31. “திருடர்! திருடர்!”
விஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தரசோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா! இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய மஹா வீரர்கள்! உயிரைத் திரணமாக மதித்து எவ்வளவு அரும்பெரும் செயல்களை இயற்றியிருக்கிறார்கள்! கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்டதில்லையே? இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழ நாடு பாக்கியம் செய்த நாடு; இன்று அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம் பாக்கியம் செய்த நாடுகள்தாம்.
மேற்கூறிய சோழ மன்னர்களின் சரித்திரங்களைச் சித்தரித்த காட்சிகளில் இன்னொரு முக்கியமான அம்சத்தை வந்தியத்தேவன் கவனித்தான். ஒவ்வொரு சோழ அரசருக்கும் பழுவூர்ச் சிற்றரசர் வம்சத்தினர் தலைசிறந்த உதவிகள் செய்திருக்கிறார்கள்; வீரத் தொண்டுகள் பல புரிந்து வந்திருக்கிறார்கள்.
முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்த போது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் யானைமீது பாய்ந்து வல்லப அபராஜிதவர்மனைக் கொன்ற போது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர். பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக்கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள். இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும்போது அவனை ஒரு பழுவேட்டரையர் தம் மடியின் மீது போட்டுக்கொண்டு, “இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!” என்ற செய்தியைத் தெரிவித்தார். அவ்விதமே அரிஞ்சயருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்தான்.
இதையெல்லாம் சித்திரக் காட்சிகளில் பிரத்யட்சமாகப் பார்த்த வல்லவரையன் சொல்ல முடியாத வியப்பில் ஆழ்ந்தான். அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள் இன்று சோழ நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. சுந்தரசோழர் எது விஷயத்திற்கும் அவர்களுடைய யோசனையைக் கேட்டு நடப்பதிலும் வியப்பில்லை.
ஆனால், தான் இப்போது பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பது என்னமோ நிச்சயம். சின்னப் பழுவேட்டரையருக்குத் தன் பேரில் ஏதோ சந்தேகம் ஜனித்துவிட்டது. பெரியவர் வந்துவிட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிடும். முத்திரை மோதிரத்தின் குட்டு வெளியாகிவிடும். பிறகு தன்னுடைய கதி அதோகதிதான்! சின்னப் பழுவேட்டரையரின் நிர்வாகத்திலுள்ள தஞ்சாவூர்ப் பாதாளச் சிறையைப் பற்றி வல்லவரையன் கேள்விப் பட்டிருந்தான். அதில் ஒருவேளை தன்னை அடைத்துவிடக்கூடும். பாதாளச் சிறையில் ஒருவனை ஒரு தடவை அடைத்து விட்டால், பிறகு திரும்பி வெளியேறுவது அநேகமாக நடவாத காரியம். அப்படி வெளியேறினாலும், எலும்பும் தோலுமாய், அறிவை அடியோடு இழந்து, வெறும் பித்துக்குளியாகத் தான் வெளியேற முடியும்!
ஆகா! இத்தகைய பேரபாயத்திலிருந்து தப்புவது எப்படி? ஏதாவது யுக்தி செய்து பெரியவர் வருவதற்குள்ளே கோட்டையை விட்டு வெளியேறி விடவேண்டும். பழுவூர் இளைய ராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட நம் வீரனுக்கு இப்போது போய்விட்டது. உயிர் பிழைத்து, பாதாளச் சிறைக்குத் தப்பி, வெளியேறிவிட்டால் போதும்! ஓலையில்லா விட்டாலும் குந்தவைப் பிராட்டியை நேரில் பார்த்துச் செய்தியைச் சொல்லி விடலாம். நம்பினால் நம்பட்டும்; நம்பாவிட்டால் போகட்டும்; ஆனால் தஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறுவதற்கு என்ன வழி?
தான் உடுத்திருந்த பழைய ஆடைகள் என்ன ஆயின என்ற சந்தேகம் திடீரென்று வந்தியத்தேவன் மனத்தில் உதயமாயிற்று. தன்னுடைய உடைகளைப் பரிசீலனை செய்து பார்ப்பதற்காகவே தனக்கு இவ்வளவு உபசாரம் செய்து புது ஆடைகளும் கொடுத்திருக்கிறார்கள்! குந்தவை தேவியின் ஓலை தளபதியிடம் அகப்பட்டிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தான் புலவர்களுடன் திருப்பிப் போய்விடா வண்ணம் தன் கையை இரும்புப் பிடியாக அவர் பிடித்ததின் காரணமும் இப்போது தெரிந்தது. ஒரு ஆளுக்கு மூன்று ஆளாய்த் தன்னுடன் அனுப்பிய காரணமும் தெரிந்தது. ஆகா! ஒரு யுக்தி! உடனே ஒரு யுக்தி கண்டு பிடிக்க வேண்டும்! – இதோ தோன்றிவிட்டது ஒரு யுக்தி! பார்க்கவேண்டியதுதான் ஒரு கை! வீரவேல்! வெற்றிவேல்!
வந்தியத்தேவன் சித்திர மண்டபத்தின் பலகணி வழியாக வெளியே பார்த்தான். சின்னப் பழுவேட்டரையர் பரிவாரங்கள் புடை சூழக் குதிரை மேல் வந்து கொண்டிருந்தார். ஆகா! இது தான் சமயம்! இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது.
வாசற்படிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து சொக்கட்டான் ஆடிய ஏவலாளர்கள் மூவரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு எழுந்தார்கள். மாளிகை வாசலில் சின்னப் பழுவேட்டரையர் வரும் சத்தம் அவர்களுடைய காதிலும் விழுந்தது.
வந்தியத்தேவன் அவர்கள் அருகில் நெருங்கி, “அண்ணன் மார்களே! நான் தரித்திருந்த உடைகள் எங்கே?” என்று கேட்டான்.
“அந்த அழுக்குத் துணிகள் இப்போது என்னத்துக்கு? எஜமான் உத்தரவுப்படி புதிய பட்டுப் பீதாம்பரங்கள் உனக்குக் கொடுத்திருக்கிறோமே!” என்றான் ஒருவன்.
“எனக்குப் புதிய உடைகள் தேவையில்லை; என்னுடைய பழைய துணிகளே போதும். அவற்றைச் சீக்கிரம் கொண்டு வாருங்கள்!”
“அவை சலவைக்குப் போயிருக்கின்றன. வந்த உடனே தருகிறோம்!”
“அதெல்லாம் முடியாது! நீங்கள் திருடர்கள், என்னுடைய பழைய உடையில் பணம் வைத்திருந்தேன். அதைத் திருடிக் கொள்வதற்காக எடுத்திருக்கிறீர்கள். உடனே கொண்டு வாருங்கள். இல்லாவிட்டால்…”
“இல்லாவிட்டால் என்ன செய்துவிடுவாய், தம்பி! எங்கள் தலையை வெட்டித் தஞ்சாவூருக்கு அனுப்பிவிடுவாயோ! ஆனால் இதுதான் தஞ்சாவூர்! ஞாபகம் இருக்கட்டும்!”
“அடே! என் துணிகளை உடனே கொண்டு வருகிறாயா? இல்லையா?”
“இருந்தால்தானே தம்பி, கொண்டு வருவேன்! அந்த அழுக்குத் துணிகளை வெட்டாற்று முதலைகளுக்குப் போட்டு விட்டோ ம்! முதலை வயிற்றில் போனது திரும்பி வருமா?”
“திருட்டுப் பயல்களே! என்னுடன் விளையாடுகிறீர்களா! இதோ உங்கள் எஜமானரிடம் சென்று சொல்கிறேன். பாருங்கள்!” என்ற வந்தியத்தேவன் வாசற்படியைத் தாண்டத் தொடங்கினான். மூவரில் ஒருவன் அவனைத் தடுப்பதற்காக நெருங்கினான். வந்தியத்தேவன் அவனுடைய மூக்கை நோக்கிப் பலமாக ஒரு குத்துவிட்டான். அவ்வளவுதான்; அந்த ஆள் மல்லாந்து கீழே விழுந்தான். அவன் மூக்கிலிருந்து இரத்தம் சொட்டத் தொடங்கியது.
இன்னொருவன் வந்தியத்தேவனுடன் மல்யுத்தம் செய்ய வருகிறவனைப் போல் இரண்டு கைகளையும் முன்னால் நீட்டிக் கொண்டுவந்தான். நீட்டிய கைகளை வந்தியத்தேவன் பற்றிக் கொண்டு, தன் கால்களில் ஒன்றை எதிராளியின் கால்களின் மத்தியில் விட்டு ஒரு முறுக்கு முறுக்கினான். அவ்வளவுதான்; அந்த மனிதன் ‘அம்மாடி’ என்று அலறிக்கொண்டு கீழே உட்கார்ந்து விட்டான். இதற்குள் மூன்றாவது ஆளும் நெருங்கி வரவே, வந்தியத்தேவன் தன் கால்களை எடுத்துக் கொண்டு ஒரு காலால் எதிரியின் முழங்கால் மூட்டைப் பார்த்து ஒரு உதை விட்டான். அவனும் அலறிக் கொண்டு கீழே விழுந்தான்.
மூன்று பேரும் சட் புட்டென்று எழுந்து மறுபடியும் வந்தியத்தேவனைத் தாக்குவதற்கு வளைத்துக்கொண்டு வந்தார்கள். வெகு ஜாக்கிரதையாகவே வந்தார்கள்.
இதற்குள் மாளிகை வாசலில் குதிரை வந்து நின்ற சத்தம் கேட்டது.
வந்தியத்தேவன் தன் குரலின் சக்தியையெல்லாம் உபயோகித்துத் “திருடர்கள்! திருடர்கள்!” என்று சத்தமிட்டுக் கொண்டே அவர்கள் மீது பாய்ந்தான். மூன்று பேரும் அவனைப் பிடித்து நிறுத்தப் பார்த்தார்கள். மறுபடியும் “திருட்டுப் பயல்கள்! திருட்டுப் பயல்கள்!” என்று பெருங்குரலில் கூச்சலிட்டான் வந்தியத்தேவன்.
அச்சமயம் சின்னப் பழுவேட்டரையர், “இங்கே என்ன ரகளை?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.
32. பரிசோதனை
சின்னப் பழுவேட்டரையரைக் கண்டதும் வந்தியத்தேவன் சண்டையை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நடந்தான். காவலர்கள் எழுந்து ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களை அவன் சிறிதும் இலட்சியம் செய்யாமல் நாலு அடி முன்னால் நடந்து வந்து, “தளபதி! நல்ல சமயத்தில் தாங்கள் வந்து சேர்ந்தீர்கள். இந்தப் பக்காத் திருடர்கள் என்னுடைய உடைமைகளைத் திருடிக் கொண்டதுமல்லாமல், என்னையும் கொல்லப் பார்த்தார்கள்! விருந்தாளியை இப்படித்தானா நடத்துவது? இதுவா தஞ்சாவூர் சம்பிரதாயம்? நான் தங்களுக்கு மட்டும் விருந்தாளியல்ல, சக்கரவர்த்திக்கும் விருந்தாளி; சக்கரவர்த்தினி சொன்னதைத்தான் தாங்களும் கேட்டீர்களே! பட்டத்து இளவரசரிடமிருந்து ஓலை கொண்டு வந்த தூதன். அப்படிப்பட்ட என்னை இந்தப் பாடுபடுத்துகிறவர்கள் மற்றவர்களை என்ன செய்து விடமாட்டார்கள்! இப்படிப்பட்ட திருடர்களைத் தங்கள் பணி ஆட்களாக வைத்துக் கொண்டிருப்பது பற்றி ஆச்சரியப்படுகிறேன். எங்கள் தொண்டை மண்டலத்தில் இப்படிப்பட்ட திருடர்களை உடனே கழுவில் ஏற்றிவிட்டு மறு காரியம் பார்ப்போம்!” என்று சரமாரியாகப் பொழிந்தான்.
மூன்று வீரர்களை ஏக காலத்தில் எதிர்த்துப் புரட்டிக் கீழே தள்ளிய வாலிபனுடைய வீரச் செயலைப் பற்றிய வியப்பு இன்னும் பழுவேட்டரையரின் மனத்தை விட்டகலவில்லை. இத்தகைய வீரனை நாம் நமது காவற் படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் ஆசை அவருக்கு அதிகமாயிற்று. எனவே, அவர் சாந்தமான குரலில், “பொறு தம்பி! பொறு! அப்படியெல்லாம் இவர்கள் செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லை! இவர்களை விசாரித்துப் பார்க்கிறேன்!” என்றார்.
“நான் கோருவதும் அதுதான்! இவர்களை விசாரியுங்கள்; விசாரித்து நீதி வழங்குங்கள்! என்னுடைய உடையும் உடைமையும் என்னிடம் திருப்பி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!” என்றான் வல்லவரையன்.
“அடே! அந்தப் பிள்ளையை விட்டுவிட்டு இப்படி வாருங்கள்! நான் சொன்னது என்ன? நீங்கள் செய்தது என்ன? இவன் மீது ஏன் கை வைத்தீர்கள்!” என்று கோபமாகக் கேட்டார் கோட்டைத் தளபதி.
“எஜமானே! தாங்கள் சொன்னது சொன்னபடியே செய்தோம். இவரை எண்ணெய் முழுக்காட்டிப் புதிய ஆடைகளையும் ஆபரனங்களையும் அணிவித்தோம். அறுசுவை உண்டி அளித்தோம். சித்திர மண்டபத்துக்கும் அழைத்து வந்தோம்! இவர் சிறிது நேரம் சித்திர மண்டபத்தில் உள்ள சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று நினைத்துக் கொண்டு இவருடைய பழைய உடைகளைக் கேட்டார். உடனே எங்களைத் தாக்கவும் ஆரம்பித்தார்!” என்றான் அவ்வீரர்களில் ஒருவன்.
“ஒரு சிறு பிள்ளையிடமா மூன்று தடியர்கள அடிபட்டு வீழுந்தீர்கள்?” என்று கூறி இரத்தக் கனல் வீச விழித்துப் பார்த்தார்.
“எஜமான்! அரண்மனை விருந்தாளியாயிற்றே என்று யோசித்தோம். இப்போது சற்று அனுமதி கொடுங்கள்; இவனை உடனே வேலை தீர்த்துவிடுகின்றோம்.”
“போதும் உங்கள் வீரப் பிரதாபம்! நிறுத்துங்கள்! தம்பி! நீ என்ன சொல்லுகிறாய்?”
“இவர்களுக்கு அனுமதி கொடுங்கள் என்றுதான் சொல்கிறேன். எனக்கும் அனுமதி கொடுங்கள். சோழ குலத்துப் பகைவர்களோடு போராடிக் கொஞ்சம் நாள் ஆயிற்று. தோள்கள் தினவெடுக்கின்றன அரண்மனை விருந்தாளிகளை எப்படி நடத்த வேண்டுமென்று இவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறேன்!” என்றான் நமது வீரன்.
சின்னப் பழுவேட்டரையர் புன்னகை புரிந்து, “தம்பி! உன் தோள் தினவைத் தீர்த்துக்கொள்வதைச் சோழப் பகைவர்களோடேயே வைத்துக்கொள்! சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலையில் தஞ்சைக் கோட்டைக்குள் இவ்விதச் சண்டை, சந்தடி ஒன்றும் உதவாது என்று கட்டளை!” என்று சொன்னார்.
“அப்படியானால் என்னுடைய உடைகளையும் உடைமைகளையும் உடனே கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்கள்!”
“எங்கேடா அவை?”
“எஜமான்! தங்கள் கட்டளைப்படி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம்.”
“தளபதி! இவர்கள் எப்படிப் புளுகுகிறார்கள், பாருங்கள்! சற்றுமுன் உடைகளை வெளுக்கப் போட்டிருப்பதாய்ச் சொன்னார்கள். இப்போது தாங்கள் ‘பத்திரப்படுத்தி’ வைக்கச் சொன்னதாகக் கூறுகிறார்கள். சற்றுப் போனால் தங்களுக்கே திருட்டுப் பட்டம் கூடக் கட்டிவிடுவார்கள்!” என்றான் வந்தியத்தேவன்.
தளபதி காவலர்களைப் பார்த்து, “முட்டாள்களா! இந்தப் பிள்ளைக்கு புது ஆடைகள் கொடுக்கும்படி மட்டுந்தானே சொன்னேன்? பழையவைகளைப் பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லையே?… இந்த மூடர்கள் என்னவோ உளறுகிறார்கள். தம்பி! போனால் போகட்டும், பழைய உடைகளைப் பற்றி எதற்காக இவ்வளவு கவலைப்படுகிறாய்? அதற்குள் ஏதாவது உயர்ந்த பொருள் வைத்திருந்தாயோ?” என்று கேட்டார்.
“ஆம்; வழிநடைச் செலவுக்காகப் பொற்காசுகள் வைத்திருந்தேன்…” என்று வந்தியத்தேவன் சொல்வதற்குள், “அதற்காக நீ கவலைப்பட வேண்டாம். உனக்கு வழிச் செலவுக்கு எவ்வளவு பொன் வேண்டுமோ அவ்வளவு தருகிறேன்!” என்றார் பழுவேட்டரையர்.
“தளபதி! நான் இளவரசர் கரிகாலருடைய தூதன். பிறரிடம் கை நீட்டிப் பணம் பெறும் வழக்கம் என்னிடம் கிடையாது…”
“அப்படியானால், உன்னுடைய உடைகளையும் அதற்குள்ளிருந்த பொற்காசுகளையும் திருப்பி உன்னிடம் சேர்ப்பிக்கச் செய்கிறேன். கவலைப்படாதே! உன் உடையில் வேறு பொருள் ஒன்றும் இல்லையல்லவா?”
வல்லவரையன் ஒரு கணம் யோசித்தான். அந்தத் தயக்கத்தைச் சின்னப் பழுவேட்டரையரும் பார்த்துக் கொண்டார்.
“வேறொரு முக்கியமான பொருளும் என் அரைச்சுற்று ஆடையில் இருக்கிறது. அதை உங்கள் ஆட்கள் தொட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். தொட்டிருந்தால் அவர்கள் தொலைந்தார்கள்…”
“ஆகா! உனக்கு எத்தனை கோபம் வருகிறது? எங்கே, யாரிடத்தில் பேசுகிறோம் என்பதை மறந்துவிட்டே பேசுகிறாய். சிறு பிள்ளையாயிற்றே என்று மன்னித்து விடுகிறேன். அப்படிப் பட்ட பொருள் என்ன?”
“தளபதி! அதைச் சொல்வதற்கு இல்லை. அது அந்தரங்க விஷயம்!”
“தஞ்சைக் கோட்டைக்குள் எனக்குத் தெரியாத அந்தரங்கம் ஒன்றும் இருக்க முடியாது!”
“இளவரசர் கரிகாலர் என்னிடம் ஒப்புவித்த அந்தரங்க விஷயம்.”
“இளவரசர் வடதிசையின் மாதண்ட நாயகர். அவருடைய அதிகாரம் பாலாற்றுக்கு வடக்கே செல்லும். இங்கே சக்கரவர்த்தியின் அதிகாரந்தான் செல்லும்.”
“தளபதி! புலிக்கொடி பறக்கும் இடமெல்லாம் சக்கரவர்த்தியின் அதிகாரந்தான். அதில் என்ன சந்தேகம்?”
“ஆகையினால்தான், இந்தக் கோட்டைக்குள்ளே எனக்குத் தெரியாத அந்தரங்கம் எதுவும் இருக்க முடியாது என்று சொல்கிறேன். சக்கரவர்த்தியின் க்ஷேமத்தைக் கருதித்தான்!….”
“தளபதி! சக்கரவர்த்தியைக் கண்ணுங்கருத்துமாய்க் காப்பாற்றி வருவதற்காக தங்களுக்கும் பெரிய பழுவேட்டரையருக்கும் சோழ சாம்ராஜ்யம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. இன்றைக்குச் சக்கரவர்த்தி தங்களைப் பாராட்டியதும் என் காதில் விழுந்தது. தங்களுக்குப் பயந்து கொண்டு தான் யமன் தஞ்சைக் கோட்டைக்குள் புகுந்து வராமல் தயங்கிக் கொண்டிருக்கிறான் என்று சக்கரவர்த்தி சொன்னாரே? அது எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை!”
“ஆம், தம்பி! பழையாறையிலிருந்து சக்கரவர்த்தியை நாங்கள் இங்கே அழைத்துவந்து கட்டுக் காவலுக்குள் வைத்திராவிட்டால், இத்தனை நாளும் என்ன விபரீதம் நடந்திருக்குமோ, தெரியாது. பாண்டிய நாட்டுச் சதிகாரர்களின் நோக்கம் நிறைவேறியிருந்தாலும் இருக்கலாம்.”
“ஆ! தாங்கள் கூட அவ்விதமே சொல்கிறீர்களே! அப்படியானால் நான் கேள்விப்பட்டது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.”
“என்ன கேள்விப்பட்டாய்?”
“சக்கரவர்த்திக்கு விரோதமாக ஒரு சதி நடக்கிறதென்றும், சக்கரவர்த்தியின் திருக்குமாரர்களுக்கு விரோதமாக இன்னொரு சதி நடக்கிறதென்றும் கேள்விப்பட்டேன்.”
சின்னப் பழுவேட்டரையர் தம் வஜ்ரப் பற்களினால் உதட்டைக் கடித்துக் கொண்டார். இந்தச் சிறு அறியாப் பையனுடன் பேச்சுக் கொடுத்ததில் தமக்கே இத்தனை நேரமும் தோல்வி என்பதை உணர்ந்தார். ஏறக்குறைய அவனுடைய குற்றச்சாட்டுக்களுக்குத் தாம் பதில் சொல்லி சமாளிக்கும் நிலைமை வந்து விட்டது! எனவே, பேச்சை அத்துடன் வெட்டி விட விரும்பினார்.
“உனக்கென்ன அதை பற்றிக் கவலை? எல்லாச் சதிகளையும் உடைத்துச் சோழ குலத்தைப் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம். உன்னுடைய கோரிக்கையைச் சொல்லு. உன் பழைய ஆடைகள் உனக்கு வேண்டும்; அவ்வளவுதானே!” என்றார்.
“என் பழைய ஆடைகளும் வேண்டும்; அவற்றுக்குள் இருந்த பொருள்களும் வேண்டும்.”
“என்ன பொருள்கள் என்று இன்னமும் நீ சொல்லவில்லையே!”
“சொல்லத்தான் வேண்டுமானால் சொல்லுகிறேன். அதன் பொறுப்பு தங்களைச் சார்ந்தது. இளவரசர் சக்கரவர்த்திக்குக் கொடுத்திருந்த ஓலையைத் தவிர இன்னொரு ஓலையும் என்னிடம் கொடுத்திருந்தார்…”
“இன்னொரு ஓலையா! யாருக்கு? நீ சொல்லவே இல்லையே!”
“அந்தரங்கமானபடியால் சொல்லவில்லை; நீங்கள் இப்போது வற்புறுத்துகிறபடியால் சொல்லுகிறேன். பழையாறையிலுள்ள இளையபிராட்டி குந்தவை தேவிக்கு இளவரசர் ஓலை ஒன்று கொடுத்தார்!…”
“ஓஹோ! அப்படியானால், நாளைக்குச் சக்கரவர்த்தி கொடுக்கும் திருமுகத்தை நீ உடனே எடுத்துக்கொண்டு காஞ்சிக்குப் போக முடியாது. இளைய பிராட்டிக்கு இளவரசர் ஓலை அனுப்பும்படி இப்போது என்ன அவசரம் நேர்ந்ததோ?”
“தளபதி! நான் பிறருக்கு எழுதப்படும் ஓலையைப் படிப்பதில்லை. சக்கரவர்த்தியின் ஓலையைப் படித்ததுபோல இதையும் நீங்கள் படிப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபம் கிடையாது. அந்தப் பொறுப்பு தங்களுடையது. என் உடையிலிருந்த பொன்னும் ஓலையும் களவு போகாமல் என்னிடம் திரும்பி வந்தால் போதும்.”
“அதைப் பற்றிப் பயம் வேண்டாம். நானே பார்த்து எடுத்து வருகிறேன்” என்று சின்னப் பழுவேட்டரையர் நடந்தார். அவர் பின்னோடு வந்தியத்தேவனும் தொடர்ந்தான். அதையறிந்த கோட்டைத் தளபதி கண்களினால் சமிக்ஞை செய்யவே ஐந்தாறு வேல் பிடித்த வீரர்கள் வந்து வாசற்படியண்டை குறுக்கே நின்றார்கள். அவர்களுடன் சண்டை பிடிப்பதில் அனுகூலம் ஒன்றுமில்லையென்று கருதி வந்தியத்தேவன் அங்கேயே நின்றான்.
சற்று நேரத்துக்கெல்லாம் சின்னப் பழுவேட்டரையர் திரும்பி வந்தார். அவருக்குப் பின்னால் ஒருவன் ஒரு தட்டில் சீர் வரிசை ஏந்திக் கொண்டு வருவதுபோல் வந்தியத்தேவனுடைய பழைய ஆடைகளை எடுத்து வந்தான்.
“தம்பி! இதோ உன் ஆடைகள் பத்திரமாயிருக்கின்றன. நன்றாகச் சோதனை செய்து பார்த்துக்கொள்!” என்றார் கோட்டைத் தளபதி.
அவ்விதமே வந்தியத்தேவன் சோதனை செய்து பார்த்தான். அரைச் சுற்றுச் சுருளில் அவன் வைத்திருந்ததைக் காட்டிலும் அதிகமாகப் பொற்காசுகள் இருந்தன. குந்தவை தேவியிடம் சேர்ப்பிக்க வேண்டிய ஓலையும் இருந்தது. அதிகப் பொற்காசுகள் எப்படி வந்தன? முதலில் அவன் தேடிப் பார்த்தபோது இல்லாத ஓலை இப்போது எப்படி வந்தது? சின்னப்பழுவேட்டரையரிடம் அது அகப்பட்டிருக்கவேண்டும். அதைப் பார்த்துவிட்டு இப்போது திரும்பி வந்த பிறகு அவர் அந்த ஓலையைத் திரும்பச் செருகியிருக்கவேண்டும்! எதற்காக இப்படிச் செய்திருக்கிறார்? பொற்காசுகள் எதற்காக அதிகம் வைத்திருக்கிறார்? பொல்லாத மனிதர் இவர்! இன்னும் எப்படியெல்லாம் தன்னைச் சோதிக்கப் போகிறாரோ, தெரியாது! இவரிடம் சர்வ ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். ஏமாந்து போகக்கூடாது!
“எல்லாம் சரியாயிருக்கிறதா, தம்பி! நீ கொண்டு வந்த பொன், பொருள் எல்லாம்?” என்று சின்னப் பழுவேட்டரையர் கேட்டார்.
“இதோ பார்த்துச் சொல்கிறேன்” என்று கூறி வந்தியத்தேவன் பொற்காசுகளை எண்ணினான். அதிகப்படி காசுகளை எடுத்துத் தனியாக பழுவேட்டரையர் முன்பு வைத்துவிட்டு, “தளபதி! வாணர் குலத்தில் பிறந்தவன் நான்; ஆதித்த கரிகாலரின் தூதன்; பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை!” என்றான்.
“உன்னுடைய நேர்மையை மிக மெச்சுகிறேன். ஆயினும் உன்னுடைய வழிச் செலவுக்கு இதை நீ வைத்துக் கொள்ளலாம்! எப்போது புறப்பட விரும்புகிறாய்? இன்றைக்கே புறப்படுகிறாயா? அல்லது இன்றிரவு தங்கி இளைப்பாறிவிட்டு, பெரியவரையும் பார்த்துவிட்டுப் போகிறாயா?” என்று கேட்டார் தளபதி.
“அவசியம் இன்றிரவு இங்கே தங்கிப் பெரிய பழுவேட்டரையரையும் தரிசித்துவிட்டுத்தான் போக எண்ணியிருக்கிறேன். ஆனால் உங்கள் ஆட்களிடம் மட்டும் கொஞ்சம் சொல்லி வையுங்கள். என் பொருள்களில் கை வைக்க வேண்டாம் என்று!” – இவ்விதம் சொல்லிக்கொண்டே அதிகப் படியாயிருந்த பொற்காசுகளையும் வந்தியத்தேவன் எடுத்துத் துணிச் சுருளில் பத்திரப்படுத்திக் கொண்டான்.
“மிக்க சந்தோஷம். உனக்கு இங்கே எந்த விதமான இடைஞ்சல்களும் இனிமேல் இராது. உனக்கு என்ன வேண்டுமோ, தாராளமாய்க் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.”
“தளபதி! இந்தத் தஞ்சை நகரைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்று எனக்கு ஆசையாயிருக்கிறது. பார்க்கலாம் அல்லவா?”
“தாராளமாகப் பார்க்கலாம். இதோ இவர்கள் இருவரும் உன்னோடு வந்து கோட்டைக்குள் எல்லா இடங்களையும் காட்டுவார்கள். கோட்டைக்கு வெளியில் மட்டும் போக வேண்டாம். சாயங்காலம் கோட்டைக் கதவுகளைச் சாத்திவிடுவார்கள்! வெளியில் போய்விட்டால் திரும்பி இரவு வரமுடியாது. கோட்டைக்குள்ளே உன் விருப்பப்படி சுற்றி அலையலாம்!” – இவ்விதம் கூறிவிட்டு இரண்டு புதிய ஆட்களைச் சின்னப் பழுவேட்டரையர் தம் அருகில் அழைத்து அவர்களிடம் ஏதோ சொன்னார். அவர் சொன்னது என்னவாயிருக்கும் என்று வந்தியத்தேவன் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டான்.
33. மரத்தில் ஒரு மங்கை!
கோட்டைத் தளபதியின் இரு ஆட்களும் தன் இரண்டு பக்கத்தில் வர, வந்தியத்தேவன் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். தான் தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ளவே அவர்கள் தன்னுடன் வருகிறார்கள் என்பதைப் பற்றி அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. கோட்டை வாசல் வழியாக வெளியே யாரையும் போக விடாமல் பார்த்துக் கொள்ளும்படி கட்டளை பிறந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஆனாலும் அவன் அன்று முன்னிரவுக்குள் தப்பிச் சென்றே தீரவேண்டும். பெரிய பழுவேட்டரையர் வந்துவிட்டால், பிறகு தப்பித்துச் செல்வது இயலாத காரியம்; உயிர் பிழைத்திருப்பதே முடியாத காரியமாகிவிடும்.
ஆகவே, தஞ்சாவூர்க் கோட்டைக்குள் வந்தியத்தேவன் அங்குமிங்கும் அலைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, அவனுடைய மனம் தப்பிச் செல்லும் வழிகளைப் பற்றி ஆலோசித்துக் கொண்டேயிருந்தது. முதலில் இந்த யமகிங்கரர்களிடமிருந்து தப்ப வேண்டும்; பின்னர், கோட்டையிலிருந்து தப்பிச் செல்ல வேண்டும். எப்படித் தப்புவது; அதுதான் தெரியவில்லை.
பார்க்கப் போனால் இவர்களிடமிருந்து தப்புவது பெரிய காரியமில்லை. இரண்டு பேரையும் ஒரு விநாடி நேரத்தில் தாக்கிக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடலாம். ஆனால் எங்கே ஓடுவது? தஞ்சைக் கோட்டையைப் பழுவேட்டரையர்கள் எவ்வளவு பலப்படுத்திக் கட்டியிருக்கிறார்கள் என்பது நாடறிந்த செய்தி. அவர்களுடைய அனுமதியின்றித் தஞ்சைக் கோட்டைக்குள் காற்றுக் கூட நுழைய முடியாது என்று ஜனங்கள் சொல்லுவார்கள். யமனும் வரமுடியாது என்று சக்கரவர்த்தியே இன்று காலையில் சொன்னார். அத்தகைய கோட்டையிலிருந்து எப்படி செல்வது? இந்த இருவரையும் தொட வேண்டியது தான்; அவர்கள் உடனே கூச்சல் கிளப்பிவிடுவார்கள். அடுத்த கணத்தில் தான் பாதாளச் சிறைக்குப் போக நேரிடும். அல்லது உயிரிழக்க நேரிடும். இவர்களைத் தாக்குவதில் பயனில்லை; தாக்காமல் தந்திரத்தினாலேயே தப்பிக்க வேண்டும். அப்படித் தப்பித்த பிறகு கோட்டையிலிருந்து வெளியேற வழி தேட வேண்டும். எவ்வளவு பலமான கோட்டையாயிருந்தாலும் இரகசியச் சுரங்கவழி இல்லாமற் போகாது. அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அது யாருக்குத் தெரிந்திருக்கும்? தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தாலும், தனக்குச் சொல்வார்களா?
இப்படிப் பலவகையாகச் சிந்தித்துக்கொண்டே நடந்த போது, சட்டென்று பழுவூர் இளைய ராணியின் நினைவு வந்தது. ஆகா! அந்தக் கோட்டைக்குள் யாராவது தனக்கு உதவி செய்வதாயிருந்தால், அந்த மாதரசிதான் செய்யக்கூடும். அதுவும் சந்தேகந்தான். ஆனால் ஆழ்வார்க்கடியானின் பெயரைச் சொல்லி ஏதேனும் தந்திர மந்திரம் செய்து பார்க்கலாம். அப்படிப் பார்ப்பதற்கு முதலில் பழுவேட்டரையரின் அரண்மனையைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்தாலும், தான் அங்கே ராணியைப் பார்க்கச் செல்வது இந்தத் தடியர்களுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் இவர்கள் போய்ச் சின்னப் பழுவேட்டரையரிடம் சொல்லிவிடுவார்கள். அதிலிருந்து என்ன விபரீதம் நேருமோ, யார் கண்டது? ஒருவேளை, பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில் நாம் இருக்கும் போது அவரே வந்துவிட்டால் என்ன செய்வது? சிங்கத்தின் குகைக்குள் நாமாகச் சென்று தலையைக் கொடுப்பதுபோல ஆகுமே?
வந்தியத்தேவனுடைய மனம் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய வாயும் கண்களும் சும்மா இருந்து விடவில்லை. பின்னோடு வந்தவர்களை “அது என்ன?” “இது என்ன?”, “அது யார் அரண்மனை”, “இது யார் மாளிகை?”, “இது என்ன கட்டிடம்?” “அது என்ன கோபுரம்?” என்றெல்லாம் அவன் வாய் கேட்டுக்கொண்டேயிருந்தது. அவனுடைய காதுகள் “இது பெரிய பழுவேட்டரையர் அரண்மனை” அல்லது “பழுவூர் இளையராணி அரண்மனை” என்ற மறுமொழி வருகிறதா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டேயிருந்தன. அவனுடைய கண்களோ அப்புறமும் இப்புறமும் நாலாபுறமும் கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்தன. அப்படிப் பார்த்து வந்தபோது ஒரு விஷயம் அவன் கண்கள் வழியாக மனத்தில் நன்கு பதிந்தது. கோட்டைக்குள்ளே பிரதான வீதிகள் விசாலமாயும் ஜனப் போக்குவரவு நிறைந்ததாயும் இருந்தபோதிலும் சந்துபொந்துகளும் ஏராளமாயிருந்தன.
மரமடர்ந்த தோட்டங்களும் அதிகமாயிருந்தன. அந்தச் சந்து பொந்துகளின் வழியாகச் சென்று அடர்ந்த தோட்டங்களுக்குள் புகுந்து மறைந்து கொள்வது அசாத்தியமான காரியம் அல்ல. ஒரு நாள், இரண்டு நாள் கூடத் தலைமறைவாக இருப்பது சாத்தியந்தான். ஆனால் யாரும் பாராத சமயத்தில் மறைந்து கொள்ள வேண்டும்; யாரும் தேடாமலும் இருக்கவேண்டும். சின்னப் பழுவேட்டரையர் அவருடைய கணக்கற்ற ஆட்களைத் தேடுவதற்கு ஏவிவிட்டால் மறைந்திருப்பது சாத்தியமல்ல. அல்லது யாருடைய வீட்டுக்குள்ளாவது புகுந்து அடைக்கலம் பெற வேண்டும். அம்மாதிரி தஞ்சைக் கோட்டைக்குள் தனக்கு அடைக்கலம் யார் கொடுப்பார்கள்? பழுவூர் ராணி கொடுத்தால் தான் கொடுத்தது. தன்னுடைய கற்பனா சக்தியையெல்லாம் பிரயோகித்து அவளிடம் கதை கட்டிச் சொல்லி நம்பும்படி செய்யவேண்டும். அதற்கு முதலில், இவர்களிடமிருந்து தப்பித்து நழுவ வேண்டும்….
ஆகா! இது என்ன கோஷம்? இது என்ன ஆர்ப்பாட்டம்?… ஓ! இவ்வளவு கூட்டமாகப் போகிறார்களே, இவர்கள் யார்? தெய்வமே! நீ என் பக்கத்தில் இருக்கிறாய் என்பதில் சந்தேகமில்லை. இதோ ஒரு வழி புலப்படுகிறது! இதோ ஒரு துணை தோன்றுகிறது!….
குறுக்கு வீதியில் ஒரு திருப்பத்துக்கு வந்ததும், பிரதான வீதி வழியாக ஒரு பெரிய கும்பல் வாத்திய கோஷ ஜயகோஷ முழக்கங்களுடன் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்து வந்தியத்தேவன் மேற்கண்டவாறு நினைத்தான். அந்தக் கும்பலில் சென்றவர்கள் வேளக்காரப் படையினர் என்பதைத் தெரிந்து கொண்டான். வழக்கம்போல் மகாராஜாவைத் தரிசனம் செய்துவிட்டு அவர்கள் கோட்டையை விட்டு வெளியேறுகிறார்கள் போலும்! இந்தக் கூட்டத்தில் தானும் கலந்து விட்டால்?… ஆகா! தப்புவதற்கு இதைக் காட்டிலும் வேறு சிறந்த உபாயம் என்ன?
பின்னோடு வருகிறவர்கள் அவ்வளவு சுலபத்தில் தன்னை விட்டுவிடமாட்டார்கள். தான் கூட்டத்தில் கலந்தால் அவர்களும் கூடத் தொடர்ந்து வருவார்கள். கோட்டை வாசல் வழியாக வெளியேறுவதும் எளிதாயிராது! வாசற் காவல் செய்வோர் அவ்வளவு ஏமாந்தவர்களாக இருந்துவிடுவார்களா? தன்னைக் கண்டுபிடித்துத் தடுத்து நிறுத்திவிட மாட்டார்களா? ஆயினும் ஒரு பிரயத்தனம் செய்து பார்க்கவேண்டியதுதான். வேறு வழியில்லை. கடவுளே பார்த்துக் காட்டியிருக்கும் இந்த வழியை உபயோகித்துக் கொள்ளாவிட்டால் தன்னைப் போன்ற மூடன் வேறு யாரும் இல்லை.
வழக்கம்போல், பின்னோடு வந்தவர்களைப் பார்த்து, “இது என்ன கூட்டம்?” என்று வந்தியத்தேவன் கேட்டான். “வேளக்காரப் படை” என்று சொன்னதும், அந்தப் படையைப் பற்றிய விவரங்களைக் கேட்கலானான். அத்தகைய வீரப்படையில் சேர்ந்துவிட விரும்புவதாகவும், ஆகையால் நெருங்கிப் பார்க்க வேண்டுமென்றும் சொன்னான். இப்படியெல்லாம் பேசிக் கொண்டே வேளக்கார படையை அணுகினான். சிறிது நேரத்தில் “முன்னால் தாரை தப்பட்டை முழக்குகிறவர்களைப் பார்க்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே வேளக்காரப் படைக் கூட்டத்தில் கலந்துவிட்டான்.
கூட்டம் மேலே போகப் போக, இவனும் ஒரே இடத்தில் நில்லாமல் மேலும் கீழும் அப்பாலும் இப்பாலும் நகர்ந்து கொண்டிருந்தான். வேளக்காரப் படை வீரர்களைக் காட்டிலும் அதிக உற்சாகத்துடன் கோஷங்களைச் செய்தான். அவ்வீரர்களில் சிலர் இவனை உற்று உற்றுப் பார்த்தார்கள். “இவன் யார் பைத்தியக்காரன்?” என்ற பாவனையில் சிலர் பார்த்தார்கள். “மிதமிஞ்சி மதுபானம் செய்தவன் போலிருக்கிறது!” என்ற பாவனையில் சிலர் பார்த்தார்கள். ஆனால் யாரும் அவனைத் தடுக்கவோ, அப்புறப்படுத்தவோ முயலவில்லை.
அவனுடன் வந்த சின்னப் பழுவேட்டரையரின் ஆட்களோ, வேளக்காரப் படைக்குள் நுழையத் துணியவில்லை. “எப்படியும் அவன் வெளியில் வருவான். அப்போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம்” என்ற நம்பிக்கையுடன் வேளக்காரப் படையின் ஓரமாகச் சற்று விலகியே அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள்.
அச்சமயம் வீதியில் எதிர்ப்புறமாகத் தயிர்க் கூடையுடன் வந்து கொண்டிருந்த ஒரு ஸ்திரீ வேளைக்காரப் படைக்கு ஒதுங்கி ஒரு சந்தில் நின்றாள். அந்த வீரர்களில் ஒருவன், “அம்மா! தாகமாயிருக்கிறது; கொஞ்சம் தயிர் தருகிறாயா?” என்று கேட்டான். அந்தப் பெண் துடுக்காக, “தயிர் இல்லை; கன்னத்தில் இரண்டு அறை வேணுமானால் தருகிறேன்!” என்றாள்.
அதைக் கேட்ட ஒரு வீரன் “ஓகோ! அதைத்தான் கொடுத்து விட்டுப் போ!” என்று அந்தப் பெண்ணை அணுகிச் சென்றான். தயிர்க்காரப் பெண் பயந்து ஓடினாள். வீரன் அவளைத் தொடர்ந்து ஓடினான். அவனைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக இன்னும் இரண்டு வீரர்கள் ஓடினார்கள். ஓடியவர்கள் அனைவரும் தலைக்குத் தலை ஒவ்வொரு விதமாகக் கூச்சல் போட்டுக் கொண்டு ஓடியபடியால் விஷயம் என்னவென்பதே யாருக்கும் தெரியவில்லை. ஏதோ தமாஷ் என்று மட்டும் எல்லாரும் எண்ணினார்கள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான் வல்லவரையன். அந்த ஒரு கணத்தில் அவன் மனத்திற்குள் தீர்மானத்துக்கு வந்துவிட்டான். தீர்மானிப்பதும் தீர்மானத்தைக் காரியத்தில் நிறைவேற்றுவது வந்தியத்தேவனுக்கு ஒன்றுதான் என்பதை நாம் ஏற்கனவே பல முறை பார்த்திருக்கிறோம். தீர்மானித்த பிறகு தயங்குவதென்பது அவனுடைய இயற்கைக்கு விரோதமானது. எனவே, “ஓடு! ஓடு!”, “பிடி! பிடி!” என்று கூவிக் கொண்டே வந்தியதேவனும், தயிர்க்காரப் பெண்ணைத் துரத்திக்கொண்டு ஓடியவர்களைத் தொடர்ந்து தானும் ஓடினான். அந்தப் பெண் சற்றுத் தூரம் ஓடி, ஒரு குறுகிய சந்தில் திரும்பினாள். பின் தொடர்ந்து ஓடியவர்கள் அங்கே போய்ப் பார்த்தபோது தயிர்க்காரப் பெண்ணைக் காணவில்லை. மாயமாய் மறைந்து விட்டாள்! துரத்தி வந்த வீரர்களும் அவளைப் பற்றி அப்புறம் கவலைப்படவில்லை; திரும்பிவிட்டார்கள். வந்தியத்தேவன் மட்டும் திரும்பவில்லை. அந்தப் பெண் புகுந்து சென்ற சந்து வழியாகவே மேலும் ஓடினான். இன்னும் இரண்டு மூன்று சந்துகள் புகுந்து திரும்பிய பிறகே ஓட்டத்தை நிறுத்தி மெதுவாக நடக்கலுற்றான்.
வேளக்காரப் படை சாதாரணமாகக் கோட்டையிலிருந்து வெளியேறும் நேரம் சூரியாஸ்தமன நேரம் அல்லவா? வந்தியத்தேவன் இப்போது புகுந்த சென்ற சந்துகளில் ஏற்கனவே இருள் சூழ்ந்துவிட்டது. இருபுறமும் சில இடங்களில் மதில் சுவராயிருந்தது. சில இடங்களில் செடி கொடிகள் அடர்ந்த வேலியாயிருந்தது. வந்தியத்தேவன் எங்கும் நிற்காமல் போய்க் கொண்டேயிருந்தான். திசையைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. பெரிய வீதிகளில் புகாமல் சந்து பொந்துகளின் வழியாகப் புகுந்து போனால் எப்படியும் கோட்டை வெளிச்சுவரை அடைந்தே தீரவேண்டும். கோட்டைச் சுவரை அடைந்த பிறகு என்ன செய்வது என்பதைப் பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம். யோசித்து யுக்திகள் கண்டுபிடிப்பதற்குத்தான் இரவெல்லாம் நேரம் இருக்கிறதே!
சற்று நேரத்துக்கெல்லாம் நன்றாக இருட்டி விட்டது. அவன் சென்ற பாதை கடைசியில் ஒரு மதில் சுவரில் வந்து முடிந்தது. இருட்டில் நடந்து வந்த வந்தியத்தேவன் அச்சுவரின் மேல் இலேசாக மோதிக் கொண்டான். சுவர் என்று மட்டும் தெரிந்தது. அது என்ன சுவர், எவ்வளவு உயரமான சுவர் என்பது ஒன்றும் தெரியவில்லை. அநேகமாக அது கோட்டை மதில் சுவராகவே இருக்கலாம். அப்படியானால் இங்கேயே உட்கார்ந்து விடுவது தான் சரி. சிறிது நேரத்துக்கெல்லாம் சந்திரன் உதயம் ஆகும். அப்போது பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அதுவரை ஒளிந்திருப்பதற்கு இதைக் காட்டிலும் நல்ல இடம் இருக்க முடியாது. இத்தனை நேரம் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் திரும்பிப் போய்ச் சொல்லியிருப்பார்கள். கோட்டைத் தளபதி தன்னுடைய ஆட்களை நாலாபுறமும் ஏவியிருப்பார். ஒருவேளை வேளக்காரப் படையுடன் தான் வெளியேறியிருக்கலாம் என்றும் சந்தேகித்திருப்பார். கோட்டைக்கு உள்ளேயும் வெளியிலேயும் தன்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள். தேடட்டும்; தேடட்டும்; நன்றாகத் தேடட்டும். அவர்களையெல்லாம் ஏமாற்றிவிட்டு நான் இக்கோட்டையை விட்டுத் தப்பித்துச் செல்லாவிட்டால் நான் வாணர் குலத்தவன் அல்ல! என் பெயரும் வந்தியத்தேவன் அல்ல!
ஆனால் சந்திரன் உதயமாகி நிலா அடிக்கத் தொடங்கி விட்டால் பழுவேட்டரையர் ஆட்களுக்கும் வசதியாகப் போய்விடும். தன்னைத் தேடி இங்கே வந்தாலும் வந்துவிடுவார்கள். வந்தால் வரட்டும்; தாராளமாய் வரட்டும்; இந்த அடர்ந்த தோப்புக்குள் ஒளிந்து கொண்டால் யார் தான் தேடிக் கண்டு பிடிக்க முடியும்?
இப்படி எண்ணிக்கொண்டே சுவரின் மீது சாய்ந்துகொண்டு வந்தியத்தேவன் உட்கார்ந்தான். இளம்பிள்ளையாதலாலும் பகலெல்லாம் அலைந்து களைத்திருந்தபடியாலும் கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. மேலக்காற்றில் மரக்கிளைகள் ஆடி ஒன்றோடொன்று உராய்ந்து உண்டாக்கிய சத்தம் தாலாட்டுப் பாடலைப் போல் மயக்கத்தை உண்டு பண்ணியது. அப்படியே தூங்கிவிட்டான்.
அவன் தூக்கம் நீங்கிக் கண் விழித்த போது சந்திரன் உதயமாகிக் கீழ்வானத்தில் சிறிது தூரம் மேலே வந்திருந்தது. அடர்ந்த மரக்கிளைகளின் வழியாக நிலா வெளிச்சம் வந்து சுற்றுப் புற காட்சிகளை அரைகுறையாக அவனுக்குக் காட்டியது. தனது நிலை என்ன வென்பதை வந்தியத்தேவன் ஞாபகப்படுத்திக் கொண்டான். சுவரில் சாய்ந்தபடி தான் தூங்கிவிட்டது அவனுக்கு வியப்பை அளித்தது. அதைக் காட்டிலும் துயில் நீங்கி விழித்துக் கொண்டது ஆச்சரியம் அளித்தது. தன்னுடைய துயிலை நீக்கி விழிக்கச் செய்த காரணம் யாது? ஏதோ ஒரு குரல் கேட்டதுபோல் தோன்றியதே? அது மனிதக் குரலா? அல்லது விலங்கின் குரலா? அல்லது இரவில் விழித்திருக்கும் பறவையின் குரலா? – குரல் கேட்டதுதான் உண்மையா?
வந்தியத்தேவன் அண்ணாந்து பார்த்தான். அரைகுறையான நிலா வெளிச்சத்தில் செங்குத்தான சுவர் தெரிந்தது. ஆ! இது கோட்டைச் சுவராயிருக்க முடியாது. கோட்டைச் சுவர் இன்னும் உயரமாயிருக்கும். ஒரு வேளை வெளிக் கோட்டைச் சுவருக்குள்ளே இன்னொரு சிறிய கோட்டைச் சுவராக இருக்குமோ? அல்லது பெரியதொரு அரண்மனைத் தோட்டத்தின் மதில் சுவரோ?
அண்ணாந்து பார்த்துக்கொண்டே வந்தியத்தேவன் எழுந்தான். ஒருகணம் அவனுடைய இருதயத் துடிப்பு நின்று போயிற்று. வயிற்றிலுள்ள குடல் மேலே மார்பு வரை விம்மி வந்து அடைத்தது. அவ்வளவு பீதி உண்டாயிற்று. அதோ அந்த மதில் சுவருக்கு மேலேயுள்ள மரக்கிளையில் இருப்பது என்ன? மரங்களில் வசிக்கும் வேதாளம் என்னும் பிசாசைப் பற்றி அவன் கேட்டிருந்த கதைகள் பலவும் நினைவுக்கு வந்தன.
ஆனால் வேதாளம் பேசுமா? மனிதக் குரலில் பேசுமா? அதுவும் பெண்ணின் குரலில் பேசுமா? இந்த வேதாளம் அவ்வாறு பேசுகிறதே? என்ன சொல்கிறது என்று கேட்கலாம்.
“என்ன ஐயா! சுவரில் சாய்ந்தபடி தூங்கிவிட்டாயா? எத்தனை தடவை கூப்பிடுகிறது?”
ஆ! இது வேதாளம் அல்ல. மனித குலத்துப் பெண்மணிதான் பேசுகிறாள். மரக்கிளையின் மீது உட்கார்ந்திருப்பவள் ஒரு பெண்மணிதான்! இது என்ன கனவா? அல்லது உண்மையில் நடப்பதா?
“அழகுதான்! இன்னும் தூக்கம் கலையவில்லை போலிருக்கிறது. இதோ ஏணியை வைக்கிறேன். ஜாக்கிரதையாக ஏறி வா! கீழே விழுந்து தொலைக்காதே!”
இப்படிச் சொல்லிக் கொண்டே அப்பெண் சுவரின் உட்புறத்திலிருந்து மெல்லிய மூங்கிலினால் ஆன ஏணி ஒன்றை எடுத்து வெளிப்புறத்தில் சுவர் ஓரமாக வைத்தாள்.
வந்தியத்தேவனுக்கு ஒன்றும் விளங்கவில்லைதான்! ஆனால் இப்படிப்பட்ட அரிய சந்தர்ப்பத்தை, – தன்னைத் தேடி வரும் சந்தர்ப்பத்தை அவன் விட்டுவிடுவானா?
வருகிறது வரட்டும்; பிறகு நடப்பது நடக்கட்டும். இப்போது இந்த ஏணியில் ஏறலாம்; சுவரின் உச்சியை அடைந்த பிறகு மற்ற விபரங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
ஏணியில் முக்கால் பங்கு அவன் ஏறியபோது அந்தப் பெண் மறுபடியும், “நல்ல தாமதக்காரன் நீ! அங்கே இளைய ராணியம்மாள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே நீ மதில் சுவரில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாய்!” என்றாள். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியினால் வந்தியத்தேவன் ஏணியிலிருந்து நழுவி விழுந்து விட இருந்தான். நல்ல வேளையாக, அங்கே சுவரில் நீட்டிக் கொண்டிருந்த கல்லைப் பிடித்துக் கொண்டு சமாளித்தான்.
இளைய ராணியென்றால், பழுவூர் இளைய ராணியாகத்தான் இருக்கும்! தான் இங்கே வந்து உட்கார்ந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது? மாயமந்திரம் ஏதோ அவள் அறிந்திருக்க வேண்டும்! தன்னைப் பார்ப்பதில் அவளுக்கு இவ்வளவு சிரத்தை ஏற்படக் காரணம் என்ன? ஒரு வேளை, – ஒரு வேளை, – வேறு எவனுக்காகவோ வைத்த ஏணியில் நான் ஏறி விட்டேனோ? எப்படியிருந்தாலும் இருக்கட்டும்! முன் வைத்த காலைப் பின் வைக்க முடியாது! எல்லாம் சற்று நேரத்தில் தெரிந்து போய்விடுகிறது.
சுவரின் உச்சியருகில் வந்ததும் அவனுடைய கையைப் பிடித்து அந்தப் பெண் தூக்கிவிட்டாள். அப்போது நிலா வெளிச்சம் அவள் முகத்தில் அடித்தது. இதற்குள் ஆச்சரியப்படும் சக்தியையே வந்தியத்தேவன் இழந்து விட்டான். அதனால் தான் அவளுடைய முகம் வேளக்காரப் படையினர் துரத்திய தயிர்கூடைக்காரியின் முகம்போலத் தோன்றியும், அவன் சுவரிலிருந்து தவறி விழவில்லை. இன்றிரவு இதற்கு மேல் என்னென்ன வியப்பான நிகழ்ச்சிகள் நடந்தாலும் வியப்படைவதற்கு இடமில்லைதான்.
“ஊம்! ஏன் விழித்துக் கொண்டு சுவர் மேலேயே உட்கார்ந்திருக்கிறாய்? ஏணியை எடுத்து உள்ளே இறக்கிவிட்டுக் குதி சீக்கிரம்!” என்று சொல்லிக் கொண்டே அந்தப் பெண் சரசரவென்று மரக்கிளையிலிருந்து கீழே இறங்கினாள்.
வந்தியத்தேவன் அவள் கூறியவாறே செய்தான். அவன் இறங்கிய இடம் ஒரு விஸ்தாரமான தோட்டம் என்று தெரிந்தது. சற்றுத் தூரத்தில் ஒரு பெரிய அரண்மனையின் மாடகூட கோபுரங்களும் சிகரங்களும் மங்கிய நிலா வெளிச்சத்தில் சொப்பன உலகக் காட்சியைப் போல் தோன்றின.
அது யாருடைய அரண்மனை என்று கேட்பதற்காக வந்தியத்தேவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். உடனே அந்தப் பெண் “உஷ்!” என்று சொல்லி, உதட்டில் விரலை வைத்து எச்சரித்துவிட்டு முன்னால் நடந்தாள். வந்தியத்தேவன் அவளைத் தொடர்ந்து சென்றான்.
34. லதா மண்டபம்
அடர்ந்த மாந்தோப்புக்கிடையே சென்ற ஒற்றையடிப் பாதையின் வழியாக அம் மங்கை விடுவிடுவென்று நடந்து செல்ல, வந்தியத்தேவனும் விரைவாகத் தொடர்ந்து சென்றான். மரஞ்செடிகளின் மீது மோதிக் கொள்ளாமல் அந்த இருளில் நடந்து செல்லுவது கஷ்டமாகத்தான் இருந்தது. ஒரு சமயம் இவன் மரத்தில் மோதிக் கொள்ளப் பார்த்துத் தயங்கி நின்றபோது, அந்த மங்கை திரும்பிப் பார்த்து, “ஏன் நிற்கிறாய்? வழி மறந்து போய் விட்டதா? நீதான் இருட்டில் கண் தெரிகிற மனிதன் ஆயிற்றே!” என்றாள். அதற்குப் பதிலாக வந்தியத்தேவன் உதட்டில் விரலை வைத்து முன்னால் அவள் சொன்னது போல் “உஷ்!” என்றான். அதே நேரத்தில் மதில் சுவருக்கு வெளியே ஏதோ சப்தம் கேட்டது. மனித நடமாட்டம் போலத் தொனித்தது. பிறகு இருவரும் நடந்தார்கள். கொஞ்ச தூரம் போனதும் வல்லவரையன் இலேசாகச் சிரித்தான். அந்த மங்கை திரும்பிப் பார்த்து, “என்னத்தைக் கண்டு சிரிக்கிறாய்?” என்றாள்.
“கண்டு சிரிக்கவில்லை; கேட்டுச் சிரிக்கிறேன்!” என்றான்.
“அப்படியென்றால்?…”
“என்னைத் தேடி வந்தவர்களின் காலடிச் சத்தத்தைச் சற்று முன் நீ கேட்கவில்லையா? அவர்கள் ஏமாந்து போனதை எண்ணிச் சிரிக்கிறேன்!”
அவள் சிறிது பயத்துடன், “உன்னை யாராவது தேடி வருகிறார்களா, என்ன? எதற்காக?” என்றாள்.
“இல்லாவிட்டால் எதற்காக இந்தக் குருட்டு இருட்டில் மதில் சுவரில் வந்து மோதிக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?”
அச்சமயம் காற்றின் அசைவில் மரக்கிளைகள் விலகி நிலாக் கதிர் ஒன்று வந்தியத்தேவனுடைய முகத்தின் மீது விழுந்தது.
அந்தப் பெண் சற்று வியப்புடனும் திகைப்புடனும் அவனைப் பார்த்தாள்.
“என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டான்.
“நீ, நீதானா என்று பார்த்தேன்!”
“நான், நான் இல்லாவிட்டால் வேறு யாராயிருப்பேன்?”
“போனதடவை நீ வந்திருந்தபோது பெரிய மீசை வைத்திருந்தாயே!”
“நல்ல கேள்வி கேட்கிறாய்! என்னைப் போல் சுவர் ஏறிக் குதித்து வருகிறவன் அடிக்கடி வேஷத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் எப்படி?”
“முன்னைக்கு இப்போது இளமையாய்த் தோன்றுகிறாயே?”
“உற்சாகம் இருக்கும்போது இளமை தானே வருகிறது!”
“அப்படி உனக்கு என்ன உற்சாகம் வந்தது?”
“உங்கள் மகாராணியின் தயவு இருக்கும்போது உற்சாகத்துக்கு என்ன குறைவு?”
“பரிகாசம் செய்ய வேண்டாம். இன்றைக்கு எங்கள் எஜமானி இளைய ராணிதான். ஒருநாள் நிச்சயமாக மகாராணி ஆவார்கள்!”
“அதைத்தான் நானும் சொல்லுகிறேன்.”
“இதுதானா சொல்வாய்? உன்னுடைய மந்திர சக்தியினால் தான் மகாராணி ஆனார்கள் என்றுகூடச் சொல்வாய்! பாதி ராஜ்யத்தைக் கொடு என்று கேட்டாலும் கேட்பாய்!”
வந்தியத்தேவன், அறிய விரும்பியதை ஒருவாறு அறிந்து கொண்டான். பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. தீவிரமாக யோசித்துக் கொண்டே நடந்தான்.
தான் சந்திக்கப்போகிறது யாரை? பழுவூர் இளைய ராணியாயிருக்கலாம். அல்லது மதுராந்தகத் தேவரை மணந்து கொண்ட சின்னப் பழுவேட்டரையரின் மகளாயிருக்கலாம். தன்னை மந்திரவாதியென்று எண்ணி அந்தப் பெண் அழைத்துக்கொண்டு போகிறாள். போய், அந்த ‘இளையராணி’ யாராயிருந்தாலும் அவளைச் சந்திக்கும்போது எப்படி நடந்துகொள்வது? – நெஞ்சமே! தைரியத்தைக் கைவிடாதே! தைரியம் உள்ள வரையில் ஜயமும் உண்டு! சமயத்தில் ஏதேனும் யுக்தி தோன்றாமல் போகாது! இது வரையில் எந்த நெருக்கடியிலும் நாம் தோல்வியுற்று வந்ததில்லை. அதிலும் பெண் பிள்ளை ஒருத்தியிடமா தோல்வியடையப் போகிறோம்?
ஒரு பெரிய மாளிகையை அவர்கள் நெருங்கிச் சென்றார்கள். ஆனால் மாளிகையின் முன் வாசலை நோக்கிச் செல்லவில்லை. பின்புற வாசலையும் நெருங்கவில்லை. மாளிகையின் ஒரு பக்கத்தில் தோட்டத்துக்குள் நீட்டிவிட்டிருந்த சிருங்கார லதா மண்டபத்தை நெருங்கினார்கள். இன்னும் அருகில் நெருங்கிய போது, அந்த லதா மண்டபம் இரண்டு பெரிய பிரம்மாண்டமான மாளிகைகளை ஒன்று சேர்க்கும் பாதையைப்போல் அமைந்திருப்பது தெரிந்தது. அப்படிச் சேர்க்கப்பட்ட இரு கட்டிடங்களும் ஒருவிதத்தில் மாறுபட்டிருந்தன. வலதுபுறத்து மாளிகை அதன் உள்ளே சுடர் விட்டு எரிந்த பல தீபங்களினால் ஜொலித்துக் கொண்டிருந்தது. உள்ளிருந்து பலவித கலகலப்பான தொனிகள் வந்து கொண்டிருந்தன. இடதுபுறத்துக் கட்டிடத்திலோ, ஒரு சின்னஞ்சிறு தீபம்கூட எரியவில்லை. நிலா வெளிச்சத்தில் அதன் வெளிச் சுவர்கள் நெடிதுயர்ந்து தெரிந்தன. ஆனால் அந்த மாளிகையின் உள்ளே நிசப்தமும் இருளும் குடிகொண்டிருந்தன.
வந்தியத்தேவனை அழைத்துக் கொண்டு வந்த பெண், லதா மண்டபத்தை அணுகியதும் அவனைப் பார்த்துச் சமிக்ஞையினால் அங்கேயே நிற்கும்படி சொன்னாள். அவனும் அப்படியே நின்றான். அவ்விதம் நின்றபோது தான் அந்த இடத்தில் நிறைந்திருந்த மலர்களின் நறுமணத்தை அவன் உணர்ந்தான். அப்பப்பா! என்ன வாசம்! என்ன வாசம்! மூக்கில் நெடிபோல ஏறித் தலையைக் கிறுகிறுக்க அடிக்கிறதே!
அந்தப் பெண் லதா மண்டபத்துக்குள் நுழைந்ததும், அவளுடைய குரலும் இன்னொரு இனிய பெண் குரலும் கேட்டன. “வரச் சொல் உடனே! கேட்பானேன்? நான் தான் இத்தனை நேரமாய்க் காத்திருக்கிறேன் என்று தெரியுமா?” என்ற சொற்கள் அவனுக்கு மயக்கத்தை உண்டாக்கின. அந்தக் குரல் பழுவூர் இளைய ராணியின் குரல்தான்! சந்தேகமில்லை! அடுத்த கணம் அவள் முன்னால் போய் நிற்கப் போகிறோம். அந்த நிலைமையை எவ்விதம் சமாளிக்கப் போகிறோம்? எதிர்பார்த்த மந்திரவாதிக்குப் பதிலாகப் பல்லக்கில் வந்து மோதிய மனிதன் வந்து நிற்பதைக் கண்டு அவள் என்ன நினைப்பாள். ஆச்சரியப்படுவாளா? கோபம் கொள்வாளா? ஒரு வேளை மகிழ்ச்சி அடைவாளா?… அல்லது எந்தவித உணர்ச்சியையும் வெளியில் காட்டாமல் நடந்து கொள்வாயா?
அவனை அழைத்து வந்த மங்கை லதா மண்டபத்து வாசலில் நின்றபடி சமிக்ஞையால் அழைத்தாள்
வந்தியத்தேவன் அவள் நின்ற இடத்தை அடைந்து மண்டபத்தின் உட்புறம் நோக்கினான். ஒரு நொடிப் பொழுதில் அங்கே தோன்றிய காட்சி அவன் கண் வழியாக மனத்தில் பதிந்தது. தங்க விளக்கு ஸ்தம்பத்தில் ஒளிர்ந்த தீபச்சுடர் பொன் ஒளியைப் பரப்பியது. ஏதோ ஓர் அபூர்வமான வாசனைத் தைலத்தை அந்த விளக்கில் விட்டிருக்க வேண்டும். ஆதலின் தீபச் சுடரின் புகை கமகமவென்று மணம் வீசிற்று. பல வர்ண நறுமண மலர்களைப் பரப்பிய சப்ரகூட மஞ்சத்தில் ஒரு பெண் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு வீற்றிருந்தாள். அவள் பழுவூர் இளைய ராணிதான். பகலில் பல்லக்கில் பார்த்தபோது அவள் அழகியாகத் தோன்றினாள். இரவில் தங்கக் குத்துவிளக்கின் வெளிச்சத்தில் அழகென்னும் தெய்வமே உருவெடுத்தது போலக் காணப்பட்டாள். மலரின் மணமும் விளக்கின் புகை மணமும் பழுவூர் இளைய ராணியின் மோகன உருவமும் சேர்ந்து வந்தியத்தேவனைப் போதை கொள்ளச் செய்தன.
வந்தியத்தேவா! ஜாக்கிரதை! ஒரே ஒரு தடவை நீ மதுபானம் செய்தாய்! உன் அறிவு கலங்குவதை அறிந்தாய்! பிறகு மதுவைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தாய்! இப்போது அதை ஞாபகப்படுத்திக் கொள்! மதுவின் போதையைக் காட்டிலும் சக்தி வாய்ந்த இந்த மயக்கத்தில் உன் அறிவைப் பறி கொடுத்துவிடாதே!
வந்தியத்தேவனைப் பார்த்த பழுவூர் இளையராணி நந்தினி, அவளுடைய பவழ இதழ்கள் சிறிது விரிந்து முத்துப் பற்களை வெளிக்காட்டும்படி வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்தாள். பேச முடியாத நிலையை அவள் அச்சமயம் அடைந்திருந்தது வந்தியத்தேவனுக்கு அனுகூலமாகப் போயிற்று.
இலேசாக அவன் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு, “அம்மணி! தங்கள் தாதிப் பெண்ணுக்குத் திடீரென்று சந்தேகம் வந்து விட்டது; – நான் மந்திரவாதியா இல்லையா என்று! அதை எப்படிக் கேட்டாள் என்று நினைக்கிறீர்கள்? ‘நீ நீதானா?’ என்று கேட்டாள்!” என்று மறுபடியும் சிரித்தான்.
நந்தினி புன்னகை புரிந்தாள். வந்தியத்தேவனுடைய கண் முன்னால் ஒரு மின்னல் மின்னியது! அது தேனைச் சொரிந்தது.
“இவளுக்கு அப்படித்தான் ஏதாவது சந்தேகம் திடீர் திடீர் என்று வந்துவிடும்! வாசுகி! ஏன் இங்கேயே மரம்போல் நிற்கிறாய்? உன் இடத்துக்குப் போ! யாராவது வரும் காலடிச் சத்தம் கேட்டால் கதவைப் படீரென்று சாத்து!” என்றாள் நந்தினி.
“இதோ, அம்மா!” என்று சொல்லிவிட்டு, வாசுகி லதா மண்டபத்தின் உள் வழியாகப் பிரகாச மாளிகைக்குச் சென்ற நடைபாதையில் நடந்து போய்ச் சற்றுத் தூரத்தில் மங்கலாகத் தெரிந்த வாசற்படியண்டை உட்கார்ந்து கொண்டாள்.
நந்தினி சிறிது குரலைத் தாழ்த்திக் கொண்டு, “உன்னை மந்திரவாதியில்லையென்றா இவள் சந்தேகித்தாள்? அசட்டுப் பெண்! மந்திரவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்களில் முக்கால்வாசிப் பேர் வெறும் பொய்யர்கள். நீதான் உண்மை மந்திரவாதி! என்ன மாய மந்திரம் செய்து இந்தச் சமயத்தில் இங்கே வந்தாய்?” என்று கேட்டாள்.
“அம்மணி! மாயம் மந்திரம் செய்து நான் இங்கு வரவில்லை. சுவர் மீது சாத்தியிருந்த ஏணி மேல் ஏறித்தான் வந்தேன்!” என்றான் வந்தியத்தேவன்.
“அதுதான் தெரிகிறதே! இந்தப் பெண்ணை என்ன மாய மந்திரம் செய்து ஏமாற்றினாய் என்று கேட்டேன்.”
“நிலா வெளிச்சத்தில் ஒரு புன்னகை புரிந்தேன். அவ்வளவு தான்! அதற்குச் சரிப்பட்டு வராவிட்டால் தாங்கள் கொடுத்த மந்திர மோதிரத்தைக் காட்ட எண்ணியிருந்தேன்.”
“அதைப் பத்திரமாய் வைத்திருக்கிறாய் அல்லவா? அந்த மோதிரம் இருக்கும்போது பட்டப் பகலில் பகிரங்கமாக இங்கே வந்திருக்கலாமே? எதற்காக இந்தக் குருட்டு வழியில் திருட்டுத்தனமாக வந்தாய்?”
“அம்மணி! தங்கள் மைத்துனர் இருக்கிறாரே, சின்னப் பழுவேட்டரையர், அவருடைய ஆட்கள் சுத்தத் திருடர்கள். முதலில் என்னுடைய உடைகளையும் உடைமைகளையும் திருடப் பார்த்தார்கள். பிறகு என்னைப் பின் தொடர்ந்து ஒருகணம் கூடப் பிரியாமல் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து பிரியப் பட்டபாடு பெரும் பாடாகப் போயிற்று. பிரிந்த பிறகு சந்து பொந்துகளில் புகுந்து தங்களுடைய மாளிகை மதில் சுவரைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் சுவர் மேல் வைத்த ஏணியைப் பார்த்ததும் தாங்கள் தான் இந்த ஏழையை நினைவு கூர்ந்து இந்த ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் என்று எண்ணி விட்டேன். அது தவறு என்று தெரிந்துகொண்டேன். மன்னிக்க வேண்டும்.”
“மன்னிப்பதற்கு அவசியம் ஒன்றும் ஏற்படவில்லையே!”
“அது எப்படி அம்மணி!”
“நீ நினைத்தது அவ்வளவாகத் தவறும் இல்லை. மந்திரவாதியை எதற்காக நான் தருவிக்க நினைத்தேன். தெரியுமா?”
“தெரியவில்லை, அம்மணி! எனக்கு மந்திரமும் தெரியாது; ஜோசியமும் தெரியாது!”
“உன்னை நேற்றுக் காலையில் பார்த்தது முதல் உன்னுடைய ஞாபகமாகவே இருந்தது. நீ ஏன் இன்னும் என்னைப் பார்க்க வரவில்லையென்று தெரிந்து கொள்ள விரும்பினேன். அதற்காகவே தான் நான் மந்திரவாதியைக் கூப்பிட்டனுப்பினேன்.”
“மிக்க ஆச்சரியமாயிருக்கிறது.”
“எது?”
“இப்போது நீங்கள் சொன்னதுதான். நேற்று உங்களைப் பார்த்தது முதல் எனக்கு உங்கள் ஞாபகமாகவேயிருந்தது!”
“பூர்வ ஜன்ம வாசனையில் உனக்கு நம்பிக்கை உண்டா?”
“அப்படியென்றால்?”
“பூர்வ ஜன்மத்தில் இரண்டு பேருக்கு நட்போ, உறவோ இருந்தால், இந்த ஜன்மத்திலும் அத்தகைய சொந்தம் ஏற்படும் என்கிறார்களே, அதைத்தான் சொல்லுகிறேன்.”
“நேற்றுவரையில் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. இன்று தான் அதில் நம்பிக்கை பிறந்தது.”
இவ்விதம் வந்தியத்தேவன் கூறிய போது வெளிப்படையாகப் பொய் சொன்னான் என்றாலும், மனத்திற்குள் குடந்தை சோதிடர் வீட்டில் பார்த்த பெண்ணை நினைத்துக் கொண்டுதான் சொன்னான். ஆனால் நந்தினிக்கு அதைப் பற்றிய விவரமே தெரிய இடமில்லையல்லவா? தன்னைப் பற்றிச் சொல்வதாகவே நினைத்துக் கொண்டாள்.
“ஆனால் அதற்காக நீ என்னைப் பார்க்க வரவில்லையே? ஏதோ ஆழ்வார்க்கடியார் நம்பி என்பவர் செய்தி சொல்லி அனுப்பியதாக…”
“ஆம், அம்மணி! அவர் சொல்லி அனுப்பிய செய்தியைத் தங்களிடம் சொல்வதற்காகவே முதலில் தங்களைப் பார்க்க விரும்பினேன். தங்களை ஒருமுறை பார்த்த பிறகு, பழைய காரணமெல்லாம் மறந்து போய்விட்டது.”
“ஆழ்வார்க்கடியாரை நீ எங்கே பார்த்தாய்? என்ன செய்தி சொல்லியனுப்பினார்?”
“வீர நாராயணபுரத்துக்கு அருகில் ஆழ்வார்க்கடியார் நம்பியைச் சந்தித்தேன். அவர் தம் கைத்தடியின் சக்தியைக் கொண்டு விஷ்ணுதான் பெரிய தெய்வம் என்று மெய்ப்பிக்க முயன்றார். அச்சமயத்தில் பெரிய பழுவேட்டரையரின் பரிவாரங்கள் வந்தன. அவரைத் தொடர்ந்து தங்கள் பல்லக்கும் வந்தது. அங்கே என்ன ரகளை என்று பார்ப்பதற்காகவோ என்னவோ, தங்களுடைய ஒரு பொற்கரம் பல்லக்கின் திரையை விலக்கிற்று. அப்போதுதான் தாங்கள் என்று தெரிந்துகொண்டு ஆழ்வார்க்கடியார் தங்களுக்கு ஒரு செய்தி அனுப்ப விரும்பினார். நானும் அன்றிரவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கியபடியால் என்னிடம் செய்தி சொல்லி அனுப்பினார். ஆனால் கடம்பூரில் தங்களை நான் பார்க்க முடியவில்லை. தஞ்சாவூர்க் கோட்டைக்கருகில் சாலையில்தான் சந்திக்க முடிந்தது. அதுவும் தங்கள் பல்லக்கு என் குதிரைமேல் மோதியதினால்தான்!”
இவ்விதம் வந்தியத்தேவன் சொல்லி வந்தபோது நந்தினி மேலே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால் அவளுடைய முகபாவத்திலிருந்து ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. கடைசியில் வந்தியத்தேவன் சொன்னதைக் கேட்டதும், அவனைத் திரும்பிப் பார்த்து ஒரு மோகனப் புன்னகை புரிந்தாள். “ஆமாம்; நான் ஏறும் பல்லக்கு வெகு பொல்லாத பல்லக்கு தான்!” என்றாள்.
35. மந்திரவாதி
தூரத்தில் பேரிகைகளின் பெரு முழக்கம் கேட்டது. எக்காளங்கள் சப்தித்தன. மனிதர்களின் குரல்கள் ஜயகோஷம் செய்தன. கோட்டைக் கதவுகள் திறந்து மூடிக்கொள்ளும் சத்தமும் யானைகள் குதிரைகளின் காலடிச் சத்தமும் எழுந்தன.
நந்தினியின் கவனத்தை அந்தச் சத்தங்கள் கவர்ந்தன என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான். காவல் புரிந்த தாதிப்பெண் திடுக்கிட்டு எழுந்து சற்று அருகில் வந்து, “அம்மா! எஜமான் வந்துவிட்டார் போலிருக்கிறது” என்றாள்.
நந்தினி, “எனக்குத் தெரியும்; நீ உன் இடத்துக்குப் போ!” என்றாள்.
பிறகு வந்தியத்தேவனைப் பார்த்து, “தனாதிகாரி கோட்டையில் பிரவேசிக்கிறார். சக்கரவர்த்தியின் க்ஷேமத்தை விசாரித்து விட்டு, கோட்டைத் தளபதியைப் பார்த்துப் பேசிவிட்டு இங்கே வருவார். வருவதற்குள் நீ போய்விட வேண்டும். ஆழ்வார்க்கடியார் கூறிய செய்தி என்ன?” என்று வினவினாள்.
“அம்மணி! அந்த வீர வைஷ்ணவ சிகாமணி தங்களை அவருடைய சகோதரி என்று சொல்லிக் கொண்டார். அது உண்மை தானா?” என்று வல்லவரையன் கேட்டான்.
“அதைப்பற்றி நீ ஏன் சந்தேகப்படுகிறாய்?”
“பச்சைக் கிளியும் கடுவன் குரங்கும் ஒரு தாயின் குழந்தைகள் என்றால் எளிதில் நம்ப முடியுமா?”
நந்தினி சிரித்துவிட்டு, “ஒருவிதத்தில் அவர் சொன்னது உண்மைதான். நாங்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்பத்தில் வளர்ந்தோம். உடன் பிறந்த தங்கையைப் போலவே என்னிடம் பிரியம் வைத்திருந்தார். பாவம்! அவருக்குப் பெரும் ஏமாற்றம் அளித்து விட்டேன்!”
“அப்படியானால் சரி! ஆழ்வார்க்கடியார் தங்களுக்குச் சொல்லி அனுப்பிய செய்தி கிருஷ்ணபகவான் தங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான். தாங்கள் கண்ணனை மணந்து கொள்ளும் கலியாணக் காட்சியைப் பார்க்க வீர வைஷ்ணவ பக்த கோடிகளும் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்!”
நந்தினி ஒரு பெருமூச்சு விட்டாள். “ஆகா! இன்னும் அவருக்கு அந்தச் சபலம் நீங்கவில்லை. போலிருக்கிறது! நீ அவரைப் பார்த்தால் எனக்காக இதைச் சொல்லிவிடு! என்னை அடியோடு மறந்துவிடச் சொல்லு! ஆண்டாளைப் போல் பரமபக்தையாகக் கொஞ்சமும் தகுதியற்றவள் நான் என்று சொல்லு!”
“நான் அதை ஒப்புக் கொள்ளவில்லை, அம்மா!”
“என்னத்தை ஒப்புக்கொள்ளவில்லை?”
“தாங்கள் ஆண்டாள் ஆக முடியாது என்பதைத்தான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆண்டாள் பக்தி செய்து, பாட்டுப் பாடி, அழுது கண்ணீர் விட்டு, பூமாலை தொடுத்துச் சூட்டி, – இப்படியெல்லாம் செய்து கண்ணனை மணந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் தங்களுக்கு அத்தகைய கஷ்டமே தேவையில்லை. தங்களைக் கிருஷ்ணபகவான் பார்த்துவிட வேண்டியதுதான். ருக்மணி, சத்திய பாமாவையும், ராதாவையும், கோபிகாஸ்திரீகளையும் உடனே கைவிட்டு அவர்கள் வீற்றிருந்த சிம்மாசனத்தில் தங்களை ஏற்றி உட்கார வைத்துவிடுவார்!”
“ஐயா! நீர் முகஸ்துதி செய்வதில் சமர்த்தராயிருக்கிறீர்! அது எனக்குப் பிடிப்பதேயில்லை.”
“அம்மணி! முகஸ்துதி என்றால் என்னவோ?”
“முகத்துக்கு நேரே ஒருவரைப் புகழ்வதுதான்.”
“அப்படியானால் சற்றே நீங்கள் திரும்பி முதுகைக் காட்டிக் கொண்டு உட்காருங்கள்…”
“எதற்காக?”
“முகத்தைப் பார்க்காமல் முதுகைப் பார்த்துக் கொண்டு புகழ்ச்சி கூறுவதற்காகத்தான். அதில் ஒன்றும் தவறு இல்லையல்லவா?”
“நீர் பேச்சில் மிக கெட்டிக்காரராயிருக்கிறீர்.”
“இப்போது தாங்கள் அல்லவா முகஸ்துதி செய்கிறீர்கள்?”
“நீரும் உமது முகத்தைத் திருப்பிக்கொண்டு, முதுகைக் காட்டுவதுதானே?”
“மகாராணி! போர்க்களத்திலாகட்டும், பெண்மணிகளிடமாகட்டும், நான் முதுகு காட்டுவது எப்போதும் கிடையாது. தாங்கள் தாராளமாய் என்னை முகஸ்துதி செய்யலாம்!”
இதைக் கேட்டு விட்டு நந்தினி ‘கலீர்’ என்று சிரித்தாள்!
“நீர் மந்திரவாதிதான்; சந்தேகமில்லை, நான் இம்மாதிரி வாய்விட்டுச் சிரித்து வெகு காலம் ஆயிற்று!” என்று சொன்னாள்.
“ஆனால், அம்மணி! தங்களைச் சிரிக்கப் பண்ணுவது வெகு அபாயம்! தடாகத்தில் தாமரை சிரித்து மகிழ்ந்தது; தேன் வண்டு மயங்கி விழுந்தது!” என்றான் வந்தியத்தேவன்.
“நீர் மந்திரவாதி மட்டுமல்ல; கவியும் போலிருக்கிறதே!”
“நான் முகஸ்துதிக்கும் அஞ்சமாட்டேன்; வசவுக்கும் கலங்க மாட்டேன்.”
“உம்மை யார் வைதது?”
“சற்று முன் என்னைக் ‘கவி’ என்றீர்களே?”
“அப்படியென்றால்?”
“நான் சிறுவனாயிருந்தபோது என்னைச் சிலர் ‘குரங்கு மூஞ்சி!’ என்று சொல்வதுண்டு. வெகு நாளைக்குப் பிறகு இன்றைக்குத்தான் தங்களுடைய பவளச் செவ்வாயினால் அதைக் கேட்டேன்.”
“உம்மையா குரங்கு மூஞ்சி என்றார்கள்? யார் அப்படிப் பட்ட புத்திசாலிகள்?”
“அவர்களில் யாரும் இப்போது உயிரோடில்லை.”
“உம்மை நான் அவ்வித சொல்லவில்லை. கவிபாடக் கூடியவர் போலிருக்கிறதே என்று சொன்னேன்.”
“கொஞ்சம் கவியும் பாடுவேன். ஆனால் பகைவர்களுக்கு முன்னால்தான் பாடுவேன். வில்லம்பினால் சாகாதவர்கள், சொல்லம்பினால் சாகட்டும் என்று!”
“ஐயா, கவிராஜ வீரசிங்கமே! உம்முடைய பெயர் என்னவென்று இன்னமும் சொல்லவில்லையே?”
“என் சொந்தப் பெயர் வந்தியத்தேவன்; பட்டப் பெயர் வல்லவரையன்.”
“அரச குலத்தினரா?”
“பழைய புகழ் பெற்ற வாணாதி ராஜர் குலத்தில் வந்தவன்!”
“இப்போது உங்கள் ராஜ்யம்?”
“மேலே ஆகாசம்! கீழே பூமி; இப்போது நான் சகல பூமண்டலத்துக்கும் ஏக சக்ராதிபதி!”
நந்தினி சிறிது நேரம் வல்லவரையனை ஏறத்தாழப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்படி ஒன்றும் நடக்காத காரியம் இல்லை. உம்முடைய பூர்வீக ராஜ்யத்தை நீர் திரும்பவும் பெறலாம்.”
“அது எப்படி சாத்தியம்? புலியின் வயிற்றுக்குள்ளே போனது திரும்பவும் வருமா? சோழ சாம்ராஜ்யத்தில் சேர்ந்த அரசு திரும்பக் கிடைக்குமா?”
“கிடைக்கும்படி செய்ய என்னால் முடியும்.”
“அம்மணி! வேண்டாம்! இராஜ்யம் ஆளும் ஆசை எனக்கு எப்போதும் கிடையாது. கொஞ்சம் இருந்ததும் இன்றைக்குச் சுந்தர சோழ சக்கரவர்த்தியைப் பார்த்த பிறகு அடியோடு போய்விட்டது. இம்மாதிரி பிறர் கையை எதிர்பார்த்துச் சக்கரவர்த்தியாயிருப்பதைக் காட்டிலும் மறு நாள் உணவு எங்கே கிடைக்கும் என்று தெரியாத சுதந்திர மனிதனாயிருப்பதே மேல்.”
“என்னுடைய கருத்தும் அதுதான்!” என்றாள் நந்தினி. பிறகு ஏதோ மறந்துபோன விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொண்டவள் போல், “சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் உம்மை எதற்காகத் தேடுகிறார்கள்?” என்று கேட்டாள்.
“தங்களுடைய தாதிப் பெண்ணைப் போல் அவருக்கும் என் பேரில் சந்தேகம் உண்டாகிவிட்டது.”
“என்ன சந்தேகம்?”
“பனை இலச்சினை உள்ள முத்திரை மோதிரம் என்னிடம் எப்படி வந்தது என்று?”
நந்தினியின் முகத்தில் பயத்தின் சாயல் சிறிது தென்பட்டது.
“மோதிரம் எங்கே?” என்று திடுக்கிட்ட குரலில் கேட்டாள்.
“இதோ இருக்கிறது, அம்மணி! இலேசில் அதைப் போக்க அடித்து விடுவேனா?” என்று கூறிக்கொண்டே மோதிரத்தை எடுத்துக் காட்டினான்.
“இது உம்மிடம் இருப்பது அவருக்கு எப்படித் தெரிந்தது?” என்று நந்தினி கேட்டாள்.
“சுந்தர சோழ சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் மனத்தில் நெடுநாளாக இருந்தது. அதற்கு இந்த முத்திரை மோதிரத்தை உபயோகப்படுத்திக் கொண்டேன். பார்த்து முடிந்த பிறகு இந்த மோதிரம் என்னிடம் எப்படி வந்தது என்று கோட்டைத் தளபதி கேட்டார்…”
“நீர் என்ன சொன்னீர்!” என்று நந்தினி வினாவிய குரலில் திகில் தொனித்தது.
“தங்கள் பெயரைச் சொல்லவில்லை, அம்மணி! பெரிய பழுவேட்டரையர் கொடுத்தார் என்று சொன்னேன்…”
நந்தினி பெருமூச்சு விட்டாள்.
அவள் முகத்திலும் குரலிலும் இருந்த திகில் நீங்கியது.
“நீர் சொன்னதை அவர் நம்பினாரா?” என்று கேட்டாள்.
“முழுதும் நம்பியதாகத் தெரியவில்லை. அதனால்தானே என்னைப் பின் தொடரும்படி ஆட்களை விட்டிருக்க வேண்டும்? தமையனார் திரும்பி வந்ததும் என்னை அவர் முன்னால் நிறுத்தி உண்மையை அறிய எண்ணியிருக்கலாம்!” என்றான் வந்தியத்தேவன்.
நந்தினி புன்னகை புரிந்து, “பெரிய பழுவேட்டரையரிடம் நீர் பயப்படவேண்டாம். அவர் உம்மைக் கடித்துத் தின்றுவிடாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள்.
“அம்மணி! தனாதிகாரியின் பேரில் தங்களுடைய செல்வாக்கு எவ்வளவு என்பது உலகம் அறிந்த செய்தி. ஆனால் எனக்கு வெளியில் அவசர காரியம் இருக்கிறது. ஆகையினால் தான் தப்பிச் செல்லத் தங்கள் உதவியைக் கோருகிறேன்.”
“அப்படி என்ன அவசர வேலை இருக்கிறது?”
“எத்தனையோ இருக்கிறது. உதாரணமாக ஆழ்வார்க்கடியாரைப் பார்த்து தங்கள் மறுமொழியைச் சொல்ல வேண்டும். அவருக்கு என்ன சொல்லட்டும்?”
“அவருக்கு ‘நந்தினி என்று ஒரு சகோதரி இருந்தாள்’ என்பதை அடியோடு மறந்துவிடும்படி சொல்லு!”
“சொல்லிவிடலாம்; ஆனால் நடக்கிற காரியமில்லை”
“எது?”
“தங்களை மறப்பதுதான். இரண்டு தடவை தற்செயலாகப் பார்த்த என்னாலேயே தங்களை மறக்கமுடியாது போலிருக்கிறதே! வாழ்நாளெல்லாம் தங்களோடு இருந்தவரால் எப்படி மறக்கமுடியும்?”
நந்தியின் முகத்தில் வெற்றிப் பெருமிதத்தின் சாயல் பரிணமித்தது. அவளுடைய வேல்விழிகள் வந்தியத்தேவனுடைய நெஞ்சை ஊடுருவின போல் நோக்கின.
“சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு நீர் ஏன் அவ்வளவு ஆவல் கொண்டிருந்தீர்?” என்று கேட்டாள்.
“உலகப் பிரசித்தி பெற்ற அந்தச் சுந்தர புருஷரைப் பார்க்க நான் விரும்பியதில் வியப்பு என்ன? உலகத்தில் வீர மன்னர்கள் தங்கள் வீரமும் பௌருஷமும் பெருக வேண்டும் என்றும், இராஜ்யமும் கீர்த்தியும் விஸ்தரிக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். அவ்விதமே பிரஜைகளைப் பிரார்த்தனை செய்யும்படியும் சொல்வார்கள். ஆனால் நம்முடைய சக்கரவர்த்தியைப் பற்றிப் புத்த பிக்ஷுக்களின் மடங்களில் என்ன பிரார்த்தனை செய்கிறார்கள்?
“……………..சுந்தரச்
சோழர் வண்மையும் ‘வனப்பும்’
திண்மையும் உலகிற் சிறந்து வாழ்கெனவே”
என்று பிரார்த்தனை செலுத்துகிறார்கள். இத்தகைய கலியுக மன்மதனைப் பார்க்கவேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசையாயிருந்தது.”
“ஆமாம்; சக்கரவர்த்திக்குத் தம்முடைய அழகைப் பற்றி ரொம்பப் பெருமைதான். அவருடைய செல்வக் குமாரிக்கு அதைவிட அதிக கர்வம்…”
“குமாரியா? யாரைச் சொல்லுகிறீர்கள்?”
“பழையாறையிலே இருக்கிறாளே, ஒரு அகம்பாவம் பிடித்த கர்வி, அந்த இளையபிராட்டி குந்தவை தேவியைத்தான் சொல்லுகிறேன்.”
வந்தியத்தேவா! நீ அதிர்ஷ்டக்காரன். நீ தேடிக் கொண்டிருந்த உபாயம் இதோ உன் முன்னால் தானே வந்து நிற்கிறது! அதை நன்கு உபயோகப்படுத்திக் கொள்! – இவ்வாறு வல்லவரையன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
இத்தனை நேரமும் ஒய்யாரமாகப் படுக்கையில் சாய்ந்து படுத்திருந்த நந்தினி திடீரென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
“ஐயா! நான் ஒன்று சொல்கிறேன். அதை ஒப்புக்கொள்வீரா?” என்று கேட்டாள்.
“சொல்லுங்கள், அம்மணி!”
“நீரும் நானும் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளலாம். நீர் எனக்கு உதவி செய்யவேண்டியது; நான் உமக்கு உதவி செய்ய வேண்டியது; என்ன சொல்கிறீர்!”
“அம்மணி! தாங்கள் சோழ மகாராஜ்யத்தில் சர்வ சக்தி வாய்ந்த தனாதிகாரியின் ராணி. நினைத்ததை நினைத்தபடி சாதிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவர். நானோ ஒருவிதச் செல்வாக்கும் இல்லாதவன். தங்களுக்கு நான் என்ன விதத்தில் உதவி செய்யமுடியும்?” என்றான்.
அவன் உள்ளத்திலிருந்து பேசுகிறானா, உதட்டிலிருந்து பேசுகிறானா என்று தெரிந்துகொள்ள விரும்பிய நந்தினி தன் கூரிய விழிகளை அவன் மீது செலுத்தினாள்.
வந்தியத்தேவன் அதற்குச் சிறிதும் கலங்காமல் நின்றான்.
“எனக்கு அந்தரங்கமான பணி ஆள் ஒருவர் தேவையாயிருக்கிறது. இந்த அரண்மனையில் உமக்கு வேலை வாங்கிக் கொடுத்தால், ஒப்புக்கொள்வீரா?” என்று கேட்டாள்.
“இதே மாதிரி சேவையை இன்னொரு மாதரசிக்குச் செய்வதாக ஏற்கனவே ஒப்புக்கொண்டு விட்டேன். அவள் வேண்டாமென்று நிராகரித்தால், தங்களிடம் வருகிறேன்.”
“அது யார் அவள், என்னோடு போட்டிக்கு வருகிறவள்?”
“சற்று முன் மிகப் பிரியத்தோடு பேசினீர்களே, அந்த இளையபிராட்டி குந்தவை தேவிதான்.”
“பொய்! பொய்! அப்படி ஒருநாளும் இருக்கமுடியாது! என்னை வேடிக்கை செய்யப் பார்க்கிறீர்…”
“மகாராணி! இந்த ஓலையை ஏற்கனவே பலர் திருடிப் பார்த்துவிட்டார்கள். ஆகையால் தாங்களும் இதைப் பார்ப்பதினால் மோசம் ஒன்றும் வந்துவிடாது!” என்று சொல்லிக் கொண்டே வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலர் குந்தவைக்குக் கொடுத்த ஓலையை எடுத்து நீட்டினான்.
நந்தினி ஓலையை விளக்கினடியில் பிடித்துக்கொண்டு படித்தாள். படித்து முடித்தபோது அவளுடைய கண்களிலிருந்து கிளம்பிய மின்னல் ஜுவாலை நாக சர்ப்பத்தின் வாயிலிருந்து வெளிவந்து மறையும் அதன் பிளவுபட்ட நாவை வந்தியத்தேவனுக்கு நினைவூட்டியது. அவனையறியாமல் அவன் உடம்பு நடுங்கியது.
நந்தினி கம்பீர பாவத்துடன் வந்தியத்தேவனைப் பார்த்து, “ஐயா! நீர் இந்தக் கோட்டையிலிருந்து உயிரோடு தப்பிச் செல்ல எண்ணுகிறீர் அல்லவா?” என்று கேட்டாள்.
“ஆம், அம்மா! அதற்குத்தான் தங்கள் உதவியை நாடி வந்தேன்.”
“ஒரு நிபந்தனையின் பேரில்தான் உம்மைத் தப்பித்துவிட நான் உதவி செய்யலாகும்.”
“நிபந்தனையைச் சொல்லுங்கள்!”
“இந்த ஓலைக்குக் குந்தவை என்ன மறு ஓலை கொடுக்கிறாளோ, அதை மறுபடியும், என்னிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும். சம்மதமா?”
“மிக அபாயமான நிபந்தனை போடுகிறீர்கள்!”
“அபாயத்துக்கு அஞ்சாதவர் என்று சற்று முன்னால் பெருமை அடித்துக் கொண்டீரே?”
“அபாயத்துக்குத் துணிவது என்றால் அதற்குத் தகுந்த பரிசு கிட்ட வேண்டும் அல்லவா?…”
“பரிசா? பரிசா வேண்டும்? நீர் கனவிலும் அடையக் கருதாத பரிசு உமக்குக் கிடைக்கும். சோழ சாம்ராஜ்யத்தில் இன்று சர்வ சக்தி வாய்ந்தவராய் விளங்கும் பெரிய பழுவேட்டரையர் எந்தப் பரிசுக்காக வருஷக்கணக்காகத் தவம் கிடக்கிறாரோ அத்தகைய பரிசு உமக்குக் கிடைக்கும்!” என்று கூறி நந்தினி வந்தியத்தேவன் பேரில் மறுபடியும் மோகனாஸ்திரத்தைத் தூவினாள்.
பாவம்! வல்லவரையனுடைய தலை சுழன்றது. நெஞ்சே! தைரியத்தை கடைப்பிடி! அறிவை இழந்துவிடாதே! – என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அச்சமயம் அவனுக்குத் துணை செய்ய வந்ததைப் போல் அருகிலுள்ள தோட்டத்திலிருந்து ஆந்தையின் கடூரமான குரல் கேட்டது.
ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை கேட்டது.
வந்தியத்தேவனுடைய உடம்பு சிலிர்த்தது.
நந்தினி தோட்டத்தில் ஆந்தைக் குரல் வந்த இடத்தை நோக்கி “நிஜ மந்திரவாதியே வந்துவிட்டான்!” என்றாள்.
பிறகு வந்தியத்தேவனைப் பார்த்து “அவன் எனக்கு இனித் தேவையில்லை. ஆனாலும் இரண்டு வார்த்தை அவனிடம் சொல்லி அனுப்புகிறேன். ஒரு வேளை, உம்மைத் தப்பித்து விடுவதற்கு அவன் உபயோகமாயிருக்கலாம். சற்று நேரம் நீர் அதோ அந்தப் பக்கம் போய் இருட்டில் மறைந்து நில்லும்!” என்று முன்னம் அவளுடைய தாதிப் பெண் போன திசைக்கு நேர் எதிர்த் திசையைக் காட்டினாள்.
-கல்கி