Skip to content
Home » பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 16-20 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | பாகம்-5 | தியாக சிகரம் | 16-20 அத்தியாயங்கள்

16. பூங்குழலி பாய்ந்தாள்!
     சோழ நாட்டில் பிரயாணம் செய்துள்ளவர்கள் அந்நாட்டின் இயற்கை அமைப்பில் ஒரு விசித்திரத்தைக் கவனித்திருப்பார்கள். சோழ நாட்டைச் சோறுடை வளநாடாகச் செய்யும் நதிகளில் வெள்ளம் வரும்போது, வெள்ளத்தின் மேல் மட்டம் நதிக்கு இருபுறங்களிலுமுள்ள பூமி மட்டத்துக்கு மிக்க உயரமாயிருக்கும். இவ்விதம் இருப்பதினாலேதான் நதிகளில் வரும் வெள்ளம் வாய்க்கால்களின் வழியாக வயல்களுக்குப் பாய்வது சாத்தியமாகின்றது.

     இந்த நிலையில் வெள்ளத்தை நதிப் படுகையோடு போகச் செய்வதென்பது மிகவும் சிரமமான காரியம் அல்லவா? நதிகளுக்கு இருபக்கங்களிலும் உயரமான கரைகள் உறுதியாக அமைந்திருக்க வேண்டும். இல்லாவிடில், வெள்ளம் நதியோடு போவதற்குப் பதிலாக, மழை நீர் நாலாபுறமும் பாய்ந்து ஓடுவதுபோல் ஓடிச் சோழ நாட்டைத் தண்ணீர் தேங்கிய சதுப்பு நிலமாக்கி ஒன்றுக்கும் பயனற்றதாகச் செய்துவிடும்.

     இதை முன்னிட்டு ஆதிகாலத்திலிருந்து சோழமன்னர்கள் காவேரிக்கும், காவேரியின் கிளை நதிகளுக்கும் கரைகள் அமைப்பதில் மிக்க கவனம் செலுத்தினார்கள். கரிகால் வளவன் ஈழ நாட்டிலிருந்து யுத்தத்தில் தோற்றவர்களைச் சிறைப்படுத்தி வந்து, காவேரிக்குக் கரையெடுக்கும் வேலையில் அவர்களை ஈடுபடுத்தினான் என்னும் வரலாற்றை நேயர்கள் அறிந்திருப்பார்கள்.

     காவேரியின் கிளை நதிகளில் தண்ணீர் நல்ல மேல் மட்டத்தில் வருவதற்கு உதவியாகவே ஸ்ரீரங்கத்துக்கு ஒரு காத தூரம் கிழக்கே சோழ மன்னர்கள் கல்லணை கட்டினார்கள். அந்த அணையின் மூலம் தண்ணீர் மட்டம் மேலும் உயர்ந்து கிளை நதிகளில் நிறையத் தண்ணீர் பாய்வது சாத்தியமாயிற்று.

     இவ்விதம் இயற்கை அமைப்போடு இடைவிடாத செயற்கை முயற்சிகளும் சேர்ந்தே சோழ நாட்டைப் பண்டை நாளிலேயே நீர் வளத்தில் இணையில்லாத நாடாகச் செய்திருந்தன.

     சோழ வள நாட்டுக்கு இவ்விதம் இயற்கை, விசேஷ உதவிகள் செய்தது போலவே, சில சமயம் விபரீதமான அபாயங்களையும் உண்டாக்கி வந்தது.

     சோழ மண்டலத்துக் கடற்கரைக்குக் கிழக்கே கடலில் அடிக்கடி சுழிக் காற்றுகளும், புயற்காற்றுகளும் தோன்றுவது உண்டு. இக்காற்றுகள் சில சமயம் கடற்கரையோரமாக வடக்கு நோக்கிச் சென்று கிருஷ்ணை – கோதாவரி முகத்துவாரங்களிலோ அல்லது கலிங்க நாட்டிலோ, உள்ளே பிரவேசித்துப் பெருமழை கொட்டச் செய்து கடுமையான சேதங்களை விளைவிக்கும். வேறு சில சமயங்களில் சோழ நாட்டுக்குள்ளேயே நேரடியாகப் பிரவேசித்து மேற்கு நோக்கி விரைந்து செல்லும். கோடிக்கரைக்கும், கொள்ளிடக் கரையின் முகத்துவாரத்துக்கும் மத்தியில் இவ்விதம் சுழிக்காற்று உள்நாட்டில் பிரவேசிப்பது சரித்திரத்தில் பலமுறை நடந்திருக்கும் சம்பவம். சில சமயம் அச்சுழிக் காற்றுகள் கோரபயங்கர ரூபங்கொண்டு கடலையே பொங்கி எழச் செய்து கடற்கரையோரமுள்ள ஊர்களையே அழித்துவிடும்!

     பூம்புகார் என்று வழங்கிய காவேரிப்பட்டினத்தைக் கடல் கொண்டது வெறுங்கதையன்று; சரித்திர ஆதாரங்களினால் நிரூபிக்கக் கூடிய உண்மை நிகழ்ச்சியேயாகும்.

     நதிகளில் வெள்ளம் அதிகமாக வரும்போது சில சமயம் கரைகள் உடைந்து விடுவதும் உண்டு. நதிகளின் நீர்மட்டத்தைக் காட்டிலும் பூமி மட்டம் தாழ்வாயிருக்கும் காரணத்தினால் உடைப்பு எடுத்தாலும் சுற்றுப்புறமெல்லாம் ஒரே தண்ணீர் மயமாகிவிடும். நதிகளுக்கு அருகிலுள்ள ஊர்கள் முழுகிப் போய்விடும். அப்போதெல்லாம் ஜனங்கள் உயிர் தப்புவதற்கு அக்கம்பக்கத்திலுள்ள கோயில்கள் உதவியாயிருக்கும்.

     விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் காவேரி உற்பத்தியாகும் ஸஹஸ்ய மலையிலிருந்து அந்த மாநதி கடலில் சங்கமமாகும் இடம் வரையில் நூற்றெட்டு ஆலயங்களை எடுப்பித்தான் என்று சரித்திரம் கூறுகிறது. சாதாரண காலங்களில் கோயில்கள் கடவுளை ஆராதிப்பதற்குப் பயன்படுவது போலவே, பெருவெள்ளம் வந்து உடைப்பெடுக்கும் காலத்தில் மக்கள் கோயில் மண்டபங்களின் மீது ஏறி உயிர் தப்புவதற்கும் உபயோகமாயிருக்கட்டும் என்பது ஆதித்த சோழனின் நோக்கமாக இருக்கலாம் அல்லவா?

     நதிக்கரைகளில் உடைப்பு உண்டாவதன் காரணமாகச் சில சமயம் நதிகளின் போக்கே மாறிவிடுவது உண்டு. அரிசிலாறும், குடமுருட்டி முதலிய நதிகள் இப்படி பலமுறை இடம்மாறி, திசை மாறியிருக்கின்றன என்பதைப் பழைய வரலாறுகளிலிருந்து அறியலாம்.

     இனி நம்முடைய வரலாறு நடந்த காலத்துக்கு வருவோம். இலங்கைத் தீவிலிருந்து சோழ நாட்டுக்குப் பார்த்திபேந்திரனுடைய கப்பல் வந்து கொண்டிருந்தபோது உண்டான சுழிக்காற்று, வந்தியத்தேவனை முன்னிட்டு இளவரசர் அருள்மொழிவர்மரைக் கடலில் குதிக்கச் செய்தபிறகு, கடலோரமாகவே சென்று கலிங்க நாட்டை அடைந்து மறைந்தது.

     ஆனால் அருள்மொழிவர்மர் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரத்தில் தங்கியிருந்தபோது உண்டான சுழிக்காற்று, சோழ நாட்டுக்குள்ளேயே புகுந்து பற்பல அட்டகாசங்களைச் செய்து கொண்டு மேற்கு நோக்கிச் சென்றது. ஒரே இரவில் அது காவேரியின் இருபுறங்களிலும் தன் லீலைகளை நடத்திக் கொண்டு போய் மறுநாள் கொங்குநாட்டை அடைந்து தேய்ந்து மறைந்தது. அது பிரயாணம் செய்த இடங்களிலெல்லாம் பற்பல சேதங்களை விளைவித்தது மட்டுமன்று; அதைத் தொடர்ந்து பெருமழை கொட்டும்படியாகவும் செய்து கொண்டு போயிற்று. மேற்கே போகப்போக மழை அதிகமாகப் பெய்தது. ஆகவே காவேரியிலும் கொள்ளிடத்திலும் அவற்றிலிருந்து பிரிந்த கிளை நதிகளிலும் மறுநாள் முதல் வெள்ளம் அபரிமிதமாக வந்தது. பல நதிகள் கரைகளை உடைத்துக் கொண்டன. மழையினாலும், நதிகளின் உடைப்பினாலும் சோழ நாடெங்கும் வெள்ளக் காடாகிவிட்டது.

     ஆனால் இவ்வளவு இயற்கை விபரீதங்களும் சோழநாட்டு மக்களைப் பீதிகொண்டு செயலிழந்து செய்துவிடவில்லை. இவை அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சிகளாதலால், அம்மாதிரி நிலைமைகளில் என்ன செய்யவேண்டும் என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள். அப்போதைக்குக் கோயில் மண்டபங்களிலோ வேறு உயரமான இடங்களிலோ ஏறிக்கொண்டு உயிர் தப்புவார்கள். வெள்ளம் எவ்வளவு அவசரமாக வந்ததோ, அவ்வளவு துரிதமாக வடிந்து போய்விடும். வீடுகளை இழந்தவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியைக் கொண்டு உடனே வீடு கட்டிக்கொள்வார்கள். “ஐயோ! போய் விட்டதே! என்று தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடமாட்டார்கள்.

     சோர்வு சோம்பல் என்பதையே அறியாத தன்னம்பிக்கை கொண்ட மக்கள் அக்காலத்தில் சோழ நாட்டில் வாழ்ந்திருந்தார்கள். இல்லாவிடில் இன்றைக்கும் உலகம் கண்டு வியக்கும்படியான அற்புதங்களை அவர்கள் சாதித்திருக்க முடியாது அல்லவா?

     வானதி கோயில் மண்டபத்தின் மீது ஏறாமல் தவறித் தண்ணீரில் விழுந்ததும் முதலில் மண்டபத்தின் மேல் ஏறியிருந்தவர்கள் கவலை அடைந்தார்கள். ஆனால் உடனடியாக அந்தக் கவலை மாறியது. வானதி, ஜோதிடர் வீட்டுக் கூரைமீது தொத்திக் கொண்டதைப் பார்த்து அவர்களுக்குத் தைரியம் உண்டாயிற்று. இளையபிராட்டி ஓரளவு குதூகலமே அடைந்தாள். வானதியை அபாயகரமான நிலைமைகளில் சிக்க வைப்பதிலும், அவள் எப்படிச் சமாளிக்கிறாள் என்று பார்ப்பதிலும் குந்தவை தேவிக்கு எப்போதும் உற்சாகம் இருந்தது. வீராதி வீரனான தம்பியை மணந்து கொள்ளப் போகிறவள் நெஞ்சுத் துணிவுள்ள தீர மங்கையாக வேண்டுமென்பதில் இளைய பிராட்டிக்குச் சிரத்தை இருந்தது. அத்தகைய தீரத்தை வானதியின் உள்ளத்தில் வளர்க்கும் பொருட்டுத் குந்தவை பல உபாயங்களையும் தந்திரங்களையும் கையாண்டு வந்தாள். அந்த உபாயங்கள் நல்ல பலன் அளித்திருக்கின்றன என்ற நம்பிக்கையும் அவளுக்கு ஏற்பட்டிருந்தது.

     சில காலமாக வானதி மூர்ச்சையடைந்து விழும் வழக்கத்தை விட்டுவிட்டிருந்தாள் அல்லவா? இப்போது குந்தவையின் தந்திரம் ஒன்றுமின்றித் தெய்வாதீனமாகவே வானதியின் தீரத்தைச் சோதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருக்க, ஓர் ஓட்டுக் கூரையின் மேல் வானதி தொத்திக் கொண்டிருந்தாள். அவள் பயப்படாதிருப்பாளா? ஜோதிடரின் சீடன் படகு கொண்டு வந்து அவளைத் தப்புவிக்கும் வரையில் தைரியத்தைக் கைவிடாது இருப்பாளா? ஆம்; இருப்பாள்! சந்தேகமில்லை! இத்தனை காலமும் அளித்து வந்த பயிற்சி இச்சமயம் பயன்படாமலா போய்விடும்?

     இவ்விதம் குந்தவை எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது, ஆழ்வார்க்கடியான், “தாயே! இது என்ன? கூரை நகர்வதாகத் தோன்றுகிறதே?” என்றான்.

     “உன் கண்ணிலே ஏதோ கோளாறு! வெள்ளம் நகர்ந்து செல்கிறது; கூரை நகர்வதாகத் தோன்றுகிறது!” என்றாள் குந்தவை.

     இப்படிச் சொல்லும்போதே அவளுடைய உள்ளத்திலும் சந்தேகம் உதித்து விட்டது. அதன் அறிகுறி முகத்திலும் காணப்பட்டது.

     “அம்மா! நன்றாகப் பாருங்கள்!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

     “ஐயோ! இது என்ன விபரீதம்?” என்றாள் இளைய பிராட்டி.

     “ஜோதிடரே! உம்முடைய சீடன் சீக்கிரம் படகுடன் வருவானா?” என்றான் ஆழ்வார்க்கடியான்.

     “போதும்! போதும்! ஜோதிடரையும் அவருடைய சீடனையும் நம்பியது போதும்! திருமலை! உன்னால் வானதியைக் காப்பாற்ற முடியுமா என்று பார்; இல்லாவிட்டால், நானே வெள்ளத்தில் குதிக்க வேண்டியதுதான்! வானதிக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், அப்புறம் நான் ஒரு கணமும் உயிர் வைத்திருக்கமாட்டேன்!” என்றாள்.

     “தாயே! அபாயம் நேரும் காலத்திலேதான் நிதானத்தை இழக்கக்கூடாது. இது தங்களுக்கு தெரியாதது அல்ல. கொடும்பாளூர் இளவரசிக்கு உதவி செய்வதற்காக என் உயிரைக் கொடுக்கவும் சித்தமாயிருக்கிறேன்; அதனால் பயன் ஏற்பட வேண்டுமே? படகு இல்லாமல் நான் மட்டும் நீந்திச் சென்றாள் அந்தக் கூரையில் போய் நானும் தொத்தி ஏறிக் கொள்ளலாம். கொடும்பாளூர் இளவரசியைத் தாங்கும் கூரை என்னையும் சேர்த்துத் தாங்குமா? அல்லது இரண்டு பேரையும் வெள்ளத்தில் அமுக்கிவிட்டுக் கூரையும் கீழே போய்விடுமா? இதைப்பற்றி சிறிது யோசிக்க வேண்டும்…”

     பூங்குழலியின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு அவளை இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். “இந்த வீர வைஷ்ணவர் யோசித்து முடிப்பதற்குள் கொடும்பாளூர் இளவரசியின் வாழ்க்கை முடிந்துவிடும்!” என்றாள் பூங்குழலி.

     “அப்படி நேர்ந்தால் இந்த ஓடக்காரப் பெண் சந்தோஷப்படுவாள்!” என்று ஆழ்வார்க்கடியான் கூறியதும் பூங்குழலியின் முகத்தில் ஆத்திரம் கொதித்தது.

     திருமலை மேலும் தொடர்ந்து கூறினான்: “ஆனால், தேவி! அவ்விதம் ஒன்றும் நேரப் போவதில்லை! ஆலிலை மேல் பள்ளி கொண்டு அகிலமெல்லாம் காப்பாற்றும் திருமால், வானதியையும் காப்பாற்றுவார். மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள் எடுத்து இந்தப் பூவுலகைக் காப்பாற்றிய ஸ்ரீமந்நாராயணன் கொடும்பாளூர் இளவரசியையும் காப்பாற்றுவார்!… அதோ பாருங்கள்! ஜோதிடர் சீடன் படகுடன் வருகிறான்!”

     ஆழ்வார்க்கடியான் சுட்டிக்காட்டிய திசையில் உண்மையாக படகு வந்து கொண்டிருந்தது. அப்படகு வெள்ளத்தின் வேகத்தை எதிர்த்து இவர்கள் இருந்த கோயில் மண்டபத்தை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்தது. வானதி ஏறியிருந்த கூரையோ வெள்ளத்தோடு போய்க் கொண்டிருந்தது. படகு இங்கே வந்து இவர்களை ஏற்றிக் கொண்டு போவதற்கு வெகு நேரம் ஆகிவிடும். அதற்குள் வானதி அதிக தூரம் போய் விடுவாள். கண்ணுக்கு மறைந்தாலும் மறைந்து விடுவாள்.

     இதையெல்லாம் எண்ணி மண்டபத்தில் மேல் நின்றவர்கள் படகில் வந்த ஜோதிடர் சீடனைப் பார்த்து உரக்கக் கத்தினார்கள்; சமிக்ஞைகளும் செய்து பார்த்தார்கள். தன்னைச் சீக்கிரம் வரச் சொல்லுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டு அவன் படகை விரைவாகச் செலுத்தி வர முயன்றான்.

     பூங்குழலி அப்போது குந்தவையைப் பார்த்து, “தேவி! எனக்கு அனுமதி கொடுங்கள்! நான் நீந்திப்போய் படகை வழிமறிந்து அழைத்துச் சென்று கொடும்பாளூர் இளவரசியை ஏற்றி வருகிறேன்!” என்றாள். குந்தவை சிறிது தயங்கினாள். பூங்குழலி கையைக் கொடுக்கப் போய்த்தான் வானதி வெள்ளத்தில் விழுந்தாள் என்பது அவளுக்கு நினைவு இருந்தது.

     “தேவி என்னை நம்புங்கள், என்னுடைய அஜாக்கிரதையினால் தான் இளவரசி வெள்ளத்தில் விழுந்தாள். ஆகையால் அவரை மீட்பது என்னுடைய கடமை!” என்று பூங்குழலி கூறினாள்.

     “பெண்ணே! உன்னை நான் நம்புகிறேன். ஆனால் வானதியைத் தான் நம்பவில்லை!” என்றாள் குந்தவை.

     “ஆகா! நான் இருக்கும் படகில் ஒருவேளை ஏற மறுத்து விடுவார் என்கிறீர்களா? அப்படியானால் அவரை ஏற்றிவிட்டு நான் இறங்கிக் கொள்வேன்!” என்று சொல்லிக் கொண்டே பூங்குழலி வெள்ளத்தில் பாய்ந்தாள். படகை நோக்கி விரைந்து சென்றாள்.

     குந்தவை ஜோதிடரைப் பார்த்து, “ஐயா! ஜோதிடரே! உம்முடைய சாஸ்திரத்தில் ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தேன்; இன்றைக்கு அந்த நம்பிக்கையை இழந்து விட்டேன்!” என்றாள்.

     “ஆனால் எனக்கு இன்றைக்குத்தான் பூரண நம்பிக்கை ஏற்பட்டது. தேவி! கொடும்பாளூர் இளவரசியின் ஜாதகப் பிரகாரம் அவருக்கு இன்று பெரிய கண்டம் வரவேண்டும். பழுவேட்டரையர் மூலம் அது வருமோ என்று நினைத்தேன். அப்படி வராமற் போகவே ஆச்சரியமடைந்தேன். வேறு விதமாகக் கண்டம் வந்தது. இளவரசி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைப்பார்! ஆகா! அவருடைய அபூர்வமான கை ரேகைகள்! அவர் விஷயமாக நான் சொல்லியிருப்பதெல்லாம் நிறைவேறும், அதைப் பற்றி சந்தேகமில்லை!” என்றார்.

     “அழகாய்த்தானிருக்கிறது, அது எப்படி நிறைவேறும்? வானதி இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தாலும் உம் ஜோசியம் நிறைவேறப் போவதில்லை. சற்றுமுன் உம்முடைய வீட்டில் அந்தப் பெண் செய்த சபதத்தை நீர் கேட்கவில்லையா?” என்றாள் குந்தவை.

     “யார் என்ன சபதம் செய்தாலும், என் ஜோசியம் நிறைவேறியே தீரும். அப்படி நிறைவேறாவிட்டால், என்னிடமுள்ள ஜோதிட ஏடுகளையெல்லாம் காவேரி நதியில் எறிந்து விடுகிறேன்! இது என் சபதம்!” என்றார் ஜோதிடர்.

     அப்போது ஆழ்வார்க்கடியான், “ஜோதிடரே! உமது ஏடுகளை நீரே எறியும் வரையில் காவேரி மாதா காத்திருக்கவில்லை. அவளே கொண்டுபோய் விட்டாள்!” என்றான்.

     ஜோதிடர் அவன் கூறியதன் உண்மையை உணர்ந்து திகைத்து நின்றார். “ஆயினும், என் ஜோதிடம் பலிக்காமற் போகாது!” என்று தம் வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார்.

17. யானை எறிந்தது!
     சென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்த அன்றைக்கு முதல் நாள், நாகைப்பட்டின நகர மாந்தரின் விருந்தினராக இளவரசர் அருள்மொழிவர்மரை நாம் விட்டு விட்டு வந்தோம். விருந்தெல்லாம் முடிந்த பிறகு அலங்கரித்த யானைமீது ஏறி இளவரசர் புறப்பட்டார். எண்ணற்ற மக்கள் அவரைத் தொடர்ந்து ‘தஞ்சைக்கு வருவோம்’ என்று கிளம்பினார்கள். அன்றிரவு இளவரசரும் அவருடன் வந்த ஜனங்களும் திரு ஆரூர் வந்து சேர்ந்தார்கள்.

     திரு ஆரூர் மக்கள் இளவரசர் வருகையை முன்னதாக அறிந்திருந்தபடியால், அவருக்கு இராஜரீக வரவேற்பு அளித்து இராஜோபசாரங்கள் செய்தார்கள். பழம் பெரும் பதியான திரு ஆரூரின் குணவாசலிலிருந்து குடவாசல் வரையில் மக்கள் திரண்டு நின்றார்கள். நாலு இராஜ வீதிகளும் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி ஜனக்கூட்டம் நிறைந்திருந்தது. வீடுகளின் முகப்புக்கள் எல்லாம் தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. திரு ஆரூர்ச் சோழ மாளிகையையும் அதிகாரிகள் அலங்கரித்திருந்தார்கள். இளவரசருக்கு மட்டுமின்றி அவருடன் வரும் திரளான மக்களுக்கும் விருந்தளிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

     முதல் நாளிரவு திரு ஆரூர் வழியாகவும் கொடும் புயல் சென்றிருந்தது. ஆனால் இளவரசர் வருகையில் உண்டான குதூகல கோலாகலப் புயல், முதல் நாள் அடித்த புயலை அடியோடு மறக்கச் செய்துவிட்டது. வீதிகளிலெல்லாம் வாத்திய முழக்கங்களும், ஆடல் பாடல்களும், குரவைக் கூத்துக்களும், பொம்மையாட்டங்களும், வீர முழக்கங்களுடன் கூடிய கத்தி விளையாட்டு – கழி விளையாட்டுக்களும் நடந்து கொண்டிருந்தன.

     தஞ்சாவூர்ச் சோழ குலத்தினர் தில்லையம்பலத்தில் ஆடும் நடராஜப் பெருமானின் கோயிலுக்கு அடுத்தபடியாகத் திரு ஆரூரில் உள்ள தியாகராஜப் பெருமானின் ஆலயத்திடம் விசேஷ பக்திகொண்டு, ஏராளமான மானியங்கள் அளித்திருந்தார்கள். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் மட்டும் அது வரையில் திரு ஆரூர் வந்ததில்லை. ஆகையால் கோயிலுக்கு இளவரசர் அவசியம் வரவேண்டுமென்று ஆலயத்தார் வற்புறுத்தினார்கள். இளவரசரும் கோயிலுக்குப் போனார். பல காரணங்களினால் அவருடைய உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தபடியால் இறைவனுடைய திருக்கோலங்களில் அவருடைய மனம் பூரணமாக ஈடுபட முடியவில்லை. அர்ச்சனை ஆராதனைகள் முடிந்து இறைவனுடைய பிரசாதங்களும் பெற்றுத் திரும்பும் சமயத்தில், ஆலயத்தார்களைப் பார்த்து இளவரசர் “இந்தக் கோயிலின் இறைவருக்குத் தியாகராஜர் என்று ஏன் பெயர் வந்தது?” என்று கேட்டார்.

     தேவர்களுக்குள் மகாதேவரும், மூவர்களில் முதல்வருமான சிவபெருமான் மூன்று உலகங்களிலும் வாழும் உயிர்கள் உய்யும் பொருட்டுச் செய்த தியாகங்களை ஆலயத்தார் எடுத்துச் சொன்னார்கள். மூன்று உலகங்களையும் ஆக்கவும், அழிக்கவும் வல்ல பெருமான் தம்முடைய பக்தர்களுக்கு அருள்புரியுமாறு மேற்கொண்ட கஷ்டங்களைப்பற்றிக் கூறினார்கள். உயிர்கள் உய்யும் பொருட்டுத் தவக்கோலம் பூண்டு மயானத்தில் தவம் புரிந்ததைப் பற்றிச் சொன்னார்கள். அந்தத் தவத்தையும் கைவிட்டுத் தேவர்களின் நன்மைக்காக உமையை மணந்தது பற்றிக் கூறினார்கள். எல்லா உலகங்களும் இறைவர், பிக்ஷாடன மூர்த்தியாகத் தோன்றிப் பிச்சை எடுத்த வரலாற்றைக் கூறினார்கள். தில்லை அம்பலத்தில் வந்து ஆடியது பற்றிச் சொன்னார்கள். பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்பினால் அடிபட்டது பற்றியும் கூறினார்கள்.

     அத்தகைய தியாகராஜப் பெருமான், கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திரு ஆரூரில் பழைய காலத்தில் அருள்மொழிவர்மரின் முன்னோர்கள் வசித்து வந்ததையும், மனுநீதிச் சோழன் பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டுத் தன் அருமை மகனையே தியாகம் செய்த அற்புதத்தையும் நினைவூட்டினார்கள்.

     இவையெல்லாம் அருள்மொழிவர்மரின் உள்ளத்தில் நன்கு பதிந்தன. இதுகாறும் புத்த பகவானுடைய தியாகத்தை நினைந்து நினைந்து வியந்து கொண்டிருந்த இளவரசர், தேவ தேவரான சிவபெருமானைத் தியாக மூர்த்தியாகச் சித்தரிக்கும் வரலாறுகளைப் பற்றி எண்ணி எண்ணி வியக்கத் தொடங்கினார். மேலைத் தேசங்களிலே கடவுளின் திருப்புதல்வராகப் போற்றப்படும், அவதார புருஷன் மக்களின் நலத்துக்காகச் சிலுவையில் அறையப்பட்டு மாண்டார் என்ற வரலாறும் அவர் காதுக்கு எட்டியிருந்தது. இவற்றையெல்லாம் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க, மனிதனுக்குத் தெய்வத்தன்மை அளிக்கக் கூடியது தியாகந்தான் என்னும் எண்ணம் அவர் மனதில் வேர் ஊன்றியது. ஆதலின் அவரைச் சூழ்ந்துள்ள மக்கள் அனைவரும் தம் மீதுள்ள அன்பின் மிகுதியினால் தம்மைத் தஞ்சைச் சிங்காதனத்தில் அமர்த்திப் பட்டம் சூட்ட விரும்புவது பற்றி அவர் மனம் அளவில்லாத வேதனை அடைந்தது. இவர்களுடைய அன்புச் சிறையிலிருந்து தப்புவது எப்படி என்பது பற்றியும் தீவிரமாக யோசிக்கலானார்.

     ஆலய வழிபாட்டுக்குப் பிறகு திரு ஆரூர் மக்கள் இளவரசருக்குப் பெருவிருந்து அளித்தார்கள். அவரை உபசரிக்கும் பொருட்டுப் பற்பல கேளிக்கைகளை நடத்தினார்கள். அவற்றிலெல்லாம் இளவரசரின் உள்ளம் ஈடுபடாவிட்டாலும் வெளிப்படையாக உற்சாகம் காட்டி ஏற்றுக் கொண்டார்.

     பின்னர் ஏறக்குறைய நடுநிசியில் இளவரசர் சோழ மாளிகைக்கு வந்து சேர்ந்தார். அங்கே சில விபரீதமான செய்திகள் காத்திருந்தன. தஞ்சைக்கு மேற்கே பலமான மழை பெய்தபடியால் காவேரியிலும் கொள்ளிடத்திலும் அவற்றின் கிளை நதிகளிலும் பெரு வெள்ளம் வந்து பல இடங்களில் கரை உடைத்துக் கொண்டதாகவும், ஒரே வெள்ளக் காடாக இருப்பதால் மேற்கொண்டு பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்துவது கஷ்டமாயிருக்குமென்றும் சொன்னார்கள். இரண்டு நாள் திரு ஆரூரில், தங்கி, வெள்ளம் வடிந்த பிறகு புறப்படுவது உசிதம் என்று தெரிவித்தார்கள். இதற்கு இளவரசர் இஷ்டப்படவில்லை. தஞ்சையை உடனே அடைய வேண்டுமென்ற பரபரப்பு அவர் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. நதி உடைப்புக்களும், வெள்ளமும் அவருடைய அந்த ஆர்வத்தைத் தடை செய்துவிடக்கூடுமா, என்ன? ஆம்; இத்தனை ஜனங்களும் பரிவாரங்களும் புடை சூழப் போவதாயிருந்தால் பிரயாணம் தடைப்படத்தான் செய்யும். தாம் மட்டும் தனியே யானை மீது ஏறிச் சென்றால் பிரயாணம் தடைப்படவேண்டிய அவசியமில்லை. யானைக்கு அண்டாத ஆழம் உடைய நதி எதுவும் தஞ்சைக்குப் போகும் வழியில் இல்லை. அப்படியிருந்தாலும் இளவரசருக்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது. தண்ணீரிடத்தில் அவருக்கு எப்போதும் அச்சம் ஏற்பட்டதில்லை. பொன்னி நதி அவருடைய அன்னைக்கு மேலான அன்புடையவள் ஆயிற்றே? சின்னஞ்சிறு குழந்தைப் பிராயத்தில் தான் முழுகிப் போகாமல் காப்பாற்றிய காவேரித் தாய் இப்போது தன்னைக் காப்பாற்ற மாட்டாளா?

     இந்தப் பெருந் திரளான மக்களிடமிருந்து எப்படித் தப்பித்துச் செல்வது என்பதுதான் கேள்வி. அயோத்தியின் மக்களிடமிருந்து இராமர் இரவுக்கிரவே தப்பிச் சென்றது பொன்னியின் செல்வருக்கு நினைவு வந்தது. அவ்விதமே அவரும் இரவில் ஜனங்கள் தூங்கும் சமயத்தில் போய்விட்டால் என்ன? எல்லாவற்றுக்கும் யானைப் பாகனிடம் எந்த நேரத்திலும் புறப்பட ஆயத்தமாயிருக்கும்படி சொல்லி வைப்பது நல்லது.

     இந்த எண்ணம் தோன்றியதும் யானைப்பாகனை அழைத்து வரும்படி அரண்மனைச் சேவகனுக்கு இளவரசர் கட்டளையிட்டார். சேவகன் வீதிக்குச் சென்று பார்த்துவிட்டு உடனே திரும்பி வந்தான். யானை மட்டும் வாசலில் கட்டியிருக்கிறதென்றும் யானைப்பாகனைக் காணோம் என்றும் தெரிவித்தான்.

     “ஒருவேளை வீதிகளில் நடைபெறும் ஆடல்பாடல் களியாட்டங்களைப் பார்க்கப் போயிருப்பான். அவன் திரும்பி வந்ததும் அழைத்து வா! அல்லது யாரையாவது சிலரை அனுப்பித் தேடிப் பார்க்கச் சொல்!” என்று இளவரசர் கட்டளையிட்டார்.

     “ஆகட்டும், அரசே! படகோட்டி முருகய்யன் என்பவன் ஒருவன் மாளிகை வாசலில் வந்து காத்திருக்கிறான். தங்களை அவசரமாகப் பார்க்கவேண்டும் என்று அவன் பிடிவாதம் பிடிக்கிறான்!” என்றான் சேவகன்.

     படகோட்டி முருகய்யனை இத்தனை நேரம் மறந்திருந்தது பற்றி இளவரசர் பச்சாதாபங்கொண்டார். தாம் இரகசியமாகத் தப்பிச் செல்வதற்கு அவன் ஒருவேளை உதவியாயிருந்தாலும் இருப்பான். அவனை உடனே தம்மிடம் அனுப்பும்படி அரண்மனைச் சேவகனுக்குக் கட்டளையிட்டார்.

     முருகய்யன் இளவரசரிடம் வந்ததும் அவருடைய காலில் விழுந்து, தேம்பி அழத் தொடங்கினான் இந்த மூட பக்தனைச் சமாதானப்படுத்துவதும் அவனிடம் விஷயங்களைக் கிரஹிப்பதும் சிரமமான காரியந்தான், ஆயினும் செய்யவேண்டும். முருகய்யன் தனது துயரத்தின் காரணத்தைக் கூறினான் அதன் விவரமாவது; முருகய்யன் நாகைப்பட்டினத்திலேயே தன் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டான். திரு ஆரூர் வந்து சேர்ந்த பிறகு அவளும் அங்கு வந்திருக்கிறாளா என்று பார்ப்பதற்காக ஜனக் கூட்டத்தினிடையில் அலைந்து சுற்றினான். ஒரு ஜாம நேரம் தேடிய பிறகு இராஜ வீதியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு சந்தின் முனையில் அவன் மனைவியும், இளவரசர் ஏறிவந்த யானையைச் செலுத்திய யானைப்பாகனும் போவதைக் கண்டான். அவர்கள் சந்தில் புகுந்ததும் மிக வேகமாக நடந்து சென்றார்கள். முருகய்யனும் தொடர்ந்து போனான். கடைசியாக ஒரு வீட்டின் வாசலில் நின்றார்கள். அங்கே இன்னொரு மனிதன் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அவனும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான். பிறகு மூன்று பேரும் சேர்ந்து போனார்கள். முருகய்யனுக்கு ஏதேதோ சந்தேகங்கள் உதித்தன. தன் மனைவியின் ஒழுக்கத்தைப் பற்றியே ஐயம் கொண்டான். உண்மையைக் கண்டுபிடிக்க ஆத்திரம் அடைந்தான். ஆகையால் அவர்களைப் போய்ப் பிடித்துவிடாமல் பின்னாலேயே போனான். அவர்கள் ஊரைத் தாண்டி வாய்க்கால் – வயல் வரப்புகள் வழியாகச் சென்று கடைசியில் ஒரு மயானத்தை அடைந்தார்கள். முருகய்யனுடைய உள்ளம் பயங்கரத்தை அடைந்தது. ஆயினும் அவன் விடாமல் சென்று மயானத்தில் இருந்த ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். ராக்கம்மாளுடனும், யானைப்பாகனுடனும் வழியில் சேர்ந்து கொண்ட மனிதன், மயானத்தில் சாம்பலைப் பூசிக்கொண்டு ஏதேதோ பயங்கரமான மந்திரங்களை உச்சரித்தான். பிறகு யானைப்பாகனைப் பார்த்து, “நாளைக் காலையில் உன் உயிருக்கு ஆபத்து வரப்போகிறது! ஜாக்கிரதையாயிருந்து பிழை!” என்றான். யானைப்பாகன் கதி கலக்கத்துடன், “என்ன ஆபத்து? எவ்விதம் வரும்? தெரிந்தால் அல்லவா பிழைக்கலாம்?” என்றான். மந்திரவாதி “யானைக்குத் திடீர் என்று மதம் பிடிக்கும்! நீ அருகில் சென்றதும் உன்னைக் கீழே தள்ளிவிட்டு ஓடும்! உன்னால்தான் யானைக்கு மதம் பிடித்தது என்று ஜனங்கள் எண்ணுவார்கள். உன் கையிலுள்ள அங்குசத்தைப் பிடுங்கி உன்னைக் கொன்று விடுவார்கள்!” என்றான் மந்திரவாதி. “ஐயையோ! தப்புவதற்கு வழி என்ன?” என்று யானைப்பாகன் கேட்டான். “நாளைக் காலையில் யானையிடம் நெருங்காமலிருந்து விடு!” என்றான் மந்திரவாதி. “அது எப்படி முடியும்? பின்னால் இராஜ தண்டனைக்கு உள்ளாக நேரிடுமே?” என்று யானைப்பாகன் அலறினான். “அப்படியானால், என் வீட்டுக்கு வா! மந்திரித்த கவசம் தருகிறேன்; அதை அணிந்து கொண்டு போ! கையில் அங்குசத்தைக் கொண்டு போகாதே!” என்றான் மந்திரவாதி. “அப்படியே ஆகட்டும், ஐயா! இளவரசருக்கு ஏதேனும் ஆபத்து நேருமா?” என்று யானைப்பாகன் கேட்டான். “அது எப்படிச் சொல்ல முடியும்? இளவரசர் வந்து கேட்டால் அல்லவோ சொல்லலாம்?” என்றான் மந்திரவாதி.

     முருகய்யன் அதற்குமேல் அங்கே நிற்க மனமில்லாமல் ஓடி வந்துவிட்டான். நாளைக் காலையில் யானைக்கு மதம் பிடிக்கப்போகும் செய்தியை இளவரசரிடம் சொல்லி எச்சரிப்பதற்காகவே முக்கியமாக ஓடி வந்தான்… இதையெல்லாம் கூறிவிட்டு முருகய்யன் மீண்டும் தேம்பி அழுதான்.

     “அப்பனே! ஏன் அழுகிறாய்? நீதான் சமயத்தில் வந்து எச்சரிக்கை செய்துவிட்டாயே? இனி, நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்றார் பொன்னியின் செல்வர்.

     “ஐயா! இதிலெல்லாம் என் மனைவி சம்பந்தப்படுவது பற்றித் தான் வருந்துகிறேன். ராக்கம்மாளைப் பற்றி என்ன நினைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. அவளைப்பற்றிய பழைய சந்தேகங்கள் திரும்பி வருகின்றன!” என்றான் முருகய்யன்.

     “அவளை நான் திருத்திவிடுகிறேன். நீ கவலைப்படாதே! உடனே திரும்பிப் போ! யானைப்பாகனை எப்படியாவது தேடிப் பிடித்து அழைத்துக்கொண்டு வா!” என்றார் இளவரசர்.

     படகோட்டி முருகய்யன் போன பிறகு பொன்னியின் செல்வர் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். முருகய்யன் கண்டது, கேட்டது இவற்றின் பொருள் என்னவாயிருக்கும் என்று ஊகத்தினால் அறிய முயன்றார். பழுவேட்டரையர்களின் உத்தேசம், பாண்டி நாட்டுச் சதிகாரர்களின் முயற்சி, இவற்றைக் குறித்து இளையபிராட்டி கூறியதை இளவரசர் நினைவு படுத்திக் கொண்டார். அந்தச் சதிகாரர்களின் முயற்சியில் இது ஒன்றாயிருக்கலாம். அல்லது வெறும் அசட்டுத்தனமாகவும் இருக்கலாம். எப்படியிருந்தாலும், காலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதுபற்றி ஒரு முடிவுக்கு வந்தார். பிறகு, நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்தார்.

     மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து பிரயாணத்துக்கு ஆயத்தமானார். மாளிகை வாசலுக்கு வந்தார். அங்கே கட்டியிருந்த யானை இளவரசரைப் பார்த்ததும் ஆதரவோடு துதிக்கையை நீட்டி அவரைத் தடவிக் கொடுத்துக் கொஞ்சியது. “யானைக்கு மதம் பிடிக்கும்” என்று மந்திரவாதி கூறியதாக முருகய்யன் சொன்னது இளவரசருக்கு நினைவு வந்தது. மதம் பிடிக்கும் என்பதற்கு அறிகுறி எதுவும் இல்லை.

     “யானைப்பாகன் எங்கே?” என்று இளவரசர் உரத்த குரலில் கேட்டார். உடனே பல குரல்கள் “யானைப்பாகன் எங்கே?” என்று எதிரொலி செய்தன.

     இளவரசரைப் போலவே அதிகாலையில் பிரயாணத்துக்கு ஆயத்தமாக ஜனங்கள் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களிடையே அகப்பட்டுக்கொண்டு முன்னால் வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்த முருகய்யனைப் பார்த்தார். அவனை நோக்கிச் சமிக்ஞை செய்யவே ஜனங்கள் அவனுக்கு வழிவிட்டார்கள். முருகய்யன் அருகில் வந்து இரவில் வெகுநேரம் தேடிய பிறகு தன் மனைவியை மாத்திரம் கண்டுபிடித்ததாகவும், அவள் தான் மயானத்துக்குப் போனதையெல்லாம் அடியோடு மறுத்து, முருகய்யனுக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்று கூறியதாகவும், யானைப்பாகன் அகப்படவே இல்லை என்றும் சொன்னான்.

     “அதைப்பற்றிக் கவலை இல்லை, முருகய்யா! யானையின் காலைக் கட்டியுள்ள சங்கிலியை அவிழ்த்து விடு!” என்றார் இளவரசர்.

     முருகய்யன் அவ்வாறு அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கும் போதே, “இதோ யானைப்பாகன் வந்துவிட்டான்!” என்று ஒரு குரல் கேட்டது. “வந்துவிட்டான்! வந்துவிட்டான்!” என்று பல குரல்கள் ஒலித்தன.

     கையில் அங்குசத்துடன் யானைப்பாகன் ஓடிவந்து கொண்டிருந்தான். கூட்டத்திலிருந்தவர்கள் அவசர அவசரமாக விலகிக் கொண்டு அவனுக்கு வழிவிட்டார்கள்.

     பொன்னியின் செல்வரும் “நல்ல வேளை!” என்று பெருமூச்சு விட்டு, யானைப்பாகன் ஓடி வந்துகொண்டிருந்த திசையை நோக்கினார்.

     பாவம்! ஒருநாள் இரவு அநுபவத்தில் அவன் எவ்வளவு மாறிப் போயிருக்கிறான்? பயப்பிராந்தி கொண்டவனாக அல்லவா தோன்றுகிறான்?

     ஒரு கையில் அங்குசம் வைத்துக்கொண்டிருந்த யானைப் பாகன், யானையின் அருகில் வந்து அதன் துதிக்கையை இன்னொரு கையால் தொட்டான்.

     யானை உடனே அவனைத் துதிக்கையால் சுழற்றிப் பிடித்துத் தலைக்கு மேலே தூக்கியது. கேட்டவர்கள் பீதி கொள்ளும்படியாகப் பிளறிவிட்டு, யானைப்பாகனை வீசி எறிந்தது! யானைப்பாகன் வெகு தூரத்திலே போய் விழுந்தான். அவன் கையில் வைத்திருந்த அங்குசம், இன்னும் அப்பாலே போய் விழுந்தது.

     “யானைக்கு மதம் பிடித்துவிட்டது!” என்ற பயங்கரம் நிறைந்த குரல் அந்த ஜனக் கூட்டத்திலே எழுந்தது. ஜனங்கள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள்!

18. ஏமாந்த யானைப் பாகன்
     “சந்தர்ப்பம் என்பது கடவுளுக்கு ஒரு புனை பெயர்” என்பதாகத் தற்கால அறிஞர் ஒன்று கூறியிருக்கிறார். கடவுள் தாம் செய்யும் காரியத்தைத் தாம் செய்தது என்று காட்டிக் கொள்ள விரும்பாத போது “சந்தர்ப்பம்” என்னும் புனை பெயரைச் சூட்டிக் கொள்ளுகிறாராம்! உலக சரித்திரத்தில் மிகப் பிரசித்திபெற்ற வீரர்கள், அரும் பெரும் காரியங்களைச் சாதித்த மகான்கள், – இவர்களுடைய வரலாறுகளைப் பார்க்கும்போது, சந்தர்ப்பம் இவர்களுக்கு மிக்க உதவி செய்திருக்கிறது என்பதை அறியலாம். அவர்களிடம் கடவுள் விசேஷ கருணை காட்டி அத்தகைய சந்தர்ப்பங்களை அனுப்புவதாகச் சிலர் கூறுவர். அவரவர்கள் பிறந்த வேளையின் மகிமை; ஜாதகத்தின் பலன், பிரம்மா எழுதிய, பூர்வஜன்ம சுகிர்தம், – என்றெல்லாம் வாழ்க்கையில் ஏற்படும் அநுகூலமான சந்தர்ப்பங்களுக்குக் காரணங்கள் கற்பிப்போரும் உண்டு.

     நம் காலத்தில் காந்தி மகான் தென்னாப்பிரிக்கா போவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படாதிருந்திருந்தால் அவர் மனித குல சிரேஷ்டர் என்றும், அவதார புருஷன் என்றும் மக்களால் போற்றப்படும் நிலையை அடைந்திருக்க முடியுமா?

     சந்திரகுப்தன் விக்கிரமாதித்தன், ஜுலியஸ் ஸீஸர், நெப்போலியன், டியூக் ஆப் வில்லிங்டன், ஜார்ஜ் வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் எவ்வளவோ உதவி செய்திருக்கின்றன என்பதை அறிந்திருக்கிறோம். இதிலிருந்து, ஆண்டவன் அவ்வளவு பாரபட்சமுள்ளவர் என்று முடிவு கட்டுதல் தவறாகும். சரித்திரத்தில் புகழ்பெற்ற மகான்களையும் வீரர்களையும் தவிர இன்னும் எத்தனையோ பேருக்கும் ஆண்டவன் சந்தர்ப்பங்களை அனுப்பிக் கொண்டுதானிருக்கிறார்.

     ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வது மனிதனுடைய சமயோசித அறிவையும், சரியான சமயத்தில் சரியான முடிவு செய்யும் ஆற்றலையும் பொறுத்தது. சந்தர்ப்பங்களைக் கை நழுவ விடுகிறவர் கோடானுகோடிப் பேர் பெயரும் புகழும் இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து உலகைவிட்டுச் செல்கிறார்கள். சந்தர்ப்பங்களைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் சரித்திரத்தில் தங்கள் பெயரை நிலைநாட்டிவிட்டுச் செல்கிறார்கள்.

     ஒரே நாளில், ஒரே நேரத்தில் பிறக்கிறவர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவோ வித்தியாசமாயிருப்பதற்குக் காரணம் வேறு என்ன சொல்ல முடியும்?

     இளவரசர் அருள்மொழிவர்மரின் வாழ்க்கையில் இப்போது அத்தகைய சந்தர்ப்பம் ஒன்று நேர்ந்தது. தன் அருகில் நெருங்கிய யானைப் பாகனைத் தூக்கி எறிந்தபோது, “யானைக்கு மதம் பிடித்துவிட்டது!” என்ற கூச்சல் கிளம்பியபோது, அந்தச் சந்தர்ப்பம் அவரை வந்தடைந்தது. அதை அவர் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டிருந்தால், இந்த வரலாறு வேறுவிதமாகப் போயிருக்கும். தமிழ் நாட்டின் சரித்திரத்தில் இராஜராஜ சோழர் உன்னத ஸ்தானத்துக்கு வந்திருக்கவும் முடியாது.

     அதிர்ஷ்டவசமாக அந்தச் சந்தர்ப்பத்தைத் தெரிந்து கொண்டு அதை உபயோகப்படுத்திக் கொள்ளும் சமயோசித அறிவாற்றல் அவரிடம் இருந்தது. படகோட்டி முருகய்யன் முதல் நாள் கூறிய வரலாற்றை நினைவுபடுத்திக்கொண்டார். யானையை நெருங்கி வந்தவன் உண்மையான யானைப்பாகன் அல்ல, ஏதோ தீயநோக்கத்துடன் வந்தவன், அதனாலேதான் யானை அவனைத் தூக்கி எறிந்திருக்கிறது என்பதையும் ஒரு நொடியில் ஊகித்துக்கொண்டார். வந்தவன் யார், எதற்காக வந்தான் என்பதையெல்லாம் அச்சமயம் கண்டுபிடிக்க முயன்றால், கிடைத்த சந்தர்ப்பம் தவறிபோய்விடும். “யானைக்கு மதம் பிடித்துவிட்டது!” என்ற கூச்சலினால் மக்களிடையே உண்டான குழப்பத்தைப் பின்னர் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அந்த ஜனக்கூட்டத்தினிடையிலிருந்து தப்பிச் சென்று கூடிய விரைவில் தஞ்சையை அடைவது அச்சமயம் அவருடைய பிரதான நோக்கமாயிருந்தது. அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இதைக் காட்டிலும் சரியான சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.

     ஆதலின், முருகய்யனைத் தம் அருகில் அழைத்து, அவன் காதோடு ஏதோ சொல்லிவிட்டு, அவன் தோள்மீது ஏறி யானையின் மீது தாவினார். அப்படித் தாவும்போதே யானை மேலிருந்த அம்பாரியைத் தட்டிவிட்டார். அம்பாரி கீழே விழுந்து உருண்டது. பின்னர், யானையிடத்திலும் அதன் பாஷையில் ஏதோ சொன்னார். உடனே யானை பிய்த்துக் கொண்டு கிளம்பியது. முன்போல, பயங்கரமான குரலில் பிளிறிக் கொண்டே விரைவாக நடந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் ஓடவே தொடங்கிவிட்டது.

     அதே சமயத்தில் முருகய்யன், “ஐயோ! யானைக்கு மதம் பிடித்து விட்டது. ஓடுங்கள்! உடனே ஓடுங்கள்” என்று பெருங்கூச்சலிட்டான்.

     ஜனங்கள் முன்னைக் காட்டிலும் அதிக பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அக்கம் பக்கத்திலிருந்து குறுக்கு வீதிகளிலும் சந்துகளிலும் புகுந்து ஓடினார்கள். திறந்திருந்த வீடுகளுக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டார்கள். வேறு எதற்கும் அஞ்சாத தீர நெஞ்சமுள்ளவர்களும் மதங்கொண்ட யானை என்றால் ஓடத்தான் வேண்டும். எப்பேர்ப்பட்ட வீராதி வீரனானாலும் மதங்கொண்ட யானையை எதிர்க்க முடியாது. ஆயுதங்களுடனே எதிர்த்து நிற்பதும் இயலாத காரியம். நிராயுதபாணிகளான ஜனங்கள், ஆண்களும், பெண்களும், முதியோர்களும், பாலர்களும், மதயானைக்கு முன்னால் சிதறி ஓடாமல் வேறு என்ன செய்ய முடியும்?

     திரு ஆரூர் நகரத்தைத் தாண்டியது, இளவரசர் யானையை நேரே தஞ்சாவூர்ச் சாலையில் செலுத்துவதற்குப் பதிலாக, வடமேற்குத் திசையை நோக்கித் திருப்பினார். முதலிலேயே அவருக்கு வழியில் பழையாறையை அடைந்து அங்கே தம் திருத்தமக்கையார் இருந்தால், அவரைப் பார்த்துப் பேசிவிட்டுத் தஞ்சை போகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அது ஊர்ஜிதம் ஆயிற்று. மதம் பிடித்த யானை குறுக்கே விழுந்து ஓடுவதுதான் இயற்கையாயிருக்கும். தஞ்சைச் சாலையில் சென்றால் மக்கள் தம்மை விடாமல் தொடர்ந்து வரக்கூடும். வழியில்லாத வழியில் யானை போய்விட்டால், ஜனங்கள் தொடர்ந்து வரமுடியாது!

     இவ்விதம் அதி விரைவில் சிந்தித்து முடிவுசெய்து, யானையை வடமேற்குத் திசையில் குறுக்கு வழியில் செலுத்தினார். வயல்கள், வரப்புகள், வாய்க்கால்கள், நதிகள், அவற்றின் உடைப்புகள் – இவை ஒன்றையும் பொருட்படுத்தாமல் யானை ஜாம் ஜாம் என்று மனம் போன போக்கில் சென்றது. இளவரசரின் உள்ளமும் இனந்தெரியாத உற்சாகத்தை அடைந்து, கூண்டிலிருந்து விடுதலை அடைந்த பறவையைப் போல் ஆகாச வெளியில் வட்டமிட்டுத் திரிந்தது. தம்முடைய வாழ்நாளில் ஒரு முக்கியமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்றும் உள்ளுணர்ச்சியிலிருந்து உற்சாகமும் பரபரப்பும் பொங்கிக் கொண்டிருந்தன.

     யானை ஓடத் தொடங்கிய அதே சமயத்தில் முருகய்யனும் “யானைக்கு மதம் பிடித்துவிட்டது!” என்று கூச்சலிட்டுக் கொண்டு ஓடினான். யானையினால் தூக்கி எறியப்பட்ட பாகன் விழுந்த இடத்தைச் சுமாராகக் குறி வைத்துக்கொண்டு சென்றான். இளவரசர் தங்கியிருந்த சோழ மாளிகைக்குச் சற்றுத் தூரத்தில் நாடெங்கும் புகழ் பெற்ற கமலாலயம் என்னும் தடாகம் இருந்தது. அந்தக் குளக்கரையின் அருகில் சென்று பார்த்தான். யானைக்குப் பயந்தவர்கள் பலர் குளக்கரையில் இறங்கி நின்றார்கள். சிலர் குளத்தில் தண்ணீரிலே கூட இறங்கியிருந்தார்கள். ஒரு மனிதன் தட்டு தடுமாறி நீந்திக் கரையேறிக் கொண்டிருந்தான். அவனை முருகய்யன் உற்றுப் பார்த்தான். முதல் நாளிரவு யானைப்பாகனையும், ராக்கம்மாளையும் அழைத்துக்கொண்டுபோன மந்திரவாதிதான் அவன்! அதிர்ஷ்டக்காரன்! ஆயுள் ரொம்பக் கெட்டி! யானை தூக்கி எறிந்ததும் உயிர் பிழைத்திருக்கிறான் அல்லவா? கையில் அங்குசத்துடன் சற்றுமுன் யானையை நோக்கி ஓடி வந்தவன் இவனேதான்…! அங்குசம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அதுவும் குளத்தில் விழுந்து விட்டதா?

     முருகய்யன் அவன் அருகில் சென்று, “யானைப்பாகா! நல்ல வேளை பிழைத்து எழுந்து வந்தாய்! அங்குசம் எங்கே?” என்று கேட்டான்.

     ரேவதாஸன் என்னும் கிரமவித்தன் முருகய்யனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “என்னப்பா கேட்கிறாய்? நீ யார்? நான் இப்போது தான் குளத்தில் குளித்துவிட்டுக் கரை ஏறுகிறேன்!” என்று சொன்னான்.

     “ஓகோ! அப்படியா? நீ யானைப்பாகன் இல்லையா? யானை தூக்கி எறிந்தது உன்னை அல்லவா? அப்படியானால், யானைப்பாகன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.

     கிரமவித்தன் மேலும் திகைப்புடன், “நான் என்ன கண்டேன்? என்னை ஏன் கேட்கிறாய்?” என்றான்.

     “மந்திரவாதி! என்னை ஏன் ஏமாற்றப் பார்க்கிறாய்? நேற்றிரவு யானைப்பாகனை இடுகாட்டுக்கு அழைத்துப்போய் ‘இளவரசர் ஏறும் யானைக்கு மதம் பிடிக்கும்’ என்று எச்சரிக்கை செய்தாயே? அப்படியிருக்க, அந்த எச்சரிக்கையை நீயே மறந்துவிட்டு யானையிடம் அகப்பட்டுக் கொண்டாயே? அது உன் பாடு! யானைப்பாகன் எங்கே? என் மனைவி ராக்கம்மாள் எங்கே?” என்று கேட்டான் முருகய்யன். கிரமவித்தனின் முகத்தில் முன்னைவிடத் திகைப்பும் பீதியும் அதிகமாயின.

     “யானைப்பாகனாவது? ராக்கம்மாளாவது? உனக்கு என்ன பைத்தியமா?” என்று சொல்லிக்கொண்டே கிரமவித்தன் சுற்று முற்றும் பார்க்கலானான்.

     “ஆம், ஆம்! யானைக்கு மதம் பிடித்தது போலத்தான் எனக்கும் பைத்தியம் பிடித்திருக்கிறது! யானைப்பாகன் எங்கே என்று மட்டும் சொல்லிவிடு! இல்லாவிடில்…” என்று முருகய்யன் சிறிது அதிகார தோரணையில் அவனிடம் பேசத் தொடங்கினான்.

     சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்த ரேவதாஸன் இப்போது முருகய்யனைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். “நீ என்னை ‘மந்திரவாதி’ என்கிறாய்! நீ என்னைவிடப் பெரிய மந்திரவாதியாயிருக்கிறாயே! உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது! உன்னிடம் மறைப்பதில் பயனில்லை. ‘யானைக்கு மதம் பிடிக்கப் போகிறது! அதன் பேரில் ஏறவேண்டாம்’ என்று இளவரசருக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே ஓடி வந்தேன். அதன் பலன் இப்படி ஆயிற்று. உன் மனைவியும் யானைப்பாகனும் அங்கே ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அவர்களை நீ பார்க்க விரும்பினால், நானே அழைத்துப் போகிறேன். இளவரசருக்கு ஒன்றும் நேரவில்லையே! சௌக்கியமாயிருக்கிறார் அல்லவா?” என்றான்.

     “இளவரசர் சௌக்கியம். அவர்தான் உன்னையும், யானைப்பாகனையும் அழைத்துக்கொண்டு வரும்படி எனக்குக் கட்டளையிட்டார்…”

     “இளவரசரிடம் எனக்கு நல்ல பரிசு வாங்கித் தரவேண்டும்! பார்க்கப் போனால், அவரை நான் காப்பாற்றியது உண்மைதானே? ஆ! அதோ…!” என்று மந்திரவாதி வியப்புடன் கூறி நிறுத்தினான்.

     மந்திரவாதி உற்று நோக்கிய இடத்தில், குளத்தின் கரையோரமிருந்த அரளிச் செடிப் புதர்களில் வேல் முனை போன்ற ஒன்று சிறிது தெரிந்தது. “ஆ! அங்குசம்!” என்று சொல்லிக்கொண்டே மந்திரவாதி அந்த அரளிச் செடிப் புதரை நோக்கி ஓடினான். முருகய்யன் அவனைவிட விரைந்து ஓடி அரளிச் செடிப் புதர்களில் புகுந்து அங்குசத்தின் அடிப்பிடியைப் பிடித்து ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டான்.

     பின்னர், திரும்பிப் பார்த்தான்; மந்திரவாதியைக் காணவில்லை. “அடடா ஏமாந்து போய்விட்டோ மே?” என்ற துணுக்கத்துடன் அங்குமிங்கும் ஓடிப் பார்த்தான், பயனில்லை. குளக்கரையில் கூடியிருந்த பெரும் ஜனக் கூட்டத்தின் மத்தியில் புகுந்து மந்திரவாதி கிரமவித்தன் மாயமாய் மறைந்து விட்டான்.

     மதயானை ஓடிப்போன பிறகு, ஜனங்கள் மறுபடியும் திரும்பிச் சோழ மாளிகையை நெருங்கி வந்து கொண்டிருப்பதை முருகய்யன் கண்டான். ஆனால் அங்கே அவன் நிற்கவில்லை.

     முதல் நாள் மந்திரவாதியை அவன் பார்த்த வீடு எந்தத் திசையில் இருந்தது என்பதை நினைத்துப் பார்த்துக்கொண்டு, அதை நோக்கிச் சென்றான். வழியெல்லாம் இராஜ வீதிகளிலெல்லாம், ஜனங்கள் ஆங்காங்கு கூடிக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். மதயானை ஓடியதைப் பார்த்தவர்களில் சிலர், “யானையின் பேரில் யாரோ ஆள் இருந்ததாகச் தோன்றியது” என்றார்கள். மற்றும் சிலர் அதை மறுத்தார்கள். “அது எப்படி இருக்க முடியும்? யானைப்பாகனைத் தூக்கி எறிந்தவுடனேதான் யானை ஓடத் தொடங்கி விட்டதே? அதன் பேரில் யார் ஏறியிருக்க முடியும்” என்றார்கள். எல்லாரும் இவ்வாறு விவாதித்துக்கொண்டே சோழ மாளிகையை நோக்கித் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். தங்கள் இதயங் கவர்ந்த இளவரசருக்கு அபாயம் ஒன்றும் நேரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஜனங்கள் அனைவரும் ஆவலாக இருந்தார்கள்.

     முருகய்யன் ஜனங்கள் வந்த திசைக்கு எதிர்த் திசையைச் சென்று குறிப்பிட்ட சந்தை அடைந்தான். அங்கே அப்போது ஜன நடமாட்டமே இருக்கவில்லை. எல்லாரும் இராஜ வீதிகளுக்குப் போய்விட்டார்கள். இரவில் பார்த்த வீட்டைப் பகலில் அவ்வளவு சுலபமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. உற்றுப் பார்த்துக்கொண்டே முருகய்யன் போனான். ஒரு வீடு மட்டும் வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. உள்ளேயிருந்து ஏதோ முனகல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பாழும் வீடு இருந்தது. முருகய்யன் அந்தப் பாழும் வீட்டில் புகுந்து அடுத்த வீட்டின் மேற்கூரையில் ஏறி முற்றத்தில் குதித்தான். அவன் எதிர்பார்த்தபடியே அங்கே யானைப்பாகன் தென்பட்டான். அவன் வெறி கொண்டவனைப்போல் தோன்றினான். அவனுடைய கால்களையும், கைகளையும் கட்டியிருந்ததுமல்லாமல் ஒரு தூணோடும் அவனைச் சேர்த்துக் கட்டியிருந்தது. யானைப்பாகன் தன் கைக்கட்டுக்களைப் பல்லால் கடித்து அவிழ்க்கப் பெரு முயற்சி செய்து கொண்டிருந்தான். நடு நடுவில் கடிப்பதை நிறுத்தி விட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டுமிருந்தான்.

     முருகய்யனைப் பார்த்ததும் அவன் முகத்தில் சிறிது தெளிவு ஏற்பட்டது. நாகைப்பட்டினத்திலேயே அவன் முருகய்யனைப் பார்த்திருந்தான். இளவரசருக்கு வேண்டியவன் என்பதையும் அறிந்துகொண்டிருந்தான். ஆகையால் இப்போது பரபரப்புடன், “முருகய்யா! அவிழ்த்து விடு! அவிழ்த்து விடு! சண்டாளர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்! இளவரசருக்கு அபாயம் ஒன்றும் நேரவில்லையே?” என்றான்.

     முருகய்யன் கட்டுக்களை அவிழ்த்துவிட்டுக்கொண்டே காலையில் நடந்தவற்றைச் சுருக்கமாகக் கூறிவிட்டு, யானைப்பாகனிடம் அவனுக்கு நேர்ந்தது என்னவென்று விசாரித்தான். யானைப்பாகனும் ஒருவாறு தட்டுத்தடுமாறிக் கூறினான். யானைக்கு மதம் பிடித்தாலும் தனக்கு ஒன்றும் நேராமல் மந்திரகவசம் தருவதாகச் சொல்லி, இந்த வீட்டுக்கு அழைத்து வந்தார்கள் என்றும், இங்கே வந்ததும் சாம்பிராணிப் புகை போட்டுக் கொண்டே மந்திரவாதி மந்திரம் ஜபித்தான் என்றும், அப்போது தனக்கு மயக்கமாக வந்து தூங்கி விழுந்து விட்டதாகவும், கண் விழித்துப் பார்த்தபோது தன்னைத் தூணோடு கட்டிப் போட்டிருந்ததாகவும் கூறினான்.

     இருவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறிச் சோழ மாளிகையை நோக்கி விரைந்து சென்றார்கள். அவர்கள் அம்மாளிகையை அடைந்தபோது அங்கே முன்னைவிடப் பெருங்கூட்டம் கூடியிருப்பதையும் ஜனங்கள் மிக்கக் கவலையோடு பேசிக் கொண்டிருப்பதையும் கண்டார்கள். ஜனங்களின் கவலைக்குக் காரணம், இளவரசரைக் காணோம் என்பதுதான். அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைத் திட்டமாக அறிந்தவர்கள் அங்கு யாரும் இல்லை. யானை மேல் ஒருவர் இருந்ததைப் பார்த்ததாக மட்டும் சிலர் கூறினார்கள். அவர் ஒருவேளை இளவரசராக இருக்கலாம் என்று ஊகித்தார்கள்.

     இளவரசர் யானைகளைப் பழக்கும் வித்தையில் மிகத் தேர்ந்தவர் என்பதும், யானைகளின் பாஷைகூட அவருக்குத் தெரியும் என்பதும் சோழ நாட்டில் பிரசித்தமாயிருந்தன. ஆகையால், மதங்கொண்ட யானையினால் ஒருவருக்கும் தீங்கு நேரிடாமல் அதன் மதத்தை அடக்கும் பொருட்டுப் பொன்னியின் செல்வர் யானைமேல் ஏறிச் சென்றிருக்க வேண்டும் என்று சிலர் தங்கள் உறுதியான நம்பிக்கையைத் தெரிவித்தார்கள்.

     இச்சமயத்திலே அங்கே முருகய்யனும், யானைப்பாகனும் வந்தார்கள். யானைப்பாகனுக்கு நேற்றிரவு நேர்ந்தது அங்குள்ளவர்களுக்குத் தெரிந்தபோது, அவர்களுடைய வியப்பும் திகைப்பும் பன்மடங்கு அதிகமாயின.

     யானைப்பாகனைக் கட்டிப் போட்டுவிட்டு, அங்குசத்தை எடுத்துக் கொண்டு ஓடிவந்தவன் சோழ குலத்தின் விரோதிகளால் அனுப்பப்பட்டவனாயிருக்க வேண்டும். “ஒருவேளை பழுவேட்டரையர்களே அனுப்பியிருக்கக்கூடும்!” என்று சிலர் ஊகித்துக் கூறியதைப் பெரும்பாலான மக்கள் நம்பினார்கள். அதனால் பழுவேட்டரையர்களின் மீது அவர்களுடைய கோபம் அதிகமாயிற்று. அந்தக் கோபவெறியுடனே பலர் உடனே தஞ்சையை நோக்கிக் கிளம்பினார்கள். யானை போன வழியை விசாரித்துக் கொண்டு ஒரு பகுதியினரும், தஞ்சாவூருக்கு நேரே போகும் சாலையில் மற்றவர்களும் கோபாவேசத்துடன் புறப்பட்டுச் சென்றார்கள்

19. திருநல்லம்
     ஜோசியர் வீட்டின் ஓட்டுக்கூரையையும், அதனுடன் தன்னுடைய உயிரையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த வானதி, காவேரி நதியின் உடைப்பு வெள்ளத்தில் மிதந்து மிதந்து போய்க் கொண்டிருந்தாள். வெள்ளம் அவளை மேலே மேலே அழைத்துக் கொண்டு கிழக்கு நோக்கிச் சென்றது. சில சமயம் மெதுவாகச் சென்றது. சிலசமயம் வேகமாக இழுத்துச் சென்றது. வேறு சில போது பெரிய சுழல்களிலும் அந்த வீட்டுக் கூரை அகப்பட்டுக்கொண்டு சுற்றிச் சுழன்று தடுமாறிக் கொண்டு சென்றது.

     வெள்ளத்தின் ஆழம் அதிகமில்லாத மேட்டுப்பாங்கான இடங்களில் சில போது சென்றது. அது, மரங்களில் அடியில் வெள்ளம் எவ்வளவு தூரம் ஏறியிருக்கிறது என்பதைப் பார்த்ததும், ஆங்காங்கு காவேரிக் கரை ஓரமிருந்த மண்டபங்கள் எவ்வளவு தூரம் முழுகியிருக்கிறது என்பதைப் பார்த்ததும் தெரிந்தது. மேட்டுப்பாங்கான இடங்களில் கீழே இறங்கலாமா என்று வானதி யோசிப்பதற்குள் ஆழமான இடங்களுக்குச் சுழல்கள் இழுத்துப் போய்விட்டன.

     இறங்குவதற்கும் வானதிக்கும் அவ்வளவாக மனம் இல்லை. ஏனெனில், பொன்னி நதியின் அவ்வெள்ளம் அவளைப் பொன்னியின் செல்வர் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வதாக அவளுடைய மனதில் ஒரு தோற்றம் ஏற்பட்டிருந்தது. இளவரசருக்கு ஏற்படப் போகும் அபாயத்தைப் பழுவேட்டரையர் மூடுமந்திரமாக கூறியது அவள் உள்ளத்திலும் பதிந்திருந்தது. அவரை அந்த அபாயத்திலிருந்து பாதுகாக்கவே காவேரி நதி தன்னை அழைத்துப் போவதாக அவள் எண்ணிக் கொண்டாள்.

     ஆகா! அந்தப் பூங்குழலிக்குத்தான் எவ்வளவு கர்வம்? இளவரசர் விஷயத்தில் எவ்வளவு உரிமை கொண்டாடுகிறாள்? ஆயினும், உரிமை கொண்டாடுவதற்குக் காரணம் உண்டு. இன்று இளவரசர் பிழைத்திருப்பதே பூங்குழலியினால் தானே? – ஒரு நாளும் இல்லை! – அந்தக் குடந்தை ஜோதிடர் கூறியதைத்தான் வானதி கேட்டிருந்தாளே! இளவரசர் பிறந்த வேளை அப்படி! அவருக்கு இம்மாதிரி கண்டங்கள் பல வரக்கூடும்! ஆனால் அவர் உயிருக்கு ஒன்றும் ஆபத்து வராது! உலகத்தை ஆளப் பிறந்தவரைக் கேவலம் கடலும் புயலும், நதி வெள்ளமும் என்ன செய்துவிடும்? அவர் அவ்விதம் உயிர் தப்புவதற்கு யாரேனும் ஒரு வியாஜமாக வேண்டும்! பூங்குழலிக்கு அத்தகைய பாக்கியம் கிடைத்திருக்கிறது! அதற்காக அவள் உரிமை எப்படிக் கொண்டாடலாம்? – எனினும், அம்மாதிரி பாக்கியம் தனக்கும் ஒரு தடவை கிட்டக்கூடாதா என்ற ஏக்கம் வானதியின் இதய அந்தரங்கத்தில் நீண்ட காலமாக இருந்து கொண்டிருந்தது.

     சில சமயம் கூரை சுழன்று திரும்பியபோது, பின்னால் வெகு தூரத்தில் படகு ஒன்று வருவதை வானதி பார்த்தாள். அதில் பெண் ஒருத்தியும் புருஷன் ஒருவரும் இருப்பதும் தெரிந்தது. யார் என்று நன்றாய்த் தெரியவில்லை. பெண், படகு செலுத்தியதைப் பார்த்ததும் அவள் ஒருவேளை பூங்குழலியாயிருக்கலாம் என்று தோன்றியது. தன்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றத்தான் வருகிறாளா? இளைய பிராட்டி அனுப்பி வைத்திருக்கிறாரா? போதும், போதும்! அவளுக்கு இளவரசர் கடமைப்பட்டிருப்பதே போதும். தானும் வேறு நன்றிக்கடன் பட வேண்டாம்! கூடவே கூடாது! தான் அவளால் இந்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்படுதலே கூடாது.

     சில சமயம் படகு அவளுக்கு அருகில் நெருங்கி வந்து விட்டது போலிருந்தது சில சமயம் கூரை வேகமாகச் சென்று படகை வெகு தூரம் பின்னால் விட்டுவிட்டுச் சென்றது. இவ்விதம் படகு கண்ணுக்கு மறைந்திருந்த ஒரு சமயத்தில் வீட்டுக் கூரை திசை திரும்பித் தெற்கு நோக்கிச் செல்லுவது போலத் தோன்றியது. இவ்வாறு வெகு தூரம் போயிற்று. காவேரியின் தென் கரையைத் தாண்டி, தெற்கே ஒரே சமுத்திரம் போலத் தோன்றிய வெள்ளப் பிரதேசத்தில் சென்றது. கடைசியில், அந்தத் தண்ணீர் வெள்ளத்தின் எல்லை கண்ணுக்குப் புலப்பட்டது. ஆகா! இது ஒரு நதியின் கரைபோல அல்லவா காணப்படுகிறது. ஆம், ஆம்! இது அரசலாற்றங்கரைதான்! காவேரி உடைப்பு வெள்ளம் நடுவில் பல பிரதேசங்களை முழுக அடித்துக்கொண்டு வந்து இந்த ஆற்றில் விழுந்து கலந்திருக்கிறது. இதன் தென்கரை சிறிது மேடாக இருப்பதால் அதற்குள் அடங்கிச் செல்லுகிறது. அந்த நதிக்கரை, அதன் மரங்களடர்ந்த தோற்றம், அவளுக்குப் பழக்கப்பட்ட இடமாகத் தோன்றியது. பூர்வ ஜன்ம வாசனையைப்போல் ஞாபகம் வந்தது. இல்லை, இல்லை! இந்த ஜன்மத்தில் இரண்டு மூன்று தடவை பார்த்த இடந்தான்! அவள் திருநல்லம் என்னும் க்ஷேத்திரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கவேண்டும். அங்குள்ள ஆலயத்தை மழவரையர் மகளார், செம்பியன் மாதேவி, தம் அருமைக் கணவரான கண்டராதித்த சோழரின் ஞாபகமாகக் கருங்கல் திருப்பணியாகச் செய்ய ஆவல்கொண்டிருக்கிறார். அங்கே நதிக்கரையில் சோழ குலத்தார்கள் தங்குவதற்கு வசந்த மாளிகை ஒன்றும் இருக்கிறது. செம்பியன் மாதேவி ஒரு சமயம் இளைய பிராட்டியை அவ்விடத்துக்கு அழைத்துச் செல்ல, அவருடன் தானும் போனதுண்டு! அந்த வஸந்த மாளிகையையொட்டியிருந்த தோட்டங்களிலே சென்று பறவைகளின் இனிய கீதங்களைக் கேட்பதில் தனக்கு எவ்வளவு ஆர்வமிருந்தது! ஆகா! அப்போது அங்கு நடந்த ஒரு சம்பவம், வானதியின் உள்ளத்தில் என்றும் மறக்கமுடியாதபடி ஆழ்ந்து பதிந்திருந்தது.

20. பறவைக் குஞ்சுகள்
     கொடும்பாளூரிலிருந்து வானதி பழையாறை நகருக்கு வந்த புதிதில், சோழ நாட்டின் நீர்வளம் அவளை ஒரே ஆச்சரியக் கடலில் ஆழ்த்தியிருந்தது. கொடும்பாளூர்ப் பக்கத்தில் நதி ஒன்றும் கிடையாது; ஏரிகள் உண்டு. மழை பெய்யும் காலங்களில் ஏரிகள் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும். கோடைக் காலத்தில் காய்ந்துவிடும். இம்மாதிரி இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ததும்பிச் சுழிகளும் சுழல்களுமாய் ஓடும் நதிகளும், வாய்க்கால்களும், கண்ணிகளும் அங்கே இல்லை. தாமரையும் செங்கழு நீரும் தழைத்துப் பூத்துக் கொழித்த தடாகங்களை வானதி பிறந்த ஊரில் பார்க்க முடியாது. இவற்றையெல்லாம் வானதி பார்த்துப் பார்த்து மெய்ம்மறந்து உட்கார்ந்திருப்பாள். குளத்து மீனுக்குக் குடைபிடித்த தாமரை இலைகளின் மீது முத்துக்கள் போன்ற நீர்த்துளிகள் அங்குமிங்கும் ஓடிக் களிப்பதைப் பார்த்து மகிழ்வாள். கமல மலர்களையும் அல்லிப் பூக்களையும் கருவண்டுகள் சுற்றிச் சுழன்று வந்து ஆடிப்பாடுவதைக் கண்டதும் பரவசமாகி விடுவாள். பொழுது போவதே தெரியாமல் போய்விடும்.

     ஒரு சமயம் வானதியும், குந்தவையும் செம்பியன் மாதேவி அழைத்ததின் பேரில் (இக்காலத்தில் திருநல்லத்துக்குக் கோனேரிராஜபுரம் என்று பெயர் வழங்குகிறது.) திருநல்லத்துக்குப் போயிருந்தார்கள். வசந்த மாளிகையில் தங்கியிருந்தார்கள். செம்பியன் மாதேவியும் குந்தவையும் அடிக்கடி சைவ சமயக் குரவர்களின் வரலாறுகளைப் பற்றியும், அவர்களுடைய பதிகங்களில் கனிந்துச் சொட்டும் பக்திரசத்தைப் பற்றியும், பேசத் தொடங்கிவிடுவார்கள். அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில் வானதிக்குச் சிரத்தை இருப்பதில்லை. அதைக் காட்டிலும் வசந்த மாளிகையை யொட்டியிருந்த தோட்டங்களிலே சென்று பறவைகளின் இனிய கீதங்களைக் கேட்பதிலும், தடாகத்திலே பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களைச் சுற்றி வந்து கொண்டிருந்த கரு நீல வண்டுகளின் இன்ப ரீங்காரத்தைக் கேட்பதிலும் அவளுக்கு ஆர்வம் அதிகமாயிருந்தது. இன்னும் மாளிகையின் ஒரு பக்கமாகச் சென்று கொண்டிருந்த நதிவெள்ளம் சுழி போட்டுக் கொண்டு ஓடுவதையும், அந்தச் சுழிகளில் அழகிய செக்கச் சிவந்த கடம்ப மலர்கள் சுழன்று கொண்டிருப்பதையும் பார்க்க அவளுக்கு மிக்க ஆர்வம் இருந்தது. கொடும்பாளூர்ப் பகுதிகளில் இம்மாதிரி மனோரம்யமான காட்சிகளைப் பார்க்க இயலாதல்லவா?

     ஒரு நாள் மழவரையர் மகளாரும், இளைய பிராட்டி குந்தவையும் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். வானதி அவர்கள் அருகில் சென்றபோது, இளைய பிராட்டி “வானதி! நீ தோட்டத்திற்குப் போ! சற்று நேரத்துக்கெல்லாம் நானும் வருகிறேன்!” என்றார். வானதி குதூகலத்துடன் துள்ளிக் குதித்து ஓடினாள். தோட்டத்தில் சற்று நேரம் சுற்றி அலைந்து விட்டுத் தாமரைக் குளக்கரைக்குச் சென்றாள். குளக்கரையில் வானை மறைத்துக் கொண்டு வளர்ந்திருந்த மரங்கள் பல இருந்தன. அவற்றில் நெடிதுயர்ந்து பல்கிப் பரவித் தழைத்திருந்த இலுப்பை மரம் ஒன்றிருந்தது. இலுப்பைப் பூக்கள் உதிர்ந்து பூமியை அடியோடு மறைத்துக் கொண்டிருந்தன. அவற்றின் நறுமணம் கம்மென்று வீசித் தோட்டம் முழுவதும் பரவியிருந்தது. அந்த மரத்தடியில் ஒரு பெரிய வேரின் பேரில் வானதி உட்கார்ந்தாள். அடிமரத்தில் சாய்ந்து கொண்டு மேலும் கீழும் நாலாபுறமும் பார்த்துக் கொண்டிருந்தாள். பறவை இனங்களின் இனிய கீதங்கள் அவளுடைய செவிகளில் அமுத வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருந்தன. அவள் அந்த நாள்வரை அநுபவித்திராத இன்ப உணர்ச்சி அவள் இதயத்தில் தோன்றியது. அந்த உள்ளக் களிப்பு அடிக்கடி பொங்கித் ததும்பி அவள் மேனியெல்லாம் பரவியது. வாழ்க்கை இவ்வளவு ஆனந்த மயமாக இருக்கக்கூடும் என்று வானதி அன்று வரை கனவிலும் கருதியதில்லை.

     அந்த மரத்தடியிலிருந்து பார்த்தால் சற்றுத் தூரத்தில் ஆற்று வெள்ளம் தெரிந்தது. அவ்வப்போது நதி ஓட்டத்தின் இனிய காட்சிகளையும் அவள் மரங்களின் இடைவெளி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     ஒருமுறை, யாரோ ஒரு வாலிபன் ஆற்றில் நீந்திக் கொண்டிருப்பது தெரிந்தது. செந்நிற நீர்ப் பிரவாகத்தில் அவனுடைய பொன்னொளிர் மேனி பாதி தண்ணீரிலும் பாதி மேலேயும் மிதந்த வனப்பு மிக்க காட்சி அவள் உள்ளத்தைக் கவர்ந்தது. சீச்சீ! யாரோ இளம்பிள்ளை ஒருவனுடைய தோற்றத்தில் தனது கவனம் செல்வது என்ன அசட்டுத்தனம்? நாணம், மடம் என்னும் இயல்புகளைத் தன் உடன் பிறந்த செல்வங்களாகக் கொண்டிருந்த வானதிக்கு அந்த எண்ணம் மிக்க கூச்சத்தை உண்டாக்கியது. அவளுடைய உள்ளக் கட்டுப்பாட்டையும் மீறிக் கண்கள் மீண்டும் இரண்டொரு தடவை நதிப்பக்கம் சென்றன.

     வானதிக்குத் தன் பேரில் கோபமே உண்டாயிற்று. அங்கிருந்து எழுந்து போய்விடலாமா என்று எண்ணினாள். அச்சமயம் வேறொரு நிகழ்ச்சி அவளுடைய உள்ளத்தைக் கவர்ந்தது. அவள் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகாமையில், தலைக்கு மேலே பறவைக் குஞ்சுகளின் கூக்குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளுக்கு ஏக காலத்தில் பரிதாபத்தையும் திகிலையும் உண்டாக்கின. ஒரு மரக்கிளையில் கவணை போலப் பிரிந்த இடத்தில் பட்சிக் கூடு ஒன்று இருந்தது. அதில் சில பறவைக் குஞ்சுகள் தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. அவைதாம் ‘கிறீச்’ என்று மெல்லிய குரலில் சத்தமிட்டன. அந்தச் சத்தத்தில் பயமும், அபாய அறிவிப்பும், பரிதாபமான அடைக்கல விண்ணப்ப முறையீடும் கலந்திருந்தன. அவ்விதம் கலந்திருந்ததாக வானதியின் செவிகளில் ஒலித்தது. கூட்டுக்கு அருகில் மரக்கிளையில் ஒரு காட்டுப் பூனை ஏறிக் கொண்டிருந்தது. மெள்ள மெள்ள அது கூட்டை நெருங்கி வந்து கொண்டிருந்தது!

     அதைப் பார்த்த வானதி, “ஐயோ! ஐயோ!” என்று சத்தமிட்டாள். அடுத்த கணத்தில் “என்ன? என்ன?” என்று ஒரு குரல் கேட்டது. யாரோ விரைந்து ஓடி வரும் காலடிச் சத்தமும் கேட்டது. வானதி அந்தப் பக்கம் பார்த்தாள். சற்று முன் நதி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த வாலிபன்தான் கரையேறி ஓடி வந்து கொண்டிருந்தான் என்பதை அவள் அறிந்தாள்.

     அதே சமயத்தில் எங்கிருந்தோ இரண்டு பெரிய பறவைகள் வந்து விட்டன. கூட்டைச் சுற்றி அவை கராபுராவென்று கத்திக் கொண்டு வட்டமிட்டன. அவை அக்குஞ்சுகளின் தாயும் தகப்பனுமாகவே இருக்க வேண்டும். குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காகவே அவை அவசரமாக வந்திருக்க வேண்டும் என்பதை வானதி உணர்ந்தாள். இரண்டும் நீள மூக்குகள் உள்ள பறவைகள். மரங்கொத்திப் பறவைகள் என்பவை இவைதாம் போலும். ஒரு பறவை கூட்டைச் சுற்றி அதிகமாக வட்டமிட்டது. இன்னொன்று பூனையை நெருங்கி அதை மூக்கினால் கொத்தித் தாக்கும் பாவனையுடன் சத்தமிட்டது! பூனையை அந்தப் பறவையினால் ஒன்றும் செய்துவிட முடியாது. பூனையின் வாயில் அகப்பட்டால் மறுகணம் அதன் வயிற்றுக்குள்ளேயே போய்விட வேண்டியதுதான். ஆயினும் தன் குஞ்சுகளைக் காப்பதற்காக அந்தப் பறவை அப்படித் தீரத்துடன் போராடியது. தாயையும் தகப்பனையும் இளம் பிராயத்திலேயே இழந்துவிட்ட வானதிக்கு அந்த காட்சி மிக்க மனக்கசிவை உண்டாக்கியது.

     பூனை சற்றுச் சும்மா இருந்துவிட்டுத் திடீரென்று முன்னங்கால் ஒன்றைக் கூட்டின் பக்கம் நீட்டியது. பறவைக் குஞ்சுகள் இருந்த கூட்டின் ஒரு முனையையும் தொட்டுவிட்டது. வானதி மறுபடியும் அலறினாள். இதற்குள் அந்த வாலிபன் நெருங்கி விட்டான். அவனை அருகில் பார்ப்பதற்கு வானதிக்கு மிக்க கூச்சமாயிருந்தது. மறுமொழி சொல்ல வரவில்லை; பேசுவதற்கு நா எழவில்லை. சமிக்ஞையினால் பட்சியின் கூட்டைச் சுட்டிக் காட்டினான்.

     அதுவரையில் அந்தப் பெண்ணுக்குத்தான் ஏதோ அபாயம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். வானதி சுட்டிக் காட்டிய இடத்தை அண்ணாந்து பார்த்தான். மறுபடியும் வானதியை நோக்கிப் புன்னகை புரிந்தான். அவனுடைய பார்வையும், புன்னகையும் வானதியின் நெஞ்சத்தை நெகிழச் செய்து, பறவைக் குஞ்சுகளின் நிலையைக் கூட மறந்துவிடச் செய்தன.

     ஆனால் வாலிபன் உடனே அங்கிருந்து விரைந்து ஓடி, மரக்கிளையின் பறவைக் கூடு இருந்த இடத்துக்கு நேர் கீழே சென்று நின்றான். காட்டுப் பூனையை அதட்டினான். அது கீழே குனிந்து பார்த்து உருமியது. “பொல்லாத பூனையாயிருக்கிறதே!” என்று சொல்லிக் கொண்டே தரையிலிருந்து ஒரு கல்லைப் பொறுக்கி வேகமாக விட்டெறிந்தான். கல் பூனையின் மீது படாமல் அதன் அருகில் மரக்கிளையைத் தாக்கியது. பூனை உடனே தாவி வேறு கிளையில் பாய்ந்து, அங்கிருந்து இன்னொரு அடர்ந்த மரத்துக்குச் சென்று பின்னர் மறைந்துவிட்டது.

     ஆனால் இதற்குள் வேறொரு விபரீதம் நேர்ந்துவிட்டது. பூனையில் ஒரு கால் பறவைக் கூட்டின் முனையைப் பற்றி இழுத்ததல்லவா? அதனால் சிறிது ஆடிப் போயிருந்த கூடு வாலிபனின் கல்லெறி மரக்கிளையில் தாக்கிய வேகத்தினால் அதிகமாக நிலை குலைந்து, சிறிது சிறிதாக அந்தக் கூடு கிளையின் கப்பிலிருந்து நழுவியது. முழுதும் நழுவி விழுந்திருந்தால் காட்டுப் பூனை வாயிலிருந்து தப்பிய குஞ்சுகள் தரையில் விழுந்து மாண்டிருக்கும்! நல்ல வேளையாகக் கூட்டின் ஒரு முனை கிளையைக் கவ்விக் கொண்டிருந்தது. கூடு அதில் இருந்த குஞ்சுகளுடன் கீழே தொங்கி ஊசலாடியது. குஞ்சுகளின் உயிர்களும் ஊசலாடின. மரங்கொத்திப் பறவைகள் முன்னை விடப் பீதியுடன் அலறிக்கொண்டு குஞ்சுகள் இருந்த கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்தன. காற்று கொஞ்சம் வேகமாக அடித்தால் கூடு தரையில் விழுந்து விடும். அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தால் குஞ்சுகள் பிழைப்பது துர்லபந்தான்.

     வாலிபன் ஒரு கணநேரம் யோசித்தான். முதலில் மரத்தின் மேல் தாவி ஏற அவன் எண்ணியதாகத் தோன்றியது. மறு கணத்தில் மனத்தை மாற்றிக் கொண்டதாகக் காணப்பட்டது.

     வானதியைப் பார்த்து, “பெண்ணே! சற்று இங்கே வா! கூடு கீழே விழுந்தால் உன் சேலைத் தலைப்பினால் பிடித்துக் கொள்! இதோ நான் ஒரு நொடியில் திரும்பி வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு ஓடினான்.

     அவன் சொன்னபடியே மிகச் சொற்ப நேரத்தில் திரும்பி வந்தான். ஆனால் இப்போது அவன் நடந்து வரவில்லை. யானை மீது ஏறிக்கொண்டு வந்தான். வானதிக்கு அவன் என்ன செய்யப் போகிறான் என்பது ஒருவாறு தெரிந்துவிட்டது. ஆகையால் அங்கிருந்து தாமரைக் குளத்தின் படிக்கட்டை அடைந்தாள். சில படிகள் இறங்கி உட்கார்ந்து கொண்டு யானை மேல் வந்த வாலிபன் என்ன செய்கிறான் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

     யானை மரத்தடிக்கு வந்ததும் நின்றது. அதன் முதுகில் இருந்தபடி வாலிபன் பறவைக் கூட்டைக் கையினால் தாங்கி முன்னால் அது இருந்த கிளைப் பொந்திலே ஜாக்கிரதையாக வைத்தான். தாய்ப் பறவையும், தகப்பன் பறவையும் இப்போது முன்னைவிட அதிகமாகக் கூச்சலிட்டன. ஆனால் அந்தக் கூச்சலில் இப்போது குதூகல த்வனி மேலிட்டிருப்பதாகத் தோன்றியது.

     வாலிபன் பின்னர் திரும்பிச் சுற்று முற்றும் பார்த்தான். “பெண்ணே! எங்கே போனாய்?” என்று கூவினான். வானதி பெரிதும் நாணம் அடைந்து மௌனமாயிருந்தாள். வாலிபன் யானையின் மீதிருந்து கீழிறங்கினான். பின்னர் மறுபடியும் சுற்று முற்றும் பார்த்தான்.

     வானதி மனதில் எதையோ நினைத்துக்கொண்டாள். அந்த நினைவு அவளுக்குப் பெரும் வேடிக்கையாயிருந்தது. அவளை அறியாமல் சிரிப்பு வந்தது. உரத்த சத்தத்துடன் கலகலவென்று சிரித்தாள்.

     அதைக் கேட்டுவிட்டு வாலிபன் குளத்தின் படிக்கட்டுக்கு வந்தான். வானதியைப் பார்த்து, “பெண்ணே! ஏன் சிரிக்கிறாய்? நீ இவ்வளவு பலமாகச் சிரிக்கும்படியாக இப்போது என்ன நேர்ந்து விட்டது?” என்றான்.

     வாலிபன் குரல் வானதியின் செவிகளில் விழுந்ததும் மறுபடியும் முன்போல அவளுடைய நெஞ்சம் நெகிழ்ந்து பொங்கிற்று; கூச்சம் முன்னிலும் அதிகமாயிற்று. அவனை ஏறிட்டுப் பார்க்க முடியாதபடியால், அப்புறமும், இப்புறமும் பார்த்துக் கொண்டிருந்தாள். “பெண்ணே! ஏன் சிரித்தாய்? சொல்ல மாட்டாயா?” என்று மீண்டும் வாலிபன் கேட்டான்.

     வானதி மனத்தைக் திடப்படுத்திக்கொண்டு, “ஒன்றுமில்லை. நீ பெரிய வீரனாயிருக்கிறாயே என்று எண்ணிச் சிரித்தேன். பூனையோடு சண்டை போடுவதற்கு யானையின் பேரில் வந்தாய் அல்லவா?” என்றுகேட்டாள். அதைக் கேட்டு வாலிபனும் சிரித்தான்.

     “பெண்ணே! அது பூனைதானா? நீ போட்ட கூக்குரலைக் கேட்டுப் புலியோ என்று பயந்துவிட்டேன்!” என்று சொன்னான்.

     வானதிக்கு இதற்குள் துணிவு வந்துவிட்டது; அவளிடமிருந்த கூச்சமும் குறைந்துவிட்டது.

     “ஆகா! அப்படியா? புலிக்கொடி பறக்கும் சோழ நாட்டில் புலியைக் கண்டுதான் எதற்காகப் பயப்படவேணும்? நீ பாண்டிய நாட்டனா?” என்றாள்.

     அதைக்கேட்ட வாலிபனின் முகம் முன்னைக் காட்டிலும் சற்று அதிகமாக மலர்ச்சி அடைந்தது.

     “பெண்ணே! நான் வேற்று நாட்டவன் அல்ல; இந்தச் சோழ நாட்டைச் சேர்ந்தவன்தான்! யானை மீது ஏறி வேறு போர்க்களங்களுக்கும் சென்றிருக்கிறேன். நீ யார்? எந்த ஊர்ப் பெண்? பெரிய வாயாடிப் பெண்ணாக இருக்கிறாயே?” என்றான்.

     “யானைப்பாகா! மரியாதையாகப் பேசு! நான் யாராயிருந்தால் உனக்கு என்ன? எதற்காக அதைப்பற்றிக் கேட்கிறாய்?” என்றாள் வானதி.

     “சரி அப்படியானால் நான் கேட்கவில்லை. பெரிய இடத்துப் பெண் போலிருக்கிறது! போகிறேன்!” என்று சொல்லிவிட்டு அந்த வாலிபன் படியேறி மேலே போகலானான்.

     வானதி மறுபடியும் விளையாட்டு பரிகாசம் தொனித்த குரலில், “யானைப்பாகா! யானைப்பாகா! என்னையும் உன் யானையின் மேல் ஏற்றிக்கொண்டு போகிறாயா?” என்றாள்.

     “சரி, ஏற்றிக்கொண்டு போகிறேன். எனக்கு என்ன கூலி தருவாய்?” என்று கேட்டான்.

     “கூலியா? என் பெரியப்பாவிடம் சொல்லி உனக்குக் கொடும்பாளூர் அரண்மனையில் உத்தியோகம் வாங்கித் தருகிறேன். இல்லாவிட்டால், யானைப் படைக்குச் சேநாதிபதியாக்கச் செய்கிறேன்!” என்றாள் வானதி.

     “ஓகோ! கொடும்பாளூர் இளவரசியா தாங்கள்?” என்றான் அந்த வாலிபன். இதுவரையில் மலர்ந்திருந்த அவனது முகம் இப்போது சுருங்கியது. புன்னகை மறைந்தது; புருவங்கள் நெறிந்தன.

     “ஏன்? கொடும்பாளூர் இளவரசி என்றால் அவ்வளவு மட்டமா? உன் யானை மேல் ஏறக்கூடாதா?” என்றாள் வானதி.

     “இல்லை, இல்லை! கொடும்பாளூர் அரண்மனைக் கொட்டாரத்தில் எவ்வளவோ யானைகள் இருக்கின்றன; எத்தனையோ யானைப்பாகர்களும் இருக்கிறார்கள். நான் என்னத்திற்கு?” என்று சொல்லிவிட்டு அந்த வாலிபன் விடுவிடு என்று நடந்து போனான். அவன் ஒருவேளை திரும்பிப் பார்ப்பானோ என்று சற்று நேரம் வரையில் வானதி எதிர் பார்த்தாள். ஆனால் அவன் திரும்பியே பாராமல் நடந்து சென்று யானை மேல் ஏறிப் போய்விட்டான்.

     இந்தச் சம்பவம் வானதியின் உள்ளத்தில் வெகுவாகப் பதிந்துவிட்டது. அடிக்கடி அது அவளுடைய ஞாபகத்துக்கு வந்தது. அந்த யானைப்பாகனுடைய உருவத் தோற்றமும் மலர்ந்த முகமும் இனிய குரலும் நினைவுக்கு வந்தபோதெல்லாம் உள்ளத்தில் இனந் தெரியாத இன்ப உணர்ச்சி உண்டாயிற்று. அவன் பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்ற யானைமேல் ஏறி வந்ததை நினைத்தபோதெல்லாம் அவளையறியாமல் நகைப்பு வந்தது. தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். பிறகு அதற்காக வெட்கமும் அடைந்தாள். அந்த யானைப்பாகனின் அகம்பாவத்தையும், கொடும்பாளூர் என்ற வார்த்தையைக் கேட்டவுடனே அவன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு போய்விட்டதையும் எண்ணியபோதெல்லாம் அவன் பேரில் கோபம் உண்டாகி வளர்ந்தது. மொத்தத்தில், அந்த யானைப்பாகனைப் பற்றி அடிக்கடி நினைவு வந்து கொண்டிருந்தது. இது தவறோ என்ற சந்தேகமும் கூடத் தோன்றி அவளை மிகவும் வருத்திக் கொண்டிருந்தது.

     திருநல்லத்துக்கு தமது தமக்கையைப் பார்க்கப் பொன்னியின் செல்வர் வரப்போகிறார் என்று அரண்மனையில் பேச்சாக இருந்தது. சோழநாட்டின் கண்மணியாக விளங்கிய இளவரசரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அரண்மனைப் பெண்கள் எல்லாருக்கும் இருந்ததுபோல் வானதிக்கும் இருந்தது. அதற்குச் சந்தர்ப்பம் எளிதில் கிடைக்கவில்லை. இளவரசர் வந்துவிட்டார் என்று பேச்சாக இருந்ததே தவிர, அவர் அந்தப்புரத்துக்குள் வரவேயில்லை. இயற்கையில் சங்கோசம் நிறைந்த வானதியோ மற்றத் தோழிப் பெண்களைப் போல் சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டு போய் அவரைப் பார்க்க விரும்பவில்லை. திருநல்லத்தை விட்டு இளவரசர் புறப்பட்ட அன்றைக்குத்தான் அரண்மனை மேல் மாடத்தில் நின்று வானதி பொன்னியின் செல்வரைப் பார்க்க நேர்ந்தது. அவர் யானையின் மீது ஏறிப் பிரயாணமாகிக் கொண்டிருந்தார். வானதி தன் கண்களை நம்பமுடியவில்லை என்றால், அது சம்பிரதாய வார்த்தையன்று. யானைப்பாகன் என்று தான் எண்ணிக் கேலிப் பேசிச் சிரித்து அதிகாரம் செய்யவும் துணிந்த வாலிபனே இந்த மாநிலம் போற்றும் இளவரசர் அருள்மொழிவர்மன் என்று கண்டால், வானதிக்கு அவளுடைய கண்களை எப்படி நம்பமுடியும்? பின்னர், பக்கத்திலிருந்த பெண்களைப் பலமுறை கேட்டுத்தான் அதை நிச்சயம் செய்துகொண்டாள். இதனால் அவள் அடைந்த அவமானத்தையும், மனவேதனையும் சொல்லிச் சாத்தியமில்லை.

     உலகம் ஆளப் பிறந்தவருக்குத் கொடும்பாளூர் அரண்மனையின் யானைக் கொட்டாரத் தலைவன் உத்தியோகம் செய்துவைப்பதாகத் தான் சொன்னதை அவள் நினைத்தபோது ஒரு பக்கம் சிரிப்பு வந்தது! அதே சமயத்தில் கண்களில் கண்ணீர் வந்தது. தன்னுடைய மூடத்தனத்தை நினைத்து வருந்தினாள். அப்போது அவருடைய முகம் சுருங்கியதன் காரணம் அவரை, “யானைப்பாகா!” என்று அழைத்ததுதான் என்று நம்பினாள். நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்களில் ஒன்றும் இல்லாத பெண் என்று தான் தன்னைப்பற்றி அவர் எண்ணியிருப்பார்! இதை நினைத்தபோது வானதியின் உள்ளம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. ஆற்றிலோ, குளத்திலோ விழுந்து உயிரையே விட்டு விடலாமா என்று கூடப் பலமுறை எண்ணினாள். இளையபிராட்டி குந்தவையிடம் தான் செய்த குற்றத்தைச் சொல்லிவிடப் பலமுறை முயன்றாள். ஆனால் அதற்குத் துணிவு வரவில்லை; நா எழவில்லை. இளவரசரே குந்தவை தேவியிடம் சொல்லியிருந்தால் அவரே தன்னிடம் கேட்டிருப்பார். குந்தவை தேவி கேளாததினால் இளவரசர் சொல்லவில்லை என்று முடிவு செய்தாள். எத்தனையோ மனவேதனைக்கு மத்தியில் இந்த எண்ணம் அவளுக்குச் சிறிது ஆறுதல் அளித்தது. என்றைக்காவது ஒருநாள் பொன்னியின் செல்வரிடம் நேரில் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகு உயிரை விட்டு விடலாம் என்று கருதினாள். ஆனால் அதற்கும் தைரியம் வரவில்லை.

     பழையாறைக்குப் போன பிறகு இளவரசரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் நேரலாம் என்று தோன்றியபோதெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டாள். இளவரசரின் முன்னால் போவதைக் காட்டிலும் உயிரையே விட்டுவிடலாம் என்று கருதலானாள். திருநல்லத்தில் நடந்ததை அறியாத இளையபிராட்டியும் அவளுடைய தோழிமார்களும், “இந்தப் பெண் இவ்வளவு கூச்சப்படுகிறாளே!” என்று மட்டும் ஆச்சரியப்பட்டார்கள்! அவளுடைய பயந்த சுபாவத்தோடு இதுவும் சேர்ந்தது என்று நினைத்தார்கள்.

     பொன்னியின் செல்வர் தன்னிடம் அருவருப்புக் கொள்வதற்கு வேறு முக்கிய காரணமும் உண்டு என்பதை வானதி விரைவில் அறிந்து கொண்டாள். இளவரசர் அருள்மொழிவர்மன் ஒரு காலத்தில் உலகமாளும் சக்கரவர்த்தியாவார் என்று பலரும் நம்பியதுபோல அவளுடைய பிறந்த வீட்டிலும் நம்பினார்கள். அதனால் அவளை அருள்மொழிவர்மருக்கு மணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று அவளுடைய பெரிய தகப்பனார் திட்டமிட்டிருந்தார் என்பது வானதிக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அந்த நோக்கத்துடனேயே அவளைப் பழையாறைக்குப் பூதி விக்கிரம கேசரி அனுப்பி வைத்திருப்பதாகக் குந்தவை தேவியின் மற்றத் தோழிப்பெண்கள் அடிக்கடி ஜாடைமாடையாகப் பேசிக் கொள்வார்கள். சில சமயம் வானதியிடமே சொல்லிப் பரிகசிப்பார்கள். “ஆகையினாலேதான் நீ இளவரசர் முன்னாலேயே போகமாட்டேன் என்கிறாய்! எங்களுக்குத் தெரியாதா உன் கள்ளத்தனம்?” என்பார்கள். இந்த வார்த்தைகள் வானதியின் காதில் நாராசமாக விழுந்தன. தான் கொடும்பாளூர்ப் பெண் என்று அறிந்ததும் யானைப்பாகனுடைய முகம் சுருங்கியதன் காரணம் இதுவாகவே இருக்கலாம் அல்லவா?

     இவ்வாறெல்லாம் வானதியின் இளம் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்த நிலைமையிலேதான் ஒருநாள் பொன்னியின் செல்வர் ஈழத்துப் போருக்குப் புறப்பட்டார். அன்றைக்கு அரண்மனையிலிருந்து எல்லாத் தோழிப் பெண்களும் கையில் மங்கள தீபங்களுடன் நின்று அவரை வாழ்த்தி அனுப்ப ஏற்பாடாயிருந்தது. இந்தச் சமயத்திலும் வரமுடியாது என்று மறுக்க வானதியினால் இயலவில்லை. போருக்குப் புறப்படும் இளவரசரை ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வமும் அவள் உள்ளத்தில் பொங்கியது. வாய் திறந்து பேசாவிட்டாலும் தன் முகபாவத்தைக் கொண்டும் நயன பாஷையினாலும் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்ற சபலமும் இருந்தது. ஆனால் அவள் எண்ணியதற்கெல்லாம் மாறான சம்பவம் நடந்துவிட்டது. இளவரசர் அருகில் வந்து அவளை ஏறிட்டுப் பார்த்ததும் வானதி உணர்விழந்து, தீபத்தையும் போட்டுவிட்டுத் தரையில் விழுந்து மூர்ச்சையானாள். இதன் பிறகு நிகழ்ந்தவையெல்லாம் வாசகர்கள் அறிந்தவைதாம் அல்லவா?

     ஓட்டுக் கூரை ஓடத்தில் மிதந்து சென்றுகொண்டிருந்த வானதி திருநல்லத்தை அணுகியபோது அவளுடைய உள்ளத்தில் மேற்கூறிய சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சென்றன. பொன்னியின் செல்வருக்குத் தன்மீது அநுதாபமும் உண்டு என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அதை அவர் இளைய பிராட்டி மூலமாகவும் நேரிலேயும் தெரிவித்ததும் உண்டு. ஆனால் அவருடைய அன்பு பூரணமடையாத வண்ணம் அவ்வப்போது தடைசெய்த முட்டுக்கட்டை ஒன்றும் இருந்தது. அது இன்னதென்பதையும் அவள் அறிந்திருந்தாள். இளவரசர் ஒரு காலத்தில் சக்கரவர்த்தியாகலாம் என்னும் எண்ணத்தின் பேரில் அவளை அவர் கழுத்தில் கட்டிவிடப் பார்க்கிறார்கள் என்று இளவரசர் நம்பியதுதான் அந்த முட்டுக்கட்டை. இவ்விதம் அவர் நம்புவதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. வானதியின் பெரிய தந்தை இதைப்பற்றிப் பலமுறை பேசியதுண்டு. ஏன்? இளையபிராட்டி குந்தவை தேவியே அந்தச் சதியாலோசனையில் சம்பந்தப்பட்டவர்தாம். அது இன்னும் பலருக்கும் தெரிந்திருந்தது. அந்த ஓடக்காரப் பெண் பூங்குழலிகூட அதைக் குறிப்பிட்டுப் பரிகாசம் செய்யவில்லையா? ஆகையால் இளவரசர் மனத்தில் அந்த எண்ணம் தங்கி நின்று அவருடைய அன்புக்கே ஒரு முட்டுக்கட்டையாக இருந்ததில் வியப்பில்லைதானே!

     ஆனால் சற்று முன்பு வானதி செய்த சபதத்தை இளவரசர் அறிய நேரும்போது அந்த முட்டுக்கட்டை நீங்கிவிடும் அல்லவா? அதை அவர் அறியுமாறு நேரிடுமா? தானே அவரிடம் சொல்லிவிட்டால் என்ன? அடி அசட்டு வானதி! உனக்குத்தான் அவர் முன்னால் நின்றால் வாய் அடைத்துவிடுகிறதே! அவரை யானைப்பாகன் என்று நீ எண்ணியபோது, இந்தத் திருநல்லத்தில் சக்கரவட்டமாகப் பேசி அவரிடம் ‘வாயாடிப் பெண்’ என்ற பெயரும் பெற்றாய்! அதற்குப் பிறகு அவரை முகம் எடுத்துப் பார்க்கவும், வாய் திறந்து பேசவும் உன்னால் முடியவில்லையே? அநாதை வானதி! மறுமுறை நீ இளவரசரைப் பார்க்க நேரும்போது அப்படி மோசம் போய்விடாதே! துணிச்சலுடன் உன் மனத்தில் உள்ளதைச் சொல்லிவிடு! “நீங்கள் சிங்காதனம் ஏறினாலும் நான் ஏறமாட்டேன்! அவ்வாறு சபதம் செய்திருக்கிறேன்! தாங்கள் வெறும் யானைப்பாகனாகவே இருந்து, என்னையும் தங்களுடன் யானைமீது ஏற்றிக்கொண்டு ஒரு தடவை சென்றால், அதையே சொர்க்க வாழ்விலும் மேலாகக் கருதுவேன்” என்று தைரியமாகச் சொல்லிவிடு!

     எல்லாம் சரிதான்! ஆனால் அவ்விதம் சொல்லுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்குமா? இந்த வெள்ளம் என்னை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கப்போகிறது? கரை சேராமலே முழுகிச் செத்துப் போய்விடுவேனோ! ஒருநாளும் அவ்விதம் நேராது. அதோ கரை தெரிகிறதே! திருநல்லத்து வசந்த மாளிகையின் மகுட கலசம் தெரிகிறதே! ஆஹா! இளவரசர் யானைமேல் ஏறி வந்து பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றியதும், என்னுடன் இதமாகப் பேசியதும் நேற்று நடந்ததுபோல் அல்லவா; தோன்றுகின்றன?

     இது என்ன? அதோ ஒரு யானை! அதன்பேரில் ஒரு யானைப்பாகன்! வெள்ளத்தின் வேகத்தை அந்த யானை எவ்வளவு அலட்சியமாக முண்டிக்கொண்டு குன்று நகருவது போல் நகருகிறது! அதோ கரை ஏறிவிட்டது! கரையோடு மேற்கு நோக்கிச் செல்கிறது! யானையின் மேல் கம்பீரமாக உட்கார்ந்திருப்பவன் யாராயிருக்கும்? ஒருவேளை…சீச்சீ! இது என்ன பைத்தியக்கார எண்ணம்? இளவரசர் இங்கே எதற்காக இப்படித் தனியாக யானை மீது வருகிறார்?

     ஒரு முறை யானைமீது வந்த இளவரசரை யானைப்பாகன் என்று நான் எண்ணிவிட்டால், அப்புறம் எந்த யானைப்பாகனைக் கண்டாலும் இளவரசராயிருக்கலாம் என்று சந்தேகிக்க வேண்டுமா? என்ன அறிவீனம்! இருந்தாலும், இவன் வெறும் யானைப்பாகனாகவே இருந்தாலும், எனக்கு ஒருவேளை உதவி செய்யக்கூடும் அல்லவா? என்னை இந்த ஓட்டுக்கூரை இடத்திலிருந்து, இந்தப் பெரு வெள்ளத்திலிருந்து, கரையேற்றிவிடலாம் அல்லவா? நான் யார் என்று சொன்னால் என்னை யானை மேல் ஏற்றிப் பொன்னியின் செல்வரிடம் அழைத்துக்கொண்டு போகவும் கூடும் அல்லவா?

     இத்தகைய எண்ணம் தோன்றியதும், வானதி, “யானைப்பாகா! யானைப்பாகா!” என்று கூவி அழைத்தாள். அது அவன் காதில் விழவில்லையோ, அல்லது விழுந்ததும் அவன் இலட்சியம் செய்யவில்லையோ, தெரியாது. யானை நிற்கவும் இல்லை; யானைப்பாகன் திரும்பிப் பார்க்கவும் இல்லை! யானையின் நடை வேகமாகிக் கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்தில் நதிக்கரையின் வளைவு ஒன்றில் திரும்பி யானையும் யானைப்பாகனும் மறைந்து விட்டனர்.

     வானதி இந்த ஏமாற்றத்தைப்பற்றி எண்ணமிடுவதற்குள் பெரும் பீதிகரமான மற்றொரு எண்ணம் அவள் மனதில் உதித்தது. ஓட்டுக்கூரை திடீரென்று அதிவேகமாக சுழன்று செல்லத் தொடங்கியதாகத் தோன்றியது. ஆம், ஆம்! ஆற்று வெள்ளம் அங்கே அதிகமான வேகத்தை அடைந்திருந்தது. நதிக்கரையும், அதன் ஓரத்தில் வளர்ந்திருந்த பிரம்மாண்டமானா விருட்சங்களின் தடிமனான வேர்களும் அவளுடைய சமீபத்தில் விரைந்து வந்து கொண்டிருந்தன. ஓட்டுக்கூரை ஓடம் மரங்களின் வேர்களில் மோதிக்கொள்ளப் போவது நிச்சயம். மோதிக் கொண்டதும் தூள் தூளாகித் தண்ணீரில் மூழ்கிவிடும். பிறகு தன்னுடைய கதி என்ன? தப்பிப் பிழைத்துக் கரை ஏற முடியுமா? சுழல்களில் சிக்கி மரங்களின் வேர்களில் அடிபட்டுச் சாக நேரிடுமா?

     ஐயோ! இது என்ன? அந்த மரங்களின் வேர்களுக்கு மத்தியில் பயங்கரமான முதலை ஒன்று வாயைப் பிளந்து கொண்டிருக்கிறதே! அது உண்மை முதலையா? அல்லது பொம்மையா! அல்லது என் உள்ளத்தின் பிரமையா?

     இதோ கரை நெருங்கிவிட்டது! மரங்களின் வேர்களின் மேல் ஓட்டுக் கூரை மோதிக்கொள்ளப் போகிறது!

     வானதி தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்! “தாயே! துர்க்கா பரமேசுவரி! தாய் தந்தையற்ற இந்த அநாதைப் பெண்ணுக்கு நீதான் கதி! என்னை உன் பாதங்களில் சேர்த்துக் கொள்!” என்று பிரார்த்தனை செய்தாள்.

கல்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *