பௌவம்-6
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
ரேகா இறந்து பதினாறு நாள் கடந்தது. மஹா அந்தப் பதினாறு நாளும் விளக்கு ஏற்றி வழிப்பட்டு முடித்தாள்.
பிறகு கதவை பூட்டி விட்டாள். சொந்தம் பந்தம் என்பவர்கள் எல்லாம் இல்லாது அநாதை வாழ்க்கை. சுற்றி இருப்பவர்களே சொந்தங்கள் உறவுகள்.
இன்று மாமா மச்சான் எனக் கட்டிப்பிடித்துக் கொஞ்சும் சிலர் அடித்துக் கொண்டு முறுக்கி செல்வதும் உண்டு. குரு ரேகாவுக்கு அப்படித் தான் சுற்றுபுறமே சொந்தங்கள். மஹா பூட்டி விட்டு பாதுகாக்க, யாருமே ஒன்றும் சொல்லவில்லை.
அவள் குருவை காதலிப்பது தான் ஊருக்கே தெரிந்த உண்மை.
மஹா தினமும், வாசலில் குருவீட்டின் பக்கமே பார்வையிட்டவாறு இருப்பாள். அவன் தெருவில் காலி தண்ணீர் பாட்டிலை உதைத்துக் கொண்டு வருவதும், சிகரெட்டை ஊதி புகைத்துக் கொண்டு வருவதும் என்று உணர்வு பூர்வமாக நிஜமாகக் காண்பது போல எண்ணி சின்னதாய் முறுவலிப்பாள்.
சுண்டல் விற்க போனால் ரதியை தேடுவாள்.
ரதியோ அதற்குப் பிறகு காணவில்லை.
நான்கு மாதம் கடக்க, ரதி அவளின் தோழிகளோடு காரில் வந்திறங்கினாள்.
சோகம் இல்லாமல் அல்ல. கடற்கரை என்றாலே குரு நினைவு வருகிறது என்றதால் தான் அவள் வராமல் தவிர்த்து கொண்டாள்.
ரதியை நீண்ட நாட்களுக்குப் பின் பார்த்ததும் வேகமாக வந்து தோளை தட்டி, “நான் அன்னிக்கு சொன்னது…” என்று விளக்கம் கொடுக்கும் முன் “வாட் நான்சன்ஸ்… யார் நீ..” என்ற் ரெஜி கேட்டு முடிக்க,
“ரெஜி ரெஜி குருவோட பிரெண்ட்.” என்று தடுத்தாள்.
“ஓ… ஏமாற்றி ஓடிப்போனவனா…” என்று சொல்ல ரதி குரு காதல் தோழிகளுக்குக் கூறியதை எண்ணி மஹா தயங்காமல் உண்மையைக் கூறினாள்.
“என்ன சொல்லற கடலில் போனவன் காணாம போயிட்டானா. முதல்லயே சொல்லி தொலைக்க மாட்ட. படிப்பறிவில்லாத முண்டம்.” என்று ரெஜி திட்டவும் “சும்மாயிரு ரெஜி” என்று அடக்கினாள் ரதிதேவி.
“போலீஸ்ல புகார் கொடுத்தியா மஹா.” என்று அதே வலியோடு கேட்டாள்.
“எங்களுக்கு இன்னாங்க தெரியும். அந்தக்கா சொன்னது போலப் படிப்பறிவுலாம் இல்லை. உன்னான்ட சொன்னா கஷ்டப்படுவியேனு அப்படிச் சொன்னேன். ஆனா அதுவும் மனசு பொய் சொல்லிட்டோமேனு உறுத்துச்சு. அதான் மெய்யாலும் நடந்ததைச் சொல்லிட்டு போக வந்தேன். நீயே சொல்லு இத்த மாறி எத்தனை நடந்துகீது. நாங்க இன்னானு கம்ப்ளென் தர.” என்று மஹா பதில் சொன்னாள்.
“இப்பவும் ஒன்னுமில்லை போய்க் கம்ப்ளென் தருவோம். வாங்க டி.” என்று தோழியை அழைத்துச் சென்று புகார் தர போலீஸோ மேலும் கீழும் நக்கலாகப் பார்த்து முடித்தான்.
“ஏம்மா… அவன் தொலைந்தது. 2018 நவம்பர் கஜா புயலில… இப்ப 2019 ஜூலை… இப்ப வந்து கம்பிளன் தர்ற… கடல்ல போனவன் வரலைனா எங்காவது பிணமா ஒதுங்கியிருப்பான். கழுகு காக்கா கொத்தி தின்றுயிருக்கும். இல்லையா மீனுக்கு இரையாகி இந்நேரம் உருதெரியாம போயிருப்பான்.” என்றார் போலீஸ்.
“யோவ் குரு வருவான். குரு செத்துட்டானு பேசின வாயை ஒடச்சிடுவேன்.” என்று மஹா கத்தினாள்.
“சீ…. ரதி. அந்தப் பொண்ணு தான் லூசு மாதிரி பேசுது. நீங்களுமா… காணாமல் போனவனைத் தான் கண்டுபிடிக்க முடியும் செத்தவனை முடியாது. போய்ப் படிக்கிற வேலையைப் பாருங்க.” என்று அனுப்பினார்.
ரதி தோழிகளும் இதைத் தான் கூறியிருந்தனர். ஆனால் ஒரு முயற்சி என்று எடுத்தாள்.
ரதியும் மஹாவும் ஒருவரை ஒருவர் கண்டு, “இது என் அட்ரஸ் மஹா. ஏதாவதுனா சொல்லு…” என்று விடைப்பெற்றாள் ரதி.
குரு பெண் பின்னால் சென்றான் என்ற ஒரு வாக்கியத்திலேயே ரதிதேவி மனம் அவ்வாறாகவே யோசித்துச் சற்றே அவன் மேல் தளர்வு ஏற்பட்டு போக, குரு உயிரோடவே இருக்க மாட்டான் என்ற செய்தி பெரிய அதிர்வில் இருந்து அவளைக் கடத்தியது எனலாம்.
ஆனால் முன்பு போலக் குருவை மனதில் திட்டவில்லை. குரு குரு என்று முதல் காதலை மனதில் பூஜித்தாள்.
அடிக்கடி மஹாவை சுண்டல் விற்கும் பொழுது காண்பாள். ஐந்து நிமிடம் பேசிவிட்டு செல்வாள்.
இரு மாதம் கடக்கப் படிப்பும் முடிந்திடுவதால் தந்தை திருமணம் என்று மொய்க்க ஆரம்பித்தார்.
முதலில் மறுத்தவளால் பிறகு காரணம் என்ன சொல்லி மறுக்க என்று புரியாமல் தவித்தாள்.
பிரேம் வந்து பெண் பார்த்த அன்று அமைதியாக வந்து நின்றாள்.
பெரும்பாலும் திருமணம் என்பதே இலைமறைவாகக் கட்டாயத்திற்கு என்பதாகத் தான் நடத்தப்படுகிறதோ என்று எண்ணினாள்.
ஆனால் மறுக்கவும் இயலாத வலி அவளுள்.
திருமணத்துக்கு இருதினம் முன் மஹாவை பார்த்து தன் திருமணத்தைக் கூறினாள்.
மஹா அதிரவில்லை. வாழ்த்தும் கூறவில்லை. அமைதியாகக் கடலை வெறித்தாள்.
ரதிதேவியோ, “பெண்கள் தனியா வாழ முடியாது மஹா. ஏதோவொரு இக்கட்டுக்குத் திருமணம் என்பதை பண்ணணும்.
இந்த நிமிஷம் வரை என் பேரண்ட்ஸ்கு நான் லவ் பண்ணறேனு தெரியாது. அதுவும் குரு மாதிரி ஒரு ஆளை. அவங்க கற்பனை கூடப் பண்ணியிருக்க மாட்டாங்க. பட் லவ் இஸ் பிளென்டு இல்லையா?
அவனுக்கும் எனக்கும் திருமணமாகி நாங்க கனவு கண்டது மாதிரி வாழ்ந்து இருப்போமோ என்னவோ, இப்ப எங்கப்பா அம்மா விருப்பபடி திருமணம் ஆகி ஏதோ வாழ போறேன்.
இந்த நிமிஷம் குரு வந்தா, என் அம்மா அப்பாவோட முன்ன போய்ப் பேச நான் ரெடி. ஆனா நேர்ல இல்லாத குருவை வைத்து என் திருமணத்தைத் தள்ளி போட முடியாதே.
நிஜமா குரு கடலில் செத்துட்டான் தானே..?” என்று விரக்தியாகப் பேசினாள்.
தன்னவனை இறந்து விட்டானெனக் கேட்க பிடிக்காத மஹாவோ, “அவன் கடலில் சாகலை. எங்கயோ இருக்கான். ஒரு பொண்ணோட… ஜல்ஸாவா. நான் உன்கிட்ட முதல்ல சொன்னேன்ல. கேரளா பக்கமா ஒரு ஓடுகாலி பொண்ணை இழுத்துட்டுப் போயிகினான்னு… அவன் பொறுக்கி… நீ போய் ஒன் வேலையைப் பாரு.” என்று கலங்கி நிற்க பிடிக்காமல் ஓடினாள். இறந்துவிட்டான் என்றதற்கு பதிலாக எங்கோ வாழ்கின்றான் என்று அவளுக்கு அவளாகவே உரைத்து கொண்டாள் மஹா.
ரதிதேவி கடைசியாக இனி பட்டினப்பாக்கம் மெரீனா பீச் என்று வராது இருக்கவே தீர்க்கமாக முடிவு செய்தாள்.
தந்தை தனக்கெனப் பார்த்திருந்த பிரேம் என்பவனை மணவாளனாக ஏற்கும் முடிவோடு வீட்டை நோக்கி சென்றாள்.
பிரேம் அணிவித்த தாலியை ஏற்கும் நேரம் கூட எதையோ இழந்த வலியோடு அமைதியாகவே கலக்கமாக இருந்தாள்.
அது புதுப் பெண்ணின் கலக்கமாக மற்றவர்கள் பார்வைக்குப்பட்டது. பிரேமும் அப்படித் தான் எண்ணினான்.
அதன் பின் மலர்மஞ்சத்தில் பத்து நாட்களுக்குப் பின் நெருடலோடு இசைந்தது. பிறகு வந்த மாதத்தில் பிரேமின் அன்பில் குரு என்பவனையே சிறிது சிறிதாக மறக்க துவங்கினாள்.
புது இடம் ஓசூர் வந்த பிறகு அனைத்திற்கும் பிரேமை எதிர்பார்க்க துவங்கியது ரதிதேவி உள்ளம்.
அத்தோடு கொரானா காலம் என்று வீட்டை கூடத் தாண்டவில்லை. பிரேம் உறவில் கொரானா ஆரம்பக் கட்டத்திலேயே நெருங்கிய உறவினர் ஒருவர் இறக்க நேரிடவும் யார் வீட்டுக்கும் போகவில்லை. யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவும் இல்லை. ஒரு வருடம் 2020 முழுவதுமே வீடே கதியென்று வாழ பிரேமின் நெருக்கத்தில் அன்பில் மிதந்தாள்.
இதோ 2021 தடுப்பூசி போட்டு ஒரு மாதம் கழித்தே, பிரேம் ரதிதேவி இருவரும் இங்கே விருந்துக்கு வந்திருக்கின்றனர்.
பரவலான நிலை வந்த பிறகே சற்றே ரதிதேவி பிரேம் இருவரும் அசைவ உணவு வாங்க இன்று வந்தது.
2018 இல் குருவை கண்டது. அத்தோடு இன்று மஹாவோடு பார்த்ததும் என்னவென்னவோ பேசி விட்டோமே.?!
அவனுக்கு என்னானது என்று கூடக் கேட்கவில்லையே என் மனம். எதனால் பிரேம் கூடத் திருமணம் கோலத்தை குரு பேசி தன்னை வார்த்தையால் சாடுவானென அதற்கு முன்னவே அவனை வார்த்தையால் வதைத்தேனோ? என்று எண்ணினாள்.
இதில் சந்தேகம் என்ன? என்றது அவள் மனசாட்சி. திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள். பிரேம் கணினியில் வேலை பார்த்திருந்தவன் சட்டென மனைவி எழுந்ததும், “வாட் ஹாப்பேன் ரதி.” என்று கழுத்திலும் தலையிலும் தொட்டு பார்த்து நீரை நீட்டினான்.
“ஏய் ஜூரம் காய்ச்சல்னு வந்துடப்போகுது டி. முதலில் குளி. பயமா இருக்கு. இதுக்குத் தான் வெளியே வராம அங்கயே இருப்போம்னு சொன்னேன்.” என்றான்.
“பிரேம் பீவர் எல்லாம் இல்லை. மைண்ட் அப்செட். அவ்ளோ தான்.” என்று மீண்டும் படுக்கச் செய்தாள்.
மனதில் குருவை பார்க்க போகலாமா? வேண்டாமா? என்ற போராட்டம் ஓடிக் கொண்டிருந்தது.
இங்கு வீட்டு வேலைக்குப் போகாமல் மஹா குரு அருகே இடித்தபடி அவர்கள் வீட்டில் அமர்ந்திருந்தாள்.
“யோவ்… யோவ்… மெய்யாலுமே உன்கு பேஜாராயில்லையா…?” என்று கேட்டாள் மஹா.
“மஹா… பட்ட பகல்ல கதவை திறந்து வச்சிக்கிட்டு என்ன இடிச்சிண்டு கிடக்க, போறவர்றவன் பாத்தா இன்னா நினைப்பான். தள்ளுடி” என்றான் குரு.
“இன்னா நினைப்பானா… இன்னாவோ நினைக்கட்டும். என்கு இன்னா…” என்று தோதாக அவன் மடியில் தலை வைத்துக் கொண்டு நீட்டி நிமிர்ந்து படுக்க குரு தான் கதவை லேசாகச் சாற்ற தள்ளினான். அது முக்கால் வாசி மூடியும் கால் வாசி கதவு திறந்தும் இருந்தது.
“நீ வரமாட்டனு ரதி கண்ணாலம் கட்டுக்கிச்சு. எங்கப்பா கண்ணாலத்துக்கு மாப்பிள்ளை பாக்கவா பாப்பானு கேட்டுச்சு.
எங்கப்பா சொன்னத அதுக்குத் திரும்பச் சொன்னதும் என்னைய பாத்து பைத்தியமா மஹா நீயு அவன் செத்து போய் ஒரு வருஷம் மேலாகுதுனு சொன்னாரு. அப்ப தாண்டா ஒரு வருஷம் ஆச்சா… என்கு கூடவே இருக்கறானே. தோனுச்சு…
தினமும் உன் வூட்டு வெளிய இருக்கற கயித்துக் கட்டுலுல நீ குந்திக்கீனு பல் விளக்கிற மாதிரி தோனும். நீ போடி சொல்லி மேல தண்ணீ ஊத்தற மாதிரி இருக்கும். கற்பனையிலயே வாழ்ந்துடுவோமே இப்ப இன்னானு தோனுச்சு குரு.
அப்பா ஒருக்கா தூக்கு போட போச்சு. ஊரு முழுக்க நீ செத்துட்ட, மறந்துட்டுக் கண்ணாலம் பண்ணிக்கச் சொல்லி பேசுச்சு குரு.
குரு உசிரோட இருக்கான் வருவான். சும்மா கண்ணாலம்னு பேசினிங்க.. ஒன் கூட நானும் தூக்குல தொங்கறேனு சொல்லிக்கீனு அப்பா மாட்டியிருந்ததுல தூக்கு கயிறுல தலையை வூட்டு தொங்கவும் அப்பா பதறிச்சு பாரு…
கண்ணாலம் பேச்சை எடுக்கமாட்டேன் ஆத்தா… உசிரோட இரு போதும்னு அப்பா சொல்லுச்சு.
அது நடந்து ஒரு இரண்டு வாரம் இருக்கும்.
அப்ப 2019 டிசம்பரு 26 ஆ… 28 ஆ… சரியா நனவு இல்ல குரு. நீ வந்து நின்ன.
ஹீரோ கணக்கா இல்ல. பரதேசி மாதிரி வந்து நின்னடா.
என் நெஞ்சு துடிக்க மறந்துடுச்சு குரு. மெய்யாலுமே. நீ நம்ப மாட்ட. சாமியை நேர்ல பாத்தேன் டா. ஓடிவந்து உன்னைக் கட்டிக்கிட்டதும் ஜனம் பூரா யாரு இன்னானு ஒன்னை பக்கத்துல வந்து பாத்து தான் தெரிஞ்சிக்கினாங்க.” என்று கண்ணீரை இன்றும் கன்னம் தாண்டி வழியவிட்டு கூறினாள்.
குருவோ அவன் எப்படி திரும்பினான் என்பதை மீண்டும் ஒருமுறை கூற ஆரம்பித்தான். “மறுபடியும் தமிழக மீனவரை புடுச்சிகிட்டு வந்தானுங்க மஹா. அதுல ஒருத்தர் மீனவ சமுதாயத்தோட தலைவன் பாசில். அதனால தான் விடுவிக்கச் செஞ்சானுங்க. கூடவே நாங்க பட்ட கஷ்டம் கேட்டதும் எங்களையும் அவரு கூடவே அனுப்ப கேட்டாரு அதான் விட்டானுங்க. அந்த அண்ணா பாசில் மட்டும் வரலை.
நான் செத்து தான் போயிருப்பேன் புள்ள. அவரோட குமரிக்கு வந்து இங்க வரதுக்குள்ள எப்பா… மறுஜென்மம் போயிட்டு வந்தேன்டி.
என்கு ரதிதேவி வேற கண்ணாலம் பண்ணிக்கிட்டதுல தப்பாவே தோணலை மஹா.
உங்கப்பாவுக்கு நீ என்ன டாவடிச்சுது தெரியும் அவரே வேற கண்ணாலம் பண்ணிக்க கேட்டப்ப. ரதிதேவி வூட்டுக்கு ஒன்னும் தெரியாது. அவ வெறும் போனை வச்சி நம்பரை வச்சி இன்னா பண்ணுவா? என்னான்டா இருந்து ஒரு தகவலும் வரலைனா அது மனசு இன்னா ஆயிருக்கும்.
இதுல இன்னிக்கு என்ன கண்டு முதல்ல ஜர்க்கு ஆச்சு. அப்பறம் ஓன்ன கண்டு தான் கோபமே வந்துச்சு.” என்று பக்குவம் வந்தவனாக முடித்தவன் நயன்தாரா பில்லா படத்தில் பிகினி உடையில் வரும் காட்சியைக் கண்டு இரசிக்க ஆரம்பித்தான்.
“குரு… குரு…” என்றவள் காதலை தேக்கி கூப்பிட அவன் கண்களோ நயன்தாரா உடலில் மேய்வதைக் கண்டு, “டேய் குருவி தலை.” என்றதும், “அடிங்க…” என்று இதழை கடித்து வைத்தான்.
நெடுநேரம் முத்தம் கொடுத்து மனதின் ராணி மஹா தான் என்பதாய் உணர்த்தினான்.
ஜனகராஜோ கதவை திறக்க இருவரும் பதறி எழுந்து நின்றனர்.
“நானு… நீங்க வேலைக்கு வெளிய போயிருப்பிங்க. இரத்த பொரியலுக்கு மஹாகிட்ட கொடுக்க வந்தேன்” என்று கரடியாக வந்து விட்டோமோ என்று தலையைச் சொரிந்தார்.
“இதோ போணும் மாமா. ஏய் கழுதை வாங்கிச் சமைச்சி வை தோ வந்திடறேன்.” என்று குரு கிளம்பினான்.
தொடரும்
பிரவீணா தங்கராஜ்.
Super super super