அத்தியாயம் 15
“பானுமா, மேடம் ரொம்ப குடிப்பாங்களா.?” என அவளின் காதருகே கிசுகிசுப்பாய் கேட்ட மகிழ்ந்தனைப் புரியாமல் பார்த்தவள், “ஏன் அப்படிக் கேட்கிற.?”
“இல்ல, நான் அவங்களை முதல்ல பார்த்ததே பார்ல தான். குடிச்சிருந்தாங்க. ஆனா, நிதானத்துல தான் இருந்தாங்க.”
“அது, சும்மா பெருமைக்காகனு குடிக்கிறது. ரொம்ப எல்லாம் பழக்கம் இல்ல அவங்களுக்கு. ஒருவேள வேற ஏதாவது காரணத்தால அதிகமா குடிச்சிட்டா, எனக்கு ஃபோன் போட்டுடுவாங்க. நானும் வாட்ச்மேனும் போய் பத்திரமா கூட்டிட்டு வந்திடுவோம்.”
“ஓ.. அப்புறம் ஏன் அன்னைக்கு உங்களைக் கூப்பிடாம, என்னை வேலையில சேர்த்தாங்க.?”
“உனக்கு விபரம் தெரியுமா தெரியாதா?”
“ஏன் பானுமா, அப்படிக் கேட்கிறீங்க?”
“அன்னைக்கு மேடம் கல்யாணம் வேணாம்னு மண்டபத்துல இருந்து யாருக்கிட்டயும் சொல்லாம வெளிய போயிட்டாங்க. எனக்கு ஃபோன் போட்டா, எங்க இருக்காங்கனு தெரிஞ்சுடாதா? அப்புறம் என்ன ஆனாலும் சரி, தூக்கிட்டு வந்தாவது கல்யாணத்தை நடத்தி வச்சிருப்பாங்க. பணக்காரங்களுக்கு மனசா முக்கியம்? அவங்க பகட்டுதான் பெருசு. அதுனால தான், மேடம் அந்த நாள் முழுசா யாருக்கும் தெரியாம வெளியவே இருந்துட்டு, சாயங்காலமா வந்தாங்க.”
“ஓ..”
“ஆமா, ஏன் திடீர்னு குடிப்பாங்களா அது இதுனு கேட்டுட்டு இருக்க?”
“இன்னைக்கு ஒரு பார்ட்டி இருக்குனு சொன்னாங்க, அதான். அந்த மாப்பிள்ளையோட தம்பி கூப்பிட்டு இருக்காரு. எதுக்கு அங்க எல்லாம் போகணும்? கல்யாணம் தான் நின்னிடுச்சே? அப்புறம் ஏன் இதெல்லாம்?”
“நம்மளை மாதிரி ஆளுங்களோட பழக்க வழக்கம் வேற. பணக்காரங்களோட யோசனை வேற. பொதுவா நாம அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பிக்கு இடையில சண்டை வந்துட்டா, முடிஞ்ச அளவு கத்தீட்டு அப்படியே பேச்சை நிப்பாட்டிடுவோம். அப்புறம் சமாதானம் ஆக வருஷக்கணக்கு ஆகும். இதுல சில பேர், கடைசி வரைக்கும் அந்த சண்டையை மனசுல வச்சுக்கிட்டு பேசிக்காமலேயே செத்துப் போயிடுவாங்க. ஆனா, வசதியானவங்க குடும்பத்துல எல்லாம் அப்படி இல்ல.”
“வேற எப்படி.?”
“அவங்க சண்டையை சத்தமா பேசுறதுலயோ, அடிக்கிறதுலயோ காட்டிக்க மாட்டாங்க. எப்பவும் போலதான் பேசி, சிரிச்சு, பழகி, உறவை வளர்த்துப்பாங்க. ஆனா, கூட இருந்தே குழி பறிக்கிற ரகம். இங்க அதிகாரமும் பணமும் தான் முதல்ல. பாசம் எல்லாம் அப்புறம் தான். அப்படியே பாசம் இருந்தாலும், தன்னோட கௌரவத்துக்காக அதை வெளிய காட்டிக்க மாட்டாங்க.”
“சை.. என்ன வாழ்க்கை இது.? எப்படி, இப்படி எல்லாம் இருக்க முடியிது மனுசங்களால?”
“இதை விடவும் கேவலமா எல்லாம் இருக்காங்க. உனக்கொரு விஷயம் சொல்லட்டுமா.?”
மகிழ்ந்தன் கேள்வியாய்ப் பார்க்க, “இந்த உலகத்துல ரொம்ப மோசமான ஒரு மிருகம் இருக்குதுனா, அது சுயநலமா யோசிக்கிற இந்த மனுச பிறவிதான்.”
அவன் சிரித்து, “நல்லா பேசுறீங்க பானுமா.*
“ஏன், சொல்லமாட்ட!”
“சரி, நம்ம மேடம் விசயத்துக்கு வாங்க. இவங்க ஏன் பார்ட்டிக்குப் போக நினைக்கிறாங்க?”
“முதலாளியோட ரகசியத்தைப் பத்தி இப்படிப் பேசுறது தப்புனு தெரியாதா உனக்கு?”
“எனக்கு, அதைவிட அவங்க அங்க போறது தப்பா தெரியிது. அதான் எந்த உறவும் இல்லனு ஆகிடுச்சு இல்ல. விலகி இருக்கலாம்ல.? நாலு நாள் கூட ஆகல. மாப்பிள்ளையோட தம்பிக்கிட்டப் போயி இப்படி நெருக்கமா பேசிப் பழகுனா, நாள பின்னாடி பிரச்சனை வராதா.? மேடமோட நல்லதுக்காகத்தான் யோசிக்கிறேன். அவங்கக்கிட்ட போக வேணாம்னு சொல்லணும்!” என்றபடி அவன் நகர, “ஏய், என்ன? இங்க தொடர்ந்து வேலை பார்க்கிற எண்ணம் இல்லையா உனக்கு?”
சற்றே நிதானித்தவன், “ஏன் பானுமா?”
“உன் வேலை என்ன? கார் ஓட்டுறது தான? அதை மட்டும் செய்! முதலாளிக்கே அட்வைஸ் பண்ணாத என்ன.?”
“இல்ல, நான் மேடம்கிட்ட சொன்னா கேட்பாங்க. எதுக்கு வேண்டாததுல போய் சிக்கணும்? அதுவும் அவங்க பொண்ணு வேற. ஏற்கனவே ஒரு தடவைக் கல்யாணம் நின்னிருக்கு. என்னதான் நாம திடமா இருந்தாலும், சுத்தி இருக்கிறவங்க அடிச்சு பலவீனமாக்கத் தான் பார்ப்பாங்க. மேடமோட எதிர்காலம், இதால பாதிச்சிடக் கூடாது!”
“ஏன்யா, ஏன்.? கொடுக்குற சம்பளத்துக்கு மேல ஏன் வேலை செய்ய நினைக்கிற?”
‘பானுமா, இது வேலை இல்ல. சக மனுசி, மனுசன் மேல நாம காட்டுற கரிசனம்.”
“முடியல சாமி உன்னோட!”
அவன் பாவமாய்ப் பார்க்க, “தான், என்ன செய்யிறோம்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். அதுனால உன்னோட முந்திரிக் கொட்டை மூளையை கொஞ்சம் அடக்கி வச்சிட்டு, வேலையை மட்டும் பாரு.” என்றாள்.
பானு உரைத்ததற்கு மகிழ்ந்தன் எவ்வித எதிர்வினையும் காட்டாது செல்ல, சில நொடிகளில் தயாராகி வந்தாள் லவனிகா.
பாலேடு வண்ணத்தில் மேல் சட்டையும், வானின் நீலத்தில் முழங்கால் அளவிலான குட்டைப் பாவாடையும் அணிந்து இருந்தாள். முகப்பூச்சின் அளவிலும், குழல் அலங்காரத்திலும் வழக்கத்தை விட ஒரு சதவிகிதம் அதிகமாய் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு இருந்தது.
முதன் முறையாய் அவளை ஒப்பனையுடன் பார்த்த மகிழ்ந்தன், “என்ன மேடம் இது.?”
“ஏன் மேன்.?”
“பார்ல தூங்கு மூஞ்சியா இருந்தீங்க இல்ல? அந்த முகமே நல்லா இருந்துச்சு. இப்ப என்ன பொங்கலுக்குப் பெயிண்ட் அடிச்சமாதிரி பளிச்சுனு கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு வந்து நிக்கிறீங்க.? நல்லா இல்ல மேடம்.”
“நிஜமா நல்லா இல்லயா.?”
“ஆமா மேடம்!”
“நல்லா இல்லனாலும் பரவாயில்ல, போகலாம். வந்து, வண்டியை ஸ்டார்ட் பண்ணு.”
தயக்கத்துடன் பார்த்தவன் கெஞ்சலான குரலில், “அவசியம் போகணுமா மேடம்.?”
“ஹேய் மேன்.. நீ சர்வண்டா இல்ல நானா.? யார் சொல்லுறதை யார் கேட்கணும்?
“நிச்சயமா நான்தான் வேலைக்காரன். நீங்க சம்பளம் தர்ற முதலாளி. நீங்க சொல்லுறதைத் தான், நான் கேட்கணும். ஆனா, அப்பப்ப வேலைக்காரன் சொல்றதை ஓனரும் கேட்கலாம். தப்பில்ல!”
மெலிதாய்ச் சிரித்தவள், “ஐ லைக் யுவர் ஆட்டிட்யூட் மேன். பட், இப்ப உன்கிட்ட பேசுறதுக்கு எனக்கு நேரமில்ல. கிளம்புவோமா?”
“மேடம்?”
“நீ வர்றியா? இல்ல, நானே டிரைவ் பண்ணீட்டுப் போகவா?”
“அச்சச்சோ! ஏன் மேடம் இப்படி? நான் டிரைவர் மட்டும் இல்ல பாடிகார்ட் வேற. அந்த வேலையும் செய்யணும்ல.? வாங்க, வண்டி ஓட்டுறேன்.” என்றவன் வாகனத்தை இயக்க, அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் பவேஷ் பகிர்ந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
‘KV Tattoos’ எனப் பெயரிடப்பட்டிருந்த அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் இவர்களின் சந்திப்புக் கூட்டம் நிகழ்வதாய் இருந்தது.
அண்ணார்ந்து அதனைப் பார்த்த லவனியின் அருகே வந்த மகிழ்ந்தன், “ரொம்ப குடிக்காதீங்க, என்ன? எதுவும் தேவைனா ஃபோன் பண்ணுங்க. நான் இங்கேயே தான் இருப்பேன்.”
அவன் பக்கம் திரும்பியவள், “என்னை என்ன அவ்வளவு வீக்கான ஆளுனு நினைச்சியா.?”
“நம்மளோட பலத்தையும் பலவீனத்தையும், சூழ்நிலைதான் முடிவு செய்யிது மேடம். எதிர்த்து நிற்கிறவன் எல்லாம் தைரியசாலியும் இல்ல. விலகி போறவன் எல்லாம் கோழையும் இல்ல. நல்லதோ கெட்டதோ, கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கிறது பின்னாடி வரக்கூடிய பிரச்சனைகளைக் கையாள்றதுக்கு ஒரு ஆதரவைக் கொடுக்கும். அதுக்கு நீங்க பலமாவோ பலவீனமாவோ இருக்கணும்னு அவசியம் இல்ல. உங்களுக்குத் தேவையானதைச் செஞ்சுக்கிட்டா போதும்!”
கடந்த மூன்று தினங்களைப் போலவே, இன்றும் ஆடவனின் எண்ணங்கள் அவளை வியப்படைய வைக்க, “ஐ வில் ஆல்வேஸ் ரிமெம்பர் திஸ் மேன். கார்ல போய் ரெஸ்ட் எடு. வென்எவர் ஐ நீட் யூ, ஐ வில் டெஃபனட்லி கால் யூ!”
தலையசைத்தவன் வாகனத்தில் சென்று அமர, சில நொடிகள் நின்று அவனைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள் லவனிகா.
“வெல்கம் பேபி..” என்றபடி பவேஷ் வந்து அவளை வரவேற்க, சம்பிரதாயமாய் அவனை லேசாய் அணைத்து விலகினாள்.
“யூ லுக் சோ பியூட்டிஃபுல் பேபி.”
“ஆர் யூ ஜோக்கிங்?”
“நோ, ஐம் ரியலி மீன் இட்!”
‘சற்று முன்னர் மகிழ்ந்தன் உரைத்ததற்கும் தற்போது இவன் உரைப்பதற்கும், இருவரது சிந்தனைக்கும் தான் எவ்வளவு வேறுபாடு?’ என்று தோன்றியது.
எவரையும் எந்த வகையிலும் அவள் அளவிட முனையவில்லை. இருவரும் அவரவர் எண்ணங்களில், செயல்பாட்டில் சரியானவர்களாகவே பட்டனர்.
மகிழ்ந்தன், அக்மார்க் நடுத்தர வர்கத்து மனிதனின் சிந்தனையாளன். சமூகம் மற்றும் அதில் வாழும் மனிதர்களின் பால் சற்றே அதிகமாய் கரிசனம் கொண்டவன்.
பவேஷ், மேல்தட்டு வர்கத்திற்கே உரித்தான அணுகுமுறையை உடையவன். தான் அறிந்த மனிதர்களின் நல்லதிற்காக, சற்று கூடுதலாய்ச் சிந்திப்பவன்.
முன்னவன், முன்பின் அறியாதவர்களிற்காகக் கூட எதைச் செய்யவும் துணிவான். பின்னவனிற்கு, அத்தகைய ஈடுபாடு இல்லை சமூகத்திடம். ஆனால், ஓரளவிற்கு அறிமுகமான மனிதர்களிடம் அந்த அணுகுமுறை உண்டு.
இவன் அழகென்று உரைத்தது, தற்போதைய வெளித் தோற்றத்தை! அவனின் பார்வையில் அழகென்பது, மேல்பூச்சு எதுவும் இன்றி அவள் அவளாய் இருப்பது. அவ்வளவே வேறுபாடு!
“இது என்ன ப்ளேஸ்? ஹோட்டல் மாதிரி தெரியலயே.?” என வினவியபடியே அவள் பார்வையைச் சுழற்ற, “என் மாம்ஸுக்குச் சொந்தமான ப்ளேஸ். இப்பதான் ரினோவேஷன் ஒர்க் முடிஞ்சது. லீஸுக்கு விடுறதைப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்காரு. இதுவரைக்கும் எனக்குத் தேவைப்படும் போது பார்ட்டி ஹாலா யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன்! இனி, அது முடியாதுனு நினைக்கிறேன். மீட் மை ஃப்ரெண்ட்ஸ்..” என்று தனது ஆண் பெண் நண்பர்களிற்கு அவளை ‘தோழி’ என அறிமுகம் செய்து வைத்தான்.
இயல்பாய் கைக் குலுக்குவது, பட்டும் படாமல் அணைத்து விலகுவது என்று அனைவரும் சற்று ஒழுக்க நெறியுடனே நடந்து கொண்டனர்.
அதில் ஒரு பெண், “எப்ப ஃப்ரெண்ட்ஸ் ஆனீங்க? சர்வேஷோட கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தேவா? இல்ல, மேரேஜ் கேன்சல் ஆனதுக்குப் பின்னாடியா.?” எனக் கேட்டிட, “ஹேய் டியர், உனக்கு எப்படித் தெரியும்.?” என்றான்.
“இன்னைக்கு ஹாட் நியூஸ், மிஸ் லவனியைப் பத்திதான். எப்படித் தெரியாம போகும்.?”
“இந்த மீடியாக்கானுங்க சம்பந்தப்பட்ட ஆட்கள் நொந்து போற அளவுக்கு, அதை ரிப்பீட் மூடுல போட்டு இம்சை பண்ணுவாங்க. அதுனால மேக்ஸிமெம் நான் நியூஸ் பார்க்கிறதையே அவாய்ட் பண்ணீடுவேன். அதான், எனக்குத் தெரியல.”
லவனி கேள்வியாய், “யூ டோண்ட் க்நோ திஸ் நியூஸ், பவேஷ்.?”
“சோ வாட் பேபி.?”
“அங்கிளோட ரியாக்ஷன் என்னனு கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன்.”
அவன் திகைப்புடன், “இதைத்தான் அவரோட ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணப் போறதா சொன்னியா நீ.?”
“யா!”
“அப்ப, நான் இன்வைட் பண்ணதுக்காக நீ இங்க வரல.”
“ஐ திங் நவ் யூ ஆர் கெஸ்டு!”
“நம்ம ப்ரெண்ட்ஸிப்.?”
“என்ன ப்ரெண்ட்ஸிப்? நீதான், யூ.எஸ் போயிடுவியே? இப்ப நமக்கு இடையில சர்வேஷும் இல்ல. ம்ம்.?” என அவள் தோளைக் குலுக்கிட, “யூ ஆர் சோ மீன் பேபி!”
“பட், ஐம் லைக் தட்!” என்றவள் கண்ணாடி கோப்பையில் இருந்த மதுவே ஒரு மிடறு மட்டும் அருந்த, இவர்களது உரையாடலைக் கேட்டபடியே உள்ளே நுழைந்தான் கீர்த்திவாசன்.
வெளியே வாகனத்தில் அமர்ந்திருந்த மகிழ்ந்தன், “ஐயையோ! இவர் எங்க இங்க? ஏற்கனவே மேடமுக்கும் இவருக்கும் பிரச்சனை ஆச்சே?” எனப் பதற்றத்துடன் வெளியே இறங்க, கண்ணாடிக் கதவின் இழுவை ஒலிக் கேட்டு அனிச்சையாய் அவனின் பக்கம் திரும்பின லவனியின் கண்கள். மற்றவர்களுமே அதைத்தான் செய்து இருந்தனர்.
இயல்பாய் அவளின் பார்வை கூர்மை பெற, ‘இவன் எப்படி இங்க.?’ என்று சிந்தனை எழுந்தது. இருந்தும் அதை முகத்தில் காட்டாது, கரத்தில் இருந்த மதுவை முழுமையாய் அருந்தி முடித்தாள்.
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 seekirama next epi podunga pa pls
Interesting
💛💛💛💛💛
Yethavathu twist irukka ….Inga…🙃
intha keerthi vanthu first problem achi but ipo ava pesurathu ellam ketu oru vithiyasama pakuran inga nadakum therila papom