46. மக்களின் முணுமுணுப்பு
சோழ குல மூதாட்டியின் சந்நிதியிலிருந்து ஆழ்வார்க்கடியான் இளையபிராட்டியின் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் பழையாறை வீதிகளில் கண்ட காட்சிகள் அவனுக்கு மிக்க உற்சாகத்தை அளித்தன. கண்ணன் பிறந்த திருநாளை இந்த ஜனங்கள் எவ்வளவு குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்? வைஷ்ணவம் இந்தச் சோழ நாட்டில் நிலைத்து நின்று பரவப் போகிறது என்பதில் ஐயம் இல்லை. சைவ சமயத்துக்கு இங்கே செல்வாக்குப் பெருகுவதற்குப் பல காரணங்கள் உண்டு. நூறு வருஷ காலமாகச் சோழ குலத்து மன்னர்கள் புதிய புதிய சிவாலயங்களை நாடெங்கும் நிர்மாணித்து வருகிறார்கள். மூவர் பாடிய தேவாரப் பாசுரங்கள் அக்கோயில்களின் மூலமாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. சிவாலயங்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இப்படியெல்லாமிருந்தும் திருமாலின் பெருமைக்கு யாதொரு குறையும் ஏற்படவில்லை. விஷ்ணுமூர்த்தியின் ஒன்பதாவது பரிபூரண அவதாரமாகிய கண்ணன், மக்களின் இதயத்தைக் கவர்ந்து விட்டான். கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் வட மதுரையிலும் எம்பெருமான் நிகழ்த்திய லீலைகள் இவர்களுடைய உள்ளத்தில் குடிகொண்டு விட்டன. அம்மம்மா! எத்தனை பாகவத கோஷ்டிகள்! எத்தனை வீதி நாடகங்கள்! எத்தனை விதவிதமான வேஷங்கள்! – ஆம்; முன்னம் நாம் பார்த்ததைக் காட்டிலும் இப்போது அதிகமாகவே இருந்தன. கோஷ்டிகளைச் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்ப்போரின் கூட்டமும் ஆரவாரமும் கூட அதிகமாகவே இருந்தன. பழையாறையைச் சுற்றிலுமிருந்த கிராமங்களிலிருந்து புதிய புதிய நாடக கோஷ்டியினர் வந்து கொண்டேயிருந்தார்கள்.
நாடக கோஷ்டி ஒன்றில் வஸுதேவர், தேவகி, கிருஷ்ணன், பலராமன், கம்ஸன் ஆகியவர்கள் வேஷம் தரித்துக் கொண்டு வந்தார்கள். பாட்டும், கூத்தும், வேஷக்காரர்களின் பேச்சும் இந்தக் கோஷ்டியில் அதிகமாயிருந்தபடியால் ஆழ்வார்க்கடியான் சற்று நின்று கவனித்தான். அப்போது கிருஷ்ணனுக்கும், கம்ஸனுக்கும் சம்வாதம் நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் வேஷம் பூண்டிருந்தவன் சிறு பிள்ளை. அவன் மழலைச் சொல்லினால் கம்ஸன் செய்த குற்றங்களை எடுத்துக் கூறி, “வா, என்னோடு சண்டைக்கு!” என்று அழைத்தான். அதற்குக் கம்ஸன் உரத்த இடிமுழக்கக் குரலில், “அடே! கிருஷ்ணா! உன் மாயாவித்தனமெல்லாம் இனி என்னிடம் பலிக்காது. உன்னை இதோ கொல்லப் போகிறேன். உன் அண்ணன் பலராமனையும் கொல்லப் போகிறேன். உன் அப்பன் வஸுதேவனையும் கொல்லப் போகிறேன். அதோ நிற்கிறானே, உடம்பெல்லாம் சந்தனத்தைக் குழைத்து நாமமாகப் போட்டுக் கொண்டு – அந்த வீர வைஷ்ணவனையும் கொன்று விடப் போகிறேன்!” என்று கூறியதும், சுற்றிலும் நின்றவர்கள் எல்லாரும் நமது ஆழ்வார்க்கடியானைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினார்கள். கிருஷ்ணன், பலராமன் வேஷம் போட்டிருந்தவர்கள் கூட அவனை நோக்கினார்கள். கூட்டத்தில் பலர் அவனை நெருங்கி வந்து சூழ்ந்து கொண்டு ‘கெக் கெக்கே’ என்று சிரிக்கவும் கேலி செய்யவும் ஆரம்பித்தார்கள்.
திருமலை நம்பிக்குக் கோபம் பிரமாதமாக வந்தது. கையிலிருந்த தடியைச் சுழற்றி அக்கூட்டத்திலிருந்தவர்களை ஒரு கை பார்த்துவிடலாமா என்று எண்ணினான். முக்கியமாக, அந்தக் கம்ஸனுடைய தலையில் ஒரு போடு போட விரும்பினான். ஆனால் கம்ஸனுடைய தலையில் அடிப்பதில் பயனில்லை. ஏனெனில் அவனுடைய சொந்த முகத்தை மறைத்துக் கொண்டு மரத்தினால் செய்து கோரமான மீசையும் கோரைப் பற்களும் வைத்து வர்ணத்தினால் எழுதியிருந்த பொய்த் தலையைக் கம்ஸ வேடக்காரன் வைத்திருந்தான். மொத்தத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தில் தடியை உபயோகிப்பது நல்லதல்ல என்று திருமலை தீர்மானித்து அவ்விடத்தை விட்டு நழுவிச் சென்றான். அந்தக் கம்ஸனுடைய குரல், வேண்டுமென்று பெருங்குரலில் அவன் கத்தியபோதிலும் எங்கேயோ கேட்ட குரலாக ஆழ்வார்க்கடியானுக்குத் தோன்றியது. அது எங்கே கேட்ட குரல் என்று யோசித்துக் கொண்டே அவன் வீதியோடு நடந்தான்.
ஜனங்களின் குதூகலத்தில் திடீரென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது. போகப் போக மக்களின் உற்சாகக் குறைவு தெளிவாகப் புலப்பட்டது. இது என்ன? திடீரென்று ஏன் இந்த மாறுதல்? ஜனக் கூட்டம் ஏன் இவ்வளவு விரைவாகக் கலைந்து கொண்டிருக்கிறது? வாத்திய முழக்கங்களும் ஆடல் பாடல் சப்தங்களும் நின்று விட்டன…!அதற்குப் பதிலாக ஜனங்கள் வீதி ஓரங்களில் ஒதுங்கிச் சிறு சிறு கும்பலாக நின்று என்ன இரகசியம் பேசுகிறார்கள்? பேசிவிட்டு ஏன் விரைந்து நடக்கிறார்கள்? வீட்டுக் கதவுகள் ஏன் தடால் தடால் என்று சாத்தப்படுகின்றன?
இதோ காரணம் தெரிகிறது. குந்தவைப் பிராட்டிக்கு கூட உடல் நடுக்கத்தை உண்டுபண்ணிய பறை முழக்கமும், ஒற்றனைப் பிடித்துக் கொடுப்பது பற்றிய அறைகூவலும்தான் காரணம். இந்தப் பறை முழக்கம் அவ்வளவு தூரம் திருவிழாக் கொண்டாட்டத்துக்காகக் கூடியிருந்த மக்களின் குதூகலத்தைப் பாழ்படுத்தி விட்டது. தனியாகப் போகிறவர்களை மற்றவர்கள் உற்றுப் பார்த்துக் கொண்டு போனார்கள்! தெரியாத வேற்று முகங்களையெல்லாம் சந்தேகத்துடன் பார்த்தார்கள். ஆழ்வார்க்கடியானைக் கூடச் சிலர் அவ்விதம் ஐயப்பாடு உள்ள பார்வையுடன் பார்த்துவிட்டு அவசரமாக மேலே சென்றார்கள்.
இதன் காரணத்தைத் திருமலை ஊகித்து அறிந்து கொண்டான். அது மட்டும் அல்ல. ஜனங்கள் சிறு சிறு கும்பலாக வீதி ஓரங்களில் நின்று பேசுவது என்னவென்பதும் அவனுக்கு ஒருவாறு ஊகத்தினால் தெரிந்திருந்தது. காதில் விழுந்த சிற்சில வார்த்தைகளினால் அது உறுதியாயிற்று. பழுவேட்டரையர்களின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றியே அந்த ஜனங்கள் பேசினார்கள். பழையாறை நகர மாந்தருக்கும் சுற்றுப்புறத்துக் கிராமவாசிகளுக்கும் பழுவேட்டரையர்களின் பேரில் கோபம் இருப்பது இயற்கைதான்.
“பழையாறை நகர்ச் சுந்தர சோழரை
யாவரொப்பார்கள் இத்தொன்னிலத்தே!”
என்று கவிவாணர்களினால் புகழ்ந்து பாடப்பட்ட சக்கரவர்த்தியைப் பழையாறையிலிருந்து அவர்கள் தஞ்சைக்குக் கொண்டு போய் விட்டார்கள் அல்லவா? அதுமுதலாவது பழையாறையின் சிறப்பு நாளுக்கு நாள் குறைவுபட்டு வருகிறதல்லவா? இன்றைக்கு இந்தக் கிருஷ்ண ஜெயந்தி விழாவன்று சக்கரவர்த்தி மட்டும் இந்நகரில் இருந்தால், இன்னும் எவ்வளவு கோலாகலமாக இருக்கும்? கண்ணன் கதை சம்பந்தமான வேடம் புனைந்து வரும் நாடக கோஷ்டிகள் எல்லாம் நகரத்தின் வீதிகளில் சுற்றி விட்டுச் சக்கரவர்த்தியின் அரண்மனை முற்றத்தில் வந்து கூடும் அல்லவா? நடிகர்களுக்கும் பாட்டில் வல்லவர்களுக்கும் பாணர்களுக்கும் பாடினிகளுக்கும் புலவர்களுக்கும் சக்கரவர்த்தி வெகுமதி அளிப்பார் அல்லவா? சோழ நாடே பழையாறைக்குத் திரண்டு வந்து விட்டது என்று கூறும்படி ஜனத்திரள் சேர்ந்திருக்கும் அல்லவா! கடை கண்ணிகளில் வியாபாரம் இதை விட நூறு மடங்கு அதிகம் நடந்திருக்கும் அல்லவா? இரவு நந்திபுர விண்ணகரக் கோவிலிலிருந்து வேணுகோபால சுவாமி புறப்பட்டு வீதி வலம் வரும்போது எவ்வளவு மேளமும் தாளமும் ஆட்டமும் பாட்டமும் சிலம்ப விளையாட்டுக்களும் கத்திச் சண்டைகளும் திமிலோகப்படும்?
அவ்வளவும் இந்தப் பழுவேட்டரையர்களினால் இல்லாமற் போய் விட்டது. இதைத் தவிர இன்னொரு பெருங்குறையும் பழையாறை மக்களின் உள்ளங்களில் குடிகொண்டிருந்தது.அவர்களுடைய கண்ணுக்குக் கண்ணான இளவரசர் அருள்மொழிவர்மர் கடல் கடந்து சென்று இலங்கைத் தீவில் போர் புரிந்து வருகிறார். பழையாறையின் நாலு படை வீட்டுப் பகுதிகளையும் சேர்ந்த பதினாயிரம் வீரர்கள் இளவரசர் தலைமையில் ஈழநாடு சென்றிருக்கிறார்கள். காடும் மலையும் நிறைந்த அந்நாட்டில் தமிழகத்தின் மானத்தையும் வீரப் பண்பையும் நிலைநாட்டுவதற்காக அவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். கொடும்பாளூர் இளங்கோ அந்த ஈழ நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று போர்க்களத்தின் முன்னிலையில் நின்று, மார்பில் வேலைத் தாங்கி உயிரை விடவில்லையா? எஞ்சியிருந்த சோழ வீரர்கள் அத்தனை பேரும் இறுதிவரை போரிட்டு மடியவில்லையா? அப்படி இறந்தவர்களின் ஆவிகள் அமைதியுறும் பொருட்டு மீண்டும் புலிக் கொடியின் வெற்றியை அந்த ஈழத் தீவில் நிலைநாட்டுவதற்காகவே இளவரசர் அருள்மொழித் தேவர் சென்றிருக்கிறார். அவருடைய தலைமையில் போரிடும் நம் வீரர்களுக்கு இந்தப் பழுவேட்டரையர்கள் உணவும் துணியும் பணமும் ஆயுதமும் அனுப்ப மறுக்கிறார்களாமே? இது என்ன அநியாயம்? இப்படியும் உண்டா? தஞ்சாவூர்க் கோட்டையில் உள்ள தானியக் களஞ்சியங்களில் ஏராளமாக நெல்லை நிரப்பி வைத்திருக்கிறார்களே? அவ்வளவும் என்னத்திற்கு? நூறு ஆண்டு காலமாக அரண்மனைப் பொக்கிஷங்களில் சேர்ந்திருக்கும் பணந்தான் எதற்கு? இந்தச் சமயத்தில் நம்முடைய வீரர்களுக்குப் பயன்படாத தனமும் தானியமும் என்னத்திற்கு? எல்லாவற்றையும் இந்தப் பழுவேட்டரையர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? சாகும்போது யமலோகத்திற்குத் தங்களுடன் கொண்டு போகப் போகிறார்களா…?
இப்படியெல்லாம் சில காலமாகவே சோழ நாட்டு மக்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தது திருமலை நம்பிக்குத் தெரிந்திருந்த விஷயந்தான். அதிலும் பழையாறை மக்களுக்கு இது விஷயமாகக் கோபம் அதிகமாக இருப்பதும் இயற்கையே. ஈழநாட்டுப் போர்க்களத்துக்குச் சென்றிருக்கும் பதினாயிரம் வீரர்களின் பெண்டு பிள்ளைகளும் உற்றார் உறவினரும் இந்த மாநகரில் இன்னும் வசித்து வருகிறார்கள் அல்லவா?
ஆகவே, பழுவேட்டரையர்களின் கட்டளையின் பேரில், குற்றம் செய்துவிட்ட ஒற்றனைப் பற்றிப் பறை முழங்கி அறைகூவியதைப் பழையாறை மக்கள் விரும்பவில்லை. பழுவேட்டரையர்கள் மீது தங்களுக்குள்ள குறைகளைப் பற்றிப் பேசிக் கொள்வதற்கு அது ஒரு காரணமாயிற்று. ஒற்றனாம் ஒற்றன்! எந்த நாட்டிலிருந்து ஒற்றன் இங்கே வந்து விடப் போகிறான்! குமரி முனையிலிருந்து வடபெண்ணை வரையில்தான் புலிக்கொடி பறந்து வருகிறதே! ஒற்றனை அனுப்பும்படியாக வேற்றரசன் யார் அவ்வளவு பலசாலியாக இருக்கிறான்? இந்தப் பழுவேட்டரையர்களுக்குப் பிடிக்காதவன் யாராவது இருந்தால் அவன் பேரில் ஒற்றன் என்று குற்றம்சாட்டி வேலை தீர்த்து விடுவார்கள்! அல்லது பாதாளச் சிறையில் தள்ளி விடுவார்கள்!…. இருந்தாலும் நமக்கென்னத்துக்கு வம்பு? அதிகாரம் அவர்களுடைய கையில் இருக்கிறது! நியாயம் அநியாயம் எது வேணுமானாலும் செய்வார்கள்! ஒற்றன் என்ற பட்டத்தைச் சூட்டி விட்டால், ஊர்ப் பஞ்சாயத்துக்களைக் கூடக் கேட்க வேண்டியதில்லை அல்லவா..?
இப்படியெல்லாம் பழையாறை மக்கள் மனத்தில் நினைத்ததையும் வாயினால் முணுமுணுத்ததையும் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக் கொண்டதையும் ஆழ்வார்க்கடியான் செவிப் புலன் வழியாகவும் மதி ஊகத்தினாலும் தெரிந்து கொண்டான்.
இவ்வாறு மக்களின் மனத்தில் புகைந்து வரும் அதிருப்தி எதில் போய் முடியப் போகிறதோ என்று சிந்தித்துக் கொண்டே குந்தவை தேவியின் மாளிகையை அடைந்தான்.
ஆழ்வார்க்கடியானிடம் உலக நடப்பைக் குறித்துப் பேசுவதில் இளையபிராட்டிக்கு எப்போதும் விருப்பம் உண்டு. நாடு நகரமெல்லாம் திரிந்து அவன் ஆங்காங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வருவான். அதையெல்லாம் அறிந்து கொள்ளுவதில் அரசிளங்குமரி ஆவல் கொண்டாள். அவன் தேடிக் கொண்டு வந்து பாடிக் காட்டும் ஆழ்வார் பாசுரங்களைக் கேட்பதிலும் இளையபிராட்டிக்குப் பிரியம் உண்டு. ஆகையால் திருமலை நம்பி எப்போது வந்தாலும் ஆர்வத்துடன் வரவேற்பாள். முகமலர்ச்சியுடன் அவனிடம் யோக க்ஷேமங்களைப் பற்றி விசாரிப்பாள்.
ஆனால் இன்றைக்கு இளவரசியின் முகபாவத்திலும் பேச்சிலும் சிறிது மாறுதல் தோன்றியதை ஆழ்வார்க்கடியான் கண்டான். மனது எங்கேயோ எதிலேயோ ஈடுபட்டிருப்பதைக் காட்டும் முகபாவம்; பேச்சில் இயற்கைக்கு மாறான ஒரு பரபரப்பு; கொஞ்சம் தடுமாற்றம்.
“திருமலை! என்ன விசேஷம்? எங்கே வந்தாய்?” என்று குந்தவை கேட்டாள்.
“விசேஷம் ஒன்றுமில்லை, தாயே! வழக்கம் போல் தாங்கள் உலக நடப்பைக் குறித்து விசாரிப்பதற்கு வரச் சொன்னதாக நினைத்துக் கொண்டு வந்தேன். மன்னிக்க வேண்டும் போய் வருகிறேன்”.
“இல்லை, இல்லை! கொஞ்சம் இருந்து விட்டுப் போ! நான்தான் உன்னை வரும்படி சொன்னேன்…”
“தாயே! சொல்ல மறந்து விட்டேன்! சற்று முன் பெரிய பிராட்டியின் சந்நிதியில் இருந்தேன். தங்களிடம் ஏதோ முக்கியமான செய்தி சொல்ல வேண்டுமாம். தங்களை வரும்படி சொல்லச் சொன்னார்கள்…”
“ஆகட்டும்; நானும் போகத்தான் எண்ணியிருக்கிறேன். நீ இந்தப் பிரயாணத்தில் எங்கெங்கே போயிருந்தாய்? அதைச் சொல்லு!”
“தென் குமரியிலிருந்து வட வேங்கடம் வரையில் போயிருந்தேன்.”
“போன இடங்களில் ஜனங்கள் என்ன பேசிக் கொள்ளுகிறார்கள்?”
“சோழ குல மன்னர் குலத்தின் பெருமையைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் சில காலத்தில் வடக்கே கங்கா நதி வரையிலும், ஹிமோத்கிரி வரையிலும் சோழ மகாராஜ்யம் பரவி விடும் என்று பேசிக் கொள்கிறார்கள்……”
“அப்புறம்?”
“பழுவேட்டரையர்களின் வீரப் பிரதாபங்களைப் பற்றியும் பாராட்டிப் பேசுகிறார்கள். சோழ சாம்ராஜ்யம் இவ்வளவு உன்னத நிலைமையை அடைந்ததற்குக் காரணமே பழுவூர்ச் சிற்றரசர்களின்…..”
“போதும், இன்னும் என்ன சொல்லுகிறார்கள்?”
“தங்களுடைய சகோதரர்கள் இருவரையும் பற்றி ஆசையோடு பேசிக் கொள்கிறார்கள். முக்கியமாக இளவரசர் அருள்மொழிவர்மர் மீது குடிமக்களுக்கு இருக்கும் அன்பையும் ஆதரவையும் சொல்லி முடியாது.”
“அதில் ஒன்றும் வியப்பில்லைதான்! இன்னும் ஏதேனும் பேச்சு உண்டா?”
“சோழ மகா சக்கரவர்த்தியின் திருக்குமாரிக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லையென்று பேசிக் கொள்கிறார்கள். என்னைக் கூடப் பலரும் கேட்டார்கள்……”
“நீ என்ன மறுமொழி சொன்னாய்?”
“எங்கள் இளையபிராட்டியை மணந்து கொள்ளத் தகுதி வாய்ந்த அரசகுமாரன் இன்னும் இந்தப் பூவுலகில் பிறக்கவில்லை என்று சொன்னேன்…….”
“அழகாயிருக்கிறது! இனிமேல் அப்படிப்பட்டவன் பிறக்க வேண்டுமாக்கும்! அவன் பிறந்து கல்யாண வயதை அடைவதற்கு முன்னால் நான் கிழப்பாட்டி ஆகிவிடுவேன்! என் விஷயம் இருக்கட்டும் திருமலை! வேறு ஏதாவது பேச்சு உண்டா?”
“ஏன் இல்லை? சிவஞான யோகீசுவரராகப் போவதாய்ச் சொல்லிக் கொண்டிருந்தத் தேவர் திடீரென்று கலியாணம் செய்து கொண்டதைப் பற்றிப் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்……”
“உன் அருமைச் சகோதரி…ஆண்டாளைப் போன்ற பக்த சிரோமணி ஆகப் போவதாகச் சொல்லிக் கொண்டிந்தாயே…அவள் இப்பொழுது எப்படியிருக்கிறாள்?”
“அவளுக்கு என்ன குறைவு தாயே! பெரிய பழுவேட்டரையரின் அரண்மனையில் சர்வாதிகாரிணியாக ஆட்சி செலுத்தி வருகிறாள்…”
“பழுவேட்டரையரின் அரண்மனையில் மட்டும்தானா? இந்தச் சோழ ராஜ்யத்துக்கே அவள்தான் சர்வாதிகாரிணி என்றல்லவா கேள்விப்பட்டேன்..!”
“அப்படியும் சிலர் பேசிக் கொள்கிறார்கள் தாயே! ஆனால் அவளை விட்டுத் தள்ளுங்கள். இந்த நல்ல நாளில் அவளுடைய பேச்சு எதற்கு? தாங்கள் ‘ஆண்டாள்’ பெயரைக் குறிப்பிட்டதால், எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போயிருந்தேன். பட்டர் பிரான் விஷ்ணு சித்தரின் பாடல்கள் சிலவற்றைத் தெரிந்து கொண்டேன். இதைக் கேளுங்கள், அம்மா! கண்ணன் பிறந்த திருநாளைப் பற்றிய பாடல்:-
‘வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்தன றாயிற்றே!
ஓடுவார் விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே!’
இன்றைக்கு நம் பழையாறை நகரமும் ஆயர்பாடி போலவே ஒரே குதூகலமாயிருக்கிறது, தாயே!”
“குதூகலமாயிருக்கிறது சரிதான்; ஆனால் சற்று முன்னால் வேறொரு விதமான பறை கொட்டிற்றே, அது என்ன திருமலை?”
இந்தக் கேள்விக்காகவே ஆழ்வார்க்கடியான் காத்துக் கொண்டிருந்தான்.
“யாரோ ஒற்றனாம்! தப்பித்துக் கொண்டானாம்! அவனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு கொடுப்பார்களாம்! அதையெல்லாம் பற்றி நான் என்ன கண்டேன் தாயே!”
“உனக்கு ஒன்றும் தெரியாதா? யாராயிருக்கும் என்பது பற்றிச் சந்தேகம் கூட இல்லையா?”
“மனத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றிப் பேசுவது அபாயம். தெரு வீதியில் நான் நடந்து வந்த போது என்னைக் கூடச் சிலர் முறைத்துப் பார்த்துக் கொண்டு போனார்கள். என்னை யாரேனும் பிடித்துக் கொண்டு போய்ப் பாதாளச் சிறையில் போட்டு விட்டால்…….?”
“உன்னைப் பிடிப்பதற்குத் தலையில் கொம்பு முளைத்தவர்களாயிருக்க வேண்டும்! உன் மனத்தில் தோன்றியதை என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்! நான் உன்னைக் காட்டிக் கொடுத்து விடுவேன் என்ற எண்ணம் இல்லையே?”
“கிருஷ்ணா! கிருஷ்ணா! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை வீரநாராயணபுரத்தில் ஒரு வீர வாலிபனைப் பார்த்தேன். அவன் தஞ்சாவூர் போகிறதாகச் சொன்னான். எதற்காகவென்று சொல்லவில்லை. என்னைப் பல கேள்விகள் கேட்டான்…….”
குந்தவை பரபரப்புடன், “அவன் எப்படியிருந்தான்?” என்றாள்.
“பெரிய குலத்தில் பிறந்தவனைப் போல் காணப்பட்டான். முகம் களையாயிருந்தது. ஊக்கமும் உள்வலியும் கொண்டவன் என்று தெரிந்தது……..”
“உன்னிடம் என்ன கேட்டான்?”
“சக்கரவர்த்தியின் உடல் நிலைமையைப் பற்றிக் கேட்டான். அடுத்தபடி பட்டத்துக்கு வர வேண்டியவரைப் பற்றிக் கேட்டான். இலங்கை சென்றிருக்கும் இளவரசரைப் பற்றிக் கேட்டான். பிற்பாடு, குடந்தை ஜோதிடரிடமும் அதே கேள்விகளைக் கேட்டதாக அறிந்தேன்……”
“ஆகா! குடந்தை ஜோதிடர் வீட்டுக்கு அவன் வந்திருந்தானா?”
“இப்போது ஞாபகம் வருகிறது. தாங்கள் ஜோதிடரின் வீட்டில் இருந்த போதே அவன் தடபுடல் செய்து கொண்டு உள்ளே வந்து விட்டானாம்…….. நல்லவேளையாகத் தங்களை அவன் தெரிந்து கொள்ளவில்லையாம்…!”
“நான் நினைத்தது சரியாய்ப் போயிற்று……”
“என்ன தாயே நினைத்தீர்கள்?”
“அந்த முரட்டு வாலிபனுக்குச் சீக்கிரம் ஏதாவது ஆபத்து வரலாம் என்று நினைத்தேன்……”
“தாங்கள் நினைத்தது சரிதான். அவன்தான் ஒற்றன் என்று சந்தேகிக்கிறேன். அவனைப் பிடிப்பதற்குத்தான் பழுவேட்டரையர்கள் பரிசு கொடுப்பதாகப் பறையடித்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.”
“திருமலை! எனக்கு ஓர் உதவி செய்வாயா?”
“கட்டளையிடுங்கள் தாயே!”
“அந்த வாலிபனை நீ எப்போதாவது பார்க்க நேர்ந்தால்………”
“பிடித்துக் கொடுத்துப் பரிசு பெற்றுக் கொள்ளட்டுமா?”
“வேண்டாம், வேண்டாம்! என்னிடம் அழைத்துக் கொண்டு வா! அவனிடம் எனக்கு முக்கியமான காரியம் ஒன்று இருக்கிறது.”
ஆழ்வார்க்கடியான் அதிசயம் அடைந்தவனைப் போல் சிறிது நேரம் குந்தவைப் பிராட்டியைப் பார்த்துக் கொண்டு நின்றான். பின்னர், “அதற்கு அவசியம் ஏற்படாது, தாயே! நான் அவனைத் தேடிப் பிடித்து வர அவசியம் நேராது. அவனே தங்களைத் தேடிக் கொண்டு வந்து சேருவான்!” என்றான்.
47. ஈசான சிவபட்டர்
ஆழ்வார்க்கடியான் அரசிளங்குமரியைப் பார்த்துவிட்டு அவனுடைய தமையனார் ஈசான சிவ பட்டரின் வீட்டுக்குச் சென்றான். அவருடைய வீடு வடமேற்றளி சிவன் கோயிலுக்கு மிக அருகில் இருந்தது. அரண்மனையிலிருந்து அரைக் காத தூரம் இருக்கும். சோழ மாளிகையிலிருந்து வடமேற்றளி ஆலயத்துக்குப் போனால், பழையாறை நகரின் விஸ்தீரணத்தையும் அதன் மற்றச் சிறப்புக்களையும் ஒருவாறு அறியலாம்.
கிருஷ்ண ஜயந்திக் கொண்டாட்டங்கள் எல்லாம் ஒருவாறு அடங்கி விட்டன என்பதை ஆழ்வார்க்கடியான் பார்த்துக் கொண்டு போனான். வீட்டுப் பகுதிகளின் வழியாகச் சென்றபோது ஸ்திரீகள் அங்கங்கே வீட்டு ஓரங்களில் கூடி நின்று கோபமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டு போனான். அந்த ஸ்திரீகள் அனைவரும் தத்தம் கணவர்கள் அல்லது புதல்வர்களின் கழுத்தில் வஞ்சிப் பூமாலை அணிவித்து உற்சாகமாக ஈழத்துப் போர் முனைக்கு அனுப்பியவர்கள். நாலு திசைகளிலும் சோழ சைன்யங்கள் நடத்திய வீரப் போர்களில் யாராவது ஒரு வீரன் அந்த ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சென்று வீர சொர்க்கம் அடையாமலிருந்தது கிடையாது. அப்படிப்பட்ட பெண்கள் இப்போது அதிருப்தியுடன் முணுமுணுத்துப் பேசிக் கொண்டிருந்ததைத் திருமலையப்பன் பார்த்தான். இதெல்லாம் என்ன விபரீதத்தில் போய் முடிகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டே சென்றான்.
வடமேற்றளி கோயிலை அவன் அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. அப்பர் பெருமானால் பாடப் பெற்ற கோயில் இதுதான். அந்த மகானுடைய காலத்தில் இக்கோயிலைச் சுற்றிச் சமணர்கள் செயற்கைக் குன்றுகளை எடுத்து, அந்தக் குன்றுகளில் முழைகளை அமைத்திருந்தார்கள். அப்படி ஏற்பட்ட செயற்கை மலைக் குகைகளில் திகம்பர சமணர்கள் உட்கார்ந்து தவம் செய்து கொண்டிருந்தார்கள். இதை நமக்கு ஞாபகப்படுத்துவதற்காக இன்றைக்கும் பழையாறைக்கு அருகில் முழையூர் என்று ஓர் ஊர் இருக்கிறது.
அப்பர் பெருமான் பழையாறை ஸ்தல மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தபோது சமணர்களின் முழைகள் சிவன் கோயிலை அடியோடு மறைத்திருந்தன. இதை ஆத்ம ஞானத்தினால் அறிந்த அப்பர் மனம் வருந்தினார். பல்லவர்களின் பிரதிநிதியாக அச்சமயம் சோழ நாட்டைப் பரிபாலித்து வந்த சிற்றரசனிடம் முறையிட்டார். அரசன் அந்தச் செயற்கை முழைகளில் ஒரு பகுதியை இடித்து அப்புறப்படுத்தினான்.உள்ளே சிறிய சிவன் கோயில் இருப்பது தெரிந்தது. அப்பர் பரவசமடைந்து பாடினார்.
அந்தக் கோயில் பிற்பாடு சோழ மன்னர்களால் சிறப்படைந்து கற்றளியாகக் கட்டப்பட்டது. ஆனால் இன்னமும் கோயிலைச் சுற்றிலும் முழைகள் சூழ்ந்து பிராகாரச் சுவர் போல் அமைந்திருந்தன. கோயிலுக்குள் பிரவேசிப்பதற்கு கோபுர வாசல் ஒன்றுதான் இருந்தது; வேறு வாசலே கிடையாது. கோபுர வாசல் வழியாகக் கோயில் பிராகாரத்துக்குள் சென்று, ஈசான சிவபட்டரின் வீட்டைச் சுலபமாக அடையலாம். இல்லாவிட்டால் சுற்றி வளைத்துக் கொண்டு போக வேண்டும்.
இப்படித் தன் தமையனாரின் வீட்டைக் குறுக்கு வழியில் அடைவதற்காகத் திருமலை கோபுர வாசலுக்குள் நுழைந்தான். உள்ளே சுவாமி சந்நிதியில் சில அடியார்கள் நிற்பது தெரிந்தது. அவர்கள் கிருஷ்ணனைப் போலவும் பலராமரைப் போலவும் வேஷந்தரித்து வந்த கோஷ்டியார் என்று தோன்றியது. “ஆகா! இவர்கள் எங்கே இங்கு வந்து சேர்ந்தார்கள்!” என்று அவன் எண்ணமிடுவதற்குள், ஈசான சிவபட்டர் கோயிலுக்குள்ளேயிருந்து அவசரமாக வெளியேறி வந்தார். அப்போதுதான் கோபுர வாசலுக்குள் நுழைந்திருந்த திருமலையின் கையைப் பிடித்துப் பரபரவென்று வெளியில் இழுத்துச் சென்றார்.
“அண்ணா! இது என்ன?” என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
“சொல்லுகிறேன், திருமலை! இனிமேல் நம்முடைய உறவெல்லாம் கோவிலுக்கு வெளியே இருக்கட்டும். நீ பதிதன்; சிவ நிந்தனை செய்யும் சமயப் பிரஷ்டன்; இந்தச் சிவாலயத்துக்குள் நீ அடியெடுத்து வையாதே! தெரிகிறதா? நானும் எத்தனையோ பொறுத்திருந்தேன். இன்றைக்குப் பெரிய மகாராணியின் முன்னால் நீ பேசியதை என்னால் சகிக்க முடியவில்லை. வீட்டுக்கு வேண்டுமானால் வந்து உன் பெரிய வயிற்றை நிரப்பிக் கொண்டு போ! ஆனால் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்காதே! அடி வைத்தால் நான் சண்டேசுவர நாயனார் ஆகி விடுவேன்!”
இவ்வாறு சொல்லி ஈசான சிவபட்டர் திருமலையின் கழுத்தைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளி விட்டு, கோயில் கதவைப் படார் என்று சாத்தினார். “அண்ணா! அண்ணா!…..” என்று திருமலை ஏதோ சொல்ல ஆரம்பித்ததை ஒரு கணமும் காது கொடுத்துக் கேட்காமல் கோவில் கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு போய் விட்டார்.
“ஓகோ! அப்படியா சமாசாரம்?” என்று ஆழ்வார்க்கடியான் முணுமுணுத்துக் கொண்டான். சற்று நேரம் அங்கேயே நின்றான். பிறகு, அச்சிவனார் கோவிலை, சமணர் முழைகள் உட்பட, இரண்டு மூன்று தடவை சுற்றி வந்தான். வலப்புறமாய்ச் சென்றால் பிரதட்சிணம் செய்ததாகி விடும் என்று வேண்டுமென்றே இடதுபுறமாகச் சுற்றி வந்தான். வட்ட வடிவமாக அமைந்திருந்த செய்குன்றுகளில் சமணர் முழை வாசல்கள் எல்லாம் நன்கு அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். பின்னர், ஈசான சிவபட்டரின் வீடு சென்றான். வேடிக்கை வேடிக்கையாகப் பேசும் திருமலையிடம் பட்டரின் மனையாளுக்கு மிக்க பிரியம். அந்த அம்மாளிடம் வழக்கத்தை விட வேடிக்கையாகப் பேசி, வயிறு நிறையச் சிவன் கோயில் பிரசாதத்தைச் சாப்பிட்டு விட்டு, வாசல் திண்ணையில் வந்து படுத்தான்.
முதலாவது நாள் குடமுருட்டி நதிக்கரையோடு வந்தபோது அவன் கண்ட காட்சி ஒன்று நினைவு வந்தது. அவனுக்கு எதிர்த் திசையில் சில குதிரைகள் வேகமாக வரும் சப்தம் கேட்டுப் பக்கத்தில் அடர்த்தியாக இருந்த மூங்கில் புதர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு நின்றான்.
முதலில் வந்த குதிரை தறிகெட்டு ஓடிவருவது போல் ஓடி வந்தது. அது சொட்டச் சொட்ட நனைந்திருந்தது; வியர்வையினாலா, நதி வெள்ளத்தில் முழுகி வந்ததினாலா என்று தெரியவில்லை. அக்குதிரையின் பேரில் ஒரு சிறு பிள்ளை உட்கார்ந்திருந்தான்.அவனைக் குதிரையோடு சேர்த்துக் கட்டியிருந்தது. அந்தப் பிள்ளையின் முகத்தில் பீதியும், அத்துடன் ஓர் உறுதியும் சேர்ந்து காணப்பட்டன. சற்றுப் பின்னால் இன்னும் நாலைந்து குதிரைகள் வந்தன. அவற்றின் மீது வேல் பிடித்த வீரர்கள் வந்தார்கள். சீக்கிரத்தில் பிடித்து விடுவார்கள் என்று தோன்றியது. அவர்களில் ஒருவன் தன்னுடைய வேலாயுதத்தைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்து முன்னால் வந்த குதிரை மேல் எறிவதற்குக் குறி பார்த்தான். இன்னொருவன் அதைத் தடுத்தான்.
அச்சமயத்தில் அந்தப் பிள்ளை அடர்ந்த மூங்கில் புதர்களுக்குக் கீழே போக வேண்டியிருந்தது. சற்று வளைந்து தாழ்ந்திருந்த மூங்கில் மரக்கிளை ஒன்று அவனுடைய தலை மயிரில் சிக்கிக் கொண்டது. குதிரை முன்னால் இழுக்கவும் அந்தப் பிள்ளையின் கதி என்ன ஆகுமோ என்று இருந்த நிலையில் பின்னால் வந்தவர்கள் அக்குதிரையை வந்து பிடித்துக் கொண்டார்கள்.
குதிரை மீது வைத்துக் கட்டியிருந்த பிள்ளையைப் பார்த்து வியப்பும் திகைப்பும் கோபமும் அடைந்தார்கள். ஏதோ அவனைக் கேட்டார்கள். அவன் தட்டுத் தடுமாறி மறுமொழி சொன்னான். விவரமாக ஆழ்வார்க்கடியான் காதில் விழவில்லை. “அவன் எங்கே?” “அவன் எங்கே?” என்று அடிக்கடி பலமுறை கேட்ட கேள்வி காதில் விழுந்தது. அந்த இளம்பிள்ளை “ஆற்றோடு போய் விட்டான்!” “வெள்ளத்தில் விழுந்து விட்டான்!” என்று விம்மி அழுது கொண்டே சொன்னதும் காதில் விழுந்தது. பிறகு அவ்வீரர்கள் அந்தப் பையனையும் குதிரையையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரையோடு போய் விட்டார்கள்.
இந்தச் சம்பவத்தின் பொருள் என்னவென்பது திருமலையப்பனுக்கு அச்சமயம் விளங்கவில்லை. இப்போது கொஞ்சம் விளங்குவது போல் தோன்றியது.
இதற்கிடையில், அந்த வீதி நாடக கோஷ்டியின் நினைவும் அவனுக்கு வந்தது. முக்கியமாக, கம்ஸன் வேஷம் தரித்து, மரப் பொம்மை முகத்தினால் சொந்த முகத்தை மறைத்துக் கொண்டிருந்தவனின் நடை உடை பாவனைகளும், குரலும் நினைவு வந்தன. முன்னம் கேட்டது போல் தொனித்த அக்குரல் யாருடைய குரல் என்பது பற்றியும் விளக்கம் ஏற்படத் தொடங்கியது.
இரவு அர்த்த ஜாம பூஜையை முடித்துக் கொண்டு ஈசான சிவபட்டர் தம் இல்லத்துக்கு வந்தார். வாசல் திண்ணையில் ஆழ்வார்க்கடியான் படுத்திருப்பதைப் பார்த்தார்.
“திருமலை! திருமலை!” என்று கோபக் குரலில் கூப்பிட்டார்.
திருமலை நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகப் பாசாங்கு செய்தான்.
வீட்டுக் கதவைப் படார் என்று சாத்திக் கொண்டு பட்டர் உள்ளே போனார். தமது மனைவியாருடன் அவர் சண்டை பிடிக்கிற தோரணையில் பேசியது அரைகுறையாகத் திருமலையின் காதில் விழுந்தது. தன்னைப் பற்றித்தான் சண்டை என்பதைத் திருமலை தெரிந்து கொண்டான்.
காலையில் எழுந்ததும் ஈசான சிவபட்டர் திருமலையிடம் வந்து, “மறுபடி நாடு சுற்ற எப்போது புறப்படுகிறாய்?” என்று கேட்டார்.
“தங்கள் கோபம் தணிந்த பிறகு புறப்படுவேன் அண்ணா!” என்றான்.
“இனி என்னை ‘அண்ணா’ என்று கூப்பிடாதே. இன்று முதலாவது நான் உன் தமையனும் அல்ல; நீ என் தம்பியும் அல்ல. நீ சிவத்துவேஷி; நீசன்; சண்டாளன்…”
பட்டரின் மனைவி திருமலைக்காகப் பரிந்து, “எதற்காக இப்படியெல்லாம் அவனைச் சபிக்கிறீர்கள்! இத்தனை நாளும் சொல்லாததை அவன் இப்போது என்ன புதிதாகச் சொல்லி விட்டான்! உங்களுக்குத்தான் சிவபக்தி ரொம்ப அதிகமாக முற்றி விட்டது!” என்றாள்.
“உனக்கு ஒன்றும் தெரியாது! அவன் நேற்று பெரிய மகாராணியின் முன்னிலையில் என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா? ‘சுடுகாட்டில் சாம்பலைப் பூசிக் கொண்டு திரியும் பரமசிவனுக்குக் கோவில் என்னத்திற்கு!’ என்று கேட்டான். என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. மகாராணி இராத்திரியெல்லாம் தூங்கவேயில்லையாம்!”
“இனிமேல் அப்படியெல்லாம் பேச மாட்டான். நான் புத்தி சொல்லித் திருத்தி விடுகிறேன். அவனிடம் நல்ல வார்த்தையாகச் சொன்னால் கேட்கிறான்!” என்றாள்.
“நல்ல வார்த்தையும் ஆயிற்று; பொல்லாத வார்த்தையும் ஆயிற்று. அவன் இராமேசுவரத்துக்கு உடனே போகட்டும். இராமர், பூஜை செய்து பாவத்தைப் போக்கிக் கொண்ட சிவலிங்கத்தை இவனும் பூஜை செய்து விட்டு வரட்டும். அதுதான் இவனுக்குப் பிராயச்சித்தம். அப்படிச் செய்யும் வரையில் நான் இவன் முகத்திலேயே விழிக்க மாட்டேன்!” என்றார்.
திருமலையின் உதடுகள் துடித்தன. வட்டியுடன் சேர்த்துத் திருப்பிக் கொடுப்பதற்குத்தான். ஆனால் பேசினால் காரியம் கெட்டுவிடும் என்று பொறுமையைக் கடைப்பிடித்தான்.
பட்டரின் பத்தினி இச்சமயத்தில் மறுபடியும் தலையிட்டு, “அதற்கு என்ன? இராமேசுவரத்துக்குப் போகச் சொன்னால் போகிறான். அவனுடன் நாமும் போகலாம். இத்தனை நாள் ஆகியும் நமக்குந்தான் குழந்தை பிறக்கவில்லை. பூர்வ ஜன்மத்தில் என்ன பாவம் செய்தோமோ, என்னமோ…? திருமலை! எல்லாருமாக இராமேசுவரத்துக்குப் போகலாமா?” என்று கேட்டாள்.
அவர்கள் இரண்டு பேரையும் சிவபட்டர் முறைத்துக் கோபமாகப் பார்த்து விட்டுப் போய்விட்டார்.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஈசான பட்டர் திரும்பி வந்து திருமலையிடம் சாந்தமாகப் பேசினார்.
“தம்பி! ‘கோபம் பாபம் சண்டாளம்’ என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் கோபத்துக்கு இடம் கொடுத்து விட்டேன். உனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே?” என்றார்.
“இல்லவே இல்லை!” என்று சொன்னான் ஆழ்வார்க்கடியான்.
“அப்படியானால் நீ இங்கேயே இரு! உச்சிகால பூஜையை முடித்துக் கொண்டு நான் வந்து விடுகிறேன். உன்னிடம் சில முக்கியமான விஷயங்களைப் பற்றிச் சொல்லி யோசனை கேட்க வேண்டும். இங்கேயே இருக்கிறாய் அல்லவா? எங்கும் போய் விட மாட்டாயே?” என்றார்.
“எங்கும் போகவில்லை, அண்ணா! தங்களை விட்டு எங்கும் போவதாக உத்தேசமில்லை!” என்றான்.
பட்டர் போய் விட்டார். ஆழ்வார்க்கடியான் தனக்குத்தானே, “அப்படியா சமாசாரம்!” என்று சிலமுறை சொல்லிக் கொண்டான். பிறகு அண்ணியிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டான். செய்குன்றுகள் சூழ்ந்த வடமேற்றளிக் கோயிலை இரண்டு மூன்று தடவை சுற்றி வந்தான். அவ்வப்போது ஏதேனும் சத்தம் கேட்டால் உடனே மறைந்து நின்று கொண்டான்.
அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. சமணர் முழைகளில் ஒன்றின் வாசல் மெதுவாகத் திறந்தது. முதலில் ஈசான சிவபட்டர் மூன்று பக்கமும் பார்த்துவிட்டு வெளியே வந்தார். பின்னால் இன்னொரு மனிதன் வெளிப்புறப்பட்டு வந்தான். ஆகா! இவன் யார்? முகம் தெரியவில்லையே? உடல் அமைப்பைப் பார்த்தால் கம்ஸன் வேடம் பூண்டிருந்தவன் மாதிரி இருக்கிறது! யாராயிருக்கும்? இதைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை. ஓஹோ! இதற்குத்தானா, இவ்வளவு கோபதாபம் மூடுமந்திரம் எல்லாம்!
முழையிலிருந்து வெளிப்பட்ட இருவரும் முன்னால் சென்றார்கள். ஆழ்வார்க்கடியான் ஒதுங்கிப் பதுங்கி மறைந்து பின்தொடர்ந்தான்.
சிறிது நேரம் நடந்ததும் ஓடைக் கரையை அடைந்தார்கள். சோழ மாளிகைக்குப் பின்புறத்தில் கடலைப் போல பரவி அலைமோதிக் கொண்டிருந்த ஓடையைத்தான். ஆனால் மாளிகைக்கு வெகு தூரம் மேற்கில் இருந்தது அத்துறை.
ஓடைக்கரையில் அடர்ந்த மரங்கள் பல இருந்தன. அவற்றில் ஒன்றின் பின்னால் ஆழ்வார்க்கடியான் நின்று இரண்டு கிளைகளுக்கு நடுவில் தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
படகு ஒன்று அலையில் அலைப்புரண்டு மிதந்தது. அரண்மனைப் படகு மாதிரி தோன்றியது. படகுக்காரன் கரையில் நின்று கொண்டிருந்தான்.
பட்டரையும் அவருடன் வந்தவனையும் பார்த்ததும் அவன் படகைக் கரையோரமாக இழுத்து நிறுத்தினான்.
இருவரும் படகில் ஏறிக் கொண்டார்கள். படகு நீரில் போக ஆரம்பித்ததும் பட்டருடன் வந்த மனிதன் கரைப் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
அவன் முகம் பளிச்சென்று நன்றாய்த் தெரிந்தது.
ஆழ்வார்க்கடியானுக்கு வியப்பு ஒன்றும் உண்டாகவில்லை. அவன் எதிபார்த்த மனிதன் தான் அவன்.
வீரநாராயணபுரத்திலும் கொள்ளிடத்துப் படகிலும் சந்தித்த அந்த வீர வாலிபன்தான்!
கம்ஸன் வேடம் பூண்டிருந்தவனும் அவனே என்பதில் சந்தேகமில்லை.
அவர்கள் படகில் ஏறி எங்கே போகிறார்கள்? — அதையும் கண்டுபிடித்து விட வேண்டியதுதான்! அதாவது தன்னுடைய ஊகம் சரிதானா என்று பார்த்து விட வேண்டும்.
சோழ மாளிகைகள் பல வானளாவி நின்ற வீதியில் கடைசி மாளிகை ஒன்று பூட்டப்பட்டுக் கிடந்தது. அது சுந்தர சோழரின் முதன் மந்திரியான அநிருத்த பிரும்மராயரின் மாளிகை. முதன் மந்திரி அநிருத்தர் பாண்டிய நாட்டின் இராஜரீக நிர்வாகத்தைச் செப்பனிட்டு அமைப்பதற்காக மதுரை சென்றிருந்தார். அவருடைய குடும்பத்தார் தஞ்சாவூரில் இருந்தார்கள். ஆகையால் அவருடைய பழையாறை மாளிகை பூட்டப்பட்டுக் கிடந்தது.
ஆழ்வார்க்கடியான் இந்த மாளிகைக்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் மாளிகைக் காவலர்கள் பயபக்தியுடன் வந்து நின்றார்கள். மாளிகையின் கதவைத் திறக்கும்படிப் பணித்தான். காவலர்கள் கதவைத் திறந்தார்கள். பிறகு அவன் கட்டளைப்படி வெளிப்பக்கம் சாத்திப் பூட்டினார்கள். மாளிகையின் மூன்று கட்டுக்களையும் கடந்து பின்புறத் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தான். அத்தோட்டத்திலிருந்து நெருக்கமான மரஞ்செடிகளைப் பிளந்து கொண்டு கொடி வழி ஒன்று சென்றது. திருமலை அதில் புகுந்து சென்று சிறிது நேரத்தில் குந்தவை தேவியின் மாளிகைத் தோட்டத்தை அடைந்தான். கொடி வீடு ஒன்றில் மறைவான இடத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு சிரமம் அவன் எடுத்துக் கொண்டது வீண் போகவில்லை.
காளிதாஸன் முதலிய மகா கவிகள் வர்ணிக்க வேண்டிய நாடக நிகழ்ச்சி ஒன்று அங்கே நடந்தது.
நீரோடைக் கரையில் படகு வந்து நின்றது. அதிலிருந்து ஈசான பட்டரும் வந்தியத்தேவனும் இறங்கினார்கள். பிறகு நீர்த்துறையின் படிக்கட்டுகளின் வழியாக ஏறி வந்தார்கள்.
படிக்கட்டுகளுக்குச் சற்றுத் தூரத்தில் தோட்டத்தில் அமைந்திருந்த பளிங்குக்கல் மேடையில் இளையபிராட்டி குந்தவை அமர்ந்திருந்தாள்.
படகில் வந்தவர்கள் நீர்த்துறையில் படிக்கட்டுகளில் ஏறி மேற்படிக்கு வந்ததும் இளையபிராட்டி குந்தவை தேவி எழுந்து நின்றாள்.
வந்தியத்தேவன் அப்போதுதான் அப்பெண்ணரசியின் திருமுகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
பார்த்தது பார்த்தபடியே நின்றான்.
அவனுக்கும் இளையபிராட்டி குந்தவைக்கும் மத்தியில் ஒரு பூங்கொடி தன் இளந்தளிர்க்கரத்தை நீட்டி இடைமறித்து நின்றது.
அந்தக் கொடியில் ஓர் அழகிய பட்டுப் பூச்சி – பல வர்ண இறகுகள் படைத்த பட்டுப் பூச்சி – வந்து உட்கார்ந்தது. குந்தவை தன் பொன் முகத்தைச் சிறிது குனிந்து அந்தப் பட்டுப் பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வந்தியத்தேவனோ குந்தவையின் முக மலரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான். ஓடையில் அலைகள் ஓய்ந்து அடங்கின.
பட்சி ஜாலங்கள் பாடுவதை நிறுத்தின. அண்ட பகிரண்டங்கள் அசையாது நின்றன.
பல யுகங்கள் சென்றன.
48. நீர்ச் சுழலும் விழிச் சுழலும்
கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சங்கள் அவனுக்குத் தேவையான கனி வர்க்கங்களை உணவாக அளித்தன. காட்டு மிருகங்கள் அவனைக் கண்டு நடுநடுங்கின. வானத்துப் பறவைகளைப் போல் அவன் சுயேச்சையாக ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்தான். ஆயினும் அவனுடைய உள்ளத்தின் உள்ளே ஏதோ ஒரு குறை, – இனந்தெரியாத ஒரு வகைத் தாபம், – இடைவிடாமல் குடிகொண்டிருந்தது. ஏதோ ஒரு காந்த சக்தி அவனைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஓர் அரிய பொருளை, – இது வரை பார்த்தும் அனுபவித்தும் அறியாத இன்பத்தை, – அவனுடைய இதயம் தேடிக் கொண்டிருந்தது. பகலில் அதைப் பற்றிக் கற்பனை செய்தான்; இரவில் அதைப் பற்றிக் கனவு கண்டான். “எனக்காகவே படைக்கப்பட்ட அந்த அற்புதப் பொருளை,- கற்பகக் கனியை, – என்னைக் கவர்ந்திழுக்கும் காந்தத்தை, எங்கே காண்பேன்? எப்போது காண்பேன்?” என்று அவன் இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஆதி மனிதனைப் படைத்த அதே சமயத்தில் இறைவன் ஆதி ஸ்திரீயையும் படைத்தார். மலையின் மற்றொரு பக்கத்துச் சாரலில் அவள் வசித்து வந்தாள். பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன. வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு குறையும் இல்லை. ஆனால் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜுவாலை விட்டு அவளை எரித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி அவளைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. அச்சக்தி எங்கிருந்து அவளை இழுக்கிறது, எந்தத் திசையை நோக்கி இழுக்கிறது என்பது ஒன்றும் தெரியவில்லை.
ஆதி மனிதனுக்கும் ஆதி ஸ்திரீக்கும் இடையில் ஒரு பெரிய மலை ஓங்கி நின்று ஒருவரையருவர் சந்திக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
வெயிற் காலத்தில் ஒருநாள் இயற்கை நியதி காரணமாகக் காட்டில் தீ மூண்டு நாலாபுறமும் பரவத் தொடங்கியது. மலையைச் சுற்றி நெருப்பு அதிவேகமாகப் பரவி வந்தது. மனிதனும் ஸ்திரீயும் காட்டுக்குள் போனால் ஆபத்துக்குள்ளாவோம் என்று உணர்ந்து மலை மேல் ஏறினார்கள். மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையருவர் பார்த்தார்கள். பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள். காட்டுத் தீயை மறந்தார்கள். எதற்காக மலை உச்சியில் ஏறினோம் என்பதையும் மறந்தார்கள். பசி தாகங்களை அடியோடு மறந்தார்கள். இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு சந்திப்புக்காகவே என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள். தங்களைக் கவர்ந்திழுத்த இனந் தெரியாத சக்தி இதுதான் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை இன்னொருவரால் இட்டு நிரப்பிப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை அறிந்தார்கள். இவ்விதம் ஒன்று சேர்ந்து விட்டவர்களை இனிப் பிரிக்கக் கூடிய சக்தி உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள்.
இந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த படைப்புக் கடவுளான பிரம்மதேவர் தாம் ஆரம்பித்த வேலை நல்ல முறையில் தொடங்கி விட்டது என்பதை அறிந்து பரிபூரணத் திருப்தி அடைந்தார்!
மேற்கூறிய ஆதி மனிதனையும் ஆதி ஸ்திரீயையும் ஒத்திருந்தார்கள் அந்த நேரத்தில் நம் வல்லவரையனும் குந்தவை தேவியும். இப்பூவுலகில் தாங்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் இந்த நிமிஷத்துக்காகவே,- இந்தச் சந்திப்புக்காகவே, – என்பதை அவர்களுடைய உள்ளுணர்ச்சி உணர்த்தியது. ஆனால் ஆதி மனிதனையும் ஆதி ஸ்திரீயையும் போலின்றி இவர்கள் நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் அல்லவா? ஆகையால் தங்களுடைய பரஸ்பர அந்தஸ்தில் இருந்த வேற்றுமையை அவர்களால் மறக்க முடியவில்லை. முழுதும் உணர்ச்சி வசப்பட்டு மனத்தைக் கட்டுக்கடங்காமல் அவர்கள் விட்டுவிடவில்லை. ஒரு கணம் ஒருவரையருவர் பார்த்துக் கண்ணோடு கண் சேர்வதும், அடுத்த கணத்தில் தங்கள் கண்களைத் திருப்பி அக்கம் பக்கத்திலிருந்த பூ, மரம், பட்டுப் பூச்சி, ஓடை முதலியவற்றைப் பார்ப்பதுமாயிருந்தார்கள்.
ஈசான சிவபட்டர் தொண்டையைக் கனைத்த பிறகுதான் இருவரும் ஏதோ ஒரு முக்கியமான காரியம் பற்றி இங்கே சந்திக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டார்கள்.
“நீர் என்னைத் தனிமையில் பார்க்க வேண்டுமென்று ஈசான பட்டரிடம் தெரிவித்தது உண்மையா?” என்று குரலைக் கடுமைப்படுத்திக் கொண்டு இளையபிராட்டி வினவினாள்.
அந்தக் குரலின் கடுமையும் அதிகார தோரணையும் வந்தியத்தேவனை நிமிர்ந்து நிற்கச் செய்தன.
“தாங்கள் யார் என்று தெரிந்தால் அல்லவா தங்களது கேள்விக்கு விடை சொல்லலாம்? ஈசான பட்டர் என்னைத் தவறான இடத்துக்கு அழைத்து வந்து விட்டாரோ என்று ஐயுறுகிறேன்!” என்றான் அந்த வீர வாலிபன்.
“எனக்கும் அவ்வித சந்தேகம் உண்டாகிறது. நீர் யாரைப் பார்க்க விரும்பினீர்?”
“சோழர் தொல்குலத்தின் மங்காமணி விளக்கை, சுந்தர சோழ மன்னரின் செல்வத் திருமகளை, ஆதித்த கரிகாலருக்குப் பின் பிறந்த சகோதரியை, அருள்மொழிவர்மரின் அருமைத் தமக்கையை, இளையபிராட்டி குந்தவை தேவியைப் பார்க்க வேண்டுமென்று ஈசான சிவபட்டரிடம் சொன்னேன்……”
குந்தவைப் பிராட்டி புன்னகை பூத்து, “அவ்வளவு பெருமையையும் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருப்பவள் நான் தான்!” என்றாள்.
“அப்படியானால் குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் நான் பார்த்த நாரீமணி தாங்கள் இல்லைதானே?” என்றான் வல்லவரையன்.
“ஆமாம், ஆமாம்! அந்த இரண்டு இடத்திலும் அவ்வளவு மரியாதைக் குறைவாகத் தங்களிடம் நடந்து கொண்டவளும் நானேதான். அந்த நாகரிகமில்லா மங்கையை மறுபடியும் இவ்வளவு சீக்கிரத்தில் சந்திப்போம் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்!”
“மறுபடியும் சந்திப்பதாகச் சொல்வது பொருத்தமில்லை, தேவி!”
“ஏன்?”
“விட்டுப் பிரிந்திருந்தால் அல்லவா மறுபடியும் சந்திப்பதாகச் சொல்லலாம்? தாங்கள் என் மனத்தை விட்டு ஒரு கணமும் அகலவில்லை…….”
“தொண்டை மண்டலத்தார் இவ்வளவு சமத்காரமாகப் பேசுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”
“எல்லாப் பெருமையையும் சோழ நாட்டிற்கேதான் கொடுப்பீர்களாக்கும். வேறு நாடுகளுக்கு ஒரு பெருமையும் தர மாட்டீர்கள் போலிருக்கிறது.”
“ஆம்; என்னிடம் அந்தக் குற்றம் இருப்பது உண்மைதான். உமக்கு எங்கள் சோழ நாட்டைப் பிடிக்கவில்லையாக்கும்!”
“பிடிக்காமல் என்ன? நன்றாய்ப் பிடித்திருக்கிறது. ஆனால் இச்சோழ நாட்டில் இரண்டு பெரும் அபாயங்கள் இருக்கின்றன. அவற்றை எண்ணினாலே எனக்குப் பயமாயிருக்கிறது…..!”
“சோழ நாட்டு வீரர்களின் வாளும் வேலும் அபாயகரமான ஆயுதங்கள் தான்! அயல் நாட்டவர்கள் இங்கே ஜாக்கிரதையாகவே வர வேண்டும். முக்கியமாக, ஒற்றர் வேலை செய்வதற்கென்று வருவோர்…..”
“இளவரசி! அந்த இரு அபாயங்களை நான் குறிப்பிடவில்லை. வாளும் வேலும் என்னிடமும் இருக்கின்றன. அவற்றை உபயோகிப்பதற்கும் நான் நன்கு அறிவேன்…….”
“உமது வேலின் வன்மையைத்தான் அரிசிலாற்றங்கரையில் அன்று பார்த்தேனே? செத்துப் போன முதலையை உமது வேல் எத்தனை வேகமாய்த் தாக்கியது? ஒரே தாக்குதலில் உள்ளே அடைந்திருந்த பஞ்சையெல்லாம் வெளிக் கொண்டு வந்து விட்டதே?”
“அம்மணி! சோழ நாட்டு மாதரசிகள் செத்த முதலையைக் கண்டு பயந்து சாகும் வீர நாரீமணிகள் என்பதை நான் அறியேன். சோழ நாட்டு வீரர்கள் செத்த முதலையைத் தாக்கும் சுத்த வீரர்கள் என்றும் எனக்குத் தெரியாது. உயிருள்ள முதலையாக்கும் என்று எண்ணி வேலை எறிந்தேன். அது என் தவறும் அன்று; என் வேலின் தவறும் அன்று!……”
“அந்த அசட்டு முதலையின் தவறுதான்! வாணர் குலத்தில் பிறந்த வீர வந்தியத்தேவர் வேலோடு வரும் வரையில் காத்துக் கொண்டிராமல் முன்னதாகவே செத்துப் போய்விட்டதல்லவா? அதற்கு நன்றாய் வேணும் இந்த அவமானம்…! வேறு எந்த இரு அபாயங்களைப் பற்றிச் சொன்னீர்?”
“இந்தச் சோழ நாட்டு நதிகளில் புது வெள்ளம் வரும்போது உண்டாகும் சுழல்கள் அபாயமானவை! அவற்றை ஒரு போதும் நம்பவே கூடாது. என்னைத் திண்டாடித் திணறும்படி செய்து விட்டன!”
“வெள்ளச் சூழலில் நீர் எப்படி அகப்பட்டுக் கொண்டீர்? தண்ணீரில் காலையே வைக்க மாட்டீர் என்றல்லவா உம்மைப் பார்த்தால் தோன்றுகிறது?”
“வேதாளத்துக்கு வாழ்க்கைப் பட்டு முருங்கை மரத்தில் ஏற மாட்டேன் என்றால், முடிகிற காரியமா? சோழ நாட்டுக்கு வந்த காரணத்தினால், நதி வெள்ளத்தில் முழுகிச் சுழலிலும் சிக்கும்படியாகி விட்டது! என்னோடு துணைக்கு வந்த ஒரு அசட்டுப் பிள்ளையின் பிடிவாதத்தினால் அப்படி நேர்ந்தது! கேளுங்கள், தேவி! அந்தப் பிள்ளை ஒரு சின்னஞ் சிறிய பொய் சொல்ல முடியாது என்றான். அதனால் வந்த வினை…”
“நீர் சொல்லுவது புதிராக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் நல்லது.”
“சொல்கிறேன். தங்களுடைய அருமைச் சகோதரரின் ஓலையுடன் தூதனாக வந்த என்னைத் தஞ்சைக் கோட்டைத் தலைவர் சிறிய பழுவேட்டரையர் ‘ஒற்றன்’ என்று குற்றஞ்சாட்டிப் பிடித்து வர ஆட்களை ஏவினார். வந்த காரியம் பூர்த்தியாவதற்குள் சிறைப்பட நான் விரும்பவில்லை. ஆகையால் நான் தஞ்சையில் தங்கியிருந்த வீட்டுச் சிறுவனை வழிகாட்ட அழைத்துக் கொண்டு கிளம்பினேன்……”
“தஞ்சை நகரில் யாருடைய வீட்டில் தங்கினீர்?”
“கோட்டைக்கு வெளியிலே பூக்காரப் பெண்மணி ஒருத்தியின் வீட்டில் தங்கினேன். அந்த அம்மாள் ஊமை.”
“ஓகோ! அவளுடைய பெயர்?”
“அந்த அம்மாளின் பெயர் தெரியாது; ஆனால் அவளுடைய பிள்ளையின் பெயர் மட்டும் எனக்குத் தெரியும். அவன் பெயர் சேந்தன் அமுதன்…..”
“நான் நினைத்தது சரிதான்; மேலே சொல்லுங்கள்!”
“என் குதிரை மேல் அச்சிறுவனையும் ஏற்றிக் கொண்டு இந்தப் பழையாறை நகரை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அதற்குள் பழுவேட்டரையரின் ஆட்கள் சிலர் எங்களை நெருங்கி வந்து விட்டார்கள். நான் வந்த காரியம் முடிவதற்குள் அவர்களிடம் பிடிபட விரும்பவில்லை. குடமுருட்டி ஆறு வந்ததும் அச்சிறுவனிடம், ‘நான் இங்கே இறங்கிக் கொள்கிறேன், தம்பி! நீ பாட்டுக்குக் குதிரையை விட்டுக் கொண்டு போ! உன்னை நான்தான் என்று அவர்கள் தொடர்ந்து துரத்தி வருவார்கள். உன்னைப் பிடித்த பிறகு ஏமாறுவார்கள்! நான் எங்கே என்று அவர்கள் கேட்டால் ஆற்றில் விழுந்து முழுகிப் போய் விட்டதாகச் சொல்!” என்றேன். அந்தப் பையனோ அரிச்சந்திரனுடைய சந்ததியில் வந்தவன் போலிருக்கிறது. ‘நீங்கள் முழுகாத போது எப்படி முழுகி விட்டதாகப் பொய் சொல்லுவேன்?’ என்றான். அந்தப் பிள்ளை பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாமலிருக்கும் பொருட்டு, அவனைக் குதிரையில் சேர்த்துக் கட்டி விட்டு, நான் நதியில் குதித்து முழுகி விட்டேன். அம்மம்மா! இந்தச் சோழ நாட்டு நதிகளில், அதுவும் கரை ஓரங்களில், எப்பேர்ப்பட்ட நீர்ச் சுழல்கள்! அவற்றில் அகப்பட்டுக் கொண்டு நான் பெரிதும் திண்டாடிப் போனேன். கடைசியில், கரை ஓரத்தில் இருந்த மரத்தின் வேர் ஒன்றைப் பிடித்துக் கொண்டு கரையேறி உயிர் பிழைத்து வந்தேன். தேவி! நீர்ச் சுழலில் நான் அகப்பட்டுக் கொண்டு சுழன்று சுழன்று மதி மயங்கி மூச்சுத் திணறிக் கஷ்டப்பட்ட போது என்ன கண்டேன், எதை நினைத்துக் கொண்டேன் என்று எண்ணுகிறீர்கள்?’
“நான் எவ்விதம் அறிவேன்? ஒருவேளை கஜேந்திர மோட்சத்தை நினைத்துக் கொண்டிருக்கலாம்….”
“இல்லை, இல்லை; என்னைப் போலவே அந்த நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடிய சில கயல் மீன்களைக் கண்டேன். அந்தக் கயல் மீன்கள் இந்தச் சோழ நாட்டுப் பெண்களின் கண்களை நினைவூட்டின. நதியின் நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டவனாவது எப்படியோ தப்பிப் பிழைக்கலாம்; ஆனால் இந்தச் சோழ நாட்டுப் பெண்களின் விழிச் சுழலில் அகப்பட்டுக் கொண்டவன் ஒரு காலும் தப்பிப் பிழைக்க முடியாது என்று எண்ணிக் கொண்டேன்!….”
“இம்மாதிரி பெண்களைக் குற்றம் கூறி பழி சொல்வதில் சிலருக்கு ஒரு பெருமை; தாங்கள் செய்யும் தவறுக்குப் பெண்களின் மீது குற்றம் சொல்வது ஆண் பிள்ளைகளின் வழக்கம்…”
“அந்த வழக்கத்தைத்தான் நானும் கைப்பற்றினேன். அதில் என்ன தவறு?” என்றான் வந்தியத்தேவன்.
அச்சமயம் அரண்மனைக்குள்ளேயிருந்து இனிய குழலோசை கேட்டது. அதைத் தொடர்ந்து தண்டைச் சிலம்புகளின் கிண்கிணி ஒலியும், மத்தளத்தின் முழக்கமும் கலந்து வந்தன. பின்னர், இளம் பெண்களின் இனிய குரல்கள் பல சேர்ந்து ஒலித்தன. சிலப்பதிகாரக் காவியத்தில் உள்ள பின்வரும் ஆய்ச்சியர் குரவைப் பாடலைப் பாடினார்கள்:–
“கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள்வருமேல் அவன் வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ!
கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ!”
பாடல் முடியும் வரையில் குந்தவையும் வந்தியத்தேவனும் அதன் இனிமையில் ஈடுபட்டுத் தம் வசமிழந்து நின்றார்கள். மறுபடியும் வாத்திய முழக்கத்துடன் ஆடல் தொடங்கியதற்கு அறிகுறியாகத் தண்டைச் சதங்கைகளின் ஒலி எழுந்தது.
“அரண்மனையில் குரவைக் கூத்து நடக்கிறது போலும்! கடம்பூர் மாளிகையில் குரவைக் கூத்து ஒன்று பார்த்தேன். அது முற்றும் வேறுவிதமாயிருந்தது!” என்றான் வல்லவரையன்.
“ஆம்; என் தோழிகள் குரவைக் கூத்துப் பயில்கிறார்கள். சீக்கிரத்தில் என்னைக் காணாமல் தேடத் தொடங்கி விடுவார்கள். தாங்கள் வந்த காரியம் என்ன?” என்று இளைய பிராட்டி குந்தவை தேவி கேட்டாள்.
“இதோ நான் வந்த காரியம்; தங்கள் தமையனாரின் ஓலை; எத்தனையோ அபாயங்களுக்குத் தப்பி, நீர்ச் சுழல்கள் – விழிச் சுழல்களிலிருந்து காப்பாற்றி, இதைக் கொண்டு வந்தேன்!” என்று வல்லவரையன் கூறி ஓலையை எடுத்து நீட்டினான்.
49. விந்தையிலும் விந்தை!
குந்தவைப் பிராட்டி வந்தியத்தேவன் நீட்டிய ஓலையைப் பெற்றுக் கொண்டு படித்தாள். அதுவரையில் நெரிந்த புருவங்களுடன் சுருங்கியிருந்த அவள் முகம் இப்போது மலர்ந்து பிரகாசித்தது.
வல்லவரையனை நிமிர்ந்து நோக்கி, “ஓலையைக் கொடுத்து விட்டீர். இனி என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டாள் குந்தவை தேவி.
“தங்களிடம் ஓலையைக் கொடுத்ததுடன் என் வேலையும் முடிந்து விட்டது. இனி, நான் ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான்.”
“உமது வேலை முடியவில்லை; இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது!”
“தாங்கள் சொல்லுவது ஒன்றும் விளங்கவில்லை, தேவி!”
“உம்மிடம் அந்தரங்கமான வேலை எதையும் நம்பி ஒப்புவிக்கலாம் என்று இதில் இளவரசர் எழுதியிருக்கிறாரே? அதன்படி நீர் நடந்து கொள்ளப் போவதில்லையா?”
“இளவரசரிடம் அவ்விதம் ஒப்புக் கொண்டுதான் வந்தேன். ஆனால் என்னை நம்பி முக்கியமான வேலை எதுவும் ஒப்புவிக்க வேண்டாம். தங்களை ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன்.”
“உமது கோரிக்கை எனக்கு விளங்கவில்லை. ஒன்றை ஒப்புக் கொண்ட பிறகு பின்வாங்குவதுதான் வாணர் குலத்தின் மரபா?”
“பழம் பெருமை பேசுவது வாணர் குலத்தின் மரபு அன்று; ஒப்புக் கொண்டு பின்வாங்குவதும் வாணர் குலத்து மரபு அன்று.”
“பின்னர், ஏன் தயக்கம்? பெண் குலத்தின் பேரில் கொண்ட வெறுப்பா? அல்லது என்னைக் கண்டால் பிடிக்கவில்லையா?” என்று இளவரசி கூறி இளநகை புரிந்தாள்.
ஆகா! இது என்ன கேள்வி? கடலுக்குச் சந்திரனைப் பிடிக்காமல் போகுமா? பிடிக்கவில்லையென்றால் ஆயிரம் அலைக் கைகளையும் நீட்டிப் பூரண சந்திரனை ஏன் தாவிப் பிடிக்க முயல்கிறது? நீல வானத்துக்குப் பூமாதேவியைப் பிடிக்கவில்லையென்று யார் சொல்லுவார்கள்? பிடிக்காது போனால், இரவெல்லாம் ஆயிரமாயிரம் நட்சத்திரக் கண்களினால் இந்தப் பூமியை உற்று உற்றுப் பார்த்து ஏன் பூரித்துக் கொண்டிருக்கிறது? மேகத்துக்கு மின்னலைப் பிடிக்காதிருக்குமா? பிடிக்கவில்லையென்றால், தன்னைப் பிளந்து கொண்டு பாய்ந்தோடும் மின்னலை அப்படி ஏன் இறுகத் தழுவி மார்போடு அணைத்துக் கொள்கிறது? வண்டுக்கு மலர் பிடிப்பதில்லையென்பது உண்டா? அங்ஙனமானால் ஏன் ஓயாமல் மலரைச் சுற்றி வட்டமிட்டு மதிமயங்கி விழுகிறது? விட்டில் பூச்சிக்கு விளக்கைப் பிடிக்கவில்லையென்றால் யாரேனும் நம்புவார்களா? அவ்வாறெனில், ஏன் அந்த விளக்கின் ஒளியில் விழுந்து உயிரை விடுகிறது? தேவி! நல்ல கேள்வி கேட்டீர்! தங்களை எனக்குப் பிடிக்கவில்லையென்றால், தங்களது கடைக்கண் பார்வை என்னை ஏன் இப்படித் திகைக்க வைக்கிறது? தங்களது இதழ்களின் ஓரத்தில் விளையாடும் இளநகை என்னை ஏன் இவ்விதம் சித்தப்பிரமை கொள்ளச் செய்கிறது?…. இவ்வளவு எண்ணங்களும் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் தோன்றின. ஆனால் நாவினால் சொல்லக்கூடவில்லை.
“ஐயா! என்னுடைய கேள்விக்கு மறுமொழி சொல்லவில்லையே? வாணர் குலத்தில் பிறந்த வீர புருஷன் கேவலம் ஒரு பெண்ணின் ஏவலைச் செய்வதா என்று தயக்கமா? இளவரசர் உங்களிடம் இந்த ஓலையைக் கொடுத்தபோது இதில் எழுதியிருப்பதைப் பற்றிச் சொல்லவில்லையா?” என்று இளவரசி மீண்டும் வினவினாள்.
“தேவி! இளவரசர் விருப்பத்தை நன்கு தெரிந்து கொண்டுதான் புறப்பட்டு வந்தேன். ஆனால் நல்லவேளையில் என் யாத்திரையைத் தொடங்கவில்லையெனத் தோன்றுகிறது. ஆகையால் வழியெல்லாம் விரோதிகளைச் சம்பாதித்துக் கொண்டு வந்தேன். உற்ற நண்பனையும் பகைவன் ஆக்கிக் கொண்டேன். நாலாபுறத்திலும் பகைவர்கள் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் தாங்கள் இடும் பணியை நான் நிறைவேற்றுவதாக எப்படி உறுதி சொல்ல முடியும்? இதனால் தான் தயங்குகிறேன். என்னால் தங்கள் காரியம் கெட்டுப் போகக் கூடாதல்லவா?” என்று சொன்னான் வல்லவரையன்.
“யார் யார் அந்தப் பகைவர்கள்? எனக்குத் தெரிவிக்கலாமா?” என்று குந்தவை கவலை தொனித்த குரலில் கேட்டாள்.
“பழுவேட்டரையர்கள் என்னை வேட்டையாடிப் பிடிக்க நாலாபுறமும் ஆட்களை ஏவியிருக்கிறார்கள். என் உயிர் நண்பனாயிருந்த கந்தமாறன் நான் அவனை முதுகில் குத்திக் கொல்ல முயன்றதாக எண்ணிக் கொண்டிருக்கிறான். ஆழ்வார்க்கடியான் என்னும் வீர வைஷ்ணவ வேஷதாரி ஒருவன் என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். பழவூர் இளையராணி நந்தினிதேவி என் மீது ஒரு மந்திரவாதியை ஏவி விட்டிருக்கிறாள். எந்த நிமிஷத்தில் யாரிடம் நான் அகப்பட்டுக் கொள்வேனோ, தெரியாது….”
வெள்ளத்திலிருந்து கரையேறித் தப்பிய அன்றிரவு மந்திரவாதியுடன் நேர்ந்த அனுபவம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. பகலில் பிரயாணம் செய்வதன் அபாயத்தை எண்ணி மூங்கில் காடுகளிலும் வாழைத் தோப்புகளிலும் அவன் பொழுது போக்கினான். இரவில் நதிக் கரையோடு நடந்து சென்றான். வெகுதூரம் நடந்து களைத்து இரவு மூன்றாம் ஜாமத்தில் ஒரு பாழடைந்த பழைய மண்டபத்தை அடைந்தான். வெளியில் நிலா மதியம் பட்டப் பகல் போலப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மண்டபத்துக்குள்ளேயும் சிறிது தூரம் நிலா வெளிச்சம் புகுந்து பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தது. வெளிச்சமாயிருந்த பகுதியைக் கடந்து இருளடைந்த பகுதிக்குச் சென்று வந்தியத்தேவன் படுத்துக் கொண்டான். கண்ணைச் சுற்றிக் கொண்டு தூக்கம் வந்த சமயத்தில் வெகு சமீபத்திலிருந்து ஆந்தையின் அகோரமான குரல் வந்தது. பழுவூர் இளையராணியுடன் லதா மண்டபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அதே மாதிரி ஆந்தைக் குரல் கேட்டது அவனுக்கு நினைவு வந்து திடுக்கிட்டு எழுந்தான். உள்ளே இருட்டின பகுதியிலிருந்து இரு சிறிய ஒளிப் பொட்டுகள் அவனை உற்று நோக்கின.
வெளியிலே போய் விடலாம் என்று எண்ணி இரண்டு அடி நடந்தான். வெளியிலிருந்து யாரோ உள்ளே வரும் காலடிச் சத்தம் கேட்டது. இடிந்து விழுந்து கரடு முரடாயிருந்த தூண் ஒன்றைப் பிடித்துக் கொண்டு அதன் மறைவில் நின்றான். வெளியிலிருந்து வந்தவன் முகம் நிலா வெளிச்சத்தில் கொஞ்சம் தெரிந்தது.
பழுவூர் ராணியைப் பார்க்க வந்த மந்திரவாதிதான் அவன் என்பதைத் தெரிந்து கொண்டான். மந்திரவாதி அந்தத் தூணை நோக்கியே வந்தான். தான் அவ்விடம் மறைந்திருப்பது அவனுக்குத் தெரியாது என்றும், தன்னைக் கவனியாமல் மண்டபத்துக்குள்ளே போய் விடுவான் என்றும் வந்தியத்தேவன் நினைத்தான். ஆனால் தூணின் அருகில் வரும் வரையில் மெள்ள மெள்ளப் பூனை போல நடந்து வந்த மந்திரவாதி திடீரென்று கோரமான குரலில் ஒரு கூச்சல் போட்டுக் கொண்டு வந்தியத்தேவனுடைய கழுத்தை ஒரு கையினால் பிடித்து நெறித்தான். “எடு! அந்தப் பனை இலச்சினை மோதிரத்தைக் கொடு! கொடுக்காவிட்டால் உன் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன்!” என்று கத்தினான்.
வந்தியத்தேவனுடைய கழுத்து முறிந்து விடும் போலிருந்தது; அவனுடைய விழிகள் பிதுங்கி வெளி வந்து விடும் போலிருந்தன. மூச்சுத் திணறியது. எனினும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான். அந்தப் பழைய தூணை ஒரு கையினால் அழுத்திக் கொண்டு ஒரு காலைத் தூக்கிப் பூரண பலத்தையும் பிரயோகித்து ஓர் உதை விட்டான். மந்திரவாதி ஓலமிட்டுக் கொண்டு கீழே விழுந்தான். அதே சமயத்தில் அந்தப் பழைய தூண் சரிந்து விழுந்தது. மேலே கூரையிலிருந்து பொல பொலவென்று கற்கள் விழுந்தன. வௌவால் ஒன்று படபடவென்று சிறகை அடித்துக் கொண்டு வெளியே சென்றது. அதைத் தொடர்ந்து வந்தியத்தேவனும் வெளியேறினான். ஓட்டம் பிடித்தவன் சிறிது தூரம் வரையில் திரும்பிப் பார்க்கவேயில்லை. பின்னால் யாரும் தொடர்ந்து வரவில்லையென்று நிச்சயமான பிறகுதான் நின்றான். அந்த இரவு அனுபவத்தை நினைத்ததும் வந்தியத்தேவனுடைய உடம்பெல்லாம் இப்போதுகூட கிடுகிடுவென்று நடுங்கியது.
அந்தப் பயங்கர நினைவுகளுக்கிடையில், “ஐயா! காஞ்சியிலிருந்து தாங்கள் புறப்பட்டு எத்தனை காலமாயிற்று?” என்று குந்தவை கேட்டது அவனுடைய காதில் விழுந்து அவனுக்கு மனத்தெளிவை அளித்தது.
“ஒரு வாரமும் ஒரு நாளும் ஆயிற்று, தேவி!” என்றான்.
“இதற்குள் இவ்வளவு பகைவர்களை நீர் சம்பாதித்துக் கொண்டது விந்தையிலும் விந்தைதான். இவ்வளவு அதிசயமான காரியத்தை எப்படிச் சாதித்தீர்?”
“அது பெரிய கதை, தேவி!”
“இருந்தால் பாதகமில்லை. சொல்லலாம். அந்த விவரங்களைத் தெரிந்து கொண்ட பிறகுதான் தங்களுக்கு நான் இட வேண்டிய பணியை இடக் கூடும்.”
இவ்வாறு இளவரசி கூறிவிட்டு, ஈசான சிவபட்டரை அருகில் அழைத்து, “படகோட்டி எப்படிப்பட்டவன்?” என்று கேட்டாள்.
“இரண்டு காதும் நல்ல செவிடு; இடி இடித்தாலும் கேளாது, தாயே!”
“ரொம்ப நல்லது. படகிலேறிக் கொஞ்ச தூரம் ஓடையில் போய்விட்டு வரலாம், வாருங்கள்! இவருடைய கதையை முழுதும் நான் கேட்க வேண்டும்!” என்றாள்.
வல்லவரையன் புளகாங்கிதம் அடைந்தான். சோழர் குலத் திருமகளோடு ஒரே படகில் செல்லும் பாக்கியம் எளிதில் கிட்டுவதா? அதைப் பெறுவதற்கு ஏழு ஜன்மங்களில் தான் தவம் செய்திருக்க வேண்டாமா? படகில் ஏறிய பிறகு எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் கதையை நீட்டி வளர்த்திச் சொல்ல வேண்டும்! சுருக்கமாக முடித்து விடக் கூடாது! அவசரம் என்ன? அரிதில் பெற்ற பாக்கியத்தை எளிதில் கை நழுவ விட்டு விடலாமா?
வந்தியத்தேவனுக்கு அவசரமில்லை தான். ஆனால் படகு ஓடையில் நகர்ந்து, அவன் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்ததைச் சொல்லத் தொடங்கியது முதலாவது குந்தவைக்கு நிமிஷத்துக்கு நிமிஷம் அவசரமும் பரபரப்பும் அதிகமாகி வந்தன. “மேலே என்ன?” “அப்புறம் என்ன?” என்று கேட்டுக் துரிதப்படுத்தி வந்தாள். வந்தியத்தேவன் அவனுடைய தீர்மானத்தின்படி கூடிய வரையில் கதையை வளத்தினான். எவ்வளவு நீண்ட கதையாயினும் முடிவு ஒன்று வந்துதானே ஆக வேண்டும்? கதை முடிந்தபோது படகும் திரும்ப ஓடைப் படித்துறைக்கு வந்து சேர்ந்தது.
படகிலிருந்து அவர்கள் இறங்கிப் பூங்காவுக்குள் வந்தபோது, அரண்மனையில் இன்னும் குரவைக் கூத்து நடந்து வந்ததற்கு அறிகுறியாக இசைக்கருவிகளும் தண்டைச் சிலம்புகளும் ஒலித்தன. பின்வரும் சிலப்பதிகார வரிப் பாடலும் கேட்டது:-
“பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்
விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே!
மடந் தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே!
நாராயணா வென்னா நாவென்ன நாவே!”
இதைக் கேட்ட வல்லவரையன் “கஞ்சனார் மிக்க வஞ்சனாராயிருக்கலாம்! ஆனால் எனக்கு நேற்றுப் பேருதவி செய்தார்!” என்றான்.
“அது என்ன? கம்ஸன் உமக்கு என்ன உதவி செய்திருக்க முடியும்?” என்று இளையபிராட்டி கேட்டாள்.
“நான் இந்த நகரத்துக்குள் புகுவதற்குக் கம்ஸன் தான் உதவி செய்தான்!” என்றான் வந்தியத்தேவன். பிறகு, அந்த உதவியின் வரலாற்றையும் கூறினான்.
பழையாறைக்குத் தான் வந்து சேர்வதற்குள்ளாகவே பழுவேட்டரையரின் ஆட்கள் வந்திருப்பார்கள் என்று வந்தியத்தேவன் ஊகித்திருந்தான். நகரத்தின் நுழை வாசல்கள் தோறும் அவர்கள் காத்திருப்பார்கள். சந்தேகம் ஏதேனும் தோன்றினால் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள். அவர்களிடம் சிக்காமல் பழையாறை நகருக்குள் பிரவேசிப்பது எப்படி? – இந்தக் கவலையுடன் அந்த மாநகரின் பிரதான வாசலுக்குச் சற்றுத் தூரத்தில் அரிசிலாற்றங்கரையில் வந்தியத்தேவன் நின்றிருந்தபோது நாடக கோஷ்டி ஒன்று வந்தது. கண்ணன், பலதேவன், கம்ஸன் முதலிய வேஷக்காரர்கள் வந்தார்கள். அவர்களில் கம்ஸன் மட்டும் மரத்தினாலான முகத்தைத் தரித்திருந்தான். வந்தியத்தேவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. நாடக கோஷ்டியுடன் பேச்சுக் கொடுத்தான். கம்ஸன் வேஷம் போட்டவனுக்கு ஆட்டத் திறமை அவ்வளவு போதாது என்றான். கம்ஸ வேஷக்காரன் இவனுடன் சண்டைக்கு வந்தான். வந்த சண்டையை இலகுவில் வல்லவரையன் விடுவானா? “உன்னைவிட நான் நன்றாக ஆடுவேன். பார்க்கிறாயா?” என்று சொல்லி முகமூடியைப் பலவந்தமாகப் பிடுங்கி வைத்துக் கொண்டு ஆடினான். அச்சமயம் அவனுடைய ஆரவாரத் தடபுடலைப் பார்த்தவர்கள் அவனை மெச்சினார்கள். அவன் ஆடியது தான் அதிகப் பொருத்தமாயிருந்தது என்றும் சொன்னார்கள். கம்ஸ வேஷக்காரன் கோபித்துக் கொண்டு போய் விட்டான். “அவன் போனால் போகட்டும்; நானே உங்களுடன் நகரத்துக்குள் வந்து ஆடுகிறேன்” என்று வந்தியத்தேவன் ஒப்புக் கொண்டான். நாடக கோஷ்டியார் மகிழ்ச்சியுடன் அவனைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டு சென்றார்கள்.
பழையாறை வீதிகளில் ஆட்டம் பாட்டமெல்லாம் முடிந்த பிறகு வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலர் சொல்லி அனுப்பியபடி வடமேற்றளி ஆலயத்துக்குச் சென்று ஈசான பட்டரைச் சந்தித்துப் பேசினான். அவர் அவனைக் கோயிலைச் சுற்றியிருந்த சமணர் முழையில் இருக்கச் செய்து, இளவரசி குந்தவைப் பிராட்டியிடம் முன்னால் தெரிவித்து விட்டு ஓடை வழியாக அழைத்து வந்தார்.
இந்த விவரங்களைக் கேட்ட இளவரசி வந்தியத்தேவனை வியப்பினால் மலர்ந்த கண்களைக் கொண்டு பார்த்து, “வெற்றித் தெய்வமாகிய கொற்றவையின் கருணை இந்தச் சோழர் குலத்துக்குப் பரிபூரணமாக இருக்கிறது. ஆகையினாலேதான் இந்தச் சங்கடமான நிலைமையில் தங்களை எனக்கு உதவியாகத் தேவி அனுப்பி வைத்திருக்கிறாள்!” என்றாள்.
“அரசி! இன்னும் தாங்கள் எந்த விதப் பணியும் எனக்கு இடவில்லையே? என் பூரண ஆற்றலைக் காட்டக் கூடிய சமயம் இன்னும் கிட்டவில்லையே!” என்றான் வல்லவரையன்.
“அதைப் பற்றிக் கவலை வேண்டாம். இது காறும் உமக்கு நேர்ந்திருக்கும் அபாயங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லக் கூடிய அளவு அபாயம் நிறைந்த வேலையைத் தரப் போகிறேன்!” என்றாள்.
வந்தியத்தேவன் உள்ளம் பொங்கி உடல் பூரித்து நின்றான். அந்தப் பெண்ணரசி இடும் பணியை நிறைவேற்றுவதற்காக ஏழு கடல்களைக் கடந்து செல்லவும், ஆயிரம் சிங்கங்களுடன் ஆயுதம் இன்றிப் போர் செய்யவும், மேரு பர்வதத்தின் உச்சியில் ஏறி விண்மீன்களைக் கையினால் பறித்து எடுத்துக் கொண்டு வரவும் அவன் சித்தமானான்.
அரண்மனை நந்தவனத்தின் மத்தியில் பளிங்கினால் ஆன வஸந்த மண்டபம் ஒன்று இருந்தது. அதை நோக்கிக் குந்தவை நடந்தாள். பட்டரும் வந்தியத்தேவனும் இளவரசியைத் தொடர்ந்து சென்றார்கள்.
மண்டபத்துக்குள்ளிருந்த மணி மாடம் ஒன்றிலிருந்து குந்தவை ஒரு சிறிய பனை ஓலைத் துணுக்கையும் தங்கப் பிடி அமைத்த எழுத்தாணியையும் எடுத்தாள். ஓலைத் துணுக்கில் பின் வருமாறு எழுதினாள்:
“பொன்னியின் செல்வ! இந்த ஓலை கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். விவரங்கள் இது கொண்டு வருகிறவர் சொல்லுவார். இவரைப் பூரணமாக நம்பலாம்.”
இவ்விதம் எழுதி அடியில் ஆத்தி இலை போன்ற சிறிய சித்திரம் ஒன்று வரைந்தாள். ஓலையை வந்தியத்தேவன் கையில் கொடுப்பதற்காக நீட்டியவாறு, “சிறிதும் தாமதியாமல் இந்த ஓலையை எடுத்துக் கொண்டு ஈழ நாட்டுக்குச் செல்ல வேண்டும். இளவரசர் அருள்மொழிவர்மரிடம் கொடுத்து அவரைக் கையோடு அழைத்து வர வேண்டும்!” என்றாள்.
வந்தியத்தேவன் ஆனந்தத்தின் அலைகளினால் மோதப்பட்டுத் தத்தளித்தான். நெடு நாளாக அவன் கொண்டிருந்த மனோரதங்கள் இரண்டில் ஒன்று நிறைவேறி விட்டது. சோழர் குல விளக்கான இளைய பிராட்டியைச் சந்தித்தாகி விட்டது. அவர் மூலமாகவே இரண்டாவது மனோரதமும் நிறைவேறப் போகிறது. இளவரசர் அருள்மொழிவர்மரைச் சந்திக்கும் பேறு கிடைக்கப் போகிறது.
“தேவி! என் மனத்துக்குகந்த பணியையே தருகிறீர்கள். ஓலையை எடுத்துக் கொண்டு இப்போதே புறப்படுகிறேன்!” என்று சொல்லி ஓலையைப் பெற்றுக் கொள்வதற்காக வலக் கரத்தை நீட்டினான்.
குந்தவை ஓலையை அவனிடம் கொடுத்த போது காந்தள் மலரையொத்த அவளுடைய விரல்கள் வந்தியத்தேவனுடைய அதிர்ஷ்டக் கையைத் தொட்டன. அவனுடைய மெய் சிலிர்த்தது; நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. ஆயிரம் பதினாயிரம் பட்டுப் பூச்சிகள் அவன் முன்னால் இறகுகளை அடித்துக் கொண்டு பறந்தன. ஆயிரம் பதினாயிரம் குயில்கள் ஒன்று சேர்ந்து இன்னிசை பாடின. மலை, மலையான வண்ண மலர்க் குவியல்கள் அவன் மீது விழுந்து நாலா பக்கமும் சிதறின.
இந்த நிலையில் வந்தியத்தேவன் தலை நிமிர்ந்து குந்தவை தேவியைப் பார்த்தான். என்னவெல்லாமோ சொல்ல வேணும் என்று அவனுடைய உள்ளம் பொங்கியது. ஆனால் அதைச் சொல்லும் சக்தி உயிரற்ற வெறும் வார்த்தைகளுக்கு ஏது?
சொல்ல வேண்டியதையெல்லாம் அவனுடைய கண்களே சொல்லின. அச்சமயம் வந்தியத்தேவனுடைய கண்கள் புனைந்துரைத்த கவிதைகளுக்கிணையான காதற் கவிதைகளைக் காளிதாஸனும் புனைந்ததில்லை, ‘முத்தொள்ளாயிரம்’ இயற்றிய பழந்தமிழ்க் கவிஞர்களும் இயற்றியதில்லையென்றால் வேறு என்ன சொல்ல வேண்டும்?
வஸந்த மண்டபத்துக்கு வெளியில் எங்கேயோ சற்று தூரத்தில் காய்ந்த இலைச் சருகுகள் சலசலவென்று சப்தித்தன. ஈசான சிவபட்டர் தம் குரலைக் கனைத்துக் கொண்டார்.
வந்தியத்தேவன் இந்த உலகத்துக்கு வந்து சேர்ந்தான்!
50. பராந்தகர் ஆதுரசாலை
மறு நாள் காலையில் சூரிய பகவான் உதயமாகி உலகத்தை ஒளிமயமாகச் செய்து கொண்டிருந்தார். சூரியனுடைய செங்கிரணங்கள் பழையாறை அரண்மனைகளின் பொற்கலசங்களின் மீது விழுந்து தகதகா மயமாய்ச் செய்து கொண்டிருந்தன. குந்தவைப் பிராட்டியின் மாளிகை முன்றிலில் அம்பாரி வைத்து அலங்கரித்த மாபெரும் யானை ஒன்று வந்து நின்றது. குந்தவையும் வானதியும் மாளிகையின் உள்ளேயிருந்து வெளி வந்து மேடைப் படிகளின் மீது ஏறி யானையின் மேல் ஏறிக் கொண்டார்கள். படை வீடுகளுக்கு நடுவில் இருந்த பராந்தக சோழர் ஆதுர சாலையை நோக்கி யானைப் பூமி அதிரும்படி நடந்து சென்றது. யானைப் பாகன் அதனருகில் நடந்து, அதன் நடை வேகத்தைக் குறைத்து அழைத்துச் சென்றான். யானையின் மணி ஓசையைக் கேட்டு நகர மாந்தர் தத்தம் வீடுகளுக்குள்ளேயிருந்து விரைந்து வெளி வந்து பார்த்தார்கள். பெண்ணரசிகள் இருவரையும் கண்டதும் அவர்கள் முகமலர்ந்து கைகூப்பி நின்று முகமன் செலுத்தினார்கள்.
மற்ற வீதிகளைக் கடந்து, யானை, படை வீடுகள் இருந்த நகரத்தின் பகுதியை அடைந்தது. அந்த வீதிகளின் தோற்றமே ஒரு தனி மாதிரியாகத்தான் இருந்தது. கொழுத்த சேவற் கோழிகள் ஒன்றையொன்று சண்டைக்காகத் தேடிக் கொண்டு சென்றன. வளைந்து சுருண்ட கொம்புகளையுடைய ஆட்டுக் கடாக்கள் “போருக்கு வருவோர் யாரேனும் உண்டோ ?” என்ற பாவனையுடன் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நின்றன. ரோஸம் மிகுந்த வேட்டை நாய்களைத் தோல் வாரினாலும் மணிக் கயிறுகளினாலும் வீட்டு வாசல் தூண்களில் பிணைத்திருந்தார்கள். சின்னஞ் சிறு பிள்ளைகள் கைகளில் மூங்கில் கழி பிடித்து ஒருவரோடொருவர் சிலம்பம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிலம்பக் கழிகள் மோதிக் கொண்ட போது, ‘சடசடா படபடா’ என்ற ஓசைகள் எழுந்தன.
வீடுகளின் திண்ணைச் சுவர்களிலே காவிக் கட்டிகளினால் விதவிதமான சித்திரக் காட்சிகள் வரையப்பட்டிருந்தன. பெரும்பாலும் அவை முருகப் பெருமானுடைய லீலைகளையும், சோழ மன்னர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் சித்திரித்தன.அவற்றில் யுத்தக் காட்சிகளே அதிகமாயிருந்தன. முருகப் பெருமான் சூரபதுமாசுரனுடைய தலைகளை முளைக்க முளைக்க வெட்டித் தள்ளிய காட்சியும், துர்க்கா பரமேசுவரி மகிஷாசுரனை வதம் செய்த காட்சியும் மிகப் பயங்கரமாக எழுதப்பட்டிருந்தன. தெள்ளாறு, தஞ்சை, குடமூக்கு, அரிசிலாறு, திருப்புறம்பயம், வெள்ளூர், தக்கோலம், சேவூர் முதலிய போர்க்களங்களில் சோழ நாட்டு வீரர்கள் நிகழ்த்திய அற்புத பராக்கிரமச் செயல்கள் திண்ணைச் சுவர்களில் தத்ரூபமாகக் காட்சி அளித்தன.
இந்தப் படை வீட்டு வீதிகளில் இளவரசிகள் ஏறியிருந்த யானை வந்ததும் ஒரே அல்லோல கல்லோலமாயிற்று. சேவல்கள் இறகுகளைச் சடசடவென்று அடித்துக் கொண்டு பறந்து, கூரை மீது உட்கார்ந்து கூவின. பிள்ளைகள் ஒருவரையருவர் கூச்சலிட்டு அழைத்துக் கொண்டு ஓடினார்கள். அவரவர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி உள்ளேயிருந்தவர்களுக்குச் செய்தி அறிவித்தார்கள்.
படை வீட்டு வீதிகள் வழியாக யானை சென்ற போது வீட்டு வாசல்தோறும் பெண்களும் குழந்தைகளும் முதியோர்களும் நின்று “இளையபிராட்டி குந்தவை தேவி வாழ்க!” “சுந்தர சோழரின் செல்வத்திருமகள் வாழ்க!” என்று வாழ்த்தி மகிழ்ந்தார்கள். அவர்களில் சிலர் யானையைத் தொடர்ந்து செல்லவும் ஆரம்பித்தார்கள். வரவர இக்கூட்டம் அதிகமாகி வந்தது. பலவித வாழ்த்தொலிகள் மூலமாகத் தங்கள் மகிழ்ச்சியை அவர்கள் வெளியிட்டுக் கொண்டு வந்தார்கள்.
அப்படை வீடுகளில், இலங்கைக்குப் போர் புரியச் சென்றிருந்த வீரர்களின் பெண்டு பிள்ளைகளும் பெற்றோர்களும் அச்சமயம் வசித்து வந்தார்கள் என்பதை முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். அவர்களுடைய நலத்துக்காக ஒரு மருத்துவச் சாலையைக் குந்தவை தன் சொந்த நில மான்யங்களின் வருமானத்தைக் கொண்டு ஸ்தாபித்திருந்தாள்.சோழ குலத்தாரிடம் தம் முன்னோர்களைப் போற்றும் வழக்கம் சிறப்பாக இருந்து வந்தது. குந்தவையின் மூதாதைகளில் அவளுடைய பாட்டனாரின் தந்தையான முதற் பராந்தக சக்கரவர்த்தி மிகப் பிரசித்தி பெற்றவர். அவருடைய பெயர் விளங்கும்படி குந்தவை தேவி இந்தப் ‘பராந்தகர் ஆதுரசாலை’யை ஸ்தாபித்து நடத்தி வந்தாள். அடிக்கடி அந்த வைத்திய சாலைக்கு வரும் வியாஜத்தை வைத்துக் கொண்டு போர் வீரர்களின் குடும்பத்தாருடைய க்ஷேமலாபங்களைப் பற்றி அவள் விசாரிப்பது வழக்கம்.
ஆதுர சாலைக்கு அருகில் வந்து சேர்ந்ததும் யானை நின்றது. முன்னங் கால்களை முதலில் மடித்துப் பிறகு பின்னங் கால்களையும் மடித்து அது தரையில் படுத்துக் கொண்டது. பெண்ணரசிகள் இருவரும் யானை மேலிருந்து பூமியில் இறங்கினார்கள்.
யானை சிறிது நகர்ந்து அப்பால் சென்றதும் ஜனக் கூட்டம், – முக்கியமாகப் பெண்கள் – குழந்தைகளின் கூட்டம் தேவிமார்களை நெருங்கிச் சூழ்ந்து கொண்டது.
“ஆதுர சாலை உங்களுக்கெல்லாம் உபயோகமாயிருக்கிறதல்லவா? வைத்தியர்கள் தினந்தோறும் வந்து தேவையானவர்களுக்கு மருந்து கொடுத்து வருகிறார்கள் அல்லவா?” என்று இளவரசி கேட்டாள்.
“ஆம், தாயே! ஆம்!” என்று பல குரல்கள் மறுமொழி கூறின.
“மூன்று மாதமாக இருமலினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வாரம் வைத்தியரிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டதில் குணமாகி விட்டது!” என்றாள் ஒரு பெண்மணி.
“அம்மா! என் மகன் மரத்தின் மேல் ஏறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டான். வைத்தியர் கட்டுப் போட்டு விட்டுப் பதினைந்து நாள் மருந்து கொடுத்தார். சுகமாகி விட்டது. இப்போது துள்ளி ஓடி விளையாடுகிறான். மறுபடி மரத்தின் மேல் ஏறவும் ஆரம்பித்து விட்டான்!” என்றாள் இன்னொரு ஸ்திரீ.
“என் தாயாருக்குக் கொஞ்ச காலமாகக் கண் மங்கலடைந்து வந்தது. ஒரு மாதம் இந்த ஆதுர சாலைக்கு வந்து மருந்து போட்டுக் கொண்டு வந்தாள். இப்போது கண் அவளுக்கு நன்றாய்த் தெரிகிறது!” என்றாள் இளம் பெண் ஒருத்தி.
“பார்த்தாயா வானதி! நம் தமிழகத்தில் வாழ்ந்த முன்னோர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்? இன்ன வியாதியை இன்ன மூலிகையினால் தீர்க்கலாம் என்று அவர்கள் எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை!” என்றாள் குந்தவைப்பிராட்டி.
“ஞானக் கண் கொண்டு பார்த்துத் தான் அவர்கள் இவ்வளவு அதிசயமான மருந்துகளைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். வேறு எப்படி முடியும்?” என்றாள் வானதி.
“எவ்வளவோ அதிசயமான மருந்துகளை அவர்கள் கண்டுபிடித்திருப்பது உண்மைதான். ஆனால் உன்னைப் போல் மனோவியாதியினால் வருந்துகிறவர்களுக்கு மருந்து ஒன்றும் கண்டுபிடிக்கவில்லையே? என்ன செய்வது?”
“அக்கா! எனக்கு ஒரு மனோவியாதியும் இல்லை. கருணை கூர்ந்து இவ்விதம் அடிக்கடி சொல்லாதிருங்கள்! என் தோழிகள் ஓயாது என்னைப் பரிகசித்து என் பிராணனை வாங்குகிறார்கள்!”
“நன்றாக வேண்டுமடி உனக்கு! உலகத்தில் ஒரு கவலையும் இல்லாமல் வாழ்ந்து வந்த என் தம்பியின் மனம் பேதலிக்கும்படி செய்து விட்டாய் அல்லவா? ஒவ்வொரு தடவையும் இலங்கையிலிருந்து ஆள் வரும்போதெல்லாம் உன் உடம்பு எப்படியிருக்கிறது என்று கேட்டு அனுப்புகிறானே!” என்றாள் இளையபிராட்டி.
இதற்குள் “வைத்தியருக்கு வழி விடுங்கள்! வைத்தியருக்கு வழி விடுங்கள்!” என்று கோஷம் கேட்டது.அங்கே சூழ்ந்து நின்றவர்களைக் காவலர்கள் விலக்கினார்கள். ஆதுர சாலையின் வயது முதிர்ந்த தலைமை வைத்தியர் வந்து இளவரசிகளை வரவேற்று உபசரித்தார்.
“வைத்தியரே! கோடிக்கரைப் பக்கத்துக் காடுகளில் சில உயர்ந்த மூலிகைகள் இருக்கின்றனவென்று சொன்னீர் அல்லவா? அங்கே போய் வருவதற்காக ஒரு வாலிப வீரரை அனுப்பினேனே? அவர் வந்தாரா?” என்று குந்தவை கேட்டாள்.
“ஆம், தாயே! அந்தச் சூடிகையான இளம் பிள்ளை வந்தான். ஈசான சிவபட்டர் அழைத்துக் கொண்டு வந்தார். அவனுடன் என் மகன் ஒருவனை அனுப்பி வைக்கிறேன். என் மகன் கோடிக்கரையிலிருந்து திரும்பி வந்து விடுவான். தாங்கள் அனுப்பிய வீரன் இலங்கைத் தீவுக்கும் போய் வருவதாகச் சொல்கிறான்…..”
“இலங்கையிலிருந்து கூடவா மூலிகை கொண்டு வர வேண்டும்!” என்று வானதி கேட்டாள்.
“ஆம் தாயே! லக்ஷ்மணருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக அனுமார் சஞ்சீவி பர்வதம் கொண்டு வந்த போது கோடிக்கரை வழியாகத் தான் கடலைத் தாண்டினாராம். அப்போது சஞ்சீவி மலையிலிருந்து சில மூலிகைகள் கோடிக்கரைக் காட்டில் விழுந்தபடியால் தான் அங்கே இன்றைக்கும் நல்ல மூலிகைகள் கிடைக்கின்றன. இலங்கையில் சஞ்சீவி பர்வதமே இருந்தபடியால் அங்கே இன்னும் அபூர்வமான மூலிகைகள் கிடைக்கும் அல்லவா? நான் எதிர் பார்க்கும் மூலிகைகள் மட்டும் கிடைத்து விட்டால், சக்கரவர்த்தியின் நோயை நானே கட்டாயம் குணப்படுத்தி விடுவேன்…..”
“கடவுள் கிருபையினால் அப்படியே ஆகட்டும். இப்போது அந்த வாலிபர்கள் இருவரும் எங்கே?”
“உள்ளே இருக்கிறார்கள், அம்மா! பிரயாணத்துக்கு ஆயத்தமாகத் தங்களிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்படக் காத்திருக்கிறார்கள்!”
தலைமை மருத்துவர் அழைத்துச் செல்ல இளவரசிகள் இருவரும் ஆதுர சாலைக்குள் சென்றார்கள். அங்கே தாழ்வாரங்களில் மருந்து வாங்கிக் கொண்டு வந்தவர்களையும் மருந்துக்காகக் காத்திருப்பவர்களையும் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்கள் அனைவரும் குந்தவைப்பிராட்டியைப் பார்த்ததும் அகமும் முகமும் மலர்ந்து இவ்வளவு நல்ல மருத்துவ சாலையைத் தங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்காக இளவரசியை வாழ்த்தினார்கள்.
தலைமை மருத்துவரின் அறையில் இருவர் காத்திருந்தனர். அவர்களில் நம் வந்தியத்தேவன் புதிய முறையில் உடை அணிந்திருந்ததைப் பார்த்து இளையப்பிராட்டி புன்னகை பூத்தாள். வானதிக்கும் அவ்வீரனை ஒருவாறு அடையாளம் தெரிந்து விட்டது. குந்தவையின் காதோடு, “அக்கா! குடந்தை ஜோதிடரின் வீட்டில் பார்த்தவர் மாதிரி இருக்கிறதே!” என்றாள்.
“அவர் மாதிரிதான் எனக்கும் தோன்றுகிறது. ஜோதிடரைப் பார்த்த பிறகு வைத்தியரிடம் வந்திருக்கிறார். உன் மாதிரியே இவருக்கும் ஏதாவது சித்தக் கோளாறு போலிருக்கிறது!” என்று சொல்லிவிட்டு, வந்தியத்தேவனைப் பார்த்து, “ஏன் ஐயா! சக்கரவர்த்தியின் உடல் நலத்துக்காக மூலிகை கொண்டு வருவதற்கு இலங்கைக்குப் போக ஒப்புக் கொண்டவர் நீர்தானா?” என்று கேட்டாள்.
வந்தியத்தேவனுடைய கண்களும் கண்ணிமைகளும் வேறு ஏதோ இரகசிய பாஷையில் பேசின. அவன் வாயினால், “ஆம், இளவரசி! நான்தான் இலங்கைக்குப் போகிறேன். ஒருவேளை அங்கு இளவரசரைப் பார்த்தாலும் பார்ப்பேன். அவருக்கு ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமா?” என்று கேட்டான்.
“பார்த்தால் அவசியம் இந்தச் செய்தியைச் சொல்லுவீர். கொடும்பாளூர் இளவரசி வானதிக்கு உடம்பு சரியாகவே இல்லை. அடிக்கடி நினைவு இழந்து மூர்ச்சை போட்டு விழுகிறாள். இளவரசியைச் சுயப் பிரக்ஞையோடு பார்க்க வேண்டுமானால் உடனே புறப்பட்டு வர வேண்டும் என்பதாகத் தெரிவிக்க வேண்டும்” என்றாள் இளையபிராட்டி.
“அப்படியே தெரிவிக்கிறேன், அம்மணி!” என்று கூறி வந்தியத்தேவன் வானதியை நோக்கினான்.
குந்தவையின் வார்த்தைகளைக் கேட்டதும் உண்டான நாணத்தினால் வானதியின் இனிய முகம் இன்னும் பன் மடங்கு அழகு பெற்றுப் பொலிந்தது. பொங்கி வந்த நாணத்தையும் கூச்சத்தையும் சமாளித்துக் கொண்டு வானதி தட்டுத் தடுமாறி, “ஐயா! அப்படியொன்றும் தாங்கள் சொல்லி விடவேண்டாம். ரொம்பவும் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கொடும்பாளூர் வானதி, இளையபிராட்டியின் போஷணையில் தினம் நாலு வேளை உண்டு உடுத்துச் சுகமாக இருப்பதாகத் தெரியப்படுத்துங்கள்” என்றாள்.
“அப்படியே தெரிவித்து விடுகிறேன், அம்மணி!” என்றான் வந்தியத்தேவன்.
“அழகாயிருக்கிறது! நான் கூறியதையும் ‘அப்படியே தெரிவிக்கிறேன்’ என்றீர். இவள் சொன்னதையும் ‘அப்படியே தெரிவிக்கிறேன்’ என்று ஒப்புக் கொள்கிறீரே? இரண்டில் ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்க முடியும்?”
“அதனால் என்ன, அம்மணி! வாதி கூறியதையும் பிரதிவாதி சொன்னதையும் அப்படி அப்படியே நான் சொல்லி விடுகிறேன். எது உண்மை, எது இல்லை என்பதை இளவரசரே நீதிபதியாக இருந்து தீர்மானித்துக் கொள்ளட்டும்!” என்று சொன்னான் வந்தியத்தேவன்.
“ஆனால் ஒருவர் சொன்னதை இன்னொருவர் சொன்னதாக மட்டும் மாற்றிச் சொல்லி விடவேண்டாம்! உமக்குப் புண்ணியம் உண்டு!” என்றாள் வானதி.
குந்தவை இந்தப் பேச்சை அத்துடன் நிறுத்த விரும்பி, “வைத்தியரே! அரண்மனைத் திருமந்திர அதிகாரியிடமிருந்து இவர்களுக்குக் கொடுத்து அனுப்ப ஓலை கிடைத்ததா?” என்று கேட்டாள்.
“கிடைத்தது தாயே! ‘சக்கரவர்த்திக்கு வைத்தியம் செய்வதற்காக இவர்கள் மூலிகை கொண்டு வரப்போவதால் வழியிலுள்ள அரசாங்க அதிகாரிகள் எல்லாரும் இவர்கள் கோரும் உதவி செய்ய வேண்டும்’ என்று பொதுவாக ஓர் ஓலையும், கோடிக்கரைக் கலங்கரைவிளக்கக் காவலருக்குத் தனியாக ஓர் ஓலையும் கிடைத்தன. இவர்களிடம் கொடுத்து விட்டேன்!” என்றார் வைத்தியர்.
“அப்படியானால் ஏன் தாமதம்? உடனே புறப்பட வேண்டியதுதானே?” என்றாள் இளையபிராட்டி குந்தவை.
“ஆம்; புறப்பட வேண்டியதுதான்!” என்றான் வந்தியத்தேவன்.
ஆனால் உடனே புறப்பட்டு விடும் காரியம் அவ்வளவு சுலபமாக இல்லை.
மருத்துவ சாலையிலிருந்து அவர்கள் வெளியேறி வெளியில் வந்தார்கள். அரச குமாரிகளை ஏற்றிச் செல்ல அம்பாரி யானை காத்திருந்தது. வந்தியத்தேவனையும் அவனுடைய துணைவனையும் ஏற்றிக் கொண்டு காற்றாகப் பறந்து செல்வதற்கு அரண்மனைக் குதிரைகள் இரண்டு துடிதுடித்துக் கொண்டு நின்றன.
ஆனால் வந்தியத்தேவனுக்குத் திடீர் திடீர் என்று ஏதாவது சந்தேகம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. குந்தவைக்கும் புதிது புதிதாக எச்சரிக்கை செய்வதற்கு ஏதேனும் விஷயம் தோன்றிக் கொண்டிருந்தது. போகும் வழியில் அவர்களுக்கு ஏற்படக் கூடிய அபாயங்களைப் பற்றிக் குந்தவை முக்கியமாக எச்சரிக்கை செய்தாள்.
அரசகுமாரிகள் அம்பாரி யானை மீது ஏறிக் கொண்டார்கள். பிறகு வந்தியத்தேவனும் அவனுடைய துணைவனும் குதிரைகள் மீது ஏறினார்கள்.
யானை புறப்படுகிற வழியாகத் தோன்றவில்லை. நெடுந்தூரம் பிரயாணம் போகிறவர்கள்தான் முதலில் புறப்பட வேண்டும் என்று குந்தவை குறிப்பினால் தெரியப்படுத்தினாள்.
வந்தியத்தேவன் மனமின்றித் தயக்கத்துடன் குதிரையைத் திருப்பினான். இன்னும் ஒரு முறை ஆவல் ததும்பிய கண்களுடன் இளவரசியைத் திரும்பிப் பார்த்தான். பிறகு குதிரையின் பேரில் கோபங்கொண்டவன் போல் சுளீர் என்று ஓர் அடி கொடுத்தான். ரோஸம் மிகுந்த அந்தக் குதிரை நாலு கால் பாய்ச்சலில் பிய்த்துக் கொண்டு பறந்து சென்றது. அவனைத் தொடர்ந்து போவதற்கு வைத்தியரின் புதல்வன் திணற வேண்டியிருந்தது.
யானை திரும்பிச் செல்லத் தொடங்கிய பிறகு குந்தவை சிந்தனையில் ஆழ்ந்தாள். இந்த மனதுதான் என்ன விசித்திரமான இயல்பை உடையது? மன்னாதி மன்னர்களையும் வீராதி வீரர்களையும் நிராகரித்த இந்த மனது வழிப்போக்கனாக வந்த இவ்வாலிபனிடம் ஏன் இவ்வளவு சிரத்தை கொள்கிறது? இவன் ஏற்றுக் கொண்ட காரியத்தை வெற்றியுடன் முடித்துக் கொண்டு பத்திரமாய்த் திரும்ப வேண்டுமே என்று ஏன் இவ்வளவு கவலைப்படுகிறது?…..
“அக்கா! என்ன யோசிக்கிறீர்கள்?” என்ற வானதியின் குரல் குந்தவையை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தது.
“ஒன்றுமில்லை வானதி! அந்த வாலிபனுடைய அகம்பாவ சுபாவத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவனிடம் என் தம்பிக்கு ஏன் செய்தி சொல்லி அனுப்பினோம் என்று இப்போது தோன்றுகிறது…….”
“ஆம், அக்கா! அவன் ரொம்பப் பொல்லாதவன்தான்! பெரிய கொள்ளைக்காரன் என்று கூடச் சொல்லத் தோன்றுகிறது…….”
“அது என்ன? கொள்ளைக்காரன் என்று எதனால் சொல்கிறாய்?”
“சாதாரண கொள்ளைக்காரர்கள் பொன் வெள்ளி முதலிய பயனற்ற பொருள்களைக் கொள்ளையடிப்பார்கள். இந்த வாலிபன் சோழ வள நாட்டின் குல தெய்வத்தையே கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுவான் என்று எனக்குப் பயமாயிருக்கிறது. தாங்கள் அதற்கு இடங்கொடுக்க மாட்டீர்கள் அல்லவா?” என்று வானதி கூறினாள்.
“அடி கள்ளி! உன்னைப் போல் என்னையும் நினைத்து விட்டாயா? அப்படியெல்லாம் ஒருநாளும் நடவாது!” என்றாள் குந்தவை.
யானை திரும்பிச் சிறிது தூரம் சென்றபோது வீதியில் ஓரிடத்தில் பெண்கள் பலர் கூட்டம் கூடி நிற்பதை அரசிளங்குமரிகள் பார்த்தார்கள். யானையை நிறுத்தச் செய்து விட்டு, “ஏன் கூட்டம் கூடி நிற்கிறீர்கள்? ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்று இளையபிராட்டி குந்தவை கேட்டாள்.
அந்தப் பெண்களில் ஒருத்தி முன் வந்து, “தாயே! இலங்கையில் உள்ள எங்கள் புருஷர்களைப் பற்றி ஒரு செய்தியும் இல்லையே! அவர்களுக்கு இங்கிருந்து அரிசி அனுப்பக் கூடாதென்று தஞ்சாவூர்க்காரர்கள் தடுத்து விட்டார்களாமே? வயிற்றுக்குச் சாப்பாடு இல்லாமல் எப்படி அம்மா, அவர்கள் சண்டை போட முடியும்?” என்று கேட்டாள்.
“அதற்காக நீங்கள் கவலைப்படவேண்டாம். மாமல்லபுரம் துறைமுகத்திலிருந்து அவர்களுக்கு வேண்டிய தானியம் போய்க் கொண்டிருக்கிறது. தஞ்சாவூர்க்காரர்கள் என்ன செய்தாலும், உங்கள் இளவரசர் சும்மா விட்டு விடுவாரா? சோழ நாட்டு மகாவீரர்கள் பட்டினி கிடக்கும்படி பார்த்துக் கொண்டிருந்து விடுவாரா!” என்றாள் இளையபிராட்டி.
வேறொரு சந்தர்ப்பமாயிருந்தால், குந்தவை அங்கேயே இறங்கி அந்தப் பெண்களுக்கு மேலும் சமாதானம் சொல்லியிருப்பாள். இப்போது அவளுடைய மனம் வேறுவிதமான சஞ்சலத்துக்கு உள்ளாகியிருந்த படியால் தனிமையை விரும்பினாள். யானை அரண்மனையை நோக்கிச் சென்றது.
-கல்கி