Skip to content
Home » தேவதையாக வந்தவளே 27

தேவதையாக வந்தவளே 27

தேவதை 27

ஒருவேளை நான் இதை செய்திருப்பேன் என்று இவளுக்கு தன் மீது சந்தேகமே வரவில்லையா??.

எப்பொழுது இருந்து “இவ்வளவு நம்பிக்கை என் மீது வந்ததடி பெண்ணே??”, மனம் கவிதை பாடியது . திருடுபவன் கையில் சாவிக்கொத்தை கொடுப்பது போல, தவறு செய்தவனிடமே என்ன செய்யலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள் பேதை அவள். முன்பை விட, தவறு இப்பொழுது அவனுக்கு பூதாகரமாக தெரிந்தது.

திருமணம் ஆகிவிட்ட பிறகாவது இதை தடுத்து இருக்கலாம், எடுத்திருக்கலாம். இல்லை அவளிடம் உண்மையை கூறியிருக்கலாம், அல்லது அவளுக்கு உண்மையாகவாவது இருந்திருக்கலாம். முதலில் அவனுக்கு அப்படி தோன்றியது, ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனே தான் செல்வதற்கு வசதியாக இருக்கும் என்று நினைத்தான். வேண்டிய நேரத்தில் இருக்கும் இடத்திலிருந்து கொண்டே மனைவியும் மகளையும் தரிசிப்பது மட்டுமல்லாமல் அவர்களை கண்காணிக்கவும் முடியுமே என்று அமைதியாக இருந்து விட்டான். இதே அவளை அழைத்துக் கொண்டு ஊருக்குச் சென்று இருந்தால். அவன் இதை கண்டிப்பாக செய்திருக்க மாட்டான். ஆனால் ஏற்கனவே வைத்ததை எடுக்கவில்லை அவன். இது தவறாக தெரியவில்லை அப்போது. ஆனால் இப்பொழுது தவறாக தெரிந்தது. மனைவி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் தடுமாறினான்.

அவள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணி சந்தோஷப்படுவதா??. அல்லது தன் தவறை எண்ணி வருத்தப்படுவதா??. இப்பொழுது உண்மையை சொல்வதா அல்லது தானே பார்த்துக் கொள்கிறேன் என்பதா??. ஆனால் மீண்டும் அவளிடம் இருந்து மறைப்பது போல் அல்லவா ஆகிவிடும்??, அவர்கள் இருவர் இடையேயும் இன்னும் எதுவும் சரியாகவில்லை. எப்போதும் சந்தேக கண்கொண்டு பார்ப்பவள். சில நாட்களாக தான் சரியாக இருந்தாள். அவள் கூட்டை விட்டு வெளியில் வந்து அவனிடம் சகஜமாக சில நேரங்களில் பேச முயன்றாள். இப்பொழுது உண்மையை சொன்னால். கண்டிப்பாக கோபம் வரும். மீண்டும் தன் கூட்டுக்குள் அடங்க நினைப்பாள். இனி வாழ்க்கை முழுவதும் தன்னை நம்ப மறுப்பாள். என்ன செய்வது என்று அவன் யோசித்துக் கொண்டே இருந்தான். ஆனால் அவள் முந்தைய வாழ்க்கை தெரிந்திருந்தும் நீ செய்தது தவறு என்று அவன் மனம் அவனையே எடுத்துக் கூறிக் கொண்டிருந்தது .

“என்னங்க நான் பேசிகிட்டு இருக்கேன். நீங்க அமைதியா இருக்கீங்க?, எனக்கு கன்ஃபியூஷனா இருக்குன்னு தான் உங்களை கேட்கிறேன். எப்பவுமே ஜாக்கிரதையா தான் இருப்பேன். ஆனா இந்த வாட்டி எப்படி இதை மிஸ் பண்னேன்னு தெரியல. நாம ஸ்டெப் எடுக்காம விட்டுட்டு, நாளைக்கு யாரோட குழந்தைக்கும் ஏதாவது ஆயிடுச்சின்னா??, அந்த விஷயத்துல போலீஸ் ஸ்டேஷன் போக வேணாம்னு நான் தான் சொன்னேன். சின்ன சின்ன விஷயங்களுக்கு போக வேணாம்னு தோணுச்சு. நம்மளால ஒரு விஷயத்தை ஹேண்டில் பண்ண முடியுன்னும் போது எதுக்கு ஒவ்வொன்னையும் கொண்டு போகணும்??,, ஆனா இது அப்படி இல்ல. எனக்கு தெரியாம நான் நடத்துற கிரஷ் குள்ள கேமரா இருக்குன்னா கண்டிப்பா ஏதோ பெரிய பிரச்சனைன்னு தோணுது. ரெண்டு பசங்க கொஞ்சம் பெரிய வீட்டு பசங்க, அவங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துருமோன்னு ரொம்ப குழப்பமா இருக்குங்க“, குழப்பத்தில் அவள் பிதற்றி கொண்டே இருந்தாள்.அவன் ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டான். அவள் கரத்தைப் பிடித்தபடி கிரஷை நோக்கி அழைத்து வந்தான்.

“நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீங்க அமைதியா கூட்டிட்டு போனா என்ன அர்த்தம்? “, அவள் கேள்வி எழுப்பிக் கொண்டே பின்னோடு வந்தாள். குழந்தைகள் எல்லாம் சென்றிருக்க வேலை செய்பவர்கள் மட்டும் நின்றிருந்தனர்.

“நீங்க எல்லாம் போங்க நான் பாத்துக்குறேன்”, என்று மெல்லிய குரலில் கூறினான். அவர்களும் மாலினியை ஒரு பார்வை பார்த்தனர். அவள் பார்வையால் போகச் சொல்ல ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். அதுவரை அமைதியாக இருந்தான். பிறகு கிரஷின் உள்ளே அழைத்து வந்தான்.

“ஒரு கேமரா தான் பாத்தியா?“, என்று அரவிந்த் கேட்க. அவள் ஆமாம் என்பது போல தலையை ஆட்டினாள். ஏணியை எடுத்து வந்து இன்னொரு இடத்தில் போட்டு, மேலே ஏறி கேமராவை அவனே எடுத்தான். அப்பொழுது கூட பாவம் அவளுக்கு அவன் மீது சந்தேகம் வரவில்லை போல.

“அய்யய்யோ ரெண்டு இடத்துலயா?“, கேட்டபடி வாயை பொத்திக் கொண்டாள். அங்கிருந்த சேரில் அவள் தோள்களைப் பிடித்து அமர வைத்தான்.

“இன்னும் வேற ஏதாவது இடத்துல இருக்கான்னு பாக்கணும்”, அவள் அவசரமாக கூறினாள்..

“அவசியமில்லை இரண்டு இடத்தில் தான்”, என்றான் அவன்.“அது எப்படி சொல்ல முடியும்?“, என்று அவள் பரிதவிப்புடன் கேட்க. அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான்.

“சாரி இத நான் உன்கிட்ட சொல்லி இருக்கணும். இப்பயும், எங்க சொன்னா உனக்கு கொஞ்சம் நஞ்சம் என் மேல ஏற்பட்டிருக்க நம்பிக்கை கூட போயிடுமோன்னு பயமா இருக்கு. ஆனா வாழ்க்கைத் துணைன்னு ஆயிட்ட பிறகு மறைக்க கூடாதுன்னும் தோணுது. தப்போ ரைட்டோ நான் பண்ணது உனக்கு தெரிஞ்சி இருக்கணும்”. அவன் பேசிக் கொண்டே இருக்க. அவள் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

“கல்யாணமான பிறகு எடுத்து இருக்கணும். உங்களோட பாதுகாப்புக்கும் சேஃப்டிக்கும் இருக்கட்டும்னு நினைச்சேன். வேலை நேரத்தில் உங்கள பாக்கணும்னு ஆசைப்பட்டா பாக்கலாம்னு நினைச்சேன். மத்தபடி வேற எந்த விஷயத்துக்காகவும் இல்லை”, இந்த வார்த்தைகளில் அவளுக்கு அவன் எதை சொல்ல வருகிறான் என்று புரிந்தது. மீண்டும் தன் கையை வாயிற்கு கொண்டு சென்றாள்.

“சாரி மாலினி. ஆரம்பத்துல நான் உன்ன தப்பா நினைச்சேன். ஆனா குழந்தைக்கு உன் கிட்ட ரொம்ப அஃபெக்ஷன் அதிகமா இருந்தது. பிரிக்கணுமான்னு யோசிச்சேன்??. உங்க ரெண்டு பேரோட பாண்டிங் எந்த அளவுக்கு இருக்கு உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தா உடனே உதவி செய்வதற்காக நான் தான், நான் தான் இந்த கேமராவை பிக்ஸ் பண்ணேன்”. அவன் வாயாலேயே ஒத்துக்கொண்ட பிறகு அவள் கண்கள் இன்னும் அகல விரிந்தது. கண்கள் நீரே வெளியேற்ற தயாராகவும் இருந்தது.

“கல்யாணம் ஆன பிறகு எடுத்து இருக்கலாம், அந்த எண்ணம் வந்துச்சு. ஆனாலும் அப்பையும் இதே காரணங்கள் இருந்தது. உங்கள ஃபாலோ பண்ண அந்த சிக்ஸ் மன்த்ஸ்னா நிறைய பார்த்தேன். உங்களுக்கு இருக்கிற அட்டாச்மென்ட் மட்டும் இல்ல உனக்கு ஏற்படுற பிரச்சனை அதனை ஹேண்டில் பண்ற விதம். உங்க ரெண்டு பேரோட அன்பு., பாண்டிங் எல்லாத்தையும் பாத்து தெரிஞ்சுகிட்டேன். இங்கே இருக்கிறது என்று முடிவான பிறகு. உங்களோட பாதுகாப்புக்காக இருக்கட்டும்னு விட்டுட்டேன். பட் தப்பு தான். அட்லீஸ்ட் உன்கிட்ட இதை பத்தி சொல்லி இருக்கணும். இப்பயும் சொல்லலனா “, என்று அவர் பேசிக்கொண்டு இருக்க. அவள் எழுந்து நின்று விட்டாள்.

“சாரி மாலினி நான் வேணுன்னு எதுவும் பண்ணல. ஆரம்பத்துல சந்தேகப்பட்டு தான் வச்சேன். ஆனா இப்ப இல்ல. இன்பாக்ட் அந்த சந்தேகம் கிளியர் ஆனது இந்த கேமராவனால தான்”, அவள் நடந்து வெளியே செல்ல போக. அவள் கரத்தை பிடித்து தடுத்து நிறுத்தி இருந்தான்.

“ப்ளீஸ் கைய விடுங்க“, என்றாள்.“எதுவுமே சொல்லாம போற. அட்லீஸ்ட் கோபமாவது படு? “.“

“கைய விடுங்கன்னு சொன்னேன்”, அழுத்தமாக உச்சரித்தாள் மாலினி. கையை விட்டு நொடி ஹாண்ட் பேக்கை எடுத்தவள். குழந்தையையுடன் வேகமாக அந்த இடத்தை விட்டு சென்றாள். அவன் அவசரமாக அவளை பின்தொடர அவள் மெயின் ரோட்டிற்கு வந்து ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறியும் விட்டாள்.

“ஷிட்”, என்றபடி நெற்றியிலேயே அடித்துக் கொண்டான். எவ்வளவு நல்லவளோ, அதே அளவு அழுத்தமும் கோபம் இருப்பது அவனுக்கு தெரியும். ஆனால் அவளின் கோபங்கள் நியாயமானதாகவே இருக்கும். இப்பொழுதும் அவளுடைய கோபம் நியாயமானது தான். ஆனால் எங்கே செல்கிறாள் என்று தெரியாமல் மனம் பரிதவித்தது. வேகமாக ஓடினான். கிரஷை பூட்டிக்கொண்டு தன் காரையும் எடுத்திருந்தான். அதற்குள் ஆட்டோ அவன் கண்ணை விட்டு மறைந்திருந்தது. ஆனால் ஆட்டோவின் நம்பரை கவனித்திருந்தான். குறுக்குச் சாலையில் இருந்து நேர்ச்சாலைக்கு வந்து வாகனத்தை வேகம் எடுத்தான். சற்று தொலைவில் ஆட்டோ செல்வதையும் பார்த்து விட்டான். பின் தொடர்ந்தான். நல்ல வேலையாக அது அவர்கள் அப்பார்ட்மெண்ட்டை நோக்கி தான் சென்றது. மனதினுள்ளே ஒரு ஆசுவாச பெருமூச்சு.

“வீட்ல போய் கால்லையாவது விழுந்திடு அரவிந்தா??, ஐயோ, ஒருவேளை வீட்டுக்கு பெட்டி படுக்கையை கட்ட தான் போராளோ?? “ என்று இன்னொரு மனம் அவனை பயமுறுத்திக் கொண்டிருந்தது. அவன் அந்த அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்குள் நுழையும் போதே. அந்த ஆட்டோ வெளியில் சென்று கொண்டிருந்தது.அடித்துப் பிடித்து மேலே வந்தான். வாசல் கதவு திறந்திருக்க. அவள் அறை கதவு மூடி இருந்தது.

“நான் பொறுப்பா கிரஷை மூடிட்டு வந்தேன். ஆனா இவள் வீட்டைத் திறந்து போட்டுட்டு போய் இருக்காள்”, என்று அவன் மனம் கூற.

“வீட்டை அவள் சாத்தி இருந்தா நீ எங்கடா நிப்ப??, என்று இன்னொரு மனம் மனைவிக்காக எடுத்து பேசியது. அந்த அறைக்கதவை தட்டுவதற்காக கையை உயர்த்தி விட்டான். பிறகு மடக்கி கையை கீழே இறக்கியவன்.

“சாரி மாலினி இதுக்கு அப்புறம் எதையும் மறைக்க மாட்டேன்.எந்த தப்பையும் பண்ண மாட்டேன். வேணும்னா ஒரு அடி அடிச்சிடு. தயவு செஞ்சு என்னை விட்டு போயிடாத. தப்புதான்,, தப்புதான் ஒத்துக்குறேன். தெரிஞ்சு பண்ணல வேற ஒரு நோக்கத்தில் பண்ணிட்டேன். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா உன் மனசு, ஐ மீன் உன் மனசு என்ன நம்ப ஆரம்பிச்சிருக்கு. அதுக்குள்ள இதெல்லாம்.?? ஐ நோ உடனே எல்லாத்தையும் உன்னால ஏத்துக்க முடியாது. ஆனா இந்த ஒரு வாட்டி சான்ஸ் கொடு ப்ளீஸ்”, எதையெதையோ கூறி பிதற்றினான். அவளுக்கும் அது கேட்டது. ஆனால் அவளிடம் பதில் இல்லை. தலையைப் பிடித்துக் கொண்டு அந்த வரவேற்பறையை எத்தனை முறை அளந்தானோ அது அவனுக்கே தெரியாது. அவள் வீட்டை விட்டு வெளியே செல்லவும் இல்லை, அதே சமயத்தில் அறையை விட்டு வெளியே வரவும் இல்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பேசி இருந்தால் கூட அவனுக்கு மனம் ஆறி இருக்குமோ என்னவோ?? கோபப்பட்டு திட்டி இருந்தால் கூட அதை அவன் சாதாரணமாக கடந்திருப்பான். இந்த அமைதி தான் அவனைப் பாடு படுத்தியது. அவளுடைய முன் கதை தெரிந்தவனுக்கு. அவன் இப்பொழுது செய்த தவறு விஸ்வரூபமாக தெரிந்தது. கண்டிப்பாக அதையும் இதையும் அவள் ஒப்பிட்டுக் கொண்டு இருப்பாள் என்று புரிந்தது. இரவு ஒன்பது மணி நெருங்கும்போது கதவு திறந்தது. அவன் அவசரமாக சென்று நின்றான். அவள் சமையலறையை நோக்கி சென்றாள்.“சாரிமா ஒவ்வொரு வாட்டியும் ஏதாவது பேசிட்டு ஏதாவது தப்பு பண்ணிட்டு உன்கிட்ட சாரி கேட்கிறது என்னோட வேலையா போச்சு?. ஐ நோ உனக்கு இது எவ்வளவு ஹார்ட்டிங்கா இருக்கும்னு எனக்கு புரியுது. ஆனா சத்தியமா நான் இன்சிஸ்டா பண்ணல. என்ன நம்பு ப்ளீஸ். உங்களோட பாதுகாப்புக்காக தான் பண்ணேன். அன்னைக்கு அந்த தடியன் வந்து மிரட்டிட்டு போகும்போது கூட. வேக வேகமா வந்தேன். அவன் இங்க இருந்து போறதுக்குள்ள அவனை பிடிச்சிடனும் என் கையாலேயே அவனை உதைக்கணும்னு. ஆனாலும் மிஸ் பண்ணிட்டேன். இந்த ஒரு வாட்டி எக்ஸ்க்யூஸ் பண்ணு. இனிமே இந்த மாதிரி எந்த தப்பும் பண்ணாம பார்த்துக்கிறேன். என்னோட எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிடுறேன் “, அவன் பேசிக் கொண்டே அவள் பின்னோடு நடக்க. மீண்டும் அறையின் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள். அதற்கு மேல் என்ன செய்வதென்றே தெரியவில்லை. “ஊப்ப்’ என்று காற்றை வெளியேற்றியபடி அந்த அறையின் வாசலிலேயே மடிந்து அமர்ந்து விட்டான்.……. அறையின் உள்ளே இருந்தவள். முதலில் அழுது தீர்த்தாள். அவளுடைய முன் கதை இப்பொழுது என்று எல்லாம் ஒன்று சேர்ந்து அவளை இம்சித்தது. தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள கண்களை இறுக மூடினாள். அவளுடைய கரம் தானாக குழந்தையை வருடிக் கொண்டே இருந்தது. அவளின் துக்கம் அறிந்து என்னவோ மகளும் அவள் மடியிலேயே சாய்ந்து அமைதியாக உறங்க ஆரம்பித்தாள். ஆயிரம் கனவுகளுடன் எல்லா பெண்களைப் போல அவள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவில்லை. கல்லூரி முடிந்து கேம்பஸ் செலக்ட்டாகி பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள். ஆனால் அடுத்த ஆறு மாதத்தில் தந்தை அவளுக்கான திருமண வரனை கொண்டு வந்து நிறுத்தினார். சில பெண்களைப் போல அவளுடைய கற்பனை கோட்டை மிக அதிகம். நன்றாக சம்பாதித்து தன் நிலையில் தான் நிற்க வேண்டும் என்று நினைத்தாள். பெற்றோர்களை தூக்கிப்பிடித்து நிறுத்த வேண்டிய அவசியம் அவளுக்கு இருந்திருக்கவில்லை. ஆனால் அவள் நிலையை உயர்த்தி கொள்ள வேண்டிய அவசியம் அவளுக்கு இருந்தது. ஆனால் அதை அவளுடைய தந்தையும் புரிந்து கொள்ளவில்லை. துணையாக வந்தவனும் புரிந்து கொள்ளவில்லை. அவளுடைய கடந்த காலம் அவளை இம்சிக்க ஆரம்பித்தது.

6 thoughts on “தேவதையாக வந்தவளே 27”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *