Skip to content
Home » பிரம்மனின் கிறுக்கல்கள்-9

பிரம்மனின் கிறுக்கல்கள்-9

அத்தியாயம்-9

    பாவனா சிணுங்கி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு இதுவரை மென்மையான காட்டன் ஆடை அணிந்து பழக்கப்படுத்தியிருக்க, முழுகவுன் அணிந்தவள் அழுது அடம் பிடித்தாள்.

      “என்னாச்சு யஷ்தவி பாவனா அழுவறா?” என்றவன் கை பட்டனை போட்டவாறு வந்தான்.

     “அனீசியா இருக்கும் போல. புது டிரஸ் இல்லையா.” என்று வாடியிருந்தாள்.

    அவள் முகமே கூறியது தான் வாங்கிய உடை குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லையோ ‘நைநை’யென அழுகின்றதே என்று கவலை தோய்ந்து இருந்தாள் யஷ்தவி.

   ஆத்விக்கோ “செல்லக்குட்டிஇங்க பாருங்க இங்க பாருங்க” என்று எப்பொழுதும் விளையாடும் கண்ணாடி அலமாரி முன் அவளை நிறுத்தி விட்டு “பாவனா குட்டி எப்படி அழகா இருக்கு. வாவ் இந்த டிரஸ் சின்ட்ரெல்லா மாதிரி இருக்கா ஸ்லீபிங் பியூட்டி மாதிரி இருக்கா?” என்று கேட்டான்.

      குழந்தை தினசரி அவன் போனில் இந்த இரு கதையை மொழி அறியாவிட்டாலும் பார்த்து ரசித்ததால் தற்போது ஆத்விக் கூறியதை கேட்டு பார்த்தது.

   கண்கள் உருட்டி தன் அழகை கண்ணாடியில் கண்டு களித்தாள் பாவனா. கண்ணாடி முன் வந்து தொட்டு தொட்டு பார்த்து சிரிக்க ஆரம்பிக்கவும் ஆத்விக் யஷ்தவியை புன்னகையோடு பார்த்தான்.

   அதில் இப்ப போதுமா சிரிக்கிறா. நீ கவலைப்படாதே என்ற செய்தியை செய்கையால் காட்டினான்.

     ஒவ்வொருத்தராய் வந்தவர்கள் வெல்கம் செய்து குளிர்பானம் கொடுத்து வரவேற்றான். அதிகமில்லாது அலுவலக நண்பர்களில் ஆறு பேரிடம் அழைப்பை தொடுத்தான்.

  அதில் மூன்று பேர் குடும்பமாக வந்தனர். மூன்று பேர் சிங்கில் சிங்கங்கள். அதனால தாமதமாக வருவதாக அனுப்பியிருந்தனர்.

     பக்கத்து வீட்டில் எதிர் வீடு வலது இடதென இரு குடும்பமும் என்று மூன்று குடும்பங்கள் மற்றும் அன்பாளன், சித்ரா பாலகுமார் என்று மட்டும் இருந்தனர்.

    தத்தி தத்தி நடந்தாலும் இன்னும் முழுமையாய் நடக்க வராது சிரமப்பட்டாள் பாவனா. தாய் பாலின்றி வளரும் குழந்தை என்பதால் வளர்ச்சி அப்படி தான் என்று சித்ரா கூறிவிட்டார். டாக்டரும் ஒரிரு வாரங்களில் சீராக நடக்க ஆரம்பிப்பாளென கூறியிருந்தார்.

     மற்ற முன்று நண்பரும் வந்ததும் கேக் கட் செய்ய ஆரம்பித்தனர்.

    ஆத்விக் நண்பன் கிஷோர் என்பவனோ யஷ்தவியை கண்டு திகைத்து முழித்தான்.

     இவங்களை எங்கயோ பார்த்தோமே எங்க என்று யோசித்தான்.

     யஷ்தவியோ சீரியஸாக பாவனா கைகளை பிடித்து கேக் கட் செய்ய, ஆத்விக்கும் பாவனா கைகளை பற்றியிருந்தான்.

    தொடுதலில் காமமா சாதாரண வகையா என்று அறிந்த யஷ்தவிக்கு ஆத்விக் செய்கை அதிர்ச்சி தரவில்லை. அவனை புரிந்தவளாக பாவனாவோடு அந்த நிமிடத்தை நிறைவாய் அனுபவித்தாள்.

     பரிசு பொருட்கள் கொடுத்து முடிக்க சித்ராவும் யஷ்தவியும் கேட்டு கேட்டு பரிமாறினார்கள்.

   கிஷோரோ யாரென அறியாது குழம்பியவன் இந்தாங்க ஐஸ்க்ரீம் என்று கொடுக்க நினைவு வந்தவனாக “நீங்க நீங்க… வருண் ஓய்ப் தானே” என்று கேட்டு விட்டான்.

    தட்டை சிதற விட்டவள் ஆத்விக் இருக்கும் திசையை கண்டு, “ஆத்..ஆத்விக்” என்று உடைப்பெடுத்து அழுதாள்.

     பாதிப்பேர் அவனை அழைப்பதாக எண்ணி விட, யஷ்தவி பெயரிட்டு கூப்பிடும் முதல் அழைப்பு என்றதும், ஓடிவந்தான்.

     வருண் என்றதும் பயந்தாளா அல்லது ஆத்விக் நண்பனுக்கு தன்னை இனம் கண்ட பயமா ஏதோவொன்று ஆதவிக் பெயரை கூப்பிட தூண்டியது. அதே நேரம் அவன் நெஞ்சில் சாய்ந்து அவர் அவர் வருண் ஓய்ப்பானு கேட்கறார். ப..பயமா இருக்கு. எ..என்ன சொல்ல?” என்று தவித்தாள்.

      “ஓ மை காட். ஒன்னுமில்லை யஷ். கூல் கூல். நான் பார்த்துக்கறேன். கிஷோர் எதுவும் பேசிடாதே நான் எக்ஸ்பிளைன் பண்ணறேன். எல்லாரும் போகட்டும்” என்று இழுத்து சென்றான்.
  
     அதன் பின் யஷ்தவி தடுமாறி பயத்தில் சங்கடமாய் நின்றாள்.

   வந்தவர்களுக்கு ரிட்டர்ன் கிப்ட் கொடுத்து அனுப்பினாள். பெரும்பாலும் பக்கத்து வீட்டு ஆட்கள் அலுவலக ஆட்கள் வந்திருப்பதால் நழுவினார்கள்.

    அலுவலக நண்பர்களோ குடும்ப சகிதம் வந்தவர்கள் நேரத்திற்கு வீடு திரும்பவே கிளம்பினார்கள்.

   மற்ற இரண்டு நண்பர்களையும் கிஷோரே போக கூறினான்.

     எனக்கு கொஞ்சம் நேரமாகும் டா. நான் எப்படியும் தனியா தானே போகணும் பார்த்துக்கறேனு” அனுப்பினான். நண்பர்களை கீழே வழியனுப்பியவன் கிஷோரோடு அங்கு அமைந்த திறு பூங்காவில் அமர்ந்தான்.

    “வருண் ஓய்ப் தான் யஷ்தவி. வருண் இப்ப உயிரோட இல்லை. யஷ்தவியை நான் மறுமணம் செய்திருக்கேன்.

     ஆக்சுவலி என்னோட மனைவி சந்தனா கூட இறந்துட்டா.” என்று தங்களுக்கு கொரானா காலங்களில் பிரம்மனின் கிறுக்கல்கள் மூலமாக மூன்று குடும்பம் ஒர் குடும்பமாக மாறிய கதையை தெரிவித்தான்.

     “ரொம்ப நல்ல விஷயம் ஆத்விக். நான வருணோட ஸ்கூல் பிரெண்ட் டா.  அவனை ஒரு முறை ரோட்ல பார்த்தேன். வீட்டுக்கு கூப்பிட்டான் நானும் ஆசையா போனேன்.

    அப்ப தான் இவங்களை பார்த்தேன் ஓய்ப்னு அறிமுகப்படுத்தினான். காபி கலந்துட்டு வந்து வச்சாங்க நீ நம்புவியா மாட்டியானு தெரியலை. சுட சுட காபியை அவங்க மேலயே  கொட்டிட்டான். ஏன் எதுக்கு ஒன்னுமே தெரியாது டா. ஆனா அப்ப அந்த பொண்ணு துடிச்சி அழுதுச்சே அப்ப எனக்கு ஏதோ சைக்கோ நண்பனா தான் கண்ணுக்கு தெரிந்தான்.

    ஒரு நிமிஷம் இதயமே பதறிடுச்சு. இந்த பொண்ணு எத்தனை சாந்தமா இருக்கு. வருண் முகத்துல அன்னிக்கு மிருகத்தோட சாயலை பார்த்தேன். என்னால அதுக்கு மேல ஒரு நொடி கூட இருக்க முடியலை.

    ஆனா அவன் கூலா ‘பாரு டா டீ கேட்டா அவளுக்கு பிடிச்ச காபி கொண்டு வர்றா கல்யாணமாகி இரண்டு வாரத்துல தெரிந்துக்க வேண்டாமா.’னு பேசினான். இரண்டு வாரத்துல ஒரு பொண்ணு எப்படி டா அந்த மாதிரி வேதனையை அனுபவிச்சானு இப்ப வரை குழம்பினேன்.

      தெரியாம மறந்துட்டு கொண்டு வந்துச்சு. அதுக்கு இப்படியானு ஒரு மாதிரி வருத்தமா போச்சு. வருண் நண்பன்னு சொல்லிக்கவே கேவலமா இருந்தது.

    வருண் இறந்தது இந்த பொண்ணை நீ மேரேஜ் பண்ணினது. அந்த குழந்தையை தத்தெடுத்தது எல்லாமே சரிதான்டா.

   உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. அவங்களை பயப்பட வேண்டாம்னு சொல்லு. அவங்க இப்ப வருண் ஓய்ப் இல்லை. மிஸஸஸ். யஷ்தவிஆத்விக் தைரியமா இருக்க சொல்லுடா.
  
      எந்தவொரு நிகழ்வும் காரணகாரியமில்லாம நடக்காது. உன் ஓய்ப் ஏன் இறக்கணும். அந்த வருண் ஏன் சாகணும்? பிறந்த ஒரு வாரத்துல குழந்தை அநாதையா மாறணும். எல்லாமே கடவுள் தலையெழுத்தா எழுதியது. எல்லாமே நன்மைக்கு தான் டா” என்று கிஷோர் உற்சாகப்படுத்தினான்.

    ஆத்விக்கோ யஷ்தவியை எண்ணி அவனது வீட்டின் பால்கனியை தான் கண்டு கொண்டிருந்தான்.

   ‘எத்தனை வேதனை யஷ்தவியை இனி சிறப்பாய் என் மனைவியாய் பார்த்துக்கணும்’என்று மனசாட்சி கூறிவிட்டது. ஆனால் அடுத்த நொடி சந்தனா என்பவளை மறந்து விட்டாயா என்றது. குழம்பியவனாய் தலையை உலுக்கி கொண்டான்
 
     “சரி ஆத்விக் ஆபிஸ்ல பார்ப்போம். நான் வருண் பிரெண்ட் இல்லை ஆத்விக்கோட ஆபிஸ் பிரெண்ட் என்று அவங்களிடம் சொல்லிடு. பயந்து பீல் பண்ண போறாங்க. பை டா மச்சான்.” என்று வண்டியை எடுத்து கிளம்பினான்.

     ஆத்விக் மெதுவாக வீட்டுக்கு வந்த நொடி சித்ரா பாவனாவுக்கு சுற்றி போட, அன்பாளனோ சம்மந்தி என் மகனும் மருமகளும் சேர்த்து வைத்து திருஷ்டி கழிச்சிடுங்க.” என்றார்.

   யஷ்தவி மறுக்க பார்க்க ஆத்விக்கோ குழந்தை பாவனாவை கையில் வாங்கி தோளில் போட்டு கொண்டு யஷ்தவி அருகே நின்றான்.

    யஷ்தவி பெரிதாய் எடுக்கவில்லை அன்னைக்காக அருகே நின்றிருப்பார் என்று தான் தோன்றியது.

     ஆனால் அடுத்தடுத்த நாட்கள் சித்ரா பாலகுமார் ஊருக்கு சென்றதும், ஆத்விக் யஷ்தவியை பார்த்து பார்த்து வியந்தான்.

    தனியாக சிந்தனைவயப்பட்டான். அன்பாளனே மகன் அருகே வந்து என்னடா யோசனை? பிறந்த நாள்ல ஏதாவது அசௌவுகரியமா இருந்ததா?” என்றார்.

      “சே சே அதெல்லாம் இல்லைப்பா. ஏன் எனக்கு சந்தனாவை காதலிக்க தோன்றணும். உங்களை எதிர்த்து கல்யாணம் பண்ணணும். இப்ப அவளை இழந்து நீங்க பார்த்த பொண்ணை ஏத்துக்க முடியாம தவிக்கணும். இந்த குழந்தையை தத்தெடுக்கணும். ஏன் இந்த விதி இப்படி விளையாடுது குழப்பமா இருக்கு. இதுல என் நண்பன் கிஷோர் யஷ்தவியை மேரேஜ் பண்ணியது நல்லதுக்கு தான் டா. அவளுக்கு வாழ்க்கை கொடுத்ததுக்குனு பேசிட்டு போறான். நான் என் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தேன், இப்ப எப்படி மாத்திக்கனு சத்தியமா புரியலை.” என்றான் அதே குழப்பமான மனநிலையில்.

     மாத்திரை போட தண்ணீர் எடுத்து வந்த யஷ்தவி தன் பெயர் அடிப்படவும் தந்தை மகன் பேச்சு செல்வதற்கு திரும்ப கிச்சன் செல்ல முயன்றவள் அதேயிடத்தில் நின்றாள்.

-கிறுக்கல்கள் தொடரும்.

பிரவீணா தங்கராஜ். 

1 thought on “பிரம்மனின் கிறுக்கல்கள்-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *