Skip to content
Home » நீயென் காதலாயிரு-15

நீயென் காதலாயிரு-15

அத்தியாயம்-15

   இன்று எப்படியாவது ப்ரியதர்ஷினி மைந்தன் மீது வைத்த காதலை அவள் வாயால் உரைப்பதை கேட்டிடும் முடிவில் மோகன் இருந்தார்.

   இத்தனை முகப்பொலி ப்ரியா வதனத்தில் தென்பட, தனியாக இந்தர் மீது காதல் உள்ளதா என்று கேட்டு அறிய வேண்டுமென்ற அவசியம் இருக்காது தான். ஆனால் மனித மனதில் இருப்பதை நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றியும் பேசுவார்கள். அது தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக.
  ஒருவேளை நாளை சந்தோஷ் குடும்பத்திற்காக தன் மைந்தன் மீது வைத்த காதலை மறைத்து புதைக்கலாம். அந்த நிலையை நிவர்த்திடவே இன்று யாரோ என்ற போர்வையில் அறிந்திட துடித்தார்.

   அதற்கு பிரேக் டைம் திவ்யமாக அமைந்தது.

   காபி குடித்தபடி சமோசாவை விழுங்கியவளிடம் மோகனே அருகே வந்து, “ப்ரியா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்க போல” என்று வந்தார்.

  “அப்படியெல்லாம் இல்லை சார் எப்பவும் போல தான் இருக்கேன்” என்று அவர் வரவும் லாவகமாக அமர சேரை திருப்பி வைத்தாள்.
  
   அதில் அமர்ந்த மோகனோ, “இல்லையே, முகத்துல ஒரு தேஜல் தெரியுதே. மதுவதி கவனிச்சியாம்மா” என்று கூட்டு சேர்க்க, “லைட்டா ப்யூட்டி பார்லருக்கு போயிட்டு வந்த மாதிரி பளிச்சுனு இருக்காங்க சார்” என்று மதுவதியும் கூறினார்.

   “மதுவதி எனக்கு இங்க ப்யூட்டி பார்லர் எங்கன்னு கூட தெரியாது. அதோட எனக்கு காஸ்மிடிக் அலர்ஜி.” என்று அவசரமாக மறுத்தாள்.

  மோகனோ தாடையில் கையை வைத்து யோசனையோடு “இது ப்யூட்டி பார்லரில் வந்த தேஜஸா தெரியலை. ஏதோ வேற. மூன்று எழுத்து மந்திரமா தெரியுது” என்று கிடுக்கு போட ஆரம்பித்தார்.

   ப்ரியாவோ சிரித்தபடி என்ன கூற வருகின்றார் என்று சிரிக்க, “மது இந்த பைலை என் கேபின்ல வச்சிடுங்க” என்று மதுவதியை கழட்டிவிட, மதுவதியும் காபி கோப்பை தீர்ந்ததில் “ஓகே சார்” என்று மரியாதைக்கு எடுத்து சென்றாள்.

  ப்ரியாவும் தனதுயிடம் செல்ல எழுந்தாள்.
மோகனோ, “ப்ரியா யாரையாவது காதலிக்கறியா?” என்றதும் எழுந்தவள் சுற்றிமுற்றிபார்த்து திகைத்து ‘இல்லையென்று தலையாட்டினாள்.
 
   “நீ பொய் சொல்லறதா உன் கண்ணு சொல்லுதே.” என்று அவர் நோட்டமிட, தன் குட்டை மறைக்க முயன்று தலையாட்டி செல்லும் முடிவோடு திரும்ப, “பொய் சொல்லிட்டு ஓடப்பார்க்கறதா தெரியுதே.” என்றதும், “சேசே அப்படியில்லை சார். பிரேக் முடியறதுக்குள் கேபின்ல போயிடலாம்னு” என்று சிகை கற்றையை காதுமடலுக்கு பின் சொருகினாள்.

  “உட்காரும்மா பொறுமையா போகலாம்.” என்றதும் வயதில் பெரியவர், சீனியர் என்றதில் அமர்ந்தாள்.
  
  “யாரையாவது விரும்பறதா இருந்தா சொல்லும்மா. முதல் நாள் வந்த முகப்பொலிவுக்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. கண்ணுல காதல் வழியுது.” என்று நூல் விட்டு பார்த்தார்.

   ஏற்கனவே வரும் பொழுது, இந்தரோ ‘கண்ணுல தண்ணீர் அருவி மாதிரி கொட்டுது. அதுகிட்ட கேளு. நீ என்னை லவ் பண்ணறதை.’ என்ற வார்த்தைகள் செவியில் வந்து மோத சிலையாக நின்றாள்.

  மோகனோ “நீ யோசிக்கறதை பார்த்தா என் கணிப்பு உண்மையா? டீரீட் எல்லாம் ஒரு டீ, சமோசா போதும்மா. உண்மையை சொல்லு” என்று ஊக்கினார்.
 
   இல்லையென்று தலையாட்டியவளிடம், இதற்கு மேல் நாசூக்காய் கேட்டாலும் கூறமாட்டாளென்று புரிய இனி தனக்கு காதல் விவகாரம் தெரிந்ததாக காட்டி பேசினார். அதாவது அன்வர் கூறியதாக மேனேஜர் தன்னிடம் பேசியதாக,  “மேனேஜர் சொன்னாரே, யாரோ ஒருத்தரை விரும்பறதா. ஏதோ அன்வர் பாய் கடையில கூட அந்த பையன் பேசியதா சொன்னார்.” என்று கூறவும் திருட்டு முழி விழித்தாள்.

  “உட்காரும்மா சும்மா சொல்லு.” என்று கூறவும் உட்கார்ந்துவிட்டாள்.

   “சார்… அவர் என்னை விரும்பறார். நான் விரும்பலை” என்று மறுத்திட முயன்றாள்.

   “அட பொய் சொல்லாதம்மா. உன் கண்ணும் முகமும் உன் மனசை சொல்லுதே.” என்றதும் ப்ரியா நாணினாள்.

    எந்தவொர் விஷயமும் யாரிடமாவது பகிராமல் இருக்க மாட்டோம். நல்லதும் கெட்டதும் நமக்கு யாரிடமாவது பகிர ஆசைப்படுவோம்.

  பெரும்பாலும் ஆட்களை பொறுத்து பகிர்வுகள் மாறுபடும்.
  ப்ரியாவுக்குள் பூத்த காதலை அவள் சந்தோஷிடம் தான் தெரிவித்து குதுகலிக்க ஆசைப்படுவாள். ஆனால் அவனிடம் சொன்னால் இந்தரிடம் தன் குட்டு தெரிந்திடும்.

   சுதாவிடம் கூறும் அளவிற்கு அவள் நின்று பேசவில்லை. அவளுக்கு குடும்பம், குழந்தை, வேலை என்று பார்வையிடவே நேரம் சரியாக இருக்கும். அக்கா யமுனாவிடம் முதலிலிருந்தே பகிர மாட்டாள்.
    இந்த இடத்தில் மோகன் சாரிடம் பகிர ஆசையுண்டானது. அதுவும் தோழனாக மோகன் சார் இங்கு வந்த கொஞ்ச நாளிலேயே நட்பாக இருப்பவர் என்ற காரணங்கள் ப்ரியா மனதை திறக்க வைத்தது.

   “அவரிடம் நான் காதலிக்கறது சொல்லலை சார். ஆனா அவரை பிடிக்கும்” என்று உரைத்தாள்.

  “எங்க மறுபடியும் சொல்லு?” என்று கூற, ப்ரியா அறியாது போனில் ரெக்கார்ட் பட்டனை தட்டி பேண்டில் போட்டார். ப்ரியாவோ இந்தர் பற்றி கூற முடிவெடுத்து வெட்கத்தோடு தலை கவிழ்ந்தவள் மோகன் ரெக்கார்ட் செய்ய தயாராகி பேண்டில் போட்டதை கவனிக்கவில்லை.

    “அவர் பெயர் இந்தர் சார். முழுப்பெயர் இந்திரஜித். என்னை அவர் தான் காதலிப்பதா சொன்னார். இப்ப நானும் அவரை காதலிக்கறேன். ஆனா அவரிடம் சொல்லலை.” என்றவள் முகம் மலர்ந்து மகிழ்ந்தது.

  மகனுக்கு இப்பொழுது பேசியதை, போனில் ரெக்கார்ட் செய்ததை போட்டு காட்டினாலே வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பானென்று புரிய அப்படியே பேச்சை வளர்த்தார்.

  “ஏன்ம்மா சொல்லலை.? எனி பெர்சனல்? என்னிடம் ஷேர் பண்ணும்மா. ரொம்ப வருஷம் ஆகுது. இப்படி பிரேக் டைம்ல காதல் கதை கேட்டு காபி குடிச்சி பேசறது.
   இந்த காலத்து காதலரை பத்தி தெரிந்துக்கறேன்.” என்று கதை கேட்க, “ஏன் சொல்லலைனா… அவர் என் அத்தை பையனோட பிரெண்ட் சார். அவரா வந்து காதலிக்கறதா சொல்லறார். பட் இப்ப இருக்கற சிட்டுவேஷன்ல சொன்னா தப்பாயிடும்.” என்று கலங்கினாள்.

   “என்னம்மா சடன்னா கலங்கற? என்னாச்சு. எதுனாலும் என்னிடம் ஷேர் பண்ணு.” என்று பேசவும் ஒன்னுமில்லையென்று மறைத்தாள்.
 
  “பச் சொல்லும்மா” என்று அழுத்தம் கூட்ட, “இருக்கட்டும் சார் சந்தோஷமான விஷயம்னா சொல்லலாம். கஷ்டமானதுனா தவிர்க்கறது பெஸ்ட்” என்று கூறினாள்.

   கல்லில் கூட நார் உறித்திடலாம் போல இந்த பெண்ணிடம் வார்த்தை பிடுங்க முடியாது நின்றார். ஆனால் அப்படியே எழுந்து போக மனம் வந்தால் தானே. இன்று முடிவோடு பேச வந்தாயிற்று வார்த்தையை பிடுங்கு மோகன் என்றது மனசாட்சி.

    “சரிம்மா லவ் பண்ணற பையனை தான் கல்யாணம் பண்ணிப்பியா. இல்லை இந்த காலத்து பொண்ணுங்க மாதிரி கழட்டிவிட்டுடுவியா.” என்று விளையாட்டாய் கேட்பதாக கேட்டு ப்ரியாவை ஆழம் பார்த்தார்.

  ப்ரியா மெதுவாக மௌவுனமாய் மாறி, “இந்தரை மேரேஜ் பண்ண முடியாது சார். ஆனா நான் அவரை ஏமாத்த மாட்டேன். என் காதலை அவரிடம் காட்டிக்க மாட்டேன்” என்று குரல் பிசிறு தட்ட கூறினாள்.

   மோகனுக்கு கோபம் உருவானது. தன் மகனை திருமணம் செய்ய மாட்டாளாமே. காதலிப்பதாக காட்டிக்க மாட்டாளாமே ஏனாம்? என்று கடுகடுவென முகம் மாறியது.

  “ஏன்ம்மா. நீ நல்ல பொண்ணாச்சே. காதலிச்சவனை கட்டிக்கறதுல என்ன தப்பு.? ஏன் அந்த பையன் சரியில்லையா?” என்று கேட்டார்.
 
  ப்ரியதர்ஷினியோ “நோ சார் அவர் ரொம்ப நல்லவர். நான் தான் அவர் குடும்பத்துக்கு செட்டாக மாட்டேன். ஆக்சுவலி என் மாமா பையனோட பிரெண்ட் தான் சந்தோஷ். எங்க மாமா அத்தைக்கு நான் சந்தோஷை கட்டிப்பேன்னு ரொம்ப கனவு. ஆனா அவன் என் சித்தி பொண்ணு விலாசினியை ரூட் விட்டான். இப்ப வீட்ல இரண்டு பேருக்கும் பேசி முடிவுப் பண்ணிடுவாங்க” என்று சந்தோஷமாக பகிர்ந்தாள்.

  “அப்பறம் என்னம்மா நீ இந்தரை கட்டிக்க வேண்டியது தானே?” என்று தனக்கான பதிலிலே நின்றுர்.

   மீண்டும் முகம் வாடியது. “இல்லை சார் ஆக்சுவலி நான் திருச்சில பிறந்து வளர்ந்தவ. இப்ப தான் ஒரு பிரச்சனையால இங்க வந்து வேலையில இருக்கேன். பிரச்சனை என்னன்னா சந்தோஷோட தங்கச்சி சந்தியாவுக்கு என்னை சுத்தமான பிடிக்கலை. ரீசண்டா சந்தோஷோட பெரிய தங்கச்சி சந்திரிகா கல்யாணம் நடந்தது.
    எதுக்கெடுத்தாலும் அத்தை மாமா என்னையே முன்னிலைப் படுத்தினாங்க.

அதெப்படின்னா… சந்திரிகா கூடவே இருக்க சொன்னாங்க. எனக்கும் சந்திரிகா சந்தியா மாதிரியே டிரஸ் எடுத்துக் கொடுத்தாங்க. என்னை தான் வரவேற்பறையில் நிற்க சொன்னாங்க. மொய் கிப்ட் வாங்க மேடையில நிறுத்தினாங்க. இதெல்லாம் சந்தியாவுக்கு சுத்தமா பிடிக்கலை.
   
   அவளுக்கு இப்பன்னு இல்லை அத்தை மாமா என்னிடம் அன்பா பேசி பழக ஆரம்பிச்சதுலயிருந்தே அவளுக்கு பிடிக்காதாம். என் மேல ஒரு பழி சுமத்திட்டா. அதனால அங்கிருந்து மொத்தமா இங்க வந்துட்டேன்.

  இப்ப சந்தோஷ் வீட்ல எல்லாம் அந்த பழியை நம்பறாங்க. நான் அப்படியில்லைனு எதை வச்சி ப்ரூப் பண்ணறது? ஆதாரம் இல்லையே. சந்தோஷ் வீட்ல என்னை மருமகளா நினைச்சி உரிமையை கொடுத்தாங்க. பாசம் காட்டினாங்க. அது சந்தியாவுக்கு பிடிக்கலை. அதை முதல்லயே பழி போடறதுக்கு முன்ன என்னிடம் சொல்லிருந்தா நானே நாசூக்கா சந்தோஷ் பேமிலியிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டுயிருப்பேன். அவ பழிபோட்டுட்டா. இப்ப சந்தோஷ் பிரெண்ட் இந்தரை எப்படி விரும்புவேன். கல்யாணத்துக்கு வந்தவனை மயக்கிட்டான்னு சொல்வாங்க. ஏற்கனவே ஒரு பழி. இதுல இந்த பழிவேறயானு பயமாயிருக்கு சார்.

   இந்திரஜித் எல்லாம் சூப்பர் கேரக்டர். அவன் அவனோட அப்பா அம்மாவிடம் கூட என்னை பத்தி சொல்லிருக்காணாம். காதலிக்கறதை பத்தி பெற்றோரிடம் டிஸ்கஷன் பண்ணிருக்கான். எந்தளவு பிரெண்ட்லியான பேமிலி. நான் தான் அவங்களோட வாழ கொடுத்து வைக்கலை.” என்று கடிகாரத்தை பார்த்து சாரி சார் என்ன பழி ஏதுனு எதுவும் சொல்லாம பேசிட்டேன். சிலது பேசினா புண்ணை சொறிந்து விட்டமாதிரி ஆகிடும். விடுங்க சார் காதல் கல்யாணத்துல முடிஞ்சா தான் வெற்றியா?

என் இந்தரை லைப் லாங் மனசுல போட்டு பூட்டி அவனை நினைச்சிட்டே வாழ்ந்திடுவேன்.” என்று நேரம் முடிந்ததாக கூறி தனது பணிக்கு சென்றாள்.
  மோகனோ அங்கிருந்த நீரை குடித்து முடித்தார்.

   ‘என் பையனோட உன்னை சேர்த்து வைத்து எங்க கூட்டுல நீயும் வாழ்வம்மா. அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.’ என்று மனதில் கூறி மருமகள் சென்ற திசைக்கு நடந்தார்.

   போனில் ரெக்கார்ட் செய்தவையை மகனுக்கு அனுப்பலாமா என்று சிந்தித்தார்.

   ஆனால் மகனின் முகபாவனை நேரில் கண்டு ரசிக்க ஆசைப்பட்டார். அதனால் மாலையில் சென்று காட்டி ஒலிப்பரப்பலாமென்று திட்டமிட்டார்.

   இதில் கூடுதலாக மருமகளை இன்று வீட்டிற்கு அழைத்து சென்று இந்தருக்கும் ப்ரியாவுக்குமே ஆனந்த அதிர்ச்சி தந்தால் என்ன? என்று திடீர் எண்ணம் உதயமானது.

   ஏனோ மருமகளோடு ஒரே அலுவலகத்தில் இருந்துக்கொண்டு வாயை கட்டுப்படுத்தி பேசுவது கடினமாயிருந்தது. பிறவியிலேயே மனதை உடைத்து பேசும் குணம் மோகன்.

   அதனால் ப்ரியாவை மாலை வீட்டிற்கு அழைத்து சென்று மகனிடம் காட்டி, பிறகு காதலிப்பதை நேரில் கேட்க வேண்டும். தற்போதை வார்த்தையால் கூறியதால் மகனிடம் மறுக்காமல் சம்மதம் தெரிவித்தே ஆகவேண்டும் அவள் வேறுவழியில்லை.

    அதோடு இந்த திருட்டு பழியை போட்டது சந்தோஷ் தங்கை சந்தியா என்று இந்தரிடம் கூறி, சந்தோஷிற்கு தெரியப்படுத்தி ப்ரியா மீதான பழியை களைந்திட வேண்டும்.
  
   நல்லவர்களுக்காக பழியை சுமக்கலாம். சுயநலம் கொண்டவர்களுக்காக, புரிந்துக் கொள்ளாதவர்களுக்காக பழியை சுமக்க அவசியமில்லையே.
   அதை ப்ரியாவிற்கு மகன் மூலமாக மருமகளுக்கு புரிய வைக்கவேண்டுமென்று முடிவெடுத்தார்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

1 thought on “நீயென் காதலாயிரு-15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *