Skip to content
Home » புலான்மறுத்தல்-26

புலான்மறுத்தல்-26

 அறத்துபால் | துறவறவியல்| புலான்மறுத்தல்-26

குறள்: 251

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

தன்‌ உடம்பைப்‌ பெருக்கச்‌ செய்வதற்காகத்‌ தான்‌ மற்றோர்‌ உயிரின்‌ உடம்பைத்‌ தின்கின்றவன்‌ எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்‌?

  •  🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  
குறள்: 252

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு

பொருளுடையவராக இருக்கும்‌ சிறப்பு, அப்பொருளை வைத்துக்‌ காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக இருக்கும்‌ சிறப்பு, புலால்‌ தின்பவர்க்கு இல்லை.

குறள்: 253

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்

ஓர்‌ உயிரின்‌ உடம்பைச்‌ சுவையாக உண்டவரின்‌ மனம்‌ கொலைக்கருவியைக்‌ கையில்‌ கொண்டவரின்‌ நெஞ்சம்‌ போல்‌ நன்மையாகிய அருளைப்‌ போற்றாது.

குறள்: 254

அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்

அருள்‌ எது என்றால்‌ ஓர்‌ உயிரையும்‌ கொல்லாமலிருத்தல்‌; அருளல்லாதது எது என்றால்‌ உயிரைக்‌ கொல்லுதல்‌; அதன்‌ உடம்பைத்‌ தின்னுதல்‌ அறம்‌ அல்லாதது.

குறள்: 255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு

உயிர்கள்‌ உடம்புபெற்று வாழும்‌ நிலைமை, ஊன்‌ உண்ணாதிருத்தலை அடிப்படையாகக்‌ கொண்டது; ஊன்‌ உண்டால்‌ நரகம்‌ அவனை வெளிவிடாது.

குறள்: 256

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

புலால்‌ தின்னும்பொருட்டு உலகத்தார்‌ உயிர்களைக்‌ கொல்லாதிருப்பாரானால்‌, விலையின்‌ பொருட்டு ஊன்‌ விற்பவர்‌ இல்லாமல்‌ போவர்‌.

குறள்: 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்

புலால்‌ உண்ணாமலிருக்க வேண்டும்‌; ஆராய்ந்து அறிவாரைப்‌ பெற்றால்‌, அப்புலால்‌ வேறோர்‌ உயிரின்‌ புண்‌ என்பதை உணரலாம்‌.

குறள்: 258

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர்‌, ஓர்‌ உயிரினடத்திலிருந்து பிரிந்துவந்த உடம்பாகிய ஊனை உண்ணமாட்டார்‌.

குறள்: 259

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

நெய்‌ முதலிய பொருள்களைத்‌ தீயில்‌ சொரிந்து ஆயிரம்‌ வேள்விகள்‌ செய்தலைவிட, ஒன்றன்‌ உயிரைக்‌ கொன்று உடம்பைத்‌ தின்னாதிருத்தல்‌ நல்லது.

குறள்: 260

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்

ஒருயிரையும்‌ கொல்லாமல்‌ புலால்‌ உண்ணாமல்‌ வாழ்கின்றவனை உலகத்தில்‌ உள்ள எல்லா உயிர்களும்‌ கைகூப்பி வணங்கும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *