பௌவம்-5
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
கஜா புயல் கடலை சுழற்றி அடிக்க, முதல் முறையாக கடலில் மீன் பிடிக்க வந்தது தவறோ என்று யோசித்தான். அவனுக்கு இது புதிது தான்.
மற்றவர்கள் அடிக்கடி பயணம் செய்து இருக்க இவனோ மூன்று மாதம் குறிப்பிட்ட எல்லைக்குள் தான் மீன் பிடிப்பான். படகும் அதற்கு மேல் தூரமாக ஓட்டி செல்ல மாட்டான்.
இருப்பது போதும் என்று வாழ எண்ணுபவன், மேலும் கடலின் வேகம் இன்னமும் அறிந்திடாதவன்.
கடலின் சீற்றம் கண்டு நடுங்கினான். சில பல அலைக்கு தாக்கு பிடித்தவன், ஒரு கட்டத்தில் படகையே சுழற்றி அடித்த விதத்தில் படகில் மோதி நின்றான்.
இரத்தம் சொட்டவும் தலையை தொட்டு பார்த்தவன் மயங்கி சரிந்தான்.
படகு அதன் பிறகு புயலின் சீற்றத்தில் அது தானாக பாதை மாறியது. சென்னை கடற்கரையிலிருந்து கடலின் திசையே அறியாமல் பயணிக்க, மயக்கத்தில் அவனோ படகின் மூலையில் கிடந்தான்.
நேரங்கள் செல்ல தென் தமிழகமும் தாண்டியது அங்கே அதீத சீற்றம் தோன்ற படகு கவிழும் நிலையானது.
குருவுக்கே தெரியாமல் அவன் கடல் எல்லையை கடந்திருந்தான். அங்கே மீன் பிடிக்க வந்த கூட்டத்தில் குரு வலையில் சிக்கவும் காப்பாற்றி அந்த படகில் படுக்க வைத்து நீரை வெளியே எடுத்தனர்.
விழி திறந்த நேரம் அது சென்னை கடற்கரை ஓட்டிய இடமல்ல என்றும் தான் கடலில் அகப்பட்ட இரண்டாவது நாளாக அறிந்தான்.
அதே நேரம் இலங்கை கடற்படை குழுவினர்களால் தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்பட்டனர்.
ஆறு பேர் சிறைப்பிடிப்பில் தானும் ஒருவனாக நின்ற நேரம், எப்படியும் தமிழகம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை மனதில் ஏற்பட்டது.
ஆனால் பிடிப்பட்ட அனைவரும் கஞ்சா அடிக்கவும் இங்கே வந்த முறை மற்றவர்கள் அறிந்திடாதும் இருக்க, இவர்கள் நிலவரம் கணக்கில் வராமல் போனது அந்தோ பரிதாபம்.
இலங்கை கடற்படை அவர்களை சிறையிலிட்டு அடைத்திருந்தனர்.
உணவு என்பது அவர்களாக எடுத்து வந்து தருவது மட்டுமே. நேரத்துக்கு மூன்று வேளை என்பது எல்லாம் இல்லை. ஆறு பேரில் ஒருவன் அதீத டிரக் சுவாசிக்க மூக்கில் இரத்தம் வழிய இறந்தான்.
அதன் பிறகே மற்றவர்கள் அஞ்சினார்கள். விடச்சொல்லி கெஞ்சினார்கள்.
எல்லா இடத்திலும் நல்லவர்களே இருப்பார்களா என்ன? சில இடத்தில் சைக்கோ மனம் படைத்த ஆட்களும் உண்டு. அதுவும் எல்லை தாண்டி வருபவர்களை வதைக்க எண்ணி காத்திருக்கும் கூட்டமும் உண்டு. அவர்கள் அரசாங்கமே விடுதலை கூற சொன்னாலும் மறைத்து கொடுமை செய்ய ஆர்வமாக இருப்பார்கள். அத்தகையவரின் பிடியில் அகப்பட்டுயிருந்தான் நாயகன் குரு.
இவன் சினிமாவில் வருபவனா என்ன? மாயம் செய்து காதலியை வந்து கரம் பிடிக்க சராசரி மனிதன்.
தப்பிக்கவும் வழியில்லாமல், அறையில் கிடந்தனர். மாதங்கள் கடந்துக் கொண்டிருந்தது அவனின் மழிக்கப்பட்ட தாடி வளர்ச்சியிலும் நகத்தின் வளர்ச்சியிலும் தோராயமாக நாட்களை எண்ணினான்.
இங்கோ ரதி அவனை தேடி எப்பவும் சந்திக்கும் இடங்களுக்கு காத்திருந்தாள்.
போனும் தொடர்பில் இல்லாமல், அவன் வீடும் அறியாது விழித்தாள்.
அவனை பற்றி அவளுக்கு வேறெதும் தெரியாது. இதே ஏரியா தான். அவனை பற்றி யாரிடம் கேட்பது. பைத்தியம் பிடிக்காத குறையாக ரதிதேவி இருந்தாள்.
மஹாவோ, பைத்தியமாகவே மாறி இருந்தாள். வீட்டை விட்டு வெளியே வர மறுத்து நின்றாள். அப்படியே வந்தாலும் கடலை பார்த்து கலங்கி நேரம் காலமின்றி அமர்ந்திருப்பாள்.
முன்பு இலைமறையாக பேசிய கூட்டம் தற்போது வெளிப்படையாகவே அவன் செத்து மீனுக்கு இரையாகி இருப்பான் என்பதாக பேசி முடிக்க, மஹா பேயாட்டம் ஆடினாள்.
ரேகாவோ உடைந்து போய்விட்டார்.
பெரும்பாலும் ஒரு வாரம் தான் தாமதமாகும். அதற்கு மேல் என்றால் ஆபத்து என்பது எழுதப்படாத விதி.
சின்ன படகு இதுவரை தான் சென்று இருக்கும். அதற்கு மேல் பெரிய படகில் கூட்டமாக சென்று வருவது. அதனால் அவன் கடலில் இறந்தான் என முடிவு கட்டியது அக்குப்பத்து மீனவ கூட்டம்.
ரேகாவுக்கு யாருமில்லாமல் வேலைக்கும் செல்லாமல் சாப்பிடாமல் தன் மகன் குரு இறந்துவிட்டானென முடிவு கட்டி வறுந்தியிருந்தாள்.
மஹாவின் தந்தை ஜனகராஜ் பெரும்பாலும் அவளை கேள்வி கேட்டு கட்டுப்படுத்தி இருப்பவர் அல்ல. அவருக்கும் குருவை மஹா விரும்புவது அறிந்தவர் தான். குப்பமே குரு உயிரோடு இல்லை என்று இந்த நான்கு மாதத்தில் முடிவு செய்து முழுக்கு போட்டு அவரவர் பணியில் கடந்திருக்க, மஹாவின் நிலையில் சங்கடப்பட்டார்.
அன்று வெளியே ரோட்டில் நூற்றியம்பது ரூபாய் என்ற விகிதத்தில் விற்ற அவளுக்கு பிடித்த சுடிதாரை வாங்கினார். மட்டன் பிரியாணி என்று வாங்கி வந்தவர் மகளிடம் நீட்ட, எப்பொழுது முயல் போல துள்ளி ஓடிவந்து பேசி சாப்பிடுபவள் சிவனே என கிடந்தாள் நாறாக.
“இன்னா டா குட்டி. குரு செத்துகிடப்பனு நம்பறியா… அதான் இப்படி தலைவாறாம முண்டச்சி கனக்கா கிடக்கியா.” என்றதும் தன் காதல் தந்தைக்கு எப்படி அறிந்து பயந்தாலும், ஊருக்கே தெரியுது அப்பாவுக்கு தெரிந்தும் என் மனம் வாடக்கூடாதென இருப்பாரோ என அமைதியானாள்.
தந்தை ஜனகராஜ் மடியில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
“பயமா கீது பா. இத்தனை நாள் வராம இருப்பானா? அவனுக்கு என்னவோ ஆச்சுப்பா.” என்று கதறவும்
“என்னைக்காவது உசிரோட வந்து நிப்பான் டா. அழாத.” என்று பொய்யாய் நம்பிக்கை கொடுத்தார்.
பொய்யாக தான்….. மஹாவோ விடுக்கென எழுந்து, “எப்பா…. குரு அப்போ வருவான் தானே. சினிமா ஹீரோ கனக்கா.. வருவான் தானே?” என்று கேட்க, தொண்டை அடைக்க பொய்யாக ஆமென்றார்.
“நீ இன்னாத்துக்கு வேலைக்கு போகலை. ஒழுங்கா சோறு தின்னலை. நான் பார்க்கறப்ப ரெண்டு வாய் துன்னற. பிறவு நான் போனா எல்லாம் காவாய் பக்கத்துல நாயுக்கு கொட்டற.
அன்னலட்சுமி வயித்துக்கு கொடுத்தா தான் தைரியலட்சுமி நம்ம கூட இருப்பா தாயீ. நீ தைரியமா இருந்தா தானே அவன் உசிரு இருக்கற திசைக்கு ஒன்னோட நினைப்பு போய் அவனை இங்க இழுத்துட்டு வரும்” என்றதும் தவிப்பாய் எழுந்தாள்.
“குரு உசிரோட இருப்பானா அப்பா?” என்றாள் கண்ணீரோடு.
“நீ உசிரோட இருக்கறவரை அவன் இருப்பான் ஆத்தா. நீ நடந்தா ஓன் நினைப்புல கூட நடப்பான். அவன் ஊட்டை தாண்டினா அவன் வூட்டுல எப்பவும் குந்திட்டு இருக்கற இடத்துல இருப்பான்.
நீ குமார் படகு பக்கம் போனா, நீயும் அவனும் ஏதோ கத்தி பேசிப்பிங்களே அதே மாதிரி பேசுவான். இன்ன அதை நாம மனபிராந்தினு சொல்லுவோம். ஆனா மெய்யாலுமே அன்பு வச்சிகினா அதெல்லாம் உசிரோட தான் தெரிவாங்க.
தொ போட்டோவுல தொங்குறாலே உன் ஆத்தாகாரி. அவளும்தான் தினமும் இந்த வூட்ல இருக்கா. என்னோட குழந்தை அழுவுது. இன்னாமே பாத்துட்டு சும்மா கீறனு கேட்குற.
மனசு தான் கண்ணு. செத்துட்டானா இல்லையானு முடிவு பண்ணும். நீ குரு செத்துட்டானு நினைச்சா செத்துட்டான். இல்லைனு நினைச்சா ஒன்கூட தான் வாழறான்.” என்றதும் கண்கள் கண்ணீரை நிறுத்தியது.
“அப்ப என் குரு சாகலை அப்பா. நான் அழமாட்டேன்.” என்றவள் கண்கள் பொழிந்த நீரை அழுக்கு தாவானியின் முந்தானையால் துடைத்தாள்.
“ஏன்பா… நீ கண்ணாலாம்னு எவனையும் நிறுத்தி என்னை இம்சை பண்ண மாட்ட தானே?” என்று அதிமுக்கிய கேள்வியை கேட்டு நிறுத்தினாள்.
இப்படி பேசுவதே அவளை தினசரி வேலைக்கு மனதை பழக்கி நாள் போக போக திருமணம் பேச தான். ஆனால் அதை இப்போதே கூறினால் வேலைக்கு ஆகுமா?
“சே சே… அப்பா மஹாக்கு பிடிக்காததை கட்டாயப் படுத்துவேனா. நீ சந்தோஷமா இரு தாயீ அது போதும். கண்ணாலம் எல்லாம் பேச மாட்டேன்” என்றார்.
மஹாவுக்கு இன்று இதுவே பெரும் தெம்பை தந்தது. தன் மனதிலே குருவை பற்றி போட்டு கவலையுற்றவள். இன்று குருவை பற்றி தந்தையிடம் உரையாடியது மாபெரும் ஆறுதலாக போனது.
நன்றாக தூங்கி எழுந்தாள். அடுத்த நாள் கொண்டையிட்டு குளித்து முடித்து ரேகாவை பார்க்க வந்தாள்.
உள்ளே நுழையும் போதே, குரு காலைநீட்டி வேர்கடலை சாப்பிட்டபடி, அந்த சின்ன சிறு தொலைக்காட்சி பெட்டியில் குத்து பாட்டு பார்ப்பதாக தோன்ற தந்தை சொன்னது போல என் குரு உசிரோட இருக்கான். என்று மகிழ்ச்சி அவளுக்குள் சாரலாய் நனைந்தது.
ரேகாவை பார்த்து குரு வருவான் என்று நம்பிக்கையாய் அவள் பேச, மஹாவை போல ரேகா உள்ளம் அதை நம்பவில்லை.
கடலில் போனவன் கதி அப்படியே தானே தவிர திரும்பி வருவது எல்லாம் சாத்தியமற்ற ஒன்று தவித்தார்.
இருந்தும் மஹாவின் நம்பிக்கைக்கு பதில் அவநம்பிக்கையாய் பேசாமல், “என் மகன் வந்தா அவனை கண்ணாலம் கட்டிக்கோ. நல்லா பாத்துக்கோ.” என்று தலையில் கை வைத்து தாடையில் கொஞ்சி முத்தமிட்டார்.
இதே மனநிலையோடு வெளியே வந்து சுண்டல் விற்க சென்றாள்.
ஐந்து மணிக்கு ரதிதேவி சோகமாக சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து போவோர் வருவோரை கண்டு திரும்பி திரும்பி பார்த்து இருப்பதை கண்டாள்.
மஹாவுக்கு இதயம் பக்கென ஆனது. இவளை எப்படி மறந்தாள். குருவை தேடி பாதி ஆளாக மாறியிருப்பாளோ? அன்று வளர்ந்த செழுமையான ஆடு போல இருந்தவள். இன்றோ சீக்கு வந்த கோழியாக காட்சி அளிப்பதை கண்டு உள்ளுக்குள் வேதனையாக நின்றாள்.
அருகே சென்று பேசவும் அவளுக்கு என்னவோ தடுத்தது.
அடுத்த நாளும் ரதிதேவி இப்படி போவோர் வருவோரை கண்டு திரும்ப, தூரத்திலே மஹா ரதியை கவனித்தாள்.
குரு குரு… என்று ஒரு ஆடவன் பின் சென்று திரும்பியவளை கண்டு மஹாவுக்கு மனம் கேளாது அவளருகே வந்தாள்.
“ரதி..” என்று அழைத்தாள்.
ரதி திரும்பி யாரிந்த பெண் என்று பார்த்தாள். “கு..குருவ தேடறியா…?” என்றதும் ரதிக்கு எங்கும் இருளாக இருந்த இடம் பளிச்சென பல்பு எறிந்த நிலையாக மஹாவை கண்டாள்.
“ஆமா… நீ… நீங்க?” என்றாள் ரதி.
“நான் அதோட பள்ளிக்கூடத்துல படிச்சவ. அன்னிக்கு பாத்திங்களே.” என்று நினைவூட்ட,
“குரு எங்க இருக்கார் போன் போட்டா எடுக்கலை. அவர் வீடு தெரியுமா? அவருக்கு என்னாச்சு.” என்று வலியும் கவலையும் தேக்கி கேட்டவளிடம் என்ன சொல்வது என்றறியாது திணறினாள்.
குரு கடலுக்கு சென்றவன் இன்னமும் வரலை. அவன் இறந்திருக்க கூடுமோ என்பது போல பேசிக் கொள்கின்றனர் என்றால் நான்கு மாதம் வராதவனை கண்டு இவளுமே இறந்ததாக தான் எண்ணி கவலை கொள்வாள் என்று அவனை பற்றி கூற பொய்யை தேடினாள்.
“அவன் ஏதோ பொண்ணுக் கூட கேரளா போயிகீறான். ஏன் ஒன்னாண்ட சொல்லலையா…? என்று பொய்யை கூறினாள்.
ரதிக்கு இதயம் நொறுங்கிய உணர்வு. என் குரு அப்படியில்லை என்று வாய் வரை வந்தாலும் சொல்ல முடியாது தவித்தாள்.
அவன் போன் தான் தொடர்பில் இல்லையே. தன்னை காணவும் வரவில்லை என்றதில் பேதை என்னவென்று எடுத்துக் கொள்வாள்.
“அவனுக்கு இத்தே பழக்கம் தான். பொண்ணு லட்டு கணக்கா இருந்தா பேசி தாஜா பண்ணி கேரளா போவான். உன்கு தெரியாதா.”
மஹாவிடம் பேசாமல் திரும்பி அவள் கால் போன திக்காக நடந்தாள்.
மஹாவுக்கு பொய் சொன்னது தப்போ என்று உறுத்தியது. முடிந்தால் நாளை வந்தால் கூறிடணும் என்று வீட்டுக்கு சென்றாள். அங்கே ரேகா மரணமடைந்து கிடந்தார்.
ரேகாவுக்கு அங்கிருப்பவர்களே இறுதி காரியம் செய்து முடிக்க, கொள்ளி போடும் குருவோ ஒரு வேலை உணவிற்காக கெஞ்சி கொண்டிருந்தான்.
பசிக்குது டா. ஒன்னு கொல்லு இல்லை வெளியே அனுப்பு. இரண்டும் பண்ணலையா… ஒரு வேளை சாப்பாடாவது கொடு டா.” என்று கத்தி கத்தி ஓய்ந்தான்.
அவனுக்கு பயமே வந்தது. இருக்காதா பின்ன ஆறு பேரில் ஒருவன் கஞ்சாவால் இறந்தான். நேற்று முன் தினமோ பட்டினியில் அல்சர் கண்டு ஒருவன் இறந்திருந்தான். மீதி நான்கு பேர் அதிலும் ஒருவனுக்கு கண்கள் சொறுகி கொண்டு இருந்தது.
குருவுக்கோ கத்தி கத்தி முடிக்க ஒரு தட்டு நிறைய சாதமும் பாதி வெந்த கறிகளும் மட்டும் தள்ளப்பட, அதை திங்க மூன்று பேரும் அடித்து பிடித்து குப்பைத்தொட்டி எச்சியிலை நாய்கள் போல உண்டு முடித்தனர்.
தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
Super super