Skip to content
Home » நதி தேடும் பெளவம்-3

நதி தேடும் பெளவம்-3

பௌவம்-3

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

அதிகாலை சூரியன் வருவதற்குள் எழுந்து பல் விலக்கி முகம் கழுவி எங்கோ கிளம்பிக்கொண்டிருந்த குருவை ரேகா விசித்திரமாகப் பார்த்தார். ஒரு வேளை நேற்று வேலைக்குப் போனு சொன்னதால் ரோஷம் வந்து வேலை தேடப்போறானா.. மனதில் உதித்ததைக் கேட்டு தொலைத்தார்.

“ஏன்டா… வேலைக்குப் போகப் போறியா இன்னா?” என்று தாடையில் கை வைத்து கேட்டார்.

“செத்துப்போன எங்கப்பன் கடலுக்கு நடுவுல பெரிய கம்பெனி வச்சியிருக்கான் போறேதுக்கு,  அட போமா… நான் வாக்கிங் போகப் போறேன்.” என்று வார் கொண்ட செருப்பை மாட்டினான்.

“அதானே சூரியன் திசை மாறி உதிச்சிடுமா.” என்று படுக்கப் போனவர், அது என்ன வாக்கிங் எந்தவூர்? இராவுக்கி வந்துடுவல. தனியா என்னால இருக்க முடியாது டா.” என்று ரேகா சொல்ல தலையிலடித்துக் கிளம்பியிருந்தான்.

இரண்டு தினமாகச் சந்தித்த இடத்தில் ரதிக்காகக் காத்திருந்தான்.

அங்கே சற்றுப் பக்கத்தில் இவனைப் போலவே சோம்பல் முறித்த நாயை கண்டு அவளைக் காணாத கடுப்பில் அதனைத் எட்டி மிதித்து துரத்திவிட்டான்.

அன்று ஒரு நாள் அவங்க அப்ப என்னைத் தான் தேடினாரு என்ற இடத்துல வண்டியை பார்வையிட்டவாறு மீண்டும் கொட்டாவி விட்டான். குருவுக்கு மணி பத்துக்கு மேல் தான் விடியும். அலாரம் அடித்து எழுந்தவனால் அடிக்கடி உறக்க நிலைக்குத் தான் தள்ளியது.

அங்கிருந்த பெஞ்சில் உறங்க சாய்ந்தான்.

சற்று நேரத்தில் சின்னதாய் கண் அசந்த பிறகே திடுக்கென எழுந்து அமர்ந்து இடங்களைச் சுற்றி பார்வையிட்டான்.

அவளின் ஸ்கூட்டி அங்கே நின்றிருந்தது. ‘இட்ஸ் மை டேடி கிப்ட்’ என்ற வாசகம் பொருந்தி அதன் அருகே ஒர் பட்டாம்பூச்சி ஸ்டிக்கர் ஒட்டியதை கண்டதும் கண்களை நாலாப் பக்கம் கண்டு ஸ்கேனர் செய்தான்.

பச் அவவந்தப்ப தூங்கிட்டேனே.. எங்க போயிருப்பா… நடந்து போய்ப் பார்ப்போமா என்று சிந்தித்தவன். இவன் ஒரு பக்கம் போக அவள் ஒரு பக்கத்திலிருந்து வந்து கிளம்பி விட்டாள்? எதற்கு அவஸ்தை என்று காத்திருந்தான்.

வாய் நமநமவென்று இருக்கவும் தன் பேக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைக்கும் நேரம் தன்னை யாரோ முதுகில் தட்டவும் சிகரெட் கீழே விழுந்தது. ‘யார் டா இது.’ என்பது போலச் சலித்துத் திரும்ப, “ஹாய் உங்களை எதிர்பார்க்கலை. என்ன வாக்கிங்கா.” என்றாள் ரதிதேவி. சிகரெட்டை காலால் மறைத்தவன் “ஆமாங்க” என்றான் குரு.

“அப்..அப்பா வரலையாங்க” என்றான்.

ஒரு இடத்தில் எட்டு வடிவத்தில் மக்கள் நடமாட அங்கே சுட்டி காட்டி “அங்க நடந்துட்டு இருக்கார். தெரிந்த முகமா இருக்கேனு வந்தேன். நீங்க தான். வெல்… பேசிட்டே நடக்கலாமா…?” என்று கேட்டதும். தலையை மெல்ல அவனறியாது அசைத்துத் தொலைத்தான்.

அவள் நடையிட குருவோ சிகரெட் துண்டை ஏக்கமாகப் பார்த்து கூடவே நடந்தான்.

“என்ன படிச்சிருக்கிங்க?” என்றதற்கு, “அப்பா இல்லைங்க. அம்மா மட்டும் தான். அதனால பன்னிரெண்டோட நிப்பாட்டிட்டாங்க.” என்றான்.

ரதிதேவி கொஞ்சநேரம் அமைதியாக நடந்தாள். குருவுமே அமைதியாக இருந்தான்.

“நீ…நீங்கங்க?” என்றான் குரு.

“Msc 1st year.” என்றதும் குருவுக்கு என்னவோ போலானது. பேச்சுலர் டிகிரி விட மாஸ்டர் டிகிரி என்றளவு அறிந்ததன் விளைவோ என்னவோ, தன் லெவலுக்கு இவள் எட்டாக்கனி என்ற முடிவும் வந்தது.

அங்கே காலையிலேயே ஒர் இடத்தில் இரத்தழுத்தம் மற்றும் சின்னதாகச் செக்கப் செய்யத் துவங்க இவர்களைக் கண்டு அழைத்தனர்.

“வாங்க சார் ஜஸ்ட் எங்க பிராஜக்ட். இத்தனை பேரிடம் நாங்க செக்கப் செய்தோம்னு கணக்கு காட்டணும். அவ்ளோ தான். பிளட் பிரஷர் நார்மல் செக்கப்” என்று அழைக்க, ரதி சென்று முன்னமர்ந்தாள்.

பிரஷர் பார்க்க, கண்ணுக்கு எழுத்து தெரிகிறதா, உயரம், எடை, இதய ஓட்டம் என்று பார்த்து பெயர், வயது, மற்றும் செல் நம்பர் என்று கேட்க கொடுத்தாள்.

அதே போலக் குரு முறை வரவும் இரத்தழுத்தம் சற்றே கூடக் காட்டியது. அது ரதிக்கு தனது படிப்பறிந்ததால் என்ற அச்சமே.

மேலும் உயரம் எடை இதய ஓட்டமும் பார்க்க இதயம் அதிகமாகத் துடித்தது.

அடிக்கடி ரதியை தான் பார்த்தான்.

அவளோ அவன் செல் நம்பர் கூற அவளுமே பதிவதை கண்டான்.

“என்னங்க…. நானும் நம்பரை சேவ் பண்ணிக்கவா.” என்று அவளிடம் கேட்டான். ரதிதேவியோ தோளைக் குலுக்கி சம்மதமாகக் கூறினாள்.

“நைஸ் மீட்டிங் யூ. பை குரு” என்று தந்தையிருக்குமிடம் நடந்தாள்.

குருவோ அதற்கு மேல் அங்கே நின்று ரதியை சைட் அடிக்கக் கூடத் தயங்கி வீட்டுக்கு நடைப்போட்டான்.

“இன்னாடா வேலை கிடச்சுதா.” என்று கேட்க, “வேலை.. வேலை… வேலை… ஏன் என் ஒருத்தனுக்குப் பழைய கஞ்சி தானே கொடுக்கற. அதையே கடைசிவரை போடு. போதும். சும்மா வேலையைப் பத்தி பேசாதே. படிக்க வச்சியா நீயு” என்று எரிந்து விழுந்தான் அன்னை ரேகாவிடம். சட்டையைக் கழட்டி துரும்பேறியே கட்டிலில் வீசினான்.

“உங்கப்பன் இருபது வயசுல உன்னைக் கொடுத்துட்டு படகுல போய் சம்பாரித்து தருவார். மனுசனுக்கு கிட்னி பெயிலர் செத்துட்டாரு. ஒத்த ஆளா வீட்டு வேலை செய்து உன்னைப் பன்னன்டாவது வரை படிக்க வச்சேன். ஏன் துரைக்கு மீன் பிடிக்கப் போறது தானே. கூட்டாளி கூட போட்ல போனா கூட ஏதோ காசு பார்க்கலாம். நீ இன்னா பண்ணற. நாலு நாள் மெக்கானிக் கடைக்குப் போற, நாலு நாள் சும்மாவே ஊரை சுத்தற.” என்று கலங்கிய கண்ணீரோடு புலம்ப ஆரம்பித்தார்.

“சும்மா கத்தாதே. எப்ப பாரு இதே சொல்லு.” என்று கத்தியவனின் குரலை அங்கே இரண்டு வீடு தள்ளியிருந்த மஹா குளிக்குமிடம் வரை கேட்டது.

அவளின் வீடும் ஒரு அறை கொண்டது தான். என்ன கூடுதலாகக் குளியலறை வீட்டுக்குள்ளே கட்டி முடித்திருப்பார் அவளின் தந்தை ஜனகராஜ்.

மஹா நல்ல முகலட்சணம் வயசு பிள்ளை பொதுக் கழிப்பிடத்தில் குளிக்க வைக்க அச்சம். அதனாலே இடம் பற்றாது என்றாலும் ஒதுக்கி கட்டி முடித்தார். தாயற்ற பெண்… ஒரளவு சும்மா இல்லாமல் ஏதேனும் வாழ்வாதரமாகப் பணம் ஈட்ட சிறுத்தொழில் அவள் இறங்க, அவளுக்கு வரப்போகும் கணவன் எப்படிப்பட்டடவனோ எல்லாம் பழகட்டும் தானாகச் சம்பாரிக்கக் கற்றுக் கொடுத்தார்.

காலையில் மீன் கூடை மூன்றை மொத்தமாக விலைப்பேசி வாங்கி விற்று முடிப்பாள். மாலை சுண்டல் மாங்காய் விற்பாள். இடைப்பட்ட நேரத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் பாத்திரம் தேய்த்து வீடு பெருக்கி, துடைத்து, மெஷினில் போடாத துணிவகைகளைக் கையில் துவைத்து கொடுத்து மாதச் சம்பளமாகப் பணம் ஈட்டுவாள்.

இதில் ஐந்து வருடம் அனுபவம். ஓட்டு வீடென்றாலும் மனதில் குறையின்றி வாழும் இளவரசி மஹா. என்ன இந்தக் குருவை பக்கத்திலே இருந்து பார்த்து வளர்ந்ததாலே என்ன இழவோ காதலிக்கத் துவங்கிவிட்டாள்.

அமரக்காதல் என்று உருகி பணியைக் கெடுத்து கொள்ளவில்லை. ஏதோ அவனிடம் தன் விருப்பத்தைக் கூறியாயிற்று. ரேகாவிடம் அவள் பழகும் முறை அந்தத் தெருவுக்கே புரியும். என்ன குரு மீது அவளுக்கு ஒரு கண் என்று ஜாடை பேசுவார்கள்.

மொண்டு மொண்டு குளித்தவள் அவனின் பேச்சில் அவசரமாகத் தாவனி சொறுகி வந்தாள்.

இரண்டு பின்னலை வேகமாகப் போட்டுக் கையில் இருந்த பான்ட்ஸ் பவுடரை இருகையிலும் தேய்த்து முகத்தில் பூசி பொட்டு வைத்து வெளியே வந்தாள்.

ரேகா இன்னமும் கத்தி புலம்பி தள்ள, குரு வேகமாகச் சட்டையை மாட்டி வெளியேறவும் அவன் பின்னாடியே போனாள்.

கூட்டாளி குமாரின் படகு பின் வந்தமர்ந்தவன் சிகரட்டை எடுத்து பற்ற வைக்க, “புத்தியை பாரு தூ….” என்ற சத்தத்தில் சிகரட்டை இம்முறையும் தவறவிட்டான். ஆனால் ரதிதேவி முன் எடுக்காமல் நல்லவனாகக் காட்டிய அவன் மனம். இவளை கண்டு இயல்பாய் சிகரட்டை எடுத்து பற்ற வைத்தான்.

“அங்க உங்கம்மா நாயி மாதிரி கத்துது. நீ ஜாலியா இத்த இழுக்க இங்க வந்துட்ட, இன்னயா சொல்லிச்சு அது. வேலைக்குத் தானே போகச் சொல்லுது. ஏன் சாரு சட்டையில அழுக்கு படாத வேலைக்கு வெயிட் பண்ணுறிங்களோ” சீறினாள் மஹா .

“இதப்பாரு… இருக்கற கஷ்டத்துல செவுலியே நாலரை விடுவேன். போடி. என் பின்னாடி அலையற.” என்று கத்தினான்.

“நீ பெரிய மன்மதன் உன் பின்னாடி அலையறேன். போவியா… எனக்கு எங்க அப்பா மாப்பிள்ளை பார்க்கற வரை வருவேன். நீ ஓகே சொன்னா கட்டிக்கலாம். இல்லையா… எவனுக்கு என்னைக் கட்டிக்க அதிர்ஷ்டமோனு போயிட்டே இருப்பேன்.

அத்த வுடு. எதுக்குச் சிடுசிடுனு இருக்க. வேலை தான் பிரச்சனைனா என் கை காசு கொஞ்சம் இருக்கு. தர்றேன்… தண்ணிர் கேனு போட்டு” என்றதற்குள் “நிறுத்தறியா…. பெரிய கம்பெனி வச்சி தர்ற மாதிரி. தண்ணீர் கேன் போட என்கு தெரியாது. மனசு செரியில்லை.” என்றான்.

“குரு…. எந்தப் பொண்ணு டா… நம்ம பானுவா… இல்லை அந்தச் சர்ச்சுக்கு போவாளே எஸ்தர் அவளா…?” என்று இதயத்தைப் பிடித்து நொந்து கேட்டாள்.

“ரதிதேவி.” என்றான் குரு.

“யாரு இது?” என்றாள் புரியாமல்.

“அதான் அன்னிக்கு சுண்டல் விற்றப்ப பார்த்தியே.” என்றான் சோகத்துடன்.

“ஏலேய்… சைட் தானே அடிச்ச… காதலிக்கறியா… ஆமா.. அந்தப் பிள்ளை?” என்றாள்.

“கா.. காதல்.. இல்லை… அது… இல்லை சைட் தான் அடிச்சேன். இப்ப காலையில படிப்பை பத்தி பேசுச்சு. அது பெரிய படிப்பு படிக்குது. என்னை என்னமோ நினைச்சி இருந்துருக்கும் போல. நான் பிளஸ் டூனு சொன்னதும் மூஞ்சு டல்லாச்சு.” என்றான்.

மஹா தாடையைப் பற்றி ஆவென அவனைப் பார்த்தாள்.

“அடப்பாவி… ரொம்ப நாள் பழக்கமோ….?” என்று மஹா கேட்க முறைத்தான்.

“உன் எதிர பார்த்தேனே அதுக்கு முன்ன தான் பாத்தேன். அவ்ளோ தான். என்ன இந்தச் சினிமால காட்டற மாதிரி அவ பேசியதும் ஜீவ்வுனு இருந்துச்சு. மீன் பிரஷ்ஷா இருக்க ஐஸ் கட்டி வப்பாங்களே அப்படிக் குளுகுளுனு..” என்றதும் இம்முறை மஹா முறைத்து “என்கும் தான் உன்னைய பாத்த அப்படிகீது நீ என்ன மதிக்கிறியாயென்ன, அது மாதிரி அது உன்னைய மதிக்காது. நீ வேற வேலை வெட்டி இல்லாத பையல்.” என்றதும் குரு கோபமானான்.

“ஏய் உன்னைய யாரு இங்கன வர சொன்னா? கிளம்புடி காத்து வரட்டும்.” என்று கழுத்தை பிடித்துப் பேச, “இன்னாத்துக்குக் கழுத்தை நெறிக்கிற.. இன்னா உரிமை உன்கும் என்கும்.” என்றதும் சட்டெனக் கையை விடுவித்தான். தன் ஓட்ட பைக்கை எடுத்துச் சுற்றினான்.

இரவு வரவும் இதே அடைக்காக்கும் கோழியைப் போல வீட்டுக்கு வந்தான். சற்றே மதுவின் தள்ளாட்டத்தோடு.

குருவுக்கு இது என்றாவது ஒருநாள் பழக்கம் தான். அதற்கே ரேகா ஒப்பாரி விடுவார்.

இன்றும் அப்படிக் கத்த மஹா வந்து, “தே… அது சத்தமில்லாம தூங்குதா வுடேன். நீ வைக்கிற ஒப்பாரி தான் இந்தக் கடல் சத்தத்தோட அதிகமா கீது. துண்ணுட்டு தூங்கு. இங்க காவாலி பசங்க சரக்கடிக்கானுங்க. நீ உன் பிள்ளைய கத்தி அந்த லிஸ்டுல சேக்காதே.

அவன் திண்ணானா இல்லையா. வெறும் வயித்துல விடாதே. குடல் வெந்துடும். இந்தப் பிரியாணியை ஊட்டி வுடு. குடலில் இருக்கற சரக்கு இத்தை அரிச்சிடும்.” என்று கொடுத்து செல்ல ரேகா ஊட்டி விட்டு முடிக்க, நீரை குடித்து முடித்தான்.

ரேகா உறங்கி முடிக்க, குருவின் போன் அடித்துக் கொண்டிருந்தது. எரிச்சலில் அப்படியே எடுத்துக் காதில் வைத்தான்.

“ஹ… ஹலோ… குரு…” என்ற குரலில் போதையிலிருந்த அவன் கண்கள் பளிச்செனத் திறந்தது. போனை கண்டவன் வேகமாக வெளியிலிருந்த தண்ணீரை முகத்தில் அடித்துச் சட்டையிலே துடைத்து, “சொல்லு ரதி” என்றான்.

“பிளஸ் டூ படிச்சும் நல்ல ஜாப் போகலாம். நிறைய இருக்கு. உனக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் நான் செய்யறேன். அப்பாவிடம் சொல்லி வைக்கவா. எந்த வேலையென்றாலும் செய்வியா?” என்று நயமாய் பேசினாள் ரதிதேவி.

“இதப்பாரு நான் கலிஜி. பிளஸ் டூ தான். ஒரே அம்மா ஒத்த ரூமு வீடு. வேலையில்லை. அம்புட்டு தான். நீ விரும்பினா நாளைக்கே எந்த வேலையென்றாலும் போக நான் ரெடி. ஆனா அது நானா போவேன். ஒன் உதவி வேணாம். நீ விரும்பறேன் சொல்லு. அம்மாநீளம் கூட வேணாம். ம் ஓகே சொல்லு அது கூடப் போதும். இல்லையா இத்த இப்படியே வுடு. உன்னைய நினைச்சி கொஞ்சநாள் கடப்பேன் அப்பறம் எவளோடவாது வாழ்ந்துப்பேன்” என்று குடிப்போதையில் உள்ளத்தில் இருந்ததை எல்லாம் உளறி வைத்தான்.

அவன் குரல் கண்டு வித்தியாசம் உணர்ந்தாலும் ரதிக்கு அது தன்னால் தானோ என்று புரிய துவங்கியது.

“எனக்கு யோசிக்கணும் குரு. எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்க முடியாது. என்ன பொறு த்தவரை முடிவுன்னு எடுத்தா கடைசி வரை அதுலயே இருக்கணும். இரண்டு நாள் அவகாசம் தா.” என்று வைத்தாள்.

போனையே வெறித்தவன் மதுவின் ஆதிக்கத்தில் அவனுமே குப்புறப்படுத்து உறங்கிப்போனான்.

தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

2 thoughts on “நதி தேடும் பெளவம்-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *