Skip to content
Home » பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 41-45 அத்தியாயங்கள்

பொன்னியின் செல்வன் | முதல் பாகம் | புது வெள்ளம் | 41-45 அத்தியாயங்கள்

41. நிலவறை


     இருண்ட சுரங்கப் பாதையில் வந்தியத்தேவன் காலை ஊன்றி வைத்து, விழுந்து விடாமல் நடந்தான். படிகள் கொஞ்ச தூரம் கீழே இறங்கின; பிறகு சமநிலமாயிருந்தது. மறுபடியும் படிகள்; மீண்டும் சமதரை. இரண்டு கைகளையும் எட்டி விரித்துப் பார்த்தான். சுவர் தட்டுப்படவில்லை. ஆகவே, அந்தச் சுரங்க வழி விசாலமானதாகவே இருக்க வேண்டும். மறுபடி சற்றுத் தூரம் போனதும் படிகள் மேலே ஏறின. வளைந்து செல்வதாகவும் தோன்றியது. அப்பப்பா! இத்தகைய கும்மிருட்டில் தட்டுத் தடுமாறி இன்னும் எத்தனை தூரம் நடக்க வேண்டுமோ தெரியவில்லையே!

     ஆகா! இது என்ன! இருள் சிறிது குறைந்து வருகிறதே! மிக மிக மங்கலான ஒளி தோன்றுகிறதே! இந்த மங்கிய ஒளி எப்படி எங்கிருந்து வருகிறது? மேலே கூரையில் எங்கிருந்தாவது வரும் நிலவின் ஒளியா? அல்லது சுவர்களில் உள்ள பலகணி வழியாக வரும் ஒளியா? மறைவான இடத்தில் வைத்திருக்கும் விளக்கிலிருந்து பரவும் ஒளியா?… இல்லை, இல்லை! இது என்ன அற்புதம்? நம் கண் முன்னால் தெரியும் இந்தக் காட்சி மெய்யான காட்சிதானா? அல்லது நமது மூளை கலங்கியதால் ஏற்பட்ட தோற்றமா?

     அது ஒரு விசாலமான மண்டபம், கல்லைக் குடைந்து எடுத்து அமைத்த நிலவறை மண்டபம். அதனாலேதான் தலையை இடித்து விடும் போல் அவ்வளவு தாழ்வாகச் சமமட்டமான மேல் தளம் அமைந்திருக்கிறது. அந்த நிலவறையில் குடிகொண்டுள்ள மங்கிய நிலவொளி வெளியிலிருந்து வருவது அல்ல; கூரை வழியாகவோ பலகணி வழியாகவோ வருவதும் அல்ல. அங்கங்கே அந்த நிலவறையில் கும்பல் கும்பலாகவும் சில இடங்களில் பரவலாகவும் வருகிறது. ஆ! அப்படி நிலவொளி வீசும் அப்பொருள்கள் எத்தகைய பொருள்கள்! ஒரு மூலையில் மணி மகுடங்கள்; முத்தும் மணியும் வைரமும் பதித்த மகுடங்கள்; இன்னொரு பக்கத்தில் ஹாரங்கள்; முத்து வடங்கள்; நவரத்தின மாலைகள், அதோ அந்த வாயகன்ற அண்டாவில் என்ன? கடவுளே! அவ்வளவும் புன்னை மொட்டுக்களைப் போன்ற வெண் முத்துக்கள்! குண்டு குண்டான கெட்டி முத்துக்கள்! அதோ அந்தப் பானையில் பளபளவென்று மஞ்சள் வெயில் வீசும் பொற்காசுகள். இதோ இங்கே குவிந்து கிடப்பவை தங்கக் கட்டிகள். தஞ்சை அரண்மனையின் நிலவறைப் பொக்கிஷம் இதுதான் போலும்! தனாதிகாரி பழுவேட்டரையரின் மாளிகையையொட்டி இந்த இருள் மாளிகையும் அதில் இந்தப் பொக்கிஷ நிலவறையும் இருப்பதில் வியப்பில்லையல்லவா? அம்மம்மா! இந்த நிலவறைக்குள் நாம் வந்து சேர்ந்தோமே? பாக்கிய லக்ஷ்மியும் அதிர்ஷ்ட தேவதையும் சேர்ந்தல்லவா நம்மை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்? எப்படிப்பட்ட அதிசயமான, அபூர்வமான இரகசியத்தை, நம்முடைய முயற்சி ஒன்றும் இல்லாமலே நாம் தெரிந்து கொண்டோ ம்! இதை எப்படிப் பயன்படுத்துவது? பயன்படுத்துவது அப்புறம் இருக்கட்டும்; இங்கிருந்து போவதற்கே மனம் வராது போலிருக்கிறதே! இங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கலாம் போலத் தோன்றுகிறதே! இங்கேயே இருந்தால் பசி, தாகம் தெரியாது! உறக்கம் அருகிலும் அணுகாது! நூறு வருஷ காலமாகச் சோழ நாட்டு வீர சைன்யங்கள் அடைந்த வெற்றிகளின் பலன்கள் எல்லாம் இங்கே இருக்கின்றன. நவநிதி என்று சொல்வார்களே; அவ்வளவும் இங்கே இருக்கிறது! குபேரனுடைய பொக்கிஷத்தையும் தோற்கடிக்கும் செல்வக் களஞ்சியம் இங்கே இருக்கிறது இதை விட்டு எதற்காகப் போக வேண்டும்!

     வந்தியத்தேவன் அந்த நிலவறையைச் சுற்றிச் சுற்றி வந்தான். ஒரு மூலையில் கிடந்த மணிமகுடங்களைத் தொட்டுப் பார்த்தான். இன்னொரு பக்கத்தில் கிடந்த ரத்தின ஹாரங்களைக் கையில் எடுத்துப் பார்த்தான். அவற்றைப் போட்டுவிட்டு இன்னொரு பக்கம் சென்று செப்புப் பானையில் நிறைந்திருந்த முத்துக்களில் கைகளை விட்டு அளைந்தான். வேறொரு பானையில் கையை விட்டுப் பொற்காசுகளை அள்ளிச் சொரிந்தான். ஒரு மூலையில் தரையில் பளபளவென்று ஏதோ பரவலாக ஜொலிப்பதைக் கண்டு அங்கே சென்றான். முதலில் என்னவென்று தெரியவில்லை பிறகு, குனிந்து உற்றுப் பார்த்தான். ஐயோ! ஆண்டவனே! அது ஓர் எலும்புக்கூடு! ஒரு காலத்தில் சதையும் இரத்தமும் தோலும் உரோமமும் மூக்கும் முகமும் கண்ணும் காதுமாக இருந்த மனித உடலின் எலும்புக்கூடு!

     ஆ! இந்த எலும்புக்கூடு அசைகிறதே! உயிர்பெற்று எழுகிறதே! பொற்காசுகளைப் போலவே சத்தமிடுகிறதே! நமக்கு ஏதோ சேதி சொல்ல எழுந்திருப்பதாய்க் காண்கிறதே!… வல்லவரையனுடைய உடம்பிலிருந்து ஒவ்வொரு ரோமமும் குத்திட்டு நின்றது. தனக்குப் பைத்தியந்தான் பிடித்து விட்டது என்று நினைத்தான். சீச்சீ! எலும்புக்கூடு எழுந்திருக்கவில்லை! அதற்குள்ளேயிருந்து ஒரு பெருச்சாளி ஓடி வருகிறது! நம் கால் மீது விழுந்து ஓடுகிறது!… ஆம்; இப்போது பார்த்தால் எலும்புக்கூடு தரையிலேதான் விழுந்து கிடக்கிறது! ஆனால் அது நமக்கு ஒரு சேதி சொல்லுகிறது என்பது உண்மை. “ஓடிப் போ! இங்கே தாமதியாதே! நானும் உன்னைப் போல் உடல் படைத்த மனிதனாயிருந்தேன். இங்கு வந்து அகப்பட்டுக் கொண்டேன்; இங்கேயே மாண்டு மடிந்தேன்! இப்போது எலும்புக்கூடாகக் கிடக்கிறேன்! ஓடிப் போ!” என்று அது நம்மை எச்சரிக்கிறது. இங்கிருந்து, உடனே தப்பிச் சென்றோமோ, பிழைத்தோம். இல்லாவிட்டால் அதோகதி தான்; அந்த மனிதனுக்கு ஏற்பட்ட கதிதான்.

     வந்தியத்தேவன் அந்த நிலவறையிலிருந்து வெளியேற எண்ணினான். ஆனால் வெளியேறும் வழிதான் தெரியவில்லை. வந்த வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலவறையின் ஓரமாக எங்கே போனாலும் இருள் என்னும் பூதம் வாயைப் பிளந்து கொண்டிருந்தது. கீழே பார்த்தால் அதலபாதாளப் படுகுழியாகத் தோன்றியது. ஏறி வந்த படிக்கட்டு எங்கேயோ ஓரிடத்தில் இருக்கத்தான் வேண்டும். அதைக் கண்டுபிடிக்க வந்தியத்தேவன் மேலும் முயன்றான் தேடித் தேடி அலைந்தான். அப்படி அலையும் போது ஓரிடத்தில் சுவர் ஓரமாக ஒரு குப்பல் தங்கக் காசுகள் கிடப்பதைக் கண்டான். அந்தக் குப்பலின் மீது ஏதோ வலை பின்னியது போலிருந்தது. உற்றுப் பார்த்தபோது, அக்குவியலின் பேரில் சிலந்தி வலை கட்டியிருப்பதாகத் தெரிந்தது. சிலந்தியின் வலை அவனது சிந்தனையைத் தூண்டியது.

     பெரியோர்கள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைகளைச் சிலந்தி வலைக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள். வலையை விரித்துக் கொண்டு சிலந்தி காத்திருக்கிறது. எங்கிருந்தோ பறந்து வந்து ஈ அதில் அகப்பட்டுக் கொள்கிறது. பிறகு சிறிது சிறிதாகச் சிலந்தி ஈயை இழுத்து விழுங்குகிறது. மூன்று வித ஆசைகளும் அப்படித்தான். மனிதன் வழி தவறிச் சென்று அந்த ஆசை வலைகளில் விழுந்து அகப்பட்டுக் கொள்கிறான்; அப்புறம் மீளுவதில்லை! மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளின் இயல்பையும் அன்று ஒரே நாளில் நாம் அனுபவித்தாகி விட்டது. நந்தினி என்னும் பழுவூர் இளையராணி தன்னுடைய வலையில் நம்மை அகப்படுத்தப் பார்த்தாள். பழைய வாணர்குல ராஜ்யத்தை அடையலாம் என்னும் மண்ணாசையும் காட்டினாள். கடைசியாக, இங்கே இந்தப் பயங்கரமான பொன்னாசைப் பூதம் நம்மை அடியோடு விழுங்கப் பார்க்கிறது. முதல் இரண்டிலிருந்தும் தப்பினோம், இந்த மூன்றாவது அபாயத்திலிருந்தும் தப்ப வேண்டும். நமக்கு எதற்காக இந்த வம்பெல்லாம்? இராஜ்யம் எதற்கு? செல்வம் எதற்கு? பெண்களின் கூட்டுறவுதான் எதற்காக? வானத்தைக் கூரையாகப் பெற்ற அகண்டமான பூமியே நமது அரண்மனை! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பண்டைத் தமிழ் நாட்டுப் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களே! எல்லா ஊரும் நம்முடைய ஊர்தான். எல்லா மனிதர்களும் நம்முடைய உறவினர்கள் தான். ஊர் ஊராகப் போக வேண்டியது; புதுவெள்ளம் பொங்கி வரும் நதிகளையும், புதிய இலைகள் தளிர்த்து விளங்கும் மரங்களையும், பல வர்ணப் பட்சிகளையும், மகான்களையும், மயில்களையும் மலைகளையும் மலைகளின் சிகரங்களையும், வானத்தையும், மேகத்தையும், கடலையும் கடல் அலைகளையும் பார்த்துக் களிக்க வேண்டியது; பசிக்கு உணவு கிடைக்கின்ற இடத்திலே உண்ண வேண்டியது; உறக்கம் வந்த இடத்தில் உறங்க வேண்டியது! ஆகா! இதுவல்லவா இன்ப வாழ்க்கை! எளிதில் கிடைக்கக்கூடிய இத்தகைய ஆனந்த வாழ்க்கையை விட்டு விட்டு, தொல்லைகளும் சூழ்ச்சிகளும் ஆசைகளும் அபாயங்களும் நிறைந்த வாழ்க்கையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? எப்படியாவது இந்த நிலவறையை விட்டு இப்போது வெளியேறி விட்டால் போதும்; பிறகு இந்த இருள் மாளிகையையும் தஞ்சாவூர்க் கோட்டையையும் விட்டு வெளியேறி விடவேண்டும். பின்னர், இத்தகைய தொல்லைகளில் என்றைக்கும் அகப்பட்டுக் கொள்ளவே கூடாது…

     ஆகா! கதவு திறந்து மூடும் ஓசை!… மறுபடியும் காலடி ஓசை!… இன்றைய இரவின் அதிசயங்களுக்கு முடிவே கிடையாது போலும்! அதிசயங்களுக்கும் அளவில்லை; பயங்கரங்களுக்கும் எல்லையில்லை! இம்முறை வெகு தூரத்திலிருந்து அந்தக் காலடிச் சத்தங்கள் கேட்டன. இரண்டு பக்கங்களிலிருந்தும் வருவதாகத் தோன்றியது. வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டான். பொக்கிஷ நிலவறையில் நாலுபுறமும் சூழ்ந்திருந்த இருளைக் கிழித்துக் கொண்டு பார்ப்பவனைப் போல் உற்றுப் பார்த்தான். சிறிது நேரத்துக்கெல்லாம் அவன் எதிர்பார்த்தது போலவே அபூர்வமான காட்சியைக் கண்டான்.

     கூத்து மேடையிலிருந்து மிகத் தொலைவிலே உட்கார்ந்திருப்பவனுக்கு மேடையில் தோன்றும் காட்சிகள் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது வந்தியத்தேவன் அப்போது கண்ட காட்சி. அவன் அச்சமயம் இருந்த இடத்துக்கு உயரமான ஓர் இடத்தில், தொலை தூரம் என்று தோன்றிய தூரத்தில் அது நடந்தது. கூத்து மேடையின் ஒரு பக்கத்திலிருந்து ஒரு தீவர்த்தி வந்தது. இன்னொருபுறத்துப் பக்கம் படுதாவை நீக்கிக் கொண்டு மற்றொரு தீவர்த்தி வந்தது. தீவர்த்திகள் இரண்டும் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தன. ஒரு தீவர்த்தி வெளிச்சத்தில் இரு நெடிய கரிய உருவங்கள் தெரிந்தன. இன்னொரு தீவர்த்தியின் ஒளியில் மற்றும் இரு உருவங்கள் காணப்பட்டன. அவற்றில் ஒற்று நெடிய கம்பீரமான உருவம்; மற்றொன்று சிறிது குட்டையான மெல்லிய வடிவம். இருதரப்பு உருவங்களும் ஒன்றையொன்று நெருங்கி வந்து கொண்டிருந்தன. வந்தியத்தேவன் மேலும் கண் விழிகள் பிதுங்கும்படி உற்றுப் பார்த்து அந்த உருவங்கள் யாருடையவை என்பதை ஒருவாறு தெரிந்து கொண்டான். இடது பக்கத்திலிருந்து வந்த இரு உருவங்கள் மதுராந்தகத்தேவரை அழைத்துச் சென்ற கந்தமாறனும் காவலனும்; வலது புறத்திலிருந்து வந்த உருவங்கள் பெரிய பழுவேட்டரையரும் அவருடைய இளையராணி நந்தினி தேவியும்.

     இந்த இரு கோஷ்டியாரும் சந்திக்கும் போது என்ன நடக்கும்? ஏதாவது விபரீதமாக நடக்குமா? அல்லது ஒருவருக்கொருவர் வழி விட்டு விட்டுச் சாவதானமாகப் போய் விடுவார்களா?… வந்தியத்தேவன் அந்தப் பரபரப்பில் மூச்சு விடுவதைக் கூட நிறுத்திக் கொண்டு அத்தனை கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இரு கோஷ்டியாரும் சந்தித்தார்கள் அவர்கள் தடுமாறித் தயங்கி நின்றதிலிருந்து இரு சாராருக்கும் அச்சந்திப்பு வியப்பையும் திகைப்பையும் அளித்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் விபரீதம் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. பழுவேட்டரையர் கந்தமாறனைப் பார்த்து ஏதோ கேட்டார். அதற்குக் கந்தமாறன் ஏதோ விடை சொன்னான். கேள்வியும் விடையும் என்னவென்பது வந்தியத்தேவனின் காதில் விழவில்லை. பிறகு, பழுவேட்டரையர் கையினால் சமிக்ஞை செய்து சுரங்க வழியின் படிக்கட்டைச் சுட்டிக்காட்டினார். கந்தமாறன் அவரைப் பணிவுடன் வணங்கினான். வணங்கி விட்டுப் படிக்கட்டில் இறங்கினான். அவனுக்குப் பின் கையில் தீவர்த்தியுடன் வந்த காவலனைப் பார்த்துப் பழுவேட்டரையர் ஏதோ சமிக்ஞை செய்தார். அவனும் மறு மொழி சொல்லாமல் ஒரு கையினால் வாயைப் பொத்திக் கொண்டு வணங்கினான். பிறகு கந்தமாறனைத் தொடர்ந்து படிக்கட்டில் இறங்கினான். பழுவேட்டரையரும் இளையராணியும் இடதுபக்கம் நோக்கிச் சென்றார்கள்.

     நிழலாட்டத்தையும் பொம்மலாட்டத்தையும் ஒத்த மேற்கூறிய நிகழ்ச்சிகள் எல்லாம் சில கண நேரத்தில் நடந்து விட்டன. இவ்வளவும் சுரங்க வழியில் இறங்கும் படிக்கட்டின் அருகில் நிகழ்ந்தன என்பதை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான். ஆகா! நாம் வழியில் எங்கும் நில்லாமல் இந்த நிலவறையில் வந்து சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று! நாம் மட்டும் அந்த இரு கோஷ்டிக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டிருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும்? ஏதோ அந்த மட்டுக்கும் பிழைத்தோம். தப்பித்துக் கொள்ள வழி என்ன? கந்தமாறன் மதுராந்தகத்தேவரை அழைத்து வந்த சுரங்க வழியில் திரும்பிச் செல்கிறான் என்பதில் ஐயமில்லை. அந்த வழியிலிருந்து நாம் சிறிது விலகி இந்தப் பொக்கிஷ நிலவறைக்கு வந்திருக்க வேண்டும். இப்போது கந்தமாறன் போகும் வழியைத் தொடர்ந்து சென்றால், எப்படியும் வெளியேறும் வாசலைக் கண்டு கொள்ளலாம். பிறகு ஏதேனும் உபாயம் செய்து தப்பிக்கலாம். அப்படி அவசியம் நேர்ந்தால், கந்தமாறனிடமே உதவி கேட்கலாம். இல்லாவிட்டால் அவனையும் அந்தக் காவலனையும் ஒரு கை பார்த்து விட்டுத் தப்பிச் செல்லலாம் எனவே, கந்தமாறனை இப்போது பின் தொடரலாம்.

     முதலில், தீவர்த்தி வெளிச்சம் நிலவறைக்கு அருகில் வருவது போலிருந்தது. வந்தியத்தேவன் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றான். பிறகு அவ்வெளிச்சம் அகன்று செல்வது போலிருந்தது. அதற்குள் வந்தியத்தேவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அந்த நிலவறைக்குள் பிரவேசித்த படிக்கட்டு எது என்பதை அறிந்து கொண்டான். அதன் வழியாகக் கீழே இறங்கி மீண்டும் மேலேறினான். தீவர்த்தி வெளிச்சத்தை விட்டு விடாமல், அதிகமாகவும் நெருங்காமல், காலடி ஓசை கேட்காதபடி மெதுவாக அடிவைத்து நடந்து சென்றான். வளைந்தும் நெளிந்தும் சுற்றியும் சுழன்றும் ஏறியும் இறங்கியும் சென்ற அந்தச் சுரங்கப் பாதையில் நாமாக இருளில் நடந்து வழி கண்டுபிடித்துப் போவது எவ்வளவு அசாத்தியமான காரியம்! வாழ்க கந்தமாறன்! அவன் இப்போது தன்னை அறியாமல் நமக்குச் செய்யும் உதவிக்கு எப்போது என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்!…

     அதற்கு ஒரு சந்தர்ப்பம் அவ்வளவு சீக்கிரத்திலேயே கிடைக்கும் என்று வந்தியத்தேவன் எண்ணவேயில்லை!… சுரங்கப் பாதையின் முடிவு வந்து விட்டது. எதிரில் ஒரு பெருஞ்சுவர் தெரிந்தது. அதில் ஒரு வாசலோ, கதவோ இருக்கும் என்று யாரும் கருத முடியாது. ஆயினும் இருக்கத்தான் வேண்டும்! சுரங்கப் பாதைக்கு ஒரு இரகசிய வாசல் இருந்தே தீர வேண்டுமல்லவா?

     காவலன் தன் வலது கையிலிருந்த தீவர்த்தியை இடது கைக்கு மாற்றிக் கொள்கிறான். வலது கையினால் சுவரில் ஓரிடத்தில் கைவைத்து ஏதோ செய்கிறான். திருகாணியைத் திருகுவது போல் திருகுகிறான். சுவரில் மெல்லிய கோடு போல் ஒரு பிளவு தோன்றுகிறது. அப்பிளவு வரவரப் பெரிதாகி வருகிறது. ஓர் ஆள் நுழையும்படியான பிளவாகிறது. காவலன் ஒரு கையினால் அதைச் சுட்டிக்காட்டுகிறான். கந்தமாறன் அவனிடம் ஏதோ சொல்லிவிட்டுச் சுவரில் தோன்றிய பிளவில் ஒரு காலை வைக்கிறான். ஒரு கால் இன்னும் சுரங்கப் பாதையிலேதான் இருக்கிறது. இப்பொழுது அவனுடைய முதுகுப் பிரதேசம் முழுதும் புலனாகிறது!

     ஆகா! இது என்ன? இந்தக் காவலான் என்ன செய்கிறான்? அரையில் செருகியிருந்த கூரிய வளைந்த சிறு கத்தியை எடுக்கிறானே? கடவுளே! கந்தமாறனுடைய முதுகில் ஓங்கிக் குத்தி விட்டானே! படு பாதகன்! ஒருவனுக்குப் பின்னாலிருந்து முதுகில் குத்தும் சண்டாளன்!… வந்தியத்தேவன் தான் ஒதுங்கி நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து வெளி வந்தான். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான்! அந்தச் சத்தத்தைக் கேட்டுக் காவலன் திரும்பினான்! தீவர்த்தியின் ஒளி வந்தியத்தேவனின் கோபாவேச முகத்தில் விழுந்தது.

42. நட்புக்கு அழகா?


     வந்தியத்தேவனுடைய முதல் எண்ணம், எப்படியாவது கந்தமாறனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அவனைக் காப்பாற்றும் பிரயத்தனம் முதலில் செய்தால், அவனுடைய கதிதான் நமக்கும் ஏற்படும். ஆகையால் இந்தக் கொடூரக் காவலனை முதலில் சரிப்படுத்த வேண்டும். எனவே, பாய்ந்து சென்றவன் காவலனுடைய கழுத்தில் தன்னுடைய ஒரு கையைச் சுற்றி வளைத்துக் கொண்டான். இன்னொரு கையால் தீவர்த்தியைத் தட்டிவிட்டான். தீவர்த்தி தரையில் விழுந்தது. அதன் ஒளிப் பிழம்பு சுருங்கிப் புகை அதிகமாயிற்று. காவலனுடைய கழுத்தை ஒரு இறுக்கு இறுக்கி வந்தியத்தேவன் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அவனைக் கீழே தள்ளினான். காவலனுடைய தலை சுரங்கப் பாதையின் சுவரில் மோதியது அவன் கீழே விழுந்தான். வந்தியத்தேவன் தீவர்த்தியை எடுத்துக் கொண்டு அவன் அருகில் சென்று பார்த்தான். செத்தவனைப் போல் அவன் கிடந்தான். ஆயினும் முன் ஜாக்கிரதையுடன் அவன் அங்கவஸ்திரத்தை எடுத்து இரண்டு கையையும் சேர்த்து இறுக்கிக் கட்டினான். இவ்வளவையும் சில வினாடி நேரத்தில் செய்து விட்டுக் கந்தமாறனிடம் ஓடினான். அவன் முதுகில் குத்திய கத்தியுடன் பாதி உடம்பு சுரங்கப் பாதையிலும் பாதி உடல் வெளியிலுமாகக் கிடப்பதைக் கண்டான். அவனுடைய வேலும் பக்கத்தில் விழுந்து கிடந்தது. வந்தியத்தேவன் வெளியில் சென்று கந்தமாறனைப் பிடித்து இழுத்து வெளியேற்றினான்; வேலையும் எடுத்துக் கொண்டான். உடனே கதவு தானாகவே மூடிக் கொண்டது. சுவர் அந்தப் பெரும் இரகசியத்தை மறைத்துக் கொண்டு இருள் வடிவமாக ஓங்கி நின்றது. ஓங்கி அடித்த காற்றிலிருந்து கோட்டைக்கு வெளியே வந்தாகிவிட்டது என்பதை வந்தியத்தேவன் அறிந்து கொண்டான்.

     அடர்ந்த மரங்களும் கோட்டைச் சுவர் கொத்தளங்களும் சந்திரனை மறைத்துக் கொண்டிருந்தபடியால் நிலா வெளிச்சம் மிக மிக மங்கலாகத் தெரிந்தது. கந்தமாறனைத் தூக்கி வந்தியத்தேவன் தோளில் போட்டுக் கொண்டான். ஒரு கையில் கந்தமாறனின் வேலையும் எடுத்துக் கொண்டான். ஓர் அடி எடுத்து வைத்தான் சடசடவென்று மண் சரிந்து செங்குத்தாகக் கீழே விழும் உணர்ச்சி ஏற்பட்டது. சட்டென்று வேலை ஊன்றிக் கொண்டு பெரு முயற்சி செய்து நின்றான். கீழே பார்த்தான், மரங்களும் கோட்டைச் சுவரும் அளித்த நிழலில் நீர்ப் பிரவாகம் தெரிந்தது. அதிவேகமாகப் பிரவாகம் சுழல்கள் சுழிகளுடன் சென்று கொண்டிருந்ததும் ஒருவாறு தெரிந்தது. நல்ல வேளை! கரணம் தப்பினால் மரணம் என்ற கதி நேரிட்டிருக்கலாம் கடவுள் காப்பாற்றினார்! அந்தக் கொடும் பாதகக் காவலன் – ஆனால் அவனை நொந்து என்ன பயன்? எஜமான் கட்டளையைத் தானே அவன் நிறைவேற்றியிருக்க வேண்டும்! வாசற்படியில் முதுகில் குத்தி அப்படியே இந்தப் பள்ளப் புனல் வெள்ளத்தில் தள்ளிவிட உத்தேசித்திருக்க வேண்டும். நம்முடைய கால் இன்னும் சிறிது சறுக்கி விட்டிருந்தால் இரண்டு பேரும் இந்த ஆற்று மடுவில் விழுந்திருக்க நேர்ந்திருக்கும். நாம் ஒருவேளை தப்பிப் பிழைத்தாலும் கந்தமாறன் கதி அதோகதிதான்!

     தஞ்சைக் கோட்டைச் சுவரை ஓரிடத்தில் வடவாறு நெருங்கிச் செல்வதாக வந்தியத்தேவன் அறிந்திருந்தான். இது வடவாறாகத்தான் இருக்க வேண்டும். வடவாற்றில் அதிக வெள்ளம் அப்போது இல்லையென்றாலும் இந்தக் கோட்டை ஓரத்தில் ஆழமான மடுவாக இருக்கலாம் யார் கண்டது? வேலை தண்ணீரில் விட்டு ஆழம் பார்த்தான் வந்தியத்தேவன். வேல் முழுவதும் தண்ணீருக்குள் சென்று முழுகியும் தரை தட்டுப்படவில்லை! ஆகா! என்ன கொடூரமான பாதகர்கள் இவர்கள்!… அதைப் பற்றி யோசிக்க இது சமயமில்லை. நாமும் தப்பிக் கந்தமாறனையும் தப்புவிக்கும் வழியைத் தேட வேண்டும். வெள்ளப் பிரவாகத்தின் ஓரமாகவே கால்கள் சறுக்கி விடாமல் கெட்டியாக அழுத்திப் பாதங்களை வைத்து வந்தியத்தேவன் நடந்தான். தோளில் கந்தமாறனுடனும் கையில் அவனுடைய வேலுடனும் நடந்தான். கந்தமாறன் இரண்டு மூன்று தடவை முக்கி முனகியது அவனுடைய நண்பனுக்குத் தைரியத்தையும் மன உறுதியையும் அளித்தது. கொஞ்ச தூரம் இப்படியே சென்ற பிறகு கோட்டைச் சுவர் விலகி அப்பால் சென்றது. கரையோரத்தில் காடு தென்பட்டது. கீழே முட்கள் நிறையக் கிடந்தபடியால் கால் அடி வைப்பதும் கஷ்டமாயிருந்தது. ஆகா! இது என்ன? ஒரு மரம் ஆற்றில் விழுந்து கிடக்கிறதே! நல்ல உயரமான மரமாயிருந்திருக்க வேண்டும். வெள்ளம் அதனுடைய வேரைப் பறித்துவிட்டது போலும்! பாதி ஆறு வரையில் விழுந்து கிடக்கிறது. அதில் ஏறித் தட்டுத் தடுமாறி நடந்தான். வெள்ளத்தின் வேகத்தில் மரம் அசைந்து கொண்டிருந்தது. மரத்தின் கிளைகளும் இலைகளும் தண்ணீரில் அலைப்புண்டு தவித்தன. காற்றோ அசாத்தியமாக அடித்துக் கொண்டிருந்தது. மரத்தின் நுனிக்கு வந்ததும் வேலை விட்டு ஆழம் பார்த்தான், நல்லவேளை! முருகன் காப்பாற்றினார். இங்கே அவ்வளவு பள்ளமில்லை! வந்தியத்தேவன் மரத்திலிருந்து நதியில் இறங்கிக் கடந்து சென்றான். அங்கங்கே பள்ளம் மேடுகளைச் சமாளித்துக் கொண்டு சென்றான். வெள்ளத்தின் வேகத்தையும் காற்றின் தீவிரத்தையும் தன் மன உறுதியினால் எதிர்த்துப் போராடிக் கொண்டு சென்றான். அவன் உடம்பு வெடவெடவென்று சில சமயம் நடுங்கியது.

     தோளில் கிடந்த கந்தமாறன் சில சமயம் நழுவி விழுந்துவிடப் பார்த்தான். இந்த அபாயங்களையெல்லாம் தப்பி வந்தியத்தேவன் அக்கரையை அடைந்தான். கொஞ்ச தூரம் இடுப்பு வரை நனைந்த ஈரத் துணியுடன் ஆஜானுபாகுவான கந்தமாறனுடைய கனமான உடலைத் தூக்கிக் கொண்டு தள்ளாடிச் சென்ற பிறகு மரநிழலில் சிறிது இடைவெளி ஏற்பட்ட ஓரிடத்தில் கந்தமாறனைக் கீழே மெதுவாக வைத்தான். முதலில் சிறிது சிரமபரிகாரம் செய்து கொள்ள விரும்பினான். அத்துடன் கந்தமாறனுடைய உடம்பில் இன்னும் உயிர் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்பினான். உயிரற்ற உடலைச் சுமந்து சென்று என்ன உபயோகம்? அதைக் காட்டிலும் அக்காவலன் உத்தேசித்தது போல் வெள்ளத்திலேயே விட்டுவிட்டுச் செல்லலாம். இல்லை! இல்லை! உயிர் இருக்கிறது; பெருமூச்சு வருகிறது. நாடி வேகமாக அடித்துக் கொள்ளுகிறது; நெஞ்சு விம்முகிறது. இப்போது என்ன செய்யலாம்? முதுகிலிருந்து கத்தியை எடுக்கலாமா? எடுத்தால் இரத்தம் பீறிட்டு அடிக்கும்; அதனால் உயிர் போனாலும் போய்விடும். காயத்துக்கு உடனே சிகிச்சை செய்து கட்டுக் கட்ட வேண்டும். ஒருவனாகச் செய்யக் கூடிய காரியமல்லவே? வேறு யாரை உதவிக்குத் தேடுவது?…. சேந்தன் அமுதனுடைய நினைவு வந்தது. அவனுடைய தோட்டமும் வீடும் வடவாற்றின் கரையிலேதான் இருக்கிறது. இங்கே சமீபத்திலேயே இருக்கக் கூடும். எப்படியாவது சேந்தன் அமுதனுடைய வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போய்ச் சேர்த்தால் கந்தமாறன் பிழைக்க வழியுண்டு. ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்.

     கந்தமாறனை மறுபடியும் தூக்க முயன்ற போது அவனுடைய கண்கள் திறந்திருப்பதைக் கண்டு வந்தியத்தேவன் வியப்பும் மகிழ்ச்சியும் கொண்டான்.

     “கந்தமாறா! நான் யார் தெரிகிறதா?” என்று கேட்டான்.

     “தெரிகிறது, நன்றாய்த் தெரிகிறது வல்லவரையவன் நீ! உன்னைப் போல் அருமையான நண்பனைத் தெரியாமலிருக்குமா? மறக்கத்தான் முடியுமா? பின்னால் நின்று முதுகிலே குத்தும் ஆப்தசினேகிதன் அல்லவா நீ?” என்றான் கந்தமாறன்.

     வல்லவரையனை இந்தக் கடைசி வார்த்தைகள் சவுக்கினால் அடிப்பது போலிருந்தது. “ஐயோ! நானா உன்னைப் பின்னாலிருந்து குத்தினேன்…?” என்று ஆரம்பித்தவன் ஏதோ ஞாபகம் வந்து சட்டென்று நிறுத்தினான்.

     “நீ குத்தவில்லை… உன் கத்தி என் முதுகைத் தடவிக் கொடுத்தது… அடபாவி! உனக்காகவல்லவா இந்தச் சுரங்க வழியில் அவசரமாகக் கிளம்பினேன். பழுவேட்டரையருடைய ஆட்கள் உன்னைப் பிடிப்பதற்குள் நான் பிடிப்பதற்காக விரைந்தேன். உன்னை யாரும் எந்தவித உபத்திரவமும் செய்யாமல் தடுப்பதற்காக ஓடி வந்தேன். உன்னைத் தேடிப் பிடித்து வந்து சின்னப் பழுவேட்டரையரின் கோட்டைக் காவல் படையில் சேர்த்து விடுவதாகச் சபதம் கூறிவிட்டு வந்தேன். இப்படி உனக்கு நன்மை செய்ய நினைத்த நண்பனுக்கு நீ எவ்வாறு துரோகம் செய்துவிட்டாய்? இதுதானா நட்புக்கு அழகு? நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டுமென்று எத்தனை தடவை கையடித்துச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறோம்! அவ்வளவையும் காற்றில் பறக்கும்படி விட்டு விட்டாயே! இந்தச் சோழ நாட்டு இராஜாங்கத்தில் நடக்கப் போகும் ஒரு பெரிய மாறுதலைப் பற்றியும் உனக்குச் சொல்லி எச்சரிக்க எண்ணியிருந்தேனே! அடாடா! இனி இந்த உலகத்தில் யாரைத்தான் நம்புவது?” என்று சொல்லிக் கந்தமாறன் மறுபடியும் கண்களை மூடினான். இவ்வளவு அதிகமாகவும் ஆத்திரமாகவும் பேசியது அவனை மீண்டும் மூர்ச்சையடையும்படி செய்திருக்க வேண்டும்.

     “நம்புவதற்கு மனிதர்களா இல்லை? பழுவேட்டரையர்களை நம்புவது?” என்று வந்தியத்தேவன் முணுமுணுத்தான். ஆயினும் அவனுடைய கண்களில் கண்ணீர் துளித்தது. தான் சொல்ல எண்ணியதைச் சொல்லாமல் விட்டதே நல்லது என்று எண்ணிக் கொண்டான். கந்தமாறனுடைய சடலத்தை மறுபடி தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடக்கலுற்றான்.

     இரவில் மலரும் பூக்களின் நறுமணம் குபீரென்று வந்தது… சேந்தன் அமுதனுடைய வீடு சமீபத்தில்தான் இருக்க வேண்டும் என்று அவன் எண்ணியது வீண் போகவில்லை. விரைவில் தோட்டம் வந்தது ஆனால் அந்தத் தோட்டம் முதல் நாள் பார்த்ததற்கும் இன்று பார்ப்பதற்கு எவ்வளவு வித்தியாசம்? அனுமார் அழித்த அசோகவனத்தையும் வானரங்கள் அழித்த மதுவனத்தையும் அத்தோட்டம் அப்போது ஒத்திருந்தது. ஆகா! தன்னைத் தேடிக் கொண்டு பழுவேட்டரையரின் ஆட்கள் இங்கே வந்திருந்தார்கள் போலிருக்கிறது. வந்தவர்கள் இத்தகைய அக்கிரமங்களைச் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்! அடடா! சேந்தன் அமுதனும் அவனுடைய அருமை அன்னையும் எவ்வளவு அரும்பாடுபட்டு இந்த நந்தவனத்தை வளர்த்திருக்க வேண்டும்? அவ்வளவும் பாழாய்ப் போய்விட்டதே!

     நந்தவனம் அழிந்ததில் அனுதாபம் சட்டென்று விலகியது. தன்னுடைய அபாயகரமான நிலைமை நினைவு வந்தது. ஒற்றர்களும் கோட்டைக் காவல் வீரர்களும் இங்கே சமீபத்தில் எங்கேயாவது காத்திருந்தால் என்ன செய்வது?… அவர்களை ஒரு கை பார்த்துச் சமாளிக்க வேண்டியதுதான். நல்லவேளையாக, அதோ நமது குதிரை, கட்டிய மரத்திலேயே இன்னும் இருக்கிறது!… ஒருவேளை தன்னைப் பிடிப்பதற்காகவே அதைவிட்டு வைத்திருகிறார்களோ? எப்படியிருந்தாலும் என்ன செய்ய முடியும்? இவனை இக்குடிசையில் உள்ள நல்ல மனிதர்களிடம் ஒப்புவித்து விட்டுக் குதிரையில் ஏறித் தட்டிவிட வேண்டியதுதான். இங்கே புறப்படும் குதிரை பழையாறை போய்த்தான் நிற்க வேண்டும்.

     மெள்ள மெள்ள அடிமேல் அடி வைத்து நடந்து குடிசை வாசலை அடைந்தான் வாசல் திண்ணையில் படுத்திருந்த சேந்தன் அமுதனைத் தட்டி எழுப்பினான். தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்த அமுதனுடைய வாயைப் பொத்தினான். பிறகு மெல்லிய குரலில் சொன்னான்; “தம்பி! நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும். பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இவன் என் அருமை சிநேகிதன். நான் வரும் வழியில் யாரோ இவனை முதுகிலே குத்திப் போட்டிருந்தார்கள். எடுத்து வந்தேன்” என்றான்.

     “படுபாவிகள்! முதுகிலே குத்தியிருக்கிறார்களே! எப்பேர்பட்ட சுத்த வீரர்கள்!” என்றான் அமுதன்.

     பிறகு, “இவனை என்னால் முடிந்த வரை பார்த்துக் கொள்கிறேன். இன்று மாலையிலிருந்து கும்பல் கும்பலாகப் பல வீரர்கள் வந்து உன்னைத் தேடிவிட்டுப் போனார்கள். அவர்களால் நந்தவனமே அழிந்து போய் விட்டது. போனாலும் போகட்டும் நீ தப்பிப் பிழைத்தால் சரி. நல்லவேளையாக உன் குதிரையை அவர்கள் விட்டுப் போய் விட்டார்கள் குதிரையில் ஏறி உடனே புறப்படு!”

     “அப்படித்தான் என் உத்தேசமும் ஆனால் இவன் உயிரைக் காப்பாற்ற ஏதேனும் செய்ய வேண்டும்!”

     “அதைப் பற்றி உனக்குக் கவலை வேண்டாம். என் தாயார் இம்மாதிரி விஷயங்களில் கைதேர்ந்தவள். காயங்களுக்குச் சிகிச்சை செய்ய அவளுக்கு நன்றாய்த் தெரியும்” என்று சொல்லி, சேந்தன் அமுதன் குடிசையின் கதவை இலேசாக இரண்டு தட்டுத் தட்டினான் உடனே கதவு திறந்தது. சேந்தன் அமுதனுடைய அன்னை வாசற்படியில் நின்றாள்.

     கந்தமாறனை இருவருமாகத் தூக்கிக் கொண்டு போய் உள்ளே கூடத்தில் போட்டார்கள். கைவிளக்கின் வெளிச்சத்தில் சேந்தன் அமுதன் தன் அன்னையுடன் சமிக்ஞையினால் பேசினான். அதை அவள் நன்கு அறிந்து கொண்டதாகத் தோன்றியது. கந்தமாறனை உற்றுப் பார்த்தாள்; முதுகில் செருகியிருந்த கத்தியைப் பார்த்து, பிறகு உள்ளே போய்ச் சில பச்சிலைத் தழைகளையும் பழந்துணியையும் எடுத்துக் கொண்டு வந்தாள் இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள்.

     கந்தமாறனைச் சேந்தன் அமுதன் இறுக்கிப் பிடித்துக் கொண்டான். முதுகில் இத்தனை நேரமாய் நீட்டிக் கொண்டிருந்த கத்தியை வல்லவரையன் பலங்கொண்டு இழுத்து வெளியேற்றினான். இரத்தம் குபீரென்று வெளியிட்டுப் பாய்ந்தது. உணர்ச்சியற்ற நிலையில் கந்தமாறன் ஓ’வென்று கத்தினான். வந்தியத்தேவன் அவனது வாயைப் பொத்தினான். காயத்தைச் சேந்தன் அமுதன் அமுக்கிப் பிடித்துக் கொண்டான். அமுதனுடைய அன்னை பச்சிலைத் தழைகளைக் காயத்தில் வைத்துக் கட்டினாள். கந்தமாறன் மறுபடியும் முக்கி முனகினான். தூரத்தில் திடுதிடுவென்று மனிதர்கள் ஓடிவரும் சத்தம் கேட்டது. “போ! போ! சீக்கிரம்!” என்றான் அமுதன்.

