தேவதை 20
“ஹாய் மேடம். நான் சொல்லல அப்பா அம்மாவோட போய் செட்டில் ஆகுறேன்னு. அதான் ஒரு வழியா என் பொண்டாட்டிய சம்மதிக்க வச்சி கூட்டிட்டு போறேன். நாங்க நல்லா வாழனும்னு எங்களை வாழ்த்துங்க”, அவரிடமே ஆசிர்வாதம் கேட்டவன் போல நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு தலை குனிந்து நின்றான். அவள் அதிர்ந்து விட்டாள்.
இப்பொழுது தான் என்ன செய்ய வேண்டும் இவனைப் போலவே செய்ய வேண்டுமா?. அவள் மிரண்டு நிற்க. அவள் கரத்தையும் பிடித்து இழுத்து தன்னோடு நிறுத்திக் கொண்டான் அரவிந்த். குழந்தையோடு இருந்தவள். அவன் அருகில் வந்து நின்றதும் அனிச்சை செயலாக சிரம் குனிந்து விட்டாள் . இதுவரை அவள் யாரிடமும் முகம் கொடுத்து கூட பேசியதில்லை. ஆனால் இன்று ஆசிர்வாதம் வாங்குவதற்காக சிரம் தாழ்த்தி நிற்கிறாள். அவரும் மனமார வாழ்த்து கூறினார்.
படிகளில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் இறங்கி வந்து. தங்கள் வாழ்த்துக்களை கூற.
அதிலிருந்த வயதான பெண்மணி அவர்கள் தலை மீது கரம் வைத்து. “நூறு வருஷம் நல்லா வாழ்ந்து இன்னும் மூணு நாலு குழந்தை குட்டி பெத்துக்கோங்க. இந்த குழந்தை சரியான அம்மா செல்லம் . அம்மாவை விட்டு வரவே வராது. அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தால்தான் இவளும் கொஞ்சம் மாறுவாள்”, என்று ஷாலினியின் தலையையும் வருடி கொடுத்தார் அந்த முதியவர்.
அப்பொழுது அரவிந்தனின் முகத்தை பார்க்க வேண்டுமே. உலகத்தில் இருக்கும் சந்தோஷத்தை எல்லாம் குத்தகை எடுத்தது போல சிரித்து கொண்டு இருந்தான். அவள் தர்ம சங்கடமாக நெளிந்து கொண்டிருந்தாள். அதன் பிறகும் அவன் கையை விடவே இல்லை. காரில் ஏறும் வரை அப்படியே தான் பிடித்திருந்தான். மற்றவர்களுக்கு பார்வையாளராக ஆகக்கூடாது என்று அவளும் அமைதிக்காத்தாள். ஆனால் காரில் ஏறிய நொடி பொரிந்து தள்ளினாள்.
“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?, உங்க இஷ்டத்துக்கு என்னென்னமோ சொல்றீங்க? “.
“நான் எங்கம்மா சொன்னேன். அவங்க சொன்னத அவங்களுக்கே திருப்பி சொன்னேன். அதுக்கு ஏன் இவ்வளவு கோவப்படுற. அவங்க கிட்ட கோபப்படாமல் என்கிட்ட கோபப்படுறனா அப்ப உரிமை உணர்வு உனக்கு வந்துருச்சுன்னுதானே அர்த்தம்? “, அதற்கும் அவன் வேறு பொருள் கூற.
அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. உதட்டை மடித்து கடித்து அவள் தடுமாறினாள்.
“நான் கொடுத்த ப்ராமிஸ்ல இருந்து பின் வாங்க மாட்டேன் மாலினி. டிரஸ்ட் மீ. நீ என்னை நம்புவதற்கு ரொம்ப போராடிட்டு இருக்கேன்னு எனக்கு புரியுது. அவங்க கிட்ட இலகுவா சொன்னேன். ஆனா உன்னோட விருப்பம் இல்லாம கண்டிப்பா நமக்கு இன்னொரு குழந்தை வராது”, என்று கூறியவன்.
காரை ஸ்டார்ட் செய்திருந்தான்.அதற்கு மேல் பதில் கூற முடியவில்லை அவளாலும். அதுவும் ஒரு அப்பார்ட்மெண்ட் தான். அவன் வீட்டின் வாயிலை நெருங்கும் போதே எதிர் அப்பார்ட்மெண்டில் இருந்தவர்கள் எட்டிப் பார்த்தனர்.
“என்ன அரவிந்தா பொண்டாட்டி புள்ளைய கூட்டிட்டு வந்துட்டியா? “, அங்கிருந்தவர் சகஜமாக கேட்க. அதிலேயே அவளுக்கு புரிந்தது. இவன் தன்னை போல அல்ல அருகில் இருப்பவர்களிடம் நல்ல தோழமை பாராட்டி இருக்கிறான் என்று.
“ஆமாம் ஆண்ட்டி, முதல்ல வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் காட்டிட்டு அப்புறம் உங்க வீட்டுக்கு வந்து ஆசிர்வாதம் வாங்கலாம்னு நினைச்சோம். நீங்களே பாத்துட்டீங்க”, அவன் சகஜமாக சிரித்தான்.
“இல்ல இல்ல பொண்டாட்டிய முதல்ல உள்ள கூட்டிட்டு போ. அப்புறம் பொறுமையா நான் வந்து பார்க்கிறேன்”, என்றார் அந்த பெண்மணி.
அதற்குள் கீழ் தளத்திலிருந்து பேக்கர்ஸை சேர்ந்தவர்கள் அலைபேசியில் அழைக்க. அவன் வீட்டில் எண்ணை கூறிவிட்டு. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன். அவளை உள்ளே வர வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினான்.
“இங்கேயே நில்லு. நான் வரேன்”, என்று கூறியவன் அவசரமாக சென்று ஒரு தட்டில் மஞ்சளும் குங்குமத்தையும் கலந்து எடுத்துக் கொண்டு வர. அந்த எதிர் வீட்டு பெண்மணி அதை புரிந்தது போல. கையில் கற்பூரம் வத்தி பெட்டியுடன் வந்தவர். அதை அவனிடமிருந்து வாங்கி அவனையும் சேர்த்து நிற்க வைத்துவிட்டு அவரே அவர்கள் மூவருக்கும் ஆளம் சுற்றி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார். அவர் பின்னோடு அவர் மருமகளும் வந்தார். கையில் பால் பழத்துடன். அந்த மூத்த பெண்மணி அதை வாங்கி அவர் இருவருக்கும் கொடுக்க இவள் தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தாங்க முடியாமல் விழி விரித்து நின்றாள். அவன் ஸ்பூனால் அவளுக்கு முதலில் ஊட்டி விட்டு பிறகு, அவன் சாப்பிட்டு குடித்தான்.
குழந்தை அனைத்தையும் ‘ப்பே’ என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.“கல்யாணமான எங்களுக்கு எதுக்கு ஆன்ட்டி இந்த பாலும் பழமும்? “, அரவிந்த் கேட்க.
“ புது வீட்டுக்கு வரீங்க, ரொம்ப வருஷம் கழிச்சு சேர்ந்து இருக்கீங்க. புது வாழ்க்கையை தொடங்க போறீங்க அதுக்காக தான் இந்த பாலும் பழமும் கொடுத்தேன் “, என்றார் அந்த பெண்மணி.
அவன் அதற்கு பதில் கூறாமல் இதழ் விரித்து சிரித்தான்.
“ரெண்டு பேருக்கும் நைட்டு விருந்து நான் ரெடி பண்றேன். நீங்க முதல்ல எல்லாத்தையும் அடுக்கி வைங்க”, என்று கூறிவிட்டு அந்த பெண்மணி சென்று விட்டார்.
இவன் எல்லா இடத்திலும் என்ன சொல்லி வைத்திருக்கிறான்?? மனைவி குழந்தை இருக்கிறார்கள் என்றா??, அவர் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு. “அவங்க கிட்ட என்ன சொன்னீங்க? “, என்று கேட்டாள்.
“சேம் ஸ்டோரி, வைஃப் கூட சண்டை போட்டுக்கிட்டு பிரிஞ்சு இருக்கோம்”, என்றான்.
“எனக்கு புரியல”.“
“அதான் சண்டை போட்டு கோவிச்சுக்கிட்டு தனியா வந்து இருக்குற. சமாதானம் பண்றதுக்கு நான் இங்க வந்து இருக்கிறேன். எப்படியோ சமாதானம் பண்ணி இங்க கூட்டிட்டு வந்துருவேன். உங்க போட்டோ எல்லாம் கூட காட்டி இருக்கேன். அதான் அவங்களுக்கு சரியா புரிஞ்சிருச்சு”, என்றான் அரவிந்த்
“என்ன கன்வீன்ஸ் பண்ணுவீங்கன்னு, நான் இங்க வருவேன்னு உங்களுக்கு முன்னமே தெரியுமா? “.
“தெரியாம என்ன?, நீ இந்த ஏஞ்சலுக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்னு எனக்கு தெரியும். ஆனா நான் உன்ன கார்னர் பண்ணல, மிஸ் யூஸ் பண்ணல. குழந்தைக்காக நாம இரண்டு பேரும் சேர்ந்து இருக்கோம். அவ்வளவுதான். ஆனா இது பொய்யோ புரட்டோ இல்ல குழந்தைக்காக சேர்ந்தவங்க உண்மையா வாழனும்னு நினைக்கும் போது உண்மையா வாழலாம்”. அவன் பேசிக்கொண்டு இருக்க. அவள் அதிர்ந்து அவனை விழி விரித்து பார்த்தாள். பேக்கர்சிலிருந்து வந்தவர்கள், நால்வர் பொருட்களுடன் நின்று கொண்டிருந்தனர்.
“வாங்க வாங்க உள்ள வாங்க இந்த வீடுதான்”, என்று அழைத்தவன். அடுத்த அரை மணி நேரத்தை அவர்கள் அடுக்குவதற்கு எடுத்துக் கொண்டனர். பாத்திரங்கள் அடுக்கிய பாக்ஸ் எல்லாம் சமையலறையை நோக்கிச் செல்ல. அவளுடைய உடைமைகள் எல்லாம் மற்றொரு அறையை நோக்கிச் சென்றது. அவள் அமைதியாக அமர்ந்திருக்க பொருட்கள் எல்லாம் ஹாலில் அடுக்கப்பட இன்னொரு அறையில் உள்ளே கட்டில் பீரோ என்று எடுத்துச் செல்லப்பட்டது. அப்பொழுது தான் பார்வையை ஊன்றி அந்த வீட்டை ஆராய்ந்தாள். அவளுடைய பிளாட்டை போல சிறியது இல்லை. மூன்று படுக்கையறை கொண்ட பெரிய பிளாட் தான் அது. கண்டிப்பாக வாடகை அதிகமாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது. அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சென்ற பிறகு. அவளை திரும்பிப் பார்த்து சிரித்தான்.
“உனக்கு அப்ஜக்ஷன் இல்லனா திங்ஸ் எல்லாம் எடுத்து வைக்கிறதுக்கு ஹெல்ப் பண்றியா? “, என்று பொறுமையாக கேட்டான்.
“வந்து, இந்த வீட்டுக்கு வாடகை எவ்வளவு? “, என்று அவள் கேட்டிருக்க. அவனுக்கு அவள் கேள்வியில் சிரிப்புதான் வந்தது.
“எதுக்கு சிரிக்கிறீங்க?, பார்க்க த்ரீ பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் மாதிரி இருக்கு. சென்னையில த்ரீ பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் எல்லாம் ரொம்ப காஸ்ட்லி. இதுக்கு பாதி பணம் நான் தரட்டுமா? “, தயக்கத்துடன் கேட்டாள் அவள்.
முதல் பாதியை கேட்கும் போது சிரித்துக் கொண்டிருந்தவன் கடைசி பாதியை முடிக்கும் போது அவளை முறைத்து பார்த்தான். ஏதோ கேள்வியைக் கேட்க அவன் உதடுகள் துடித்தது கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.
“உன் அம்மா அப்பாவோட வீட்ல இருந்தியே அங்க அவங்களுக்கு வாடகை குடுத்தியா?”.“இல்ல”, என்று கூறும்போதே காற்று உள்ளே சென்று விட்டது. அவன் எதைக் கேட்க வந்து தயங்கி மாற்றி கேட்டான் என்று ஓரளவுக்கு அவளுக்கு புரிந்தது. கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தனக்காக மாற்றி பேசுகிறான் என்று அவளுக்கு புரிந்தது.
“நான் முன்னுமே சொன்னது தான். என்கிட்ட இல்லனா எனக்கு பத்தலைன்னா கண்டிப்பா உன்கிட்ட கேக்குறேன். ஆனா இப்ப என்கிட்ட இருக்கு. போதுமா?, இனிமேல் இந்த மாதிரி கேட்காத ப்ளீஸ். நானே எனக்கு தேவைனா உன்கிட்ட கேட்பேன். எனக்கும் தேவை என்றால் கேட்கறதுக்கு உன்னை விட்டா வேற யாரும் இல்ல. அப்பா இருக்காரு பிரண்டு இருக்கான். ஆனா எல்லா உரிமையோட இப்ப நீயும் ஷாலினியும் தான் இருக்கீங்க. சரி வா உன்னோட ரூமை பார்க்கலாம். இந்த வீட்ல இதுவரைக்கும் நான் ஒண்டியா இருந்ததுனால பெருசா ஒன்னும் பொருள் வாங்கல. உன்ன போலவே ஹாலுக்கு ஒரு சோபா. நான் இருக்கிறதுக்கு பெட்ரூம்ல தேவையான திங்க்ஸ் இன்னொரு ரூம்ல கட்டில் இருக்கும். கிட்டத்தட்ட உன்கிட்ட இருக்க திங்ஸே தான் என்கிட்ட இருந்தது. புதுசா வாங்கணும்னு நினைச்சேன். பட் நீ அங்க இருந்து எடுத்துட்டு வரனால வேண்டாம்னு விட்டுட்டேன். இங்கே இருக்கிறது எல்லாத்தையும் பாரு. வேற ஏதாவது வேணும்னா கேளு. குழந்தைக்கு தொட்டில் மாதிரி ஏதாவது??, நம்ம கிட்ட காசு இருக்கு. பணத்துக்கு பிரச்சனை இல்ல. உன் புருஷன் நல்லாவே சம்பாதிக்கிறான். தாராளமா வாங்கலாம்”.
அவள் அமைதியாக தலை கவிழ்த்து இருப்பது, எதனால் என்று அவனுக்கு தெரிந்தது.
“சாரி எனக்கு கொஞ்சம் கோபம் வரும் தான். ஆனா உன்னையும் ஷாலினியையும் பார்த்தா அது மட்டு பட்டுடுது. நீ உனக்கு திங்ஸ் வேணும்னு கேக்குறியோ இல்லையோ, தயவு செஞ்சு குழந்தைக்கு வேணும்னாவது என்கிட்ட கேளு. நான் இதை கடமைக்காக சொல்லல. நீ குழந்தைக்கு நிறைய பண்ணி இருக்க. ஆனா நான் இன்னும் என் குழந்தைக்கு எதுவும் பண்ணல”, கலக்கமாக ஒலித்தது அவன் குரல்.அவன் தங்கை குழந்தை என்று கூறாமல் தன் குழந்தை என்று கூறிக்கொண்டே இருந்தான். அது அவளுக்கு புரிந்தது. இனிமேல் தானும் அப்படித்தான் கூறவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அவன் ஏக்கத்தோடு கேட்கிறான் என்று அவளுக்கு புரிந்தது. எழுந்து கொண்டவள்.
“கண்டிப்பா கேட்கிறேன்”, என்று கூறினாள். அதில் அவன் முகம் தெளிவுற்றது. அவளை அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றான். துணிகளை தானே அடுக்கிக் கொள்கிறேன் என்று மாலினி சொல்லி விட. அவன் அங்கிருந்து சென்று விட்டான்.அவள் அதை முடித்து விட்டு வரும்போது. பாத்திரங்கள் எல்லாம் சமையலறையில் நேர்த்தியாக அடுக்கப்பட்டு இருந்தது. இது ஆண்கள் செய்யும் வேலை இது பெண்கள் செய்யும் வேலை என்று யோசிக்காமல் செய்யும் அவனை ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தாள் மாலினி.
வீட்டில் அவர்களுடைய தந்தை தம்பி என்று யாரும் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். பெண்கள் எல்லாம் இந்த வேலை செய்வதற்கென்றே பிறந்தது போலத்தான் நடந்து கொள்வார்கள். அதற்கு மேல் அவளுக்கு கிடைத்த கணவன் எதிலும் எல்லாவற்றிலும் குறை சொல்லும் ரகம். அவன் குறை சொல்லாத விஷயமே இல்லை என்று சொல்லலாம். படுக்கையறையில் கூட குறை சொல்பவன் தான் அவன். அவன் எதிர்பார்ப்புகளை ஒரு சராசரி பெண்ணால் நிவர்த்தி செய்ய முடியாது என்று தோன்றியது அவளுக்கு. ஒருவேளை அவனுடைய தாய் அவனை குறை பிரசவத்தில் பெத்தெடுத்து இருப்பார் போல என்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறாள். திருப்தி என்ற ஒன்று எதிலுமே அவனுக்கு கிட்டாது போலும். அவன் வீட்டில் அவன் சொன்னது தான் சட்டம். அது நடந்தே ஆக வேண்டும் அவன் தாய் தந்தை உட்பட அனைவரும் அதைக் கேட்டே பழகி விட்டிருந்தனர். அப்பொழுது இவளுக்கும் வேறு வழி இல்லாமல் தான் போனது. ஆண் நண்பர்கள் என்று பெரிதாக அவளுக்கு இருந்ததில்லை. அதனால் மற்ற ஆண்களைப் பற்றி அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. .
முதல் முறையாக இப்படி ஒரு ஆணை வித்யாசமாக பார்க்கிறாள் மாலினி.
Interesting😍
Interesting kandipa malini sikram aravind ah purinjipa sikram sernthu vazhvanga
Aravindh mela malini ku konjam konjam ah nambikai vara aarambikkuthu