பௌவம்-4
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
அதிகாலை தலைவலி அழுத்த தாய் கொடுத்த கடுங்காப்பியை சுவைத்தான்.
தாய் கண்ணீரோடு முனுமுனுத்துக் கொண்டு வேலை செய்வதை அறிந்தும் வாயை கொடுத்தால் புலம்பியே தள்ளுவாரென அமைதியாக இருந்தான்.
போனை நொண்டிக் கொண்டிருந்தவன் வாட்ஸப்பில் ரதி இரண்டு மெஸேஜ் அனுப்பியிருப்பதை கண்டான்.
அவனின் பழைய மொபைல், கீறல்கள் விழுந்து எழுபதியந்து சதவீதம் சோப்பு டப்பாகக் கிடந்தது. மீதி இருபந்தி ஐந்து சதவீதமே போன் என்ற பதவியை வகுத்திருந்தது.
அதில் நெட்டு வேறு சதி செய்ய நேற்றோடு நெட் கார்டு காலி என்ற செய்தியே காட்ட, ரதிதேவி அனுப்பிய செய்திக்குப் பதில் அனுப்ப இயலாது தவித்தான்.
அவள் முதல் மெஸேஜில் ஹாய் குரு குட் மார்னிங். நாம மீட் பண்ணி ஒன்ஸ் பேசலாமா.
இரண்டாவது மெஸேஜோ, எனக்குச் சில டவுட்ஸ் இருக்கு. அதைக் கிளியர் பண்ணிட்டா நீ நேற்று கேட்டதுக்குப் பதில் சொல்லிடுவேன்.
இவையிரண்டும் கண்டதும் தான் நேற்று என்ன பேசினோம்னு யோசித்தான். கால் பதிவு அழைப்பில் அவளோடு பேசியது காட்ட, என்ன பேசினோம் என்பது அவனுக்குத் தெளிவாக நினைவில்லை. அய்யோ… என்ன பேசினேன் தெர்லயே… என்று பல் விலக்கி செல்கடைக்கு நெட்கார்டு போட ஓடினான்.
காசு இல்லையென்றதும் தலையைச் சொரிந்தவாறு “மா.. துண்டு தா.” என்றான்.
“காசு தர்றேன்யா.. என் உடலுல பளு இருக்கறவர ஆனா குடிக்காதயா… ஏற்கனவே நம்ம ஜெனத்தைப் பார்த்தா மூக்கை மூடிட்டு தான் உலகம் போகுது. இதுல இது வேறயா…
உங்கப்பா வாழ்ந்தவரை நல்லா கல்லு கணக்கா வாழ்ந்தார். என்ன அப்போ ஏதோ கிட்னில கல்லு அது இதுனு சீக்கிரம் போயி சேந்துட்டார். அவரிருந்தா உன்னைய காலேஜிக்கு எல்லாம் அனுப்பியிருப்பார். நாந்தேன் ஏதோ இதே பெரிய படிப்புனு வுட்டுபுட்டேன்.
ஏதோ என்னால முடிஞ்சது…” என்று பணத்தை நீட்ட தயங்கியே பெற்றுக் கொண்டான்.
ரேகா முடிந்தது அறிவுரை என்றது போல அவர் பாட்டுக்கு வேலைக்குச் சென்றிட, குரு பணத்தைப் பார்த்தான்.
மஹா மீன் கூடையை இடையில் வைத்துக் கொண்டு, “நீ காதலிக்கறியோ என்ன இழவோ உன் ஆத்தா கலங்க வைக்காதே. என்கு எல்லாம் ஆத்தா இல்லையேனு தினம் தினம் கலங்கி கடக்கேன். அது வேலைக்குக் கூடப் போகச் சொல்லலை. குடிக்காம இருக்கச் சொல்லுது. பாத்து யோசி.” என்று அவளுமே அவள் வீட்டுக்கு போனாள்.
குருவுக்கு ரதிதேவி எதுக்கு நேர்ல பார்க்க கேட்கறானு தெரிஞ்சு இதுக்கு இன்னியோட முடிவு கட்ட முயன்றான். நாளையிலருந்து வேலையைத் தினமும் பார்க்கணும். அம்மாவ வேற படிக்க வைக்கிலையானு கேட்டுச் சங்கடப்படுத்திட்டேன். என்று எண்ணங்கள் சம்மட்டியில் அடித்து நியாயம் பேசியது.
சிகரேட்டை பற்ற வைத்து நெட் கார்டு போட்டான்.
கால் செய்து, “ஹலோ…” என்றான்.
“உன்னை மெஸேஜ் தானே பண்ணி கேட்டேன். அப்பா எதிர்ல போன் பண்ணிட்ட. அங்கிருந்து ரூமுக்கு வர திணறிட்டேன் தெரியுமா.” என்றாள் ரதிதேவி.
“அது நீ நேத்து இன்னா பேசினேனு என்கு ஞாபகம் இல்ல. மீட் பண்ணறது பிரச்சனையில்ல.” என்றான்.
ரதிக்கு சிரிப்பாக வந்தது. அதை மறைத்துவிட்டுக் கோபமாக, “நேற்று குடிச்சிருந்தியா… குடிச்சா பேசியது மறந்திருமா. என்ன பேசியதுனு கொஞ்சம் கூடவா நினைவு இல்லை.?” என்றாள்.
“இதபாரு நினைவு இல்ல அதானே கேட்கறேன். இன்னா சொல்லு.” என்றான் குரு.
“நான் காலேஜ்க்கு கிளம்பிட்டு இருக்கேன். ஈவினிங் முதல் நாள் சந்திச்ச இடத்துல ஐந்து மணிக்கு வெயிட் பண்ணு. பை” என்றாள்.
குருவுக்குச் சந்தோஷப்படுவதா இல்லை குழப்பமா ஏதோவொன்று காத்திருக்கத் துவங்கினான்.
இடைப்பட்ட நேரத்தில் தன் பள்ளி நண்பன் டேவிட்டிடம் தானும் நாளையிலிருந்து கடலுக்கு வருவதாகக் கேட்டுயிருந்தான்.
அவனும் வா டா கத்துக்கிட்டா போச்சுனு கூறிவிட்டான். கடலுக்குப் போய் வந்தப் பிறகு இருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான்.
தாயின் பேச்சு என்றுமில்லாமல் இன்று பிசைந்தது. ரதி என்னடானா வேலைக்கு உதவி பண்ணறேனு சொல்லறா. மஹா என்னடானா நானே கஞ்சி ஊத்தறேனு கெத்தா பேசறா. அம்மா தப்பா போகாதேனு அழுது. எப்பா… வேலை தானே போகணும். அம்மா பாவம் என்றது மனம் இருபது வயதில் தந்தையை இழுந்து இந்நாள் வரை ஒற்றையாளாக வளர்க்க எத்தனை கஷ்டம் அனுபவித்தாரோ என்றே யோசித்தான்.
இத்தனை வருடம் வேலை என்று ஒப்புக்கு செல்வான். பல நேரம் சில்லரை வேலைகள் சில்லரை பணம் மட்டுமே. இனி உன் வேலை என்ன பா என்றால் இது தான் என்பது போல ஒன்றில் நிலைக்கவே அவன் மனம் உந்தியது.
மதியம் சாப்பிட்டதிலிருந்து காந்தி சிலையருகே படுத்தவன் தான். ரதிதேவி வருவதாகச் சொன்ன நேரத்தில் மட்டும் சிகரெட் ஊதி முடித்து முகம் அலம்பி வாயை கொப்பளித்து இருந்தான்.
ரதிதேவி வந்து அவனை எடைப் போட்டாள். அவனோ மேற்சட்டை பட்டனை அவிழ்த்துவிட்டு பார்க்க தள்ளி நிற்கும் அளவுக்கு நின்றிருந்தான்.
“சோ… இதான் உன் ரியல் கோலம்” என்று ரதிதேவி கேட்டதும்,
“இப்ப இன்னாங்க. இதானே நானு. எதுக்குங்க வரச்சொன்னிங்க.” என்றான்.
“அடப்பாவி… நீ தானே ஏதோ என்னிடம் கேள்வி கேட்ட. ஏதோ பதில் அம்மாநீளம் கூட வேணாம் ம்னு சொல்லு போதும்ன” என்றாள் ஒற்றைபுருவம் தூக்கி கேட்டாள்.
பெண்ணவளின் பார்வை வட்டத்துக்கே ஏங்கும் வண்டு. இப்படிப் பால்நிலா கலரில், போதை தரும் விழியேற்றத்தில் காதல் போதை அதிகமாகவே ஊற்றினாள்.
“நா..நான் என்னாத்துக்கு… என்ன கேட்டேன்.” என்றான் குரு.
“என்ன பார்த்ததும் லவ்வா… நான் கியூட் அதனால நீ காதலிக்கலாம். நீ இப்படி அழுக்கு பையா வா இருக்க. எப்படிடா லவ் பண்ணுவேன்” என்றதும் அவளின் பேச்சுக்கு சுடு சுரனையின்றி நின்றிருந்தான்.
“தோ பாருங்க. நீங்க வாடா போடானு பேசறிங்க. சரிதான் நான் இன்ன கேட்டு தொலைச்சேனோ… தயவு செய்து சாரிங்க. ஓகே வா…ரைட்டா கிளம்பறேன்.” என்று நகரப் போனவனின் கையைப் பிடித்து, “அய்யோ குரு..” என்று நிறுத்தினாள்.
அவளின் கை தன் கையில் பற்றியிருக்க நிலைமையை இதே உணர்த்தியது. அவனுக்கு அவள் பொருத்தம் இல்லையென்று மனம் கேட்க வேண்டுமே.
மஹாவோ “சுண்டல் வேண்டுமா அக்கா.” என்று இடையில் வந்து நிற்க குருவோ முற்றிலும் நொந்து விட்டான்.
“நோ தேங்க்ஸ்” என்றவள் குருவிடம் “ம்ம்… ஓகே குரு.” என்றாள்.
அவனோ புரியாமல் விழிக்க, “ஓகேனு சொன்னேன்.” என்று வெட்கமும் முறுவலும் சிந்தினாள்.
“இன்னாத்துக்கு ஓகே…? சாரி நான் இன்ன பேசினேன். கேட்டேனு நிசமா ஞாபகம் இல்ல” என்றான்.
“ஏதோ நீ கலிஜான ஆளு.. ஒரு ரூம்…நோ ஜாப். , வேலைக்கு உதவி வேண்டாம்…” என்று நிறுத்தியவள் அவனை இருபுருவம் உயர்த்திச் சிரித்துப் புரிந்ததா என்றாள்.
அவனோ திருதிருவென விழித்தான். இதெல்லாம் எதுக்குச் சொன்னேன். ஒரு வேளை ரதி திட்டி இருக்குமோ….? என்று விழித்தான்.
ரதியோ “உப்ஸ்… ட்ரிங் பண்ணினா பேசினதை மறந்திடுவியா யூ இடியட். லவ் பண்ணறதா சொன்ன. நானும் விரும்பறேனு கூடச் சொல்ல வேண்டாம் ‘ம்ம் ஓகே’ ஒரு வோர்ட்ல சொல்ல சொன்ன.” என்றாள்.
தொப்பென்ற சத்தம் குருவை ரதியை கலைக்க மஹா கண்ணீரோடு “சுண்டல் டின் கைதவறி விழுந்துச்சு” என்று எடுத்துக் கொண்டு குருவை பார்த்து அழுதபடி சென்றாள் மஹா.
குருவுக்கோ மஹாவை நிறுத்தி பேச கூட என்னவோ செய்தது. இந்நாள் வரை தன்னைக் காதலிப்பவள். அவளெதிரே தானும் தன்னை விரும்புவதாக ரதியும் கூற கேட்டால் பாவம் என்ன செய்வாள்.
“என்ன குரு நோ ரியாக்ஷன்.” என்று ரதி கேட்டதும் தான் “ஆஹ்… அது வந்து யோசிச்சி முடிவெடு ரதி. இது விளயாட்டு இல்ல. வாழ்க்க… நானும் நீயும் கலரு, வசதி, படிப்பு சாதி எதிலும் உன்கு நான் சரிக்குச் சமம் இல்ல.
நான் அட்டு லோக்கலு. மீன்கார ஏரியா. மீன் கருவாடு நாத்தம். சில நேரம் காவா நாத்தம் எல்லாம் எடுக்கும். உப்பு காத்தால உடம்பு பிசுபிசுனு இருக்கோம்.
நீ கேட்டது எல்லாம் உங்கப்பா அடுத்த நாளே கொண்டாந்து தருவாரா… என்கிட்ட கேட்டா அடுத்த வருஷம் கிடைக்கும். ஏன் வாங்கியே தர முடியாத லெவல் தான்.
தண்ணீ மினரல் வாட்டர் இருக்காது. கார்பரேஷன் தண்ணி. நீ ஏசில படுத்து இருப்ப இங்க அரசாங்கம் கொடுத்த டேபிள் பேனு. எப்படிச் சொல்லறது ரதி.
ஒரு ரூம். அம்மா நான் நீ. இன்னா சொல்றது புரியலை. இதை விடக் கஷ்டத்தைத் தெளிவா சொல்ல தெரியலை.
உன்ன என்கு புடிச்சிருக்கு. கூட வாழணும்னு தோனுது. ஆனா உன்கு நான் சரியில்லனும் மனசு சொல்லுது. ஏன் ஆசைபட்டேன். ஏன் நேத்து குட்சிட்டு கேட்டு உன் மன்சுலயும் ஆசைய வளத்தேன் புரியலை. என்னவோ தப்புனு படுது. உங்கப்பா ஆசையா கனவுலாம் கண்டுருப்பார். அத்தையேன் கலைக்கணும்.” என்று பேசி முடித்தான்.
“இதெல்லாம் யோசிக்காம பேசலை குரு. நான் ஜாப் போவேன். எனக்கு மினிமம் இருபதாயிரம் சம்பளத்துல வேலையை வாங்கிடுவேன். அப்பா மூலமா தான்.
அதுக்குப் பிறகு குயில்லிங், ஜெவல்லரி மேக்கிங் செய்வேன். அதைக் கற்றுக்கொடுப்பேன். அதோட வருமானம் கொஞ்சமா வந்தாலும் கூட நாட் பேட். ஆன்லைன் பிசினஸ் யோசிக்கறேன். நீயும் மாதம் உன்னால கொடுக்க முடிந்ததைக் கொண்டு வா. வேலைக்குப் போவ தானே. தென் வாட்.
சின்னதா வேற இடத்துல வீடு பார்ப்போம். 1bhk ல அம்மா ஹால்ல இருக்கட்டும்.
எங்கப்பா அப்படியே விடமாட்டார். நமக்குனு வாரிசு வந்தா என்னைத் தேடி வருவார். நாம அப்படியே இருக்க மாட்டோம். அப்பா ஹெல்ப் பண்ணுவார். அவருக்கு நான் தம்பி மட்டும் தானே.” என்றாள் ரதிதேவி.
இத்தனையும் யோசித்திருக்கேன் என்று முன் வைத்தாள்.
என்ன தான் யோசித்துக் கட்டம் கட்டி வாழ நினைத்தாலும் அப்படியே நடக்குமா? அப்படி நடந்தால் தான் நாடு என்றோ ஏழை பணக்காரன் என்ற பாகுபாடை உடைத்திருக்குமே.
பாவம் ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல, திட்டம் வகுத்த வாழ்வும் திறமையாய் செல்லாது என்பதை அறியாது பேசினாள்.
“கேட்க நல்லா இருக்கு.” என்ற குருவை, “தென் எவரித்திங் இஸ் குட் குரு.” என்று காதலை சம்மதமாக மாற்றி இருவரும் காதலர்களாக மாறி விட்டதைக் காந்தி சிலையருகே கூற ஆரம்பித்தனர். மணலிடம் எழுதி வைத்தால் அது நிலைத்திருக்குமா?
வீட்டுக்கு வந்தான் மகிழ்ச்சியைப் பகிர ஆளை தேடினான். நண்பர்கள் எல்லாம் திருமணம் ஆனவர்கள் மனைவி குழந்தை என்று இருக்க, தன் காதலை அறிந்த மஹா தான் மனதில் தோன்றினாள்.
அவளின் வீட்டுக்கு முதல் முறை இவனாகப் போய் நிற்க மஹா அழுதிருப்பாளோ என்னவோ முகம் வீங்கி கிடந்தது.
“இன்னாச்சு…” என்றான்.
“எனக்கென்ன லவ் பெயிலியரு… ஆமா… உன் லவ்வு சக்சஸா… எப்ப பிரியாணி வாங்கித் தருவ. இதாப்பாரு மட்டன் பிரியாணி மட்டன் பீஸு சரியா… அதோட என்னமோ ப்ருட் சாலட்டாம் முக்கு கடையில கீது அதுவும் வேணும்.” என்று பேசியவளிடம் வெட்கம் கொண்டான்.
அதன் பிறகு அடுத்த நாளே கடலில் மீன் பிடிக்கத் தோழனோடு சென்றான். பிடித்தவையை விற்று அன்னையிடம் பணத்தைக் கொடுத்தான். சந்தோஷம் கொண்டு மகிழ்ந்தார் ரேகா.
கிடைக்கும் நேரத்தில் பைக் மெக்கானிக்காகப் பார்ட் டைம் செய்தான்.
காதல் சொல்லிய நாளிலிருந்து ரதியிடம் வரும் போன் கால் மெஸேஜ் என்று குரு புதிதான உலகிலே சஞ்சரித்தான்.
சேவ் பண்ணு டா.
பட்டன் போட்டு நீட்டாயிரு.
மெக்கானிக் வேலை பார்க்கறதுக்குப் பதிலா நீயா மெக்கானிக் கடை வைய்.
கடல் எல்லாம் வேண்டாம் ஸ்விகி டோமேடோனு அதுல ஒர்க் பண்ணு. மச் பெட்டரா வா.
நகம் வெட்டு.
இது என்னடா காதுல கடுக்கன். பொறுக்கி மாதிரி இருக்கு எடு.
இது போன்ற அன்பு கட்டளையிட்டு கொண்டிருந்தாள்.
அடிக்கடி படகு பின் அமர்ந்து ரதி கையைப் பிடித்துப் பேச மஹாவுக்கு அதே வழியில் வரும் பொழுது கண்டு மனம் வருந்துவாள்.
காதல் புரிபவன் அவன் காதலிக்கும் பெண்ணிடம் முத்தமிடுவதை யார் தான் தாங்குவது. மஹா உடல் மெலிந்தாள், குரு வீட்டுப் பக்கம் போவதை தவிர்த்தாள். ஆனால் அடிக்கடி அவன் இல்லாத நேரம் ரேகாவுக்கு உதவுவாள். அவன் அன்னையிடம் பேசி கொள்வாள். அவனின் மாற்றமும் பெருமை பேசும் ரேகாவை கண்டு நிறைவாய் உணர்ந்தாள்.
ரதியோ “ட்ரிங் பண்ணுவியா… இனி பண்ணகூடாது” என்றதும் “அத்த தலைமுழுகிட்டேன் ரதிம்மா.” என்பான்.
ரதியோடு நெருங்க அமர்ந்து தியேட்டர் சென்றால், சிகரேட் வாடை வந்து தொலைய, “ஸ்மோக் பண்ணின கிஸ் பண்ணாதே.” என்ற கண்டிப்பு வரும்.
“இனி பண்ணமாட்டேன் தேவிம்மா” என்பான்.
ரதியின் பட்டு உதட்டில் சினிமா தியேட்டரில் பட்டும் படாமலும் உதடு உரசி தேனெடுக்கவே சிகரேட்டை விட்டு இருந்தான்.
சிகரெட் விடுவதால் அடிக்கடி முத்தமழை வாடிக்கையாக அவளும் கொடுத்து பாராட்டுவாள்.
அத்துமீற மட்டும் இடம் கொடுக்க மாட்டாள்.
இப்படியாகச் சென்ற காலத்தில் அந்தப் புயல் வந்தது.
2018 கஜா புயல். நவம்பர் மாதம்.
அதிகப் பாதிப்பு இல்லை. தென் தமிழகம் தான் பாதிக்குது சென்னை சும்மா ஏமாற்றிப் போகும் அந்தப் புயல் என்று வாழ்வாதாரம் நோக்கி கடலில் மீன் பிடிக்கச் சென்றான் குரு.
புயலில் இது சாதாரணம் அது மிகை என்று அனுமானித்திட இயலுமா? அது இயற்கை. நம் கையில் இல்லாது ஆட்டுவிப்பவனின் சொல்லுக்கு ஆடுவது. குருவின் படகு புயலில் அகப்பட்டது.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Super super superb