பௌவம்-1
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
ஞாயிறு பட்டினப்பாக்கம் மீன் சந்தையின் கூட்டம் களைக்கட்டியது.
கடற்வாழ்வு உணவு வகைகளான மீன், நண்டு, இறால் என்று ரக வாரியாகப் பிரிக்கப்பட்டுச் சிலர் கிலோ கணக்கிலும், சிலர் கூறு கட்டியும் கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தனர்.
தற்போது தான் படகிலிருந்து மீன்கள் வந்திருக்க வேண்டும். சில மீன்கள் இன்னமும் உயிரோடு நெளிந்து கொண்டிருந்தது.
இருசக்கர வாகனத்திலும், மகிழுந்திலிருந்தும் மக்கள் கடல் வாழ் உயிரினத்தைச் சமைப்பதற்காக வாங்க வந்திருந்தனர். வளைந்து நெளிந்து தன்னிருப்பிடமான கடலிலிருந்து வந்த மீன்களை உயிரோடு காண தன் வீட்டு பிள்ளைகளையும் பார்க்க அழைத்து வந்திருந்தனர் சில பெற்றோர்கள்.
குழந்தைகளுக்கென தாரளமாகவே போட்டு கொடுத்து அவர்களின் புன்னகையைப் பார்த்து இரசித்தான் குரு.
அவன் கையசைத்து முறுவலித்து அனுப்ப தூரத்தில் அவன் விரும்பிய ரதிதேவி இவன் பக்கம் தான் வந்து கொண்டிருந்தாள்.
எத்தனை நாள் பார்க்க துடித்தவளின் முகம். இன்று பார்க்க முடிந்தது. ஆனால் ஏதோ மனம் அழுத்த அவள் தன் கடையைக் கடக்கும் நேரம் தலையைக் குனிந்து கொண்டான்.
கையில் ஏற்கனவே மீனை வாங்கி வந்து கொண்டிருந்த ரதிக்குத் தன்னை யாரோ உறுத்தும் பார்வை பார்க்க கண்டு கண்களைச் சுழலவிட்டாள். தான் திரும்ப உடனே தலைகவிழும் அவனைக் கண்டதும் ரதியின் நடை அப்படியே நின்றது.
இந்த முகத்தைத் தானே மறக்க கடினப்பட்டு முயன்றாள். முயன்றதும் இன்று பார்த்த பின் கடக்க இயலாது கால்கள் அப்படியே நிற்பது என்றால் இன்னமும் இதயத்தில் ஓட்டிக் கொண்டுள்ளதா இம்முகம் என்ற சினமே வந்தது.
குருவை நெஞ்சு விம்ம முறைத்து கொண்டிருந்தவளின் பார்வையில், குருவை தேடி வந்த மஹாவை கண்டும் இன்னமும் கொதிநிலைக்குச் சென்றாள்.
“எத்தனை தபா சொல்றது குரு. துண்ணுட்டு அப்பறம் வேலையைப் பாருனு. இந்தா… இராவுக்கு ஆக்கின சோறுல தண்ணீ ஊத்தி தயிர் கலந்து வச்சியிருக்கேன். தொட்டுக்கக் கருவாடு மட்டும் வறுத்துக் கொண்டாந்தேன். பிடி” என்று நீட்ட அதனை வாங்காமல் தன் பேச்சை செவியில் ஏற்றாமல், விழியை ஒரு திசைக்குச் செலுத்தியிருந்தவனைத் தோளில் அடித்து, அவன் பார்க்கும் பக்கம் திரும்பினாள்.
“ர…ரதி.” என்று மஹா உதடு தானாக உச்சரித்தது.
ரதியோ மஹா மற்றும் குருவை கண்டு கண்கள் அடைப்பெடுக்க, அக்கடையருகே வந்தவள், “இவ தான் வாழ்வுனு சொல்லி விலகியிருந்தா நான் உன்னை நினைச்சி கஷ்டப்பட்டுயிருக்க மாட்டேன்ல. சே… என்ன ஜென்மம் டா நீ… ஏன் மஹா அவனும் நீயும் விரும்பினா நான் ஒதுங்கியிருப்பேன்ல. என்னை ஏன் நடுவுல சுத்த விட்டிங்க.
இந்த நிறம் சதை இதெல்லாம் அவனுக்குப் போதையா இருக்கலாம். உனக்கென்ன.? உனக்குப் போட்டி நான் என்பதை நேரிடையா சொன்னா விலகி போயிட்டே இருந்திருப்பேனே. என்னோட சேர்ந்து தேடி, அவன் எவளோடவோ ஓடிட்டான் எனனிடமே பேசினியே… நீ தான் அந்த ஓடுகாலியா…?” என்று கேட்க மஹா பதிலளிக்க முடியாமல் குருவை பார்த்து வைத்தாள்.
அவனோ, “இப்ப இன்னாங்கிற… நாசுக்கா சொன்னது… உனக்குப் புரியலை. கைபடக்கூடாது கால் படக்கூடாதுனு பேசினா… அதான். சீ தூ கழுதைனு தலை முழ்கிட்டேன்.
இப்ப இன்னா… உனக்கு நல்ல வாழ்கை தானே. மெய்யலுமே உனக்கு ஆபர் தான். காருல வந்து மீனு வாங்கற. போடி…” என்றான் குரு.
தன்னிடம் ரதிம்மா தேவிம்மா என்று மாற்றி மாற்றிக் கொஞ்சி பேசி கெஞ்சல் புரிந்தவனின் பேச்சா இது என்று மங்கையவள் மனமுடைந்தாள்.
“ரதி… எவ்ளோ வாங்குவ வஞ்சிர மீன், நண்டு, இறால்னு இதுக்கு மேல என்ன. உங்கப்பா விருந்துன்ற பேர்ல என்னை யானை சைஸ்க்கு ஆக்காம விடமாட்டார்.” என்று ரதி கணவன் இவர்கள் பேசுவது அறியாமல் இழுத்து செல்ல, குரு அவன் பற்றிய கைகளையும் ரதியையும் மாறி மாறி பார்த்தான்.
இது போலத் தானே வாழ எண்ணியது. ஆனால் பற்றும் கைகள் வேறொரு ஆடவன். இல்லை… இல்லை… இன்று அவளைப் பொறுத்தவரை நான் தான் வேற்று ஆள்’ என்றவன் பெருமூச்சை விடவும் மஹா அவனின் புஜத்தை தட்டி நிகழ்வுக்குக் கொண்டு வந்தாள்.
“போதும் டா. அத்தையே பார்த்தது. இப்படி மனசு நோக பார்த்து இன்ன பிரோஜனம். எத்தினி தப்பா உன்னை விசாரிக்க வந்தது தெரியுமா? எனக்கு இப்ப மன்சே செரியில்லை. எத்தாந்த பழைய கஞ்சு வேஸ்டா. நாயிக்கு தான் ஊத்தணும்.” என்று எடுக்கப் போனவளை தடுத்தான் குரு.
“இன்னாத்துக்குச் சோறு துன்ன மாட்டேன்னு நீயா முடிவு பண்ணிப்பியா. இந்தச் சோறு கிடைக்காம நாலு சுவத்துல வயிறு ஒட்டி தவிச்சது எனக்குத் தான் தெரியும். கொண்டா… நான் எதுக்கு டி கவலைப்படனும். அவ நல்லா தான் இருக்கா. கார்ல வந்து இறங்குறா. வஞ்சிரம் மீனை கிலோ கணக்கில வாங்கிட்டு போறா. அவ புருஷன் பேசியது கேட்டுச்சா. தினம் தினம் விருந்து தானாம். என்னோட வாழ்ந்தா கூட, அவ என் வீட்ல புடவைக்கட்ட கஷ்டப்பட்டுக்கிட்டுக் கண்ணைக் கசக்கிட்டு இருந்திருப்பா. இப்ப நல்லா தான் இருப்பா. எனக்கு இது போதும் மஹா.” என்று மஹாவை வியாபாரம் பார்க்க உட்கார வைத்து குடைக்கு இந்தப் பக்கம், இடது கையில் கருவாட்டைக் கையிலெடுத்து வலது கையில் அள்ளிய சோற்றுக்கு ஒரு கடி கடித்து உண்ண ஆரம்பித்தான்.
கடைக்கு இறாவை கூறுகட்டி கேட்டவருக்குப் பையில் போட்டுப் பணத்தை வாங்கிப் போட்டவள். “குரு என்ன இருந்தாலும் அந்தப் பொண்ணு உன்னை விரும்புச்சிடா. நீயும் தானே கலர் கலர் சொக்கா போட்டுக்கிட்டு அதைப் பார்க்க போன. நீயும் அதுவும் அதோ அந்தக் காந்தி சிலைக்குப் பின்னாடி முத்தம் கொடுக்க அந்தப் பொண்ணை நெருங்கிட்டு நின்ன. பார்த்த எனக்கு இன்னும் கண்ணுல கீது டா. அது உன்னோட வாழ எத்தனை முறை வந்து தேடுச்சு. கடைசியா அது கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்ன கூட வந்துச்சு டா. நீ இன்ன இத்துணுன்டு பீலிங் கூட இல்லாம துண்ணற. சோறு தொண்டையில் இறங்குதா உனக்கு.” என்று சென்னை பாஷையில் சோககீதம் வாசித்தாள்.
“ஏய் இன்னா நீ. என்னவோ நீ பீலாகுற. அதெல்லாம் உள்ள கடக்கு. இன்னா பண்ண சொல்லற அத்தையே நினைச்சிண்டு இருந்தா இராவுக்கு வயித்துல ஈரத்துண்டு தான் கட்டிக்கணும். அந்தம்மா கேட்கற மீனை வாறிபோட்டு காசு வாங்கு.” என்று எழுந்தான்.
கையைக் கழுவி வாயை கொப்பளித்து நீரை மடக்மடகெனக் குடித்தவன் தன் வேதனையையும் விழுங்கினான்.
ரதியோ காரில் ஏறியதும் மனதிலும் பாரம் ஏறிய உணர்வோடு கார் சீட்டில் சாய்ந்தமர்ந்தாள்.
“வாட் ஹாப்பென் ரதி…?” என்றான் பிரேம்.
“நத்திங்… ஜஸ்ட் ஹெட்ஹாக்” என்றாள்.
மீன் கவர் கையில் வைத்திருந்தமையால் தலையைப் பிடித்துக் கீழ்யிறக்க அதன் மணம் அவளை வாட்டியது.
அடிவயிற்றிலிருந்து குமட்டல் உருவாகி ஒவ்வாமை தந்தது.
இரண்டு மூன்று முறை குமட்டலில் வாந்தி உணர்வு வந்ததே தவிரக் குமட்டிடவில்லை.
“என்னாச்சு ரதி இந்தா தண்ணீர் குடி” என்று நீட்டினான்.
“வீட்ல இருந்திருக்கலாம். காலையில பத்து மணி வெயில் என்னவோ பன்னிரெண்டு மாதிரி பல்லை காட்டுது.” என்று ஏசியை ஆன் செய்து அவளை ஆசுவசப்படுத்தினான்.
காரிலிருந்த எப்.எம்.யை தட்டி விட்டவன் அதில் ‘உனக்கென இருப்பேன்…. உயிரையும் தருவேன்…’ என்று பாடல் கேட்டுக் கொண்டிருக்கத் தன் காதை அடைத்துக் கொண்டு, “ப்ளிஸ் சாங்க ஆப் பண்ணுங்க. இட்ஸ் இரிடேட்டிங்” என்றாள்.
பிரேமும் ஆப் செய்து வண்டியை செலுத்தினான்.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Super epi👍
Oh…super going