Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-3

தேநீர் மிடறும் இடைவெளியில்-3

அத்தியாயம்-3

  அதிகாலை எழுந்ததும் ரம்யா புதுப்பொலிவுடன் எழுந்தாள். ஆயிரம் அழகுசாதனப் பொருட்களை வைத்து அழகுப்படுத்தி நிற்பதை விட, ஆரோக்கியமான நீண்ட உறக்கமும் லேசாக கலைந்த சிகையுடன் எழுந்து கொட்டாவி விடும் வயதுப்பெண்ணின் அழகிற்கு ஈடுயிணையில்லை.
  ரம்யா அத்தகைய அழகான முகத்தோடு சோம்பல் முறித்தாள்.

  கேலண்டரில் தேதி கிழிக்க, ‘உன் அனைத்து வேண்டுதலுக்கும் பலனாய் இறைவனை அடைவாய்.’ என்று எழுதியிருந்தது.

   ‘பார்டா… எல்லா வேண்டுதலுக்கும் பலன் என்றால் நான் சொத்து தான் போகணும்… பட் இதை வாசிக்க நல்லா தான் இருக்கு’ என்று பல் விலக்கி குளிக்க சென்றாள்.

    இன்று சுவாதி வீட்டிற்கு செல்ல வேண்டும். அதற்கு முன் கல்லூரி பெண்ணிற்கு அலங்காரம் செய்ய வேண்டும்.
  
  கருப்பு நிறத்தில் சின்ன சின்ன வெள்ளை பூக்கள் கொண்ட லாங்க் ஸ்கர்ட், காலர் வைத்த வொயிட் பட்டன் ஷர்ட், அணிந்து போனிடெயில் போட்டுக்கொண்டு, அலங்காரப்பொருட்களை, அள்ளி பையில் வைத்தாள்.

  மதுகிருஷ்ணனோ எழுந்ததும் நெற்றிக்கு விபூதி பட்டை தீட்டி, சாப்பிட அமர்ந்திருந்தார்.

  “நெய்தோசை எல்லாம் போடறது இல்லையா ஆனந்தி.” என்று கேட்க, ஆனந்தி தோசையை வேண்டாவெறுப்பாக வைத்து நகர்ந்தார்.

    “ரம்யா குட்டி வந்துட்டா. அவளுக்கும் தோசை சுடு ஆனந்தி.” என்றதும், எந்த பேச்சு வார்த்தையுமின்றி அமரவும், “ரம்யா கண்ணு… உன்னிடம் நூறு ரூபாய் இருக்கு. நேத்து ஒருத்தனிடம் கடன் வாங்கினேன் இன்னிக்கு கொடுக்கணும். கொடுக்கலைன்னா மரியாதையில்லை பாரு.” என்றார்.

   “எவனோ ஒருத்தனிடம் பணம் கடன் வாங்கறதே தப்பு” என்று முகம் தூக்கி வைத்து உரைத்தாள் ரம்யா.

   மதுகிருஷ்ணனோ “நான் என்ன செய்ய. கல்யாண வயசாகியும் உனக்கு ஒருத்தனை கட்டி வைக்க முடியலை. சின்னவ அடுத்த வருஷம் படிப்பு முடிப்பா. அடுத்து அவளுமே கல்யாண சந்தைக்கு நிறுத்தணும். உன் தம்பி படிப்பு இரண்டு வருஷமிருக்கு. இப்பவே எங்க போனான்னு தெரியலை.

   உன் அம்மாவுக்கு என்னை பிடிக்கலை. பிடிக்கலைன்னா கூட வாழணும்னு இருக்கா.
   இதெல்லாம் நினைச்சு பார்க்க மனசு தாங்கலை. துக்கம் தொண்டை அடைக்குது இராவுக்கு தூக்கம் வரலை‌.” என்றார்.

  ரம்யாவோ, “தூக்கம் வரலை என்பதுக்கு குடிப்பிங்களா? அதுவும் கடன் வாங்கி…? ச்சீ.. அப்பனாயா நீ‌.. என் வயசு பொண்ணுங்க காதல் கல்யாணம்னு செட்டிலாகறாங்க. எனக்கு அந்த கொடுப்பினை வேண்டாம். அட்லீஸ்ட் வீட்டுக்கு வந்தா நிம்மதியாவது தரலாம்ல. கடன் வாங்கி குடிச்சிட்டு பேச்சை பாரு. உனக்கு மகளா பிறந்ததுக்கு செத்துப் போயிடலாம். ஆனா நான் செத்தா நீ எல்லாம் எனக்கு கொள்ளிப் போடாத. அப்படி போடணும்னா‌.. உன் சம்பாத்தியத்தில் ஒரு சேலையோ துண்டோ வாங்கி போடு.” என்று பாதி சாப்பாட்டில் கையை உதறி எழுந்துக்கொண்டாள்.

  “அம்மா… நான் கிளம்பறேன். பத்து பைசா இந்த ஆளுக்கு தரக்கூடாது‌” என்று விறுவிறுவென நடந்தவள் “விஷால் வந்துட்டானா?” என்று கேட்டாள்.

   ஆனந்தி அங்கிருந்த அறையை பார்த்து “உள்ள தான் படுத்திருக்கான்” என்று கூறவும், ரம்யா மூடியிருந்த அவ்வறையை கண்டு செருப்பை மாற்றி கிளம்பியிருந்தாள்.

   ரம்யா சென்றதும் ஆனந்தி இதயத்தில் கை வைத்து நிம்மதியுற்றார்.

   “விஷால் வீட்டுக்கே வரலை. ரம்யா குட்டியிடம் எதுக்கு பொய் சொல்லற? இரண்டு நாள் உன் பையன் வீட்டுக்கு வராம என்ன பண்ணறான்?” என்று மதுகிருஷ்ணன் கேள்வி கேட்டார்.

  ஆனந்தியோ, “வீட்டுக்கு குடும்ப தலைவனா பத்து பைசா கொண்டு வந்து வையுங்க. அப்பறம் எல்லா கேள்வி கேளுங்க” என்று முகத்தை திருப்பி கொண்டார்.

கவிதாவோ பெற்றவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்து, கல்லூரிக்கு செல்ல தயாரானாள்.

   ரம்யா ஸ்கூட்டி எடுத்து வந்து கல்லூரி மாணவி ஷெர்லிக்கு  அலங்காரம் செய்ய வந்தாள்.

  அவளது வீட்டில் கேரளா சேலையும், அதற்கு பொறுத்தமாய் ஒருபக்கம் சாய்த்த கொண்டையுமாக அலங்கரிக்கும் விதமாக தன் ஒப்பனை கலை திறமையை காட்டினாள்.

   “நீங்க வீட்டுக்கு வந்து அலங்காரம் செய்யறேன்னு சொன்னதும் தான் கொஞ்சம் சாட்டிஸ்பேக்ஷன் அக்கா. இல்லைன்னா வீட்லயிருந்து பார்லர் ஒருபக்கம் வந்து அங்கிருந்து காலேஜ் எதிர்புறம் திரும்ப போறதுக்கு நேரம் அதிகமாகியிருக்கும்.
   இப்ப டென்ஷன் குறைவு” என்று ஷெர்லி கூற, ரம்யா சிறுபுன்னகை தழுவவிட்டு தன் வேலையை கண்ணும் கருத்துமாய் கவனித்தாள்.

  ஒரு ஒன்றரை மணி நேரம் அலங்காரம் செய்து முடிக்க நேரம் கழிந்தது. ரம்யா போனில் இந்த இடைப்பட்ட நேரத்தில் நோட்டிபிகேஷன் சத்தம் அடிக்கடி வந்து இம்சைப்படுத்தியது. அதை எடுத்து பார்க்க நேற்று பேசிய அதே நபர். காதல் கொஞ்சும் அமுத மொழியில் குட் மார்னிங் அனுப்பி அதன் பின் சாப்பிட்டியா என்று இதர சாதாரண வசனத்தை அனுப்பி பின்னர்‌ காதல் வசனமொழியையும் பேச போனை சைலண்டில் போட்டிருந்தாள்.

  ஷெர்லி பணத்தை கொடுத்து, “தேங்க்யூ அக்கா… ஆஹ் அக்கா… நீங்க சாப்பிட்டு வந்திங்களோ இல்லையோ அம்மா உங்களை பூரி சாப்பிட சொன்னாங்க
நான் அப்பாவோட கிளம்பிடுவேன். நீங்க சாப்பிட்டு கிளம்புங்க” என்றாள்.

   ரம்யாவுக்கு ஏற்கனவே இரண்டு மூன்று முறை ஷெர்லி அம்மா சாப்பிட கூறி விட்டார். வீட்டிலும் பாதி சாப்பாட்டில் கையை உதறி வந்ததால், ஷெர்லி அவள் அப்பாவோடு கிளம்பியதும் இரண்டு பூரி வடக்கறி என்று நீட்டவும் தயக்கமாய் பெற்றுக்கொண்டாள்.

   வேகமாய் இரண்டு பூரியை விழுங்கி மூன்றாவதை வைக்க வரும் முன் நாகரிகமாக தவிர்த்துவிட்டாள்.

  “என்னடா இரண்டு பூரி வயிற்றுக்கு போதுமா?” என்று குறைப்பட்டார் ஷெர்லி தாய்.

  “அச்சோ ஆன்ட்டி வீட்ல வேற சாப்பிட்டேன்.” என்று பொய்யுரைத்தாள். வீட்டில் தான் நிம்மதியாக அரை தேசையை விழுங்கும் முன் சம்பவம் நிகழ்ந்து வெளியேறிவிட்டாளே.

   “சரிம்மா… பார்த்துப்போ” என்று கூறி வாசல் வரை வந்தார்.

ரம்யாவின் தன் ஸ்கூட்டியில் முன் பக்கம் பர்ஸ் வைக்குமிடத்தில் எப்பொழுதும் போல பர்ஸை வைத்தாள்.
    ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய அதுவோ, ஸ்டார்ட் ஆகாமல் மல்லுக்கட்டியது.

   ஒரு பத்து நிமிடம் அதனுடன் மல்லுக்கட்டி லேசாக துவண்டாள்.

   “பெட்ரோல் இருக்காம்மா” என்று ஷெர்லி தாய் கேட்க, “அதெல்லாம் டேங்க் புல்லா இருக்கு ஆன்ட்டி” என்று  வண்டியை உதைக்க, சடுதியில் எலி ஒன்று ஓடியது.

   “அவ்வ்.” என்று அலறாத குறையாக ரம்யா துள்ளி குதித்தாள்‌.

  “அடப்பாவமே… எலி ஓடுது. அப்ப ஓயரை ஏதாவது கடிச்சி வச்சியிருக்கா?” என்றதும் ரம்யா குனிந்து பார்வையிட்டாள்.

  “அப்படி தான் இருக்கும் போல ஆன்ட்டி.” என்றவள் கை கடிகாரத்தை திருப்பி, நேரத்தை பார்த்தாள்.

  ஏற்கனவே சுவாதி ‘நீ நான் கூப்பிட்டதும் வரமாட்டற’ என்று சலித்துக் கொள்வாள். அதனால் உடனடியாக தோழியின் வீட்டிற்கு செல்ல யோசித்தாள்.

  “எங்கயாவது அவசரமா போகணும்மா? ஸ்கூட்டியை வேண்டுமின்னா இங்க வச்சிட்டு போம்மா. அப்பறமா கூட வண்டி ரிப்பேர் செய்ய ஆட்களை அனுப்பி பாரு.
  இப்ப எங்கயாவது போகணும்னா ஆட்டோ ஏற்பாடு செய்யவா.” என்று இதே தெருவில் ஒரு வீட்டில்  ஆட்டோக்கார் குடியிருக்க கேட்டார் ஷெர்லி தாய்.

  “அவசரமா போகணும் ஆன்ட்டி. நான் பார்த்து போயிடுவேன். வண்டி இங்க இருக்கட்டும்‌. நான் யாரையாவது அனுப்பி எடுத்துக்கறேன். உங்களுக்கு தொந்தரவுயில்லையே.” என்று கேட்டாள்.

     “அட இதுல என்ன தொந்தரவு?” என்று கூற “அப்ப ஸ்கூட்டி இங்க இருக்கட்டும் ஆன்ட்டி. நான் கிளம்பறேன்.” என்றவள் அந்தபக்கம் வந்த ஆட்டோவை கை காட்டி நிறுத்தினாள்.

  “சரிம்மா பார்த்து போ” என்று கூற, ரம்யா ஆட்டோ ஏறி சுவாதி வீட்டிற்கு வழியை கூறினாள்.

  ஆட்டோ “ஈ.சி.ஆர் பக்கம் சொல்லறிங்களே மா. எக்ஸ்ட்ரா காசு பார்த்து போட்டு கொடுங்க” என்றதற்கு தலையாட்டினாள்.

ஆட்டோவில் வழியெங்கும் ஈ.சி.ஆர் ரோட்டில் தனி தனி பங்களா, அவளை கடந்து கப்பல் போல பயணிக்கும் கார்கள், இருசக்கர வாகனத்தில் ‘சல்சல்லென்று’ பறக்கும் காதலர்கள் என்று வேடிக்கை பார்த்தவள், ஆட்டோவில் சாய்ந்தாள்.

ரம்யா பிறந்து மூன்று வருடத்தில் கவிதா பிறந்தாள். கவிதா பிறந்த அடுத்த வருடத்திலேயே விஷால் பிறந்தான். அதனாலா அல்லது மதுகிருஷ்ணன் குடிக்கு அடிமை ஆனதால் வீட்டிற்கு எல்லோரின் தேவைகள் பூர்த்தி செய்ய இயலாத கையாளாகாத தனத்தாலோ ரம்யா சிறுவயதிலேயே எல்லோரும் அனுபவகக்கும் சின்ன சின்ன சந்தோஷத்தை கூட அளவாக தான் அனுபவித்தது.

வளர்ந்து அரசு கல்லூரி படிக்க ஆனந்தி காரணம். அரசு கல்லூரியில் கூட சுவாதி சஞ்சனா போல தரமான உடையெல்லாம் போடும் நிலையில்லை. ஆளாளுக்கு அறிந்தவர் தெரிந்தவரிடம் ஆனந்தி வேலை செய்ய, அந்த வீட்டில் தேவையற்றது என்று கொடுத்த உடையை தான் இவளுக்கு கிடைக்கும். தேவையற்றது எல்லாம் ஆல்டர் செய்து கச்சிதமாக அணிவாள். தெய்வீக அழகிற்கு மிதமான உடையே பேரழகியாக காட்டும்‌.

கவிதா விஷால் தன்னை போல கஷ்டப்படக்கூடாதென்று பார்ட்டைம் படிப்பாக தான் அழகுகலை பற்றி கற்றறிந்தாள்.
அதில் நேர்த்தியாக நுணுக்கங்களை அறிந்து, தனியாக ப்யூட்டிபார்லர் வைக்கும் அளவிற்கு தேறினாள்.

இப்பொழுது பொருளாதாரம் பரவாயில்லை. ஆனால்... விஷால் செய்கை தந்தையை விட கூடுதலாக போனதும் அதட்டிவிட்டாள்.

அவனோடு இரண்டு நாள் பேசவில்லை. கவிதாவின் கேரக்டர் பரவாயில்லை. அம்மா ஆனந்தியும் வரவர உன் வாழ்க்கையாவது பாரு. யாரையாவது காதலிச்சு உனக்குன்னு ஒருத்தனை தேடிக்கோ” என்று வாய் விட்டே கூறிவிட்டார்.

ரம்யாவிற்கு அந்த பேச்சு கசப்பாக தோன்றியது. ஒருவேளை தாய் தந்தை அன்பாக இருந்தால் இந்த காதலில் ஆசை முளைவிட்டிருக்கலாம்.
சண்டை சச்சரவு என்று அதிகம் பார்த்ததால் காதல் கல்யாணம் என்ற கோட்பாட்டில் நுழைய அஞ்சினாள்.

முதலில் தம்பி தங்கையை ஒரீ நிலைக்கு ஆளாக்கிவிட்டு படிக்க வைத்துவிட்டு தனக்கு துணையை தேடலாமென்ற முடிவில் அழுத்தமாக இருக்கின்றாள்.

கொஞ்ச காலமாக ஜோடிகளாக பார்க்கும் ஆண்-பெண்ணை கண்டால் மனதிற்குள் காதல் கல்யாணம் என்று சலனம் உருவாகிறது. அதற்கேற்றாற் போல போனில் தொடர்ச்சியாக அவளிடம் யாரோ உரிமையாக காதல் பேச்சை வளர்க்க, மெதுமெதுவாய் காதலாசை அரும்பியது. ஆனால் அது சரியா? தவறா? என்ற குழப்பம்.
சரியான நபரா? அல்லது சில்மிஷ பேச்சிற்கு மட்டும் தூண்டில் போடும் நபரோ என்று கண்டுக்காமல் காத்திருக்க வைத்தாள்.‌

போன் மெஸேஜ் என்றதும், தன் அலைப்பேசியை தேடினாள்.

தன் கைப்பையிலும், கொண்டு வந்த அலங்கார பெட்டியிலும் போன் இல்லை. தலையில் கைவைத்து ‘பச்… ஸ்கூட்டியிலேயே போனை வச்சிட்டேனா? இப்ப ரிப்பேர் பார்க்க சொல்லணும் என்றாலும் போன் என்னிடம் இல்லையே.
பேசாம சுவாதிக்கு ப்யூட்டிஷன் முடிஞ்சு திரும்பி போகும் போது ரிப்பேர் சரிசெய்ய ஆட்களை கையோட கூட்டிட்டு போகணும். அதுவரை போன் அங்க பத்திரமா இருக்கணுமே.’ என்று மனதோடு புலம்பினாள்.

ஆஹ்… அண்ணா.. வர்ற ரைட் போனா பிஸ்தா க்ரீன் கலர் வீடு.” என்று கூற ஆட்டோக்காரனோ, ‘பக்கத்துல ஈ காக்கா இல்லையே’ என்பது போல நோட்டமிட்டான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

6 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-3”

  1. M. Sarathi Rio

    தேநீர் மிடறும் இடைவெளியில்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 3)

    அய்யய்யோ..! இது என்ன மர்ம கதையா…? சுவாதி வீடு ரம்யாவுக்கு ஆல்ரெடி தெரியும் தானே…? அப்பறம் எதுக்கு ஆட்டோகாரர் ஒரு ஈ காக்காய் கூட இல்லைங்கிறார்..? போகட்டும் மனுசாளாவது இருக்கிறாங்களா, இல்லையா ?
    இல்லை, வீட்டைப்பத்தியும் குடிகாரன் அப்பனையும், ஊர்சுத்தி தம்பியையும், விரக்தியுற்ற தாயையும், இன்னும் பள்ளிப் பருவத்தையே தாண்டாத தங்கச்சியையும் நினைச்சிட்டே வந்ததுல போன ரூட்டை கோட்டை விட்டாளோ..?
    இதுல அந்த அன்நோன் மெஸேஞ்ஜர் வேற… அவளோட கவனத்தை சிதறடிச்சிட்டதோ..?

    ரொம்பவே பாவம் தான் ரம்யா, நிறைய பொறுப்புகள், கடமைகள் அத்தோட கல்யாண கனவுகள்ன்னு சுமந்திட்டிருக்கிற ஒரு சராசரி அழகான பொண்ணு.. எப்படி இதுலயிருந்தெல்லாம் மீண்டு கரையேறி வரப்போறாளோ தெரியலை…?

    அது சரி, ரம்யாவுக்கு ஏத்த ராஜாகுமாரன் இந்த கதையில இருக்கிறானா, இல்லையா..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Super sis nice epi 👌👍😍 endha msg anupuradhu oruvela andha police ah erukumo🤔 purse vera phone oda vititu vandhuta yedhachum Achu na enna pannuva🙄 eppdi oru kudumba soozhal la eppdi marriage pathi yosipa😢

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *