தீரனின் தென்றல் – 55
Thank you for reading this post, don't forget to subscribe!“அம்மா சீக்கம் நிறையா நிறையா பூரி எடுத்து வா… எனக்கு பசிக்கு…” டைனிங் டேபிள் மீது ஏறி அமர்ந்து சட்டமாக தாயை வேலை ஏவிக்கொண்டு இருந்த மகளை கண்கொட்டாது ரசித்துக் கொண்டு இருந்தான் ஆதீரன்.
இத்தனை நாட்கள் ஏன் வருகிறது என்று சலிப்பாக ஓட்டும் ஞாயிற்றுக்கிழமை இப்போது இன்னும் கொஞ்சம் நீளாதா என்று கேட்டுக் கொண்டு இருக்கிறான். மனைவி மகளின் செல்லச் சண்டைகள் நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்துடன் செலவழிக்கும் பொன்னான நேரம் என்று அழகாக கழிகிறது ஆதீரனின் ஞாயிற்றுக்கிழமை.
இன்றும் கூட குமார் அவனின் மனைவி மகளோடு வந்திருக்க மதன் தன் மனைவியோடு வந்திருந்தான். கமலத்திற்கும் பொன்னிக்கும் ஓய்வு கொடுத்து விட்டாள் தென்றல். இது எப்போதும் நடப்பது தான்… வாரத்தின் ஆறு நாட்கள் பொன்னி சமையலையும் அபூர்வாவையும் கவனித்துக் கொண்டால் ஞாயிறு தென்றல் முழுதாக பொன்னிக்கு ஓய்வு தந்துவிட்டு அபூர்வாவிற்கு பிடித்ததை சமைத்து கொடுத்து அவளோடு அருகில் இருந்து நாளை கழிப்பாள்.
அந்த பழக்கம் தான் இப்போது பொன்னியோடு கமலாம்மாவும் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்துக் கொள்கிறார்.
சமைக்க ரூபிணி உதவுகிறேன் என்று கேரட்டை தூக்கி திண்பது இடியாப்பத்திற்கு பால் எடுக்க துருவி வைத்த தேங்காய் துருவலை வாயில் அள்ளி போட்டுக் கொள்வது என்று இருந்த ரூபிணியை அவளை முறைத்தே வெளியில் அனுப்பி விட்டாள் தென்றல்.
சித்ரா இடியாப்பத்திற்கு தேங்காய் பால் தயார் செய்ய அபூர்வாவிற்கும் தீரனுக்கும் பிடித்த பூரிக்கிழங்கு தென்றல் அவள் கையால் தயார் செய்ய சித்ரா ஒவ்வொன்றாக எடுத்து வந்து பரிமாறினாள்.
“ஆமா… மதியம் என்ன ஸ்பெஷல்?” குமார் அதிமுக்கிய கேள்வியை கேட்க
“தட்டுல இருக்கிற பூரியை முதல்ல முழுங்குங்க வேலு…” ரூபி சொல்ல
“ஏய்.. என்ன ஏதுன்னு சொன்னா தானே நான் கடைக்கு போய் வாங்கிட்டு வரமுடியும்… அப்பறம் நேரங்கழிச்சு சொல்லிட்டு உடனே வா சீக்கிரம் வா னு ஆயிரம் ஃபோன் பண்ணுவீங்க எல்லாரும்…” என்று குமார் அலுத்துக் கொள்ள
“எப்போவும் போல தான் வேலு சிக்கன்….” என்று ரூபா தொடங்க
“அத்தை இன்னிக்கு சீச்சீ வேணாம்… மாமா மீன் வாங்கிட்டு வா தெட்டு ச்சூப்பரா மீன் கொலம்பு வைச்சு தா தெட்டு…” இங்கிருந்தே மாமனுக்கும் தாய்க்கும் அபூர்வா உத்தரவு போட
“அத்தை எனக்கு ஃபிஷ் ஃப்ரை வேணும்..” சக்தியும் சேர்ந்து கொள்ள உள்ளிருந்து வேகமாக வெளியே வந்தாள் தென்றல்.
“எது? மீன் குழம்பு மீன் வறுவலா? உங்க ரெண்டு பேருக்கும் முதல்ல முள் எடுத்துட்டு சாப்பிட தெரியுமா? அண்ணே மீனெல்லாம் வேண்டாம்… நீ எப்பவும் போல மட்டன் சிக்கன் மட்டும் எடுத்திட்டு வா…” தென்றல் படபடவென்று சொல்ல
“ஏய் தென்றல் குழந்தைங்களுக்கு எப்படி மா அதுக்குள்ள முள் எடுத்து சாப்பிட தெரியும்? இத்தனை பெரியவங்க இருக்கோம் நாம தான் ஊட்டிவிடனும் நாம ஊட்ட மாட்டோமா?” கமலம் சொல்ல
“ஐயோ அம்மா.. ஏற்கனவே அபூர்வாவுக்கு மீன் சமைச்சு ஊட்டும் போது தெரியாம முள் தொண்டையில மாட்டி அன்னைக்கு ரொம்ப சிரமபட்டோம்… வேணாம் குழந்தைங்களுக்கு கொஞ்சம் விபரம் தெரியிற வரைக்கும் அதெல்லாம் வேண்டாம்” என்று தென்றல் மறுக்க
“ஏய்… அது ஏதோ நான் கொஞ்சம் கவனம் இல்லாம இருந்ததால தானே தென்றல்… இனி கவனமா பாத்துக்கலாம்.” என்று பொன்னி கூற அவரை முறைத்தாள் தென்றல்.
‘மீன் வேண்டாம்’ என்று சொல்ல அபூர்வா முகத்தை சுருக்கினாள். ஏனென்றால் நேற்று இரவு தான் தந்தையிடம் உறக்கம் வராது கதைக்கு பதில் ஏதேதோ கேள்வி கேட்டு பதிலை வாங்கிக் கொண்டு இருந்தவள்
“என் பூர்வி குட்டி வந்த அப்பறம் தான் அப்பாவோட வாழ்க்கை நிறைவா மாறியிருக்கு…” என்று ஆதீரன் கூறியது அந்த குழந்தைக்கு என்ன புரிந்ததோ…
“அப்பா நீ எதையுமே மிஸ் பண்ணலியா?” என்று அபூர்வா கேட்க
“ம்கூம்…. என் வாழ்க்கையில நான் இழந்த எல்லாத்தையும் என் பூர்விமா திரும்ப கொடுத்துட்டீங்க…” என்று மகளை கொஞ்சியவன் “என்ன ஒன்னு என் தென்னு எனக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்து தர என் தென்னுவை தான் நான் ரொம்ப மிஸ் பண்றேன்…” என்று வாய்விட்டு உளறி இருந்தான்.
அதனை கேட்ட அபூர்வா இன்று முழுக்க தென்றல் அப்பாவுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்று தான் இப்படி திட்டமிட்டாள். ஆனால் நடக்காதோ என்று மழலை மனம் வாட
“மச்சான் இரு இன்னைக்கு நானும் வரேன் போய் நல்ல முள் இல்லாத மீனா வாங்கிட்டு வரலாம்.. அத்தை குழந்தைக்கு அடிக்கடி மீன் கொடுக்கனும் னு டாக்டர் சொல்லிருக்காரு… நானே பார்த்து பாப்பாக்கு ஊட்டிக்கிறேன்…” என்று ஆதீரன் சொல்ல தென்றல் எதுவும் பேசாமல் சென்று விட்டாள்.
ஆதீரன் சொன்னது போல வாங்கி வந்து கொடுக்க அனைவரும் வியக்க தென்றல் யாரையும் சமையலறையில் அனுமதிக்காமல் அவளே அனைத்தும் செய்தாள்.
தென்றல் வீட்டிற்கு ஒரே குழந்தை என்று பொன்னி வேலை சொன்னால் கூட செய்யவிடாது செல்லமாகவே வளர்த்தார் ரங்கநாதன். ஆனால் தீரன் மேல் கொண்ட காதலால் பூரணியிடம் தீரனுக்கு பிடித்த அசைவ உணவுகளை நன்கு சமைக்க கற்றுக் கொண்டாள் தென்றல்.
கல்லூரி காலங்களில் ஆதீரனுக்கு பிடித்த அசைவ உணவுகளை அடிக்கடி பூரணி வீட்டிற்கு சென்று அவளே சமைத்து பரிமாற உணவின் ருசியோடு தன் தென்றலின் காதலையும் சேர்ந்தே ருசிப்பான் ஆதீரன்.
அன்றைக்கு இருந்த ருசி இப்போது இருக்குமா என்பது ஆதீரனுக்கு தெரியாது.. ஆனால் அப்போது இருந்த காதல் கொஞ்சமேனும் அவள் நெஞ்சில் வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தான் ஆதீரன்.
சற்று நேரத்தில் அபூர்வா கேட்டபடி மீன் குழம்பு சக்தி கேட்ட மீன் வறுவல் சாதம் ரசம் கூடுதலாக அப்பளம் என்று அனைத்தையும் தயார் செய்து டைனிங் டேபிள் மீது அடுக்க
அனைவரும் சுவைக்க தயாராகி டைனிங் டேபிள் முன்பு கூட “எல்லாரும் உட்காருங்க நான் சர்வ் பண்றேன்…” என்று தென்றல் கூற
“வேண்டாம் தென்றல் மா… சாப்பாட்டு வேலை எல்லாத்தையும் நீயே பார்த்த இப்போ நீ உட்காரு நான் பரிமாறுறேன்… பொன்னி அக்கா நீங்களும் உட்காருங்க” என்று சொல்ல
“இல்ல கமலா நாம அப்பறமா சாப்பிடலாம் குமாரு மதனு… சித்ரா ரூபி எல்லாரும் உட்காருங்க… ரூபி சக்திக்கு மீனை பார்த்து ஊட்டிவிடு” என்று பொன்னி கூற
“ம்க்கும் அவளுக்கே ஒழுங்கா முள் எடுத்து சாப்பிட தெரியாது… அவ குழந்தைக்கு ஊட்றாளா?” குமார் ரூபியை கலாய்க்க
“பொன்னி பாட்டி நீங்க ஊட்டி விடுங்க” என்று சக்தி கேட்க பொன்னி சக்திக்கு ஊட்ட மற்றவர்களுக்கு கமலம் பரிமாறினார்.
அபூர்வாவை டைனிங் டேபிள் மீது உட்கார வைத்து ஆதீரன் ஊட்டிவிட அவன் அருகில் அமர்ந்து அவன் சாப்பிட்டு முகத்தில் ஏற்படும் உணர்வுகளை காண அவனையே பார்த்து அமர்ந்திருந்தாள் தென்றல்.
சித்ரா மதன் குமார் ரூபிணி சாப்பிட “ஆதீ தம்பி குழந்தைக்கே ஊட்டிட்டு இருக்காம நீயும் சாப்பிடுப்பா…” என்று கமலம் சொல்ல ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்தவனுக்கு ஐந்து வருடங்கள் முன்பு அம்மாவின் கையில் சாப்பிட்ட அம்மாவின் கை ருசி உணர்ந்தான் ஆதீரன்.
தனக்கு தாயின் ருசியை தருவித்த மனையாளை திரும்பி பார்த்தவன் கண்கள் கலங்கி இருந்தது.
“என்ன பாஸ் கண் கலங்கி இருக்கு காரமா இருக்கா என்ன?” மதன் கேட்க
“இல்லையே குழந்தைங்களுக்காக தென்றல் எப்பவும் காரம் கம்மியா தான் சமைப்பா..” என்று ரூபி சொல்ல குமார் எதிரில் இருந்த நண்பன் கையை ஆதரவாக பற்றிக் கொண்டான்.
“மச்சான்.. ரங்கநாதன் அப்பா அடிக்கடி சொல்லுவாரு ‘என் அம்மாவோட கைப்பக்குவம் அப்படியே என் தங்கச்சிக்கு இருக்கு… என் தங்கச்சி கைப்பக்குவம் என் பொண்ணுக்கு வந்திருக்கு’ னு சொல்லுவாரு.. உனக்கு பிடிக்கும் னு தென்றல் கமலாம்மாகிட்ட கேட்டு மண் சட்டில குழம்பு வச்சுருக்கா… எதையும் நினைச்சு வருந்தாம சாப்பிடு மச்சான்…” என்று குமார் சொல்ல
“ஆமா ஆதீ தம்பி உங்க அம்மா உங்க பொண்ணு உருவத்துல கூடவே இருக்காங்க னு சொல்லுவீங்கல்ல… அவங்க ஆசீர்வாதம் எப்போவும் உங்க கூடவே இருக்கும்…” என்று கமலம் சொல்ல அவன் ஆறுதல் தேடி நின்றதோ தென்றலிடம் இருந்து…
வார்த்தையால் எதுவும் ஆறுதல் உரைக்காத தென்றல் தண்ணீர் டம்ளரை ஆதீரன் பக்கம் நகர்த்தி வைத்தாள்.
ஒரு பக்கம் தென்றல் ஆதீரன் இடையே நெருக்கம் கூடிக்கொண்டே செல்ல மறுபக்கம் இவர்களை பிரிப்பது எப்படி என்ற தீவிர யோசனையில் இருந்தாள் ஷ்ரதா.
ஆதீரன் தன்னை ஏற்றுக் கொள்கிறானோ இல்லையோ… அனைவர் முன்பும் தன்னை அடித்து பார்ட்டியில் தன்னை அவமதித்த தென்றல் வாழ்க்கை முழுவதும் தன்னை பகைத்துக் கொண்டதை நினைத்து கதற வேண்டும் என்பதே இப்போதைக்கு ஷ்ரதாவின் நோக்கம்.
தென்றலின் ஆணவ பேச்சு தொலைய வேண்டும்… ஆதீரனின் கர்வம் அழிய வேண்டும்… என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு விடையாக கிடைத்தது அபூர்வாவின் உடல்நிலை பற்றிய தகவல்….
வீசீங் கோளாறு உள்ள குழந்தைக்கு உணவிலிருந்து வாழ்க்கை முறை வரை தென்றலும் ஆதீரனும் பார்த்து பார்த்து கவனம் செலுத்தி வருகின்றனர். அவளின் உடல்நலத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் கண்டிப்பாக இவர்கள் வாழ்வின் மகிழ்வு பறி போகும்… அதற்கான வேலையை உடனே தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து அபூர்வா படிக்கும் பள்ளிக்கு செல்ல ஆயத்தமானாள் ஷ்ரதா.
- தொடரும்…
- நன்றியுடன் DP ✍️