Skip to content
Home » தீரா காதலே – 5

தீரா காதலே – 5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சாரதி நகர்

குட்டி குட்டியா வீடுகளை நெருக்கமாக கொண்டு பார்ப்பதற்கு ஒரு மினி பெரிய வீடு போன்ற தோற்றத்தை கொண்ட அந்த ஏரியாவின் கடைசி வீட்டின் முன் தங்கள் ஈருருளியை நிறுத்தி விட்டு அவ்வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார்கள் பிரியதர்ஷனும் நிகிலும். காவல் உடையில் அல்லாது சாதாரண உடையில் வந்திருந்தார்கள். கதவை திறந்த பெரியவர் முகம் பொலிவிழந்து இருந்தது.

“யார் நீங்க “

“மோகன் ராஜ் வீடு..?”

“இதான் நீங்க”

“உள்ள வந்து பேசலாமா “

சற்றே யோசித்தவர் “சரி வாங்க” என்பதாக வரவேற்றார்.

வரவேற்பறை என்று சொல்லி விட முடியாது அங்கு தான் வீட்டு உபயோக பொருட்கள் தங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தன. அருகே சின்ன தடுப்புடன் அடுப்பங்கறை. அதையொட்டி படுக்கையறை. குளியலறை வீட்டுக்கு வெளியே இருந்தது.

சிறு பெண் ஒருத்தி இரண்டு நாற்காலிகளை எடுத்து வந்து வைத்தாள். அதில் தங்களை திணித்து கொண்டு சுற்றிலும் பார்வையை சுழற்ற அங்கு மோகன்ராஜ் புகைப்படச்சட்டத்தில் சிரித்தபடி இருப்பதை கண்டான் தர்ஷன். அவன் பார்வையை உணர்ந்தவர்

” மோகனுக்கு தோஸ்த்துங்களா தம்பி ?”என்று வினவினார்.

” ம்ம்ம் இல்லை நாங்க சின்ன ஒரு என்கொயரிக்காக வந்திருக்கோம் மோகன்ராஜ் பத்தி”

முகம் கசங்கியவர் “நீங்க?”

தங்களது அடையாள அட்டையை காட்டியபடி “சொல்லுங்க” என்றான் பிரிய தர்ஷன்.

“சொல்றதுக்கு என்ன தம்.. சா.. சார் இருக்கு. அல்ப்பாயுசுல போய் சேந்துட்டான். சாவுர வயசா எம்புள்ளைக்கு” என்று குலுங்கினார்.

அடுப்பங்கறையிலிருந்து பெண்மணி ஒருவர் தம்ளரில் தண்ணீரை கொண்டு வந்து அவரிடம் தந்து குடிக்க வைத்தார். மருந்துக்கும் இவர்கள் பக்கம் திரும்பவில்லை.

“நல்லா படிப்பான் சார் என்ஜினீயரு தான் ஆவனும்னு ஆசபட்டு பயங்கரமா படிச்சான் மத்த புள்ளைங்க கூட சேக்காளி சேந்து எங்கேயும் போவமாட்டான். என்ன காரணம்னே தெரில தொங்கிட்டான்”என்று மீண்டும் அழுதார்.

சில விநாடிகள் வரை அவரையே உற்று பார்த்து கொண்டு பின் கேட்டான்.

“நீங்க சொல்லுறது எதுவுமே நம்புற மாதிரி இல்லையே. உங்க பையன் ஏன் எந்த காரணமும் இல்லாமல் தற்கொலை பண்ணிக்கனும்?”

“தெரிலயே சார்”

“இதையே சொல்லி என்னையும் ஏமாத்தலாம்னு பாக்காதீங்க.உங்க பையன் தற்கொலை பண்ணிக்க எந்த காரணமும் இல்லைனு சொல்றீங்க .அப்படி காரணம் இல்லாத போது நாங்க இந்த கேஸை வேறொரு கோணத்தில் இருந்து தான் பாக்கனும். அதன் படிதான் இன்வெஸ்டிகேஷனும் பண்ண வேண்டியிருக்கும்”

” என்ன சொல்ல வரீங்க சார். வேறு ஒரு கோணம்னா… எப்படி சார்?”

“உங்க பையன் இறப்பு தற்கொலை கிடையாது தற்கொலைக்கு யாரோ தூண்டி இருக்கீங்க… படிக்க சொல்லியோ வேலைக்கு போக சொல்லியோ நீங்க வற்புறுத்தி இருக்கலாம். அது மன உளைச்சலை மோகன்ராஜ்க்கு கொடுத்துருக்கலாம். அதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரமா பார்த்து தூக்கில் தொங்கி இருக்கலாம். உங்களை பொறுத்தவரை தான் அது தற்கொலை..”

“போதும் நிறுத்துங்க சார். ஏன் இப்படி அபாண்டமா பழி போடூறீங்க?”

“இதுதான் உண்மை”

“இல்லை சார். அதுக்கு வாய்ப்பே இல்லை”

“வாய்ப்பே இல்லைனு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க?”

அவரின் விழிகளில் நீர் திரண்டு அழுகையாய் மாறி தொண்டையை அடைத்துக் கொள்ள உடைந்த குரலில் பேசினார்.

“எங்களுக்கு இருக்கது ஒரு பையனும் பொண்ணும் தான் சார். இவன் தான் மூத்தவன். நல்ல படிச்சி நல்ல வேலைக்கு போய் சம்பாதிச்சி தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுக்கனும்னு அடிக்கடி சொல்வான். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. யார் வம்புதும்புக்கும் போக மாட்டான். நாங்க அவனை எதுக்காகவும் கடுமையா பேசுனது கூட கிடையாது”

” ஓ … மோகனுக்கு ப்ரெண்ட்ஸ்..?”

“பெருசா அவனுக்கு தோஸ்த்தனுங்க யாரும் கிடையாது சார். இவன் வயசுல பசங்க ஜாலியா இருக்க ஆசபடுவாங்க ஊர் சுத்துவானுங்க ஆனால் எம்புள்ள படிக்கனும்னு மட்டும் தான் குறிக்கோளோட இருந்தான்”

“பக்கத்து வீட்டில் ஏதும் பிரச்னை இப்படி ஏதாவது”

“இல்லை சார் மோகனு பிரச்சினை நடக்கிறத பாத்தாலே தூர விலகி வந்துடுவான்”

“யாரையும் லவ் அப்படி ஏதாவது”

“நிச்சயமாக இருக்காது சார்”

“உங்களுக்கு தெரியமா கூட லவ் பண்ணி இருக்கலாமே”

“மோகனு எங்ககிட்ட எதையும் மறைக்க மாட்டான் நாங்களும் அப்படி தான்”

“ஓ வேறு எதுக்காவது மோகனை திட்டி இருக்கீங்களா?”

“இல்லீங்க சார். அவன் ஆசபட்டு கேட்டது இந்த வண்டிய தான் இத வாங்கி தான் அவனுக்கு ராசி இல்லாமல் போய் எங்கள விட்டு போயிட்டான் சார்”

வாசலுக்கு வெளியே ஒரு மூலையில் இருந்த பைக்கை கைகாட்டி அழுதார்.

“உங்க பையனோட மொபைல் போன் எங்கே “

கேட்டதும் மனிதரின் அழுகை சுவிட்ச் போட்டது போல நின்றது.

“எங்களுக்கு தெரியாது சார்”

அவரின் முகத்தையே பார்த்திருந்தவர்கள் அவரின் பதிலில் அதிருப்தி ஏற்பட “வாட்?”

“சார் எங்க புள்ளயே போயிட்டான் இன்னும் எதுக்காக இப்படி வந்து விசாரணை பண்றீங்க? எங்களை நிம்மதியா வாழ விடுங்க சார். பிளிஸ் உங்களை கெஞ்சி கேக்ரோம்”

” உண்மை ரொம்ப நாள் உறங்காது பெரியவரே. உண்மை வெளியே கொண்டு வந்தே தீருவோம். நீங்களாவே அந்த மொபைலை கொடுத்துடுங்க”

அடுப்பங்கறையிலிருந்து ஓடி வந்த பெண்மணி அவனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து “ஐயா உங்கள எங்க குலசாமியா நினைச்சிகிறோம். இதுக்கு மேல விட்ருங்க ஐயா. எங்க புள்ளயே போயிட்டான் இனி என்ன கண்டு பிடிச்சு என்ன ஆக போகுது. அவன் எங்க கண்முன்னே எங்கள பாத்துட்டு தான் இருப்பான். தயவுசெய்து போயிருங்க சாமி” என்று ஒப்பாரி வைத்தார்.

இருவரும் பதறி எழுந்தவர்கள் என்ன செய்வது என்று பார்த்து கொண்டிருக்கும் போதே படுக்கையறையை திறந்து கொண்டு ஒரு சிறு பெண் வந்தாள். பள்ளி விட்டு வந்தும் சீருடை இன்னும் மாற்றாமல் அதையே அணிந்திருந்தாள். அவளை கண்டதும் பெற்றோர் இருவரும் அவளை உள்ள போக சொல்லி சைகை செய்தனர். இதனை மனதில் குறித்து கொண்ட தர்ஷன் நிகிலோடு அங்கிருந்து கிளம்பினான்.

இப்படியாக அவர்கள் சென்ற மூன்று இடங்களிலும் ஏதோவொரு காரணம் சொல்லி இவர்களை வெளியேற்றினார்களே தவிர எதற்கு என்று எதுவுமே புரிபடவில்லை. சோர்ந்திருந்த தங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கும் பொருட்டு ஒரு தேநீர் கடையில் நின்று தேநீர் வாங்கி பருகி கொண்டிருந்தார்கள். யோசனையின் முடிவு ஆரம்பநிலை தாண்டி செல்லாது இருக்கவே இனி இந்த வழக்கில் என்ன செய்ய வேண்டும் என்று மனதில் குறித்து கொண்டு காவல்நிலையத்திற்கு சென்றார்கள்.


காவல் ஆய்வாளர் அலுவலகம்

பிரியதர்ஷனும் நிகிலும் சில திட்டங்கள் வகுத்து அதன் படி இந்த வழக்கை கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

மோகன்ராஜ் வீட்டில் விசாரணை செய்யும் போது அந்த வீட்டின் சிறு பெண் ஏதோ சொல்ல வருவது போல் தோன்றியது . அவளிடம் நட்பாக பேசி விசாரணை செய்யலாம் ஆனால் எங்கு சந்திப்பது என்று ஆலோசனை பண்ணி கொண்டு இருந்தனர்.

அந்நேரத்தில் துணை காவல் ஆணையரிடமிருந்து அழைப்பு வந்தது.

” குட் ஈவ்னிங் சார்”

” “

“எஸ் சார்”

” “

“ஓகே சார் வில் சமிட்”

” “

“ஓகே சார் ஆன் டைம்ல அங்கு இருப்போம்” என்று அழைப்பினை வைத்தான். நிகில் கேள்வியாக நோக்க

” நாளைக்கு கமிஷனர் ஒரு மீட்டிங் அரேன்ஞ்ச் பண்ணிருக்காராம். லேட் பண்ணாம ஆன் டைம்ல வரனும்னு சொன்னார். அதோட க்ரைம் பைல் சமிட் பண்ண சொல்லி இருகாங்க”

“ஓகே எந்த மன்த்ல இருந்து வேணும்”

“மன்த் இல்லை யேர். வருஷம் முழுவதும் நடந்த க்ரைம் அண்ட் க்ரிமினல் டீடெய்ல்ஸ் எல்லாம் வேணும். க்ரைம்வைஸ் பிரிச்சு வை. நான் இப்ப வரேன்” என்று வெளியேறினான் தர்ஷன்.


நேரம் நள்ளிரவு தாண்டி ஓட்டமெடுத்தது. வெளியே மழை மண்ணுடன் ஆனந்தமாக கூத்தாடும் சத்தம் கேட்டது. மெர்ஸி இன்னும் விழித்து தான் இருந்தாள். அவள் காதல் கணவன் அவளை விட்டு போனதை அவ்வளவு இலகுவாக எடுத்து கொள்ள முடியவில்லை. அவன் உபயோகித்த பொருட்களோடு பேசிக்கொண்டு இருந்தாள்.

✍️நீயின்றி வாழேனடா..
நீயிருக்கும் இதயம் கனக்கிறதடா..
கைகள் உனையணைக்க ஏங்குதடா..
நானின்றி வாழ்வில்லை உரைத்தாயடா..
கெஞ்சிடவும் கொஞ்சிடவும் துணை நீயேடா..
மறந்து போனாயோ..?

இலையுதிர் காலமா நம் வாழ்வு..?
முற்று பெறும் பந்தமா நம் வாழ்வு..?
என்றெண்ணி காற்றில் உன் வாசம் தேடி அலைய
பூஞ்சிட்டு ஒன்று பூத்ததடா என்னில்

என்னுள் நிறைந்தவனே ..
நேசவாழ்வு இன்னும் மிச்சம் இருக்க
வான்பறவையாய் ஏன் பறந்து போனாயோ..
என் காதலை ஏன் உதறி போனாயோ..✍️

தீபக்கின் கைப்பேசியும் நாட்குறிப்பு புத்தகமும் அருகே இருக்க அதை நெஞ்சோடு அணைத்தபடி அவனுடன் வாழ்ந்த நாட்களில் எடுத்த தற்படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டு வந்தவள் நெஞ்சம் பொறுக்காது கதறி அழுதாள்.

அழுது அழுது தொண்டை வறண்டு போக தண்ணீர் குடிக்க எழுந்து சமையலறைக்கு சென்றாள். தண்ணீர் குடித்து விட்டு தம்ளரை வைத்து விட்டு திரும்ப சாளரக்கதவுகள் காற்றில் வேகமாக அடித்து கொண்டது.

தான் புழங்கிய வீடுதான் என்றாலும் அந்த நள்ளிரவு நேரம் அவளுக்கு பயத்தை விதைத்தது. வியர்வை முத்துக்கள் பூத்தன. இதயத்துடிப்பின் லயம் இப்போது மாறி துடித்தது. தேவையில்லாமல் அன்று பேசிய அலைபேசி உரையாடல் நினைவில் எழுந்து பயபந்தை நெஞ்சில் வீசியது.

அப்பொழுது தான் தண்ணீர் குடித்திருந்தாள் இருப்பினும் தொண்டை முழுவதும் ஈரப்பதம் இழந்து மேல்அண்ணத்தோடு நா ஒட்டி போக மீண்டும் தண்ணீர் வேண்டும் போல் இருந்தது. தம்ளரை எடுத்து தண்ணீரை பிடித்தாள் கை நடுங்கியது. குடித்து விட்டு சாளரக்கதவுகளை பூட்ட வந்தாள். சாளரத்தின் வழியே திடீரென்று தோன்றிய உருவத்தில் சர்வாங்கமும் நடுங்க ‘வீல்’ என்று அலறினாள்.

தீரா தேடலுடன்..

6 thoughts on “தீரா காதலே – 5”

  1. CRVS 2797

    நிறைய புரியாத புதிராவே இருக்குது. இதெல்லாம் எப்பத்தான் புரியுமோ…??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!