Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-15

தேநீர் மிடறும் இடைவெளியில்-15

அத்தியாயம்-15

   சுதர்ஷனன் சென்றதும் மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது வீடு. அடிக்கடி கவிதா ஆனந்தி விஷால் என்று மாறி மாறி ரம்யாவை நலம் விசாரித்து கவனித்தார்கள்.

   அவளை காண ‘ரம்யா அழகு நிலையம்’ கடையில் வேலை செய்யும் கயல்விழியும் பார்த்து பேசி சென்றாள்.
அவளிடம் ‘கொஞ்ச நாளுக்கு நீயே கவனிச்சிக்கோ’ என்று ஆனந்தி தான் உரைத்தார்.

  நிறைய போட்டோஸ் மூலமாக ரம்யா, சஞ்சனா சுவாதி தோழிகளோடு நெருக்கமாய் இருப்பதை அறிந்துக்கொண்டாள்.

  அதோடு தனியாக வந்து பேசும் பொழுதெல்லாம், எவ்வாறு பழகினோம், பேசுவோம், சீக்ரேட் உண்டா, என்ற முக்கிய விஷயமெல்லாம் கேட்டதால் ரம்யாவின் வாழ்க்கை வரலாற்றை பார்த்து கேட்டு அறிந்தாள்.

ரம்யா தன் முகத்தை கண்ணாடியில் இன்ச் பை இன்சாக கவனித்தாள். ‘ரம்யா.. என்‌ பெயர் ரம்யா.” என்று முடிவெடுத்தவளாக நடமாட முயன்றாள்.

மூன்று நாள் வீட்டில் இருந்தவளுக்கு,
அன்று சஞ்சனா தீப்சரண் நிச்சயத்தை காண தயாரானாள்.

மாம்பழ நிறபட்டுயுடுத்தி ஆனந்தி கவிதாவின் கைப்பிடியில் வந்தாள்.

   இப்பொழுது தான் விபத்து நிகழ்ந்ததால் கைக்குழந்தையை போல பாவித்தனர்.

   புடவை அணிந்து நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு வந்தவளை சுதர்ஷனன் பைரவ் கண்கள் இமைக்க மறந்து பார்வையிட்டார்கள்

  சுதர்ஷன் தன் காதலியை காதலிக்கும் கண்ணோட்டத்தில் கண்டான் என்றால், பைரவோ ஒரே முகஜாடையில் ரம்யா இருப்பதை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

  அங்கே வந்திருந்தவர்கள் ரம்யா நலனை கேட்டார்கள். கூடவே அவள் திருமணத்தை கேட்டு நின்றார்கள். அனைவரிடமும் முந்திக்கொண்டு ஆனந்தி இரண்டு மாசத்துல கல்யாணத்தை நடத்தணும்னு முடிவுப்பண்ணிருக்கார் மாப்பிள்ளை.” என்று கூறவும் ரம்யா சுதர்ஷனனை நோக்கிவிட்டு தலைகவிழ்ந்தாள்.

   மகிழ்ச்சியாக ஆர்பாட்டத்துடன் நடக்கவேண்டிய நிச்சய விழா.
  ரம்யா சுவாதி இருவரும் சஞ்சனாவை கேலி கிண்டல் என்று கழிய வேண்டியது. ஆனால் ரம்யா அமைதியின் ரூபமாக நடமாடினாள். இதில் சுதர்ஷனனின் தாய் சாரதாவும் மருமகள் வீட்டில் அறிமுகமானார். எந்தபக்கம் திரும்பினாலும் திருமணம் என்ற பேச்சே ஆட்சி செய்தது.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நட்புவட்ட போலீஸ் ஆட்கள் வந்து சேர ரம்யாவாக இருப்பவளுக்கு இயல்பாக நடமாட முடியவில்லை‌. வீட்டுக்கு போகலாமா?” என்று தொல்லை செய்ய ஆரம்பித்தாள்.

   சுதர்ஷனனோ “ஏன் அவசரம். உனக்கு சஞ்சனா காலேஜ் பிரெண்ட். எனக்கு தீப்சரண் ஸ்கூல் பிரெண்ட். நாம நிறைய நேரம் இருக்கலாம்” என்று கூற சுவாதியோ தூரத்தில் இருவரை பார்த்து பைரவிடம் “இது நம்ம ரம்யாவே இல்லைங்க. அவ எப்பவும் சுதர்ஷனன் பேசவே விடமாட்டா. காதலை சொல்ல வந்தப்ப, கட்டன் ரைட்டா எனக்கு தங்கை தம்பி படிக்கணும். நானும் மிடில் கிளாஸ் நீங்களும் மிடில் கிளாஸ், நமக்கு செட்டாகாதுனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொன்னா. அதுக்கு பிறகு சுதர்ஷனன் வரவேயில்லை.
  இப்ப அவன் அதிகாரம் செய்யற மாதிரி பேசறான். ரம்யா திணறுறா, இதே பழைய ரம்யாவா இருந்தா சுதர்ஷனன் இந்தளவு பேச விடறது டவுட் அவபாட்டுக்கு கிளம்பிடுவா.” என்று பேசவும் பைரவ் மனதிற்குள் ‘இது ரம்யாவே இல்லை’ என்று கூற துடித்தான். ஆனால் உண்மையை உரக்க, உரைக்க முடியுமா என்ன?

  “நாமளும் கிளம்பலாம் சுவாதி. உங்கம்மாவை பார்த்துட்டு அடுத்து தொழிற்சாலையை எப்ப திறக்கலாம்னு மறுபடியும் நல்லநேரம் பார்ப்போம்” என்று கூறினான் பைரவ். பைரவ் அடிக்கடி ரம்யாவை பார்வையிடுவது சுவாதிக்கு உவப்பானதாக இல்லை. அதனால் பைரவ் கூறும்போதே கிளம்ப முடிவெடுத்தாள்.

  அதனால் தோழிகள் ஒவ்வொருத்தராய் சென்றனர்.
 
   சுதர்ஷனனுமே தீப்சரணிடம் “ரம்யாவுக்கு அவ யாருனு நினைவில்லைடா. இதுல பங்ஷன்ல தெரியாத இடத்துக்கு வந்த மாதிரி முழிக்கற, நாங்க கிளம்பறோம் டா. தப்பா எடுத்துக்காத” என்று தன்னிலையை உரைத்தான்.

  தீப்சரணுமே அவனது உறவுகள் கேலி செய்து, அன்னை தந்தை தாய்மாமா உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இருந்தான்‌. இதில் சஞ்சனாவின் உறவுகளும் ஆட்களும் வந்து கேலி செய்ய, நண்பனை காரணத்தோடு மன்னித்து அனுப்பிவிட்டான்.

  சுதர்ஷனன் கூடவே வந்து ரம்யா வீட்டில் விட்டான். அதன்பின் தினமும் சுதர்ஷனன் வந்து பார்த்து பழகி பேசி, கிளம்பும் போது முத்தம் வைக்க, தடுக்க முறைந்தாள். எங்கே அவன் கிடைக்கும் தருணத்தில் எல்லாம் நெருக்கத்தை உண்டாக்கி கொண்டான். ஒருவேளை காதலுனுக்கு முத்தம் கொடுத்தால் மறுக்க கூடாதென்று நினைத்துக்கொண்டாளோ என்னவோ.
அவனை தவிர்ப்பதற்காக, ப்யூட்டி பார்லர் செல்வதாக துடித்தாள்.

   பத்து நாளும் வந்து சுதர்ஷனன் முத்தமிட்டு ஆட்சி செலுத்த ரம்யா ப்யூட்டி பார்லருக்கு கவிதா துணையோடு ஓடிவந்தாள்.

  ப்யூட்டி பார்லர் ஒவ்வொன்றும் ரம்யா பார்த்து பார்த்து செய்தது. ஆனால் இந்த ரம்யாவுக்கு எதுவும் அவ்விடத்தில் சுகிக்கவில்லை.

    அதோடு அழகுநிலையத்தில் நெயில் பாலிஷ் கூட சரிவர போடதெரியவில்லை.

  கைகள் நடுங்க கயல்விழியை தான் உதவிக்கேட்டாள்.
அவளுமே கடைக்கு வந்தவர்களிடம் ரம்யாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி ஹேர்கட், மெடிக்கர் பெடிக்கர் ஐ ப்ரோவை அழகுப்படுத்துவது என்று எல்லாவற்றையும் செய்ய, வேடிக்கை பார்த்தாள்‌.

   ரம்யாவுக்கு பேபிகட் முடி வெட்டுவது எல்லாம் ஐந்து நிமிடம் கூட போதாது. இங்க இந்த ரம்யா கத்திரிக்கோலை கூட பிடிக்க வராமல் விழித்தாள்.

தனக்கு எது சரியாக வருமென்று அவள் இன்னமும் அறியவில்லை. கையை பிசைந்து நின்றாள். கையில் மோதிரம் அவளை உருத்தியது. அந்த மோதிரத்தை உற்று உற்று நோக்கினாள்.
 
   அவள் தலைக்குள் இடி இடிக்கும் விதமாக ஓசை. தலைக்குள் பாரமேறியது.

   கண் மூடி ஹேர் ஸ்பா செய்யுமிடத்தில் படுத்தாள்.

  அவளது இமைக்குள் சர்ச் பாதர் முன் மண்டியிட்டு ‘ரீனா என்னும் நீ, கெவினை மணக்க சம்மதமா?’ என்று கேட்க, “எனக்கு அப்பா அம்மா எல்லாமே நீங்க தான் பாதர். நீங்க கெவினை மணக்க கேட்டப்பின்ன நான் நோ சொல்வேனா? மனதார கெவினை கல்யாணம் செய்யறேன் பாதர்” என்று பாண்டிச்சேரியில் கடல் அலைகளுக்கு மத்தியில் சர்ச் மணியோசை அடிக்க, சம்மதித்தாள் ரீனா.

  ரீனா ரம்யாவாக இருக்கும் பெண்ணின் உண்மையான பெயர். பாதர் சார்லஸ் தயவில் தான் ஸ்கூல் படிப்பு முடிந்ததும் வேலை கிடைத்து  வெளியே வந்தாள்.
  தனியா ஹாஸ்டல்ல தங்கி வாழ்ந்தாலும், அவளுக்கென்று திருமண வாழ்வை அவள் சிந்திக்கவில்லை. பாதர் சார்லஸ் அவராக ஞாயிறு சர்ச் சென்ற நேரம், கெவின் என்பவர் ஏழை பெண்ணை மணக்க முன்வந்துள்ளார். நல்ல பெண்ணை மணக்க கேட்டார். சார்லஸிற்கு நொடியில் தோன்றிய பெண் ரீனா மட்டுமே. அதனால் ரீனாவின் அபிப்ராயம் கேட்டு தேவனின் திருச்சபையில் திருமணம் செய்து வைத்தார்.

  ரீனா வாழ்வில் மகிழ்ச்சி ததும்பியது. எல்லாம் இரண்டு மாதம் கடந்தப்பின், கெவினின் செய்கைகள் மாறுபட்டது. இரண்டு மாதக்காலம் வரை மதுப்பழக்கத்தை மறைத்தவனால் அதன்பின் மறைக்க முடியவில்லை‌. 
குடிப்பழக்கத்தோடு வெளிநாட்டு இந்தியனின் நட்பு கிடைக்க, போதைமருந்து உட்கொள்ள, ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் போதையில் மிதந்தான் கெவின்.
 
  அதனால் நித்தம் நித்தம் சித்திரவதை அனுபவித்து என்னவோ ரீனா மட்டுமே. தாய் தந்தையரிடம் உரைக்க வழியேது. அவளுக்கு தான் அப்படிபட்டவர்கள் இல்லையே. பாதரிடம் முறையிடலாம். ஆனால் அவருக்கு இருக்கும் எத்தனையோ பேரை கவனிக்கும் பொறுப்பில் தனது நலனுக்கு மட்டும் யோசிப்பாரா? மணக்க கேட்டப்போது நல்லவனா வேலையில் இருக்கின்றானா என்றதை மட்டும் கவனித்தார். அவன் நல்லவன் வேடமிட்டவனா? பணத்தை நல்வழியில் செயல்படுத்துபவனா? பெண்களை எவ்வாறு பாதுகாப்பான் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

பலரும் இப்படி தான், தன் தாழ்வுமனபான்மையை களைய, தன்னை விட வாழ்வில் தாழ்வாக இருக்கும் பெண்ணை தேடி மணந்துக்கொண்டு, ஏதோ வாழ்க்கை தந்த தியாகி போல நடிப்பது. என்ன தான் நடிப்பு என்றாலும் ஒரு கட்டத்தில் மேக்கப் கலைந்து உண்மை முகம் பளிச்சிடும்.
  அப்படி தான் கெவின் நல்லவன் வேடம் ரீனாவிடம் களைந்துவிட்டது.

உடல்ரீதியாக மனரீதியாக பல காயங்கள் பெற்றாலும், ரீனா போதை தெளிந்த கெவினிடம் பாதரிடம் சொல்வதாக மிரட்டினாள்.

  கெவின் அதன்பின் அசுரத்தனமாய் அடிக்க ஆரம்பித்தான். அடிஉதை என்று வாங்கி உயிர் வாழ்ந்தால் மட்டும் போதுமென்று மிகவும் சோர்ந்துவிட்டாள் அந்த பூஞ்சை பெண்.

   ப்ரைடல் பூவேலைப்பாடுகளுக்கான செயற்கை பூக்கள் செய்யும் இடத்தில், வேலை செய்தவளை வேலைவிட்டு நிறுத்தினான். யாரிடமும் பேசவிடாமல் ரீனாவை முடக்கினான். பணமும் மற்றவர்கள் இருக்கின்றார்கள் என்ற தைரியத்தையும் முதலில் முடக்கிவிட்டான். சுயகாலில் நிற்பவளுக்கு எந்த நேரமென்றாலும் துணிச்சல் பிறந்து தன்னை கேள்விக் கேட்டுவிடுவாளென்ற தெளிவாக வேலையை விடுவிக்க கூறினான். 

  பாண்டிச்சேரியில் இருப்பதால்  பாதர் சார்லஸிடம் மிரட்டுவதை தாமதமாக உணர்ந்த கெவின், தன் நண்பன் நாக்பூரில் இருக்க, அங்கே தன் அலுவலகத்தில் மாற்றல் வாங்கி செல்ல திட்டமிட்டான்.

    எட்டு மாத திருமண உறவில், தெரியாத ஊரில், நாக்பூர் செல்ல மறுத்தாள் ரீனா. ஆனால் கெவின் பிடிவாதம் பிடித்து, நாக்பூரில் ரீனாவை கட்டாயப்படுத்தி ஏசி பஸ்ஸில் செல்ல ஏறினார்கள்.

   ரீனா பிடிக்காமல் தான் ஏசி பஸ்ஸில் பயணம் செய்தாள்.
  கெவின் ஏசி பஸ்ஸில் ஏறியதும் கால் மணி நேரத்தில் போதை மருந்தை நுகர ஆரம்பித்தான்.

  அதனால் என்னவோ லேசான தள்ளாட்டம், மயக்கத்தில் உறங்க, ரீனா அவன் கண்ணில் மண்ணை தூவ காத்திருந்தாள்.

   அப்படி காத்திருந்த சமயம் ஒரு பயணி ஏறுவதற்காக வண்டி நின்றது.
  ஓட்டுனர் நடத்துனர் இருவருமே புகைப்படித்து இழுத்து மறுபக்கம் இருக்க, ரீனா யாரின் கண்ணிலும் படமால் இறங்கினாள்‌.

  அவசரமாய் நடந்து சென்றவள் எதிரே பாதை மாறி, பாண்டிசேரி செல்லவே முயன்றாள். ஆனால் அவள் துரதிர்ஷ்டம் சடுதியில் வந்த கார் அவளை மோதி தூக்கியெறிப்பட்டாள்.

  அவள் இறங்கிய பஸ் பயணியரை ஏற்றிக்கொண்டு பறந்திருக்க, கெவினும் போதையில் சரிந்திருக்க, ரீனா என்பவளை கவனிக்க தவறினாள்‌. அதன் பாதிப்பே இதோ விபத்தில் சிக்கி இங்கு வந்தது.

  “மேம்… மேம்.” என்றதும் ரீனா திடுக்கிட்டு எழுந்தாள்.

   “சாரி மேம்… நீங்க இந்த டேபிளட் போடணும்னு சார் உங்களுக்கு கால் பண்ணிருக்கார். நீங்க சைலண்ட்ல போட்டிருப்பிங்க போல. அதனால் ரிசப்ஷனுக்கு போன் போட்டு இன்பார்ம் பண்ணினார்.” என்றதும், சரியென்று தலையாட்டிக் கொண்டாள்.

     ‘இந்த மாத்திரை… இது வேற…. காசு வேஸ்ட் பண்ணி மாத்திரை வாங்கி அதை குப்பையில் கொட்டறேன். பச்.. நான் ரம்யா இல்லை ரீனானு சொல்லவும் முடியலை. அதே சமயம் எனக்கு இப்ப தங்க வீடு, என்னை தாங்கற குடும்பம், இதை இழக்கவும் மனசு வரலை.

இந்த ரம்யா யாரு? எங்கப்போனா? அவ திரும்பி வந்தா உண்மயை சொல்லிட்டு மன்னிப்பு கேட்டுட்டு நம்ம வழியில் போகலாமா? இல்லை.. நான் பாண்டிசேரி போய் பாதரிடம் பாவமன்னிப்பு கேட்டு உண்மையை செல்லிடலாமா?’ என்றவளுக்குள் சுதர்ஷனன் சாட் எடுத்து மனதிற்குள் வாசித்தாள்.

  ‘ஒரு பொண்ணை இந்தளவு காதலிக்கறப்ப, உங்களை ஏன் விட்டுட்டு போனா அந்த ரம்யா? ரம்யா கொடுத்து வச்சவ. நல்ல அப்பா அம்மா உடன்பிறப்புகள், நலனை விரும்பும் தோழிகள், அன்பான காதலன் கணவனா அமையற பாக்கியம்’ என்று ரம்யாவின் வாழ்வையும் பொறாமைக்கொள்ளும் விதமாக அங்கே ரீனா வாழ்வு அமைந்தது.

  வாழ்க்கை ஒரு விசித்திரம் தானே. யாருக்கு எது இல்லையோ, எது கிடைக்காமல் அதன் மேல் ஆசை வைக்கின்றனரோ அப்படி வாழ்பவர் மீதே பொறாமை தோன்றலாம்.
  இங்கு தாய் தந்தை உடன்பிறப்புகள், நல்ல தோழிகள் காதல் கணவன் என்று எந்த பாக்கியமும் இல்லாமல் வாழ்ந்த ரீனாவுக்கு ரம்யா வாழ்க்கை செழிப்பானதாக தான் தெரிந்தது.
  வாடகை வீடு என்றாலும், சுயகாலில் நின்று அழகு நிலையத்தை கவனிக்கின்றாள். கடைக்கும் ஆள் போட்டு நியமித்து அல்லவா முதலாளி ஸ்தானத்தில் இருக்கின்றாள்.

  என்ன இருந்து என்ன பிரயோஜனம். ரம்யா எங்கே? அவள் வரும் வரை இப்படி நடிக்க இயலாது. சுதர்ஷனன் நித்தமும் முத்தம் வைத்து கொல்கின்றான். கெவின் வார்த்தையால் வதைத்தால் சுதர்ஷனன் அன்பு வரமாக மாறாதா என்ற ஏக்கம் உள்ளே எழுகின்றது. இந்த ஏக்கம் பெரிதானால் ரம்யாவே கண் முன்னால் வந்தாலும் சுதர்ஷனனை விட்டு தர தோன்றாதே. கெவினே முன்னால் வந்தால் யார் நீ உன்னை யாருனே தெரியாது என்ற பொய்யை உதிர்க்கலாம். இதற்கு என்ன வழி? ரம்யா வந்துவிடுவாளா?’ என்று இறந்து போனவளால் தன் வாழ்வு பாதிக்குமா என்ன என்பதை அறியாமல் துடித்தாள் ரீனா.

-தொடரும்.

4 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *