துஷ்யந்தா-41
பல வித யோசனையோடு பிரகதி மெதுவாக நடந்து மேலே ஏறி கொண்டிருந்தாள்.
குழந்தையின் உடையை தளர்த்தி மெல்லிய ஆடையை அணிவித்தப்பின் அமுதம் பருக கொடுத்து அமைதியாக மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்த கட்டிலில் விளையாட்டு பொருட்களை போட்டு தன்வீயை இமைக் கொட்டாமல் இரசித்தாள்.
தன்வீயை கட்டாயப்படுத்தியா விதுரன் கொடுத்தான். இல்லை… அவனிடம் காதலை கூறாமல் போனாலும் இருவரின் அன்பில் உருவானவள்.
அப்படியிருக்க… விதுரனை குறை கூற தன் நெஞ்சமே மறுக்க, தலைவலி விண்ணென்று வலித்தது.
கீழே வந்த போது தங்கள் அறையில் விதுரன் தன்னை போலவே தலை தாங்கி அமர்ந்திருக்க கண்டாள்.
குழந்தையை அவன் கையில் கொடுத்து கிளம்பினாள். எப்பொழுதும் அருகே மெத்தையில் கிடத்துவது வழக்கம். இன்றோ விதுரன் மனம் சரியில்லை என்று எண்ணி கொடுத்துவிட்டாள்.
அவனோ சின்னதாய் மென்னகையை தருவித்தான். தனக்கான மருந்து அவளே நீட்டினாள் ஆண்மகன் மென்னகை இதமாக ஓட்டாதா?!
அதனை ஒருபக்கம் நிறுத்திவிட்டு, “இன்னிக்கு பெயர் சூட்டுவிழா போனதும் எனக்கு பத்மாவதி அத்தை நினைவு வந்துடுச்சு. உன்னிடம் எப்படியாவது அவங்க உடல்நிலையை சரிசெய்து பழைய அம்மாவா கொடுத்திருக்கணும்.
எனக்கு வந்த ஆசிட் குடிச்சி பாவம்.. விரைவா இறக்க நான் தான் காரணம்.
ஆதித்யா தாத்ரு கூட இதுக்கு தான் பிரகதி விவாகரத்து கேட்டதும் கொடுத்திட்டியாடானு கேட்டார். உண்மை தான். இப்ப தான் புரியுது. சில விஷயம் எதுவும் நம்ம கையில இல்லை அது எப்பேற்பட்ட எமகாதகனா இருந்தாலும் நம்மை மீறி நடக்குது.” என்றதும் பிரகதி அவன் அருகே அமர வந்தவள் தயங்கி தள்ளி அமர்ந்தாள்.
“ஐ அம் சாரி. அம்மா உடல்நிலை தெரியாம நான் வார்த்தையை விட்டுட்டேன். கர்ப்பகாலத்துல எனக்கு ஷூகர் வந்தப்ப புரிந்தது. அம்மா எப்படி உடல்நிலையை சரியா பாத்திருக்கலைனு. காலை இழக்கிற அளவுக்கு வந்ததே அவங்க தளர்வுக்கு காரணம்.
ஆசிட் என்ன நீயா கொடுத்த அது யாரோ மோசமானவங்களோட மட்டமான பிளான். எதுக்கு பழையதை நினைக்கிற. எப்பவும் தன்வீயை கையில வச்சிருந்தா நீ மிடுக்கா இருக்கணும். டல்லா உட்காராதே அது அவளுக்கு நேர்மறை எண்ணங்களை கொடுக்க சொல்லறேன்.” என்றாள்.
சட்டென குழந்தையை மெத்தையில் கிடத்திவிட்டு அவளை கட்டியணைத்து கழுத்தில் முகம் புதைத்தான்.
சில நிமிடம் கழிந்ததும் விடுவித்தவன், “லிட்டில் கன்பியூஸ்டு” என்றவன் அவளை விலக்கி வெளியேறிவிட்டான்.
தனக்கு தெரிந்துக்கொள்ள வேண்டியவை நிறைய உண்டோ என்ற மனம் உந்தியது.
விதுரனான துஷ்யந்தனை மறைத்து டெவில்கிங்காக பார்க்க வைத்த மாயபிம்பங்கள் என்னென்ன என்று ஆராய்ந்தாள்.
முதல் கோணல் தீபிகா. அவள் தான் பூமியிலேயே இல்லையே… அப்படியே இருந்தாலும் அவள் விதுரனுக்கு தீங்கிழைப்பவளாக இருப்பாளே தவிர அவளால் நல்லதில்லை என்றது மனம். அது முன்பே தெளிவானது.
தர்மா ஏர்போர்டில் இருந்து வந்த பொழுது சொன்ன ரிசப்ஷன் பெண் மைதிலி பற்றி தெரிந்து தெளிந்து போனதும் அவளை தர்மா கைப்பற்றியதும் என்னவோ விதுரன் தவறு செய்ததாக தோன்றவில்லை.
கதிரின் நிலையில் இருந்து மைதிலியை காப்பாற்றி விட்டான் எனலாம். கதிர் எதற்கு இத்தனை விஸ்வாசம் காட்டுகின்றாரென புரிந்தது.
கதிரின் நம்பக தன்மையால் தான் தன்னை எப்பொழுதும் அவரின் காரிலேயே அனுப்பி வைக்கின்றான்.
நினைவுகளை மீட்டெடுத்தவளுக்கு கண் முன் தன்னையே வெறித்து பார்த்து கழுத்தில் குபுக்கென இரத்தம் தெறிக்க சாய்ந்தவனின் சடலமும் வந்து நின்றது. விதுரன் செய்த கொலை அவளால் மறக்க முடியாமல் பழைய நிலைக்கே வந்து முட்டினாள்.
இத்தனை நாள் ஆகியும் மறக்க இயலவில்லையே என்று துடித்தாள்.
இரண்டு நாள் மிக அதிகப்படியான அமைதியிலேயே கடத்தினான் விதுரன். அவளுமே….
அன்று பரமகுரு பிரகதியை பார்க்க வந்தார்.
விதுரனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பிரகதி விஷயத்தில் தன்னை மீறி எதையும் இனி நடக்க விடமாட்டேன் என்பது உறுதியாய் நின்றான்.
“எப்படிம்மா இருக்க. ஆதித்யா ஐயா இறந்தப்ப பார்த்தது. ஒன்னுமில்லை… குழந்தையை பார்க்க வந்தேன். உன்னோட பேசவும் தான்.” என்றதும் விதுரன் பார்வை அவரை எட்டியே நிறுத்தியது.
“இந்தாம்மா… குழந்தைக்கு என்னோட பரிசு” என்று நீட்டினார். பேச்சில் அத்தனை அயர்வு.
பிரகதி பொறுமையாக வாங்கிக் கொண்டாள். விதுரனுக்கு பற்றி எரிந்தது.
“என்னடா… புதுசா பேசணும் சொல்லறான் குழந்தையை பார்க்க வந்தானு சந்தேகப்படுவது சரி தான் மா. நான் உன்னிடம் ஒரு உதவி கேட்டு தான் வந்திருக்கேன்.” என்றார்.
விதுரனோ “அதானே சோழியன் குடுமி சும்மா ஆடுமா.” என்றான்.
“என்ன பார்க்க வந்திருக்கார். உன்னை இல்லை. தயவு செய்து உள்ள போறியா.” என்றாள் பிரகதி.
“இதோடா…. இது என் வீடு. இங்க நான் கிங். அதுவும் சாதா கிங் இல்லைமா… நீ வச்சியே பெயரு.. டெவில் கிங். என் வீட்ல வந்து என்னை உள்ள போக சொல்லறியா?” என்று கர்ஜித்தான்.
பிரகதியோ “அய்யா சாமி இது உன் வீடு தான். என்னை அவரோட பேச விடறியா. இல்லை நான் அவங்க வீட்டுக்கு போய் பேசிட்டு வரவா?” என்று எழவும் “என்ன இழவோ பண்ணி தொலை. அந்த வீட்டு பக்கம் உன் கால் போக கூடாது” என்று திட்டினான்.
“நீங்க சொல்லுங்க பட் குயிக்கா பேசிட்டு போறது பெஸ்ட் .” என்றாள்.
“சொல்லிடறேன் மா… என் பேரன் யுகனை பார்க்க எனக்கு தடை விதிச்சிருக்காங்க. உனக்கு கீதா பற்றி தெரியும். நான் அப்படியா… என்னை யுகனை பார்க்க அனுமதிக்க சொல்லுமா. தினமும் வேண்டாம். வாரம் ஒரு முறையாவது கண்ணுல காட்ட சொல்லுமா. உனக்கு புண்ணியமா போகும்.” என்று காலில் விழவும் பிரகதி எழுந்துவிட்டாள்.