     இரத்தக் கறை படிந்த கத்தியையும் வேலையும் கையில் எடுத்துக் கொண்டான் வந்தியத்தேவன். புறப்பட்டவன் தயங்கி நின்றான். “தம்பி! நீ என்னை நம்புகிறாயா?” என்று கேட்டான். “நான் கடவுளை நம்புகிறேன். உன்னிடம் பிரியம் வைத்திருக்கிறேன். எதற்காகக் கேட்டாய்?” “எனக்கு ஒரு உதவி செய்ய வேணும், இந்தப் பக்கத்தில் எனக்கு அவ்வளவாக வழி தெரியாது. அவசரமாகப் பழையாறைக்குப் போக வேண்டும். குந்தவைப் பிராட்டிக்கு முக்கியமான செய்தி ஒன்று கொண்டு போக வேண்டும். கொஞ்ச தூரம் வழிகாட்டுவதற்கு வருகிறாயா?” உடனே சேந்தன் அமுதன் தன் அன்னையிடம் இன்னும் ஏதோ ஜாடையாக சொன்னான். இதிலெல்லாம் அவள் அதிக வியப்பு அடைந்ததாகத் தோன்றவில்லை. போய் வரும்படி சமிக்ஞையினால் தெரிவித்தாள். காயம் பட்டவனைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் ஜாடை காட்டினாள். சேந்தனும் தேவனும் புறப்பட்டுச் சென்றார்கள். முதலில் தேவனும் பின்னால் சேந்தனும் குதிரை மேல் ஏறிக் கொண்டார்கள். குதிரையின் சத்தம் கேளாதபடி மெதுவாகவே செலுத்தினான் வந்தியத்தேவன்; சற்றுத் தூரம் போன பிறகு தட்டி விட்டான் குதிரை பாய்ச்சலில் பிய்த்துக் கொண்டு சென்றது.

     குதிரை புறப்பட்ட அதே நேரத்தில் ஐந்தாறு வீரர்கள் குடிசைக்கு வந்து சேர்ந்தார்கள். கதவைத் தடதடவென்று தட்டினார்கள். அமுதனின் தாய் கதவைத் திறந்தாள் வாசற்படியில் நின்றாள்.

     “இங்கே என்னமோ கூச்சல் கேட்டதே? அது என்ன? என்று இரைந்தான் ஒரு வீரன்.

     அமுதனின் அன்னை ஏதோ உளறிக் குளறினாள். “இந்தச் செவிட்டு ஊமையிடம் பேசி என்ன பயன்? உள்ளே போய்ப் பார்க்கலாம்!” என்றான் ஒருவன்.

     “இவள் வழிமறித்துக் கொண்டு நிற்கிறாளே?”

     “அந்தப் பூக்குடலைப் பையன் எங்கே போனான்?”

     “ஊமையைத் தள்ளிவிட்டு உள்ளே நுழையுங்களடா!”

     சேந்தன் அமுதனுடைய தாயார் மேலும் ஊமைப் பாஷையில் ஏதேதோ கத்தினாள். தன்னைத் தள்ள முயன்ற வீரனை அவள் தள்ளிவிட்டுக் கதவைத் தாளிட பார்த்தாள். நாலைந்து பேராகக் கதவைப் பிடித்துத் தள்ளிச் சாத்த முடியாதபடி செய்தார்கள். அமுதனுடைய தாய் இன்னும் உரத்த கூச்சல் புலம்பலுடன் திடீரென்று கதவை விட்டாள். இரண்டு மூன்று பேர் கீழே உருட்டியடித்துக் கொண்டு விழுந்தார்கள். மற்றவர்கள் அவர்களை மிதித்துக் கொண்டு உள்ளே புகுந்தார்கள்.

     “ஆள் இங்கே இருக்கிறான்!” என்று ஒருவன் கத்தினான்.

     “அகப்பட்டுக் கொண்டானா?” என்றான் இன்னொருவன்.

     “ஓடப் போகிறான்! பிடித்துக் கட்டிப் போடுங்கள்!” என்றான் இன்னொருவன்.

     ஊமை மேலும் புலம்பினாள்.

     “ஒரே இரத்த விளாறாக இருக்கிறதே!” என்று ஒருவன் கூவினான்.

     ஊமை கைவிளக்கைத் தூக்கிப் பிடித்துக் கீழே கிடந்தவனைச் சுட்டிக் காட்டி, “பே!பே!பே” என்றாள்.

     “அடே! இவன் வேறு ஆள் போலத் தோன்றுகிறதே!”

     “பே! பே!”

     “நேற்று இங்கு வந்திருந்தவன் தானா இவன்?”

     “பே! பே!”

     “உன் மகன் எங்கே?”

     “பே! பே!”

     “ஊமைப் பிணமே! சற்றுச் சும்மா இரு. அடே இவனை நன்றாய்ப் பாருங்கள்! அடையாளம் யாருக்காவது தெரியுமா?”

     “அவன் இல்லை!”

     “அவன்தான்!”

     “இல்லவே இல்லை?”

     “பே! பே!”

     “எப்படியிருந்தாலும் இவன் வேற்று ஆள்! தூக்குங்கள் இவனை! கொண்டு போகலாம்!”

     “பே! பே! பே! பே!”

     “சனியனே! சும்மா இரு!”

     நாலுபேர் சேர்ந்து கந்தமாறனைத் தூக்கினார்கள்.

     “பே! பே! பே! பே!” என்று அமுதனுடைய அன்னை இடைவிடாமல் அலறினாள்.

     “அடே! குதிரைச் சத்தம் கேட்கிறதடா!”

     “பாதிப் பேர் இவனைத் தூக்குங்கள்! பாதிப் பேர் ஓடிப் போய்ப் பாருங்கள்!”

     “எல்லோரும் ஓடுங்கள்! இவன் எங்கும் போய்விட மாட்டான்.”

     தூக்கிய கந்தமாறனைக் கீழே போட்டுவிட்டு எல்லோரும் ஓடினார்கள்.

     “பேப்பே! பேப்பே! பேப்பே!” என்ற அமுதன் அன்னையின் ஓலம் அவர்களைத் தொடர்ந்து வந்தது.

43. பழையாறை


     வந்தியத்தேவன் வழியில் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, பல அபாயங்களுக்குத் தப்பிப் பழையாறை நகருக்கு வந்து சேர்வதற்கு முன்னால், நம்முடன் பழையாறைப் பகுதிக்கு விஜயம் செய்யும்படி நேயர்களை அழைக்கிறோம்.

     அரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா! வெறும் நகரமா இது? தமிழ்த்தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா விளங்குகிறது? பச்சை மரகதங்களும், சிவந்த ரத்தினங்களும், நீலக்கற்களும் பதித்த நெற்றிச் சுட்டியைப் போல அல்லவா திகழ்கிறது!

     நதிகளும் ஓடைகளும் தடாகங்களும் கழனிகளும் புது நீர் நிறைந்து ததும்புகின்றன. அவற்றில் பல வர்ண மலர்கள் பூத்துத் திகழ்கின்றன. தென்னை மரங்களும் புன்னை மரங்களும் குளிர்ச்சியான பசுமையைப் பரப்புகின்றன. இவ்வளவுக்கும் இடையிடையே விண்முட்டும் மணி மாடமாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளிவீசுகின்றன.

     அப்பப்பா! பழையாறை என்னும் இந்த ஒரு பெரும் நகரத்துக்குள்ளே எத்தனை சிறிய ஊர்கள்? நந்திபுர விண்ணகரம், திருச்சத்தி முற்றம், பட்டீச்சுரம், அரிச்சந்திரபுரம் முதலிய ஊர்களும் அந்த ஊர்களின் ஆலயங்களும் இந்தப் பழையாறை என்னும் சோழர் தலைநகரில் அடங்கியுள்ளன. பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த்தளி, மேற்றளி, தென்தளி என்னும் நாலு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு, பம்பைப்படை வீடு ஆகிய நாலு வீரபுரிகள் காணப்படுகின்றன. இவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா? விஜயாலய சோழருக்கு முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு ஒவ்வொரு அரசகுமாரனுக்கும் ஒவ்வொரு இளவரசிக்குமாகப் பழைய சோழ மாளிகையையொட்டிப் புதிய புதிய மாளிகைகள் எழுந்து நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப்பதற்கோ பதினாயிரம் கவிஞர்களின் கற்பனாசக்தி போதாது.

     இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த சேக்கிழார் பெருமான்,

     “தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
     பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை”
என்று வர்ணித்தார் என்றால், சுந்தர சோழரின் காலத்தில் இந்த நகர் எவ்வளவு கோலாகலமாயிருந்திருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

     எனினும், நாம் முதன் முதலில் இந்தப் பழம்பெரும் பதிக்குச் செல்லும் சமயத்தில் அதைப் பூரண கோலாகலத் தோற்றத்துடன் பார்த்து மகிழ முடியவில்லை.

     சுந்தர சோழ சக்கரவர்த்தி இந்நகரின் சோழ மாளிகையில் வீற்றிருந்து அரசு செலுத்திய காலத்தில் இங்கு வந்து பார்க்க நமக்குக் கொடுத்து வைத்திருக்கவில்லை. சக்கரவர்த்தி நோய்ப்பட்டுத் தஞ்சை மாநகர் சென்ற பிறகு வெளிநாடுகளிலிருந்து சிற்றரசர்களும் இராஜ தூதர்களும் மந்திரிப் பிரதானிகளும் சேனாதிபதிகளும் இங்கு வருவது நின்று போயிற்று. அவர்களுடன் வழக்கமாக வரும் பரிவாரங்களின் கூட்டமும் குறைந்து விட்டது. நாலு படை வீடுகளிலும் வசித்த போர் வீரர்களில் பாதிப் பேர் இப்போது ஈழ நாட்டுப் போர்க்களங்களில் தமிழர் வீரத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களில் ஒரு பகுதியார் வடதிசை எல்லையிலும் இன்னொரு பகுதியினர் மதுரையிலும் இருந்தார்கள். எனவே, படைவீட்டுப் பகுதிகளில் இப்போது பெரும்பாலும் வயோதிகர்களும் பெண்மணிகளும் சிறுவர் சிறுமிகளுமே காணப்பட்டார்கள்.

     மழவர்பாடியில் வாழ்ந்து வந்த வேளக்காரப் படையினர் தத்தம் குடும்பங்களோடு தஞ்சைக்குச் சென்று விட்டபடியால், நகரின் அப்பகுதியானது பூட்டப்பட்ட வீடுகளுடன் வெறிச்சென்று இருந்தது. இராஜாங்க காரியங்களை நடத்தி வந்த அமைச்சர்கள், சாமந்தகர்கள், அதிகாரிகள் அனைவரும் தத்தம் குடும்பத்தோடு தஞ்சைபுரிக்குச் சென்று விட்டார்கள். இப்படியெல்லாமிருந்த போதிலும் பழையாறை வீதிகளில் கூட்டத்துக்கும் கலகலப்புக்கும் குறைவில்லை. இப்போது அவ்வீதிகளில் பெரும்பாலும் ஆலய ஸ்தபதிகள், சிற்பக் கலைஞர்கள், சிவனடியார்கள், தேவார ஓதுவார்கள், அரண்மனை ஊழியர்கள், ஆலயப் பணியாளர்கள், கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவும் திருவிழாக் காட்சிகளைப் பார்க்கவும் வெளியூர்களிலிருந்து வரும் ஜனங்கள் ஆகியோர் அதிகமாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

     இன்றைக்கு ஏதோ திருவிழா போலக் காண்கிறது. வீதிகளில் அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்து ஆடவரும் பெண்டிரும் சிறுவர் சிறுமிகளும் உலாவி வருகின்றனர். தெருமுனைகளில் ஆங்காங்கு ஜனங்கள் கும்பல் கூடி நிற்கின்றனர். அக்கும்பல்களுக்கு மத்தியில் ஏதேதோ வேடம் புனைந்தவர்கள் நின்று ஆடிப் பாடுகிறார்களே! சற்றுக் கவனித்துப் பார்க்கலாம். ஆம்; இவர்கள் கிருஷ்ணனைப் போலவும் கோபாலர்களைப் போலவும் அல்லவா வேடம் புனைந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு கிருஷ்ணர் ஒரு மலையைத் தூக்கிக் கொண்டு நிற்கிறாரே? அவரைத் தேவராஜனாகிய இந்திரன் வந்து வணங்குகிறானே? இன்னொரு கூட்டத்தின் நடுவில் கிருஷ்ணனை நாலு முகங்கள் உள்ள பிரம்மதேவர் வந்து தோத்திரித்து வணங்குகிறாரே! ஆகா! இப்போது தெரிகிறது இன்று ஸ்ரீ ஜயந்தி; கண்ணன் பிறந்த நாள். அந்த விழாவைத் தான் ஜனங்கள் இவ்வளவு குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கங்கே உறியடித் திருநாள் நடைபெறுகிறது மஞ்சள் நீரை வாரி இறைக்கிறார்கள்.

     நந்திபுர விண்ணகரத்துப் பெருமாள் கோவிலைச் சுற்றி இந்தத் திருவிழாக் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைப்பெறுகின்றன. இது என்ன?

     “கண்டேன் கண்டேன் கண்டேன்
     கண்ணுக்கினியன கண்டேன்!”
என்று பாடுவது யார்? தெரிந்த குரலாயிருக்கிறதே! இதோ நமது பழைய சிநேகிதர் ஆழ்வார்க்கடியார் நம்பி சாக்ஷாத்காரமாக நிற்கிறார்! நின்று பாடுகிறார். அவரைச் சுற்றிலும் ஒரு கும்பல் கூடுகிறது. சிலர் பக்தி சிரத்தையுடன் கேட்கிறார்கள். வேறு சிலர் எகத்தாளம் பண்ணத் தொடங்குகிறார்கள். ஆழ்வார்க்கடியாரின் கைத் தடியினால் யாருடைய தலைக்குச் சேதம் நேருமோ என்று நாம் அஞ்சுகிறோம்.

