அவருக்காக அவர் கூப்பிட்டதுக்காக நான் கிளம்பி வரேன்…” என்று ஆதீரன் எதிர்பார்த்த பதிலை கூறிவிட நிம்மதி அடைந்தான் ஆதீரன்.
அதே போல மாலை சீக்கிரம் வேலையை முடித்து விட்டு தென்றலோடு வீட்டிற்கு வந்தான் ஆதீரன். மாடியில் அறைக்கு சென்று தன்னை தூய்மை படுத்திக் கொண்டு வந்த தென்றல் கையில் இரண்டு புடவைகளை எடுத்து வந்தாள்.
இரண்டுமே அவளுக்கு பொறுத்தமான நிறத்தில் விஷேசங்களுக்கு அணிந்து செல்வது போல சில்க்சேரி தான்…
“அம்மா... இந்த ரெண்டு புடவைல எதை கட்டிக்க… எனக்கு தோணவே இல்ல நீயே ஒன்னு சொல்லு…” என்று பொன்னியிடம் கேட்க அவசரமாக அறைக்குச் சென்று ஒரு பார்சல் எடுத்து வந்து
“தென்றல்… முதல் முறை வெளியே போறோம். சோ உனக்கும் பாப்பாக்கும் ட்ரெஸ் எடுத்தேன்.. இந்த மாதிரி பார்ட்டிக்கு எல்லாம் இப்படி ட்ரெஸ் போட்டா தான் நல்லா இருக்கும்…” என்று ஆதீரன் சொல்ல
“பார்ட்டிக்கு போடுற மாதிரி ட்ரெஸா? எனக்கு புடவை கட்டி தான் பழக்கம்… வேணும்னா சுடி போட்டுப்பேன்… அதை விட்டு கண்ட துணி எல்லாம் என்னால போட முடியாது..” முகத்தை வெட்டி தென்றல் கூற
“இதுவும் புடவை தான் தென்றல் பார்ட்டி பங்ஷன் அந்த மாதிரி கட்டிக்கிற புடவை… உனக்கு மேட்ச் ஆகும்..” இந்தா என்று ஆதீரன் நீட்ட
“தென்றல் வாங்கிக்கோ நேரம் ஆகுது பாரு… பொன்னி நீ போய் பாப்பாவை ட்ரெஸ் மாத்திவிட்டு கூட்டிட்டு வா… ஆதீ தம்பி நீங்களும் போய் தயாராகுங்க.. நேரமாகுதுல” படபடவென்று கமலாம்மா வேலையை சொல்ல யாரும் எதுவும் பேசாமல் அவரவர் வேலையை கவனிக்க துவங்கினர். தென்றல் அறைக்குள் நுழைய பின்னால் வந்த ஆதீரன்
“தென்றல்… உள்ளே புடவைக்கு மேட்ச்சா உனக்கு பிடிச்ச கண்ணாடி வளையல் வைச்சிருக்கேன். ப்ளீஸ் எடுத்து போட்டுக்கோ…” என்று கெஞ்சலாக கூறிவிட்டு அடுத்த அறையில் தான் தயாராக நுழைந்து விட்டான் ஆதீரன்.
அரைமணி நேரத்தில் தயாராகி வந்த தென்றலை கமலம் ஆச்சரியமாகவும் பொன்னி நீண்ட நாட்கள் கழித்து நிறைவாகவும் பார்க்க பெண்ணவள் தோற்றம் கண்டு மெய்மறந்து போனான் ஆதீரன்.
மாநிற தேகம் மஞ்சள் பூசி குளித்திருக்க அவளுக்கு பிடித்த கத்தரிப்பூ வர்ண புடவை அழகாக பொறுந்தி இருந்தது தென்றலவள் தேகத்தில்… முகத்தில் துளியும் ஒப்பனை இல்லை… இயற்கை பொன்னகையாக மின்னும் புன்னகை பெற்ற தென்றலுக்கு ஒப்பனையும் தேவை இல்லை… லேசான பவுடர் பூச்சு… அதுவும் மிகவும் மெலிதாக… தாழம்பூ மணம் கமழும் குங்குமத்தை திருமணம் ஆனதன் அறிகுறியாக நெற்றி வகுட்டில் கீற்றாக வைத்திருக்க அதற்கு கீழே சிறியதும் இன்றி பெரியதும் இன்றி ஒரு கல்பொட்டு…
கழுத்தில் தீரன் அணிவித்த தாலியோடு இந்த புடவைக்கு பொறுந்துவது போல மெல்லிய நெக்லஸ் தீரன் இவளுக்காக வாங்கி வைத்திருந்த நகை என்று கமலாம்மா கொடுத்திருந்தார்.
ஆதீரன் புடவையோடு சேர்த்து வாங்கி வைத்திருந்த புடவை நிறத்தில் கல் பதித்த கண்ணாடி வளையலை மறுக்காமல் அணிந்திருந்தாள் தென்றல்… காலில் மெல்லிய கொலுசு… அழகான எளிய சிகையலங்காரம்.. இவ்வளவே தென்றலின் அலங்காரம்.. சிலிர்த்துப் போனான் ஆதீரன்.
இதுவே இருவர் இடையே மனத்தாங்கல் இல்லாமல் இருந்திருந்தால் இங்கு நிகழ்ந்திருப்பதே வேறு உள்ளூர உணர்ந்திருந்தான் ஆதீரன்.
“தெட்டு… ச்சூப்பரா இருக்கா…” என்ற அபூர்வாவின் குரல் தான் அனைவரையும் தெளிய வைத்தது. கமலம் கையால் திருஷ்டி வழித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் இருந்து மல்லிப்பூ சரத்தை எடுத்து தலையில் சூடிவிட்டு “இது ஒன்னு தான் குறையா இருந்தது… மகாலட்சுமி மாதிரி இருக்க ம்மா…” என்று தென்றல் தாடையை பிடித்து கொஞ்ச
மனம் நிறைந்த புன்னகையோடு “அழகா இருக்க தென்றல்…” பொன்னி மனநிறைவாக கூற
“தெட்டு நீ ஆஞ்சல் ( ஏஞ்சல்) மாதியே இருக்க… தெட்டு நான் எப்பி இருக்கேன்..” தாயை புகழ்ந்து விட்டு தன் அழகை காட்ட கவுனை இரு கைகளாலும் பிடித்து அபூர்வா தன்னை தானே சுற்றி காட்ட
“லிட்டில் ப்ரின்ஸஸ் மாதிரி க்யூட்டா அழகா இருக்கடா தங்கம்…” என்று தென்றல் கொஞ்ச
“தெட்டு பார்த்தியா நீயும் நானும் ஒரே கலர்… அப்போ நீ எனக்கு சாக்கி (சாக்லேட்) வாங்கி தரனும்…” என்று குழந்தை சொன்ன பிறகு தான் தன் புடவை நிறத்தில் குழந்தை உடை அணிந்து இருப்பது தெரிய
“ஏய்.. சாக்கி சாப்பிட்டா உனக்கு உடம்பு சரியில்லாம போகும்.. இருந்தாலும் ஓகே கொஞ்சமா சாப்பிட பர்மிஷன் தரேன்…” என்று பெரிய மனது வைத்து ஒப்புக் கொள்ள
“போ தெட்டு.. நீ பேட் அப்பா தான் குட்… நான் கேட்ட ஒடனே சாக்கி வாங்கி தரேன் சொல்லுச்சு… பாரு நீ நான் அப்பா மூணு பேரும் ஒரே கலர்.. அப்பா நீ தெட்டுக்கும் சாக்கி வாங்கி தரனு..” என்று நேக்காக தந்தையின் தில்லுமுல்லை தாயிடம் போட்டுக் கொடுத்தாள் அபூர்வா.
“அது நான் ப்ளான் பண்ணி எதுவும் செய்யல தென்றல்… உங்க ரெண்டு பேருக்கும் உங்களுக்கு மேட்ச் ஆகுற கலர்ல ட்ரெஸ் எடுத்தேன். அது ஒரே கலரா அமையவும் அப்போ நான் மட்டும் வேற மாதிரி இருந்தா நல்லா இருக்காதே… அதான்…” என்று தன் செயலுக்கு காரணம் சொல்ல
“ம்கூம்.. நீ ப்ளான் பண்றதையே ஆமா னு ஒத்துக்க மாட்ட.. இதையா ஒத்துக்க போற?” அலட்சியமாக கூறியபடி பொன்னி கமலம்மாவிடம் கூறிவிட்டு அபூர்வாவை அழைத்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள் தென்றல்.
பார்ட்டி நடைபெறும் இடத்தில் ஆதீரன் வண்டியை நிறுத்தி விட்டு தன் மனைவி மகளோடு மிடுக்காக உள்ளே நடந்து வர ஒட்டுமொத்த பார்வையையும் இவர்கள் பக்கம் தான் திரும்பியது. தர்மலிங்கம் ஏதோ சீஃப் கெஸ்டை வரவேற்பது போல வாசலுக்கே வந்து இவர்களை வரவேற்றார்.
அங்கு வந்திருந்தது அனைவரும் ஆதீரனுக்கும் தெரிந்த தொழில் பிரபலங்கள் தான்… ஆதீரனை இதற்கு முன்பு நிறைய முறை பார்த்திருந்தவர்களுக்கு அவனின் ஆளுமை திறன் தெரியும்… ஆதீரனுக்கு சிரிக்க தெரியுமா என்ற கேள்விக்கு இன்று தான் விடை கண்டு கொண்டனர் பலர்.
ஆதீரனையும் தென்றலையும் பலர் வியப்பாக பார்க்கு ஒருத்தி மட்டும் வெறுப்பாக பார்த்தாள்… அவளின் பார்வையை உணர்ந்த தென்றல் பார்வைக்கு சக்தி உண்டு என்று வரத்தை ஆண்டவன் தந்திருந்தால் அந்த நேரத்தில் அதே இடத்தில் பார்வையாலேயே பொசுக்கி பஸ்பம் ஆக்கி இருப்பாள் ஷ்ரதாவை…
- தொடரும்….
- நன்றியுடன் DP ✍️