“அய்யோ எழுந்துருங்க. விதுர் என்று அவனை உதவிக்கு கூப்பிட, “இந்த டிராமா பார்க்க நான் இங்க இல்லை. எனக்கு வேற வேலை இருக்கு” என்றவன் எழுந்தான்.
“அவன் கிடக்கான். நான் சசியிடம் பேசறேன் அங்கிள்.” என்றாள்.
“நல்லது மா. இது போதும். நான் வர்றேன்.” என்று எழுந்து கொண்டார்.
அவருக்கு தெரியும் இதற்கு மேல் அமர தனக்கு இங்கு தகுதியில்லையென.
பிரகதியோ “நான் இல்லைனா கொஞ்சமாவது பீல் பண்ணி திருந்திருப்பனு பார்த்தேன். இல்லை… நீ அதே டெவில் தான். அரக்கன் தான். பேரனை பார்க்க கூட அனுமதிக்கலை. அவங்க பொண்ணை தான் இழந்தாங்க. பேரனையும் பார்க்க விடலைனா என்ன டா நியாயம் இது” என்றாள்.
“இதுக்கு பேரு தான் விதுரநீதி” என்றான் விதுரன்.
“சீ… பஞ்ச் டயலாக் அடிக்காதே. உன்னையும் குழந்தையையும் பிரிச்சா அப்ப தெரியும் அதோட வலி” என்றாள்.
“அதான் பிரிச்சிட்டியே… 11 மாதமா.” என்றவன் அதன் பின் அங்கு நிற்கவில்லை.
பிரகதியோ குழந்தையை தூக்கி கொண்டு அன்று மாலையிலேயே சசிதரன் வீட்டுக்கு சென்றாள்.
சசிதரன் வீட்டில் இல்லை. கோமதியிடம் பரமகுரு பேசியதும் கேட்டுக்கொண்ட கோரிக்கையையும் கூறினாள்.
கோமதியோ கையை பிசைந்து, “இதுல முடிவெடுக்க வேண்டியது நான் இல்லை பிரகதி. விதுரன் தான். அவனிடம் ஒரு வார்த்தை கேளு.” என்று கூறவும் பிரகதிக்கு கோபம் வலுத்தது.
“உங்க பேரன் யுகனை உங்க சம்மந்தி பார்க்க கேட்கறார். ஒன்னு நீங்க அதுக்கு பதில் சொல்லணும். இல்ல… சசிதரன் பதில் சொல்லணும் இதென்ன விதுரனிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கணும்? எனக்கு புரியலை. எங்க சசிதரன் கூப்பிடுங்க… நானே கேட்கறேன்.” என்றாள்.
“சசிதரன் வர்ற நேரம் தான் நீயே கேட்டுக்கோ.” என்றவர் தன்வீயோடு யுகன் விளையாடுவதை கண்டு மகிழ்ந்தார் கோமதி.
பிரகதி இருக்கவும் அவளுக்கு சிற்றுண்டி செய்து வர வேலைக்காரர்களுக்கு உத்தரவிட்டார்.
சசிதரன் எட்டு மணிக்கு வந்தான். “வா..வாங்க” என்று வணக்கம் வைத்தான்.
“ரெப்..பிரஷ் பண்ணிட்…டு வந்..திட்ட்ட..றேன்” என்று அறைக்கு சென்றான்.
கோமதியோ பின்னாடியே சென்று பிரகதி வந்ததின் நோக்கம் கூறி வெளியேறியிருந்தார். குழந்தைகளை கவனிக்க சற்று தொலைவில் நின்றார்.
பாதாம் அல்வா செய்து குழந்தைக்கு ஊட்டி விட்டபடி சசிதரனின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்.
சசிதரன் சோபாவில் அமர்ந்து பிரகதியிடம் நலன் விசாரிக்க செய்தான்.
சிறிது நேரத்திலேயே பிரகதி, “அத்தை சொல்லிருப்பாங்க. நான் வந்த நோக்கத்தை. பரமகுரு அங்கிள் யுகனை பார்க்க ஆசைப்படறார். நீங்க பார்க்க விடலைனு சொல்லி வருத்தப்பட்டார். என்னயிருந்தாலும் பொண்ணை இழந்தவங்களுக்கு பேரனை பார்க்க ஆசையிருக்கும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி அனுமதிக்கலாமே.” என்றாள்.
“விதுரன்னுக்கு பி..பிடிக்காது.” என்றான்.
“உங்க குழந்தையை பார்க்க நீங்க முடிவெடுங்க. ஏன் விதுரன்? காலம் முழுக்க விதுரன் பின்னாடியே ஒளிய போறிங்களா சசிதரன். வெளிச்சத்துக்கு வாங்க. குறையென்பது நீங்களா தாழ்த்திக்கிறது தான். மற்றபடி என்னயில்லை உங்களிடம்.” என்றாள்.
“விதுர…னுக்கு பிடிக்கா..த…த.. துக்கு மட்டும் சொல்லலை. தீபிகா செய்தது…க்கு நா..நா..னே மன்னிக்..க..க மாட்..டேன்.” என்றான்.
“ஓ… குடியோட போதை பழக்கமா டிராக்ஸ் எடுத்ததை சொல்லறிங்களா…” என்றாள் பிரகதி. இடை வெட்டி, “இ…இல்லை… உங்க..ளை கொ..லை பண்..ண முயன்றது. புரியுதா….” என்று தீபிகா ஆசிட் கலந்த நிகழ்வையும் மகேஷிற்கு துணையாக போன கதையும் விவரித்தான்.
பிரகதி அதிர்ச்சியில் உறைந்தாள். அன்னை அன்று துடிதுடித்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றதும், அதற்காக அவசரப்பட்டு விதுரனை குத்தியதையும் எண்ணினாள்.
தோழியான தான் சாப்பிட்டால் இறப்பேனென தெரிந்தே எப்படி அதை செய்ய முடிந்தது. அந்தளவு விதுரன் மேல் கோபமா.? என்று அதிர்ந்தாள்.
அவளின் கோபத்திலும் விதுரனின் ஆட்டத்திலும் (பத்மாவதி)தன் அன்னையின் உடலல்லவா தளர்ந்தது.
தீபிகா சலனமேயில்லாமல் குழந்தை பெற்று எடுக்க அவள் உயிரையே துச்சமாக வந்து விட்டாளே என்ற வருத்தம் மிஞ்சியது.
பழிவாங்க யார் இருக்கின்றாள். இல்லை யாருக்காக வாழ போகின்றாளென எண்ணம் கரித்தது.
சசிதரனோ “இதெல்லா…ம் செய்..தும் விது….ரன் சும்மா விட்டிருக்கான்னா கா…கா…ரணம் எனக்கா..காக…
என்னோட முதல் காதல் அவளிடம் தான் பார்த்தேன். காதல்…. என் வாழ்க்கையை யோசித்து என் நிம்மதி போச்சு.” என்று அரற்றினான்.
தீபிகாவோடு பேசாதே, தீபிகாவோடு பழகாதே, அவள் இருந்தால் அவள் நிழல் கூட உன் பக்கம் தீண்டக் கூடாது, அவள் உனக்கு தோழியா என்ற எள்ளல், எல்லாவற்றிருக்கும் காரணம் புரிந்தது. ஏனோ இம்முறை விதுரன் செய்த வற்புறுத்திய கட்டாயத் திருமணத்தால் மட்டுமே அவள் அப்படி மாறினாளென எண்ண முடியவில்லை.
சில குணயதிசயம் அவளின் மனித மிருகத்தினுள் ஒளிந்திருக்கின்றது. என்ன தனக்கு தான் அவளை கண்டறிந்திட இயலாத வண்ணம் தேன் தடவி பழகியிருக்கின்றாள்.
விதுரன் கூட சொன்னானே… ஒன்று அவள் நடித்திருக்க வேண்டும். இல்லை தாங்கள் முட்டாளாக இருந்திருக்க வேண்டும்.
எத்தனை சிறப்பாய் நடித்து இருக்கின்றாள். தானும் முட்டாளாய் நம்பி விட்டோமே. ஆசிட் குடித்து அவதிப்பட்டது தன் தாய் அல்லவா. அதே ஆசிட் விதுரன் குடித்தாலும் தீபிகா செயல் எத்தகைய தவறு.
விதுரன் மகேஷை கொன்றதை எப்படி என் மனம் ஏற்காது முரண்டு பிடித்தது. தற்போது இருவரின் செயலை ஒப்பிடுகையில் தன்னை போன்றதொரு மனிதர்கள் என்றால் தூர விலகி ஒதுங்குவார்கள். விதுரன் போன்றோர் கொன்று குழித் தோண்டி புதைத்து மண்ணாக்கவே… ஆம். அவன் அதனை தானே செய்தான்.
தானே அன்னையை அடைத்து வைத்ததற்கு இப்படிப்பட்டவன் வாழ வேண்டுமா என்று குத்தினோமே.
சாதாரண நடுத்தர வாழ்வில் வாழ்ந்த எனக்கே கத்தியால் குத்திவிட்டோம். அவன் எதிலும் பகையால் உயிரை உருவும் ஆளாயிற்றே.
ஏனோ தற்போது நாக்கு அறுத்ததற்கு காரணம் இருக்குமோ. தேவையின்றி ஒருவனை வஞ்சிப்பது விதுரன் குணமல்ல? அதையும் தெளிவுப்படுத்த எண்ணி சசிதரனிடம் கேட்டாள்.
“உங்க அப்பா, தாத்தா, விதுவோட அப்பா அம்மா எப்படியிறந்தாங்க.?” என்றாள்.
சசி அதை ஏன் கேட்கின்றாளென பார்த்தான். “இல்லை… சில விஷயம் குழப்பத்தில இருக்கேன். விதுவை புரிந்துக்க தடுக்குது. நீங்க சொன்னா அவரை…” என்று திணறினாள்.
விடுதலை பத்திரம் கொடுத்து சென்று விட்டு தண்டனை வழங்கியப்பின் வந்த ஞான உதயமா என்று அவள் மனம் கேலி செய்தது.
சசியோ மடமடவென போனில் டைப் செய்தான். அது எழுத்தை ஒலியாக மாற்றி ஒலிக்கும் ஆப் மூலமாக சொல்ல வந்ததை தடையின்றி போன் மூலமாக சுருக்கமாக நடந்தவையை ஒலிக்க வைத்தான்.
“எங்களை பிஸினஸ் எதிரியா தேவ் நினைச்சார். தேவானந்த் இளம் தொழிலதிபர். முன்னுக்கு வர குறுக்குவழியில பல தடையை தாண்டி வந்தவன்.
ஒரு கருத்தரங்கில் பெரியப்பாவுக்கும் தேவ்விற்கும் பேச்சு வார்த்தை வலுத்து மோதிக்கிட்டாங்க. தேவ் சின்ன பையன்னு பெரிப்பா பெரிதா எடுத்துக்கலை. எங்கப்பாவும் அப்படி தான் நினைத்தார்.
ஏன்னா எங்க வயது தான் தேவ்விற்கும். ஆனா தேவ் அப்படி நினைக்கலை. இரண்டு கிழட்டு ஆட்களோட மோதி அவனோட சாம்ராஜ்யம் அடக்கப்படறதா நினைத்தான்.
இரண்டு மூன்று முறை அவமானப்படுத்த முயன்றான். சிவராம் பெரிப்பா கண்டுக்கலை. மாறா அப்பவும் தேவ் தான் கேலிக்கு ஆளாகினான். இந்த இரண்டு பேரால அவன் வளர்ச்சி சிலயு தடையாச்சு அவனால பொறுக்க முடியலை.
அந்த கோபம் கொல்ல முடிவெடுத்துட்டான். பிரைவ்வேட் ஜெட்ல அப்பா, எங்கதாத்தா, சிவராம் பெரிப்பா, மஹா பெரிம்மா போனதில பைலைட்ட விலைக்கு வாங்கினான். அவன் பேரசூட்ல குதிச்சிட்டு ஜெட்டை மலையில மோத வச்சிட்டான்.
எங்க வீட்ல நான்கு உயிர் போச்சு. உடல்கருகி சாம்பலா தான் கிடைச்சாங்க.
என்னால எதுவும் பண்ண முடியாது. அம்மா வேற ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிட்டாங்க. ஆனா விதுரன் அப்படியிருக்க மாட்டான். இரத்தத்துக்கு இரத்தம் பழிக்கு பழி தேவ்வை தேட ஆரம்பிச்சான்.
பக்கத்துல போலிஸை பாதுகாப்புக்கு வச்சிட்டு இவன் இன்னொருத்தனை கொல்ல ஆளை தேடினான்.
ஆதித்யா தாத்தா தேறி எழுந்து வந்தப்ப, புத்திமதி சொல்லி தடுத்தார். ஆனாலும் கோபம் குறையலை. தேவ் மாட்டிக்கிட்டான் அவனை வீட்டுக்கு இழுத்துட்டு வந்தப்ப, தேவ் துள்ளினான்.
உன்னையும் உன் மிச்ச குடும்பத்தையும் கொல்வேன் டானு போலிஸ் இருக்கறப்ப சவடாலில் கத்தினான்.
தேவ்வை காயப்படுத்த தான் சவாலிட்ட நாக்கை கத்தரித்தான் விதுரன். அவனுக்கு இருந்த கோபத்துக்கு ஆளையே போட்டுத் தள்ள இருந்தான். ஆனா விதுரன் கோபத்திலும் நிதானம் இழக்க மாட்டான். அத்தனை போலிஸை வச்சி சாகடிச்சி உள்ள போகலை.
நாக்கை துண்டாக்கி மிரட்டி அனுப்பினான். செயல்னு பார்த்தா கொடூரமா இருக்கும். எங்க சைடு நான்கு உயிர் இறந்து சாம்பலை பார்த்தவனுக்கு அது சின்ன தண்டனையா தான் தோன்றியது.
உயிரோட விட்டதே பெரிய விஷயம்.
தேவ் அதுக்கு பிறகு தொழில் சம்மந்தப்பட்டு எங்கும் தலைகாட்டலை. ஆனா விதுரனை அழிக்க வேவு பார்த்தான்.
எத்தனை முறை வேவு பார்த்தாலும் அருகே வர ஒரு கட்ஸ் வேணும். அது அவனுக்கு இல்லை. விதுரனை கிட்ட நெருங்கினாலே தானா அவன் பின் நகர்ந்தான்.
ஒரு கட்டத்தில… தீபிகா குடிப்பதும் அவளும் விதுரனை பழிவாங்க துடிப்பதும் தெரிந்துக் கொண்டான். ஆனா விதுரன் நிழலை அப்பவும் அவளாளையும் தொட முடியாதுனு புரிஞ்சது. அவளை டார்க்கட் பண்ணினான். மது போதையில இருந்ததை சாதகமா பயன்படுத்தினான்.
போதாத குறைக்கு உங்களை ஒரு முறை கொல்ல முயற்சி செய்தான். அது விதுரனுக்கு தெரிய வந்தது.
தீபிகாவை மானபங்கபடுத்த முயன்றதும், உங்களை கொல்ல முயன்றதும் விதுரனுக்கு இனியும் தேவ்வை உயிரோட விட மனசில்லை. கொன்னுட்டான்.
அநேகமா அதை நீங்க பார்த்து தான் பிரிஞ்சதா விதுரன் தீபிகா இறந்தப்ப எங்கம்மா ‘நீயாவது பிரகதியோட வாழாம இப்படி நிற்கறியே’னு கேட்டதற்கு சொன்னான்.
நான் விதுரனை நல்லவன்னு சொல்லலை. கெட்டவன்னும் சொல்ல மாட்டேன். அவனுக்கு கண்ணீர் வரவழைக்க நினைச்சா, எதிரிக்கு இரத்த கண்ணீர் வரவழைக்க செய்வான்.” என்று போன் ஆப் மூலமாக ஒலியில் விவரித்து முடித்தவை முடிந்தது.
சிறிது நேர மௌனத்திற்கு பின் “சசி… போன்” என்று திருப்பி தந்தாள்.
“அப்ப யுகனை பார்க்க பரமகுருவை விடமாட்டிங்களா?” என்று கேட்டாள்.
சசியோ இன்னமும் எப்படி கேட்கின்றாளென அதிர்ந்தான்.
“உண்மை தான்… முட்டாளா இவள்னு பார்க்கறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு எண்ணம் சசி. கீதா ஆன்ட்டிக்கு மகள் வாழ்வை சரியா வழிநடத்தி அறிவுரை சொல்ல தெரியலை. பட் பரமகுரு அங்கிள் முதல்லயிருந்தே உங்களை மதிக்கிறாரே. அவருக்கு தீபிகா மேல அவளோட குழந்தை மேல அன்பிருக்கே.
நான் கட்டாயமா உங்க விதுரன் மாதிரி மிரட்டவோ, ஆர்டர் போடவோ முடியாது. கோரிக்கை தான் முன்வைக்கிறேன்.” என்று எழுந்தாள்.
கோமதியிடம் குழந்தையை வாங்கி, விடைப்பெற்று வீட்டை நோக்கி நடந்தாள்.
-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Vithuran good man.pragathi should consider him intresting
Ella unmaium thayrium poothu manasu kanamagutha pragati 😌
IPO UNMAILAM THERINJUDUCHA PRAGATHI ENI ENA SEIYA PORA
Super
Nice epi👍👍👍