     விண்ணகரக் கோயிலின் வாசலில் ஒரு சலசலப்பு. வீதிப்புறத்தில் நிறுத்தியிருந்த ரதங்களும் பல்லக்குகளும் கோயில் வாசலுக்கு வருகின்றன. கோயிலுக்குள்ளேயிருந்து மாதரசிகள் சிலர் வருகிறார்கள். இப்பெண்மணிகள் பெரிய குலத்துப் பெண்டிராகவே இருக்க வேண்டும்.

     ஆம்; ஆம்! பழையாறை அரண்மனைகளில் வாழும் மகாராணிகளும் இளவரசிகளுந்தான் இவர்கள்.

     எல்லாருக்கும் முதலில் ‘பெரிய பிராட்டி’ என்று நாடு நகரமெல்லாம் போற்றும் செம்பியன் மாதேவி வருகிறார். இவர் மழவரையர் குலப் புதல்வி; சிவஞானச் செல்வரான கண்டராதித்தரின் பட்ட மகிஷி. வயது முதிர்ந்த விதவைக் கோலத்திலும் இவருடைய முகத்தில் எத்தகைய தேஜஸ் ஜொலிக்கிறது! அவருக்குப் பின்னால் அரிஞ்சய சோழரின் பத்தினியான வைதும்பராயர் குலப் புதல்வி ராணி கல்யாணி வருகிறார். ஆகா! இவருடைய அழகை என்னவென்று சொல்ல! இந்த முதிய பிராயத்திலும் இவர் முகத்தில் இப்படிக் களை வீசுகிறதே! யௌவனப் பிராயத்தில் எப்படி இருந்திருப்பாரோ? இவருடைய புதல்வராகிய சுந்தர சோழர் வனப்பு மிக்கவர் என்று பிரசித்தி பெற்றிருப்பதில் வியப்பு என்ன? இவரைத் தொடர்ந்து சுந்தர சோழரின் மற்றொரு பத்தினியான சேரமான் மகள் பராந்தகன் தேவி வருகிறார். இன்னும் பின்னால், வானுலகிலிருந்து நேரே இறங்கி வந்த தேவ கன்னிகையரையொத்தக் குந்தவைப் பிராட்டி, வானதி, இன்னும் நாம் அரிசிலாற்றங்கரையில் பார்த்த அரசகுலப் பெண்கள் வருகிறார்கள்.

     விஜயாலயன் காலத்திலிருந்து சோழ வம்சத்தினர் சிவனையும் துர்க்கையையும் குலதெய்வமாகக் கொண்டு வழிபடுகிறவர்கள். ஆனால் திருமாலிடமும் மற்ற சமயங்களிடமும் இவர்களுக்குத் துவேஷம் என்பது கிடையாது. இன்று கண்ணன் பிறந்த நாள் என்பதை முன்னிட்டுப் பெருமாள் கோவிலுக்கு வந்தார்கள் போலும்.

     பெரியபிராட்டி செம்பியன் மாதேவி பல்லக்கில் ஏறும் சமயத்தில் ஆழ்வார்க்கடியாருடைய பாடல் அவருடைய காதில் விழுந்தது. அதற்காகவென்றே ஆழ்வார்க்கடியார் உரத்த சத்தம் போட்டுப் பாடினார் போலும். செம்பியன் மாதேவி அவரைத் தம் அருகில் அழைத்து வரச் செய்தார்.

     ஆழ்வார்க்கடியார் அடக்க ஒடுக்கத்துடன் வந்து நின்றார்.

     “திருமலை! சில நாட்களாக உன்னைக் காணோமே? ஸ்தல யாத்திரை சென்றிருந்தாயோ?” என்று கேட்டார்.

     “ஆம், தாயே! ஸ்தல யாத்திரை சென்றிருந்தேன்; திருப்பதி, காஞ்சி, வீரநாராயணபுரம் முதலிய பல க்ஷேத்திரங்களைத் தரிசித்தேன். சென்ற இடங்களிலெல்லாம் பல விந்தைகளைக் கண்டும் கேட்டும் வந்தேன்!”

     “அரண்மனைக்கு நாளைக்கு வந்து, யாத்திரையில் கண்டு கேட்ட விந்தைகளைச் சொல்லு!”

     “இல்லை, அம்மா! இன்றிரவு மறுபடியும் நான் புறப்பட வேண்டும்.”

     “அப்படியானால் இன்று மாலையே வந்துவிட்டுப் போ!”

     “வருகிறேன் தாயே! தங்கள் சித்தம் என் பாக்கியம்!”

     பல்லக்குகள், ரதங்கள் எல்லாம் புறப்பட்டு அரண்மனைக்கு விரைந்து சென்றன. குந்தவைப்பிராட்டி, ஆழ்வார்க்கடியாரைச் சுட்டிக்காட்டி ஏதோ கூற, மற்ற அரசிளங்குமாரிகள் கலீர் என்று சிரித்தார்கள். சிரிப்புக்குக் காரணம் கண்டறிய ஆழ்வார்க்கடியார் அந்தப் பக்கத்தை நோக்கினார். குந்தவைப்பிராட்டியின் கண்கள் ஆழ்வார்க்கடியாருடன் ஏதோ சங்கேத பாஷையில் பேசின. ஆழ்வார்க்கடியார் அச்செய்தியை அறிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலைவணங்கினார்.

     சோழ மாளிகைகளிலே செம்பியன் மாதேவி வசித்த மாளிகை நடுநாயகமாக இருந்தது. அதன் சபா மண்டபத்தில் பொன்னால் செய்து நவரத்தினங்கள் இழைத்த சிம்மாசனத்தில் அந்தப் பெரு மூதாட்டி அமர்ந்திருந்தார். காரைக்காலம்மையார், திலகவதியார் முதலான பரம சிவ பக்தைகளின் வழித்தோன்றிய அப்பெண்மணி வெண் பட்டாடை உடுத்தி, விபூதியும், ருத்ராட்ச மாலையும் தரித்து, வேறு எவ்வித ஆபரணங்களும் பூணாமல், அளவற்ற செல்வங்களுக்கிடையில் – அஷ்ட ஐசுவரியங்களுக்கு மத்தியில், வைராக்கிய சீலையாக வாழ முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தாள். தலையில் மணிமகுடமும் வேறு ஆபரணங்களும் அணியாதிருந்த போதிலும் அவருடைய கம்பீரத் தோற்றமும் சுயம் பிரகாசமான முகமும் அரச குலத்தில் பிறந்து அரச குலத்தில் புகுந்த அரசர்க்கரசி என்பதை புலப்படுத்தின. சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் விதிவிலக்கின்றி இந்தப் பெரும் மூதாட்டியைத் தெய்வமாக மதித்துப் பாராட்டிக் கொண்டாடி அவருடைய விருப்பத்துக்கு மாறாக எதுவும் சொல்லாமல் நடந்து வந்ததில் யாதொரு வியப்பும் இல்லை என்றே நினைக்கத் தோன்றும்.

     ஆயினும் அத்தகைய பயபக்தி மரியாதைக்கு இப்போது ஒரு களங்கம் ஏற்பட்டிருந்தது. அந்தப் பெண்ணரசியின் புதல்வர் மதுராந்தகத் தேவர் அன்னையின் கருத்துக்கு மாறாக, அவருடைய கட்டளையை மீறி, பழுவேட்டரையர் குலத்தில் மணம் புரிந்து கொண்டார். அதுமட்டுமின்றி சோழ சிம்மாசனத்துக்கு அவர் ஆசைப்படுகிறார் என்ற சேதியும் பராபரியாக வந்து செம்பியன் மாதேவியின் காதில் விழுந்து அவருக்குச் சிறிது மனக் கவலையை ஏற்படுத்தியிருந்தது.

     செம்பியன் மாதேவியின் அரண்மனை முற்றத்திலும் சபா மண்டபத்திலும் சிற்பிகளின் கூட்டமும் தேவாரப் பாடகர்களின் கோஷ்டியும் ஜேஜே என்று எப்போதும் கூடியிருப்பது வழக்கம். தூர தூர தேசங்களிலிருந்து சிவனடியார்களும் தமிழ்ப் புலவர்களும் அடிக்கடி வந்து பரிசில்கள் பெற்றுப் போவது வழக்கம். சிவ பூஜைப் பிரசாதம் கொண்டு வரும் அர்ச்சகர்களின் கூட்டமும் அதிகமாகவே இருக்கும்.

     அன்றைக்குத் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), தென்குரங்காடுதுறை, திருமழபாடி முதலிய ஊர்களிலிருந்து சிற்பிகளும் சிவபக்தர்களும் வந்து தத்தம் ஊர்களில் கோயில்களில் கருங்கல் திருப்பணி செய்வதற்கு மகாராணியின் உதவியைக் கோரினார்கள். கோயில்களை எந்தெந்த ஊர்களில் என்ன முறையில் கட்ட உத்தேசம் என்பதற்குச் சித்திரங்களும் பொம்மைக் கோயில்களும் கொண்டு வந்திருந்தார்கள்.

     முதல் இரண்டு கோயில்களின் திருப்பணியைச் செய்ய உதவி அளிப்பதாகச் சொல்லிவிட்டு, “மழபாடியா? எந்த மழபாடி?” என்று பெரிய பிராட்டி கேட்டார்.

     “சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் குரல் கொடுத்து அழைத்துப் பாடல் பெற்றாரே, அந்தப் பெருமான் வீற்றிருக்கும் மழபாடிதான்!” என்று அந்த ஊர்க்காரர் சொன்னார்.

     “அது என்ன சம்பவம்?” என்று மழவரையரின் செல்வி கேட்க, மழபாடிக்காரர் கூறினார்:

     “சுந்தரமூர்த்தி சுவாமிகள் சோழ நாட்டு ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து கொண்டிருந்தபோது ஒரு நதியைக் கடக்க வேண்டியதாயிருந்தது. நதியைத் தாண்டி அப்பால் செல்லத் தொடங்கினார். அப்போது, ‘சுந்தரம்! என்னை மறந்தாயோ!’ என்று ஒரு குரல் கேட்டது.

     சுந்தரமூர்த்தி திடுக்கிட்டார் அது தம்மை ஆட்கொண்ட இறைவனுடைய குரல் என்பதை உணர்ந்தார். பக்கத்தில் இருந்த சீடர்களைப் பார்த்து “இங்கே சமீபத்தில் எங்கேயாவது சிவன் கோயில் இருக்கிறதா?” என்று கேட்டார்.

     “ஆம், சுவாமி! அந்தக் கொன்னை மரங்களின் மறைவில் மழபாடி கிராமத்துச் சிவன் கோயில் இருக்கிறது!” என்று சீடர்கள் சொன்னார்கள்.

     உடனே சுந்தரமூர்த்தி அங்கே சென்றார்; பூத்துக் குலுங்கிய கொன்னை மரங்களின் மறைவில் ஒரு சிறிய கோவில் இருந்தது. சுந்தரமூர்த்தி அங்கே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மனமுருகிப் பாடினார். அன்றொரு நாள் தன்னைத் தடுத்தாட்கொண்டது போல், இன்றைக்குத் தன்னைக் கூப்பிட்டு அருள்புரிந்த கருணைத் திறனை வியந்தார்.

     ‘சுவாமி! தங்களை நான் மறந்து விடுவேனா? என்ன கேள்வி கேட்டீர்கள்? தங்களை மறந்துவிட்டு வேறு யாரை நினைப்பேன்?’ என்னும் கருத்து அமைத்து,

     பொன்னார் மேனியனே! புலித் தோலை அரைக்கசைத்து
     மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
     மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே!
     அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே?
என்று பாடினார்; தாயே! இன்னும் அந்தக் கோயில் சிறிய கோயிலாகக் கொன்னை மரங்களின் மறைவிலேயே இருக்கின்றது. அதற்குத்தான் உடனே திருப்பணி ஆரம்பிக்க வேண்டும் என்று கோருகிறோம்.”

     “அப்படியே ஆகட்டும்!” என்றார் செம்பியன் மாதேவி.

     ஆழ்வார்க்கடியாரும் அவருடன் இன்னொருவரும் சற்று முன்னால் வந்து நடந்ததையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

44. “எல்லாம் அவள் வேலை!”


     மாமல்லபுரத்து மகா சிற்பிகளின் பரம்பரையில் தோன்றிய சிற்பக் கலைஞர் ஒருவர் இப்போது முன் வந்தார். புதிய முறையில் கருங்கற்றளி அமைப்பதற்கு அவருடைய மனோதர்ம கற்பனைப்படி சிறிய பொம்மைக் கோயில் ஒன்று அவர் செய்து கொண்டு வந்திருந்தார். அதை இப்போது மகாராணியிடம் காட்டினார்.

     அதைப் பார்த்து மகாராணி மிகவும் வியந்தார். ஆழ்வார்க்கடியானுக்கு அருகில் நின்றவரைப் பார்த்து, “பட்டரே! இந்த ஆலய அமைப்பு எவ்வளவு சிறப்பாயிருக்கிறது, பார்த்தீர்களா? தமிழகத்திலுள்ள முக்கியமான சிவஸ்தலங்களிலெல்லாம் இம்மாதிரி புது முறையில் ஆலயம் எடுப்பிக்க வேண்டும் என்று என்னுடைய உள்ளத்தில் ஆவல் பொங்குகிறது!” என்று சொன்னார்.

     “தாயே! தங்கள் விருப்பம் நிறைவேறுவதில் தடை என்ன இருக்கிறது? தேவாரப் பதிகப் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் இம்மாதிரி கற்றளிகள் எடுப்பிக்கலாம். இந்த ஆலய அமைப்பைப் பார்த்தவுடனே இது ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ என்பதை ஜனங்கள் உணர்ந்து கொள்வார்கள்!” என்று சொன்னார் ஈசான சிவபட்டர்.

     “ஆம், ஆம்! அப்பர் பெருமானும் ஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தியும் பாடிய பதிகங்களையெல்லாம் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய பாதங்கள் பட்டுப் புனிதமாகி, அவர்களுடைய பாடல்களினால் தெய்வீகமடைந்த ஸ்தலங்களில் எல்லாம் இம்மாதிரி வானளாவிய விமான கோபுரங்களுடன் கற்றளிகளை எடுக்க வேண்டும். இந்த இரண்டுந்தான் என் மனோரதங்கள். இவை நிறைவேறுமா என்று அடிக்கடி ஐயம் உண்டாகிறது. என்னுடைய நாயகர் மட்டும் மேற்குத் திசை சென்று அகாலத்தில் இறைவன் திருவடிகளைச் சேராதிருந்தால், இன்னும் சில காலம் ஜீவித்திருந்தால், என் மனோரதங்கள் எல்லாம் நிறைவேறியிருக்கும்…”

     “இப்போது மட்டும் என்ன குறைவு, தாயே! தாங்கள் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றித் தர வேண்டும் என்று சக்கரவர்த்தி கட்டளை பிறப்பித்திருக்கிறார் அல்லவா? அவருடைய புதல்வர்கள் இருவரும் தங்கள் மனத்தில் நினைப்பதற்கு முன்னாலேயே தங்களுக்கு இது விருப்பமாயிருக்கும் என்று ஊகித்தறிந்து, அதை நிறைவேற்றச் சித்தமாயிருக்கிறார்கள் அப்படியிருக்கும்போது…”

     “இருந்தாலும் என் மனத்தில் இப்போது அவ்வளவு உற்சாகம் இல்லை; ஏதேதோ கேள்விப்படுகிறேன். நான் செய்யும் கோவில் திருப்பணியினால் அரசாங்கப் பொக்கிஷம் காலியாகி விடுகிறதென்று சிலர் குறைபடுகிறார்களாம். ‘சிவனுக்கு இவ்வளவு ஆலயங்கள் என்னத்திற்கு?’ என்று கேட்கிறார்களாம். மற்றவர்கள் கேட்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை காஞ்சியில் உள்ள இளவரசர் கூட..”

     இவ்விதம் பெரிய பிராட்டியார் சொல்லியபோது, ஆழ்வார்க்கடியான் ஓர் அடி முன்னால் வந்து நின்று, “தாயே! அந்த மாதிரி கேட்பவர்களில் அடியேனும் ஒருவன்!” என்றான்.

     மகாராணி அவனைச் சற்று வியப்புடன் பார்த்தார். மற்றவர்கள், ‘இது என்ன விபரீதம்?’ என்ற முகபாவத்துடன் ஆழ்வார்க்கடியானை உற்று நோக்கினார்கள்.

     ஆழ்வார்க்கடியான் மேலும் தொடர்ந்து ஆத்திரம் ததும்பிய குரலில், “அன்னையே! என் வயிறு கொதிக்கிறதே! இந்த மாதிரி அநியாயம் உண்டா? தர்ம தேவதையின் அவதாரமாக விளங்கும் தாங்கள் இந்த அநீதிக்கு இடம் கொடுக்கலாமா?” என்று அலறினான்.

     திருமலையப்பனுக்குப் பக்கத்தில் நின்ற ஈசான சிவபட்டர், “மகாராணி! என் சகோதரன் இப்படித்தான் ஏதாவது உளறுவான். திடீரென்று அவனுக்கு வெறி வந்துவிடும் தயவு செய்து மன்னித்து அருள வேண்டும்!” என்றார்.

     அக்காலத்தில் சைவர்களும் வைஷ்ணவர்களும் தனித் தனி சாதியாகப் பிரிந்திருக்கவில்லை. ஒரே குடும்பத்தில் சைவப் பற்றுள்ளவர்களும் வீர வைஷ்ணவர்களும் இருப்பார்கள். ஒரே பட்டர் சிவன் கோவிலிலும் திருமால் கோவிலிலும் பூஜா கைங்கரியம் செய்வார். ஈசான சிவ பட்டர் அத்தகைய பரந்த நோக்கம் கொண்டவர். திருமலையப்பன் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரன். இருவரும் பரஸ்பரம் மிக்க அன்பு கொண்டவர்கள். ஆகவே தம்பியின் பதற்றமான பேச்சுக்காக ஈசான சிவபட்டர் மகாராணியிடம் மன்னிப்புக் கோரினார்.

     தேவி புன்னகை புரிந்து, “திருமலை! சற்று அமைதியாகப் பேசு! இப்போது என்ன அநியாயம் நடந்து விட்டது!” என்று கேட்டார்.

     “அம்மா! பேயாண்டியும் கையில் கபாலம் ஏந்திப் பிக்ஷை எடுத்துப் பிழைப்பவனுமாகிய சிவனுக்கு எத்தனை ஆலயங்கள்? எத்தனை மாடக் கோயில்கள்? எத்தனை கற்றளிகள்? உலகத்தையெல்லாம் காத்து ரக்ஷிக்கும் விஷ்ணு மூர்த்திக்கு ஒரு திருக்கோயில் கூடக் கிடையாதா? ஒரு பழைய கோயிலைத் திருப்பணியாவது செய்யக் கூடாதா?” என்று திருமலையப்பன் ஓலமிட்டான்.

     “அம்மா! அகில புவனமும் உய்ய ஆனந்த நடனமாடும் பெருமானுக்கு அரங்கமும் அம்பலமும் சிற்சபையும் பொற்சபையும் மாடக் கோயிலும் மதில் சூழ்ந்த மாளிகையும் வேண்டும். ஓயாமல் தூங்குகிற திருமாலுக்கு ஒரு சிறிய இடம் போதாதா? தீபம் இல்லாத இருட்டறைதானே அவருக்கு வேண்டும்? மாடக் கோயில்களும் கற்றளிகளும் என்னத்திற்கு?” என்றார் ஈசான சிவபட்டர்.

     “அண்ணா! ஓயாமல் தூங்கும் பெருமாள்தான் உலகளந்த பெருமாள்! மகாபலியைப் பாதாளத்தில் அழுத்திய பெருமாள்!” என்றான் ஆழ்வார்க்கடியான்.

     “அப்படிப்பட்ட உலகளந்த பெருமாள் எங்கள் சிவபெருமானுடைய பாதார விந்தங்களைத் தரிசிப்பதற்குத் தோண்டித் தோண்டிப் பாதாளம் வரையில் சென்றும் எம்பெருமான் பாதங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை!” என்றார் ஈசான சிவபட்டர்.

     “உங்கள் சிவன் அவ்வளவு பெரியவராயிருந்தால், அவருக்குக் கோயில் எதற்கு என்றுதான் கேட்கிறேன். கோயிலுக்குள் வரும்போது அவர் தலை இடித்துக் கோயில் இடிந்து விழுந்து விடுமே!” என்று சொன்னான் ஆழ்வார்க்கடியான்.

     மழவரையர் திருமகள் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே, “உங்கள் சண்டையைக் கொஞ்சம் நிறுத்துங்கள். திருமலை! நீ சொல்வது என்ன? பெருமாளுக்குக் கோயில் கட்டக் கூடாது என்று யார் சொன்னது? எந்த ஊர் விண்ணகரத்தைப் புதுபிக்க வேண்டும் என்கிறாய்? அதை நல்ல முறையில் சொல்லுவதுதானே?” என்றார்.

     “அம்மணி! தங்களுடைய மாமனார், மூன்று உலகும் கீர்த்தி பெற்ற பராந்தக சக்கரவர்த்தி. அவருடைய பட்டப் பெயரால் விளங்கும் வீரநாராயணபுரத்துக்குப் போயிருந்தேன். அங்கே வீரநாராயணப் பெருமாள் அல்லும் பகலும் தூங்காமல், கண் மூடாமல், மாகடல் போன்ற வீரநாராயண ஏரியைக் காத்து அருள் புரிந்து வருகிறார். அத்தகைய பெருமானுடைய கோயிலில் செங்கல் சுவர்கள் இடிந்து விழுந்து வருகின்றன. கோயில் இடிந்தால் ஏரிக் கரையும் இடிந்து நூறு நூறு ஊர்கள் பாழாகிவிடும். வீரநாராயணப் பெருமாளின் கோயிலைக் கற்றளியாக்கித் திருப்பணி செய்ய வேண்டும்!” என்றான்.

     “ஆகட்டும், செய்வோம்! அதைப் பற்றி விவரமாக என்னிடம் சொல்! இவர்கள் எல்லாரும் இப்போது போகட்டும்!” என்று சோழ குல மூதாட்டி கூறினார்.

     அந்தக் குறிப்பை உணர்ந்து ஈசான சிவபட்டர் உள்பட அனைவரும் வெளியேறிச் சென்றார்கள்.

     உடனே, செம்பியன் மாதேவி குரலைத் தாழ்த்திக் கொண்டு, “திருமலை! யாத்திரையில் எங்கெங்கே போயிருந்தாய்? என்னென்ன பார்த்தாய்? என்னென்ன கேள்விப்பட்டாய்? விவரமாய்ச் சொல்லு! ஏதோ முக்கியமான விஷயம் கொண்டு வந்திருக்கிறாய். அதனால் தான் அப்படிக் குறுக்கிட்டுப் பேசினாய், இல்லையா?” என்று சொன்னார்.

     “ஆம், தாயே! முக்கியமான விஷயம் பல கொண்டு வந்திருக்கிறேன். ஆயினும் தங்கள் திருவுள்ளத்தை நோக்கிக் காத்திருப்பேன். ஆனால் காஞ்சியில் உள்ள இளவரசரைப் பற்றி ஏதோ சொல்லத் தொடங்கினீர்கள்; அதற்காகவே தடை செய்தேன். சற்று முன் இங்கே இருந்தவர்களில் உண்மையானவர் யார், ஒற்றர் யார் என்று யாருக்குத் தெரியும்? நாட்டில் எத்தனையோ விபரீதங்கள் நிகழ்ந்து வருகின்றன. எப்போது யாரால் என்ன துரோகம் நடக்கும் என்று சொல்வதற்கில்லை!” என்றான் திருமலையப்பன்.

     பெரிய பிராட்டி பெருமூச்சு எறிந்தார். “ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இரத்த பாசம் உள்ளவர்கள், ஒருவரையொருவர் சந்தேகிக்கும்படி ஆகிவிட்டது. ஆதித்த கரிகாலன் ஒரு காலத்தில் என்னிடம் எவ்வளவு விசுவாசம் வைத்திருந்தான்? சொந்தத் தாயைக் காட்டிலும் நூறு மடங்கு அன்பும் மரியாதையும் கொண்டிருந்தானே? அவன் கூடவல்லவா என் பேரில் ஐயுறும்படி ஆகிவிட்டது! திருமலை! என் நாயகருடன் நானும் இந்த மண்ணுலகை விட்டுப் போயிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! என்னை வரக் கூடாதென்று தடுத்து விட்டாரே? இங்கே செய்ய வேண்டிய பணிகளையும் கொடுத்து விட்டல்லவா போய் விட்டார்? என்ன துர்ப்பாக்கியசாலி நான்?” என்றார்.

     “அம்மா! தங்கள் பதி முக்காலமும் உணர்ந்த மகான். கலியுகத்தில் ஜனக மகாராஜாவைப் போல் இந்தச் சோழ சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். தங்களை இருக்கும்படி அவர் சொல்லிப் போனது இந்த நாடு செய்த பாக்கியம். நூறு ஆண்டாகப் பல்கிப் பெருகிவரும் இந்தச் சோழப் பேரரசு சகோதரச் சண்டையினால் நசித்து நாசமாகாமல் காப்பாற்றும் பொறுப்பு தங்களைச் சார்ந்தது; தங்களாலே தான் அது முடியக் கூடியது!”

     “எனக்குத் தோன்றவில்லை. என் சொந்த மகன் நான் சொல்வதைக் கேட்கவில்லை என்று ஏற்பட்ட பிறகு மற்றவர்களை நான் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? இருக்கட்டும்; ஒற்றர்களைப் பற்றிச் சொன்னாயே? இங்கே யார் ஒற்றர்களை அனுப்பியிருக்க முடியும்? இளவரசன் ஆதித்த கரிகாலன் அனுப்பியிருப்பான் என்று நினைக்கிறாயா? என் பேரில் அவனுக்கு அவ்வளவு அவநம்பிக்கை வந்து விட்டதா?” என்றார் சிவ பக்த சிரோமணியான மாதரசி.

     “என்னுடைய இரு காதினாலும் கேட்டேன், தாயே! இல்லாவிட்டால் இளவரசர் கரிகாலர் தங்கள் பேரில் ஐயப்படுவார் என்பதை நான் ஒரு நாளும் நம்பியிருக்க மாட்டேன்…”

     “என்ன கேட்டாய், திருமலை! உன் காதினால் என்ன கேட்டாய்?”

     “மாமல்லபுரத்துக் கற்கோயில் ஒன்றின் அருகில் உட்கார்ந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்…”

     “அவர்கள் என்றால் யார்?”

     “இளவரசர் ஆதித்த கரிகாலர் ஒன்று, திருக்கோவலூர் மலையமான் இரண்டு, பல்லவப் பார்த்திபேந்திரன் மூன்று, – இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இருளடைந்த கற்கோயிலுக்குள் நான் மறைந்திருந்து கேட்டேன். மலையமானும் பார்த்திபேந்திரனும் வெகு ஆத்திரமாகப் பேசினார்கள். இரண்டு பழுவேட்டரையர்களும் தங்கள் குமாரர் மதுராந்தகத் தேவரும் சேர்ந்து சதி செய்து சக்கரவர்த்தியைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்களாம். அதில் தங்களுக்கும் சம்பந்தம் இருக்கத்தான் வேண்டும் என்று மலையமான் கூறினான். அதை மற்றவர்கள் ஆமோதித்தார்கள். தஞ்சாவூர் மீது படையெடுத்துச் சென்று சக்கரவர்த்தியை விடுவித்துக் கொண்டு வர வேண்டும் என்று பார்த்திபேந்திரன் சொன்னான். அதையும் மற்ற இருவரும் ஆமோதித்தார்கள். ஆனால் சக்கரவர்த்தியைச் சண்டையின்றிக் காஞ்சீபுரத்துக்குக் கொண்டு வர இன்னும் ஒரு முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று இளவரசர் கூறினார். அதன் பேரில் சக்கரவர்த்திக்கு ஓலை எழுதி ஒரு தூதனிடம் கொடுத்து அனுப்பத் தீர்மானித்தார்கள். அந்தத் தூதன் யார் என்பதையும் நான் கண்டு கொண்டேன். அவன் சாதாரணத் தூதன் அல்ல. மகா சாமர்த்தியசாலி; வீர பராக்கிரமசாலி. தூதன் வேலையோடு ஒற்றன் வேலையையும் செய்யக்கூடியவன். அவனுடன் நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். நான் தட்டியில் நுழைந்தால் அவன் கோலத்துக்குள் நுழையப் பார்த்தான். அவன் ஒன்றுமே தெரியப்படுத்தாமல் என்னிடமிருந்து பல விஷயங்களைக் கிரஹிக்கப் பார்த்தான். குடந்தை ஜோதிடர் அவனிடம் தமது கைவரிசையைக் காட்டினார். அதுவும் பலிக்கவில்லை பிறகு அவன் தஞ்சாவூருக்குச் சென்று சக்கரவர்த்தியிடம் ஓலையைக் கொடுத்துவிட்டான் என்று கேள்விப்படுகிறேன்.

     “அப்புறம் என்ன நடந்தது? அதற்குச் சக்கரவர்த்தி என்ன மறுமொழி சொன்னாராம்?”

     “மறு நாளைக்கு விடை எழுதித் தருவதாகச் சொன்னாராம். அதற்குள் அவன் பேரில் பழுவேட்டரையர்களுக்கு ஏதோ சந்தேகம் வந்து விட்டது. அவர்களுடைய கட்டுக் காவல்களையெல்லாம் மீறிக் கொண்டு அவன் எப்படியோ தப்பித்துச் சென்று விட்டானாம்!”

     “அப்படியானால் அவன் மிகச் சாமர்த்தியசாலிதான்; சந்தேகமில்லை. அப்புறம் நீ என்ன செய்தாய்? காஞ்சீபுரத்திலிருந்து கிளம்பிய பின்?”

     “நேரே இங்கு வருவதற்காகவே புறப்பட்டேன் வழியில் வீரநாராயணபுரத்தில் பெருமாளைத் தரிசிக்கத் தங்கினேன். தங்கிய இடத்தில் பெருமாள் அருளினால் ஒரு பெரிய இரகசியத்தை அறியும்படி நேர்ந்தது..”

     “அது என்ன? இன்னும் ஒரு இரகசியமா?”

     “ஆம், தாயே! கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அன்று இரவு ஒரு பெரிய விருந்து என்று தெரிந்தது. அந்த விருந்துக்குப் பெரிய பழுவேட்டரையர் வந்தார். அவருடன் இளையராணியின் பல்லக்கும் வந்தது!”

     “திருமலை! எல்லாம் அவளுடைய செயல்தான்! இந்தச் சோழ நாட்டுக்கு இப்போது நேர்ந்திருக்கும் ஆபத்து அந்தப் பெண்ணால் ஏற்பட்டதுதான்! அவளை நீ சந்தித்துப் பேச முடிந்ததா?”

     “முடியவில்லை, அம்மா! முடியவில்லை! தங்கள் கட்டளையின் பேரில் அந்தப் பெண் பாம்பை என் சகோதரியாகப் பாவித்து எத்தனை வருஷம் வளர்த்தேன்! எங்கெல்லாம் தேடி அலைந்து பிரபந்த பாசுரங்களைக் கற்றுக் கொண்டு வந்து அவளுக்குக் கற்பித்தேன்! அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் என் நெஞ்சம் கொதிக்கிறது! பெரிய பழுவேட்டரையரின் ராணியான பிறகு அவள் என்னைப் பார்க்கக் கூட மறுக்கிறாள்…!”

     “அதற்காக வருத்தப்பட்டு என்ன பயன்? இந்த உலகத்து மனிதர்களின் காரியங்கள் இப்படித்தான் நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக முடிகிறது.. அப்புறம் கடம்பூரில் நடந்தது என்ன?”

     “பல்லக்கிலே வந்தவள் நந்தினிதான் என்று எண்ணிக் கொண்டு எப்படியாவது அவளைச் சந்திப்பது அல்லது ஓலை எழுதி அனுப்பியாவது எச்சரிக்கை செய்வது என்ற உத்தேசத்துடன் கடம்பூருக்குச் சென்றேன். பெரும் அபாயத்துக்குத் துணிந்து கடம்பூர் மாளிகையின் வெளிச் சுவர் ஏறி குதித்தேன்; அப்போது தான் அந்த அதிசயமான மர்ம இரகசியம் தெரிய வந்தது…”

     “திருமலை! உன் வழக்கமே இப்படித்தான்; மேலும் மேலும் ஆவலைக் கிளப்புவாயே தவிர, செய்தியைச் சொல்ல மாட்டாய். அது என்ன அப்படிப்பட்ட அதிசயமான மர்ம இரகசியம்…?”

     “மன்னிக்க வேண்டும், தாயே! அதைச் சொல்லுவதற்கே தயக்கமாயிருக்கிறது. மூடு பல்லக்கில் இருந்தது பழுவூர் இளையராணி அல்ல. பழுவேட்டரையர் தாம் போகுமிடமெல்லாம் இளையராணியை அழைத்துக் கொண்டு போகிறார் என்று நாம் எல்லாரும் எண்ணிக் கொண்டிருந்தோமே, அது பெரிய தவறு…”

     “பழுவேட்டரையர் பின் யாரை மூடுபல்லக்கில் வைத்து அழைத்துப் போகிறார்? அந்தக் கிழவரின் பெண் சபலத்துக்கு அளவேயில்லையா?”

     “மூடு பல்லக்கில் இருந்தது ஸ்திரீ அல்ல, தாயே!”

     “ஸ்திரீ இல்லை என்றால்? எந்த ஆண்மகன் அப்படி மூடுபல்லக்கில் மறைந்து கொண்டு வருவான்?”

     “மன்னிக்க வேண்டும், அம்மா! மூடுபல்லக்கில் மறைந்து வந்தது தங்களுடைய திருக்குமாரர் மதுராந்தகத் தேவர்தான்!”

     செம்பியன் மாதேவி சிறிது நேரம் திகைத்து நின்று விட்டார். “கடவுளே! நான் செய்த குற்றத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” என்று தமது வாய்க்குள்ளே சொல்லிக் கொண்டார்.

     பிறகு, ஆழ்வார்க்கடியான் சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரியில் நடந்த சதிக் கூட்டத்தைப் பற்றிச் சொன்னான்.

     அதைக் கேட்டு அம்மாதரசி அடைந்த மனத்துயரைச் சொல்லி முடியாது. “ஐயோ! என் மகனே! உன்னைச் சிவ ஞானச் செல்வனாக வளர்க்க முயன்றேனே? அதன் பயனா இது? சோழர் பெருங்குலத்துக்கு உன்னால் இத்தகைய அபகீர்த்தியா நேர வேண்டும்? சோழப் பேரரசுக்கு இத்தகைய பெருந் தீங்கு உன்னாலேயா ஏற்பட வேண்டும்?” என்று புலம்பினார்.

     பின்னர், “திருமலை! மறுபடியும் என்னைப் பார்த்துவிட்டுப் போ! அதற்குள் குந்தவையிடம் பேசி இந்தப் பெரும் விபத்தை எப்படித் தடுக்கலாம் என்று யோசித்துச் சொல்லுகிறேன்!” என்றார்.

     “தாயே! இளவரசியிடம் கூடத் தாங்கள் இதைப் பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது.”

     “ஏன்? அவளைப் பற்றிக் கூட ஐயப்படுகிறாயா என்ன?”

     “அது இயற்கைதானே அம்மா? ஆதித்த கரிகாலரின் அருமைச் சகோதரிதானே அவர்?”

     “அதனால் என்ன…? திருமலை! சூரியன் மேற்கில் உதயமாகிக் கிழக்கே அஸ்தமித்தது என்று நீ சொன்னாலும் நம்புவேன். சிவபெருமானைக் காட்டிலும் திருமால் பெரிய தெய்வம் என்று நீ சாதிப்பதை நம்பினாலும் நம்புவேன். ஆனால் குந்தவையின் பேரில் குற்றம் சொன்னால் நம்ப மாட்டேன். அவள் பிறந்த அன்றைக்கு அரண்மனை மருத்துவச்சி எடுத்து வந்து குழந்தையை என் இரு கரங்களிலும் கொடுத்தாள். அன்று முதல் நானே அவளை வளர்த்து வந்தேன். என் வயிற்றில் பிறந்த மகனைக் காட்டிலும் அருமையாக வளர்த்து வந்தேன். அவளும் என்னையே பெற்ற தாயாகவும், தகப்பனாகவும் எண்ணி இன்று வரை அன்பும் மரியாதையும் செலுத்தி வருகிறாள்…”

     “அம்மா! ஒன்று கேட்கிறேன் குந்தவை தேவி குடந்தை சோதிடரிடம் சென்று வந்ததைப் பற்றித் தங்களிடம் சொன்னாரா?”

     “இல்லை; அதனால் என்ன?”

     “ஜோசியர் வீட்டில் வாணர்குலத்து வாலிபன் ஒருவனைப் பார்த்தது பற்றியும் மறுபடி அவனை அரிசிலாற்றங்கரையில் சந்தித்தது பற்றியும் சொன்னாரா?”

     “இல்லை; இதெல்லாம் என்ன கேள்வி? இப்படிக் கேட்பதில் உன் கருத்து என்ன?”

     “தங்களிடம் சொல்லக் கூடாத இரகசியம் ஒன்று இளவரசி வைத்திருக்கிறார் என்பதுதான். நான் குறிப்பிட்ட அந்த வாலிபன்தான் ஆதித்த கரிகாலரின் தூதன்; ஒற்றன் என்று சொன்னாலும் தவறாகாது.”

     “திருமலை! அதெல்லாம் எப்படியாவது இருக்கட்டும். என்னிடம் குந்தவை ஏதேனும் ஒன்றைச் சொல்லவில்லையென்றால், அதற்குத் தக்க காரணம் இருக்கும். அவளிடம் சந்தேகப்படுவதைக் காட்டிலும் என் பிராணனையே விட்டு விடுவேன்!” என்றார் சிவஞான கண்டராதித்தரின் பட்டமகிஷி.

     “ஐயையோ! அப்படி ஒன்றும் நேர வேண்டாம் தங்களுடைய நம்பிக்கையே மெய்யாகட்டும். இளவரசி என்னிடம் ஏதோ கேட்பதற்காக வரச் சொல்லியிருக்கிறார். தாங்கள் பார்க்க விரும்புவதாக நானே தெரிவித்து விடுகிறேன்” என்றான் ஆழ்வார்க்கடியான்.

45. குற்றம் செய்த ஒற்றன்


     இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் பெருவளத்தான் என்னும் சோழ மன்னன் காவேரி நதிக்கு இருபுறமும் கரை எடுத்தான். வெகு காலம் அந்தக் கரைகள் நல்ல நிலைமையில் இருந்து காவேரி ஆற்றைக் கட்டுக்குள் வைத்திருந்தன. பின்னர், சோழ குலத்தின் வலி குறைந்தது. பாண்டியர்களும் பல்லவர்களும் களப்பாளரும் வாணரும் தலையெடுத்தார்கள். இந்தக் காலத்தில் காவலன் இல்லாத காவேரி நதி அடிக்கடி கட்டு மீறிக் கரையை உடைத்துக் கொண்டது. இவ்விதம் பெரிய அளவில் கரை உடைந்த சில சந்தர்ப்பங்களில் நதியின் போக்கே மேலும் கீழுமாக மாறுவதுண்டு. பழங்காவேரி புதுக் காவேரியாகும்; புதுக் காவேரி பழங்காவேரி ஆகும். அடியோடு நதியின் கதிமாறிப் போய்விட்டால், பழைய நதிப்படுகை சில சமயம் நன்செய் நிலமாக மாறும்; வேறு சில சமயங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் ஓடைகளாகிக் கடல் போல் அலைமோதிக் கொண்டிருக்கும்.

     பழையாறு நகரின் சோழ மாளிகைகளையொட்டித் தென்புறத்தில் அத்தகைய ஓடை ஒன்று இருந்தது. காவேரியின் கதி மாறியதால் ஏற்பட்ட இந்த ஓடையைச் சோழ மன்னர்கள் வேண்டுமென்றே ஆழமாக்கி, விசாலப்படுத்தி, எப்போதும் தண்ணீர் ததும்பி நிற்கும்படிச் செய்திருந்தார்கள். அரண்மனைக்கும், முக்கியமாக அந்தப்புரங்களுக்கும் இந்த விசாலமான நீர் ஓடை ஒரு நல்ல பாதுகாப்பாக இருந்தது. அந்த வழியில் யாரும் எளிதில் வந்து விட முடியாது. அரண்மனையோடு நெருங்கிய தொடர்புள்ளவர்கள்தான் படகில் ஏறி வரலாம்.

     அரண்மனை அந்தப்புரங்களின் அழகிய உத்தியான வனங்கள் இந்த நீரோடையை ஒட்டி அமைந்திருந்தன. அரண்மனை மாதர்கள் நிர்ப்பயமாக அந்த உத்தியான வனங்களில் எந்த நேரமும் உலாவுவார்கள். கூடிக் குலாவுவார்கள்; மயில்களாகி ஆடுவார்கள்; குயில்களாகிப் பாடுவார்கள். சில சமயம் ஓடையில் இறங்கி நீராடுவார்கள். ஓடையில் ஓடம் ஓட்டியும் விளையாடுவார்கள். சோழர் குலத்தில் ஓர் அரசர் காலமாகி இன்னொருவர் பட்டத்துக்கு வரும்போது புதிய அரண்மனை கட்டிக் கொள்வதுண்டு. பழைய அரண்மனையில் காலமான மன்னரின் ராணிகளும் மற்றப் பிள்ளைகளும் வசிப்பார்கள்.

     பழையாறை அரண்மனைகளில் செம்பியன் மாதேவியின் அரண்மனைக்கு அடுத்தபடியாகக் குந்தவைப் பிராட்டியின் மாளிகை அழகிலும் கம்பீரத்திலும் சிறந்து விளங்கியது. அது சுந்தர சோழர் வசித்த அரண்மனை அல்லவா? அவர் தஞ்சை சென்ற பிறகு, குந்தவை அந்த அரண்மனையின் எஜமானியாக விளங்கினாள். அம்மாளிகையின் பின்புறத்து உத்தியானவனம் மிகச் சோபிதமாக விளங்கியது. அதில் வானளாவிய ஆலமரங்களும் இருந்தன; சின்னஞ்சிறு பூஞ்செடிகளும் இருந்தன. வளைந்து நெளிந்து மரங்களைத் தழுவிக் கொண்டிருந்த பூங்கொடிகளும், பூங்கொடிகளாலான கொடி வீடுகளும் இருந்தன.

     குந்தவையும் அவளுடைய தோழிமார்களும் மாலை நேரங்களைப் பெரும்பாலும் அந்த உத்தியானவனத்திலேயே கழிப்பது வழக்கம். சில சமயம் எல்லாரும் சேர்ந்து ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு கதைகள் பேசிக் கொட்டமடிப்பார்கள். இன்னும் சில சமயம் இரண்டு பேராகவும், மூன்று பேராகவும் பிரிந்து சென்று அந்தரங்கம் பேசுவார்கள். சில நாளாகக் குந்தவையும் வானதியும் தனியே பிரிந்து சென்று பேசுவது வழக்கமாய்ப் போயிருந்தது.

     அன்றைக்கு ஒரு பெரிய ஆலமரக் கிளையில் கட்டித் தொங்கவிட்டிருந்த கொடி ஊஞ்சலில் குந்தவையும் வானதியும் அமர்ந்து ஆடிக் கொண்டும் பேசிக் கொண்டுமிருந்தார்கள். பறவைகளின் கலகலத் தொனியுடன் போட்டியிட்டுக் கொண்டு பெண்மணிகளின் குதுகலச் சிரிப்பொலியும் அவ்வப்போது அந்த உத்தியான வனத்தில் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் குந்தவையும் வானதியும் மட்டும் சிரிக்கவில்லை. மற்றவர்களின் சிரிப்பு அவர்களுக்கு அவ்வளவாய்ப் பிடிக்கவும் இல்லை. பேச்சுத்தான் அவர்கள் அதிகமாகப் பேசினார்களோ என்றால் அதுவும் அவ்வளவாக இல்லை. கொடி வீடு ஒன்றிலிருந்து ஒரு பெண் கீதம் ஒன்று பாடினாள். அது கண்ணன் பிறந்த நாள் அல்லவா? அவள் பாடியதும் கண்ணனைப் பற்றிய பாடல்தான்.

     வெண்ணிலாவில் வேணுகானம் கேட்கிறது. அது கண்ணனிடம் காதல் கொண்ட ஒரு பெண்ணை வேதனை செய்கிறது. அவள் தன் வேதனையை வாய் திறந்து வெளியிடுகிறாள். மரக் கிளையிலிருந்து ஒரு கிளி அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறது.

பெண்:-

     வேதனை செய்திடும் வெண்ணிலவில் – இங்கு
     வீணன் எவன் குழல் ஊதுகின்றான்?
     நாதன் இலா இந்தப் பேதை தன்னை
     நலிந்திடுதல் என்ன புண்ணியமோ?
கிளி:-

     வானமும் வையமும் இன்புறவே – ஐயன்
     வாய் மடுத்தூதும் குழலிசைதான்
     மானே உந்தனை வருத்திடுமோ – இந்த
     மானிலம், காணாப் புதுமை அம்மா!
பெண்:-

     பூவையே! உந்தனைப் போற்றிடுவேன் – நல்ல
     புன்னைமலர் கொய்து சூட்டிடுவேன் – எந்தன்
     ஆவி குலைந்திடும் வேளையிலே – ஒரு
     ஆறுதல் கூற நீ வந்தனையோ?
கிளி:-

     கட்டழகி! உந்தன் காதலினால் – எங்கள்
     கண்ணன் படுந்துயர் சொல்ல வந்தேன் – உன்னை
     விட்டுப் பிரிந்த நாள் முதலாய் – நல்ல
     வெண்ணெயும் வேம்பாய்க் கசந்த தென்பான்!
     பாடலின் பின் பகுதியைக் கவனமாகக் கேட்டு வந்த குந்தவை, பாடல் முடிந்ததும், “நல்ல கண்ணன் இந்தச் செந்தமிழ் நாட்டுக்குத் தெய்வமாக வந்து வாய்த்தான்! வெண்ணெய் உண்டு வேய்ங்குழல் ஊதிப் பெண்களுடன் காலங் கழித்துக் கொண்டிருந்தால் மற்ற காரியங்களெல்லாம் என்ன ஆவது?” என்றாள்.

     மறுமொழி சொல்லாமலிருந்த வானதியைப் பார்த்து, “என்னடி மௌனம் சாதிக்கிறாய்? நீயும் கண்ணன் குழலில் மயங்கிவிட்டாயா, என்ன?” என்று கேட்டாள்.

     “அக்கா! என்ன கேட்டீர்கள்?” என்றாள் வானதி.

     “என்ன கேட்டேனா? உன் கவனம் எங்கே சென்றிருந்தது?”

     “எங்கும் போகவில்லையே? உங்களிடந்தான் இருந்தது.”

     “அடி கள்ளி! ஏனடி பொய் சொல்லுகிறாய்? உண்மையில் உன் மனம் இவ்விடத்தில் இல்லவே இல்லை! எங்கே இருக்கிறது என்று நான் சொல்லட்டுமா?”

     “தெரிந்தால் சொல்லுங்களேன்!”

     “நன்றாகத் தெரியும், ஈழநாட்டுப் போர்க்களத்துக்குப் போயிருக்கிறது. அங்கே என் தம்பி, ஒரு கபடற்ற பிள்ளை இருக்கிறானே, அவனை இன்னும் என்ன பொடி போட்டு மயக்கலாம் என்று உன் மனம் யோசித்துக் கொண்டிருக்கிறது!”

     “நீங்கள் கூறியதில் ஒரு பாதி உண்மை தான், அக்கா! என் மனம் ஈழ நாட்டுக்குத்தான் அடிக்கடி போய் விடுகிறது. ஆனால் அவரைப் பொடி போட்டு மயக்குவதைப் பற்றி யோசிக்கவில்லை. அவர் போர்க்களத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாரோ, அவருடைய திருமேனியில் எத்தனை காயம் பட்டிருக்கிறதோ, அவர் எங்கே படுத்துக் கொள்கிறாரோ, என்ன உணவு சாப்பிடுகிறாரோ – என்றெல்லாம் எண்ணமிடுகிறது. அவர் அப்படியெல்லாம் அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, இங்கே நான் சுகமாக உண்டு உடுத்துப் பஞ்சணை மெத்தையில் படுத்துத் தூங்குவதை நினைக்கும் போது வேதனையாயிருக்கிறது. எனக்கு மட்டும் இறகுகள் இருந்தால், இந்த நிமிஷமே இலங்கைக்குப் பறந்து போய் விடுவேன்…!”

     “பறந்து போய் என்ன செய்வாய்? அவனுக்கு மேலும் உபத்திரவந்தானே செய்வாய்?”

     “ஒரு நாளும் இல்லை. அர்ச்சுனனுக்குச் சுபத்திரையும் கிருஷ்ணனுக்குச் சத்தியபாமாவும் ரதம் ஓட்டியது போல் நானும் ஓட்டுவேன். அவர் பேரில் எய்யும் அம்புகளை என் மார்பில் நான் தாங்கிக் கொள்வேன்.”

     “நீ தாங்கிக் கொண்டால் அதை அவன் பார்த்துக் கொண்டிருப்பானா?”

     “அது அவருக்கு இஷ்டமில்லாவிட்டால் பாசறையில் காத்திருப்பேன். போர்க்களத்திலிருந்து அவர் திரும்பி வந்ததும் காயங்களுக்கு மருந்து போட்டுக் கட்டுவேன். மலர்ப் படுக்கை விரித்து வைத்திருப்பேன்; அறுசுவை உண்டி சமைத்து வைத்திருந்து அளிப்பேன். உடல் வலியை மறப்பதற்கு வீணை மீட்டிப் பாட்டுப் பாடித் தூங்கப் பண்ணுவேன்…”

     “இதெல்லாம் நடவாத காரியங்கள், வானதி! சோழ குலத்து வீரர்கள் போர்க்களங்களுக்குப் பெண்களை அழைத்துப் போவதில்லை…”

     “ஏன் அக்கா, அப்படி?”

     “அவர்களுக்குப் புண்களைப் பற்றிப் பயமில்லை; அதைக் காட்டிலும் பெண்களைப் பற்றித்தான் அதிக பயம்!”

     “அது ஏன்? பெண்கள் அவர்களை என்ன செய்து விடுவார்கள்?”

     “அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்; ஆனால் உன்னைப் போன்ற பெண்கள் போர்க்களத்துக்குப் போனால் எதிரிப் படை வீரர்கள் உங்களுடைய அழகைக் கண்டு மயங்கி வந்து சரணாகதி அடைந்து விட்டால் என்ன செய்கிறது? அப்போது நம் சோழ நாட்டு வீரர்கள் தங்களுடைய வீரத்தைக் காட்ட முடியாதல்லவா? பெண்களைக் கொண்டு வெற்றியடைந்தார்கள் என்ற புகழைச் சோழ குலத்தார் விரும்புவதில்லை.”

     “அப்படிக் கூட உண்டா? எதிரி வீரர்கள் அவ்வளவு மூடர்களாயிருந்து விடுவார்களா? பெண்களின் அழகைக் கண்டு மயங்கி விடுவதற்கு?”

     “ஏன் மாட்டார்கள்? அடியே, வானதி! குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் நாம் ஒரு வாலிப வீரனைப் பார்த்தோமே, ஞாபகம் இருக்கிறதா?”

     “இருக்கிறது அதற்கு என்ன?”

     “நம்மையெல்லாம் கண்டதும் அவன் எப்படிப் போதை கொண்டவன் போல் மயங்கி நின்றான் என்பது ஞாபகம் இருக்கிறதா?”

     “அதுவும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் நம்மையெல்லாம் பார்த்து விட்டு என்று தாங்கள் சொல்லுவதுதான் தவறு. அவன் தங்களைப் பார்த்து விட்டுத்தான் அப்படி மயங்கி நின்றான். பக்கத்தில் நின்றவர்களை அவன் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை, அக்கா!”

     “வானதி! நல்ல பொய் சொல்கிறாய்! பரிகாசம் செய்கிறாயா என்ன?”

     “இல்லவே இல்லை! நான் ஒன்று கேட்கிறேன்; அதற்கு உண்மையாக விடை சொல்கிறீர்களா?”

     “கேட்டுப் பாரேன்!”

     “அந்த வாலிப வீரனுடைய ஞாபகம் உங்களுக்கு இப்போது ஏன் வந்தது?”

     “நல்ல வாயாடியாகப் போய்விட்டாய் நீ! அவனுடைய ஞாபகம் வந்ததில் என்ன தவறு?”

     “தவறு என்று யார் சொன்னது? நான் சொல்லவில்லையே? அது மிகவும் இயற்கைதான்! எனக்குக் கூட, அந்த வாலிபனுடைய கதி அப்புறம் என்னவாயிற்றோ என்று கவலைதான்.”

     “உனக்கு ஏன் அதைப் பற்றிக் கவலை உண்டாக வேண்டும்?”

     “ஏன் கவலைப்படக் கூடாது? ஒருவரை நாம் பார்த்திருந்தால், அவரைப் பற்றிய ஞாபகம் நமக்கு அடிக்கடி வந்தால், அவர் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள விரும்புவது இயற்கை அல்லவா!”

     “நல்ல இயற்கை! அப்படியெல்லாம் மனம் சிதறுவதற்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது. மனத்தைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்… அதோ கேளடி, வானதி அது என்ன பறைச் சத்தம்? அந்தக் குரல் என்ன சொல்லுகிறது? சற்றுக் கவனமாகக் கேள், பார்க்கலாம்!”

     ஆம்; தூரத்தில் எங்கேயோ வீதியில் பறை கொட்டும் சப்தமும், நடு நடுவே மனிதக் குரல் கூச்சலிடும் சப்தமும் கேட்டது. காது கொடுத்துக் கவனமாகக் கேட்டபோது, மனிதக் குரல் கூறியது இது என்று தெரிந்தது.

     “சத்துரு நாட்டிலிருந்து வந்த ஒற்றன் ஒருவன் தஞ்சாவூர்க் கோட்டையில் பொய் முத்திரையைக் காட்டிப் புகுந்து உளவு அறிந்து கொண்டு ஓடி விட்டான். இரண்டு பேரை மரண காயப்படுத்தி விட்டுத் தப்பிப் போய்விட்டான். வாலிபப் பிராயத்தினன்; வாட்டசாட்டமான தேகம் உடையவன். இந்திரஜித்தைப் போன்ற மாய தந்திரக்காரன்; பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன். அவனுக்கு அடைக்கலம் கொடுப்போருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். அவனைப் பிடித்துக் கொடுப்போருக்கு ஆயிரம் பொன் பரிசு அளிக்கப்படும். தஞ்சைக் கோட்டைத் தளபதி பழுவேட்டரையர் காலாந்தககண்டரின் கண்டிப்பான கட்டளை!”

     இவ்விதம் மனிதக் குரல் கூறி முடித்ததும் பறை, ‘தம், தம், தடதட தம்’ என்று முழங்கியது. குந்தவை தேவியின் திருமேனி ஏனோ நடுங்கியது.

     அச்சமயம் தாதி ஒருத்தி வந்து, “தேவி! ஆழ்வார்க்கடியார் என்னும் வீர வைஷ்ணவர் தங்களைப் பார்க்க வந்திருக்கிறார் ஏதோ அவசர காரியமாம்!” என்றாள்.

     “இதோ வந்துவிட்டேன்!” என்று சொல்லிவிட்டுக் குந்தவை, கொடி ஊஞ்சலிலிருந்து இறங்கிச் சென்றாள்.

-கல்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *