Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-2

தேநீர் மிடறும் இடைவெளியில்-2

அத்தியாயம்-2

   ரம்யாவிற்குள் வீட்டுக்கு செல்லும் நேரமாகவும், மற்ற நினைவுகளை ஒதுக்கி வைத்து, கடையை பணிப்பெண்ணை பார்த்துக்க கூறிவிட்டு தலைவலி என்று கிளம்பினாள்.

    பொதுவாக சிசிடிவி கேமிரா கண்காணிக்கப்படுவதாலும்‌, யாராவது வந்தால் ரிஷப்ஷன் பெண்ணும் பெயரை கேட்டு பதிவு செய்வதால் கடையில் வேலை செய்பவளே மற்றதை பார்த்துக்கொள்வாள்.

  ரம்யா தனது ஸ்கூட்டியில் வீட்டுக்கு செல்லும் பாதையில் செலுத்த, மின்னலாய் போலீஸ் வண்டி வழிமறைத்து நின்றது.

  முதலில் போலீஸ் வண்டி என்று அதிர்ந்தாலும், பின்னால் ஒரு பெண்ணும் ஹெல்மெட் அணிந்து வர, அது தனது தோழி சஞ்சனா என்று நொடியில் அறிந்துக்கொண்டாள்.

   “ஏ… சஞ்சு.” என்று மகிழ, “ஹலோ மேடம் ஓவர் ஸ்பீடா வண்டியை ஓட்டறிங்க. அங்கிருந்து சிக்னலில் நிற்கவும் மாட்டேங்கறிங்க. இதுல வண்டியை வழிமறைச்சா ஏ சஞ்சு வா. யாருனு நினைச்சு பேசறிங்க?” என்று காவல் அதிகாரி அதட்டவும் பக்கத்தில் இருந்த பெண்ணும் ஹெல்மேஞ்டை கழட்டாமல், மௌனம் சாதிக்க, “சாரி சார்… தெரிந்தவங்கன்னு நினைச்சு அப்படி ஆரம்பிச்சேன்‌. சிக்னல்ல எல்லாம் நின்று தானே வந்தேன். ஓவர் ஸ்பீடு எல்லாம் இல்லை சார்.” என்று மறுத்தாள்.

   “போலீஸ்காரனிடமே எதிர்த்து பேசறிங்களா? உங்க பெயர் என்ன? லைசன்ஸ் இருக்கா?” என்றதும் ரம்யா பக்கத்தில் இருக்கும் பெண்ணை கண்டு, முகத்தை நன்றாக பார்க்கும் பொருட்டு கூர்ந்திட, “லைசன்ஸ் இல்லையா? அப்ப ஃபைனை கட்டுங்க” என்று பேச, “சார் அதெல்லாம் இருக்கு” என்று பதறி லைசன்ஸை எடுக்க குனிந்தாள்.

  “தீப்ஸ் போதும் உங்க விளையாட்டு. அவ பயந்துட்டா. ஏ.. ரம்ஸ் நான் சஞ்சனா தான்டி” என்று சஞ்சனா ஹெல்மெட்டை கழட்டினாள்.

  “நான் அப்பவே கண்டிபிடிச்சேன். போலீஸ் டிரஸ், உன் ஆளு அதட்டவும் பயந்துட்டேன். இவர் தானா அவரு? அதென்னடி என்னை ரம்ஸ்னு கூப்பிடுவது போல அவரை தீப்ஸ்னு கூப்பிடற? அவர் பெயர் என்னவோ?” என்று சிந்தனை செய்பவளாக பாவிக்க, சஞ்சனாவோ”தீப்சரண் டி. உன்னை எப்படி செல்லமா ரம்ஸ்னு சொல்லறேனோ அது போல தீப்ஸ்.” என்று தோழியை பார்த்து கண்ணடித்தாள்.

“நல்லா வைக்கறடி செல்லப்பெயரு.” என்று பேசிவிட்டு தீப்சரணை அளவிட்டாள்.

  காவலதிகாரிக்கான கட்டுடல், அழகுப்படுத்துவதை தொழிலாக செய்வதாலோ என்னவோ தீப்சரணின் முகத்தை இரண்டு நொடி பார்த்தவள், அவனது வழவழப்பான கன்னம், நறுக்கி வைத்த மீசை, கூர் கண்கள், போலீஸ் அதிகாரி என்று சிகை அலங்காரமே செப்பிடும் நறுக்கி வைத்த தினுசு, திண்மமான தேகம், முறுக்கேறிய கை முஷ்டிகள், அளவெடுத்த சட்டையை அணிந்து அதிகப்படியான சதைகளின்றி கச்சிதமான ஆனழகன் என்று பறைச்சாற்றியது.

கூலரை நிதானமாக கழற்றிய தீப்சரண் கண்களும் ரம்யாவின் வில் போன்ற புருவத்தையும், செவ்விதழையும் பார்வையால் பருகினான்.

  “சஞ்சு அடிக்கடி செல்வா. என் பிரெண்ட் ரம்யா தான் எங்க பிரெண்ட்ஸ் கேங்க்ல பேரழகின்னு. இதுக்கு முன்ன உங்களை போட்டோல பார்த்திருக்கேன். ஆனா போட்டோ ஆப் பில்டர் இப்படி ஏதாவது ஒரு ஆப் துணையால அழகா இருப்பிங்கன்னு நினைச்சேன். ஆனா நேர்ல மேக்கப்பே இல்லாம ஆளை இழுக்கறிங்க. எப்படிங்க?” என்று கேட்டான்.

   தீப்சரண் கேட்டதும் அதிர்த்து ஆச்சரியமாக சிலையானது ரம்யா மட்டுமே. சஞ்சனா தீப்சரண் வயிற்றில் வலிக்காமல் குத்து வைக்க, “ஏ நிஜமா… உன் பிரெண்ட் பார்லர் வச்சியிருக்கவும் முகத்துல க்ரீம் பவுடர்னு அப்படியிருப்பாங்கன்னு நினைச்சேன். நேர்ல பார்த்ததும் தெரியுது. நேச்சுரல் ப்யூட்டின்னு‌” என்றா இன்னமும் ரம்யாவை ரசித்து மனதை பகிர்ந்தான் தீப்சரண்.

   அவ்விடத்தில் நெளிந்தது என்னவோ ரம்யா மட்டுமே சஞ்சனாவோ “போதும் மிஸ்டர் போலீஸ்கார். அறிமுகப்படுத்தி வைக்கலாம்னு அவளை பாலோவ் பண்ண சென்னேன். நீங்க வாட்டர் பால்ஸ் திறந்துவிட்டு நீச்சலடிப்பிங்க போல.

  ஏ ரம்ஸ்.. நம்ம ஆளு எப்படி? ஓவர் வாய்ல? அடுத்த வாரம் நிச்சயம் பண்ணலாமா? இல்லை எப்படிடி?” என்று அபிப்ராயம் கேட்டதும் ரம்யாவுக்கு அசட்டு புன்னகை மட்டும் வீசினாள். 

   சஞ்சனாவோ, “என்னடி இது வளவளன்னு பேசுவ. அமைதியா இருக்க. ஓவரா பேசவும் பயந்துட்டியா?” என்று நலம் விசாரித்து கையை பிடித்தாள்.

   “பச்… அதெல்லாம் இல்லை. ஒவ்வொரு விஷயத்துக்கும் பயந்து சாகற ரம்யா இப்ப இல்லை.” என்று கூறவும், தீப்சரணோ “பார்த்தா அப்படி தெரியவில்லையே. எனிவே ஐ அம் தீப்சரண். மாம்பலம் போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி.” என்று கையை நீட்டி குலுக்கினான்
ரம்யா அவனது கையில் நடுக்கம் கூடி கையை உருவினாள்.

  அவன் பார்வையில் ரம்யா மறுபுறம் திரும்ப “என்ன இந்த பக்கம்?” என்று பேச்சை மாற்றினாள்.

  “எல்லாம் நிச்சயதார்த்தம் வருதே அதுக்கான ஷாப்பிங் வேலையில் தீப்ஸை இழுத்துட்டு வர்றேன். உன்னை பார்த்ததும் தீப்ஸ் இன்ட்ரோ கொடுக்க சொன்னார்.” என்றதும் ரம்யா புன்னகைக்க முயன்றாள்.

   “சரிடி… ஆல்ரெடி உனக்கு சொல்லிட்டேன். என்‌ நிச்சயத்துக்கு வந்துடு. இப்ப நேர்ல தீப்ஸும் உன்னை இன்வெயிட் பண்ணிட்டார். மறக்காம வா. என்னை மேக்கப் பண்ணற வேலையும் உன்னோடது தான்.” என்று கன்னம் பிடித்து செல்லமாய் கெஞ்சி கொஞ்ச, “தொடாம பேசுடி.. இன்னும் இந்த பழக்கம் விட்டு தொலைக்கலை. அலங்காரம் செய்ய டான்னு வந்துடுவேன். பேமண்ட் மட்டும் குறைக்கறதா இல்லை. உனக்கெல்லாம் டபுள் மடங்கு பில் போடணும்” என்று ரம்யா விளையாட்டாய் கூறினாள்.

"டபுள் என்ன ட்ரிபிள் கூட வாங்கிடு ரம்ஸ். ஏன்னா... உங்களை மாதிரி சஞ்சனாவை தேவதையா மாத்தற வித்தை உங்க அழகான வெண்டக்காய் விரல்களுக்கு தானே இருக்கு." என்றான்‌ தீப்சரண். சஞ்சனா மீண்டும் அவன் வயிற்றை செல்லமாய் பதம் பார்த்து குத்தினாள். 

ரம்யாவோ அளவான சிரிப்போடு அப்பேச்சை ஏற்று, “சரி சஞ்சு நான் புறப்படறேன். ஆல்ரெடி தலைவலி வேற” என்று தன்நிலையை கூறினாள்.

“ஏன் தலைவலி வர்ற அளவுக்கு என்ன நடந்தது?” என்று கரிசனமாக தீப்சரண் வினவினான்.

தனக்கு வந்த போன் மெஸேஜ் பற்றி கூற நுனிநாக்கு வரை வந்தது. ஆனால் தீப்சரணோ தன்னிடம் அளவுக்கதிகமாக பேச்சு தொடுக்க, தன்பிரச்சனையை விவரிப்பது சரியானதாக இருக்காது என்று எண்ணினாள்.

ஏனெனில் ஏதேனும் கூறப்போக, அதன் பகன் தீப்சரணை தினமும் சந்தித்து பேச அவளுக்கு பிடிக்கவில்லை. தீப்சரணை பாராத போது மதிப்பளித்து போலீஸிடம் தெரிவிக்க நினைத்த ரம்யாவுக்கு, தீப்சரணின் பார்வையே தன்னை உற்று நோக்க, மேற்கொண்ட புது பிரச்சனையை ஆரம்பிக்க மனமில்லை.

புறப்படுவதாக முகத்தில் அதிருப்தி காட்டி கிளம்பினாள். சஞ்சனாவும் அதிகமாக நிறுத்தி மேலும் பேசவற்புறுத்தவில்லை. தீப்சரண் மட்டும் ரம்யாவை கண் மறையும் வரை பார்த்து ரசித்தான்.

ரம்யாவோ ‘கொள்ளி கட்டையை கண்ணுல சொருகணும். ப்ப்ப்பாபா சஞ்சுக்கு இப்படியொரு லவ்வர். கல்யாணம் வேற செய்யப்போறா. சே… பாவம். இந்த போலீஸ் ஆட்களே இப்படி தான் போல. சஞ்சு டேஸ்ட் ஏன் தான் இத்தனை மோசமா இருக்கோ? ஆள் பார்க்க அம்சமா இருக்கான்னு விழுந்துட்டாளா? நாளைக்கு எதுக்கும் சுவாதியிடம் அலங்காரம் செய்யும் போது விசாரிக்கணும்.’ என்று வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அங்கிருக்கும் அப்பார்ட்மெண்ட் பகுதியில் இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டுக்குள் நுழைய, அந்த ஹாலில் நெடுஞ்சாணாக மதுகிருஷ்ணன் விழுந்து கிடந்தார். பக்கத்தில் வாந்தி எடுத்து சிதறியிருக்க, அன்னை ஆனந்தி சுத்தம் செய்தபடி புலம்புவதை கண்டாள்.

வீட்டின் வாசல் கதவை சாற்றி தலையை தாங்கி அவளது அறைக்கு வந்து கதவை அடைத்தாள்.

தேவையற்ற போன் மெஸேஜ், தீப்சரணின் கூர்த்தீட்டும் பார்வை, இதில் தந்தையின் பொருப்பற்ற நிலையை கண்டு தலைவலி கூடுதலானது.

தன்‌ கைப்பையை கழற்றி ஒப்பனை மேஜையில் வைத்து, பாத்ரூமில் குளிக்க சென்றாள். 

தண்ணீரின் சப்தமும் தழுவலும் பெண்ணவளை குளிர்விக்க முயன்றது.

தன் ட்ராயரை திறந்து தலைவலி மாத்திரையை எடுத்து விழுங்கினாள்.

நித்திராதேவி சற்று நேரத்தில் எல்லாம் அவளை தழுவிக்கொண்டது.

ஆழ்ந்த உறக்கத்தில் சுகமான கனவுகள், யாரோ அவள் கையை பற்றி கவிதைகள் வடித்தனர். கூடுதலாக கன்னம் பற்றி அழகை வர்ணித்து, கதைகள் பேசி, கடைசியில் மஞ்சத்தில் வீழ்த்த, ரம்யா அழகாய் இசைந்தாள்.

சடுதியில் பெரும் சூறாவளி வீசியது போல, கடலில் அலைகள் ஆர்ப்பரிக்க, கடலில் ஒரு பகுதியில் புதைக்குழி போல சுழன்று அவளை இழுத்து சென்றது.

“வேண்டாம்… நான் வாழணும்.” என்று புலம்பி தீர்க்க, பலமாய் கதவு தட்டும் சத்தத்தில் விழித்தாள்.

‘சே… இதென்ன இன்பம் துன்பம் என்று ஒரே கனவில் மாறி மாறி‌. அழகான ஆணோட ஆளுமையோட தன்னை ஒப்படைத்தது இனித்தது என்றால்‌, கடலில் சுழற்றி அடித்து மூழ்கியதும் அவளுக்குள் வேர்வை துளிகள் அரும்பியது.

“அக்கா… அக்கா..” என்று தங்கை கவிதா கதவு தட்டவும், ‘வர்றேன் டி” என்று குரல் கொடுத்து கதவை திறந்தாள்.

“அக்கா… இனி ஹால்ல நான் படிக்க மாட்டேன்.” என்று தங்கை கவிதா நுழைய, ஆனந்தி தேநீர் கொண்டு வந்து ரம்யாவுக்கு நீட்டினார்.

ரம்யா வாங்கி பருகி ஹாலை கவனித்தாள். அங்கே மதுகிருஷ்ணன் இன்னமும் உலறி உறங்கி வழிந்தார்.

விஷால் எங்கம்மா?” என்று கேட்க, “அவன் அவனோட பிரெண்ட்ஸ் எங்கயோ கூப்பிட்டாங்கன்னு போயிருக்கான். இன்னிக்கு நைட்டு வந்துடுவான்.” என்று கூறினார்.
நேற்று கேட்டதற்கு இன்று மதியம் வந்துவிடுவதாக உரைத்திருந்தார். இப்பொழுது இரவு வருவதாக கூற, ரம்யாவுக்கு தம்பி செய்கை பிடிக்காமல், “அப்பா மாதிரி தம்பியை மாத்திடாத அம்மா. நேரத்துக்கு வீட்டுக்கு வரணும்னு இல்லைன்னா எங்கயும் போகக்கூடாதுன்னு சொல்லிடு.” என்று ரம்யா கட்டளையிட்டாள்.

ஆனந்தி தலையாட்டி சரியென்றார்.
இரவு இட்லி மல்லி சட்னி வைக்கவா என்று கேட்க, “வையுங்க… எனக்கு பசிக்கு. சாந்பிட்டு நேரத்துக்கு தூங்கணும்.” என்று கூறிவிட, ஆனந்தி தன் பணியை கவனிக்க ஓடினார்.
கவிதா பாடம் படிக்க ரம்யா மீண்டும் சேரில் தலை தாங்கி இந்தஷவீட்டின் நிலைமை எப்பொழுது மாறும் என்று தவித்தவளாக மின்விசிறியை வெறித்தாள்.‌

-பிரவீணா தங்கராஜ்.

7 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-2”

  1. M. Sarathi Rio

    தேநீர் மிடறும் இடைவெளியில்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 2)

    அய்யய்யோ..! இந்த தீப்சரண் பார்வையும் சரியில்லை, செய்கையும் சரியில்லை. போலீஸ்காரன்னாலே பாதி பொறுக்கின்னு முன்னாடியெல்லாம் சொல்லுவாங்க. இவன் அதுக்கு ஏத்த மாதிரியே இருக்கானோ ?
    தவிர, சஞ்சனா & ரம்யா ரெண்டு பேரையும் சிக்கல்ல சிக்க வைக்க நினைக்கிறானோ…?
    அதுவுமில்லாம அந்த வாட்ஸப் மெஸேஜ் கூட இவன் கிட்டயிருந்து தான் வந்ததோன்னு இப்ப சந்தேகமா இருக்கு. ரம்யா & சஞ்சனா ஏதோவொரு ட்ராப்ல மாட்டுறாங்களோ…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Super sis nice epi 👍👌😍 endha police enna eppdi vazhiyiran🙄 veetla eppdi erundha andha ponnu eppdi thanoda life a pathi yosipa romba kashtam 😕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *